பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்

பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் (பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு பெண்கள் போதிய சத்தான உணவின்றி நலிந்துள்ளனர். சரிபாதி பெண்கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார். சத்துக்குறைபாடு உள்ள பெண்கள், குறைவான எடையுள்ள குழந்தைகளையே பிரசவிக்கின்றனர். ஒரு குழந்தை கருவூறும் போதே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டால்,  அதன் வாழ்நாள் முழுவதுமே அந்தப்பாதிப்புத் தொடர்கிறது. அந்தக் குறையை எந்த நிலையிலும் நிவர்த்திக்கவும் முடியாது. சமூகப்பொருளாதார காரணங்களால், ஏழ்மையான நிலையில் உள்ள பெண்கள் பிள்ளைப்பேற்றுக்கு  முந்தைய நாள்வரையிலும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. அதேபோல, குழந்தையைப் பெற்றுவிட்டதும் கூடிய சீக்கிரத்திலேயே கடுமையான உடல் உழைப்பைத் தரவேண்டிய வேலைகளுக்குப் போகிறார்கள். குழந்தை பிறப்பிற்குப் பின் மீண்டும் தாயின் உடல்நிலை இயல்பான நிலைக்குத்  திரும்புவதற்கு முன்பாகவே கடுமையான வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதனாலும் பெரிதும் உடல் நலிவு மோசமாகிறது. அத்தோடு, குழந்தைகளுக்கும் போதிய காலம் வரை அவர்களால் தாய்ப்பால்  புகட்ட முடிவதில்லை.

பிரதமரின் தாய்மை வந்தனத்  திட்டம் (PMMVY) என்பது பெண்களுக்குப் பேறுகாலப் பயன்கள் தரும் திட்டமாகும். 2013 ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டத்தின் படி, நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நோக்கம்

ஏழைத் தாய்மார்கள் முதலாவது பிள்ளைப் பேற்றுக்கு முன்னும், பிள்ளைப் பேற்றுக்குப் பின்னும் போதிய ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக, அவர்கள் வேலைக்குப் போகாமல் இருப்பதால் ஏற்படும் பண இழப்பை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. இதனால் கருவுற்ற பெண்களுக்கும்,  பாலூட்டும் பெண்களுக்கும் ஓரளவு ஆரோக்கியமான நிலை உருவாகிறது.

பயனாளிகள்

மத்திய, மாநில அரசு வேலைகளில் அல்லது பொதுத்துறை நிறுவன வேலைகளில் இருக்கின்றவர்களைத் தவிர, ஏனைய கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.

2017 ஜனவரி முதல் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு முதல் குழந்தையைப் பெறுகின்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும்

கருக்கலைவு அல்லது குழந்தை இறந்து பிறந்தால்:

இந்தத்திட்டத்தின் கீழ் ஒரே ஒருமுறைதான் நிதி உதவியைப் பெறமுடியும்.

தவணைகளாக வழங்கப்படும் நிதி உதவி, கருக்கலைவு அல்லது குழந்தை இறந்து பிறந்ததன் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டால் மீதியுள்ள தவணைகளை அடுத்த குழந்தை பிறப்பின் போது பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து சிலகாலம் கழித்து இறந்துவிட்டாலும், ஒரே ஒரு முறை பயன் பெறும் இத்திட்டத்தில் ஏதாவது தவணைகள் பாக்கி இருந்தால் மட்டும், அடுத்த  குழந்தைப் பிறப்பின் போது, நிபந்தனைகளையும் தகுதியையும் நிறைவேற்றினால், பெற்றுக்கொள்ளலாம்.

அங்கன்வாடிப்  பணியாளர்கள், ஆஷா(ASHA) பணியாளர்களும் நிபந்தனைகளை நிறைவு செய்யும்பட்சத்தில் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

பயன்கள்

  • மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.5000/- வழங்கப்படும். கருவுற்றப் பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்து கொண்டதும், முதல் தவணையாக ரூ.1000/- வழங்கப்படும். கருவுற்ற காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனைக்காவது வந்தவர்களுக்கு, ஆறாவது மாத கர்ப்பகாலத்தின் போது,  இரண்டாவது தவணையாக ரூ.2000/- தரப்படும். குழந்தை பிறந்த பிறகு, அதனைப் பதிவு செய்து,  BCG, OPV, DPT,  ஹெப்படிடிஸ் B ஆகிய தடுப்பூசிகளின் முதலாவது தவணையைப் போட்ட பிறகு உதவித் தொகையின் மூன்றாவது தவணையான ரூ.2000 தரப்படும்.
  • பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறவர்கள், மருத்துவ மனைகளில் பிள்ளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) வின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயையும் பெறலாம்.

பதிவுசெய்யும் முறை

  • தாய்மை வந்தனத் திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுள்ளவர்கள் கருவுற்றதும், அங்கன்வாடி மையம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் சென்று பதிய வேண்டும்.
  • படிவம் 1-A எல்லா விவரங்களையும் நிரப்பி, தேவையான ஆவணங்களுடன், கருவுற்ற பெண் மற்றும் அவளது கணவனின் கையொப்பங்களுடன் சம்பந்தப்பட்ட மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனின் ஆதார் எண், பெண்ணின் வாங்கி கணக்கு எண், யாரேனும் ஒருவருடைய கைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக தரப்படவேண்டும்,
  • நிர்ணயிக்கப்பட்ட படிவங்களை அங்கன்வாடி மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் மகளிர்-குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
  • பதிவு செய்வதற்கும், முதலாவது தவணை நிதி உதவியைப் பெறுவதற்கும், தாய்-சேய் பாதுகாப்பு அட்டையின் (MCP card) நகல், பெண் மற்றும் கணவனின் அடையாளச் சான்று, வங்கிக்கணக்கு அல்லது அஞ்சலகக்கணக்கு எண் விவரம் ஆகியவற்றோடு, படிவம் 1-A நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இரண்டாவது தாவணி நிதிஉதவியைப் பெற, கர்ப்பம் தரித்த  ஆறாவது மாதத்தில், தாய்-சேய் பாதுகாப்பு அட்டையில் குழந்தைப்  பிறப்பிற்கு முந்தைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விவரங்களைப் பதிந்து, அதன் நகலுடன், படிவம் 1-B ஐ நிரப்பித் தரவேண்டும்.
  • மூன்றாவது தவணை நிதி உதவியைப்பெற, குழந்தையின் பிறப்பினைப் பதிவு செய்த சான்றின் நகல், குழந்தைக்கு முதலாவது தவணை தடுப்புசி போட்ட விவரங்கள் கொண்ட தாய் - சேய் பாதுகாப்பு அட்டையின் நகல் ஆகியவற்றுடன், படிவம் 1-C ஐ நிரப்பித்தர வேண்டும்.
  • தாய்மை வந்தனத் திட்டத்தின் கீழ் பணப்பயன் பெறத்தகுதி இருந்தும் பதிவு செய்யாமல் விட்டிலிருந்தாலும்,  நிதிஉதவியைப் பெற வழி உண்டு. அப்படிப் பதிவு செய்யாதவர்கள் கருவுற்ற நாளில் இருந்து ஒன்பது மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் குழந்தை பிறந்த பின்னர் ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதாரம் : http://wcd.nic.in/node/712776

3.09523809524
நெவிகடிஒன்
Back to top