பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / மத்தியப் புலனாய்வுத் துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்தியப் புலனாய்வுத் துறை

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (Central Bureau of Investigation-CBI) எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன என்பன பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சிபிஐ உருவான விதம்

பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் வகையிலும், சரியோ தவறோ, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லாமலோ என்று எந்த உத்தரவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில் போலீஸ் சட்டம் – 1861 நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, போர் தொடர்பான செலவுகள் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், நேர்மையற்ற சக்திகள் லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படும் நிலையில், காவல் துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை என்று கருதப்பட்டது.

அப்போதுதான் 1941-ல், போர்த்துறையில் (War & Supply Deptt.), சிறப்பு போலீஸ் நிர்வாகம் (Special Police Establishment (SPE)) அமைக்க ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1946-ல், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் அமையும் வகையில், டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாகச் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. காலப்போக்கில், எஸ்பிஇயிடம் மேலும் மேலும் வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. 1.4.1963-ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தின் மூலம், பணியாளர் துறையின் கீழ் எஸ்பிஇயை சிபிஐயாக உருமாற்றம் செய்தது இந்திய அரசு. இத்தனை ஆண்டுகளில், பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு விஷயங்களைக் கையாளும் விசாரணை அமைப்பாக படிப்படியாக சிபிஐ விரிவாக்கம் செய்யப்பட்டது.

குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான நடுவண் அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. ஆரம்பகாலங்களில் மத்திய அரசு ஊழியர்களின், ஊழல் விவகாரங்களை மட்டும் விசாரித்த இந்த அமைப்பு, பின்னாளில் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனமாக ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ) மாறியது.

சிபிஐ பிரிவுகள்

 • பொதுக் குற்றப் பிரிவு General Offences Wing (GOW),
 • ஊழல் விசாரணைப் பிரிவு (Anti-Corruption Division),
 • சிறப்புக் குற்றச் செயல்கள் பிரிவு (Special Crimes Division),
 • பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு (Economic Offences Division),
 • கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள், சிபிஐ நிர்வாகம்,
 • வழக்கு தொடுப்பதற்கான இயக்ககம், மத்திய தடயவியல் ஆய்வுக்கூடம் என்று ஏழு பெரும் பிரிவுகள் சிபிஐ-க்குள் உள்ளன.
 • சர்வதேச குற்றக் காவல் அமைப்பு/ சர்வதேச காவல் (The International Police Criminal Organization (ICPO or Interpol))
 • பல நாடுகளின் சர்வதேச பிரச்சினையைப் கண்காணிக்கும் ஓர் அமைப்பு.
 • சிபிஐ சர்வதேச காவல் அதாவது இண்டர்போலின் இந்திய பணியையும் செய்கிறது.

சிபிஐ இயக்குநர்

மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐ அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக் காலம் இரண்டாண்டுகள். ஊழல் கண்காணிப்பு, விழிப்புணர்வுத் துறைச் சட்டப்படிதான் சிபிஐ தலைமை இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, சிபிஐ தலைமை இயக்குநரைத் தேர்வுசெய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத சூழலில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் உறுப்பினராக உரிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ உள்கட்டுமானம்

சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. பணியாளர் நலத் துறையின் கீழ்தான் வருகிறது. கடின உழைப்பு, நடுநிலைமை, நேர்மை ஆகியவை சிபிஐயின் லட்சியங்கள். தலைமையகம் டெல்லியில் இருக்கிறது. இதன் சார்பு அமைப்பான சிபிஐ அகாடமி என்ற பயிற்சிப் பிரிவு உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ளது. 2017 மார்ச் 1 நிலவரப்படி இந்த அமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7,274. நிரப்பப்பட்ட இடங்கள் 5,685. காலியிடங்கள் – 1,589 (21.84%). சிறப்பு போலீஸ் பிரிவாக இருந்தபோது, 1955 - 1963 காலகட்டத்தில் செயல்பட்டவர் டி.பி.கோலி. அவரே சிபிஐயின் முதல் தலைமை இயக்குநராக 1, ஏப்ரல்,1963 முதல் 30, மே, 1968 வரை தொடர்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் எஃப்.வி.அருள், சி.வி.நரசிம்மன், டி.ஆர்.கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் ஆகியோர் சிபிஐ இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர்.

சிபிஐயின் சிறப்பதிகாரம்

தேர்தல் ஆணையம்போல அரசியலமைப்புச் சட்டரீதியிலான உருவாக்கத்தைப் பெற்றதல்ல சிபிஐ. தன்னாட்சி, சுதந்திரம் என்றெல்லாம் பேசப்பட்டாலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே அது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கியமான காரணம் இதுவே. எனினும், சிபிஐ பல சிறப்பதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உதாரணம், சிபிஐ விவகாரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது. விசாரணையை எல்லாம் ரகசியமாக முடித்துவிட்டு, கைகளில் துருப்புச் சீட்டுகள் கிடைத்த பின் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குவது சிபிஐயின் உத்திகளில் ஒன்று.

