பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள் / சீர்மிகு நகரங்கள் பாதுகாப்பாகவும் பேரழிவு நிகழாமலும் பராமரித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சீர்மிகு நகரங்கள் பாதுகாப்பாகவும் பேரழிவு நிகழாமலும் பராமரித்தல்

சீர்மிகு நகரங்களை பாதுகாப்பாகவும் பேரழிவு நிகழாமலும் பராமரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

நாடெங்கிலும் நூறு சீர்மிகு நகரங்களை ஏற்படுத்துவதற்காக ரூ.7060 கோடியை இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, தேசிய நிலைபெறு வீடமைப்பு மற்றும் சீர்மிகு நகர இயக்கம், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நடுத்தர நகரங்களை அடையாளம் கண்டு அறிவித்துள்ளது.

நகரமயமாதல் என்பது தவிர்க்க முடியாதது என்றாகி விட்டது. எல்லா நாடுகளிலும் நகரங்களின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சிக்கு வினையூக்கியாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உலக நாடுகளில் நிலவிய போக்கை வைத்துப் பார்க்கும்போது நகர்ப்புற வளர்ச்சி முப்பது சதவீதத்தைத் தாண்டும்போது அது துரிதகதியை அடைகிறது. அப்போது நகர்ப்புற சீரழிவு தலையெடுக்கிறது. இந்தியாவும் இப்போது அந்தக் கட்டத்திற்கு வந்துவிட்டது. எனவே சீர்மிகு நகரங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் எனலாம்.

சீர்மிகு நகரம் என்பது ஆங்கிலத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' சொல்லப்படுகிற சீர்மிகு நகரம் என்ற சொல்லாட்சிக்குப் பல்வேறு விதமாகப் பொருள் உரைக்கப்படுகிறது. அமெரிக்காவின் அறிவியல் தொழில்நுட்ப அலுவலகம், “முக்கியமான கட்டமைப்புகளைக் கண்காணித்து ஒருங்கிணைப்பதும், வளங்களை உத்தம அளவிற்கு உயர்த்துவதும், பராமரிப்புச் செயல்களைத் திட்டமிடுவதும், உத்தம அளவில் சேவைகளை வழங்குகிற அதே வேளையில், பாதுகாப்பு அம்சங்களைக் கண்காணிப்பதும், "சீர்மிகு நகர நிர்வாகத்தின் பணி எனக் கூறுகிறது. இங்கிலாந்தின் வணிகப் புத்தாக்கம் மற்றும் திறன்துறை, “ஒரு செயல்முறை அல்லது தொடர் நடவடிக்கைகள் மூலமாக நகரங்களைத் தொடர்ந்து வாழ உகந்ததாக மாற்றி, புதிய சவால்களுக்கு உடனடித் தீர்வு காணும் திறன் பெற்றதாக இருப்பவையே சீர்மிகு நகரங்கள்" என்று கூறுகிறது.

எனவே சீர்மிகு நகரம் என்பது தற்போதைய மரபுகளைப் பேணுவதாகவும், நவீன மாற்றங்களை ஏற்றுக் கொள்வதாகவும் திகழ்ந்து மேம்பட்ட வாழ்வுச் சூழலைத் தந்து, நிலை பெறு வளர்ச்சிக்குக் களனாகவும், வளங்களின் சிறந்த பராமரிப்புத் தளமாகவும் இருக்க வேண்டும்.

கட்டமைப்பும் சிறப்புக் கூறுகளும்

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டி நெறிப்படி, மூன்று முக்கிய தூண்டு விசைகளுடன் ஒருங்கிணைந்த கட்டமைப்பாக சீர்மிகு நகரத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.

நகரத் திட்டமிடுவோர், அரசு சாராத அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவோர், மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வோர், போக்குவரத்து சேவை வழங்குவோர், கண்காணிப்பும் கட்டுப்பாடும் செயல்படுத்துவோர் போன்ற பலதரப்பட்ட பிரிவினரின் ஒத்துழைப்பும் கூட்டுமுயற்சியும் சீர்மிகு நகரங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றுள் இயற்கைப் பேரழிவு நிகழாமலும், பாதுகாப்பான சுழலும் இருப்பதற்கான ஏற்பாடுகள் பற்றிக் காண்போம்.

மக்களின் பாதுகாப்பு

நகர நிர்வாக அமைப்புகளுக்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமையாகும். இதில் குற்றச் செயல்கள், இயற்கைச் சீற்றங்கள், விபத்து வன்முறை போன்றவற்றில் இருந்து காப்பாற்றுவது முதலிடம் பெறுகிறது. தற்போது, நிதி மோசடிகள், இணையதளக்குற்றங்கள், தகவல் திருட்டு போன்றவற்றில் இருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தொலைத் தொடர்பு நுட்பத் துடன்கூடிய கண்காணிப்பு ஏற்பாடுகள் அவசியம். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது விவரங்களை உடனடியாகத் திரட்டி, தொடர்புடைய பிற முகமைகளோடு உடனடியாக அவற்றைப் பகிர்ந்து, தக்க மாற்று ஏற்பாடு அல்லது தீர்வு காண்பதற்கு இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகள் உதவும்.

உதாரணமாக, ஒரு சீர்மிகு நகரத்தின் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்புக் கேமரா மூலமாக எந்த இடத்தில் இருந்தும் திரையில் பார்க்கும் வசதி வேண்டும். அந்த நகரத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் கைபேசி திரையிலும் பாக்கும் வசதி இருக்க வேண்டும். மேலும் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து ஆணைகளைப் பிறப்பிக்கவும், அவற்றைத் துரிதமாகச் செயல்படுத்தவும் ஏற்பாடுகள் தேவை.

மேலும் ஒரு கண்காணிப்பு அமைப்பில் இருந்துபெறும் தகவல் அல்லது கட்டளைக்கு ஏற்ப கண்காணிப்பு அமைப்புகள் செயல்படுகின்றவாறு இணைப்புத் தொடர்புகளும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு கார் திருடு போய்விட்டது என்ற தகவல் வந்தால், கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்தும் காரோட்டியைப் படமெடுக்க வேண்டும். அதே தகவல் அருகிலுள்ள காவல் நிலையங்கள் அனைத்திற்கும் உடனடியாகச் செல்லும்படியான ஏற்பாடும் இருக்க வேண்டும்.

இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பு

மக்கள் செளகரியமாக வாழ்வதற்கான இடமாக சீர்மிகு நகரங்கள் இருப்பதோடு, இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அழிவுகள் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும். நிலநடுக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளும் விதமாகக் கட்டிடங்கள் கட்டப்படுவதோடு, எரியாற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். மேம்பட்ட கழிவு அகற்றும் முறைகள், காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பு வசதிகள் போன்றவை மூலம் இயற்கை வளங்கள் மீதான நெருக்கடியை குறைக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும் நவீன வசதிகள் கொண்டதாகவும், தனித்து இயங்குவதாகும் இருக்கலாம்.

பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு அற்றுப் போவது பெரும் பிரச்சினையாகும். கூகுள் நிறுவனம் லூன் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொடர்பு வசதிகள் எளிதாகக் கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில் மிகப் பெரிய பலூன்களைப் பறக்கவிட்டு அவற்றின் மூலம் கம்பியில்லா இணையத் தொடர்புகளை அந்நிறுவனம் ஏற்படுத்துகிறது. இதனை பேரிடர் காலங்களில் சீர்மிகு நகரங்களில் பயன்படுத்தலாம்.

மேலும் பேரிடர் காலங்களில் இயற்கை ஆற்றல்களைப் பயன்படுத்தும் பாதுகாப்பான இடங்களை உருவாக்கலாம். இவை சூரிய சக்தி, மழை நீர் போன்றவற்றின் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும். அத்துடன் நிவாரண மையங்களாகவும் இவை இருப்பதால், பேரிடர் காலங்களில் மக்களின் உணவுத் தேவை மற்றும் தங்குமிட வசதிகளை நிறைவேற்றுவதாகவும் அவை திகழும்.

பொதுவாகவே, தனித்த இயக்கம் என்பதை விடுத்து, தரவுகளையும், விவரங்களையும், பரிமாறிக் கொண்டும், தொழில்நுட்ப வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டும் ஒருங்கிணைந்து செயல்படும்போது பேரிடர்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். சீர்மிகு நகரங்களை ஏற்படுத்தும் அரசின் முயற்சியில் படிப்படியாக ஒருங்கிணைப்புகள் நிகழும்போது, அவை உண்மையாகவே சீர்மிகு வாழிடங்களாகத் திகழும்.

ஆதாரம்  - திட்டம் மாத இதழ்

2.94594594595
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top