অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள 30 உறுப்புகள்

மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள 30 உறுப்புகள்

நோக்கம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

உறுப்புகள்

  1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
  2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
  3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
  4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
  5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
  6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை
  7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
  8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
  9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
  10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
  11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
  12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
  13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
  14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
  15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
  16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.
  17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
  20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.
  21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
  22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை
  23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.
  24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.
  25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
  26. அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
  27. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.
  28. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.
  29. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
  30. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபெறும் உரிமை.

முடிவுரை

ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும். இந்த பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது. இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.

ஆதாரம் : லாயர்ஸ் லைன் – மக்கள் சட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate