অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்க சான்று

அசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்க சான்று

அறிமுகம்

வில்லங்க சான்றிதழ் என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவண எண், சொத்தின் நான்கு புற எல்லைகள் போன்ற விவரங்களை குறிப்பிடும் பதிவேடு ஆகும்.

குறிப்பிட்ட சொத்துக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை ECல் உள்ள ஆவண எண்களை, கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்பிட்டு கவனிக்க இயலும். இதர ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக இருந்தால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள் கட்டமைக்கும் பில்டர்கள் சொத்துக்கான Completion Certificate, Occupy Certificate ஆகியவற்றையும், வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் சொத்து சம்பந்தமாக பெறப்பட்ட கடன்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் EC–ல் தெரிந்து கொள்ளலாம்.

வில்லங்க சான்றில் 3 விதங்கள்

ஆன்லைன் ஆவணம்

இன்றைய நிலையில் அரசு பொது சேவை மையம் அல்லது கம்ப்யூட்டர் சென்டர் ஆகியவற்றின் மூலம் விருப்பப்படும் அனைவருமே தங்களது சொத்துக்களுக்கான வில்லங்க சான்றை இணைய தளம் மூலம் பதிவாக பெற்றுக்கொள்ளலாம். இதில் கியூ.ஆர் கோடு இருப்பதால் அதை ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

அலுவலக கணினி ஆவணம்

பத்திர பதிவு அலுவலக பணிகளில் கணினி நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் கம்ப்யூட்டர் பிரிண்டு ஆவணமாக வில்லங்க சான்று தரப்பட்டது. இதில், சார்பதிவக முத்திரை மற்றும் பதிவாளர் கையெழுத்து ஆகியவை இருக்கும். அதன் காரணமாக, வழக்கறிஞர்கள், கடன் அளிக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை இவ்வகை வில்லங்க சான்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சொல்லப்படுகிறது.

மேனுவல் பதிவேடு

1980–க்கு முன்னர் பெரும்பாலான சார்பதிவு அலுவலகங்களில் மேனுவல் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பத்திரங்களுக்கான வில்லங்க சான்றை மேனுவல் முறையில்தான் பெற இயலும். முன்னதாக தயார் செய்யப்பட்ட படிவத்தில் கைகளால் எழுதப்பட்டு, சார்பதிவக முத்திரை மற்றும் சார்பதிவாளர் கையெழுத்து ஆகியவை கொண்ட பதிவேடாக இது இருக்கும்.

பல்வேறு பதிவுகள்

குறிப்பிட்ட ஒரு சொத்துக்கு 50 ஆண்டுகளுக்கு EC தேவை என்ற நிலையில் சுமாராக 1960–ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவுகளை கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட 1980–ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவுகள் கணினி மயமான நிலையில், குறிப்பிட்ட காலம் வரை மேனுவலாகவும் அதன் பின்னர் கம்ப்யூட்டர் பதிவாகவும் பெற வேண்டியதாக இருக்கும்.

பழைய மற்றும் புதிய அலுவலகங்கள்

குறிப்பிட்ட சொத்து என்பது ஒரு சார்பதிவு எல்லைக்கு உட்பட்டதாகவே எல்லா காலத்திலும் இருப்பதில்லை. 35 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட சொத்துக்கான பத்திர பதிவு அலுவக எல்லை வேறொன்றாக இருந்திருக்கலாம். அல்லது பதிவுத்துறை நிர்வாக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய புதிய அலுவலக எல்லைக்குள் சொத்து அமைந்திருக்கலாம். மேற்கண்ட அடிப்படைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வில்லங்க சான்று விண்ணப்பம் செய்து பெற வேண்டும். அதனால், ஒரு சொத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேனுவல் மற்றும் கம்ப்யூட்டர் வில்லங்க சான்றுகள் இருக்க வாய்ப்பு உண்டு.

வில்லங்க சான்று சிக்கல்கள்

இன்றைய அவசர உலகத்தில் பரபரப்பான நகர்ப்புற வாழ்வில் பெருநகரங்களில் உள்ள சொத்துக்கள் சம்பந்தமாக கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பல ரியல் எஸ்டேட் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனால் வீடு அல்லது மனைக்கு கிட்டத்தட்ட 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆன்லைன் EC எடுத்து பார்த்துக்கொள்வது நல்லது. ஏதாவது குழப்பங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் வில்லங்க சான்று பெற்றும் கவனிக்க வேன்டும். மேலும், நகர்ப்புறங்களில் சொத்து வாங்குவது அல்லது சொத்து சம்பந்தமான மற்ற பரிமாற்றங்களை செய்யும்போது அதற்கான பதிவு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் EC பெற்று விவரங்களை அறிந்து கொள்வதும் முக்கியம்.

ஆதாரம் : டவுன் நீயூஸ் வார இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate