பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / ஆசிரியர் கல்விக் கட்டமைப்பு - ஓர் அறிமுகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆசிரியர் கல்விக் கட்டமைப்பு - ஓர் அறிமுகம்

ஆசிரியர் கல்விக் கட்டமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

“எந்த ஒருநாடும் அந்நாட்டின் ஆசிரியர்களின் தகுதிக்கும் மேலாக உயர்ந்துவிடமுடியாது” என்பதோர் பொன்னுரை. எனவே ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அதன் ஆசிரியர்களிடமே விடப்பட்டுள்ளது. ஆசிரியர் உயர அவர்தம் நோக்குயர, போக்குயர, வாக்குயர நாடே உயரும் எனவே ஆசிரியர்களைக் கல்வியால், பயிற்சியால், தகுதியால், திறனால், தொழிலறத்தால் உயர்த்தியே எந்நாடும் உயர முடியும்.

இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்ளேதான் தீர்மானிக்கப்படுகின்றது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப உலகில் மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிப்பது கல்வியாகும். இக்கல்வி தரமானதாகவும், நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைய முகவர்களாகச் செயல்படுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனும், மிக்குயர்ந்த தரமும், செறிந்த பண்பு நலன்களும் பெறத் துணை செய்வது ஆசிரியர் கல்வியாகும். மாணவர் பெறும் தரமான கல்வி ஆசிரியர்கள் பெறும் விளைவுமிக்க தரமான கல்வியையே சார்ந்தமையும்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” - திருக்குறள்.

வருங்கால நற்குடிமக்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியரிடமே உள்ளது. மாணவர்களுக்கு பாடப்பொருளைக் கற்பிப்பதோடு மாணவரின் உள்ளுணர்வை அறிதல் (UnderStanding insight), ஆளுமையை வளர்த்தல், தகவல்களைச் சேகரித்தல், தொடர்பு படுத்திப் பார்த்தல், கற்றதைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். மாணவர் தம் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளை ஆய்ந்து, அலசிப் பார்த்துத் தீர்வு காண்பதற்கான திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். நற்சிந்தனைகளையும், ஆர்வத்தையும் வளர்த்து மாணாக்கர்களிடையே நாட்டுப்பற்று பரிணமிக்குமாறு செய்வதில் ஆசிரியர் உறுதுணையாக நிற்றல் வேண்டும்.

பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய கடமைகளை எவரும் முழுமையாகப் பட்டியலிட்டுக் கூறிவிட முடியாது. ஆசிரியரின் முக்கியத்துவமும், செல்வாக்கும், பயனும், வழிக்காட்டுதலும் எங்கு முடிகிறது என எவரும் வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஆசிரியரின் பணி பன்முகப் பரிமாணங்களை உடையது.

ஆசிரியர்களின் சிறப்பு

- ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஒரு முன்னோடி, வழிகாட்டி, ஒரு மாற்றத்தின் பிரதிநிதி, ஒரு செயல் ஆய்வாளர், அரசின் கல்வித்திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துபவர், ஒரு நேர்மறைச் சிந்தனையாளர், ஒரு நல்ல மனிதர்.

கல்வி என்பது வெறும் தகவல்களையும், அனுபவத்தினையும் வழங்கும் வெற்றுச்செயலல்ல. ஒரு முழுமையான வாழ்க்கைக்கு உதவும் வகையில் பழக்க வழக்கங்களை, மனப்பாங்குகளையும், திறன்களையும் வளர்ப்பதும் கல்வியாகும். அத்தகு சிறப்புமிக்க கல்வியை அளிக்கும் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியர்கள், மற்றவர்க்கு கற்பிக்கும் வகையில் முன்மாதிரியாகத் தாம் அக்குணங்களைப் பெற்றுப் பணியில் ஈடுபட வேண்டும். தாம் கற்பிக்கும் குழந்தைகள்பால் அக்கறையும், அன்பும் கொண்டு ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் முனைப்புடன்நின்று வழிநடத்த வேண்டும்.

ஆசிரியர் ஒரு முன் மாதிரியாகத் திகழ வேண்டுமெனில் அவர் பின்வரும் குறைந்தபட்ச பண்புகளையேனும் பெற்று இருக்க வேண்டும்.

  1. திரண்ட ஆளுமைப் பண்புடையவராக இருத்தல்.
  2. மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருத்தல்.
  3. சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன் மிக்கவராயிருத்தல்.
  4. செய்யும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவராக இருத்தல்.
  5. சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளை நிலைநிறுத்திக் கொள்பவராக இருத்தல்.

ஆளுமைப் பண்பு

ஆசிரியர் தலைமைப் பண்புகள் உடையவராக இருத்தல் வேண்டும். காலந்தவறாமை, சீரியநடை, உடை, பாவனை, சொல்லில் தெளிவு, செயலில் பதற்றமின்மை, பேச்சில் கம்பீரம், உயரிய சிந்தனை போன்ற ஆளுமைப் பண்புகளுடன் இருக்க வேண்டும். அவர் மாணக்கர்களை ஒற்றுமையுடன் நல்வழியில் நடத்த வேண்டும். அவரது கண்டிப்பும் கனிவும் மாணக்கர்களை அவர் சொல்படி கேட்டு நடக்க வைக்கும்.

மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர்கள் குழந்தைகளின் மூன்றாவது பெற்றோர். அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியரிடம் தான் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஆசிரியர்கள் அவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தர வேண்டும். குழந்தைகள் ஒருநாளின் பெரும்பகுதியை ஆசிரியருடன் தான் கழிக்கின்றனர். பள்ளி, மாணாக்கருக்கு இப்பருவம் சமூதாய வாழ்வின் ஆரம்பம் என்பதால், பாடப்பொருள் தவிர பிற கற்றுக் கொள்ள வேண்டியவைகளும் அதிகம் உள்ளன. மாணக்கர்களின் திறமைகள் வளர்க்கப்பட வேண்டியிருப்பதால் ஆசிரியர் அவர்களைப் பற்றிய அக்கறை மிகவும் கொண்டவராகவும், அவர்களிடம் பரிவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் அவசியமாகும். பரிவும் ஒத்துணர்வும் ஆசிரியரின் வெற்றிக்கு வகை செய்யவல்லவைகளாகும்.

சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன்

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், மாணாக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் ஒரு பெரிய படைப்பின் ஆரம்ப நிலை. பல புதிய கோட்பாடுகளின் மையக்கருத்தை மட்டும் அது கற்பவருக்கு அளிக்கின்றது. ஆகவே ஒரு முன்மாதிரி ஆசிரியர் புதுமையான கருத்துகளை எடுத்துரைக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் ஏற்ற பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பணி ஈடுபாடு

கல்வி என்பது கற்போர், கற்பிப்போர், சமூகச் சூழ்நிலை இவை மூன்றிற்கும் இடையே ஏற்படும் செயல்பாடாகும். கற்றல், கற்பித்தல் என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அற்புதச் செயல்பாடு. இதில் ஆசிரியர் ஒரு செயல்வீரராகச் செயல்பட்டு மாணவர்களின் மதிப்பைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் பணிமனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். கற்பித்தலில் உண்மையான ஆர்வம் கொண்டவராக கற்போரின் மனநிலைக்கு இறங்கி வந்து அவர்களது உணர்வுகளுடன், தம்முடைய உணர்வை இணையச் செய்து, புகட்ட வேண்டும். அவர்கள் வாழ்வு வளம்பெற நாளும் உதவும்போது அவர் ஒரு முன்மாதிரி ஆசிரியராகிறார்.

மாணவர்களிடம் சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளைக் கொண்டிருத்தல்

ஆசிரியர் - மாணவர் உறவுமுறையை வலுப்படுத்த வேண்டுவது கல்விச் சூழலில் மிகவும் தேவையானதாகும். ஆசிரியரும் மாணாக்கரும் யாதொரு தடையுமின்றிக் கற்றவற்றைப் பற்றி தமக்குள் மனம் விட்டு விவாதிக்க வேண்டும். மாணாக்கர்களைச் சுதந்திரமாகக் கேள்விகள் கேட்கத் தூண்ட வேண்டும். ஆசிரியர் அவற்றுக்கெல்லாம் தக்க விடையளித்து மாணவர்களின் ஐயங்களைப் போக்க வேண்டும். கற்பிக்கையில் மக்கள் வாழ்க்கையிலிருந்தே பல செய்திகளையும் எடுத்துக் காட்டுகளையும் கூறி விளக்கம் அளிக்க வேண்டும். மாணாக்கரது அறிவு வேட்கையைத் தூண்டி வடிகாலாக்கி ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

ஆசிரியர் தன் மாணாக்கரின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மாணாக்கரின் பெற்றோர்களுடன் மாணாக்கரது முயற்சி, வளர்ச்சி பற்றிக் கலந்தாலோசித்து மனிதநேயம் வளர்ப்பவராகத் திகழவேண்டும்.

