பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சர்வதேச உடன்படிக்கைகள்

சர்வதேச உடன்படிக்கைகளின் (International Treaties) வகைப்பாடு, உருவாகும் நிலைகள் மற்றும் பதிவும்-வெளியீடும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நவீன சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களில் முதன்மையான மூலாதாரம் சர்வதேச உடன்படிக்கைகளே ஆகும். உள்நாட்டுச் சட்டத்தை இயற்றும், சட்டமியற்றும் மன்றங்களைப் போன்று சர்வதேச உடன்படிக்கைகள் சர்வதேசச் சட்டத்தை உருவாக்குகின்றன என்றால் மிகையில்லை.

வரையறையும் பொருள் விளக்கமும்

சர்வதேச உடன்படிக்கைகள் என்பது, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளின் அங்கங்களுக்கு இடையே சட்ட உரிமைகளையும், கடப்பாடுகளையும் என்று ஒப்பன்ஹீய்ம் வரையறுக்கின்றார். 1969 உடன்படிக்கைச் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, ஷரத்து 2-ன்படி சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்ட, எழுத்து வடிவில் எழுதப்பட்டு, நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உடன்பாடே சர்வதேச உடன்படிக்கையாகும்.

ஆனால், ஸ்டார்க் சர்வதேச உடன்படிக்கை எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நாடுகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் வாய்மொழி உறுதிமொழியும் உடன்படிக்கையே என்கிறார். நாடுகளுக்கு இடையிலான ஒரு உடன்பாடு என்பது உள்நாட்டின் தேசியச் சட்டத்தின் கீழ் கவரப்படாமல், நாடுகளுக்கு இடையிலான சட்ட உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அதன் வடிவம் அல்லது பெயர் அல்லது அது இறுதி செய்யப்பட்ட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அது சர்வதேச உடன்படிக்கை தான் என்கிறார் ஸ்டார்க். Eastern Green land Case - வழக்கில் சர்வதேச நிரந்தர நீதிமன்றமும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றொரு நாட்டின் வெளியுற அமைச்சருக்கு அளிக்கும் வாய்மொழியான வாக்குறுதியும் சர்வதேச உடன்படிக்கையே என்று கூறியுள்ளது.

எனவே, நாடுகளுக்கு இடையே அல்லது நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையே சட்ட உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குகின்ற ஒப்பந்தத் தன்மை வாய்ந்த உடன்பாடே சர்வதேச உடன்படிக்கை எனலாம்.

சர்வதேச உடன்படிக்கையும் ஒப்பந்தமும் (International Traeties and Contracts)

சர்வதேச உடன்படிக்கை அதன் தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்தக் கடப்பாடுகளை உருவாக்குவதாக இருந்தாலும் அது ஒப்பந்தத்தில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் சர்வதேச உடன்படிக்கை என்பது நாடுகளுக்கு இடையில் அல்லது நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் ஏற்படுவதாகும். மாறாக ஒப்பந்தம் என்பது தனிநபர்களுக்கு இடையில் ஏற்படுவதாகும். ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ஏதேனுமொரு தரப்பாவது சர்வதேச நபராக இல்லாமல் தனிநபராகவோ நிறுவனமாகவோ இருக்கும். மேலும், சர்வதேச உடன்படிக்கை சர்வதேசச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும். ஆனால் ஒப்பந்தமோ உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் கவரப்பட்டிருக்கும் உடன்பாடாகும்.

உடன்படிக்கைகள் சட்டம் பற்றிய வியன்னா மாநாடு, 1969 (Vienna Convention on the law of Treaties,1969)

1969ஆம் ஆண்டு முன்புவரை சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய சட்டவிதிகள் பெரும்பாலும் சர்வதேச வழக்காறுகளாகவே நடைமுறையில் இருந்து வந்தன. இந்த விதிமுறைகள் 1969 ஆம் ஆண்டு மே 23 அன்று ஏற்கப்பட்ட உடன்படிக்கை சட்டம் பற்றிய வியன்னா மாநாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகள் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 27 முதல் செயலுக்கு வந்தன. 2009 ஆம் ஆண்டு வரை 110 நாடுகள் இம்மாநாட்டு விதிகளை ஏற்புறுதி செய்திருந்தன. அமெரிக்கா உள்ளிட்ட இதுவரை ஏற்புறுதி செய்யாத நாடுகளும் கூட, இம்மாநாட்டு விதிகள் ஏற்கனவே செயலில் இருந்த வழக்காற்றினை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உடன்படிக்கைகளின் வகைப்பாடு

பல்வேறு சட்ட அறிஞர்கள் வெவ்வேறு அடிப்படைகளில் உடன்படிக்கைகளை வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஒப்பன்ஹீய்ம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரங்களாகும் தன்மையின் அடிப்படையில் உடன்படிக்கைகளை சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் என்றும் பிற நோக்கங்களுக்கான ஒப்பந்த உடன்படிக்கைகள் என்றும் வகைப்படுத்துகிறார்.

