பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கி வைப்பு நிதி –ஆலோசனைகள்

வங்கி வைப்பு நிதி –ஆலோசனைகள் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

வங்கிகளிலான சேமிப்பு வைப்புநிதிகள் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப ரொக்கமாக மாற்றக்கூடிய வசதியைக் (liquidity) கொண்ட காரணத்தால் அனைவருக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கு வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாததாகி விட்டது.

நீங்கள் வங்கிகளில் உங்கள் சேமிப்பைத் தனிநபர் வைப்பு நிதியாக (Term Deposit) வைத்திருந்தாலோ அல்லது புதிதாக வைப்பு நிதி துவங்குவதாக இருந்தாலோ அறியவேண்டியவை என்ன?

வைப்பு நிதி வகைகள்

ஃபிக்சட் டெபாசிட்

குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதா மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, நீங்கள் கணக்கு துவங்கும் போது கேட்டுக் கொண்டதற்கு இணங்க) உங்கள் வைப்பு நிதிக்கான வட்டி உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  வைப்பு நிதியின் முதிர்வு காலத்தில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த அசல் தொகை மீண்டும் அப்படியே கிடைக்கும். இதனைப் பொதுவாக ஃபிக்சட் டெபாசிட் என்று கூறுவார்கள்.

குமுலேட்டிவ் டெபாசிட்

வட்டி கூட்டு வட்டியாகக் கணக்கிடப்பட்டு (வட்டிக்கு வட்டி) மொத்த வட்டியும் முதிர்வுத் தொகையில் சேர்த்துத் தரப்படும். பல வங்கிகளில் சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய டெபாசிட் திட்டங்களை ‘ரீஇன்வெஸ்ட்மெண்ட் டெபாசிட் அல்லது குமுலேட்டிவ் டெபாசிட்’ பிளான் என்று குறிப்பிடுவார்கள். வட்டிக்கு வட்டி கணக்கிடப் படுவதால் டெபாசிட்தாரர் இத்திட்டத்தில் பெறும் மொத்த வட்டித் தொகை, ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பெரும் வட்டியை விடச் சற்றே அதிகமாக இருக்கும்.

தன் தேவை அறிந்து மேலே குறிப்பிட்ட திட்டங்களில் ஒன்றை டெபாசிட்தாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஏனெனில் வட்டி இழப்பு இல்லாமல் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு முதிர்வு காலத்திற்கு முன்னர் மாற இயலாது.

கணக்கு யார் பெயரில் துவங்கலாம்?

 • டெபாசிட் கணக்கைத் தனிநபர் கணக்காகவோ, இருவர் பெயரிலோ, இருவருக்கு மேற்பட்டோர் பெயரிலோ துவங்கலாம்.
 • வாடிக்கையாளர் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் ஜாயின்ட் கணக்கு (இருவரோ அதற்கு அதிகமானவர்களோ வரவு செலவு செய்யும்) வசதியை அளிக்கின்றன.  இதன்படி எந்த ஒரு வங்கிக் கணக்கையும் (சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக் கணக்குகள்) ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்களில் துவங்கலாம்.  அது ஜாய்ன்ட் (Jointly or Survivor) கணக்கு, இருவரில் ஒருவர் (Either or Survivor) அல்லது எவரேனும் ஒருவர் (Anyone or Survivor) என்று நெறிப்படுத்தப் பட்டுள்ளது. ‘ஜாய்ன்ட் கணக்கு’ என்றால் குறிப்பிட்ட கணக்கிலிருந்து தொகையைத் திருப்பிப் பெறுவதற்கு இருவரும் சேர்ந்து கையெழுத்திட வேண்டும். ‘இருவரில் ஒருவர் கணக்கு’ என்றால் பணம் எடுப்பதற்கு இருவரில் ஒருவர் கையெழுத்திட்டாலே போதுமானது. ‘எவரேனும் ஒருவர் கணக்கு’ என்றால் கணக்குத் துவங்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டவர்களில் எந்த ஒருவரும் வரவு செலவு செய்வதற்கு அதிகாரம் பெற்றவராகிறார்.

வைப்பு நிதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்னர் டெபாசிட்தாரர் ஒருவர் காலமாகிவிட்டால் வாழ்பவருக்கு (Survivor) நிலுவையில் இருக்கும் தொகை வட்டியுடன் அளிக்கப்படும்.

