অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு என்பது என்ன?

ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளுக்கெதிரான பாதுகாப்பு ஆகும். நடைமுறைக்கு ஏற்ப சொல்வதென்றால், ஆயுள் காப்பீடு ஆனது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, எதிர்பாராத ஏதேனும் துரதிர்ஷ்ட சம்பவங்களினால் ஏற்படும் பாதக விளைவுகளை எதிர்கொள்ள உதவுகிறது.

ஏன் ஆயுள் காப்பீட்டினைப் பெறவேண்டும்?

ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்குவதுதோடு, உங்கள் முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது. இது, ஓய்வுகாலத்துக்குப் பின்னர், உங்கள் குழந்தையின் எதிர்கால செலவினங்கள் அல்லது உங்கள் செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாகப் பார்க்கப்படும்.

ஏன் காப்பீடு தேவை?

பின்வரும் தேவைகளுக்காக உங்களுக்கு காப்பீடு தேவை நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்துள்ள குடும்பத்திற்காக நீங்கள் காப்பீடு செய்வது அவசியம்: உங்கள் குடும்பம், நிதித் தேவைகளுக்கு உங்களைச் சார்ந்திருந்தால், நிச்சயமாக உங்களை நீங்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டினைப் பெறுவதற்கு மிகப் பொதுவான காரணம் என்னவெனில், ஒருவேளை உங்கள் குடும்பத்தில் எதிர்பாரத இழப்பு ஏற்படின், அதற்குரிய பாதுகாப்பை ஆயுள் காப்பீடு வழங்கும். ஆயுள் காப்பீட்டு இலாபங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் செலவினங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.

கடன் அல்லது பொறுப்புகள்: நீங்கள் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்திருந்தாலோ, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது மிக முக்கியம். இதன்மூலம் மன அமைதி மட்டுமின்றி, குடும்பத்துக்கு நிலையான வருமானமும் கிடைக்கிறது.

கட்டாய சேமிப்பு மற்றும் முதலீடு

  • ஆயுள் காப்பீட்டினை, கட்டாய சேமிப்பாகவும் முதலீட்டுக்கான வழியாகவும் பயன்படுத்தலாம். ஆயுள் காப்பீட்டிலிருந்து பெறும் இலாபமானது, குழந்தைகளின் உயர் கல்வி அல்லது ஓய்வுகால நிதி அல்லது விடுமுறையைக் கழித்தல் போன்ற எதிர்கால செலவினங்களுக்குப் பயன்படும்.
  • நிறுவனத்தின் கூட்டாளர் அல்லது சுய தொழில் புரிபவர்
  • நிறுவனத்தின் கூட்டாளராக உள்ளவர்கள் அல்லது சுய தொழில் புரியும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு மிக அவசியமானது. ஆயுள் காப்பீடானது, வாங்கி விற்கும் ஒப்பந்தத்தில் முதலீடு செய்வது போன்ற சில சிறப்பு வணிகப் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். வணிக உரிமையாளர் இறந்துபோனால், அவருடைய வட்டிப் பணத்தினை வழங்க அல்லது வணிகப் பொறுப்புகளைக் கொடுத்துத் தீர்க்க, ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்தப்படும்.
  • ஆர்.பி.ஐ. பத்திரங்களைத் தவிர, காப்பீட்டுத் திட்டங்கள் மட்டுமே 5 முதல் 25 வருடங்கள் வரையான கால வரையறை உத்தரவாதமுள்ள ஏனைய முதலீட்டுத் திட்டங்களாகும். காப்பீட்டு நிறுவனங்கள், சிங்கிள் பிரீமியம் முதலீட்டுத் திட்டங்களையும் தொடர்ச்சியான முதலீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்றன.

யாரைக் காப்பீடு செய்யவேண்டும்?

