பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பற்றி தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, குறைந்த விலையில் உயர்தர கேபிள் டிவி சேவைகளைக் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 04.10.2007 அன்று துவங்கப்பட்டது. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு மூலதனப்பங்காக 25 கோடியும், கடனாக 36.35 கோடியும் வழங்கியது. 2008 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் வேலூர் என 4 இடங்களில் MPEG2 தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடு ஜீலை 2008ல் துவங்கியது. எனினும், ஓராண்டுக்குப் பின்னர் பல்வேறு காரணங்களினால் இந்நிறுவனம் செயலிழந்த நிலையில் இருந்தது.

நிறுவனத்தின் புனரமைப்பு

உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்றும், பொதுமக்களுக்கு உயர்தரமான கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலும், இந்நிறுவனத்தினைப் புனரமைப்பதற்காக தமிழக அரசு மே 2011-ல் 53 கோடியைக் கடனாக வழங்கியது. மேலும், இந்நிறுவனத்தின் பெயர் "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்" என மாற்றம் செய்யப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 30.8.2011 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தரமான கேபிள் டிவி சேவையை மாதம் (70/- என்ற குறைந்த கட்டணத்தில் சந்தாதாரர்களுக்கு வழங்கும் எனவும், அதில் 120/-ஐ கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குச் செலுத்துவார்கள் எனவும் அறிவித்தார்கள்.

இவ்வறிவிப்பினைச் செயலாக்கும் விதத்தில் இந்நிறுவனம் தனது 4 சொந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறைகளுடன், கூடுதலாக 27 மாவட்டங்களில் அன்லாக் கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளைக் குத்தகைக்கு எடுத்தது. இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் (சென்னை தவிர) கேபிள் டிவி சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 02.09.2011 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சென்னை மாநகர கேபிள் டிவி சேவை 20.10.2012 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

நிறுவன அமைப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனமானது தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கேபிள் டிவி சேவை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு இ சேவை மற்றும் இணையதள சேவையையும் வழங்கி தன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

கேபிள் டிவி சேவை

இந்நிறுவனத்தின் வருகைக்கு முன்னர் பல தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் (150/- முதல் 250/- வரை) மிக அதிகமான மாதாந்திர கட்டணத்தைப் பொதுமக்களிடமிருந்து வசூலித்து வந்தன.

இந்நிறுவனத்தின் மாதம் 870/- என்ற குறைந்த கட்டணத்திலான தரமான கேபிள் சேவை, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 02.09.2011 அன்று 4.94 இலட்சத்தில் இருந்து தற்போது 26,474 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாயிலாக 70.52 இலட்சமாக உயர்ந்துள்ளதில் இருந்து தெளிவாகிறது.

உட்கட்டமைப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய ஐந்து இடங்களில் தனது சொந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும், மேலும் தமிழகம் முழுவதும் 77 இடங்களில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளைக் குத்தகைக்கு எடுத்து அவற்றின் மூலமாகவும், பொதுமக்களுக்குக் கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது.

டிஜிட்டல் கேபிள் டிவி சேவை

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி சேவைகள் 4 கட்டங்களாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இதன்படி, நான்காவது கட்ட கடைசி நாளான 31.3.2017-க்குப் பிறகு நாடு முழுவதும் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவையை வழங்குவது தொடர்பாக 5.7.2012 அன்று சென்னை மாநகருக்கும், 23.11.2012 அன்று தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகளுக்கும் உரிமம் (DAS Licence) கோரி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.

தமிழ்நாடு அரசின் இடைவிடாத தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 17.4.2017 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் (DAS License) வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசு நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

டிஜிட்டல் கேபிள் டிவி சேவை துவக்கம்

இந்நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமத்தினை வழங்கிய பின்னர், தனது டிஜிட்டல் கேபிள் டிவி சேவையைத் தொடங்குவதற்காக இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி அளித்து ஆணை வெளியிட்டது. இதற்கிடையே சென்னையிலுள்ள டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை MPEG2 என்ற பழைய தொழில்நுட்பத்திலிருந்து MPEG4 என்ற புதிய தொழில்நுட்பத்திற்குத் தரம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் துல்லியமான முறையில் அதிக எண்ணிக்கையிலான சேனல்களை டிஜிட்டல் முறையில் வழங்க இயலும். MPEG4 தரம் உயர்த்தப்பட்ட சென்னை டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை மற்றும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.09.2017 அன்று துவக்கிவைக்கப்பட்டது.

செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் முன்னேற்றம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 60 இலட்சம் தரமான வரையறை செட்டாப் பாக்ஸ்கள் (Standard Definition Set Top Box) மற்றும் 10 லட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் (HighDefinition Set Top Box) கொள்முதல் செய்வதற்கு 06.05.2017 அன்று உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்தது. இதன்மூலம், இரண்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு, 60 லட்சம் தரமான வரையறை செட்டாப் பாக்ஸ்கள் (Standard Definition Set Top Box) மற்றும் 10 லட்சம் உயர் வரையறை தர செட்டாப் பாக்ஸ்கள் (High Definition Set Top Box) கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனமானது 26,474 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் 70.52 இலட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இதுவரை 23.52 இலட்சம் செட்டாப் பாக்ஸ்கள் 15, 280 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 22.88 இலட்சம் செட்டாப் பாக்ஸ்கள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கேபிள் டிவி சேவையின் மாதக் கட்டணம்

டிஜிட்டல் கேபிள் டிவி சேவையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான இரண்டு தொகுப்புகளை அறிவித்துள்ளது. இதன்படி, தொகுப்பு-1-ல் (125/- (வரிகள் தனி) என்ற மாதக் கட்டணத்தில் 208 சேனல்களையும் மற்றும் தொகுப்பு-2-ல் 175/- (வரிகள் தனி) என்ற மாதக் கட்டணத்தில் 300 சேனல்களையும் வழங்கி வருகிறது.

உயர் வரையறை செட்டாப் பாக்ஸ் சேவை (High Definition Cable TV - HD)

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் விரைவில் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ் சேவையினை (High Definition Cable TV - HD) துவங்க உள்ளது. இதற்காக சென்னையிலுள்ள டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு இ-சேவை மையங்கள்

 • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 4.8.2014 அன்று மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 659 அரசு இ-சேவை மையங்களைத் தற்போது செயல்படுத்தி வருகிறது.
 • அரசு இ-சேவை மையங்களில் போதிய தொழில்நுட்பத்துடன் தேவையான இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கான மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 2015-ல் துவக்கப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் வாயிலாகக் கடந்த மூன்று வருடங்களில் 1.52 கோடி மக்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு துறை சார்ந்த சேவைகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள்

 • தமிழ்நாடு அரசு தனது 01.08.2016 நாளிட்ட தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசாணை எண்.10 மூலம் மின் ஆளுமை இயக்குநரகம்/ தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை தமிழ்நாட்டில் புதிய ஆதார் சேர்க்கை செய்யும் பணிக்கான பதிவாளராக நியமித்தது. அதன்கீழ், எல்காட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றைப் புதிய ஆதார் சேர்க்கை பதிவு செய்யும் நிறுவனங்களாக நியமித்தது.
 • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஆதார் பதிவு செய்தல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள குறியீட்டு எண்.2193-யை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 01.10.2016 முதல் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தற்சமயம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை 32 மாவட்டங்களிலுள்ள

 • வட்டாட்சியர் அலுவலகங்கள்;
 • சென்னை தலைமைச் செயலகம்;
 • பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம்,
 • வருவாய்த்துறை ஆணையர் அலுவலகம்,
 • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டல அலுவலகங்கள்

ஆகியவற்றில் செயல்படுத்தி வருகிறது. இவை தவிர, சென்னையில் நடமாடும் ஆதார் சேர்க்கை மையம் ஒன்று 27.10.2016 முதல் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயுற்று படுக்கையில் உள்ளவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்சமயம் 32 மாவட்டத்திலுள்ள 309 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் உள்ள 583 முகப்புகள் (Counters) மூலம் 1.10.2016 முதல் 31.3.2018 வரை 22.48 இலட்சம் புதிய ஆதார் பதிவுகளும் மற்றும் 16.55 இலட்சம் ஆதார் பதிவு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இணையதள சேவை

14.9.2015 அன்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இந்நிறுவனத்திற்கு இணையதள சேவை வழங்குநர் உரிமம் (ISP License) வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிறந்த இணைய சேவை வழங்கப்படும்" என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, "இல்லந்தோறும் இணையம்" திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 1.3.2016 அன்று மாவட்ட தலைநகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, இதுவரை 5,135 பயனீட்டாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், இணையதள தொலைக்காட்சி (IPTV) சேவையினை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டு வருகிறது.

இலவச பொது Wi-fi சேவைகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.9.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் அம்மா Wi-Fi மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 50 இடங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு, 50 இடங்களில் அம்மா Wi-fi மண்டலங்கள் அமைக்க 78.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டம்,

 • சென்னை (உழைப்பாளர் சிலை - மெரினா கடற்கரை),
 • கோவை (காந்தி பேருந்து நிலையம்),
 • சேலம் (மத்திய பேருந்து நிலையம்),
 • திருச்சி மத்திய பேருந்து நிலையம்),
 • மதுரை (எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி)

ஆகிய 5 இடங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 05-04-2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிதிநிலை செயல்பாடு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழக அரசின் 25 கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில் தொடங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனம் 433 கோடியை அரசிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளது. 2008-09 நிதியாண்டில் (244 கோடி வருவாய் மட்டுமே ஈட்டிய இந்நிறுவனம், 2013-14 நிதியாண்டில் (163.92 கோடி வருவாயும், 2014-15 நிதியாண்டில் (181.91 கோடி வருவாயும், 2015-16 நிதியாண்டில் (223.53 கோடி வருவாயும், 2016-17 நிதியாண்டில் (235.9 கோடி வருவாயும் ஈட்டியுள்ளது.

இந்நிறுவனம், தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து 2011-12 நிதியாண்டு வரை சுமார் 15.03 கோடி நட்டத்தில் இருந்தது. எனினும், 2011 ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இந்நிறுவனம் புனரமைக்கப்பட்டு, புத்துயிர் அளித்தபின், சந்தாதாரர் எண்ணிகையை அதிகரித்ததன் வாயிலாகவும், உள்ளூர் தொலைக்காட்சி சேனல் வருவாய் மூலமும் 2012-13 முதல் 2016-17 வரை அனைத்து நிதியாண்டுகளிலும் இலாபம் ஈட்டியுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top