(இவை தவிர அறக்கட்டளை, இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் பெயர்களிலும் வைப்புநிதி துவங்கலாம்).  மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களில் கால் முதல் அரை சதவிகிதம் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமாக மூத்த குடிமக்களுக்கு அளிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி, திட்டங்களுக்குத் திட்டம் மாறுபடலாம்..

ஆட்டோ ரின்யூவல்

பெரும்பாலான வங்கிகள் முதிர்வு தேதியன்று டெபாசிட் ரசீது குறிப்பிட்ட கிளையில் சமர்ப்பிக்கப்படாமலும், புதுப்பித்தல் தொடர்பான வேண்டுகோள் வாடிக்கையாளரிடமிருந்து வராமல் இருந்தாலும், டெபாசிட் ஏற்கனவே இருந்த காலத்திற்கு அப்போதைய வட்டி விகிதத்தில் மீண்டும் புதுப்பிக்கப்படும்.  புதிப்பிக்கப்பட்ட டெபாசிட்டின் விவரம் ஏந்திய மடல் (intimation letter) மட்டும் டெபாசிட்தாரரின் முகவரிக்கு அனுப்பப்படும்.

வாரிசு நியமனம்

வாரிசு நியமனம் என்பது முதிர்வு தேதிக்கு முன்னர் தான் காலமாகிவிட்டால் தன் பெயரில் இருக்கும் டெபாசிட் தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தரும் அதிகாரம்.  டெபாசிட் துவங்கும் போதே வாடிக்கையாளர்கள் வாரிசு நியமனம் செய்து விண்ணப்பத்தை வங்கிக்குச் சமர்ப்பித்தல் நலம். வாரிசு விண்ணப்பம் செய்வதற்கு வாரிசுதாரரின் கையெழுத்து தேவையில்லை. ஒரு வேளை நியமிக்கப்படும் வாரிசுதாரர் குழந்தையாக, மைனராக இருந்தால் அவரது காப்பாளர் (Guardian) பெயரும், விவரமும் தரப்பட வேண்டும். ஜாய்ண்ட் கணக்குகளுக்கும் வாரிசு நியமன வசதி உண்டு. டெபாசிட்தாரர் இறந்து விட்டால், வாரிசு நியமனம் செய்யப்பட்டவர் ஒரு விண்ணப்பமும் டெபாசிட்தாரரின் இறப்பு சான்றிதழும் கொடுத்து குறிப்பிட்ட வங்கியின் கிளையிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

டெபாசிட் ப்ரீகுளோஷர்

டெபாசிட்டை முதிர்வுதேதிக்கு முன்னரே முடித்துக்கொள்ள வங்கிகள் வழிவகை செய்துள்ளன. டெபாசிட் வங்கியில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு அந்தக் காலத்திற்கு உள்ளான வட்டி விகிதத்தில் இருந்து ஓரிரு சதவிகிதம் குறைவாக வட்டி கணக்கிடப்பட்டுத் (penalty) தொகை தரப்படும். 1.4.2013 முதல் பிரீ குளோஷருக்கான அபராத வட்டியை அந்தந்த வங்கிகளே முடிவு செய்துகொள்ள மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரம் அளித்துள்ளது. பல வங்கிகள் தற்போது அபராத வட்டியின்றி டெபாசிட்டுகளை முன்னரே முடித்துக்கொள்ள அனுமதி அளிக்கின்றன.  (ஒருவேளை உங்கள் டெபாசிட் தொகை ஒரு கோடிக்கு மேலாக இருந்ததென்றால்(!) டெபாசிட்டைப் பெருநிதியாகக் (Bulk Deposit) கணக்கிட்டு முன்னரே முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வங்கி மறுக்கலாம்.

டெபாசிட் கடன்

அனைத்து வங்கிகளும் வைப்புதாரர்களின் தேவை கருதி அவர்களது வைப்பு நிதியில் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. அதற்கான வட்டி விகிதம் டெபாசிட்டிற்கு அளிக்கப்படும் வட்டியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.  பங்குத் தொகை (Margin Money) 10 முதல் 25 சதவிகிதம் இருக்கலாம்.  அதாவது டெபாசிட் தொகை ஒரு லட்சம் என்றால் கடன் தொகை, வங்கியைப் பொறுத்து ரூ.75000 முதல் ரூ.90000 வரை கிடைக்கும்.  மார்ஜின் தொகை குறைந்தால் வட்டிவிகிதம் அதிகமாகும்.  மாதாமாதம் வட்டி பெறுகின்ற ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருந்து கடன் பெற்றால் கடன் பெற்ற பிறகு கொடுக்கப்பட வேண்டிய வட்டித்தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு வேளை டெபாசிட் முதிர்வு தேதிக்கு முன்னர் கடன் அடைக்கப்படா விட்டால் முதிர்வு தேதியன்று கடன் கணக்கில் நிலுவையில் உள்ள தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதி உள்ள தொகை டெபாசிட்தாரருக்கு வழங்கப்படும்.

டெபாசிட் வட்டிக்கான வரிபிடித்தம். (TDS – Tax Deducted at Source)

வைப்புநிதிக்கான வட்டி ரூ.1000 ற்கு மேல் கொடுக்கப்படும்போது, வங்கி வழங்கப்படும் வட்டித் தொகையில் 10.3% சதவிகிதம் (Educational Cess – கல்வித் தீர்வை உட்பட) பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு அனுப்பும். அதுவே வட்டித் தொகை ரூ.10 லட்சத்திற்க மேல் என்றால் சர்சார்ஜ் உட்பட 11.33% பிடித்தம் செய்து அனுப்பும். நீங்கள் வருமான வரி எல்லைக்குள் உட்பட்டவர் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பூஜ்யம் என்றாலோ அதற்கு உரிய படிவத்தை (15 G) வங்கியில் சமர்ப்பித்து வரிப்பிடித்தத்தைத் தவிர்க்கலாம்.  மூத்த குடிமக்கள் படிவ எண் 15H சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட படிவங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி வைப்பு நிதிகளுக்கான காப்புறுதி

நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளைவிட, வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகள் பொதுவாகப் பாதுகாப்பு உடையவை. மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்ஷூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரண்டி கார்ப்பரேஷன் (Deposit Insurance & Credit Guarantee Corporation) வங்கி டெபாசிட்டுகளுக்கு அதிக பட்சம் ரூ.ஒரு லட்சம் வரை காப்புறுதி வழங்கிகுறது.  இது ஒருவர் ஒரு வங்கியில் (அவ்வங்கியின் அனைத்துக் கிளைகளையும் சேர்த்து) மொத்த வைப்பு எவ்வளவு வைத்திருந்தாலும் கிடைக்கும் உச்சபட்ச அளவீடு.

சில ஆலோசனைகள்

 • டெபாசிட் தொகையைத் தேவைக்கு ஏற்பப் பிரித்துப் போடுங்கள்
 • ஓய்வு காலத்தில் டெபாசிட் தொகையை ஃபிக்சட் டெபாசிட்டாகப் போட்டு மாதா மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி பெறுதல் ஒரு வழி.  சிறிய தொகைகளாக டெபாசிட் செய்திருந்தால் ஒவ்வொரு டெபாசிட்டின் மாத, காலாண்டு வட்டியைச் சரியாகக் கணக்கிட்டு வங்கிக் கணக்கில் வரவாகியிருக்கிறதா என்று சோதிப்பது தொல்லையாக இருக்கலாம். அத்தகைய சூழலில் கூட்டு வட்டிக் கணக்கில் தனித்தனி டெபாசிட்டுகளைத் துவக்கித் தேவைகளுக்கு ஏற்ப ஓரிரு டெபாசிட்டை மட்டும் குறுகிய காலத்திற்குத் திட்டமிடுதல் நலம். குறிப்பிட்ட குறுகிய கால டெபாசிட்டின் முதிர்வுத் தொகை மாதாந்திர செலவுக்கு உபயோகப்படும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கான செலவுகளுக்கு ஏற்ப முதிர்வு தேதி அதனுடன் ஒத்து வரும்படி சில வைப்பு நிதிகளை முதலீடு செய்யலாம்.
 • முன்கூட்டியே திட்டமிட்ட செலவினங்களுக்கான டெபாசிட்டுகளைத் தவிர மற்றைய டெபாசிட்டுகளை வெவ்வேறு காலங்களுக்கு முதலீடு செய்யுங்கள். குறிப்பாக நீங்கள் வைப்புநிதிக்காகத் திட்டமிட்ட செலவினங்கள் தவிர்த்த தொகை ரூ.3 லட்சம் என்றால், ஒவ்வொரு லட்சமாக மூன்று டெபாசிட்டுகளையும் முறையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு என முதலீடு செய்யுங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு வட்டிவிகிதம் நிலைபெறுவதோடு, உங்கள் நிதியும் முடங்காது ரொக்கமாகப் பெறப்பட்டுக் கைகொடுக்கும்.
 • வைப்புநிதிக் கணக்கை உங்கள் மனைவி, கணவன் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரை இணைத்து ஜாய்ன்ட் கணக்காகத் துவங்குங்கள்.
 • வாரிசு நியமனம் அவசியம். டெபாசிட்தாரர்கள் வாரிசு நியமனம் செய்து அதற்கான வங்கி தரும் ஒப்புதலை டெபாசிட் ரசீதுடன் வைத்திருத்தல் நல்லது.
 • வைப்புநிதி ரசீதின் நகல் (xerox copy) ஒன்றை உடன் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரிஜினல் ரசீதை வைப்புநிதியைப் புதுப்பிப்பதற்குக் கொடுக்கும் பொழுதும், குறிப்பிட்ட டெபாசிட்டிற்கான தொகை எங்கிருந்து தொடர்ந்து வருகிறது என்பதை அறியவும் நகல் தேவையிருக்கலாம்.
 • வைப்பு நிதியின் முதிர்வு தேதியை உங்கள் அலைபேசியிலோ அல்லது தனியாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள். முதிர்வு தேதியன்று வங்கியைத் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
 • வங்கிகள் வழங்கும் இணைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  பணப்பரிமாற்றம் தேவையில்லை என்றால் விவரங்கள் அறிவதற்கான வசதியை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கேள்வி பதில்

1. வங்கிகள் வட்டியில்லா வைப்புத் தொகைகளை ஏற்கலாமா?

நடப்புக் கணக்கு தவிர, வேறு வட்டியில்லா வைப்புத்தொகைகளை ஏற்க இயலாது.

2. வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கு மூன்று மாதமத்திற்கு ஒருமுறை வட்டி வழங்கலாமா?

வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு மூன்று மாத அடிப்படையிலோ அல்லது நீண்டகால அடிப்படையிலோ வட்டி வழங்கலாம்.

3. வங்கிகள் குறித்தகால வைப்புத் தொகைகளுக்கு மாதாமாதம் வட்டி வழங்கலாமா?

காலாண்டிற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிலும் வட்டி வழங்கப்படலாம். ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்குவதானால், காலாண்டு வட்டியில் தள்ளுபடி செய்து வழங்கலாம்.

4. வங்கிகள் குறித்தகால வைப்புமுறையில் ஒட்டு மொத்தம் ரூ 15 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகைக்கு வேறுபட்ட வீதத்தில் வட்டி வழங்கலாமா?

ஓரு வைப்புத்தொகைக் கணக்கில் ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருந்தால் வேறுபட்ட விகிதத்தில் வட்டி வழங்கலாம். பல வைப்புத்தொகை கணக்குகளின் ஒட்டு மொத்தம் ரூ.15 லட்சமும் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால் அவ்வாறு வழங்க இயலாது.

5. வைப்புநிதி திரட்டுவதற்கு வங்கிகள் தரகு தரலாமா?

வங்கிகள் தனி நபர்களையோ, கம்பெனிகளையோ அல்லது சங்கங்களையோ, வைப்புநிதி திரட்டுவதற்கோ அல்லது வைப்புநிதி சார்ந்த திட்டங்கள் விற்பனை செய்வதற்கோ நியமிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சம்பளம், சன்மானம், தரகு என்று வழங்குவதும் தடை செய்யப்பட்ட செயல்கள் ஆகும். ஆனால் சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு-வீடாகச் சென்று வைப்புநிதி திரட்ட நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டும் தரகு தரலாம்.

ஆதாரம் : லஷ்மி விலாஸ் வங்கி

3.0
சிவக்குமார் Oct 31, 2019 08:37 PM

இரட்டிப்பு சேமிப்புக்கு எத்தனை ஆண்டுகள் தேவை? அல்லது ஒரு வருடம் சேமிப்பு திட்டத்தில் இரட்டிப்பு சேமிப்பு எத்தணை வருடம் ஆகும்?

சரவணன் Aug 30, 2019 03:07 PM

வங்கி வட்டி கணக்கிடும் முறை மற்றும் தற்போதைய வட்டி எவ்வளவு, எப்படி கணக்கிடப் படுக்கிறது.

praveen Jul 11, 2019 04:07 PM

டெபாசிட்தாரர் மற்றும் டெபாசிட் வாரிசு காலமாகிவிட்டால். டெபாசிட் தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும்

Kumaresan May 03, 2017 04:00 PM

புதிய நிறுவன வங்கி கணக்கு தொடங்குவது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top