অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வங்கியியல் - வங்கியியலின் வரலாறு

வங்கியியல் - வங்கியியலின் வரலாறு

அறிமுகம்

பொதுவாக 'வங்கி' என்பது வணிக வங்கிகளையே குறிக்கும். 'வங்கி' என்ற சொல் ஜெர்மானிய மொழியான 'பாங்க்' (Bank) லிருந்து உருவாகியது. 'வங்கி' என்பதற்கு கூட்டுப் பங்கு நிதி (Joint Stock Fund) அல்லது குவியல் (Heap) எனப்படும். பிரெஞ்சு மொழிச் சொல்லான “பாங்கே' (Bangue) மற்றும் இத்தாலிய மொழிச் சொல்லான “பாங்கா' (Banco) ஆகியவற்றிலிருந்து தோன்றியிருக்கலாம். இத்தாலிய மொழியில் 'பாங்கா' எனப்படுவது இருக்கையைக் குறிக்கும். அதிலிருந்து பணம் மாற்றுபவர் அல்லது இடைத்தரகர்கள் பணத்தின் ஒருவகையை மற்றொரு வகையாக மாற்றித் தருவதன் மூலம் வங்கி வாணிபம் செய்தனர். இவ்வாறு, பழங்கால வங்கியியல் முறை பணமாற்று வாணிபத்துடன் தொடர்பு கொண்டிருந்தது.

1157ல், முதல் பொது வங்கி நிறுவனமான 'வெனிஸ் வங்கி’ தோற்றுவிக்கப்பட்டது. ‘பார்சிலோனா வங்கி' மற்றும் ஜெனோவா வங்கி முறையே 1401 மற்றும் 1407ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. இவையே நவீன வணிக வங்கிகளின் முன்னோடியாகும். 1609ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாம் வங்கி மற்றும் 1690ல் மாம்பர்க் (Mamburg Bank) வங்கிகளுக்குப் பின்னர் பரிவர்தனை வங்கி முறை வளர்ச்சியுற்றது.

இங்கிலாந்து நாட்டின் நவீன வங்கிமுறையை தோற்றுவித்ததன் பெருமை இத்தாலியைச் சேர்ந்த இலம்பார்டி யூதர்களையே சாரும். இவர்கள் இத்தாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். இலம்பார்டி யூதர்கள் இங்கிலாந்தில் பணத்தை வட்டிக்குக் கொடுக்கும் வாணிபம் நடத்தினர். 1694ஆம் ஆண்டு 'இங்கிலாந்து வங்கி தொடங்கப்பெற்றது. 1833ல் கூட்டுப் பங்கு வணிக வங்கிமுறை (Joint Stock Commercial Banking) தொடங்கப் பெற்றது. நவீன வங்கிமுறை 19-ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியுற்றது எனலாம். இந்தியாவில் வங்காளத்தில் 1806ஆம் ஆண்டு வங்காள வங்கி' முதன்முதல் தோற்றுவிக்கப்பட்டது.

வங்கிமுறை வளர்ச்சி

தொழிற்புரட்சிக்கு முன்னர் வியாபார அளவு மிக மிகச் சிறியதாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வியாபார அலகின் அளவு அதிகரித்தது. எனவே, கூட்டு வாணிப முறைகளான அமைப்பு வியாபார அமைப்புகள் நிறுவப் பெற்றன. இத்தகைய வாணிபமுறை முதலீடு செய்பவர்களை விரிவடையச் செய்தன. எனவே குறைவான முதலீடுகள் உள்ளவர்கள்கூட பெரிய தொழில் நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆனார்கள். எனினும், ஒரு சிலர், இடர்ப்பாடுகளை ஏற்று இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை விரும்பவில்லை. எனவே, மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் 'நிதியைத் திரட்டுவதற்காக ஒரு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டிற்காக முதலீட்டினை திரட்டும் ஒரு நிறுவனமே ‘வங்கி' எனப்பட்டது. எனவே, “வங்கி' என்பது பணம் மிகையாகக் கொண்டிருப்பவர்களையும் பணம் தேவைப்படுபவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனமாகும். இதனுடன்கூட வங்கி தம்மிடமிருந்து பணம் கடனாகப் பெறுபவர்கள் தவனைத்தவறி (default) செலுத்துதலினால் ஏற்படும் இடர்ப்பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறது.

வங்கிகளின் பழங்கால நிலைகள் மூன்று வகையான நிறுவனங்களை உள்ளடக்கியது

 1. 'வணிகர் வங்கி' (Merchant Banker) : வணிகர் என்பவர் அடிப்படையில் ஒரு வியாபாரி ஆவார். நுகர்வோரின் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனை தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார்.
 2. பணத்தை வட்டிக்குக் கொடுப்பவர் (The Money Lender) : இவர் தன்னிடம் உள் அதிகப்படியான பணத்தை தேவைப்படுபவர்களுக்கு கடனாகக் கொடுத்து அதற்குண்டான வட்டியையும் பெற்றுக்கொள்வார்.
 3. பொற்கொல்லர் (Goldsmith) என்பவர் வாடிக்கையாளர்களின், மதிப்புமிக்க பொருள்களான தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றை தனது சொந்தப் பாதுகாப்பில் வைத்துக்கொள்வார். வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும்போது அதனைத் திருப்பிக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெற்றுக் கொள்வர்.

தற்கால வங்கிகள் மேற்காணும் மூன்று வகை அம்சங்களையும் பெற்று விளங்குகிறது. சமுதாயத்தின் முன்னேற்றம், பொருளியல் சிந்தனைகள், தனித்தன்மை விரிவாக்கப்பட்ட சந்தையின் விளைவாக தொழிற்புரட்சி ஏற்பட்டு அதன் காரணமாக, தற்கால வணிக வங்கிகள் வளர்ச்சியுற்றன. வங்கிகளின் பணியானது சேமிப்பு மற்றும் கழிவுகளை (Discounts) மட்டுமே செய்யும் நிறுவனமாக இல்லாமல் நாட்டின் நிதியையும், அறக்கட்டளை மற்றும் பொருமக்களின் உபரி இருப்புக்களை பாதுகாக்கும் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது. தற்கால வணிக வங்கிகள் தொழில் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன.

வங்கியியலின் இலக்கணம் (Definition of Banking)

வங்கிகளின் பல்வேறு நடவடிக்கைகளை பொருளியல் வல்லுநர்கள் “வங்கி' அல்லது 'வங்கியியலை பின்வருமாறு வரையறை செய்துள்ளனர். "வங்கி என்பது சாதாரண வணிக நிலையில் காசோலைகளை (Cheques) வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று அதனை ஏற்றுக்கொண்டு பணத்தை அவரவரது நடப்புக் கணக்கில் (Current Accounts) கணக்கு வைப்பதாகும்” என டாக்டர் எஸ். ஹெர்பர் மற்றும் எல் ஹார்ட் வங்கியின் இலக்கணத்தை கூறுகின்றனர்.

சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகாராதியின் (Dictionary) கூற்றுப்படி, வங்கி என்பது “பணத்தை தன்னகத்தே வைத்துக் கொள்வதற்கும், கடன் கொடுப்பதற்கும் மற்றும் பரிவர்தனை போன்றவற்றை செய்யும் நிறுவனமாகும்”. பொருளியலாளர் கிரெளத்தர் கூற்றுப்படி “வங்கியாளர்களின் பணியாவது பரிவர்த்தனை மூலம் பணத்தைப் பெற்றும் அதனைக் கடனாகவும் கொடுப்பதாகும்”. பேராசிரியர் கெண்ட் (Kent) வங்கியின் பணியினை இவ்வாறு குறிப்பிடுகிறார். பொது மக்களிடம் உள்ள பணத்தை சேகரித்து (accumulation through deposit) அப்பணத்தை தேவைப்படுபவர்களுக்கு முன்பணமாக (Advance) கொடுப்பதை தனது முக்கியப் பணியாக கொண்டிருக்கும் ஒரு நிறுவனமே வங்கியாகும். மேற்கண்ட வரைவிலக்கணங்களின்படி வங்கி என்பது "பொது மக்களிடமிருந்து வைப்பு நிதியைப் (Deposits) பெற்று அதனைக் கடனாகவும் முன்பணமாகவும் மக்களுக்கே வழங்குவதாகும்”.

பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வங்கிகள் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. அவை புழக்கத்திலுள்ள பணத்தின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. மேலும் வங்கிகள் எந்தவொரு நாட்டிலும் உற்பத்தியின் இயல்பைத் தூண்ட வல்லன. பொருளாதாரத்தில் வங்கிகளின் முக்கியத்துவத்தை அறிய வங்கிகளின் பொதுவான மற்றும் முக்கியப் பணிகளை பரிசீலனை செய்ய வேண்டும்.

மூலதன ஆக்கத்திலுள்ள பற்றாக்குறையைப் போக்குதல்

எந்த ஒரு பொருளாதாரத்திலும் மூலதன ஆக்கம் இல்லையெனில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. சமுதாயம் குறைவாக சேமிப்பதால் மூலதன ஆக்கத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. வளரும் நாடுகளில் மூலதனப் பற்றாக்குறை இருப்பதால் ஒரு பணியாளுக்கான மூலதன சாதனம் குறைவாகவும், அறிவுத்திறன் பயிற்சியில் அறிவியல் முன்னேற்றம் போன்றவற்றில் குறைவும் ஏற்படுகிறது. இந்நிலையில் வங்கிகள் மிகவும் பயனுள்ள வகையில் பணியாற்றுகின்றன. இப்பற்றாக்குறையைப் போக்க வங்கிகள் சேமிப்பையும் முதலீட்டையும் தூண்டுகின்றன. சிறந்த வங்கிமுறை சமுதாயத்தில் சிறு சேமிப்பைத் திரட்டி, உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றை முதலீடாகத் தருகின்றது. வங்கியின் முக்கியச் செயல்பாடுகள்

அ. வங்கிகள் கவர்ச்சிகரமான' வட்டியளித்து அதிக வைப்பு நிதியைத் திரட்டுவதோடு, இதன் மூலம் பெற்ற சேமிப்பை செயல் முதலீடு (active capital) ஆக மாற்றுகின்றன.இல்லையெனில், இத்தொகை பயன்படாமல் இருந்திருக்கும்.

ஆ. வங்கிகள் இச்சேமிப்புகளை உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனாக வழங்கி, நாட்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. இ. வங்கிகள் சமுதாயத்தின் நிதிவளங்களை உத்தம அளவில் பயன்படுத்த உதவி புரிகின்றன.

நிதி அளிப்பதற்கும் கடன் கொடுப்பதற்கும் வழிவகை செய்கிறது (Provision of finance & Credit)

தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு வங்கிகள் நிதி அளிப்பதற்கும், கடன் கொடுப்பதற்கும் மிக முக்கிய ஆதாரமாகச் செயல்படுகிறது. வாணிகம் மற்றும் வர்த்தகத்திற்கு வங்கிகள் உராய்வு எண்ணெய் (lubricant) போல் செயல்படுகிறது. எனவே வங்கிகள் வர்த்தகச் செயல்பாடுகளின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது எனலாம். எனவே வங்கிகளின் வலிமையான செயல்பாடுகளினால் வாணிபமும் வர்த்தகமும் செழிக்கும்.

அயல்நாட்டு வாணிகத்தையும் வங்கிகள் மேற்கொண்டுள்ளன. அயல்நாட்டுப் பரிவர்த்தனை தொழில்களை மிகப்பெரிய வங்கிகள் மேற்கொண்டுள்ளன. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் இடையே தகுந்த ஏற்பாடு செய்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இதர சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கடனுதவி அளித்து (எதிர்கால செலுத்துகை மூலம்) உதவி செய்கிறது.

அங்காடி அளவின் விரிவாக்கம் (Extension of the size of market)

வேறுவழியிலும் வணிக வங்கிகள் தொழில் மற்றும் வாணிகத்திற்கு உதவிபுரிகின்றன. வங்கிகளின் சிறந்த நடவடிக்கைகளால் தொழில் மற்றும் வணிகம் விரிவடைகிறது. வாங்குவோருக்கும் மற்றும் விற்போருக்கும் இடையே இடைத்தரகராக வணிக வங்கிகள் செயல்படுகின்றன.

வங்கிகளின் உத்தரவாதத்தின் பேரில் (Bank Guarantee) பண்டங்கள், வழங்கப்படுகின்றன; தொழில்கள் மற்றும் வாணிகம் விரிவடைவது மட்டுமல்லாமல், அதன் பொருளுக்குத் தேவையான உள்நாட்டுச் சந்தைக்கும் வழிவகுக்கிறது. இதற்காக வங்கிகள் இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறது. வங்கிகள் இடர்பாடுகளை தன்னிச்சையாக விடுவிக்கும் போது, தொழிற்துறையானது பேரளவுச் சந்தையை எதிர்நோக்கி செயல்படலாம்.

ஒரு வட்டாரத்தின் சமநிலை வளர்ச்சிக்கு இயந்திரமாக (Engine) வங்கிகள் செயல்படுகின்றன. ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வணிக வங்கிகள் உதவி செய்கிறது. வங்கிகள் இலாபநோக்கிலேயே செயல்படுகின்றன.வங்கிகள் தங்கள் நிதியை உற்பத்திக்காக அதிக அளவு கடன் வழங்கும்போது இலாபம் அதிக அளவு இருக்கும். வங்கிகள் பல்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து கிளைகளை அமைத்தல் சாத்தியமாகிறது.

வளர்ச்சி வாய்ப்பு அதிகமுள்ள பகுதி, வணிக வங்கிகளின் நிதியை அதிக அளவில் ஈர்க்கிறது. ஆனால், சமீப ஆண்டுகளில், கிளை வங்கிகளின் வட்டார வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு (Infrastructure) மேம்பாட்டிற்கு வங்கிகள் உதவி புரிகின்றன. எனவே ஒரு வட்டாரத்தின் சமநிலை வளர்ச்சிக்கு உற்பத்தி இயந்திரமாக வங்கிகள் செயல்படுகின்றன.

வேளாண்மை மற்றும் இதரச் செயல்பாடுகளுக்கு நிதி உதவி செய்தல்

 • வணிக வங்கிகள் உழவர்களுக்கு கடனுதவி செய்வதன் மூலம் வேளாண் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. விளைநில மேம்பாட்டிற்காகவும், நீர்ப்பாசனத்திற்காகவும், வேளாண்மையை நவீனப்படுத்துவதற்காகவும், இயந்திரமயமாக்குவதற்காகவும், தங்களின் உற்பத்தியை உருவாக்குவதற்கும் உழவர்களுக்கு கடன் வசதி தேவைப்படுகிறது.
 • வணிக வங்கிகள் தங்களின் நிதி உதவியை கால்நடை பராமரிப்பு, பால்வளம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தோட்டக்கலை போன்ற துறைகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளன.
 • மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகிறது நுகர்வு முறையைப் பொருத்தே மக்களின் வாழ்க்கைத்தரம் அளவிடப்படுகிறது. நுகர்வோர் அழியாப் பண்டங்கள், அசையாச் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வங்கிகள் கடனுதவி செய்து, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவுகின்றன.
 • மனித முதலீட்டு ஆக்கத்தைத் தூண்டியும், பணக்கொள்கை அமைப்பை ஏதுவாக்கியும், தொழில்முனைவோரை ஊக்குவித்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிக வங்கிகள் பெரும் பணியாற்றுகிறது.

வணிக வங்கிகள்

 • இலாபத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனமே வணிக வங்கியாகும்.
 • வணிக வங்கிகளின் தொன்மைப் பணிகளாவது, பொதுமக்களின் வைப்பு நிதிகளை ஏற்றுக் கொள்வது, பல்வேறு துறைகளுக்கு கடனுதவி அளிப்பது ஆகியவை ஆகும். எனினும், நவீன வங்கிகளின் எழுச்சியாலும், வங்கியியல் முறை வளர்ந்து வருவது பொருளாதார வளர்ச்சியில் ஒரு இணைச் செயல்பாடகவும் உள்ளதாலும் வணிக வங்கிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் ஏற்பட்டது. வணிக வங்கிகள் நுகர்வோருக்கு இவ்வாறு பலவகை வங்கிப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. வணிக வங்கிகளின் அடிப்படை இயல்புகள் மாறாமலேயே இருந்தது.
 • முற்காலத்தில் வணிக வங்கிகள் கூட்டு நிறுவனங்களாகவே (Joint Stock Companies) இலாப நோக்குடனேயே செயல்பட்டன. அவை குறுகியகால மற்றும் நடுத்தரகால கடன்களையும், வணிகர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் கடனுதவி செய்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தது. நவீன காலத்தில் வங்கிகள் நீண்டகால கடன்களை வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் வழங்குகிறது.

வணிக வங்கிகளின் பணிகள்

வணிக வங்கிகளின் பல்வேறு பணிகள் : வைப்பு நிதியை ஏற்றுக்கொள்ளுதல் (அல்லது) ஈர்த்தல் மக்களின் சேமிப்பைத் திரட்டி வைப்பு நிதியை உருவாக்குகிறது. இந்த வைப்புநிதி மூவகைப்படும்.

அ) சேமிப்பு வைப்பு நிதி : இது மக்களுக்கு சாதாரணப் பணத்திற்கான பாதுகாப்புப் பெட்டகம் ஆகும். இவை சேமிப்புக் கணக்கில் வைக்கப்படுகிறது. வைப்புத் தொகைக்கு பெயரளவுக்கு வட்டி அளிக்கப்படுகிறது. மேலும் பணம் தேவைப்படும்போது வைப்புதாரருக்கு பணம் வழங்கப்படுகிறது. வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு பணம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பணம் திரும்பப் பெறலாம் (withdrawal) என உள்ளது.காசோலைவசதிகளும் வைப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆ) தேவை வைப்பு : இது நடப்புக் கணக்கில் வைக்கப்படுகிறது. தேவைப்படும்போது வைப்புதாரர் பணத்தைப் பெறலாம். ஆனால் கணக்கு வைத்திருப்பவர் எவ்வளவு தொகை மற்றும் எத்தனை முறை வங்கியிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார் என்பதையும், பணம் பெறும் எண்ணிக்கையும் (Number of withdrawals) குறிப்பிடவேண்டும். இவ்வகைக் கணக்கு மீது வங்கிகள் வட்டி ஏதும் அளிக்காது. மாறாக, இவ்வகை கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு சேவைக் கட்டணம் விதிக்கிறது.

இ) நிரந்தர வைப்பு : இதனைக் கால வைப்பு என்றும் அழைக்கலாம். ஒப்பந்த காலத்திற்கு முன் வைப்பு நிதியைப் பெற இயலாது. இத்தகைய வைப்பு தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

கடன் வழங்குதல்

வங்கிகள் கடன் மற்றும் முன்பணம் வழங்குவதற்கு பல வழிமுறைகளைக் கையாளுகிறது. இச்செயல்பாடுகள் பலவகையாகும்.

அ) ரொக்கக் கடன்

தனி நபருக்கோ , நிறுவனங்களுக்கோ பிணையப்பத்திரங்களைப் பெற்று (collateral security) வங்கிகள் கடன் கொடுத்துதவுகிறது. கடன் வாங்குபவரின் கணக்கில் கடன் தொகை செலுத்தப்படுவதால் கடன் வாங்குபவர் தனக்குத் தேவைப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் தொகையின் உச்ச அளவு கடன் வாங்குபவரின் செலுத்து நிலையைப் பொருத்து வங்கி தீர்மானிக்கிறது. கடன் வாங்குவோர் தனது கடனை அதன் அளவுக்குள்ளோ அல்லது அதற்குள்ளடங்கியோ பெற்றுக்கொள்ளலாம். கடன் பெறுபவர் பெற்ற கடனுக்கு மட்டுமே வட்டியளித்தல் போதுமானது.

ஆ) மிகைப்பற்று வசதி (Overdraft)

நம்பிக்கைக்கும், மரியாதைக்குரிய வாடிக்கையாளர் இச்சலுகையைப் பெறுகின்றனர். வாடிக்கையாளர் தமது வங்கிக் கணக்கில் பணம் இல்லையென்றாலும் தனது தேவைக்கு ஏற்ப காசோலையை வழங்கி மிகைப்பற்றாக பணத்தைப் பெறலாம்.

இ) மாற்றுச் சீட்டுக்களை கழிவு செய்தல்

சாதாரண மூன்று மாதங்களுக்கு, வணிகப் பத்திரங்களையோ, உறுதிப் பத்திரத்தையோ (Promisory Notes) மற்றும் மாற்றுச் சீட்டுகளை மறுகழிவு செய்தோ இச்செயல்பாடு வணிக வங்கிகளால் மேற்கொள்ளப்படுகிறது. உண்டியல்களின் முகமதிப்பிற்கேற்ப வட்டி மற்றும் சேகரிப்புக் கட்டணத்தை (collection charges) விதித்தது போக மீதம் உள்ள தொகையை வாடிக்கையாளரிடமே அளித்து விடுகிறது. மாற்றுச்சீட்டு உண்டியல் முதிர்வுறும்போது வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறப்படுகிறது.