  • சட்டத்தை உருவாக்கும் உடன்படிக்கைகள் (Law making Treaties)
  • ஒப்பந்த உடன்படிக்கைகள் (Treaty Contract)

இருதரப்பு உடன்படிக்கைகளும் பலதரப்பு உடன்படிக்கைகளும் (Bileteral and Multi-Lateral Treaties)

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் சர்வதேச உடன்படிக்கை இருதரப்பு உடன்படிக்கை எனப்படும். இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையில் ஏற்படும் சர்வதேச உடன்படிக்கை பலதரப்பு உடன்படிக்கை எனப்படும். சில நேரங்களில் எண்ணற்ற நாடுகள் பங்கெடுக்காமல் வெகு சில நாடுகள் மட்டும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டால் அத்தகைய உடன்படிக்கைகள் பன்மைத்துவ உடன்படிக்கைள் (Plurilateral Treaties) எனப்படும். பன்மைத்துவ உடன்படிக்கைகள், பலதரப்பு உடன்படிக்கைகளின் சிறப்பு உட்பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.

உடன்படிக்கையின் பல்வேறு பெயர்கள் (Various Nomenclatures of treaties)

சர்வதேச உடன்படிக்கை, அவை இறுதி செய்யப்படும் சூழ்நிலை, வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவை:

மாநாடு (Convention)

பல நாடுகள் கூடித் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாடு, மாநாடு எனவும் அதன் ஷரத்துக்கள் ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் போதும் அது மாநாடு என்றே அழைக்கப்படும். ஏனெனில் அதுவும் பல நாடுகள் கூடி ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாடே ஆகும்.

துணைக் குறிப்பு (Protocol)

ஒரு முழு வடிவமான உடன்படிக்கை அல்லது மாநாட்டு விதியாக இல்லாமல் முறை சாராத வடிவத்தில் ஏற்கப்பட்டிருக்கும் விதிகளே துணைக்குறிப்பு எனப்படும். துணைக்குறிப்பு என்பது பல வகைப்படும். இது ஒரு மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளுக்கான விளக்கம், துணை விதிகளைக் கொண்ட துணை ஆவணமாக இருக்கலாம். அல்லது ஒரு மாநாட்டில் விடுபட்டுப் போனவற்றைக் கூறும் துணை மாநாட்டுக் குறிப்பாக இருக்கலாம் அல்லது நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குறிப்பாக இருக்கலாம். சர்வதேசச் சட்டத்தில் துணைக் குறிப்புகளும் மாநாட்டு விதிகளைப் போலவே கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.

உடன்பாடு (Agreement)

மாநாட்டின் வடிவில் இல்லாமல் நாடுகளின் தலைமைகளுக்கு இடையில் கையெழுத்திடப்படும் ஆவணமே உடன்பாடு எனப்படும். பொதுவாக மாநாட்டைப் போல் உடன்பாட்டிற்கு நாடுகளின் ஏற்புறுதி தனியே தேவையில்லை.

வாய்மொழிக் குறிப்பு (Process-Verbal)

நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் போது வாய்மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை எழுத்து மூலமாக பதிவு செய்திருக்கும் ஆவணமே வாய்மொழிக் குறிப்பு எனப்படும். நாடுகளின் தூதரங்களுக்கு இடையில் நடைமுறை சார்ந்த விஷயங்கள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிர்வாக உடன்படிக்கையும் வாய்மொழிக் குறிப்பு என்றே அழைக்கப்படும்.

சட்டம் (Statute)

பல நாடுகள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு சர்வதேச நிறுவனத்தின் அமைப்பு மற்றும் செயல் விதிகளைக் கொண்டிருக்கும் ஆவணம் சட்டம் எனப்படும். உதாரணத்திற்கு சர்வதேச நீதிமன்றச் சட்டத்தைக் கூறலாம்.

பிரகடனம் (Declaration)

சர்வதேச உடன்படிக்கைகளில் பிரகடனம் என்பது எல்லா நேரங்களிலும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில் முறையானதொரு உடன்படிக்கை பிரகடனம் என அழைக்கப்படும். சில சமயங்களில் முறையான உடன்படிக்கை அல்லது மாநாட்டின் இணைப்பு ஆவணம் பிரகடனம் என அழைக்கப்படும்.

முன் குறிப்பு (Modus Vivendi)

ஒரு சர்வதேச உடன்படிக்கையின் தற்காலிகமான வடிவமாகும். பொதுவாக ஒரு நிரந்தரமான உடன்படிக்கை பின்னாளில் எழுதிக் கொள்வதற்காக, முதற்குறிப்புகளாக எழுதிக் கொள்ளப்படும் தற்காலிக ஆவணமே முன் குறிப்பு எனப்படும்.

குறிப்புகளின் பரிமாற்றம் (Exchange of notes)

நாடுகளின் தூதாண்மை முகவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் முறைசாரா உடன்படிக்கையே, குறிப்புகளின் பரிமாற்றம் எனப்படும்.

இறுதிச் சட்டம் (Final Act)

ஒரு மாநாட்டு விதிகளை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்;டின் நடவடிக்கைக் குறிப்புகளைக் கொண்ட ஆவணமே இறுதிச் சட்டம் எனப்படும். அது மாநாட்டின் தீர்மானங்கள், பரிந்துரைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒப்பமும் அதில் இருக்கும்.

உடன்படிக்கை உருவாகும் பல நிலைகள் (Various stages Concluding Treaty)

ஒரு சர்வதேச உடன்படிக்கை ஒரே நாளில் உருவாகிவிடுவது இல்லை. அது பல நிலைகளைக் கடந்தே உருபெறுகிறது. ஒரு உடன்படிக்கை இறுதி செய்யப்படுவதில் பின்வரும் நிலைகள் இருப்பதாக ஸ்டார்க் வரிசைப்படுத்துகிறார்.

பிரதிநிதிகள் நியமனம் (Accredtiting of Representatives)

சர்வதேச உடன்படிக்கை உருவாக்கத்தின் முதல் நிலை, அதன் தரப்பு நாடுகள் உடன்படிக்கையின் ஷரத்துக்களை இறுதி செய்வதற்கான பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தங்கள் தரப்பு பிரதிநிதிகளை நியமிப்பது ஆகும். அவ்வாறு நியமிக்கப்படும் பிரதிநிதிகள், பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு உடன்படிக்கையை இறுதி செய்யவும் அதில் கையொப்பமிடவும் அதிகாரம் பெற்றிருந்தால் அவர்கள் முழு அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆவர். பொதுவாக இருதரப்பு உடன்படிக்கையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். பலதரப்பு உடன்படிக்கை, மாநாடு போன்றவற்றில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு உடன்படிக்கையினை இறுதி செய்வது வரை மட்டுமே அதிகாரம் இருக்கும். கையொப்பமிடும் அதிகாரம் அரசுப் பிரதிநிதிக்கே இருக்கும்.

பேச்சு வார்த்தைகள் (Negotiations)

பிரதிநிதிகள் நியமனத்தைத் தொடர்ந்து உடன்படிக்கைப் பொருள் குறித்த பேச்சுவார்த்தை துவங்கும். இருதரப்பு உடன்படிக்கையாயின் பிரதிநிதிகளின் நேருக்கு நேர் கலந்துரையாடல் மூலம் பேச்சு வார்த்தை நடைபெறும். பலதரப்பு உடன்படிக்கை எனில், பிரதிநிதிகளின் மாநாட்டில் விவாதித்து உடன்படிக்கை இறுதி செய்யப்படும். வரைவு உடன்படிக்கையின் எழுத்து உடன்படிக்கை இறுதி செய்யப்படும் வரை பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறும்.

கையொப்பம் (Signature)

பேச்சு வார்த்தைகள் முடிவுற்று உடன்படிக்கையின் ஷரத்துக்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு எழுத்து வடிவில் தயார் செய்யப்பட்டு விட்ட பின்னர் கையொப்பம் இடுவதற்காக மட்டுமே ஒரு சிறப்பு அமர்வு நடத்தப்பட்டு அதில் உடன்படிக்கையில் கையொப்பமிடப்படும்.

ஏற்புறுதி (Ratification)

ஒரு உடன்படிக்கையில், பிரதிநிதிகளின் கையொப்பம் மட்டும் போதாது. அந்தந்த நாடுகளும் அவ்வுடன்படிக்கையை ஏற்புறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த உடன்படிக்கை நாடுகளால் ஏற்புறுதி செய்யப்பட்ட பிறகே செயலுக்கு வரும். சில உடன்படிக்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகள் ஏற்புறுதி செய்தால் மட்டுமே உடன்படிக்கை செயலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த எண்ணிக்கை எந்த நாளில் பூர்த்தியாகிறதோ அந்த நாளில் இருந்து தான் அந்த உடன்படிக்கை செயலுக்கு வரும். அவ்வாறு எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில், எந்தெந்த நாடுகள் ஏற்புறுதி செய்கின்றனவோ அந்த நாடுகளை மட்டும் அந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தும். அதே சமயம் அந்த உடன்படிக்கையின் பலன்களையும் அந்த நாடுகள் மட்டுமே பெற முடியும். ஏற்புறுதி செய்யாத நாடுகள் அதன் பலனைக் கோர முடியாது.

ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதற்கும் ஏற்புறுதி செய்யப்படுவதற்கும் இடையில் உள்ள கால அவகாசம், நாடுகள் தங்களது பிரதிநிதிகள் எடுத்த முடிவினை மறுபரிசீலனை செய்ய உதவியாக இருக்கலாம். நாடுகளுக்கு முழு இறையாண்மை இருப்பதால், நாடுகள் ஏற்புறுதி செய்வதற்கு முன்னால் தனது முடிவை எந்த நேரத்திலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பெரும்பாலான சமயங்களில் ஒரு சர்வதேச உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கு உள்நாட்டுச் சட்டத்தில் சில திருத்தங்களும் ஒப்புதல்களும் தேவைப்படும். உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டதற்கும் ஏற்புறுதி செய்யப்படுவதற்கும் இடைப்பட்ட கால அவகாசம் அத்தகைய திருத்தங்களையும், ஒப்புதல்களையும் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

சில நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தில், ஒரு சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர், மக்களின் பொது வாக்கெடுப்பு அல்லது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்று கூறப்பட்டிருக்கும். அத்தகைய நாடுகளில் அதனைச் செய்வதற்கான கால அவகாசத்தை ஏற்புறுதி நடைமுறை அளிக்கிறது.

ஏற்புறுதி செய்ய மறுத்தல்

உடன்படிக்கையில் ஒப்பமிட்ட ஒரு நாடு, அதனை ஏற்புறுதி செய்ய மறுக்கலாம். தனது பிரதிநிதிகளால் ஒப்பமிடப்பட்ட உடன்படிக்கையை ஒரு நாடு ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்ற சட்டப்படியான கட்டாயமோ மனச்சான்றுப்படியான கடமையோ கிடையாது என்று ப்ரெய்லி கூறுகிறார்.

ஒரு உடன்படிக்கையின் ஏற்புறுதியை மறுப்பதற்கு உரிய செல்லத்தக்க காரணங்களாக ஸ்டார்க் பின்வருவனவற்றை குறிப்பிடுகிறார்.

  • உடன்படிக்கையில் ஒப்பமிட்ட பிரதிநிதி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார்.
  • தன் நாட்டுப் பிரதிநிதியை ஏமாற்றிக் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.
  • உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.
  • மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டதும் உடன்படிக்கையில் இருப்பதும் வேறுபட்டுள்ளது. அதாவது ஒருமித்த கருத்துக்கு விரோதமாக உடன்படிக்கை உள்ளது.

ஏற்றலும் பகுதி ஏற்றலும் (Acession and adhesion)

ஒரு உடன்படிக்கை அதன் தரப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட பிறகு, தரப்பினரல்லாத மூன்றாம் தரப்பு நாடு ஒன்று அந்த உடன்படிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வது ஏற்றல் ஆகும். மாறாக அந்நாடு அந்த உடன்படிக்கையை முழுமையாக ஏற்காமல் அதில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டால் அது பகுதி ஏற்றல் ஆகும். ஆனால் ஒரு மூன்றாம் நாடு ஒரு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள விரும்பினால் அந்த உடன்படிக்கையின் மூல உறுப்பினர்கள் அனைவரின் சம்மதமும் அவசியமாகும். ஒரு உடன்படிக்கை செயலுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அதனை மூன்றாம் நாடு ஒன்று ஏற்றுக் கொள்ளலாம்.

செயலுக்கு வருதல் (Come to Force)

ஒரு உடன்படிக்கையில் ஏற்புறுதி செய்வது பற்றிக் கூறப்படவில்லையெனில், அவ்வுடன்படிக்கை தரப்பினர்கள் கையொப்பமிட்ட நாள் முதல் செயலுக்கு வரும். ஏற்புறுதி செய்யப்பட வேண்டும் என்று உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது இருதரப்பு உடன்படிக்கையெனில் இருதரப்பு நாடுகளும் தங்கள் ஏற்புறுதியை பரிமாறிக் கொண்டவுடன் செயலுக்கு வரும். அது பலதரப்பு உடன்படிக்கையெனில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச நாடுகளின் ஏற்புறுதிகளில் கடைசி நாட்டின் ஏற்புறுதி சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த உடன்படிக்கை செயலுக்கு வரும்.