  • வருவாய் ஆதரவாளர் - உங்கள் குடும்பத்திற்கான வருவாய் ஆதரவாளர் நீங்கள் மட்டுமென்றால், முதலில் உங்களைக் காப்பீடு செய்துகொள்ளவும்.
  • பணியாற்றும் வாழ்க்கைத் துணை - உங்கள் வாழ்க்கைத் துணை பணியாற்றுபவராக இருந்து, காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்துபவராகவும் இருந்தால், நீங்கள் இருவரும், இணைந்த - காப்பீட்டுத் திட்டம் ஒன்றைப் பெற முடியும். உங்கள் இருவரையும் காப்பீடு செய்த அந்த பாலிசி, உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குவதுடன், வரி - சேமிப்பு நோக்கங்களுக்காக, இருவரில் ஒருவர் இந்த பாலிசியை பயன்படுத்தலாம்.
  • குழந்தைகள் - உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுடைய பெயரிலும் ஆயுள் காப்பீட்டினை வாங்க முடியும். உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக குறிப்பிட்ட பணத்தொகையினைப் பெறுவதற்கு இது உத்தரவாதமளிக்கும். உங்கள் குழந்தை அல்லது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வின் குறிப்பிட்ட காலத்தில், உத்தரவாதமளிக்கப்பட்ட பணத்தொகையினைப் பெற முடிவது, இது போன்ற பாலிசி மூலம் கிடைக்கும் பெருத்த அனுகூலமாகும்.
  • வருமானம் ஈட்டிவந்த பெற்றோரில் ஒருவர், தமது குழந்தைகளின் உயர்கல்விக் காலத்தில் இறந்துபோகும்பட்சத்தில் வாழ்க்கைத்துணையால் கல்விக்குரிய பெருந்தொகையினை செலுத்த முடியாதபட்சத்தில், இந்த வகைப் பாலிசி கைகொடுத்து உதவும். மேலும், இந்த வகையான பாலிசியொன்று, பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கட்டாய சேமிப்பை உறுதிசெய்கிறது.

நிறுவனத்தின் கூட்டாளர்/முக்கிய நபர்

உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கூட்டாளர் அல்லது முக்கியமான நபர்(கள்) இருப்பின், அவர்களுக்காக உங்கள் நிறுவனம்/ஸ்தாபனம் ஆயுள் காப்பீடு பெறமுடியும். உங்கள் கூட்டாளர்/முக்கிய நபர் இறந்துபோய், ஏதாவது நிதி இழப்பு ஏற்பட்டால், அதற்கெதிரான காப்பீட்டினை இது போன்ற பாலிசி, உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும்.

எப்போது காப்பீடு செய்யவேண்டும்?

  • உங்கள் வருவாயை சார்ந்திருப்போரின் நலனிற்காக, உங்களைக் காப்பீடு செய்துகொள்வது அவசியம். குறைவான வயதாக இருந்தால், நீங்கள் செலுத்தும் பிரீமியம் குறைவாகும். திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளவர்கள் அல்லது குழந்தைகளைப் பெற திட்டமிட்டுள்ளவர்கள், காப்பீடு செய்வது அவசியம் என எஸ்.பி.ஐ. லைஃப் கருதுகிறது
  • நீங்கள் திருமணம் செய்யாத தனி நபரெனினும், சம்பாதிப்பவராகவும் திருமணம் செய்யும் திட்டத்துடனும் இருந்தால், திருமணத்தின் பின்னர், அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய பாலிசியை, இப்போதே வாங்குவதுபற்றி அவசியம் சிந்தியுங்கள்.
  • நீங்கள் காப்பீட்டு பாலிசி ஒன்றை வாங்க இன்னும் அதிக தாமதமாகவில்லை என்பதை நினைவில்கொள்க. நீங்கள் 45 வயதுடையவராயிருந்து, இன்னமும் காப்பீடு பெறவில்லை எனினும்கூட, உங்கள் குடும்பத்துக்கு நன்மையளிக்கக்கூடியதும் உங்கள் ஓய்வு காலத்தில் வருவாய் பெறக்கூடியதுமான காப்பீட்டுத் திட்டமொன்றினை இப்போதே நீங்கள் தேர்வுசெய்யலாம்.

நான் எவ்வளவு காலத்துக்குக் காப்பீடு செய்யவேண்டும்?

  • நீங்கள் நெருக்கடியான நிலையிலோ அல்லது குடும்பத்தின் முக்கிய வருவாய் ஆதரவாளராகவோ இருந்தால், பொருத்தமான திட்டமொன்றில் உங்களைக் காப்பீடு செய்வது அவசியம்.
  • அதிகரித்துவரும் தனிக் குடும்பங்களின் காரணத்தால், பணிபுரியும் ஆண், தனது இறப்பிற்குப் பின்னர், மனைவி பெருந்தொகைப் பணத்தைப் பெறமுடியும் என்பதை உறுதிசெய்ய, வாழ்நாள் முழுமைக்கும் பாதுகாப்பை உறுதிசெய்கின்ற இந்த பாலிசி உத்தரவாதமளிக்கும்.