கடன் உருவாக்கம் (Creation of credit)

வங்கியாளரால் வழங்கப்படும் கடன் ஒரு வைப்புத்தொகையை உருவாக்குகிறது. ஏனெனில் வங்கி கடனை வழங்கும்போது வாடிக்கையாளர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கப் பெறுகிறது; கடன் தொகை அவர் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடன் வாங்கியவர் தனது தேவைக்கேற்ப அதனை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வகை வைப்புத்தொகை பணஇருப்பை அதிகரித்து அதன்மூலம் பண சுழற்சியானது புதிய பணப்புழக்கத்தை ஏற்படுத்தும்.

இதரப் பணிகள்

வணிக வங்கிகள் ஆற்றும் இதர முக்கியப் பணிகளைப் பார்ப்போம்.

அ) நிதியை மாற்றுதல்

நவீன காலத்தில் வர்த்தகம் மற்றும் வாணிபத்தால் நிதியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது கடினமாகிறது. வங்கிகள் காசோலை (Cheque), வரைவோலை (Draft), வங்கி ஆணை (Pay Order), பயணியர் காசோலை (Travellers Cheque) போன்ற சாதனங்களால் இவ்விடர்ப்பாட்டை போக்குகிறது. இதனை சரிசெய்தல் (clearing) என்கிறோம். இப்பணி வங்கிகளினால் செம்மையாக நிறைவேற்றப்படுகிறது.

ஆ) முகமைப் பணிகள்

தனது வாடிக்கையாளருக்கு நிதி முகர்வர்களாக வணிக வங்கிகள் செயல்படுகின்றன. ஆயுள் காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம், பங்குத்தொகை மூலதனத்தேவை போன்ற அனைத்துத் தேவைகளையும் வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக செய்து தருகிறது. இதுபோல், அவை தங்கம், வெள்ளி மற்றும் பாதுகாப்புப் பத்திரம் (Securities) போன்றவற்றை வாங்கவும், விற்கவும் செய்கின்றன.

இ) பொது பயன்பாட்டுச் சேவைகள்

1) பொது பயன்பாட்டுச் சேவைகளான, வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருள்களை பாதுகாப்புப் பெட்டக வசதி ஏற்படுத்தித் தருகிறது.

 1. கடன் கடிதம் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.
 2. பொது நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் (Corporations) பங்குகளை
 3. வாங்கி காப்பீட்டு செய்து நற்பணியாற்றுகிறது.
 4. வர்த்தகம், வணிகம் தொழில் சார்ந்த தகவல் மற்றும் புள்ளியியல் ஆதாரங்களைத் தொகுத்தளிக்கிறது.

இவ்வாறு வணிக வங்கிகள் சமுதாயத்திற்கு பல மதிப்புமிக்க சேவைகளைப் புரிகின்றன. வளர்ந்த வங்கியியல் முறை தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். சிறந்த பொருளாதார சமுதாயத்தை உருவாக்க வங்கிகள் உயிரோட்டமாக உள்ளன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வணிக வங்கிகளை “வளர்ச்சி வங்கியியல்” என்றும் அழைக்கலாம். இவ்வங்கிகள் தங்களின் நிதி ஆதாரம் மூலம் முன்னுரிமைத் துறைக்கும், வலிமை குன்றிய துறைகளுக்கும் மற்றும் வேலை வாய்ப்புச் சார்ந்த திட்டங்களுக்கும் முதலீடு செய்து நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கேற்கிறது.

மைய வங்கி (Central Bank)

நாட்டில் ஒரு தலைமை நிறுவனம் (Apex Institution) இருந்தால் மட்டுமே அது அந்நாட்டின் வங்கியமைப்பு முறையையும் அதன் செயல்பாடுகளையும் முறையாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வழி நடத்திச் செல்லமுடியும். அவ்வாறான ஒரு தலைமை நிறுவனமே ‘மைய வங்கி' எனப்படுகிறது. நாட்டின் மைய வங்கியானது 'தன்னாட்சி நிறுவனமாகும்'. மைய வங்கி வணிக வங்கிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படவும், மேற்பார்வை செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. மைய வங்கி அந்நாட்டின் பணம் மற்றும் வங்கியியல் முறையை கட்டுப் படுத்துகிறது. முதல் உலகப் போருக்குப்பின் 1929 ஆம் ஆண்டு புருசெல்சில் நடைபெற்ற மாநாட்டில் சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் (International Monetary Conference) ஒவ்வொரு நாட்டிலும் ‘மைய வங்கி' அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நமது நாட்டின் மைய வங்கியான 'இந்திய ரிசர்வ் வங்கி' 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் மைய வங்கியான 'இங்கிலாந்து வங்கி' (Bank of England) 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மைய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளை 'இங்கிலாந்து வங்கி' விளக்குவதால் இது ‘வங்கிகளின் வங்கி' (Mother of Central Banks) என்றழைக்கப்படுகிறது. பிரான்சு நாட்டின் மைய வங்கி பாங்க் ஆப் பிரான்சு' கி.பி. 1800 ல் நிறுவப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் தனது மைய வங்கியான “கூட்டு ரிசர்வ் முறை” (Federal Reserve System) 1914 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மைய வங்கியின் இலக்கணம்

மைய வங்கியை அதன் பணிகளைப் பொறுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளியலாளர்கள் அளித்துள்ள இலக்கணங்களுள் ஒரு சில பின்வருமாறு.

பொருளியல் வல்லுனர் ஸ்மித் கூற்றுப்படி "மைய வங்கியானது ஒரு தனித்த வங்கியின் வங்கியியல் முறையைக் குறிக்கிறது. இதுதான் பணத்தை வெளியிடுதலில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதாகவோ (Monopoly) மிஞ்சிய ஏகபோக தனிஉரிமை பெற்றதாகவோ (Residual Monopoly) உள்ள து” ஆகும்.

H.A. ஷா “மைய வங்கி நாட்டின் கடனைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும்” என இலக்கணம் வகுத்துள்ளார். பொருளியலாளர் ஹாட்ரே “மைய வங்கி என்பது கடன் வழங்கும் கடைசி புகலிடம்” என்கிறார். பி.ஏ. சாமுவேல்சன் “மைய வங்கியானது வங்கிகளின் வங்கி ஆகும். மேலும் நாட்டின் பண அளிப்பினைக் கட்டுப்படுத்துவதும் (High-Powered Money) மீப்பெரு மதிப்புப் பணத்தைக் கொண்ட அமைப்பு” என்று இலக்கணம் வகுத்துள்ளார்.

மைய வங்கிக்கும் வணிக வங்கிகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

கீழ்க்காணும் வகைளில் மைய வங்கி வணிக வங்கிகளிலிருந்து வேறுபடுகிறது.

 1. நாட்டின் பணம் மற்றும் வங்கியியல் முறைக்கு ‘மைய வங்கி’ தலைமை வங்கியாகும். வணிக வங்கியானது வங்கியமைப்பு முறை சட்டரீதியான ஒரு அலகு மட்டுமன்றி மைய வங்கிக்கு இது கட்டுப்பட்டதாகும். ‘மைய வங்கி’ 'பணம்' அச்சடிச்சு வழங்க முற்றுரிமைப் பெற்றுள்ளது.
 2. வணிக வங்கிகளுக்கு இவ்வுரிமை இல்லை.
 3. 'மைய வங்கி’ இலாப நோக்கில் செயல்படாது. இதன் நோக்கம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வளப்படுத்துவதாகும். ஆனால், வணிக வங்கிகளின் முக்கியமான நோக்கம் தனது பங்குதாரர்களுக்கு இலாபத்தை ஈட்டித் தருவதேயாகும்.
 4. 'மைய வங்கி’ நாட்டின் அயல்நாட்டு செலாவணி இருப்பை நிர்வகித்து வருகிறது. மைய வங்கியின் நெறிப்படுத்துதலுக்கேற்ப வணிக வங்கிகள் அயல்நாட்டுச் செலாவணியை” மேற்கொள்கிறது.
 5. 'மையவங்கி அரசின் உறுப்பாகவும், வங்கியாகவும், நிதி ஆலோசகராகவும் செயல்படுகிறது. அதே நேரத்தில், வணிக வங்கிகள் பொது மக்களுக்கு ஆலோசகராகவும், வங்கியாளராகவும் செயல்படுகிறது.

“மைய வங்கியின்” பணிகள்

'மைய வங்கிகள்' பணிகள் அனைத்து நாடுகளுக்கு பொதுவானது. ஆனால் மைய வங்கியின் எல்லை மற்றும் கொள்கை நோக்கங்களின் கருத்து ஒரு நாட்டிற்கும் பிற நாட்டிற்கும், காலா காலத்திற்கும், நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடுகின்றது. பொதுவாக, அனைத்து மைய வங்கிகளும் தனது பண மேலாண்மை மூலம் அதிக வளர்ச்சி வீதம், உகந்த வெளிநாட்டு செலுத்துநிலை ஆகியவற்றின் மூலம் நாட்டில் பொருளாதார நிலைத் தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. “மைய வங்கியின் பொதுவான பணிகளாவன.

பணத்தை ஒழுங்குபடுத்துதல் (Regulator of Currency)

காகிதப் பணத்தை (Paper Currency) வெளியிடுதல் மைய வங்கியின் மிக முக்கியப் பணியாகும். சட்டப்பூர்வமான பணத்தை புழக்கத்திற்கு அளித்தல் மைய வங்கியின் மற்றுமொரு பணியாகும். மைய வங்கியின் (ரிசர்வ் வங்கியின்) வெளியீட்டுத் துறை (Issue Dept.) பணம் மற்றும் காசுகளை வணிக வங்கிகளுக்கு அளிக்கிறது. நாட்டின் பொருளாதார நிலைக்கேற்ப ‘மைய வங்கி' கடன் மற்றும் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. 'பணம் அளிக்கும் முறையில் மைய வங்கியானது தன்னிடத்தே குறிப்பிட்ட அளவு தங்கத்தையும் அயல்நாட்டு செலாவணி இருப்பு மற்றும் வைப்பு (Securities) ஆகியவற்றை வைத்துக்கொண்டு பணத்தை அச்சிட்டு வெளியிடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடத்தே ரூ. 115 கோடி தங்கத்தையும் மற்றும் 85 கோடி அயல்நாட்டு வைப்புகளையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் பணம் அச்சிட்டு வெளியிட எந்த வரையறையும் இல்லை.

மைய வங்கி பணம் வெளியிடுவதற்கு முற்றுரிமை பெற்றுள்ளதால் பின் வரும் நன்மைகளைப் பெறுகிறது. அவையாவன

 • பண அளிப்பை வழங்குவதில் ‘மைய வங்கி' சீரான நடவடிக்கை மேற்கொள்வதால் பணக்கட்டுப்பாட்டை நிர்வகிக்க இயலுகிறது.
 • பண அமைப்பு முறையில் நிலைத் தன்மையைக் கொண்டு வருகிறது. எனவே பொதுமக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
 • பணம் அச்சிட்டு வெளியிடுவதால் அரசுக்கு இலாபம் கிடைக்கிறது.

வங்கி, முகவர் மற்றும் அரசுக்கு ஆலோசகர்

மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அரசுக்கு வங்கியாகவும், முகவராகவும், ஆலோசகராகவும் செயல்படுகிறது. ஒரு வங்கியாக மைய, மாநில அரசின் கணக்குகளை தன்னிடத்தே கொண்டு, அரசின் சார்பாக அவற்றை செலவு செய்கிறது (Payments). அரசின் சார்பாக அந்நியப் பணங்களை வாங்கவும், விற்கவும் செய்கிறது. நாட்டின் தங்கத்தின் இருப்பை வைத்துக் கொள்கிறது. நிதி முகவராக (fiscal agent) ‘மைய வங்கி’ அரசுக்கு 90 நாட்களுக்கு மிகாமல் குறுகிய கால கடனளித்து உதவுகிறது.

‘மைய வங்கி’ மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடனும், முன்பணமும் வழங்குகிறது. அரசின் சார்பாக அனைத்துப் பொதுக்கடன்களையும் மைய வங்கி மேலாண்மை செய்கிறது. ஒரு ஆலோசகராக (advisor), அரசுக்கு, பணமதிப்புக் குறைப்பு (devaluation) அந்நிய செலாவணிக் கொள்கை, நிதிநிலை அறிக்கை, திட்டம் போன்ற பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க பயனுள்ள ஆலோசனை மைய வங்கி’ வழங்குகிறது.

வணிக வங்கிகளின் ரொக்க இருப்புகளின் பாதுகாவலர் (Cash Reserve)

வணிக வங்கிகள் தங்களிடமிருக்கும் பணத்தில், குறிப்பிட்ட விழுக்காடு “ரொக்க இருப்பு” (CashReserve)க்களை மைய வங்கியிடம் வைத்திருக்கவேண்டும். இந்த இருப்புக்களிலிருந்து ‘மைய வங்கி நிதியை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு காசோலை மூலம் பரிமாற்றம் (Transfer) செய்கிறது.

அந்நியச் செலாவணி இருப்பின் பாதுகாவலர் மற்றும் மேலாளர்

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை மேலாண்மை செய்கிறது. அயல்நாட்டு பணமாற்று வீதத்தை (Exchange Rate) உள்நாட்டு பணமதிப்போடு ‘மைய வங்கி நிர்ணயிக்கிறது. அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தில் ஏதாவது ஏற்றத்தாழ்வு இருந்தால், மைய வங்கி அதற்கேற்ப அந்நிய நாட்டுப் பணத்தை வாங்கவும் விற்கவும் செய்து மாற்றுவிதத்தில் (Exchange rate) இருக்கும் நிலையற்றத் தன்மையை குறைக்க 'மைய வங்கி நடவடிக்கை எடுக்கிறது.

கடைசி புகலிடம் ‘மைய வங்கி' (Lender of Last Resort)

வணிக வங்கிகள், உண்டியல் இடைத் தரகர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மறு கழிவு செய்தும், பிணைப்பாதுகாப்பு அடிப்படையிலும் கடன் வழங்கி மைய வங்கி, வணிக வங்கிகளுக்கு கடைசி புகலிடமாக செயல்படுகிறது.

