பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / வறுமை ஒழிப்பு திட்டங்கள் / நகர்புற வறுமை ஒழிப்பு / பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்)
பகிருங்கள்

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்)

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்) பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதித்திட்டம், தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுவாக்கில் அனைவருக்கும் வீடு அளிக்கும் விதத்தில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடிசைவாசிகள் உட்பட நகர்ப்புற ஏழைமக்களின் வீட்டுவசதித் தேவைகளை பின்வரும் நிமிர்வு நிலைகளின் மூலம் வேகம் செலுத்தி நிறைவேற்ற இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 • நிலத்தை ஒரு வளமாகக் கையாண்டு, வீடுகள் கட்டித்தரும் தனியாரின் பங்கேற்புடன் குடிசைவாழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது.
 • நலிந்த பிரிவினரும் வாங்கத்தக்க விலையில் மானியத்துடன் கூடிய கடனுதவி.
 • பொதுத்துறை, தனியார் குறைகளின் பங்கேற்புடன் மலிவான விலையில் வீடுகள்.
 • பயனாளிகளுக்கான தனி வீடுகளைக் கட்டவும், மேம்படுத்தவும் மானியம்.

பயனாளிகள்

நகர்ப்புற ஏழைகள், குடிசைவாசிகள் ஆகியோரின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்தபட்சம் 300 நபர்களைக் கொண்டிருக்கும் அல்லது மோசமாகக் கட்டப்பட்ட நெரிசலான 60-70 வீடுகள் உடைய சுகாதாரமற்ற சூழலில் வாழக்கூடிய, போதுமான கட்டமைப்பு வசதிகளற்ற, முறையான துப்புரவு, குடிநீர் வசதிகள் இல்லாத பகுதி, குடிசைப் பகுதி என்று வரையறுக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் (Economically Weaker Section - EWS), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group - LIG)  ஆகியோர் பயனாளிகளில் அடங்குவர். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 3 லட்சமும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 3 முதல் 6 லட்சம் வரையிலும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் இந்தத்திட்டத்தின் நான்கு நிமிர்வு நிலைகளின் கீழும் உதவிபெறத் தகுதி உடையவர்கள்.  ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினரோ, கடன் வசதியோடுகூடிய மானியத்திட்டத்தின் மூலம் மட்டுமே பயன்பெறமுடியும்.

 • பொருளாதாரத்தில் நலிவுற்றோர், குறைந்த வருமானப் பிரிவினர் ஆகியோரை இந்தத்திட்டத்தின் கீழ்அடையாளம் காண்பதற்கு வருமானம் பற்றிய ஆதாரமாக, விண்ணப்பிக்கும் நபர் வழங்கும் சுய சான்றிதழும், ஆணைப்பத்திரமும் (Affidavit) ஏற்றுக் கொள்ளப்படும்.
 • பயனாளியின் குடும்பம், கணவன், மனைவி, மணமாகாத மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் உடையதாக இருக்கலாம்.
 • பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் யாருடைய பெயரிலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உறுதிப்பாடுடைய சொந்தவீடு இருக்கக் கூடாது.  இத்தகைய சொந்தவீடு இருப்பவர்களுக்கு இந்தத்திட்டத்தின் கீழ் உதவி பெறும் தகுதி கிடையாது.
 • மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் உசிதப்படி பயனாளிகள் பயன்பெறும் தகுதியைப் பெறுவதற்கான வரையறைகளை முடிவு செய்துகொள்ளலாம். எந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் எந்தெந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் பயன் பெறுவார்கள் என்பதை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
 • பத்து ஆண்டுகளில் 34% வளர்ச்சி விகிதம் கொண்டுள்ள ஒரு குடிசைப் பகுதியில் 18 மில்லியன்வரை குடிசை வீடுகள் இருக்கக் கூடும். 2 மில்லியன் குடிசைப்பகுதி சாராத நகர்ப்புற ஏழைகள் இந்தத் திட்டத்தின்படி வீடுகளைப் பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  ஆகவே, ஒட்டுமொத்த வீட்டு வசதிப் பற்றாக்குறையையும் எதிர்கொள்வதற்கு இந்தத்திட்டம் கருதியுள்ளது.