ஆயுள் காப்பீட்டின் அடிப்படைக் கூறுகள் என்ன?

அனைத்து தனிப்பட்டவர்களுக்குமான இரண்டு அடிப்படைக் கூறுகள்

  • ரிஸ்க் கவரேஜ் (எ.கா.) டெர்ம் இன்சூரன்ஸ்)
  • எதிர்காலத்திற்கான சேமிப்பு (எ.கா. பியூர் எண்டோமென்ட்)

ஆயுள் காப்பீட்டினை வாங்க எவ்வளவு செலவாகும்?

காப்பீட்டு பாலிசியை வாங்குவதற்கான கட்டணம் இவற்றைச் சார்ந்தது:

  • உங்கள் வயது, உடல் நலம் மற்றும் உங்கள் பணியின் தன்மை
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியின் வகை.
  • திட்டமிட்ட தொகை.
  • பாலிசி காலம்.
  • பிரீமியம் செலுத்தும் காலம்.
  • பிரீமியம் செலுத்தும் முறை.

ஆயுள் காப்பீட்டின் பெறுமதியை நான் எப்படி விலைகுறைத்து வாங்குவது?

பின்வரும் சூழ்நிலையில் பாலிசியின் விலை குறைக்கப்படும்

  • இளம் வயதிலேயே காப்பீடு பெற்றிருந்தால் (ரிஸ்க் குறையும்போது)
  • உங்களுக்கான காப்பீட்டினை நீண்ட காலத்துக்காகப் பெற்றிருந்தால

பெருந்தொகைக்கு உங்களைக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்; வருடாந்திரம் பிரீமியம் செலுத்தும் சலுகையுடன் கழிவும் பெறலாம்

முதிர்வு காலம் வரையில், மிகக் குறைந்தபட்ச பலன்களை வழங்குகின்ற காலவரை திட்டம் போன்று, குறைந்த கட்டண பாலிசி ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு கூடுதல் நன்மையளிக்காத ரைடர்களையோ, வேறு வகையில் குறைவான கட்டணத்தில் கிடைக்கக்கூடிய ரைடர்களையோ வாங்க வேண்டாம்.

காப்பீடுகளின் வகைகள் என்ன?

  • காப்பீட்டுப் பிரிவானது, 'ஆயுள்' மற்றும் 'ஆயுள் சாராத' (அல்லது பொதுக் காப்பீடு என) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தனிப்பட்டவரின் ஆயுள், ஆயுள் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பீடு செய்தவர் இறக்க நேரிட்டால், அவரால் நியமிக்கப்பட்ட நபர், குறிப்பிட்ட காலத்தில் உரிய பணத் தொகையினைப் பெறுவார்.
  • பொது காப்பீட்டின்கீழ், தனிப்பட்டவரின் வாழ்க்கை தவிர அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, தனிப்பட்ட ஒருவர், தனது உடல் நலம், வீடு, வாகனம், பயணம், அலுவலகம், கடை ஆகியவற்றுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் கூட காப்பீடு செய்யமுடியும்.

எந்த வகையான காப்பீட்டினை நான் வைத்திருக்கவேண்டும்?

உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, குறைந்தபட்சம் நீங்கள் பின்வரும் பாலிசிகளை நிச்சயம் வைத்திருக்கவேண்டும்

  • உடல்நலக் காப்பீடு
  • ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு
  • வாகனக் காப்பீடு
  • வீட்டு மனைக் காப்பீடு

காப்பீடு செய்வதால் நான் பெறுவது என்ன?