ஆசிரியர் - ஒரு தொழில் வல்லுநர்

“தொழில் வல்லுநர்” என்பதற்கு உயர்ந்த பண்புகளும், ஆழ்ந்த புலமையும், பணியில் திறமையும், மிக்கவர் எனப் பொருள் தருகிறது கலைச்சொல் அகராதி. ஆசிரியர் பணியில் இருப்பவர் பல்துறைப்புலமையோடு, விரிந்த பார்வையும், அறிவு நாட்டமும் கொண்டிருத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டுபவராக இருத்தல் வேண்டும். நாட்டுப் பற்று மிக்கவராக இருத்தல் வேண்டும். சமூதாயத்தில் ஆசிரியர் பணி அனைவராலும் மதிக்கப்பட்டு வருகின்றது. பொறுப்புகள் மிகுந்த ஆசிரியர் - ஒரு தொழில் வல்லுநராகத் திகழ கீழ்க்காணும் நேர்மறைப் பண்புகளையும் பெற்றிருத்தல் அவசியம்.

ஆசிரியர் - பொறுப்புணர்வு மிக்கவர்

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியர் ஆவார். குழந்தையின் வளமான எதிர்காலத்திற்குப் பள்ளியில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியருடையதாகும். மாணாக்கர்களை வழிநடத்தும் ஆசிரியர், ஆசிரியையாகத் தன்னுடைய பள்ளியில் ஆற்றவேண்டிய கடமைகளை பல்வேறு கோணங்களில் நன்கு உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

ஒரு பள்ளியின் தலையாய பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் உள்ளது. அவர் பிற ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அலுவலர். ஒரு பள்ளியின் நலனுக்கு உதவி ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தலைமையாசிரியருக்கு மிகவும் தேவை. பள்ளியின் ஒழுங்கு, கட்டுப்பாடு, அதன் முழு வளர்ச்சியில் ஆசிரியர்களின் ஈடுபாடு தலைமையாசிரியருக்குத் தேவை. பள்ளியின் வளர்ச்சியை மனத்தில் கொண்டு, உதவி ஆசிரியர்கள், தலைமையாசிரியர் தமக்கு வழங்கிய பணிகளை முழுமனதுடன் செய்தல் வேண்டும். அங்கணம் ஒத்துழைப்புடன் பணிபுரிதல் ஆசிரியருக்கு மதிப்பும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

மாணாக்கர்களின் எதிர்காலம் ஆசிரியர் கையில் என்பதை நாம் நன்கறிவோம். ஒரு வகுப்பில் பல்வேறு குடும்பப் பின்னணிகளையுடைய மாணாக்கர்கள் ஒருங்கே அமர்ந்திருப்பர். அவர்களது வாய்ப்புகளும் வளர்ப்புச் சூழ்நிலைகளும் வெவ்வேறானவை என்பதை வகுப்பிலிருந்து பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பொருளுடன் மனம் ஒன்றாத நிலையிலும் அவர்கள் இருக்கலாம். பாடப்பொருள் அனைத்து மாணாக்கர்களையும் சென்றடையாமலும் போகலாம். ஒரு சில மாணாக்கர்களே, ஆசிரியரின் எதிர்பார்ப்பின் படி பதில் அளிப்பர். ஆசிரியர் சரியான பதில் அளிக்காதவர்களை ஒதுக்கிவிடாமல், அவரவர் முன்னறிவு நிலைகளை அறிந்து, அனைவரும் கற்றலில் முழுமைபெறத் துணை செய்ய வேண்டும். தனி மாணாக்கரின் புரிந்து கொள்ளும் திறமையை அறிந்து அனைவர்க்கும் உகந்தவாறு கற்பித்தல் முறைகளை ஆசிரியர் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தன் பணியிலும் தலைமையாசிரியரிடத்திலும் மாணவர்களிடத்திலும் பொறுப்புணர்வு மிக்கவராகப் பணி செய்ய வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.

ஆசிரியர் விருப்பு வெறுப்பற்ற நடுநிலை மனத்தை உடையவர்

நீங்கள் பள்ளியில் பயின்றபோது உங்கள் ஆசிரியர் நடுநிலைமையாளராக விருப்பு, வெறுப்பற்றவராக பாரபட்சமற்றவராக எவ்வாறெல்லாம் திகழ்ந்தார் என்பதற்கான உண்மைச் சம்பவங்களை ஆசிரிய மாணவர்களை தனித்தனியே குறிப்பிடச் செய்து அவற்றை மற்ற மாணவ ஆசிரியர்களிடம் விவரித்து அதன் மூலம் தாங்கள் அடைந்த பண்புகளைக் குறிப்பிடச் செய்து மாணவர்களை ஆர்வமூட்டுக.

ஆசிரியரின் பார்வையில் குழந்தைகள் அனைவரும் சமம். உலகில் மனிதர் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்தும் வேறுபடுகின்றனர். அதே போன்று மாணாக்கர்களிடையேயும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். வேறுபாடு மனித இயல்பு என்பதையும், மாணாக்கர்கள் அனைவரும் ஆசிரியரிடம் நம்பிக்கையுடன் வந்தவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  • நன்றாகப் படிப்பவன், சொன்னதைச் செய்பவன், அழகானவன் என்றெல்லாம் வேறுபாடு காட்டாமல் அனைவரும் சமம், அனைவரும் என்னுடைய மாணவர்கள் என்ற ஒரு பால் கோடாமை உணர்வை வளர்த்துக்கொள்வார்.
  • கற்றல் நிகழ்வில் அனைத்து மாணாக்கர்களுக்கும் ஏற்படும் சிரமங்களைப் பாரபட்சமின்றிக் களைய முயற்சி எடுத்துக் கொள்வார்.
  • அனைவரும் அடைவுத் திறனைப் பெற கவனம் செலுத்துவார்.
  • திறனடைவில் பின்தங்கிய மாணாக்கர்களை இனங்கண்டு ஊக்குவித்து அவர்களும் தேர்ச்சியடைய வழி செய்வார்.

ஆசிரியர் - தன்னம்பிக்கை உடையவர்

ஆசிரியர் பயிற்சி மாணவர்களைச் செம்மையாக வழிநடத்தி, இனிய சாயல்கள், திடசிந்தனை, அர்ப்பணிப்புணர்வு, தன்னார்வம், நாட்டுப்பற்று, விளைவிருப்பம் ஆகிய பண்புநலக் கூறுகளுடன் வளர்த்தாக்க வேண்டும்.

“தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு போன்றது. மனம் பணி நெடுகிலும் சோர்வடையாமல் இருக்க மருந்து போன்றது”.

இதமான செயல்பாட்டால் வகுப்பில் மாணாக்கர்களிடம் ஈடுபாட்டினை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரையும் ஒரு உயரிய குறிக்கோள் அமைத்து வாழப்பழக்க வேண்டும். வகுப்பறைகளில் அடிக்கடி உயர் குறிக்கோள்களை நினைவுப்படுத்தி அதனை அடையும் வேட்கையை வளர்க்க வேண்டும். குறிக்கோளை அடையும் வேட்கையில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மாணாக்கரிடம் வளருமாறு செய்ய வேண்டும்.

தொடர்ந்து புதியன கற்கும் ஆர்வமுடையவர் - ஆசிரியர்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்றாலும் மாறிவரும் சூழ்நிலையில், பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும் மாற்றங்கள் பெறுவதால், புதியனவற்றைக் கற்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். எத்தகைய கற்றல் சந்தர்ப்பத்தை எதிர்க் கொள்ளும் பொழுதும், அறிவு, திறன், மனப்பாங்கு முதலியவற்றில் ஒருங்கிணைந்து முழுமைத்திறன் அடையவேண்டும். கற்கும் ஆற்றல், வயது வளர்ச்சியுடன் வளர்ந்து கொண்டே வருகிறது.

கற்றல் ஒருவரிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து கற்றல் பேரளவில் விரும்பந்தக்க நடத்தை மாற்றங்களை ஒருவரிடையே ஏற்படுத்துகின்றது. அந்த மாற்றம் நடத்தை மாற்றமாகவோ, சிந்தனை மாற்றமாகவோ இருக்கக் கூடும். கற்றல் வழியாக தற்புலக் காட்சி வளம் பெறும். அது புத்தாக்கத்தை (Reorientation) ஏற்படுத்துகின்றது.

ஆசிரியர் - கற்பிக்கும் பொருள் பற்றிய தெளிந்த ஞானம் உடையவர் கல்வி என்பது கொடுக்கப்பட்ட பாடப்பொருளில் தேர்ச்சி அடைவது மட்டுமல்ல. மாணாக்கர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட வாய்ப்புகளை பள்ளியில் அமைத்துத் தருவது கல்வியாகும்.

ஒரு நல்லாசிரியர் தொடர்ந்து கற்கும் பண்போடு அன்றாடம் தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தலும் வேண்டும். கற்பிக்கும் பொருளின் உட்கருத்து: நடைமுறையில் அதன் செயல் ஆக்கம்; பின்விளைவு ஆகியவற்றைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். அவ்வாறு தொடர்புபடுத்திக் கற்பிக்கும் போது மாணாக்கர்கள் கற்கும் பொருளின் உண்மையை எளிதில் அறிந்து கொள்வார்கள்.

ஆசிரியர் - மாற்றத்தின் முகவர்

அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது. முறைசார்க் கல்வியும், எழுத்தறிவுக் கல்வியும் பரவலாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் பள்ளியில் கல்வி பயிலாமல் குழந்தை உழைப்புக்குச் செல்லும் குழந்தைகளும் நம்மிடையே உள்ளனர். பள்ளியில் இன்னமும் சேர்க்கப்படாத பெண் குழந்தைகளும் இருக்கவே செய்கின்றனர்.

ஆசிரியர் சமூக மாற்றத்தை நன்கு திட்டமிட்டு வழிநடத்த தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கனுப்பும் பெற்றோர்களின் மனப்பான்மையை மாற்றி வேலைக்குச் செல்லும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு செய்ய வேண்டும். படிப்பை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கு அரசின் கல்வி நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மீண்டும் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டம் பற்றிக் கூறி, அதன் மூலம் பயனுறுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிரியர் ஒரு முகவராக இருந்து செயலாற்றி சமூகமாற்றத்துக்கு உதவ வேண்டும்.

ஆசிரியர் - செயல் ஆராய்ச்சியாளர்

வகுப்பறைச் சூழல் ஒவ்வொரு நாளும் புதிர் பொதிந்த ஒன்றாகும். ஒரே பாடப் பொருள் வெவ்வேறு மாணாக்கர்களிடம் வெவ்வேறு பிரதிபலிப்பைத் தரும். புதிய புதிய வினாக்கள் மாணாக்கர்களிடமிருந்து எழும்போது, புதிய புதிய கருத்துக்கள் ஆசிரியருக்கு கிடைக்கும். அதே நேரத்தில் பாடப்பொருள் மாணாக்கர்களிடம் சேரும் விதத்தில் பலதரப்பட்ட சிக்கல்கள் எழும். ஆசிரியர் சிக்கல்களை அதன் தன்மைகளைக் கொண்டு பகுத்தறிந்து தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை ஆராய்ந்து உடனுக்குடன் அச்சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண முற்படுகையில் ஆசிரியர் ஒரு செயல் ஆய்வாளராக செயல்படுகிறார். “வகுப்பறையிலோ, பள்ளிச் சூழலிலோ அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முடிவு காண ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ எடுத்துக் கொள்ளும் முறையான விஞ்ஞான அடிப்படையிலான செயல்முறை செயலாய்வு என்பதாகும்”

அரசின் கல்வித் திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உறுதி செய்வதற்காக இந்தியாவில் அவ்வப்போது பல்வேறு கல்வித் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. கல்வித்திட்டங்கள் யாவும் மாணாக்கர்களை மையமாக வைத்தே தீட்டப்பட்டுள்ளன.

அரசுக் கல்வித் திட்டங்களும் நலத்திட்டங்களும் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மாணாக்கர்களைச் சரிவரச் சென்றடைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் உதவ வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

3.31034482759
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top