பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்நாட்டு வைப்புத் தொகை

உள்நாட்டு வைப்புத் தொகை தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் வட்டியில்லா வைப்புத் தொகைகளை ஏற்கலாமா?

நடப்புக் கணக்கு தவிர, வேறு வட்டியில்லா வைப்புத்தொகைகளை ஏற்க இயலாது.

வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டி வழங்கலாமா?

வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு மூன்று மாத அடிப்படையிலோ அல்லது நீண்டகால அடிப்படையிலோ வட்டி வழங்கலாம்.

வங்கிகள் குறித்தகால வைப்புத் தொகைகளுக்கு மாதாமாதம் வட்டி வழங்கலாமா?

காலாண்டிற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிலும் வட்டி வழங்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்குவதானால், காலாண்டு வட்டியில் தள்ளுபடி செய்து வழங்கலாம்.

வங்கிகள் குறித்தகால வைப்புமுறையில் ஒட்டு மொத்தம் ரூ 15 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகைக்கு வேறுபட்ட வீதத்தில் வட்டி வழங்கலாமா?

ஓரு வைப்புத்தொகைக் கணக்கில் ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருந்தால் வேறுபட்ட விகிதத்தில் வட்டி வழங்கலாம். பல வைப்புத்தொகை கணக்குகளின் ஒட்டு மொத்தம் ரூ.15 லட்சமும் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால் அவ்வாறு வழங்க இயலாது.

வைப்புநிதி திரட்டுவதற்கு வங்கிகள் தரகு தரலாமா?

வங்கிகள் தனி நபர்களையோ, கம்பெனிகளையோ அல்லது சங்கங்களையோ, வைப்புநிதி திரட்டுவதற்கோ அல்லது வைப்புநிதி சார்ந்த திட்டங்கள் விற்பனை செய்வதற்கோ நியமிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சம்பளம், சன்மானம், தரகு என்று வழங்குவதும் தடை செய்யப்பட்ட செயல்கள் ஆகும். ஆனால் சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு-வீடாகச் சென்று வைப்புநிதி திரட்ட நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டும் தரகு தரலாம்.

குறித்தகால வைப்புக் கணக்கு முதிர்வடைவதற்கு முன்னதாகவே வங்கிகள் அவற்றைத் திருப்பிக் கொடுக்கலாமா?

வைப்புநிதி என்பது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான ஒப்பந்ததின் அடிப்படையில் திட்டவட்டமான காலக்கெடுவுக்குள் அமைவது. முதிர்வடையும் தேதிக்கு முன்னதாகவே வங்கிகளின் வசதிக்கேற்ப அதைத் திருப்பித் தர முடியாது. வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படியே முதிர்வு காலத்திற்கு முன் அதைத் திருப்பித்தர முடியும்.

குறித்தகால வைப்புத் தொகையை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே திருப்பித்தர முடியாது என வங்கிகள் மறுக்கலாமா?

தொகையின் அளவு எவ்வளவானாலும் பொதுவாக, வங்கிகள், தனிநபரகள், இந்து கூட்டுக் குடும்பம் (HUF) ஆகியோரின் குறித்தகால வைப்புத்தொகையை முதிர்வுநிலைக்கு முன்னர் திருப்பித்தருவதை மறுக்க இயலாது. ஆனால் பெரிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பெருந்தொகை வைப்புத்தொகையை முதிர்வு நாளுக்கு முன்னதாகவே திருப்பி தரமுடியாது என்று வங்கிகள் கூறலாம். வங்கிகள் முன்னதாகவே, அதாவது வைப்புக் கணக்கைத் தொடங்கும் போதே,முதிர்வுக்கு முன் அந்த வைப்புத்தொகையைத் திருப்பித் தர இயலாது என்று கூற வேண்டும்.

முதிர்வடைவதற்கு முன்னதாகவே   திரும்பப்பெறப்படும் வைப்புத்தொகைக்கு தண்டத்தொகை விதிக்கலாமா?

வைப்புத் தொகைகள் முதிர்வடைவதற்கு முன்னதாக திரும்பப் பெறப்படும்போது விதிக்கப்படும் தண்ட வட்டி வீதத்தை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

வங்கி விடுமுறை நாட்கள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில்,வைப்புத்தொகை முதிர்வடைந்தால், எவ்வாறு எப்போது வங்கிகள் வட்டி வழங்கவேண்டும்?

வைப்புத் தொகை முடியும் நாளுக்கும், வைப்புத் தொகைக்கான வட்டியை வழங்கும் நாளுக்கும் இடையே வங்கி விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள் குறுக்கிட்டால்ஒப்பந்தப்படியான வட்டி வீதத்தை, வங்கி அக்காலத்திற்கும் சேர்த்து வட்டி வழங்க வேண்டும்.

இறந்துபோன வங்கி ஊழியரது மைனர் குழந்தை அல்லது குழந்தைகள் பெயரில் உள்ள வைப்புத் தொகைக்கு வங்கி ஊழிர்களுக்குரிய சலுகையான கூடுதல் வட்டி வழங்கலாமா?

இல்லை. வங்கி ஊழியர், வங்கிப் பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி பெற அவர்கள் குழந்தைகள் எவருக்கும் (மைனர் குழந்தைகள் உட்பட) தகுதி இல்லை.

வயது வராத குழந்தைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தொகையை குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் சேர்த்து கூட்டு வைப்புத் தொகைக் கணக்கு தொடங்கினால் வங்கி ஊழியருக்கு வழங்கக்கூடிய கூடுதல் வட்டியை அக்கணக்கிற்கு வழங்கலாமா?

முடியாது. காரணம் அப்பணம் வயது வராத குழந்தைக்குச் சொந்தமானது. வங்கி ஊழியர் யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே கூடுதல் வட்டி வழங்க இயலாது.

வேறு வைப்புத் தொகைகளுக்கு வங்கி வேறுபட்ட வட்டி வீதம் வழங்கலாமா?

வங்கிகள் சிறப்பு வைப்புத்தொகைச் செயல் திட்டங்களில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வைப்புகளில்,வைப்புகளின் தொகை அளவு எதுவானாலும் வழக்கமாக வழங்கப்படும் வட்டியை விட கூடுதலான வட்டியை வழங்கலாம்.

வங்கிகள் அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்டங்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாமா?

அரசாங்கத்தின் துறைகள், அரசாங்கச் செயல் திட்ட நடவடிக்கைகள் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்க இயலாது. ஆனால் சில அரசாங்க நிறுவனங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். கீழ்க் கண்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்குவன.

 • வங்கிகளில் கடன் உதவி பெறும் முதன்மைக் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள்
 • கதர் மற்றும் கிராமத் தொழில் குழுமங்கள்
 • வேளாண் பொருட்கள் அங்காடிக் குழுக்கள்
 • 1860ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அதனையொத்த நடைமுறையில் இருக்கும் மாநில அல்லது யூனியன் பிரதேசச் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்
 • கம்பெனிகள், கம்பெனிகள் சட்டம், 1956இன் 25ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசிடமிருந்து அல்லது இந்தியக் கம்பெனிகள் சட்டம் 1913இல் காணப்படும் பிரிவுகளின் அடிப்படையில், உரிமங்கள் பெற்று ‘லிமிடெட்’/ தனியார் லிமிடெட் என்னும் சொற்களைக் கொண்டிராத எல்லாக் கம்பெனிகளும்
 • மேலே சொல்லப்பட்ட முதல் பிரிவில் அடங்காத 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் கீழ் வரி விலக்களிப்பட்ட எல்லா நிறுவனங்களும்
 • மத்திய மாநில அரசாங்கங்களில் பல்வேறு செயல் திட்டங்கள்/ செயல்முறைகள் ஆகியவற்றை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்டு நிதியோ, மானியமோ வழங்கப்பட்டு, சேமிப்புக் கணக்குத் தொடங்க மத்திய மாநில அரசாங்கங்களின் அனுமதி பெற்ற எல்லா மத்திய மாநிலத் துறைகள், அமைப்புகள் மற்றும் முகமைகள்.
 • ஊரகப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாடு (DWCRA)
 • உறுப்பினர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுய உதவிக் குழுக்கள் (SHGs)
 • உழவர்கள் கூட்டுக் குழுக்கள், விகாஸ் வாலன்டீர் வாஹினி (VVV)

இறந்துபோன முதலீட்டாளர் பெயரில் உள்ள வைப்பிற்கு எந்த வீதத்தில் வட்டி வழங்கப்படும்?

 • இறந்த ஒரு நபரின் பெயரில் அல்லது இருவர் பெயரில் அல்லது அதற்கு மேற்பட்ட பல பெயர்களில் வைப்புக் கணக்கு இருந்து அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், முதிர்வடைந்த வைப்புக்குரிய வட்டியை எவ்வகையில் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அந்தந்த வங்கிக்கு உண்டு. வங்கிகளின் மன்றக்குழு இது தொடர்பாக வெளிப்படையாக வகுத்துள்ள கொள்கையின் அடிப்படையில் வங்கிகள் முடிவெடுக்க வேண்டும்.
 • இறந்து போன தனிநபர் அல்லது தனிநபர் வணிக நிறுவனம் பெயரில் உள்ள நடப்புக்கணக்கிலுள்ள நிலுவைத் தொகைக்கு இருப்பிற்கு வட்டி வழங்கும் வீதம் கீழ் வருமாறு:

1983 மே முதல் தேதி, அல்லது வைப்பாளர் இறந்த தேதி, இதில் எது பிந்தியதோ அந்த நாளிலிருந்து உரியவருக்குப் பணம் பட்டுவாடா செய்யும் தேதிவரைக்கும் சேமிப்புக்கணக்குக்குரிய வட்டி வீத அடிப்படையில் வட்டி வழங்க வேண்டும். எனினும் NRE வைப்புத் தொகையைப் பொருத்தவரை கேட்புரிமை உள்ளவர்கள் உள்நாட்டவர்கள் எனில் முதிர்வடைந்த வைப்புத் தொகை உள்நாட்டு வைப்புத்தொகையாக கருதப்படும். அதன் அடிப்படையில் வட்டி வழங்கப்படும்.

காலம் கடந்த வைப்புத்தொகைகளைப் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் யாவை?

காலம் கடந்த வைப்புத்தொகைகளைப் புதுப்பித்தல் தொடர்பான முடிவுகள் யாவற்றையும், அந்தந்த வங்கிகளே அவர்களது மன்றக் குழுவால் ஒப்புதலளிக்கப்பட்ட வெளிப்படையான கொள்கை அடிப்படையில் வகுத்துக் கொள்ள வேண்டும். வைப்புக் கணக்குகளைத் தொடங்கு முன்னரே அது தொடர்பான நிபந்தனைகள் ஒப்பந்த விதிமுறைகள் வட்டிவீதம் புதுப்பித்தல் ஆகியன வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தன்விருப்புரிமைக்கு இடம் தராதவகையிலும் வேறுபாடுகாட்டாததாகவும் அது அமைய வேண்டும்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top