பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்

ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஆசிரியர்கல்வி, கல்விமுறையுடன் இணைந்ததோர் அங்கமாகும். நம் இந்திய நாட்டிலுள்ள பள்ளிக் கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு ஆசிரியர் கல்விக்கான திட்டங்களை தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் (NCTE) நிர்ணயம் செய்து வருகின்றது. பள்ளிகளில் மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என்ற நிலைகள் உள்ளன. இதற்கு ஏற்றவாறு ஆசிரியர் கல்வியும் பல நிலைகளில் இருத்தல் அவசியமாகும். கல்வியின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் ஆசிரியர், தன் தொழில் அறத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நம் நாட்டில் உள்ள ஆசிரியர் கல்வித் திட்டங்களை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

ஆசிரியர் கல்வி

ஆசிரியர் கல்வி வெறும் பணிப் பயிற்சியன்று. ஒர் ஆசிரியர் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் மிகச் சிறப்பாக நிறைவேற்றத் தேவையான மனப்பான்மை, பண்புநலன்கள் அறிவு, திறன்கள், ஆற்றல் ஆகியவற்றைப் பெற வழிவகுப்பதே ஆசிரியர் கல்வி ஆகும். ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியரின் மனப்பான்மைகள் (Attitudes), பழக்க வழக்கங்கள், நுட்பதிட்பங்கள், ஆளுமைப் பண்புகள், கண்ணியம் போன்றவற்றை வடிவமைக்கும் இயல்பான அணுகுமுறைகள் ஆகும். “ஆசிரியர்கல்வி என்பது, மழலையர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிப்பதற்குத் தேவையான திறன்களைப் பெற்றவர்களாக மனிதர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சிகள், ஆய்வுகள் அல்லது பயிற்சிகள் எனலாம். இதில் முறைசாரா கல்வி, பகுதி நேரக் கல்வி, வயது வந்தோர் கல்வி மற்றும் தொலைத்தூரக் கல்வியும் இடம்பெறும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் நெறிமுறைகள் (1993) விவரிக்கின்றன.

 • பணி முன் ஆசிரியர் கல்வி என்பது மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சிகள் (Programmes) ஆகும்.
 • பணியிடை ஆசிரியர் கல்வி என்பது பணியிலுள்ள ஆசிரியர்களின் / பணி சார் திறன்களை மேம்படுத்த இடையிடையே அளிக்கும் பயிற்சிகள் ஆகும்.

பணிமுன் ஆசிரியர் கல்வி

நமது பள்ளிக் கல்வி அமைப்பில் மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி என்ற நிலைகள் காணப்படுகின்றன. ஆசிரியரின் கற்பிக்கும் முறையும் திறனும் ஒவ்வொரு நிலைக்கும் வேறுபடும். அந்நிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியக் கல்விக்குழு 1882 (Indian Education Commission) தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கெனத் தனித்தனி ஆசிரியர் கல்விப் பயிற்சிகள் வழங்க அங்கீகாரம் அளித்தது. 1995 -ல் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) புதுடெல்லியில் நிறுவப்பட்டு ஆசிரியர் கல்விச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒர் அங்கமாகப் பின் வரும் ஆசிரியர் கல்விப் படிப்புகள் நம் நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் கல்விப் படிப்புகள்

மழலையர் கல்விச் சான்றிதழ் - படிப்பு

மேல்நிலைக் கல்வியை முடித்தவர்கள் இதில் சேர்வதற்கு தகுதிவாய்ந்தவர்கள் ஆவர். இதன் காலம் இரண்டு ஆண்டுகளாகும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இக்கல்வியை வழங்குகின்றன. இச்சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் நம் நாட்டில் செயல்பட்டு வரும் கிண்டர்கார்டன் பள்ளிகள், மாண்டிசோரிமுறைப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் திட்டத்தின் கீழுள்ள நர்சரி பள்ளிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேட்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடிப் பள்ளிகள், மழலையர் கல்வி மையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்களாக நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

ஆசிரியர் கல்விப்பட்டயச் சான்றிதழ் (D.T.Ed)

மேல்நிலைக் கல்வியை முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்வதற்கு தகுதிவாய்ந்தவர்கள் ஆவர். இதன் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இப்பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் (DIETS), ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (TTIs) ஆகிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் கல்விப் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களாக தொடக்கப் பள்ளிகளில் நியமனம் பெறத் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

இளநிலைக் கல்வியியல் (B.Ed)

இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இளநிலைக் கல்வியியல் (B.Ed) படிப்பில் சேருவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆவர். இளநிலைக் கல்வியல் படிப்புமுழுநேரக் கல்வியாகும். இளநிலைக் கல்வியலுக்கான காலம் ஒராண்டாகும். பல்கலைக் கழகத்திலுள் கல்வியல் துறையிலும் இளநிலைக் கல்வியல் பயிற்சி பெறும் வாய்ப்புள்ளது.

திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Open Univesity) வழியாக பட்டப் படிப்பு முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் பள்ளியில் கற்பித்தலை மேற்கொண்டுள்ள பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பகுதிநேரமாக இரண்டு ஆண்டுகள் இளநிலைக் கல்வியியல் கல்வி வழங்கப்படுகின்றது. இத்தகுதி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் எனப்படுவர். எம்.எ. எம்.எஸ்.ஸி. எம்.காம், தகுதியுடன் பி.எட். படித்தவர்கள் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியரிகள் எனப்படுவர்.

முதுகலைக் கல்வியியல் (M.Ed)

இளநிலைக் கல்வியியல் (B.Ed) பட்டம் பெற்றவர்களே இதில் சேருவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இளநிலைக் கல்வியியல் கல்வி வழங்கும் நிறுவனங்களிலும் கல்லூரிகள் மற்றும் தொலைத் தூரக் கல்வி முறையிலும் முதுநிலைக் கல்வியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைகள் நிகழ்த்தப்படுகின்றன. முதுநிலைக் கல்வியியல் முடித்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களாக D.I.E.T. BRC, மற்றும் T.Tl-களில் பணியாற்றவும் வாய்ப்பு உடையவர்கள் ஆவர்.

ஆய்வு நிறைஞர் பட்டம் (M.Phil.,)

முதுநிலைக் கல்வியியலில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் M.Phil., (Education)-ல் சேர தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். பல்கலைக் கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இத்தைகய கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படிப்பிற்கான குறைந்தபட்ச காலம் இரண்டு ஆண்டுகள். ஆசிரியர்கள் மற்றும் அசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்திக் கொள்ள இக்கல்வி உதவுகின்றது. ஆராய்ச்சியினை ஒரு மேலாய்வாளர் துணையுடன் மேற்கொள்ள வேண்டும். M.Phil முடித்தவர்கள் கல்வியல் கல்லுரிகளில் விரிவுரையாளராக பணிச் செய்யும் தகுதியுடையவர்கள் ஆவர்.

முனைவர் பட்டம் (Ph.D.)

எம்.ஃபில், படிப்பில் 55%. சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் முனைவர் கல்வியில் சேரத் தகுதி பெற்றவர்கள். இது முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பல்கலைக் கழகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற ஒரு மேலாய்வாளரைத் தேரிவு செய்து ஆய்வு மேற்கொள்வதற்கான ஒரு தலைப்பை முன்மொழிதல் வேண்டும். அந்தத் தலைப்பு பல்கலைக் கழகத்தினால் ஏற்புறுதி வழங்கப்பட்ட பின்னர் தன் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இதற்கான காலம் குறைந்தது 3 ஆண்டுகளாகும்.

ஆசிரியர் பணியிடைக் கல்விப் பயிற்சிகள்

ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஆசிரியர்களின் பணியிடைப் பயிற்சி ஆகும். தொடர்ந்து கற்றல், கற்றுக்கொண்டே இருத்தல், அறிவைப் புதுப்பித்தல் ஆகியன ஆசிரியர்களுக்கு மிகமிக அவசியம். புதியன கற்றலுடன் பயிற்சியும் அவ்வப்போது வழங்கப்பட்டால் ஆசிரியர் பணியை செவ்வனே செய்ய ஊக்கமும் உறுதியும் கிடைக்கும்.

பணியிடைப் பயிற்சியின் நோக்கங்கள்

 • ஒவ்வொரு ஆசிரியரிடமும், பணிசார் திறமையுடன் செயலாற்றி, அரசின் முக்கியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்கை வளர்த்தல்.
 • ஆசிரியர்கள் தங்கள் தொழில் சார் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளுவதற்கான வாய்ப்புக்களை அவரவர் தேவைகள், தகுதிகள், திறமைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு வழங்குதல்.

பள்ளியுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நிறுவனங்கள்

பள்ளி என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட சமுதாய நிறுவனமாகும். சிறந்த கல்வியால் சீரிய சமுதாயம் அமைவதற்கும், சீரிய சமுதாயத்தால் வீறியக் கல்வி மேம்பாடு அமைவதற்கும் அடிப்படையாக விளங்குவது பள்ளிகளே ஆகும். பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் இணக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

 • பெற்றோர் ஆசிரியர் கழகம்
 • கிராமக் கல்விக்குழு
 • மகளிர் மன்றம் / இளைஞர் மன்றம்
 • ஊராட்சி ஒன்றியம்/மக்களாட்சி உறுப்பினர்கள்
 • வட்டார வளமையம் / பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம்
 • மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம்
 • சமூக நலத்துறை
 • நல வாழவுத் துறை
 • தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

இணைப்புகளின் அவசியம்

“அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை அடைவதற்கு சமுதாயத்திலுள்ள பிற நிறுவனங்களின் இணைப்பு பள்ளிச் சேர்க்கைக்கு ஆயத்தம், பள்ளிச் சேர்க்கை / பள்ளி வருகை, தக்க வைத்தல், பள்ளிச் சூழல் நலம் பேணுதல், பள்ளி வசதிகள் மேம்பாடு, பள்ளி ஆசிரியர் நியமனம், விளையாட்டுகள், பள்ளி விழாக்கள் நடத்துதல் கல்விக் கொடைகள் ஆகிய பின்வரும் தேவைகளை நிறைவேற்ற உதவும்.

ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு அமைப்புகளின் பங்கு

பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை உறுதிசெய்வதற்காக இந்தியாவில் அவ்வப்போது தீட்டப்படும் பல்வேறு கல்வித்திட்டங்கள் யாவும் தொடக்கக் கல்வியின் தரத்தை வலியுறுத்துகின்றன. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் குறிக்கோள்களின்’ படி அனைவருக்கும் வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியை வழங்குவது” ஆசிரியரின் தலையாய கடமை ஆகும். "தரம் என்பது பள்ளிக் கல்வியில் மட்டுமின்றி ஆசிரியர் கல்வியிலும் இன்றியமையாததாகும். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நம் நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல கல்வி நிறுவனங்களும், குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

கல்வி அமைப்புகள்

ஆசிரியர் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் அமைந்துள்ள நிறுவனங்கள்

 1. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT) (National Council for Educational Research and Training)
 2. தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் (NCTE)
 3. மண்டலக் கல்வி நிறுவனங்கள் (RIEs)
 4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககம் (DTERTSCERTSIE) (Directorate of Teacher Education, Research & Training)
 5. மாநிலக் கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் (Insultitute of advanced Studies in Education)
 6. மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனம் (DIET) (District Institute of Education & Training)
 7. பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC). (Cluster Resource Center)

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT)

1961 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பள்ளிக் கல்விப் பணிகளுக்காக இது நிறுவப்பட்டது. கல்வி அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராகச் செயல்பட்டு கல்வித் தொடர்பான அறிவுரைகளை வழங்குவதற்காக (NCERT) இக்குழுமம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இக்குழுவானது தேசிய அளவில் கல்வியின் தர மேம்பாட்டுச் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

 • கல்வியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள கல்வி அமைப்புகளை ஒருங்கிணைத்து ஊக்கம் அளித்தல்.
 • பணிமுன் பயிற்சிகள் மற்றும் பணியிடைப் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக உயர்மட்டப் பயிற்சிகளைத் திட்டமிட்டு வழங்குதல்.
 • நாடு முழுவதிலும் உள்ள கல்வி ஆராய்ச்சி, ஆசிரியர் பயிற்சி, நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் விரிவாக்கக் (Extension) கல்வியை வழங்குதல்.
 • இந்நிறுவனம் மாநில கல்வித்துறைகளுடனும், பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து கல்வியை மேம்படுத்துதல்.
 • கலைத்திட்டம் வடிவமைத்தல்,
 • பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் வெளியிடுதல்

போன்ற பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் (NCTE)

1995-ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் புதுடெல்லியில் நிறுவப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி ஆசிரியர் கல்வியின் தரத்தை நிலை நிறுத்துவதை தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் பணிகளாவன:

 • ஆசிரியர் கல்விக்குத் தேவையான கள ஆய்வுகள் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிடுதல்
 • மத்திய, மாநில அரசுகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் தகுந்த திட்டங்களுக்குப் பரிந்துரை செய்தல்
 • நம் நாட்டின் ஆசிரியர் கல்வி வளர்ச்சியைக் கண்காணித்து உதவிபுரிதல்.
 • ஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கலைத்திட்டம் தயாரித்து நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பின்பற்றச் செய்தல்.
 • ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் தொடங்க அங்கீகாரமளித்தல்.
 • ஆசிரியர் கல்வித் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.

மண்டலக் கல்வி நிறுவனங்கள்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் கீழ் நாடு முழுவதிலும் ஐந்து மண்டலக் கல்வி நிறுவனங்கள் மைசூர், போபால், புவனேஸ்வர், ஆஜ்மீர், ஷில்லாங் ஆகிய தலைமையிடங்களில் இருந்து இயங்குகின்றன. இவையாவும் மண்டல அளவில் ஆசிரியர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

 • ஆசிரியர் கல்வியில் பணியிடைப் பயிற்சிகளை வழங்கும் மாநில மற்றும் மாவட்டக் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனையும் ஒத்துழைப்பும் வழங்குதல்.
 • ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவியல், கணிதப் பாடங்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குதல்.
 • கல்வித் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளுதல், போன்ற பணிகளை மண்டலக் கல்வி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்ககம்

இவைகள் சில மாநிலங்களில் எஸ்.ஐ.இ, எஸ்.சி.இ.ஆர்.டி. என்றும் தமிழ்நாட்டில் டிட்டி, இ.ஆர்.டி. என்றும் பெயரிடப்பட்டுள்ளன. இவை தத்தம் மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வி, ஆசிரியர் கல்வி, முறைசாரக் கல்வி மற்றும் கல்வியியல் மேம்பாட்டு ஆராய்ச்சி துறைகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைப் புகுத்தி, நிர்வகிக்கின்றன.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் பணிகள்

 • கல்வியின் பல நிலைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்.
 • மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், கல்வித் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஒருங்கிணைத்தல்.
 • தேசியக் கல்விக் கொள்கையின் (NPE) பரிந்துரைக்கிணங்க ஆசிரியர்கட்கு திறமையும் தொழில்நுட்பமும் நிறைந்த கல்வியைப் பல்வேறு பயிற்சிகளின் மூலம் வழங்குதல்.
 • பள்ளிக் கல்வி மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டத்தைத் திருத்தியமைத்து அதனையொட்டிப் பாட நூல்களைத் தயாரித்தல்.
 • கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் கற்பித்தல்
 • கருவிகளான பாடப்புத்தகம், கையேடுகள், பயிற்சிக் கையேடுகள், ஒலி, ஒளி நாடாக்கள் தயாரித்து ஆசிரியர்களுக்கு வழங்குதல்.
 • மக்கள் தொகைக் கல்வித்திட்டம், பள்ளிகளில் வளரிளம் பருவத்தினர்களுக்கான கல்வித்திட்டம், பள்ளி மேம்பாட்டுத்திட்டம் போன்றவற்றையும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் வாயிலாகச் செயல்படுத்துதல்.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (DIET)

மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் என மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

பணிகள்

 • தரமான பணிமுன் பயிற்சி அளித்தல்.
 • புதிய அணுகுமுறைகள் அடிப்படையிலான பணியிடைப் பயிற்சிகளை வழங்குதல்.
 • மாவட்டம் முழுமைக்குமானக் கல்வித் தேவைகளைத் திட்டமிடல்
 • கலைத்திட்டம் தயாரித்தல்.
 • கல்வி நுட்பவியலைப் பயன்படுத்தி, பணி அனுபவத்தின் தரத்தை மேம்படுத்துதல்.
 • ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம் அவ்வப்போது நடைமுறைப்படுத்தும் திட்டங்களை மாவட்டங்களில் செயல்படுத்துதல்.
 • செயல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

இப்பணிகள் யாவற்றையும் மாவட்ட ஆசிரியர்கல்விப் பயிற்சி நிறுவனத்திலுள்ள ஏழு கிளைகள் (Branches) அம்மாவட்ட அளவில் செவ்வனே செயல்படுத்த வேண்டும்.

வட்டார வளமையம் (BRC)

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் வட்டார அளவில் கல்விச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக இம்மையங்கள் அனைத்து மாவட்டத்திலுமுள்ள ஒன்றிய அளவில் இயங்குகின்றன. இம்மையங்கள் தங்கள் விவகார எல்லைக்குள் உள்ள பள்ளிகளின் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்தும் செயல்களில் பிற கல்வி அமைப்புகளுடன் (DIET, DTERT, IASE, கல்லூரிகள்.) இணைந்து செயல்படுகின்றன.

பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC) (Cluster Resource Centre)

வட்டார வளமையங்களின் கீழ் செயல்படுகின்ற ஒவ்வொரு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கும் 50 ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் செயல்படுகின்றது. வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையங்களின் எண்ணிக்கை அமையும்.

பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வுமையங்களின் பணிகள்

 • கருத்தாய்வு மையத்தின் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளித்தல்.
 • ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி மேற்கொள்ள வழி காட்டி அதன் முடிவுகளை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்.
 • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் மேற்கொண்ட புதிய அணுகுமுறைகளைப் பிற ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூற வாய்ப்பளித்தல்.
 • பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளைக் கண்டறிந்து திட்டமிட்டுப்பயிற்சி அளித்தல்.

கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள்

உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இது நிறுவப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டும் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கான கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் திருவல்லிக் கேணியிலும் ஆண்களுக்கான கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சைதாப்பேட்டையிலும் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களின் கீழ் ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்), குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்), கோவை (கோவை மாவட்டம்), வேலூர் (வேலூர் மாவட்டம்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய இடங்களில் கல்வியியல் கல்லூரிகள் (CTES) செயல்பட்டு வருகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top