  • இறப்பு, நோய், விபத்து, களவு போதல் அல்லது இயற்கைச் சீற்றங்கள் போன்ற இழப்புகளினால் ஏற்படும் பெரிய ஆபத்துகளிலிருந்து அமைதியான முறையில் உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாக்கிறீர்கள்
  • நிதியைப் பொருத்தவரையில், 88 ஆவது பிரிவின் படி, வரிக் கட்டணங்களை உரிமை கோரலாம் (ஆயினும் உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே தற்போது வரிக் கட்டணம் சார்ந்திருக்கும்).
  • ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றில் 1,00,000 ரூபாய்க்கு செலுத்திய பிரீமியமானது, 88 வது பிரிவின்படி, வரி கட்டணமாக உரிமை கோரப்படும். எவ்வாறாயினும், இந்தத் தொகையானது, உங்கள் வருவாய் நிலையினைப் பொறுத்தே வரி கட்டணமாக உரிமை கோரப்படும் (கீழுள்ள பெட்டியில் தரப்பட்டுள்ளது).
  • வாழ்வாதார பலன்கள் அல்லது இடைக்கால பலன்கள், அதாவது மணி பேக் பாலிசியின் காலவரையில் பெறப்படும் பணத்துக்கு வரி விலக்குள்ளது. எடுத்துக்காட்டாக, பாலிசியின் காலவரையின்போது, எஸ்.பி.ஐ. லைஃப் மணி பேக் பாலிசியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, உத்தரவாதமும் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
  • முதிர்வுகாலப் பலன்கள் அல்லது பாலிசியின் காலவரை முடிந்தவுடன் பெறப்படும் தொகைக்கும் கூட வரி விலக்குண்டு.
  • எஸ்.பி.ஐ. லைஃப் - லைஃப்லாங் பென்ஷன் பிளஸ் போன்று, குறிப்பிட்ட பென்ஷன் பாலிசியில் செலுத்திய பிரீமியமானது, 80CCC பிரிவின்படி, வரி கட்டணத்திற்குத் தகுதி பெறும்.
  • பென்ஷன் பாலிசியின் கீழ் தொடர்ச்சியாகப் பெறப்படும் பென்ஷனுக்கு வரி செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், இந்த பாலிசிகளின் கீழடங்கும் பெருந்தொகைப் பணத் தெரிவுக்கு வரி விலக்குண்டு.
  • காப்பீடு செய்தவரால் நியமிக்கப்பட்ட நபர், ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலம் பெறுகின்ற லாபங்களுக்கு வரி விலக்குண்டு.
  • 80D பிரிவின்கீழ், உடல் நலக் காப்பீட்டு பாலிசிக்காக, அதிகபட்சம் ரூ. 10,000 வரை, பிரீமிய தொகையை உரிமை கோர முடியும்.
  • மேலும், பாலிசி காலவரையின்போது மற்றும்/அல்லது முதிர்வின்போது, காப்பீட்டு நிறுவனத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பணத்துக்கு வரி விலக்குண்டு (பென்ஷன் பாலிசிகள் தவிர்த்து).
  • சில காப்பீட்டு பாலிசிகளை நீங்கள் முதலீட்டுத் திட்டங்களாகப் பயன்படுத்த முடியும்.
  • சில காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது வழங்கும் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன. சில பாலிசிகள், நிலையான உத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய் வீதத்தை வழங்குகின்றன, சில பாலிசிகள் முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய அனுமதிக்கின்றன, அப்போது அவை, சந்தையுடன் இணைந்த வருவாய் வீதத்தை வழங்குகின்றன. தற்போதைய சந்தை நிலையில், காப்பீட்டுத் திட்டங்கள் மூலமான ஈட்டுத்தொகையானது, ஆண்டுக்கு 6.5 -7.5 - 8% என்ற நிலைகளில் மாறுபடும்.(வரிக்கு முன்).

குழு ஆயுள் காப்பீடு என்பது என்ன?

  • ஒரு மாஸ்டர் பாலிசியின் கீழ், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளாமல் வழங்கப்படும் ஆயுள் காப்பீடே குழு ஆயுள் காப்பீடாகும். இது, பொதுவாக பணியாளர்களின் நன்மைக்காக, அல்லது தொழில் முறை உறுப்பினர்கள் குழு போன்ற, அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுக்காக, பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களிடமும், தங்களுடைய காப்பீட்டுக்கு ஆதாரமான வழங்கப்பட்ட சான்றிதழ் இருக்கும்.

எந்த வகையான பாலிசி எனக்குச் சிறப்பாகப் பொருந்தும்?

