பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வங்கிகளின் இணைய சேவைகள்

வங்கிகளின் இணைய சேவைகள் பற்றிய குறிப்புகள்

இணையம் வழி சேவைகள்

வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணையதளச் சேவைகளை அளிக்கின்றன.

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

 • வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.
 • தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.
 • தனது கணக்கிலிருந்து அதே வங்கியில்தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான பணப் பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின் வணிகம், தொலைபேசி, மின் கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது. வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்கவேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச்சேவைகளும் 24மணி நேரமும் கிடைக்கும்.
 • (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).
 • ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்.
 • முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும். விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப் பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும்  உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.
 • பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.

பாதுகாப்பு அடுக்குகள்

 • இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச்சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். பரிமாற்றத்தின்போது பெரும்பாலான வங்கிகள் ஒரு முறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலை பேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒரு வகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.
 • இணையதளம் மூலமாகக் கோடிக் கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.

கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்

 • வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும். (Ex.: LTvn#45a) அவ்வப் பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.
 • குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணைய தளங்கள் வழியோ முயல வேண்டாம்
 • வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணையதள முகவரி “https://” என்று துவங்க வேண்டும் (“http://” என்று அல்ல), முன் குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள ‘s’ இணைய தளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.
 • எந்த வங்கியும் இணையதளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.
 • இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க்மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப்படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது

கேள்வி பதில்

1. வங்கிகள் விதிக்கக்கூடிய சேவைக் கட்டணத்தின்மீது உச்சவரம்பு ஏதுமுண்டா?

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கிகள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான சேவைக் கட்டணத்தை அறிவுறுத்தும் நடைமுறைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். செப்டம்பர் 1999 முதல், வங்கிகள், தங்கள் இயக்குநர்கள் மன்றக்குழு ஒப்புதலோடு, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உரிமை வழங்கியுள்ளது.

2. எவ்வகையான பில்களுக்கு வங்கிகள் தள்ளுபடி செய்யக்கூடாது?

மின் விசைக்கட்டணங்கள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், தவணை முறைக் கொள்முதல், குத்தகை வாடகைத் தவணைகள், பத்திரங்கள் விற்பனை, இதுபோன்ற இன்னபிற நிதிசார் கடனுதவிகள் ஆகியவற்றின் பில்களுக்கு தள்ளுபடி செய்யக்கூடாது.

ஆதாரம் : லஷ்மி விலாஸ் வங்கி

3.06060606061
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top