இவ்வகை வணிக வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும், இடர்ப்பாடான நிதி நிலையிலிருந்து மீண்டுவர, நாட்டின் நிதிக்கட்டமைப்பு சீர்குலையாமல் இருப்பதற்காக, மேற்கூறிய நிறுவனங்களின் இடர்ப்பாடான சூழ்நிலையில் அவர்களுக்கு கடனுதவி செய்து காப்பாற்றுகிறது.

பரிமாற்ற பணி (Clearing Function)

பரிமாற்ற முறைமூலம் ‘மைய வங்கி' இதர வணிக வங்கிகளுக்கு பரிமாற்ற வீடு' ஆக (Clearing House) செயல்படுவதால் ஒருவருக்கொருவரின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது. வணிக வங்கிகளின் பண இருப்பை (Cash Reserve) மைய வங்கி தன்னகத்தே பெற்றிருப்பதால், தான் ஒரு 'பரிமாற்றவீடாக' மைய வங்கி செயல்பட எளிதாகிறது.

கடன் கட்டுப்பாட்டாளர் (Controller of Credit)

நாட்டின் பொருளாதாரத்தில் வணிக வங்கிகளின் கடன் உண்டு பண்ணும் ஆற்றலை கட்டுப்படுத்தி அதன் மூலம் பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தை கண்காணிக்கும் மிகப் பெரும் பணியை ‘மைய வங்கி' மேற்கொள்கிறது. இதற்கு மைய வங்கி கடன் அளவுக்கட்டுப்பாடுகள் (Quantative methods) கடன் தன்மை (Qualitative methods) கட்டுப்பாட்டு முறைகளை மைய வங்கி மேற்கொள்கிறது. கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறை என்பது கடன் செலவு மற்றும் கடன் அளவைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. கடன் அளவுக் கட்டுபாடு முறைகள் (Quantative Method) மூவகைப்படும்.

அவையாவன.

 1. வங்கி வீதம் (Bank Rate Policy)
 2. வெளி அங்காடி நடவடிக்கை (Open Market Operations)
 3. வணிக வங்கிகளின் ரொக்க இருப்பு வீதத்தை மாற்றுதல் (Variation in Reserve Ratio)

கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் (Qualitative Methods)

கடனின் பயனையும், நெறிப்பாட்டினையும் கட்டுப்படுத்துகிறது. இம்முறை ஐந்து வகையாக செயல்படுகிறது.

 • இறுதி வரம்புத் தேவைகள்
 • நுகர்வோர் கடன்களை ஒழுங்குபடுத்துதல்
 • கடனை தேவைக்கேற்ப அளித்தல் (rationing of credit)
 • 'மைய வங்கியின் நேரடிச் செயல்பாடு
 • அறிவுரைகள் (Moralsuasion)

மேற்காணும் பணிகள் மட்டுமன்றி கூடுதலாக சில பணிகளையும் 'மைய வங்கி' புரிகிறது. கீழ்காணும் பிரச்சினைகளான. (i) கடன் (credit) (i) விலை நிலையில் ஏற்றத்தாழ்வு (ii) அந்நியச் செலாவணி மதிப்பில் ஏற்றத்தாழ்வு, மேலும் மைய வங்கி பணம் மற்றும் நிதிப் புள்ளி விவரங்களை திரட்டுவதும், ஆராய்ச்சி மேற்கொள்வதும், தகவல் தருவதும் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது. உலக வங்கி (World Bank) மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF) தொடர்பான பணிகளையும் கவனிக்க வேண்டும். மொத்தத்தில் ஒரு நாட்டின் ‘மைய வங்கி” “நிதி மற்றும் பணத்தின்” பாதுகாவலனாக விளங்குகிறது.

மைய வங்கி மேற்கொள்ளும் கடன் கட்டுப்பாட்டு முறை

'கடன் கட்டுப்பாடு' மைய வங்கியின் ஒரு முக்கிய பணியாகும். வணிக வங்கிகள் எழுப்பும் கடன் பெருக்கத்தை கட்டுப்படுத்த ‘மைய வங்கி’ பல முறைகளைக் கையாளுகிறது. அதில் இரு முக்கிய முறைகளாவன.

 1. கடன் அளவுக்கட்டுப்பாட்டு முறைகள் (Quantiative Methods)
 2. கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் (Qualitative Methods)

கடன் அளவுக் கட்டுப்பாட்டுமுறைகள் கடன் அளவை விரிவாக்கவோ, சுருக்கவோ பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக ‘மைய வங்கி' வங்கிக் கடனின் பாதுகாப்பான உச்ச அளவு ரூ. 50,000 கோடி எனக் கொள்வோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் உண்மையான வங்கிக்கடன் ரூ. 75,000 கோடி எனக் கொள்வோம். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி வங்கி வீதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி கடன் அளவை ரூ. 25,000/- கோடிக்கு குறைத்தது. எனவே, கடன் அளவு நாட்டில் குறைந்தது.

மற்றொரு புறம் கடன் தன்மை கட்டுப்பாட்டு முறைகள் (Qualitative Methods of Credit Control) தொழில் அல்லது வணிகத்தில், அரசின் பொருளாதார முன்னுரிமை அடிப்படையில் கடன் கட்டுப்பாட்டு அளவை ஒழுங்குபடுத்துகிறது. எடுத்துக்காட்டாக அத்தியாவசியப் பண்டங்களை வாங்கி விற்கும் ஊக வணிகர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் வணிக வங்கிகள் கடன் கொடுத்ததன் காரணமாக நாட்டில் பணவீக்கம் நிலவுகிறது, விலைவாசி உயர்ந்தது என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்ததாகக் கொள்வோம். இப்போது இந்திய ரிசர்வ் வங்கி “வணிக வங்கிகளை' '' ஊக வணிகங்களுக்கும் பதுக்கல் காரர்களுக்கும் பணம் கடன் அளிக்க வேண்டாம்” என அறிவுறுத்துகிறது. மேற்காண் பகுப்பாய்வு மூலம் நாம் அறிவது என்னவெனில் கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறையை 'மறைமுகமான முறை' எனவும் தன்மைக் கட்டுப்பாட்டு முறையை நேரடி முறையாகவும் கொள்ளலாம்.

கடனளவு அல்லது பொதுத்தன்மை கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Quantitative or General Credit Control Methods)

வங்கி வீதம் (அ) மறுகழிவு வீதக் கொள்கை (Bank rate or Discount rate policy) ‘மைய வங்கி' விதிக்கும் வட்டி வீதமே “வங்கி வீதம்' எனப்படும். இதனை “மறுகழிவு வீதம்' என்றும் அழைக்கலாம். இந்த விதத்திலேயே மைய வங்கியானது வணிக வங்கிகள் வைத்திருக்கும் அரசுப் பத்திரங்கள், உண்டியல்கள் ஆகியவற்றை மறுகழிவு செய்கிறது. வணிக வங்கிகளின் 'ரொக்க வைப்பு' (Cash Reserves) குறைந்தபட்ச சட்டப்பூர்வமான இருப்பைவிட குறைவாக இருக்கும்போது இவ்வங்கிகள் கூடுதல் பணம் பெறுவதற்கு, தங்களிடமுள்ள தகுதியுள்ள பத்திரங்களை மைய வங்கியில் வைத்து கடன் பெறலாம் அல்லது உண்டியல்களை மைய வங்கியின் மூலம் மறுகழிவு செய்து கூடுதல் பணம் பெறலாம்.