நோக்கம்

 • நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம் 2015 முதல் 2022 வரையான காலகட்டத்தில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூலம் மத்திய உதவி வழங்கப்படும். இத்தகைய உதவி தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும்/குடும்பங்களுக்கும் 2022 வாக்கில் அளிக்கப்படும்.
 • மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள CCS திட்டமாக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கடனுதவியோடு கூடிய மானியம் என்ற பகுதி மத்திய அரசின் திட்டமாக இருக்கும்.
 • இந்தத்திட்டம் அதன் அனைத்து உட்பகுதிகளுடனும் 17.6.2015 முதல் 31.3.2022 வரையிலும் செயல்படுத்தக் கூடியதாக இருக்கும்.

திட்டத்தின் செயல் எல்லையும் கால அளவும்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள சட்டபூர்வமான 4041 நகரங்கள் அனைத்தும் முதல் பிரிவைச் சேர்ந்த 500 நகரங்களுக்கு உரித்தான கவனத்துடன் மூன்று கட்டங்களில் பின்வருமாறு செயல் எல்லைக்கு உட்படுத்தப்படும்.

 • முதற்கட்டம் (ஏப்ரல் 2015 – மார்ச் 2017) மாநிங்கள், யூனியன் பிரதேசங்களின் விருப்பத்திற்கேற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்கள் செயல் எல்லைக்குள் வரும்.
 • இரண்டாவது கட்டத்தில் (ஏப்ரல் 2017 – மார்ச் 2019) கூடுதலாக 200 நகரங்கள் சேர்க்கப்படும்.
 • மூன்றாவது கட்டமாக (ஏப்ரல் 2019 – மார்ச் 2022) மீதமுள்ள மற்ற நகரங்கள் அனைத்தும் சேர்க்கப்படும்.

இருப்பினும், மாநிலங்ககள யூனியன் பிரதேசங்களிடமிருந்து வள ஆதாரங்களோடு கூடிய வேண்டுகோள் வந்தால் முந்தைய கட்டங்களில் அதிகமாக நகரங்களையும் சேர்த்துக் கொள்வதற்கு அமைச்சகத்துக்கு இடமுண்டு.

30 சதுரமீட்டர் தரைப்பரப்பு வரையிலும், அடிப்படை தேவைகளோடு வீடுகளைக் கட்டுவதற்கு இந்தத்திட்டம் ஆதரவு தரும். வீட்டின் அளவு, பிறவசதிகள் போன்றவற்றை வரையறுப்பதில் மாற்றங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து செய்து கொள்ளலாம். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி உதவியைக் கோராமல் இதனைச் செய்து கொள்ளலாம். குடிசைப் பகுதி மறுமேம்பாட்டுத் திட்டங்கள், விலை குறைவான வீடுகள் கட்டும் பங்கேற்புத் திட்டங்கள் ஆகியவை தண்ணீர் வசதி, உடல்நலம் காக்கும் ஏற்பாடுகள், கழிவு நீர் வசதி, சாலை, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) இத்தகைய வீடுகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தின் கீழும் கட்டப்படும் வீடுகளின் குறைந்தபட்ச அளவு தேசிய கட்டடக் குறியீடு (National Building Code - NBC) தர அளவுகளை ஒத்ததாக இருக்க வேண்டும். இத்தகைய தர நிர்ணயத்தின்படி வீடு கட்டுவதற்கு தக்க அளவிலான நிலம் இல்லாத பட்சத்தில் எந்த அளவில் வீடு கட்டுவது என்பது பொருத்தமான முடிவை மாநில அரசும், யூனியன் பிரதேசங்களும்  SCSMC  ஒப்புதலுடன் மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின்படி கட்டப்படும் / விரிவாக்கம் செய்யப்படும் வீடுகள் அனைத்தும் நிச்சயம் கழிவறை வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் வடிவமைப்பு பாதுகாப்பிற்குத் தேவையானவற்றைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைத்துக் கட்டப்படவேண்டும். பூகம்பம், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் வகையில் வீடுகள் இருக்க வேண்டும். தேசிய கட்டடக் குறியீடுகள் மற்றும் பிற பொருத்தமான இந்தியத்தர நிர்ணயக் குறியீடுகளையும் அனுசரித்து அமையவேண்டும்.