மாநில விசாரணையை சிபிஐ எப்பொழுது எடுக்கும்?

 • சம்பந்தப்பட்ட மாநில அரசு, மற்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் போது, மத்திய அரசு பொதுவாக மாநில கோரிக்கையை தீர்மானிக்கும் முன் சிபிஐ கருத்தைக் கேட்டு முடிவெடுக்கிறது
 • DSPE சட்டத்தின் பிரிவு 6 ன் கீழும், DSPE சட்டத்தின் 6-இன் கீழ் மாநில அரசு ஒப்புதல் அறிவிக்கை அனுப்பியபின், அதன்பின் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்.
 • உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்கள் அத்தகைய விசாரணைகளை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.

குறைபாடுகள்

 • தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம் போல் சுதந்திர அல்லது அரசியலமைப்பு துறையாக இல்லாததால் மாநில அரசு எப்படிக் காவல் துறையை ஆட்டுவிக்கிறதோ, அப்படி மத்திய அரசின் ஆட்டுவிப்புக்கு ஏற்ப சிபிஐ ஆடும் என்பதுதான். முன்னாள் அமைச்சர்கள், கார்பொரேட் முதலாளிகள், கட்சிப் பெருந்தலைவர்கள் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்த விதம் இக்குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் விதத்திலேயே இருந்தன. “செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாளும்போதெல்லாம், சிபிஐ மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுவது இன்றைக்கும் தொடர்கிறது” என்று 2009-ல் வெளியான ஒரு கட்டுரையில் நீதிபதி ஜே.எஸ்.வர்மா குறிப்பிட்டிருந்தார். சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என்று 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறியது.
 • சிபிஐ அமைப்பின் தன்னாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டரீதியிலான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். ஆளுங்கட்சியின் அழுத்தங்களிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பரிந்துரைகள்

 • 1978-ல், “தனது கடமைகள், செயல்பாடுகள் தொடர்பான தன்னிறைவுப் பட்டயத்தைக் கொண்டிருக்கும் வகையிலான ஏற்பாடுகள் இல்லாத நிலையை நீக்கும் வகையில், விரிவான சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று எல்.பி.சிங் கமிட்டி பரிந்துரைத்தது.
 • சிபிஐயின் நம்பகத்தன்மையையும் பாரபட்சமற்ற தன்மையையும் உறுதிசெய்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யும் வகையில், ஒரு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று 2007- ன் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 19-வது அறிக்கை பரிந்துரைத்தது. “சட்டபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், உள்கட்டமைப்பு, நிதியாதாரங்கள் உள்ளிட்ட விஷயங்களில் சிபிஐயைப் பலப்படுத்துவது காலத்தின் தேவை” என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் (2008) 24-வது அறிக்கை ஏகமனதாகக் கருத்து தெரிவித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூடச் செயல்படுத்தப்படவில்லை.
 • போதுமான சட்டபூர்வப் பாதுகாப்போ, போதுமான மனித சக்தியோ, பொருளாதார வளமோ வழங்கப்படாத நிலையில், ஒரு நிறுவனத்தைக் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்த சிலர், அதற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது உண்மைதான். ஆனால், அவர்கள் நியமிக்கப்பட்ட விதம் தவறானது; செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் செல்லப் பிள்ளைகள் அப்பதவியில் நியமிக்கப்பட்டனர். பிரச்சினை சிபிஐயிடம் அல்ல, அதன் கட்டமைப்பை வடிவமைக்கின்றவர்களிடம், அதன் அதிகாரங்களைத் தீர்மானிக்கின்றவர்களிடம் தான் இருக்கிறது. சிபிஐயின் செயல்பாட்டில் அரசு தலையிடுவதில்லை என்ற சூழல் இருந்தால், ஒரு முதல் தரமான விசாரணை அமைப்பாக சிபிஐ இருக்கும்!
 • அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து சிபிஐயை விடுவிப்பது தொடர்பாக ஊழலுக்கு எதிரான லோக்பால் இயக்கம் ஒரு எளிதான வாதத்தை முன்வைத்தது. சிபிஐ அதிகாரிகளைத் தன் விருப்பத்தின் பேரில் இடமாற்றல் செய்யும் அதிகாரம் அரசுக்கு இருந்தால், விசாரணை அமைப்பான சிபிஐக்குத் தன்னாட்சி இருக்காது. வழக்குகளைச் சுதந்திரமாக விசாரிக்கவும் முடியாது. மேலும், சிபிஐயில் அரசுக்கு வளைந்துகொடுக்கும் ஊழல் அதிகாரிகளும் உண்டு. இந்தச் சூழலில், சுதந்திரமான அமைப்பின் கீழ் சிபிஐ கொண்டுவரப்பட வேண்டும். சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய மூன்று நிறுவனங்களும் அரசால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசின் அழுத்தம் காரணமாக அவை செயலற்ற தன்மைக்கு இட்டுச் செல்லப்படுகின்றன

ஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத இதழ் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். பிரஷாந்த் பூஷண், சென்னை

3.03846153846
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top