இப்பணிக்கு ‘மைய வங்கி” வட்டியை வசூலித்துக் கொள்ளும். 'வங்கி வீதம் உயர்த்தப்படும் போது மைய வங்கியிடம் கடன் பெறுவது அதிக செலவை ஏற்படுத்தும். எனவே வணிக வங்கிகள் குறைவாக கடன்பெறும் (மைய வங்கியிடமிருந்து) மாறாக, வணிக வங்கிகள் வாடிக்கையாளருக்கு கடன் அளிக்கும் வட்டி வீதத்தை உயர்த்தி விடும். இதனால் வணிகச் செயல்பாடுகள் ஊக்கமிழக்கும். எனவே, பண்டங்களின் தேவைக்குறையும், விலை வீழ்ச்சியடையும். ஆகவே “பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கி வீதம் உயர்த்தப்படுகிறது. மாறாக “பணவாட்டத்தை” போக்க ‘வங்கி வீதம் குறைக்கப்படுகிறது.

வெளிச்சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations)

அரசுப் பத்திரங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் பாதுகாப்புப் பத்திரங்கள் (Securities) உண்டியல்கள் (Bill) ஆகியவற்றை மையவங்கி, வாங்கி விற்கும் நடவடிக்கையே வெளிச்சந்தை நடவடிக்கை என்றழைக்கப்படுகிறது.

பண வீக்கத்தின்போது மைய வங்கி முதல்தர உண்டியல்களை (First Class Bills) பணச் சந்தையில் விற்கிறது. இவ்வுண்டியல்களை வாங்கும் வணிக வங்கிகள் ‘மைய வங்கிக்கு” உரிய பணத்தை செலுத்துவார்கள். வணிக வங்கிகள், 'மைய வங்கிக்கு உரிய பணத்தை செலுத்துவார்கள். வணிக வங்கிகள், “மைய வங்கியிடம் வைத்திருக்கும் “ரொக்க இருப்பைக் குறைத்துவிடும். சில வங்கிகள் கடன் கொடுப்பதை தடைசெய்தும் வருகிறது. இவ்வாறு, பணவீக்கத்தைத் தூண்டும் செயல்பாடுகள் வங்கிக் கடனை கட்டுப்படுத்துவதனால் வணிகச் செயல்பாடுகள் குறைந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

பொருளாதார மந்த காலங்களில் 'மைய வங்கி’ உண்டியல்கள் மற்றும் பாதுகாப்புப் பத்திரங்களை, வணிக வங்கியிலிருந்து வாங்கும். இதற்கு வணிக வங்கிக்கு மைய வங்கிப் பணம் கொடுத்துவிடும். எனவே, வணிக வங்கிகளின் 'ரொக்க இருப்பு அதிகரிக்கும். இதன் மூலம் வங்கிகள் தங்களின் கடனை அதிகரிப்பதால், மூலதனம், வேலைவாய்ப்பு மற்றும் விலைகள் அதிகரிக்கும். இவ்வாறு, நாட்டில் ‘மைய வங்கியானது தனது வணிகச் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலையை தூண்டிவிடுகிறது.

மாறும் இருப்பு வீதம் (Variable Reserve Ratio)

ஒவ்வொரு வணிக வங்கியும் சட்டப்படி ‘மைய வங்கியிடம் ஒரு குறிப்பிட்ட அளவு விழுக்காடு பணத்தை வைப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும். வணிக வங்கிகளிடம் குறைந்த அளவு இருப்பு பணத்தைவிட கூடுதலாக உள்ள இருப்பு, கூடுதல் இருப்பு (Excess Reserve) எனப்படும். வணிக வங்கிகள் இந்த கூடுதல் இருப்பின் அடிப்படையிலேயே கடன் வழங்குகிறது.

மைய வங்கி இருப்புத் தேவையில் மாற்றத்தைக் கொண்டுவரலாம். இதனால் வணிக வங்கிகளின் இருப்புத் தொகையில் பாதிப்பு ஏற்படுவதுடன் வணிக வங்கிகள் மைய வங்கியிடம் செலுத்தியுள்ள வைப்புநிதி, முதலீடு மற்றும் கடன் கொடுப்பதற்கென வைத்துள்ள நிதியிலும் பாதிப்பு ஏற்படும். எடுத்துக்காட்டாக, மைய வங்கியிடம் 10% இருப்புநிதி (Reserve requirement) யை வணிக வங்கிகள் நிர்வகிக்க வேண்டும் என்றால், வணிக வங்கிகள் ஒவ்வொரு 1000 ரூபாய் வைப்புத் தொகைக்கும் ரூ. 100 ஐ மையவங்கியிடம் ரொக்க இருப்பு (Cash Reserve) வைத்தது போக மீதம் உள்ள ரூ. 900/- கடனாக அளிக்கலாம். பணவிகிதத்தைக் கட்டுப்படுத்த ரொக்க இருப்பை (Cash Reserve) 10% லிருந்து 15% ஆக மைய வங்கி உயர்த்தலாம். இதனால் வணிக வங்கிகள் தாங்கள் கடனளிக்க வைத்துள்ள கூடுதலான 5% தொகையை மைய வங்கியிடம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். மாறாக பண வாட்டத்தை போக்க மைய வங்கி ரொக்க இருப்பை (Cash Reserve) 10% லிருந்து 7% ஆக குறைக்கலாம். இதனால் வணிக வங்கிகளின் ரொக்க இருப்பு கூடுதலாக, அது அளிக்கும் கடன் வசதி 3% அதிகரிக்கும்.

கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் (Qualitative or selective Credit Control)

கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் என்பது கடனைப் பயன்படுத்துபவர்களுக்கு அளிக்கப்படும் தொகையை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் ஆகும். இதன் நோக்கம் ஊக வாணிகம் போன்ற விரும்பத்தகாத செயல்களுக்கு வங்கி கடனுதவி அளிக்காமல் சமுதாயத்திற்கு பயனுள்ளவைகளுக்கு கடனுதவி செய்வதாகும். முக்கியமான கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் பின்வருமாறு

(அ) இறுதித் தேவை (Margin Requirements)

இதன் முக்கிய நோக்கம் ஊக வாணிகத்தில் ஈடுபடுபவர்கள் பங்குப்பத்திரத்தை (Securities) வாங்குவதைத் தடுப்பதாகும். மையவங்கி பங்குப் பத்திரத்தை (Securities) வாங்க கடன் வழங்குவதற்கு சில குறைந்த அளவு கட்டுப்பாடு (வணிக வங்கிகளுக்கு) விதிக்கிறது. எ.கா. மையவங்கியானது 30% இறுதித்தேவை விதிக்கிறது எனில், ரூ. 1000த்திற்கு பங்கு பத்திரம் (Security) வாங்குவதற்கு ரூ. 300/-ஐ இறுதிப்பணமாக வைத்துக் கொண்டும் ரூ. 700 ஐ கடன் வழங்குவதற்கு வைத்துக் கொள்ளலாம். மையவங்கியானது ஊகவாணிக செயல்பாடுகளை தடுக்க நினைத்தால் இறுதித் தேவையை அதிகரிக்கும். மாறாக கடனை விரிவாக்க நினைத்தல் இறுதித் தேவையைக் குறைக்கிறது.

