பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / கைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்

மின் இணைப்புடன் நமது மொபைல் எண்ணை இணைப்பதால் கிடைக்கபெறும் நன்மைகள் மற்றும் இணைக்கும் முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்புடன் நமது மொபைல் எண்ணை இணைப்பதால் கிடைக்கபெறும் நன்மைகள்

இரு மாதங்களுக்கு ஒருமுறை நம் வீட்டு மின் கட்டணம் எவ்வளவு என்று மின் வாரியப் பணியாளர் கணக்கெடுத்து சென்றுவிடுவார். அந்தக் கட்டணம் எவ்வளவு என்று நாம் மீட்டர் அருகில் உள்ள அட்டையில் எழுதியும் சென்றுவிடுவார். நமக்கு இருக்கும் வேலைப் பளுவில் அதைப் பார்க்கத் தவறிவிட்டால் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நமது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு பிறகு அபராதத்துடன் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும்.

நமது மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தால், மின்சார வாரிய ஊழியர் நமது மின் கட்டணத்தை எடுத்துச் சென்று மின்வாரிய அலுவலகக் கணினியில் பதியும்போது, நமது மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக நமது மின் இணைப்புக்கான கட்டணத்தொகை எவ்வளவு என்பது வந்துவிடும். அந்தக் குறுஞ்செய்தியில் நாம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை, மின் இணைப்பு எண் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தச் செய்தி நமது மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்த உதவியாக இருக்கும்.

நமது பகுதியில் மாதம் ஒருமுறை மின்சார வாரியத்தின் பராமரிப்புக்கென பகலில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 அல்லது 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும். சில நேரம் இந்தச் செய்தி நமக்குத் தெரியாமல் பல வேலைகளை முடிக்க முடியாமல் நாம் சிரமப்பட்டிருப்போம். சொந்த அலுவலகம் வைத்திருப்போர் மின்சாரம் முழு நாளைக்கும் இல்லையென்றால் விடுப்பு அளித்திருப்பார்கள். முதலிலேயே தெரியாததால் பணியாளர்கள் வந்தபின் மின்சாரம் இல்லையென்று தெரிந்த பின்பு விடுப்பும் விட முடியாமல், வேலையும் வாங்க முடியாமல் சிரமப்பட்டிருப்பார்கள்.

ஏற்கெனவே மின்தடை ஏற்படுவது தெரிந்திருந்தால் இந்த சிரமங்களை நாமே தவிர்த்திடலாம். நாம் நமது இல்லத்தின் மின் இணைப்பு எண்ணை நமது மொபைலுடன் இணைத்தால் நமது பகுதியில் மின்தடை ஏற்படுவது தொடர்பான குறுஞ்செய்தியை முதல் நாளிலோ அதற்கு முன்போ அனுப்பிவிடுவார்கள். இந்தச் செய்தி பெருமளவில் நமது சிரமத்தைக் குறைக்க உதவும் என்பதற்காகக்கூட நமது மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்.

கைப்பேசி எண்ணை எப்படி மின் கட்டண எண்ணுடன் இணைப்பது?

இரண்டு வழிகளில் நமது எண்ணை இணைக்கலாம். முதலில் நீங்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய ஒரு விண்ணப்பத்தில் உங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு மின்சார வாரிய உதவிப் பொறியாளருக்குக் கொடுத்தால், உங்களது எண் உங்கள் மின் இணைப்புடன் அவர்களது கணினியில் இணைக்கப்பட்டுவிடும்.

இரண்டாவது வழியாக இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை இணைக்கலாம். http://tneb.tnebnet.org:8087/mobileno/ என்ற இணைய முகவரியை கொடுத்து அந்த தளத்துக்குச் சென்றால் முதலில் உங்கள் பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 9 (பிராந்திய) பகுதியைக் கொண்டிருக்கும் அதில் உங்கள் பிராந்தியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். (தமிழக மின்வாரியம் தமிழகத்தை 9 மின் வாரிய பிராந்தியங்களாகப் பிரித்துள்ளது.)

வீடு எந்த பிராந்தியத்தி்ல் வருகிறது என்பதை எப்படி அறிவது?

ஏற்கெனவே நீங்கள் கட்டியுள்ள மின் கட்டண ரசீதில் உங்கள் பகுதி எண் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு உங்கள் மின் கட்டண ரசீதில் மின் கட்டண எண் 05139005193 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால் இந்த எண்ணை நீங்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். முதல் இரண்டு எண்கள் உங்கள் பிராந்திய எண், அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் 05 என்பது மதுரை பிராந்திய எண். இரண்டாவதாக உள்ள மூன்று எண்கள் உங்கள் ஊரின் எண் (செக்சன் எண் என்பார்கள்). அடுத்த மூன்று எண்கள் ஊரின் பகுதி எண். உதாரணத்துக்கு 139 என்பது ஊரின் எண் என்றால் அதற்கு அடுத்த மூன்று எண்கள் அந்த ஊரை மூன்றாகவோ நான்காகவோ பிரித்து அளிக்கப்பட்ட எண். இவை ஒற்றை இலக்கத்திலிருந்தாலும் அவை மூன்றெழுத்து எண்ணாகத்தான் எழுதப்பட வேண்டும். உதாரணத்துக்கு 5 என்பதை 005 என்று எழுதப்பட வேண்டும். கடைசியாக உள்ள எண்கள்தான் வீட்டின் மின்இணைப்பு எண். அவை ஒற்றை இலக்கத்திலிருந்து நான்கு இலக்க எண்கள்வரை இருக்கலாம். இந்த எண்ணை அப்படியே குறிப்பிடலாம் அதற்கு முன் 0 குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

இணையதளம் மூலம் இணைத்தல்

இணையதளத்தில் முதலில் பிராந்தியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அடுத்த கட்டத்தில் நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கடைசி கட்டத்தில் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு நமது எண்ணில் முதல் இரண்டு இலக்கம் போக மீதமுள்ள எண்களை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள Validate என்பதை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.

இதில் ஏற்கெனவே இந்த எண் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் வந்தால் தங்களது மொபைல் எண்ணோ அல்லது மின்கட்டண எண்ணோ வேறு ஒரு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பொருளாகும். உங்களது சொந்த வீட்டுக்கு இதுவரை பதிவு செய்யவில்லை ஆனாலும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்தால், தாங்கள் நேரடியாக உங்கள் பகுதி மின்சார வாரியத்தின் அலுவலர்களிடமோ உதவிப் பொறியாளரிடமோ நேரடியாக விண்ணப்பித்து உங்களது எண்ணைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

ஆதாரம் - தி இந்து - நாளிதழ்

3.17948717949
செல்லயா May 20, 2020 02:12 PM

மின் கட்டணம் எவ்வளவு என்று அறிய

தனசேகரன் May 07, 2018 04:24 PM

நல்ல தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top