பதிவும் வெளியீடும் (Registration and Publication)

ஒரு சர்வதேச உடன்படிக்கை செயலுக்கு வந்த பின்னர், அதனை ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்தில் பதிவு செய்வது அவசியமாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இதனால் நாடுகளிடையே பல்வேறு முரண்பட்ட உடன்படிக்கைகள் உருவாகின. இது சர்வதேசக் குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் சில சமயம் போர்களுக்கும் கூட வழிவகுத்தது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காக ஐ.நா.சாசனம் பதிவு நடைமுறையை உருவாக்கியது. ஐ.நா.சாசனத்தின் 102 வது ஷரத்தின்படி, உறுப்பு நாடுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கைகளை ஐ.நா. சபையில் பதிவு செய்தல் அவசியமாகும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட உடன்படிக்கைகளை ஐ.நா.சபை உலகறிய வெளியீடு செய்யும். எனவே சர்வதேச உடன்படிக்கைகள் ஐ.நா.செயலகத்தில் பதிவு செய்யப்படுவதும் வெளியிடப்படுவதும் அவசியமாகும்.

பதிவு செய்யாமையின் விளைவு (Effect of Non-Registration): ஐ.நா.சாசனம் ஷரத்து 102 இன்படி சர்வதேச உடன்படிக்கை ஒன்று ஐ.நா.சபையிடம் பதிவு செய்யப்படவில்லையெனில், அந்த உடன்படிக்கை செல்லாதது என்பதல்ல. பதிவு செய்யப்படாவிட்டாலும் அது தரப்பினர்களைப் பொறுத்த வரை செல்லத்தக்க உடன்படிக்கையே ஆகும். ஆனால் பதிவு செய்யப்படவில்லையெனில், அதன் தரப்பினர்கள் ஐ.நா.சபையின் எந்த அங்கத்திலும் அந்த உடன்படிக்கையை ஆதரவாகப் பயன்படுத்த முடியாது என்று ஷரத்து 102 கூறுகின்றது.

பொருத்துதலும் செயல்படுத்துதலும் (Application and Enforcement)

ஒரு உடன்படிக்கை உருவாக்கத்தில் இருக்கும் கடைசி நிலை அதனைப் பொருத்துதலும், செயல்படுத்துதலும் ஆகும். ஒரு உடன்படிக்கையின் உண்மையான பலன் அதனை நடைமுறையில் பொருத்துவதிலும் செயல்படுத்துவதிலுமே அடங்கியுள்ளது. ஒரு உடன்படிக்கை ஏற்புறுதி செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட பின்னர், அது அதன் தரப்பு நாடுகளாலும் சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளாலும் நடைமுறையில் பொருத்தவும் செயல்படுத்தவும் பலகுதலே அதன் இறுதி நிலையாகும்.

ஒரு உடன்படிக்கையில் பொருந்தாதவை என ஒதுக்குதல் (Reservation in a Treaty)

நாடுகள் பொதுவாக, ஒரு உடன்படிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகள் தங்களுக்குப் பொருந்தாது என ஒதுக்கி வைத்தலுடன் அந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளவே விரும்புகின்றன. அதிலும் பலதரப்பு உடன்படிக்கையில் இது அதிகம் நிகழக் கூடியது ஆகும். அவ்வாறு ஒரு சில பகுதிகளை ஒதுக்கி வைத்தல், அந்த உடன்படிக்கையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படலாம் அல்லது தனியே நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் அத்தகைய அறிவிப்புகளை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதன் மூலம் செய்யப்படலாம். ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டாலும் அதில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனக்குப் பொருந்தாது என்று ஒதுக்குவதற்கான உரிமை, நாட்டின் இறையாண்மை அதிகாரத்தின் பாற்பட்ட உரிமையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக் கொள்ளும் பகுதியைப் பொருத்தாவது தரப்பினராக இருப்பது மேலானது என்ற அடிப்படையிலேயே இந்த ஒதுக்கி வைக்கும் உரிமை நாடுகளுக்கு வழங்கப்படுகிறது எனலாம்.

ஆனால் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனக்குப் பொருந்தாது என ஒதுக்கி வைப்பதற்கு மற்ற தரப்பு நாடுகளின் சம்மதம் அவசியமாகும். இவ்வாறு ஒதுக்கி வைப்பதை அந்த உடன்படிக்கை கையெழுத்தாகும் போது அறிவிக்கலாம் அல்லது ஏற்புறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கலாம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.73913043478
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top