ஆ) நுகர்வோர் கடனை ஒழுங்கு படுத்துதல் (Regulation of Consumer Credit)

நுகர்வோர் அழியாப்பண்டங்களை தவணை முறையில் வாங்க கடன் பெறுவதை மைய வங்கி கட்டுப்படுத்துகிறது. இதனை அடைய மைய வங்கி இருவழிகளைக் கையாளுகிறது.

 1. குறைவான ரொக்கம் செலுத்துதல் (minimum down payment)
 2. திருப்பிச் செலுத்துவதில் அதிக காலம் (எ.கா. 36/48/60 தவணைகள்)

கடனைத் தேவைக்கேற்ப பங்கீடு செய்தல் (Rationing of Credit)

வணிக வங்கிகள் எதற்காகக் கடன் அளிக்கிறதோ; அதனை கட்டுப்படுத்தி கண்காணித்து கொடுப்பதே “கடன் பங்கீடு செய்தல்” ஆகும். இது இருவகைகளாகும்.

 1. வணிக வங்கிகள் ஒவ்வொரு துறைக்கும் அளிக்கும் கடனளவை “மைய வங்கி” கடன் வரம்பினை நிர்ணயிக்கிறது. இந்த வரம்பிற்கு அதிகமாக அவை கடன் கொடுக்க இயலாது.
 2. மாற்று மூலதன சொத்து வீதம் (Variable Capital assets ratio) இதன் பொருள் மைய வங்கி' வணிக வங்கிகளின் மொத்த சொத்துக்களில் மூலதன வீதத்திற்கு ஏற்ப சரிசெய்கிறது.

ஈ) நேரடிச் செயல்பாடு (Direct Action)

நேரடிச் செயல்பாடு என்பது மைய வங்கி “வணிக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட கொள்கையை கடை பிடிக்க வேண்டும்' என அறிவுறுத்துகிறது. மைய வங்கி வணிக வங்கிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை பகிர்கிறது.

 1. கடன் கொடுக்கும் கொள்கைகள்
 2. முன்பணங்கள் எந்தெந்த காரணங்களுக்காக கொடுக்கப்படலாம்.
 3. பெற்ற கடன்களுக்கு இறுதிப் பணம் நிர்வகிக்கப்படுதல் வேண்டும்.

உ) அறிவுரை கூறுதல் (Moral Suasion)

நடப்புப் பொருளாதார நிலையில் ‘மைய வங்கியானது வணிக வங்கிகளை பொதுப் பணக்கொள்கையை கடைபிடிக்க வேண்டி கேட்டுக் கொள்வதும், தொடர்ந்து அவ்வாறே தூண்டுதலை செய்வதும் மைய வங்கியின் பணி ஆகும்.

ஊ) விளம்பரப்படுத்துதல் (Publicity)

மைய வங்கியானது பொதுமக்களுக்காக வணிக வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் செலவினங்கள் சார்ந்த விவரங்களை வாரமொரு முறை அல்லது மாதமொரு முறை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை தான் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும் மைய வங்கியானது பண அளிப்பு விலைகள், உற்பத்தி, வேலை வாய்ப்பு போன்றவை சார்ந்த புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.

வங்கிகள் நாட்டுடமையாக்கப்படுதல்

இந்திய வங்கியியல் முறை தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்ததன் விளைவாக 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் வங்கிகளின் வளர்ச்சி மெதுவாக இருந்தது. ஆனால், விடுதலைக்குப் பிறகு, இந்திய வங்கி முறையில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக திட்டமிடப்பட்ட பொருளாதார முன்னேற்றம், பண அளிப்பு அதிகரித்தல், வங்கியியல் முறையில் வளர்ச்சி, 1950ல் பாரத் ஸ்டேட் வங்கிகளும் அதன் இணை வங்கிகளும் அமைக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு முறைகள், இவை அனைத்தையும்விட வணிக வங்கிகள் ஜூலை 1969ல் 14 வங்கிகளும் மற்றும் 1980ல் 6 வங்கிகளும் அரசுடைமை ஆக்கப்பட்டதன் காரணமாக வங்கி வளர்ச்சி முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

நாட்டுடமையாதலுக்கு முன்னர் இந்திய வணிக வங்கியியல் முறை, நாட்டின் திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு போதுமான பங்கு பணி ஆற்றவில்லையென சில பொருளியலறிஞர்கள் கருதினார்கள். 'வங்கிகள் முன்னணித் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகத்திலுள்ள பெரும்புள்ளிகளால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டது. அவர்கள் பொதுப்பணத்தை பயன்படுத்தி தனித்தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். சிறிய தொழில்கள், வர்த்தக அலகுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன. வேளாண்மைக் கடன் ஒருபோதும் வழங்கப்படவில்லை. பொது சேமிப்பு, சமூக விரோத சட்டப்பூர்வமற்ற செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

எனவே, இந்திய அரசு 14 வணிக வங்கிகளை ஜூலை 1969ஆம் ஆண்டும், மற்றும் 6 வணிக வங்கிகளை ஏப்ரல் 1980 ஆம் ஆண்டும் எடுத்துக் கொண்டது. (நாட்டுடமையாக்கியது) இந்த வணிக வங்கி பிரிவுகள் கீழ்க்காணும் வகைகளில் செயல்படுகிறது.

 • பாரத ஸ்டேட் வங்கி
 • பாரத ஸ்டேட் வங்கியின் 7 இணைவங்கிகள்
 • இருபது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்
 • இந்திய கூட்டாண்மை வணிக வங்கிகள் (Indian Joint-Stock Commercial Banks)
 • இந்தியாவில் செயல்படும் அயல்நாட்டு வங்கிகள்
 • வட்டார ஊரக வங்கிகள் நாட்டு

மையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடுகள்

நாட்டுடமையாக்கப்பட்ட வணிக வங்கிகளால் ஏற்பட்ட பயன்களாவன. இந்திய வங்கியமைப்புமுறையில் ஒரே சீரான நிலையும் அரசின் வங்கியியல் கொள்கையிலும், பணக் கொள்கையிலும் தகுந்ததொரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தது.

நாட்டுடமையாக்கப்பட்ட பிறகு வணிக வங்கிகள், தங்களின் பழமை வாய்ந்த செயல்பாடுகளிலிருந்து மாறி, தனது நோக்கங்களை பல்வேறு களங்களில் நிறைவேற்றி பீடு நடைபோட்டன. வணிக வங்கி, வங்கிக் கிளைகளை அதிகமாக்குதல், வைப்புக்களைத் திரட்டுதல், உற்பத்திச் செயல்களுக்கு நிதி உதவி செய்தல், புறக்கணிக்கப்பட்ட துறைகளுக்கு அதிகக் கடன் வழங்குதல், வங்கியியலில் ஒரு பெரிய செயற்கரிய செயல்பாடுகள் செய்தல் போன்ற மாபெறும் சாதனைகளை வணிக வங்கிகள் படைத்துள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate