பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / ஆசிரியரின் பண்புகள் – ஓர் பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆசிரியரின் பண்புகள் – ஓர் பார்வை

ஆசிரியரின் பண்புகள் குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

நல்ல ஆசிரியர், தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். தேசத்தை வடிவமைப்பவர், வரலாற்றை உருவாக்குபவர், மனிதனை மனிதனாக்குபவர், தேச எல்லைகளைக் கடந்து உலக உணர்வை வளர்ப்பவர், நாகரிகத்தைப் பேணிக்காத்து வரும் தலைமுறைக்கு அளிப்பவர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்பவர் ஆசிரியர்.

 • சூழ்நிலையை ஆளுந்திறன்
 • கற்பனைத்திறன்
 • ஆளுமைத்திறன்
 • சுயகட்டுப்பாடு
 • ஊக்கமுடைமை
 • சுய ஆய்வு
 • கூட்டுணர்வு மனப்பான்மை
 • தன்னொழுக்கம்
 • உடல்நலம்
 • சமுதாய உணர்வு
 • நேர்மை
 • குழந்தைகளிடம் அன்பு
 • தலைமைப் பண்பு
 • பணி மீது ஈடுபாடு
 • சிறந்த அறிவு
 • அறிவுத் தாகம்

ஆகிய பொருத்தப்பாடுகள் அமையப் பெற்றவராகவும் திறந்த மனம் படைத்தவராகவும், ஆக்கபூர்வமான தகவல் தொடர்பாளராகவும், நன்மை நாடுபவராகவும் அமைதல் வேண்டும். குழந்தைகளை எழுச்சியூட்டி ஆர்வங்களை வளர்த்து உறுதியான எண்ணங்களை தோற்றுவிக்கின்றனர். குழந்தைகளுக்குக் கற்றல் வழியாக மகிழ்ச்சியைப் பரப்பி, தன் மனப் புதையல்களை, அறிவுச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொள்கிறார். அறிவைப் புத்தகங்களிலிருந்து பெறலாம்; ஆனால் பிறரை நேசிக்கும் பண்பை நேரிடையான தொடர்பு வழியாக மட்டுமே பெற முடியும். ஆசிரியரைத் தவிர வேறுயாரும் இதற்கு மாற்று கிடையாது. தனக்குத் தானே அரசனாகவும், மனித சமுதாயத்திற்குப் பணியாளராகவும் சேவகனாகவும் இருப்பவர் ஆசிரியர் ஒருவரே” என்று ஹென்றி வேன் டியூக் (Henry Van Duke) கூறியுள்ளார்.

குழந்தைகளின் கல்வியில் முக்கிய அங்கம் வகிப்பவர் ஆசிரியர். கல்விமுறையின் வெற்றி தோல்வி ஆசிரியரைப் பொறுத்தே அமைகின்றது. ஆசிரியர்கள் சிறந்த கல்விப் புலமையாளர்களாவும், தேர்ந்த பயிற்சிகள் பெற்றவர்களாகவும், உயிரோட்டமான அறிவுடன் தொழிலில் ஆர்வம் மிக்கவர்களாகவும், விளங்கி விருப்பமுடன் பழகி குழந்தைகளிடம் அன்பும், பரிவும் காட்டிக் கல்வி வெற்றி பெறத் துணை செய்ய வேண்டும்.

கல்விமுறையின் வலிமைமிக்க சக்தியாகத் திகழ்பவர் ஆசிரியர். ஆசிரியர் இல்லாத கல்வி, ஆன்மா இல்லாத உயிர், இரத்தமும் தசையும் இல்லாத எலும்புக்கூடு; உட்பொருள் இல்லாத நிழல் (Shadow Withoutsubstance) போன்றது. ஆசிரியர் தன் மனிதப் பண்புகளைக் கொண்டு, சமூக சீர்த்திருத்தவாதி என்ற அடிப்படையில், குழந்தைகளிடையே மனிதத்தன்மையையும், சமூக மாற்றத்திற்கான பண்புகளையும் வளர்க்க வேண்டும்.

முற்காலத்தில், பெற்றோர்கள் தமது குழந்தைகள் முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறுவதற்கு, உறுதியாகவும் நம்பிக்கையாகவும் ‘குரு'விடம் ஒப்படைத்தனர். ஆசிரியர்களும், எவ்வித பலனும் எதிர்ப்பார்க்காமல், தம்முடைய அறிவை விற்பனைப் பொருள் போலன்றி, சுய ஈடுபாட்டுடன் கொடையாக வழங்கி வந்தனர்.

உறுதிப்பாடு - வரையறை

“ஒரு தொழிலில் அல்லது நம்பிக்கையில் ஒவ்வொரு தனிநபரும் வெளிப்படுத்தும் சுயமுயற்சியின் அளவே உறுதிப்பாடு’ - மார்சியா (1967)

“தனது சுய விருப்பங்களை முன்னிறுத்துவோரை விட, பிறர்மீது அக்கறையும், அர்ப்பணிப்பு உணர்வும், பணியின் மீதுள்ள ஆழ்ந்த பற்றும் உடைய ஆசிரியரை உறுதிப்பாடு மிக்கவர்” என்று எலியட் மற்றும் கிராஸ்வெல் கூறுகின்றனர்.

பணி விருப்புக்கான ஒர் அடையாளமாகவும், மகிழ்வினை அளிக்கும் ஒர் உந்துதலாகவும் ஆசிரியர் உறுதிப்பாடு அமைகிறது.

வேத காலத்தில் ஆசிரியர் உறுதிப்பாடு என்பது குருவின் அர்ப்பணிப்பு, உபாசனை, சமர்ப்பணம், சத்தியம் போன்ற உன்னதத் தன்மைகளாகக் கருதப்பட்டன.

ஆசிரியர் உறுதிப்பாடு - சிறப்பியல்புகள்

 • கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான எண்ணமும், செயலும்
 • கற்றல் தேவைகளைப் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் ஆற்றல்
 • கண்டறியப்பட்ட கற்றல் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் செயல் ஆர்வம்
 • எழுச்சி சார்ந்த உயர் பண்புகளை உருவாக்குவதற்கான செயல் ஆர்வம்.
 • குழந்தைகள் பால் அக்கறை
 • மனசாட்சியுடன் தனது பங்கு மற்றும் பொறுப்புணர்வைச் செயல்படுத்துதல்.
 • கண்ணியமான தொழில் நோக்கு

மாற்றத்திற்கான தேவை மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, ஆசிரியர் தமது பணிப்பாங்கினை மாற்றிக் கொண்டு, புதிய கருத்துகளுக்கேற்ப தமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொண்டு, புதிய சமூகத்தை உருவாக்கும் பெரும் பணியினை ஆற்றிட ஆசிரியர் உறுதிப்பாடு மிகவும் அவசியமாகும்.

முக்கிய மாறுதல்கள்

 • பாடம் நடத்துபவர் கற்றல் நிகழ்வுகளுக்கு ஏதுவாளர்
 • தகவல் தொடர்பாளர்
 • குழந்தைகளின் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்
 • புதிய உத்திகளை நாளும் தேடிப் புகுத்துபவர்
 • கவர்ச்சியற்ற வகுப்பறைச் சூழலை ஆர்வமும், ஈடுபாடும் மிக்க கற்றல் களமாக மாற்றி அமைக்கும்
 • அன்பால் அகிலத்தை வெல்லுவதில் நம்பிக்கை உள்ளவர்

ஆசிரியர்கள் பின்வருவனவற்றிற்குத் தயாராக இருக்க வேண்டும்.

 • பிள்ளைகளைக் கண்காணித்தல் மற்றும் அவர்களோடு இருத்தலை விரும்புதல்.
 • சமூக கலாச்சார, அரசியல் சூழ்நிலையில் குழந்தைகளைப் புரிந்து கொள்ளுதல்.
 • கருத்துக்களை ஏற்கத் தயாராகவும், எப்போதும் கற்க விருப்பமுள்ளவராகவும் இருத்தல்.
 • பாடப்புத்தகங்களில் இருக்கும் பொருளாக அறிவைக் கருதாமல், கற்றல் - கற்பித்தல் முறையாலும் சுய அனுபவத்தாலும், விவாதித்தும் கருத்தேற்றமடைந்து கட்டமைப்பு செய்து கொள்வது அறிவு எனப் புரிந்துகொள்ளுதல்.
 • சமுதாயத்திற்குப் பொறுப்புள்ளவராக இருந்து நல்ல உலகைப் படைக்க முயலுதல்.
 • பாடப்பொருளறிவைப் பள்ளிக்குத் தொடர்பு படுத்திக் கற்பித்தல்.
 • கலைத்திட்ட வடிவமைப்பில், செயல்திட்டங்களை இணைத்து அனுபவ அறிவாக்குதல் மற்றும் பாடப்புத்தகங்களை நன்கு ஆராய்தல்.

கற்போர் சார்ந்த ஆசிரியர் உறுதிப்பாடு

 • கற்போரின் அறிவுசார்ந்த உறுதிப்பாடு.
 • கற்போரின் பரஸ்பர உறவு சார்ந்த உறுதிப்பாடு.
 • கற்போரின் உடல்நலம் சார்ந்த உறுதிப்பாடு.
 • உளவியல் சார்ந்த உறுதிப்பாடு.
 • கற்போரின் குடும்பச் சூழல் சார்ந்த உறுதிப்பாடு.

பாடப்பொருள் அறிவு மற்றும் ஆசிரியர் உறுதிப்பாடு

 • பாடக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தி ஆசிரியர் உறுதிப்பாடு செயல்பாடுகளை வடிவமைத்தல்.
 • பொருளுடன் திரும்பக் கூறுதல்.
 • கண்மூலம் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளல்.
 • சொற்களை வெளிப்படுத்தும் வேகம்.
 • மொழி, குரல் வளம்.
 • கற்றல்,
 • கற்பித்தல் துணைக் கருவிகள் பயன்படுத்தல்.
 • அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல்.
 • சக ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
 • பாட இணைச் செயல்பாடுகள்.

அடிப்படை நன்னெறிகளில் ஆசிரியர் உறுதிப்பாடு

"தற்போது கல்வியிலும், சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள பல கேடுகளுக்கும், குறைபாடுகளுக்கும், அதனால் வாழ்வில் ஏற்பட்டுள்ள இடர்களுக்கும் காரணம், மக்கள் மனதில் அறநெறிப் பண்புகள் மறைந்ததுதான் என்றும், அதற்கு ஒரே தீர்வு பண்பு மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளை வாழ்வின் தொடக்கத்திலிருந்து வழங்க வேண்டியது அவசியம்" என திரு.டி. பிரகாசம் கல்விக்குழு வலியுறுத்தியுள்ளது.

வளர்க்கப்பட வேண்டிய நன்னெறிகள் ஆசிரியர் ஒவ்வொருவரும் உயிரோட்டமுள்ள சமுதாயத்தின் உறுப்பினர்கள். அவர்களிடம் காணப்பட வேண்டிய நன்னெறிகள் அவர் வாழும், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்றனவாகவும், சமுதாய முழுமைக்கும் பயன்படுவனவாகவும், தரமிக்கனவாகவும், பொருந்தக்கூடியவையாகவும் அமையவேண்டும்.

நமது பொதுவான பண்பாட்டு மரபு :

 • மனித சமத்துவத்தை உறுதிப்படுத்தல்.
 • மக்களாட்சி.
 • சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல்.
 • சமூகத்தடைகளை அகற்றுதல்.
 • சிறுகுடும்ப நெறிகளைப் பின்பற்றுதல்.
 • அறிவியல் மனப்பாங்கு.
 • சமயச் சார்பற்ற நிலை.
 • சமாதான சக வாழ்வு.
 • சமத்துவம்.
 • தேசிய ஒருமைப்பாடு.

நன்னெறியை வளர்ப்பதில் ஆசிரியர் பங்கு

குழந்தைகள் கல்வியின் மூலம் தன்னுடைய அறிவு, உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்கின்றனர். ஆசிரியர், குழந்தைகள் அனைவரையும் சமுதாயத்தின் உறுப்பினராக மாற்ற வேண்டிய உண்மை, அறிவு, கடுமையான உழைப்பு, நேரம், தூய்மை, உடல் நலம், பிறர் பற்றிய அக்கறை, சகவாழ்வு, அமைதி - பண்புகளை வளர்க்க முக்கிய பங்கு ஆற்ற வேண்டும்.

சமுதாயம் சார் உறுதிப்பாடு

இன்றைய குழந்தைகளே வருங்காலத்தில் சிறந்த குடிமக்களாக - சமுதாயமாக உருப்பெறுகிறார்கள். சமுதாய ஒத்துழைப்பின்றி எப்பள்ளியும் இயங்க, வளர முடியாது. சமுதாய முன்னேற்றத்திற்கும் வாழ்க்கைச் சூழல் மாற்றத்திற்கும் ஆசிரியர் தாமாகவே முன்வந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சமூக அமைப்பை மேம்படுத்த உதவ வேண்டும்.

ஆசிரியர் பணிக்கடன் விழைவு

ஒருவர் தன் கடமை மற்றும் பொறுப்புக்களைத் தன் நிலையிலிருந்து எவருடைய உந்தத்திற்கும் காத்திராமல், சுணக்கமின்றிச் செயல்பட்டு அனைவருக்கும் நிறைவை வழங்கும் வகையில் தன்னார்வத்துடன் விழைந்து கடனாற்றுவதே பணிக்கடன் விழைவாகும். அமெரிக்க கலைக் களஞ்சிய விளக்கப்படி, கல்வியில் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிக்குழுக்கள், பள்ளிநிர்வாகிகள், அரசு அமைப்புக்கள், பொதுநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நிறைவளிக்கும் வகையில் கடமை செய்வதே பணிக்கடன் விழைவு ஆகும்.

மேக்லானில் (1988) என்பவர் பணிக்கடனை (அ) தனிநபர் பணிக்கடன் (ஆ) நிறுவனத்தின் பணிக்கடன் என இரு வகைகளாகப் பிரித்துள்ளார்.

அ. தனிநபர் பணிக்கடன்

ஒர் ஆசிரியர் தன்னுடைய தொழில்சார் செயல்பாடுகளை விருப்பு வெறுப்பின்றி தானே, நிர்ணயித்துக் கொண்ட தர உறுதித் தன்மையோடு ஒப்பிட்டு நிறைகுறைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற தொடர்பணி மேற்கொள்வதே பணிக்கடனாகும்.

நிறுவனத்தின் பணிக்கடன்

நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் / பயனாளர்கள் / சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய அனைத்துக் கடமைகளையும் நீக்குப்போக்கின்றிக் கடமைபாட்டுடன் செய்துமுடிக்க இயக்கமுறுவதே நிறுவனத்தின் பணிக்கடனாகும். நிறுவனத்தின் பணிக்கடனை மூன்று கூறுகளில் பிரித்தாயலாம்.

 • மாணவர் சார் பணிக்கடன்.
 • பெற்றோர்சார் பணிக்கடன்.
 • சமுதாயம் சார் பணிக்கடன்.

பணி உறுதிப்பாடுள்ள ஆசிரியரின் குணநலன்கள்

 • பள்ளியின் இலக்கு, தொலைநோக்கு (Vission & Mission) இவற்றை அடைவதில் தன்கடனாற்றத் தாமே பங்கேற்பவர்.
 • பள்ளியின் ஒரு அங்கமாகத் தன்னை ஆட்படுத்திக் கொள்வார்.
 • பள்ளியின் குறைபாடுகளைப் பிறர் சுட்டிக்காட்டும் போது ஏற்றுக்கொள்வார்.
 • முன்னேற்றமடைந்த பள்ளிகளின் தரத்துடன் தம் பள்ளியை ஒப்பு நோக்கி முயலுவார்.
 • தனது நிறுவனமும், தானும் முன்னிலைப் பெற வேண்டும் என்னும் நோக்கோடு, ஈடுபாட்டோடு பணியாற்றுவார்.

முடிவுரை

ஒர் ஆசிரியர், பல நிலைகளிலும், மாணவர்களை, சமுதாயத்தை உருவாக்குவதில் உறுதிப்பாடு உடையவராகத் திகழ வேண்டும். ஆகவே ஆசிரியர் சமூகப் பொறியாளராக (Social Engineer), காவல் காக்கும் தோட்டக்காரராக, களநிபுணராக, குருவாக, இரண்டாம் பெற்றோராக, முன்னோடியாக, பாதுகாவலராகச் செயல்படுகிறார் என்பதை நாம் உணர்ந்து நம்மை அத்தகு தகுதிகளுக்குப் பாத்திரர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

3.11111111111
M. பன்னீர் செல்வம் Aug 01, 2020 06:52 PM

தகவல் மிகவு அருமை, ஆசிரியர்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

நற்றமிழ் Jul 26, 2020 04:25 AM

சிறந்த கருத்து

வெற்றிக்குமார். Mar 04, 2020 07:11 AM

ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போல் அமைந்தது அன்று. பணம் தேவைதான். ஆனால் பணி செய்ய விரும்புபவர் முதலில் பெற வேண்டிய பண்பு. அற்பணிப்புணர்வு ஆகும். தன் மாணவர்களின் முன்னேற்றமே ஆசிரியரின் நோக்காக அமைய வேண்டும்.
நீங்கள் கற்பிக்கும் பாடத்தில் உங்களின் அறிவு சிறந்து விளங்க வேண்டும். பாடப்பொருளறிவை வளர்த்துக் கொள்ளவே வாழ்நாள் கல்வி தேவை. படிப்பதற்குத் தயங்கக் கூடாது.
முழு கட்டுரை தேவையிருப்பின் தொடர்பு கொள்ளவும்.

இரா. தாரணி May 10, 2019 05:21 PM

முடிவுரை இருந்தால் நன்றாக இருக்கும்

வெங்கடேசன் இரா Apr 18, 2019 10:51 AM

நான் ஏழு வருடமாக ஆசிரியர் பணி செய்து வருகிறேன்.... ஆனால் மன நிம்மதி இல்லை காரணம் பல..... மேற்கண்ட கட்டுரை படித்தேன் பிறகு உண்மையாகவே ஆசிரியர் பணி மை விரும்புகிறேன்.... நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top