மத்திய அரசின் உதவியுடன் இந்தத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் / பெறப்படும் வீடுகள் குடும்பத்தலைவியின் பெயரிலோ அல்லது குடும்பத்தலைவர் - குடும்பத்தலைவி இருவரின் பெயரிலும் கூட்டாகவோ தரப்படவேண்டும். வயதுவந்த பெண்கள் இல்லாத குடும்பங்களில் குடும்பத்தின் ஆண் உறுப்பினரின் பெயரில் வீடு இருக்கலாம்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும் பிற முகமைகள் குடியிருப்போர் நலச்சங்கம் போன்ற பயனாளி சங்கங்களை அமைத்து வீடுகளைப் பராமரிப்பதை ஊக்கப்படுத்தலாம்.

மத்திய உதவியோடு கட்டப்படும் / பெறப்படும் வீடுகள் திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள்

இந்தத்திட்டம் நான்கு நிமிர்வு நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது. இவற்றின் கீழ் பயனாளிகளின் தெரிவு மாநில அரசுகளிடமும், ULB யிடமும் விடப்படும்.

முன்பிருந்த அதே இடத்தில் குடிசைப் பகுதி மறுமேம்பாடு

கடன்வசதியோடு இணைந்த மானியம் மூலம் மலிவுவிலை வீடுகள்

கூட்டு முயற்சியில் ஏற்கத்தக்க விலையில் வீட்டு வசதி

தனி வீடுகளுக்கான மானியம்

- நிலத்தை ஒரு வளமாகப் பயன்படுத்துவது

- தனியார் பங்கேற்புடன் கூடியது

- குறைந்த விலை வீடுகளைக் கட்டுவதற்கு FSI/TDR/FAR இல் கூடுதல் நிதி உதவி

- வட்டி உதவித் தொகை மானியத்தை பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு புது வீடுகளுக்கோ இருக்கும் வீட்டைப் புதுப்பிக்கவோ வழங்குதல்

-  பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு : குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம்வரை.  வீட்டின் அளவு 3/0 சதுர மீட்டர்.

-  குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு : ஆண்டு வருமானம் 3 முதல் 6 லட்சம்வரை மற்றும் வீட்டின் அளவு 60 சதுரமீட்டர்.

- தனியார் அல்லது பொதுத் துறை பங்கேற்புடன் முகமை உட்பட.

- பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 35% வீடுகள் கொண்ட வீட்டுவசதித் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய உதவி

- பொருளாதாரத்தில் நலிவுற்ற தனிவீடு தேவைப்படும் நபர்களுக்கு

- இத்தகைய பயனாளிகளுக்கு தனியாக ஒரு திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

- தொடர்பில்லாதவர்கள் பயனாளிகளாக இடம் பெறக் கூடாது.

முன்பிருந்த அதே இடத்தில் குடிசைப் பகுதி மறுமேம்பாடு

நிலம் ஒரு வள ஆதாரம் என்ற கருத்தோடு இந்த நிமிர்வு நிலை செயல்படுத்தப்படுகிறது. தனியார் பங்கேற்புடன் தகுதி உடைய குடிசை வாழ் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். மத்திய அரசாங்க நிலம் / மாநில அரசின் நிலம் / ULB நிலம் / தனியார் நிலம் இவற்றில் எதன்மீதுள்ள குடிசைப்பகுதியும் இந்த நிமிர்வு நிலையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்படி மறு மேம்பாடு செய்யப்படும் குடிசைப் பகுதிகள் கட்டாயமாக வேறாக பிரித்துக் காண்பிக்கப்பட வேண்டும். குடிசைப் பகுதி மறுவாழ்வு நிதியை வீட்டுக்கு ஒரு லட்சம் வீதம் பெறுவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெறுவோருக்கு தகுதி உண்டு.

கடன் வசதியோடு இணைந்த மானியத்தின் மூலம் வாங்கத்தகுந்த விலையில் வீடுகள்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் இவை போன்ற பிற நிறுவனங்களிடமிருந்து வீட்டுக்கடன் கோரலாம். புதிய வீடுகள், இருக்கும் வீடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்தக் கடன் கிடைக்கும். 6 லட்சம் வரையுள்ள கடன் தொகைக்கு கடனோடு இணைந்த மானியம் தரப்படும். 15 ஆண்டுகளுக்கு 6.5% விகிதத்தில் வட்டி மானியத்தைப் பெறலாம். 6 லட்சத்திற்கும் அதிகமாக கூடுதல் கடன் மானியமில்லாத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். பயனாளிகளின் கடன் கணக்கில் வட்டி மானியம் வரவு வைக்கப்படும். இதனால் வீட்டுக் கடனின் அளவும், மாதத் தவணைப் பணத்தின் அளவும் குறையும்.

இந்த வகையின் கீழ் கட்டப்படும் வீடுகளின் தரைப்பரப்பு பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 30 சதுரமீட்டராக இருக்க வேண்டும். குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு 60 சதுரமீட்டர்.  இந்தத் தரைப்பரப்பு அதிகரிக்கும்பட்சத்தில் இந்தத்திட்டத்தின் கீழ் ஆதாயம் பெறும் தகுதியை பயனாளிகள் இழந்துவிடுவர்.

துப்புரவுப் பணியாளர்கள்,  பெண்கள் (விதவைகளுக்கு முன்னுரிமை), தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை தரப்படும். இவர்களும்கூட பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாகவோ அல்லது குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ இருத்தல்  வேண்டும்.

ஏற்கத்தக்க விலையில், கூட்டு முயற்சியில் வீட்டுவசதி

இந்தத்திட்டம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வீடு ஒன்றிற்கு 1.5 லட்சம் என்ற விகிதத்தில் நிதி உதவி தருகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / நகரங்கள் போன்ற வெவ்வேறு அமைப்புகளின் கூட்டு உழைப்பில் வீடுகள் உருவாக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகியோருக்கு வீடுகள் கலந்து கட்டப்படும். இத்தகைய திட்டத்தில் கட்டப்படும் வீடுகளில் குறைந்தபட்சம் 35% வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கானதாக இருக்க வேண்டும். ஒரு ஏற்பாட்டில் குறைந்தபட்சம் 250 வீடுகள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய நிதி உதவி கிடைக்கும்.

பயனாளி தனி வீடு கட்டுவதற்கான மானியம்

இந்த உதவியைப் பெறவிரும்பும் பயனாளி ULBக்களை அணுக வேண்டும். தேவைப்படும் போதுமான நிலம் தங்கள் பெயரில் இருப்பதற்கான ஆவணங்களைத் தரவேண்டும். இத்தகைய பயனாளிகள் குடிசைப் பகுதிகளிலோ, குடிசைப் பகுதிகளுக்கு அப்பால் வசிப்பவர்களாகவோ இருக்கலாம். மறுமேம்பாடு செய்யப்படாத குடிசைப் பகுதி வீடுகளிலுள்ள பயனாளிகள் இதன் கீழ் பயனடையலாம். இத்தகையவர்களுக்கு கச்சா வீடுகள் இருக்க வேண்டும்.

மத்திய அரசு தரும் உதவிப்பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாநில / யூனியன் பிதேச அரசுகளால் சேர்ப்பிக்கப்படும்.

ஆதாரம்:  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்.

3.11818181818
நெவிகடிஒன்
Back to top