உங்கள் காப்பீட்டு நோக்கம், வருமானம், சொத்துக்கள், கடன் பொறுப்புகள், உங்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் குடும்ப செலவினம் போன்ற பல்வேறு காரணங்களைப் பொறுத்து, உங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் வகையில் பாலிசி உள்ளது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

  • எண்டோமென்ட் பாலிசிகள்
  • வாழ்நாள் முழுமைக்குமான பாலிசிகள்
  • பென்ஷன் பாலிசிகள்
  • எண்டோமென்ட் பாலிசிகள்

எண்டோமென்ட் பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே காப்பீடு பெற்றவருக்கு பாதுகாப்பளிக்கின்றன. ஆகவே, ஓய்வுகாலம் வரை தன்னைக் காப்பீடு செய்வதற்கான பாலிசியை ஒருவர் தேர்ந்தெடுக்கலாம். எ.கா. 25 வயதுடைய ஒருவர், தனது 60 வயது வரையான 35 வருடங்களுக்கு தன்னைக் காப்பீடு செய்யும் பாலிசியைத் தேர்வுசெய்யலாம்.

காப்பீடு செய்தவர் இறக்கும்போது (பாலிசியின் காலவரையின்போது), அவரால் நியமிக்கப்பட்டவர் இருப்பின், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் சேர்த்துப் பெறுவார். எத்தனை வருடங்கள் பாலிசி நடைமுறையிலிருந்ததோ அதற்கேற்ப போனஸ் செலுத்தப்படும்.

பாலிசி காலவரையில் உயிருடன் இருக்கும்பட்சத்தில், அதாவது முதிர்வு காலத்தில், காப்பீடு செய்தவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதையும் சேர்த்துப் பெறுவார். அதன் பின்னர், பாலிசி மூலமான பாதுகாப்பை, காப்பீடு செய்தவர் இழக்கிறார்.

வாழ்நாள் முழுவதற்குமான ஆயுள் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது, எண்டோமென்ட் பாலிசிகள் பொதுவாக விலையுயர்ந்தவை. எண்டோமென்ட் பாலிசிகள் பின்வருமாறு இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - என்டோமென்ட் - லாபமற்ற மற்றும் என்டோமென்ட் - லாபத்துடன்.

எண்டோமென்ட் - லாபமற்ற அல்லது காலவரை திட்டத்தில், காப்பீடு செய்தவர் இறக்கும்போது நியமனதாரருக்கு திட்டத் தொகை மட்டும் வழங்கப்படும். பாலிசியின் காலவரை அல்லது முதிர்ச்சி வரையில் காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையினை அல்லது அதன் ஒரு பகுதி அல்லது பிரீமியத் தொகையை மட்டும் பெறலாம். பொதுவாக, இதுபோன்ற பாலிசிகள் குறைந்த கட்டண பாலிசிகளாக உள்ளன.

எண்டோமென்ட் - லாபத்துடன் கூடிய பாலிசிகளில், (உத்தரவாதமளிக்கப்பட்டபடி) காப்பீடு செய்தவர் இறக்கும்போது அல்லது பாலிசியின் காலவரை முடியும்போது திட்டத்தொகையுடன் சேர்த்து போனஸ் வழங்கப்படும். இந்த பாலிசிகளின் விலை, லாபமற்ற எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. தற்போது, லாபத்துடன் கூடிய நான்கு வகையான எண்டோமென்ட் பாலிசிகள் வழங்கப்படுகின்றன:

லாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசிகள்

  • காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும்.
  • பாலிசியின் காலவரையில் அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், அவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்துப் பெறுவார். முதிர்வுகாலத்தில் பெறக்கூடிய தொகைக்கு வரி விலக்குண்டு.
  • ஓய்வு காலத்தின்போது முதிர்வடையும் இதுபோன்ற பாலிசிகளை வாங்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர். பென்ஷன் வருமானத்துடன் இணைப்பதற்கு, பெரும்பாலும் முதிர்வுத் தொகை பயன்படுத்தப்படுகிறது (பென்ஷன் வருமானத்துக்கு வரி உண்டு).

மணி பேக் பாலிசிகள்

  • பாலிசியின் காலவரையின்போது, காப்பீடு செய்தவர், திட்டத் தொகையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (சவீதம்) சீரான கால இடைவெளியில் பெறுவார். பாலிசி காலவரையின்போது பெற்றுக்கொள்ளும் இந்தப் பணத்துக்கு வரி விலக்குண்டு.
  • பாலிசி காலவரை அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், எஞ்சியுள்ள திட்டத் தொகையுடன் பாலிசிக்கான போனஸ் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.
  • காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும். (பாலிசி காலவரையின்போது காப்பீடு செய்தவர் பெற்றுக்கொண்ட தொகை, நியமினதாரருக்கு வழங்கவேண்டிய தொகையிலிருந்து குறைக்கப்படாது.)
  • மணி பேக் பாலிசிகளின் விலை, லாபமுள்ள எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. விடுமுறைக்குச் செல்லுதல், வீட்டுக்குப் புதிய பொருட்கள் வாங்குதல் அல்லது அதே தொகையினை மீண்டும் முதலீடு செய்தல் போன்றவற்றுக்காக, அநேகமானோர் இது போன்ற மணி பேக் பாலிசிகளைப் பயன்படுத்த விரும்புவர்.

சைல்ட் பிளான்கள்

  • திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் (இருப்பின்) திட்டமிட்ட நேரத்தில் குழந்தைக்கு வழங்கப்படும். இதை முன்மொழிந்தவர் உயிருடன் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, இந்த பாலிசிக்கான பணத்தை குழந்தையால் பெற முடியும்.
  • இதுபோன்ற பாலிசிக்காக, பெற்றோர்/பாதுகாவலர்/தாத்தா-பாட்டி; இவர்களில் ஒருவர் முன்மொழிபவராக இருக்கலாம்; பாலிசிக்கான பிரீமியத்தை இவர்கள் செலுத்துவார்கள்.
  • முன்மொழிபவர் இறந்துபோகும் சூழலில், தொடர்ந்து செலுத்த வேண்டிய பிரீமியங்களை அவரது குடும்பத்தினர் அடுத்த செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், காப்பீடு செய்தவர் இறந்து போனால், திட்டத் தொகையை குழந்தை பெறுவதும் பெற முடியாமல் போவதும் பாலிசியின் வகையைப் பொறுத்தது. எவ்வாறாயினும், பாலிசி தொடர்ந்திருப்பதோடு, திட்டத்தொகையுடன் போனஸ் இருப்பின், அவ்விரண்டையும் பாலிசியில் குறிப்பிட்ட காலத்தில், குழந்தையால் பெற முடியும்.
  • பாலிசி காலவரை உயிருடன் இருந்தால், திட்டமிட்ட காலத்தில், குழந்தைக்கு பணம் வழங்கப்படும்.
  • இதுபோன்ற பாலிசிகள், குழந்தையின் உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு மிகவும் பொருத்தமானவை.

யூனிட்-லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள்

  • பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, அவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்து, இதுபோன்ற தெளிவான (யூனிட் லிங்க்ட்) பாலிசி மூலம் வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது.
  • நிறுவனமானது, காப்பீடு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக எஞ்சிய பிரீமியத் தொகையினைப் பயன்படுத்துகின்றன.
  • காப்பீடு செய்தவருடைய இறப்பின்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறுவார்.
  • பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், காப்பீடு செய்தவரால் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறமுடியும்.

வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள்

  • வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், காப்பீடு செய்தவர் இறக்கும் வரையில், அவருக்கான காப்பீட்டை வழங்குகின்றன.
  • காப்பீடு செய்தவர் இறக்கும்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதனையும் சேர்த்துப் பெறுவார்.
  • பாலிசிக்கான காலம் வரையறுக்கப்படாதவிடத்து, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர், பணத்தை திரும்பப் பெறவோ அல்லது பாலிசியின் பணப் பெறுமதிக்கெதிராக கடன்பெறவோ முடியும்.
  • பொதுவாக, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசியின் பணப் பெறுமதி (வட்டி அல்லது பிரீமியத்திலிருந்து சம்பாதித்த போனஸ்), இலாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசியை விடவும் அதிகமானது.
  • மேலும், வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிக்கான பிரீமிய கட்டணம், (காப்பீட்டு காலவரை எல்லை நீண்டது என்பதால்) நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

பென்ஷன் பிளான்கள்

  • பென்ஷன் பாலிசிகள், காப்பீடு செய்தவருக்கு அல்லது அவர் நியமித்தவருக்கு நிலையான காலச்சுழற்சியில், பணத்தொகையினை முறையாக வழங்குகின்றன.
  • காப்பீடு செய்தவர், தனது பென்ஷன் தொகையினை எப்பொழுது மற்றும் எவ்வளவு காலத்திற்கு (காலவரை) பெறவெண்டும் என்பதை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
  • காப்பீடு செய்தவர், பாலிசியின் காலவரையில் இறக்கும் சூழலில், நியமனதாரர் பணத்தினை மொத்தமாகப் பெறலாம் அல்லது பாலிசியின் காலவரை உள்ளவரை, பென்சன் தொகையினை தொடர்ந்து பெறலாம்.
  • உங்கள் எல்லா நோக்கங்களையும் தனியொரு பாலிசியால் நிறைவேற்ற முடியாததால், பல நன்மைகளை வழங்கும் வேறுபட்ட பாலிசிகள் பற்றி அறிந்து வைத்திருக்கும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

காலவரை காப்பீடு என்பது என்ன?

காலவரை காப்பீடானது, “அபாயம்” மற்றும் அபாயமாகக் கருதப்படும் “இறப்பு” ஆகியவற்றை ஈடுசெய்கிறது. இதன் மூலம், தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் இறப்பு நேர்ந்தால் மட்டும் மொத்தமாகப் பணம் வழங்கப்படும். காப்பீடு செய்தவர், தேர்ந்தெடுத்த காலம்வரை உயிருடன் இருந்தால், எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாது.

எண்டோமென்ட் திட்டம் என்றால் என்ன?

காலவரையின்போது காப்பீட்டாளர் இறந்துபோனால் அல்லது காலவரை முதிர்வில் பாலிசித் தொகை வழங்கப்படும்.

முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

  • முழுமையான ஆயுள் காப்பீட்டு ரிஸ்க்கானது, காப்பீடு செய்தவர் எப்போது இறப்பினும் அதை ஈடு செய்கிறது. முழுமையான ஆயுள் காப்பீட்டின்கீழ் நிலையான காலவரை இல்லை என்பதையே இது குறிக்கிறது. பெரும்பாலான பாலிசிகள், பாலிசிதாரரின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இலாபப் பங்குகளை வழங்கின்றன .
  • முழுமையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வேறுபாடுகள் உள்ளன. அதாவது:
  • தெளிவான முழுமையான ஆயுள் காப்பீடு: - காப்பீடு செய்தவர், தன் வாழ்நாள் முழுவதும், இறக்கும் வரையில் தொடர்ச்சியாக பிரீமியம் செலுத்தவேண்டியதாகும். ரிஸ்க் கவரேஜ் என்பது, காப்பீடு செய்தவர் எந்த நேரத்திலும் இறந்துபோக நேரலாம் என்பதால், அவர் உயிர் வாழும் ஒட்டுமொத்த காலத்துக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுவதாகும்..
  • வரையறுக்கப்பட்ட கட்டண முழுமையான ஆயுள் காப்பீடு: - பிரீமியங்கள், வரையறுக்கப்பட்ட அளவிலும் குறைந்த காலத்துக்கும் மற்றும் காப்பீட்டாளரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது இளவயதில் இறப்பு நேரும் என்கிற எதிர்பார்ப்பில் செலுத்தப்படுவது இந்த வகையாகும். எவ்வாறாயினும், ரிஸ்க் கவரேஜ் என்பது காப்பீடு செய்தவரின் வாழ்நாள் முழுவதையும் ஈடுசெய்கிறது.

மணி பேக் பிளான் என்றால் என்ன?

எண்டோமென்ட் திட்டங்கள் போலன்றி, மணி பேக் பாலிசிகளில், பாலிசிதாரர், காலவரையின்போது “காலாந்தர கட்டணங்களைப்" பெறுவதோடு, பாலிசி நிலைத்திருக்கும் காலம் வரையில் பெருந்தொகைப் பணத்தினையும் பெறுவார். பாலிசி காலவரையின்போது இறப்பு நிகழ்ந்தால், பயனடைபவர், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையினையும் பெறுவார். மேலும் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்த வகை பாலிசிகள் மிகவும் பிரபலமானவை, என்பதால் பாலிசிதாரரின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் பெருந்தொகையாகப் பெற்றுக்கொள்வதற்குரியதாக தயாரிக்கப்பட்டிருக்கும்.

ஆதாரம் : எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate