பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / குழந்தைகளுக்கு கதை சொல்லும் முறை – ஓர் கண்ணோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கு கதை சொல்லும் முறை – ஓர் கண்ணோட்டம்

குழந்தைகளுக்கு கதை சொல்லும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சமூக அறிவியல் கற்பிப்பதற்கு பல கற்பிக்கும் முறைகள் உள்ளன. அவை முறையே விளையாட்டு, நடிப்பு, கேள்விக் கேட்டல், சுற்றுப்புற சூழ்நிலை முறை, வாய்மொழி, பாடப்புத்தகம், செயல்திட்டம், கண்டறிதல், குழு போதனை, திட்டமிட்டுக் கற்றல், புதிர் தீர்த்தல், உரையாடுதல், கதை கூறுதல் ஆகும். கதைத்தல் என்பது நிகழ்வுகளை, செய்திகளை எடுத்துக்கூறுவது அல்லது உரைப்பது ஆகும்.

கற்பனை, படைப்பாற்றல், உடல், மணவயது, விருப்பு ஆகியவற்கேற்ப பாடப்பொருளில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் முறையே கதை சொல்லும் முறையாகும்.

கதைகளின் வகைகள்

 • உண்மைக்கதைகள்
 • கட்டுக்கதைகள்
 • புராணக் கதைகள்

உண்மை கதைகள்

பறவைகள், விலங்குகள், செடி, கொடிகள், வானம், பூமி, கோள்கள், இயற்கை அமைப்புகள், மனிதனின் உணவு, உடை, உறவிடம், வாழ்க்கை நிலைகள் ஆகியவை தொடர்பான உண்மையான நிகழ்வுகளை, கதையாக்கி கூறுவது உண்மை கதைகளாகும். மக்கள் வாழும் இடங்கள், காலநிலை, தட்பவெப்பநிலை இயற்கை அமைப்புகளான ஆறு, குளம், ஏரி, கடல், ஆழி, மலைகள், பள்ளத்தாக்குகள், கண்டங்கள், அவற்றில் இயற்கை ஏற்படுத்தும் மாற்றங்கள், சீற்றங்கள், தொழில்கள், விளைச்சல் பயிர்கள், ஒவ்வொரு கால கட்டத்திலும் அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, எவ்வாறு வளர்ச்சி அடைந்தன என்பவற்றையும் மக்கள் வாழ்க்கை நிலைகளையும் உண்மைக் கதைகள் வாயிலாகக் கூற முடியும். மாணவர்களின் கற்பனையைத் தூண்டுவதாகவும், அறியும் அறிவை வளர்ப்பதற்காகவும், நினைவாற்றலைப் பெருக்கவும் கதைகள் உதவும்.

பாடப்பொருள்களை கதைகளாகக் கூறுதல்

நமது நாட்டு வீரர்கள், வீரச்செயல்கள், மரபுக் கதைகள், அரசர்கள் அவர்களின் ஆட்சி முறைகள், சீர்த்திருத்தங்கள், அவற்றினால் ஏற்பட்ட நன்மைகள், தீமைகள், நடப்புகாலத்திற்கு அவை அரசு செயல்களுக்கு எவ்வகைகளில் உதவுகின்றன என்பதை கூறுதல் மற்றும் விளைவுகளை அறிதல், போன்றவற்றால் நாட்டை எதிர் நோக்கியுள்ள சாவல்களை அறிய இயலும். 'நம்மால் முடியும்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். மனிதன் அன்று நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் இன்று ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள், பிறப்பு, இறப்பு, மக்கள் தொகை, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, உடல்நலம், சுத்தம், குடிமை, பண்பாடு, கதைகள் வாயிலாகக் கூறும்போது பராமரிப்பு, பாதுகாப்பு, அறிவியல்தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை கதைகளாகக் கூறப்படும்போது ஒவ்வொரு மாணவருக்கும் உண்மை நிலையை எடுத்து கூறுவதாகவும், கதை நிகழ்வுகள் மாணவர்களிடையே நடத்தை மாற்றத்தை உண்டு பண்ண உதவுவதாகவும் அமையும்.

கடல்வழிகள், புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வுகள், ஆய்வுப் பயணிகளின் வீரம், தன்னம்பிக்கை, அவர்கள் உலக மக்களுக்கும் தனது நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணி (உதாரணம் : மெகல்லன், டயஸ், வெஸ்புகி போன்றோரின் கண்டுபிடிப்புகள்) கற்பனைகளை தூண்டுவதாக அமையும். விண்ணிலிருந்து இறங்கும் போது செய்த உயிர்த்தியாகம் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, விண்ணில் சாதனை புரிந்திறங்கிய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் பற்றி கதைகள் மாணவர்களின் அறிவையும் ஆர்வத்தையும் தூண்டுவதோடு அவர்களையும் பின்னாளில் சாதனைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. எனவே, உண்மைக் கதைகள் பாடத்தில் சிறந்த இடத்தைப் பெறுகின்றன எனக் கூறலாம்.

கட்டுக்கதைகள்

கட்டுக்கதைகள் என்பது இல்லாத ஒருவர், ஒரு பிராணி, காடு, இடம், ஊர், நாடு என்பதாகவும் அதில் நாம் பார்க்காத கேட்டறியாத செயல்களையும் கொண்டதாக இருக்கும். அதே போன்று உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்ட கட்டுக்கதைகள் உண்டு. இதில் கற்பனை, உருவகம், உவமானம், அழகிய கவிதை நடை அமைந்திருக்கும். உதாரணமாக “தரையில் குப்பையாய் கிடந்த வைர ஆபரணங்களை விண்ணின் மாதர்கள் மின்னல்களைக் குச்சிகளாக ஒடித்து அந்த வைரக் குப்பைகளை அள்ளினர்’ என்பது போலவாகும், மனிதன் கண்டிராத அசுரகண உருவங்கள், கூடு விட்டு கூடு பாய்தல், மந்திரங்கள், தந்திரங்கள் நிறைந்த கதைகளாக அமைந்திருக்கும்.

புராணக் கதைகள்

புராணக் கதைகள் மாணவர் அறிந்திராத மிகத் தொலைவிலுள்ள இடங்களையும், சமயம் சார்ந்த புராணங்களை பின்னணியில் கொண்டதாகவும், அக்கால அரசர்கள், அரசியலமைப்பை விளக்குவதாகவும் அமைந்துள்ளன. மனித அன்பு, பாசம், பக்தி, நட்பு, வீரம், இரக்கம் பற்றிய பண்புகளையும் கோபம், பேராசை, பிறர்க்குத் தீங்கு விளைவித்தல், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் கதைகள் சித்தரிக்கின்றன. மனித வாழ்வின் மிக உயரிய நோக்கம் இறைவனின் தாள்களைப் பணிவதே என்பதை மாணவர்கள் சமயம் சார்ந்த கதைகளின் வாயிலாக அறிய முடிகிறது. மனிதப் பண்புகளை வளர்த்துக் கொள்ள இவை உதவுகின்றன. புராணக்கதைககள் கூறும் கருத்தினை இன்றைய நடைமுறையிலும் நாம் காணலாம். உதாரணமாக இராமாயணத்தில் இராமர் இராவணணோடு போரிடும் காட்சியில் இராவணன் போரிடும்போது போர் ஆயுதம் உடைந்து ஆயுதமின்றி நிற்கின்றார். அப்போது இராமர் இராவணனிடம், "இன்று போய் நாளை வா" என்று கூறினார். போர்க்களத்திலும் பகைவரிடம் காட்டப்படும் பண்பிற்கு இந்நிகழ்ச்சி சிறந்த உதாரணமாகும்.

கதைகளில் படங்கள்

தொடக்க, நடுநிலைப்பள்ளி, மாணவர்களின் சமூக அறிவியல் பாடத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட பாடப்பொருளுக்கு ஏற்ப பின் வரும் தலைப்புகளில் சேகரித்தல்

 • படங்கள்
 • சுவரொட்டிகள்
 • தொடர் பட அட்டைகள்
 • ஒளிபுகும் தாளில் படங்கள்
 • படத்துண்டுகள்
 • ஒவியங்கள்
 • சிறுபடப்புத்தகம்

ஆகியவற்றை சேகரித்து, கதைச் சம்பவங்களில் மேல் ஆர்வமும் கவர்ச்சியையும் உண்டாக்கும் வகையில் பயன்படுத்தலாம்.

நில வரைப்படங்கள்

 • வரலாற்றுக் கதைகள் கூறும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள்
 • வழித்தடங்கள்,
 • மாநிலங்கள்,
 • கடல்கள்,
 • தீவுகள்,
 • காடு,
 • மலைகள்,
 • ஆற்றங்கரைகள்,
 • மலைத்தொடர்கள்,
 • வரலாற்றுப் போர்கள்,
 • சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள்,
 • முக்கியத் தலைவர்கள பிறந்து, வாழ்ந்த இடங்கள்,
 • மாநாடுகள், உடன்படிக்கை நிகழ்வுகள் நடந்த இடங்கள்,
 • அதிசயங்கள் எனக் கருதப்படும் பகுதிகள்.

நிழற்படங்கள்

 • பாராளுமன்றம்,
 • சட்டமன்றம்,
 • தேசிய, உள்ளூர் விழாக்கள்,
 • நாட்டின் முப்படைகள்,
 • சமுதாயச் சிற்பிகள்,
 • தேசியப்பாதுகாப்பு,
 • தேசத் தலைவர்கள்,
 • இயற்கை வளங்கள்,
 • வட்டார,
 • மாநில வாரியாக உள்ள நினைவுச் சின்னங்கள்

ஆகியவற்றை நிழற்படங்களாக சேகரித்து ஒரிடத்தின் நில அமைப்பு, முக்கிய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, அவற்றின் பின்னணி, முக்கியத்துவம் பற்றி படங்களைக் கொண்டு கதைகள் வடிவில் கூறுதல் அவை தொடர்பான நிகழ்வுகளை சேகரித்து நிழற் படங்களைப் பயன்படுத்தி அதில் உள்ள உத்திகளையும், குறியீடுகளையும் விளக்கிக் கூறுதல்.

தரைப்படம்

தரையில் வரைந்துள்ள தேசப்படத்தில் ஜீலம் நதிக்கரையில் அலெக்சாந்தரும், இந்திய மன்னரும், போரில் செய்த நிகழ்ச்சியைக் கூறி, மன்னர் புருசோத்தமனை "சேட்டக்" (Chetak) என்ற குதிரை நதிக்கு அப்பால், குதித்து அவரைக் காப்பற்றியது என்பதை கதையளவில் சுவையாகக் கூறி அந்நினைவாக இன்றும் இரு சக்கர வாகனங்களில் "சேட்டக்" என்ற பெயரை நாம் காண்பதையும் கூறி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தலாம். அலெக்சந்தரின் போர் படைகள் ஜீலம் நதியில் இறங்குவது போன்ற போலியான சத்தத்தை எழுப்பி தீப்பந்தங்களை எறிந்தனர். அதனை உண்மை என நம்பி போரஸ் (புருஷோத்தமன்) முன்னேறியபோது போரஸின் யானைப்படைகளை அலெக்சாந்தர் சிதறடித்தார். இந்நிகழ்சியை தரைப்படங்கள் வாயிலாகக் கூறும்போது மாணவர்கள் இதனை தங்கள் மனப்பார்வையிலும் கண்டு மகிழ்வர்.

படங்களை பயன்படுத்தும் முறை

 • சமூக அறிவியல் பாடம் கற்பித்தலுக்கான படங்கள், பாடத்தின் எல்லா நிலைகளிலும் (கற்றல் படிகளிலும்) பயன்படுத்தப்பட வேண்டும்
 • ஒரு பாடத்திற்குரிய படங்கள் மட்டும் கற்பித்தலுக்கு பயன்படுத்த வேண்டும்.
 • வரலாறு, குடிமையியல், புவியியல் பாடங்களில் உண்மை உணர்வைத் தூண்டி, அவற்றிற்கு விளக்கங்களைத் தர வேண்டும்.
 • ஏன்? என்ன ? எப்படி? எதற்கு? எவ்வாறு? என்ற வினாக்களுக்கு விடைபெறும் வகையில் படங்கள் அமைய வேண்டும்.
 • பயன்படுத்தப்போகும் படங்களுக்கு உரிய தலைப்புகள், விளக்கக்குறிப்புகள், காலவரிசை முறையில் அமைப்பது, உரிய வண்ணங்களைப் பயன்படுத்துவது உரிய கல்விப் பயனை அளிப்பதற்காகவும், மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் அமைப்பதற்கு, மாணவர்களை ஆசிரியர்கள் தயார் படுத்த வேண்டும்.

கற்பிப்பதில் ஆசிரியர் பங்கு

 • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கதைகளைக் கூறுவதற்கு வாய்மொழிக் கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
 • பாடப்பொருளுக்கு ஏற்றாற் போன்ற கதைகளை வடிவமைக்க வேண்டும்.
 • பாடப்பொருளுக்கு ஏற்றதாக இருப்பின் மரபுக்கதைகள், உண்மைக்கதைகள், புராணக்கதைகள், பத்திரிக்கைகளில் வரும் கதைகள் ஆகியவற்றைக் கூறலாம்.
 • ஆசிரியர், மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பொருள் பொதிந்த எளிமையான வார்த்தைகளால் கதையைக் கூற வேண்டும். கதைகள் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக அமைய வேண்டும்.
 • வருணணை, உவமை, ஒப்புநோக்கு, ஆகியவற்றுடன், கதாபாத்திரங்களின் உணர்வுகளை குரல் ஏற்ற, இறக்கம், சிரிப்பு, மகிழ்ச்சி, பாசம், பரிவு, நட்பு, வீரம், உறுதி ஆகியவற்றின் வாயிலாக ஆசிரியர் கூறும்போது பாடம் கவர்ச்சிகரமானதாக அமைகின்றது. ஆசிரியர் குறிப்பிட்ட கருத்து, சொல் கருத்து, பொது விதிகள் ஆகியவற்றைக் கூறும்போதும், நவரச உணர்வுகளைப் பிரதிபலிக்கும் போதும் வாய்மொழியில் குரல் ஏற்ற இறக்கத்துடன் விரல், கை, உடல் அசைவுகளைப் பயன்படுத்தி கற்பித்தலானது கதையில் வரும் பாத்திரங்கள் கதை கேட்பவர்களிடம் பேசுவது போன்ற இனிய அனுபவத்தை ஏற்படுத்தும். வில்லுப்பாட்டு, கதாகாலேட்சபம், பாடல் ஆகியவற்றில் இந்தியத் திருநாட்டின் சுதந்திர தியாகிகள் பற்றி கதைப் பின்னணியில் கூறுவது இத்திருநாட்டின் மீது பக்தியை வளர்க்கும்.

கதையின் அடிப்படைக்கூறுகள்

 • மொழி
 • சைகைகள்
 • இசை ஒலி
 • முகபாவங்கள்

ஆசிரியர் சொற்கள், வசனங்களுக்கு, எடுத்துக்காட்டாக வீரபாண்டிய கட்டபொம்பனின் "யாரிடம்” கேட்கிறாய் “கிஸ்தி’ என்ற வசனத்தையும் அசோகரின் கலிங்கப்போர் காட்சியில் "அன்பே உலகக்காட்சி, மக்கள் இன்பமே, மன்னன் இன்பம்" போன்ற சொற்கள் உள்ளடக்கிய வாசகங்களை மாணவர்களிடம் கூறி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

பலகுரல்களில் பறவை, விலங்கு, இடி, காற்று, மின்னல், மழை நவரச பாவங்களை குரல்களில் வேற்றுமைப்படுத்து உரத்தும், தாழ்த்தியும் ஒலி எழுப்புதல் ஆகியவை எடுத்துக்கூற வந்த கருத்துக்களை அதே உணர்வுடன் மனதில் பதிய வைக்க உதவுகின்றது. உடல் அசைவுகளின் மூலமாக எடுத்துரைக்கப்படும் சைகைகள் செயலை வெளிப்படுத்தல், உத்திரவிடல், கடமையாற்றல் ஆகியவற்றை வெளிக்கொணர்கிறது.

பல உணர்வுகளுடன் வெளிப்படுத்தும் முகபாவம் உரையாடலுக்கு வலிமையையும், பொலிவையும் அளிக்கும்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் கதைகளைக்கூறி அவை கூறும் செய்திகளை விவாதம், கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். உ.ம். இந்தியாவில் முதல் இந்திய சுதந்திரப்போராட்டம், அல்லது சிப்பாய் கலகம் பற்றிய நிகழ்வுகளைக் கதைகளாகக் கூறி - இது வெற்றியடைந்திருந்தால் என்ற தலைப்புகளில் மாணவர்களை கற்பனை செய்யக் கூறி கலந்துரையாடச் செய்யலாம். பாடப்பொருளை கதை முறையில் எடுத்துச் செல்லும்போது ஆசிரியர் வெளிப்படுத்தும் வீர உணர்வு, நாட்டுப்பற்று ஆகிறவற்றின் மூலம் மாணவர்களிடையே தேசபக்தியும் நாட்டின் பாதுகாப்பு, அமைதி பற்றிய சிந்தனைகளும் மேலோங்கும்.

ஆசிரியர் கடைபிடிக்க வேண்டியது

 1. 1 வயது / வகுப்புக்கு ஏற்ப தயாரித்தல்
 2. முகத்தை நேருக்கு நேர் பார்த்து கூறுதல்
 3. உணர்வுகள் / முக / உடல்பாவனைகளில் உரிய மாற்றங்களுடன் அளித்தல்
 4. ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகளைப் பின்னுதல்

சமூக அறிவியலில் உலகச் கலாச்சாரம் / பண்பாடு / சமுதாயம் / வாழ்வியல் / உலக வரலாறு, போர், சுற்றுச்சூழல் மாசுபாடு, பெண் முன்னேற்றம், உயிரினங்கள், மக்களை எதிர்நோக்கியுள்ள சவால்கள், மக்கள் வெடிப்பு, குடும்பப் பாரம்பரியம் அறிதல் ஆகியன கதை வடிவில் அமைக்கும் பொழுது தனிமனிதர் ஒவ்வொருவரும் பிரச்சனைகளை அறிந்து தீர்வுகள் காண வாய்ப்புகள் உருவாகின்றது.

கதைகள் எப்படி அமைய வேண்டும்?

எளிய உரையாடல், குறைந்த கதாபாத்திரம், மாணவர் நடத்தை மாறுதல், திறன் வளர்க்க உதவ வேண்டும். அன்பு, வீரம், அறம், நீதி, தன்னம்பிக்கை போன்ற மனித இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்க வேண்டும்.

கதைமுறையின் சிறப்பியல்புகள்

 1. உணர்வுபூர்வமானது
 2. பிரச்சனைகளை ஆராய்வது
 3. கற்றலின் நோக்கங்களை நிறைவேற்றுதல்
 4. சமுதாயத்தில் கடமை - உரிமை அறிதல்
 5. சாதி, மத, இன வேற்றுமைகளைக் களைதல்
 6. மகிழ்ச்சியை அளித்தல்.
 7. நகைச்சுவையை நல்குதல்
 8. கற்றல் ஆயத்தம் / பாடல் / நாடகம் திறன் வளர்த்தல்
 9. மொழி வளர்ச்சியை ஏற்படுத்துதல். கதை வழிக்கற்றல் ஒருகிணைக்கப்பட்டு ஊக்கப்படுத்துவது தவிர அனைத்து வாழ்வியல் திறன்களைப் பெறவும், நன்மதிப்புகளை (Values) பெறவும் உதவுகிறது.
 10. கதை சமூகவியல் கற்பித்தல் பொருளை சுவை மிகுந்ததாகவும், கவர்ச்சியாகவும், உயிரோட்டமுயைடதாகவும் மாற்ற வல்லது.
 11. கற்பனை கற்றல், படைப்புச் செயல்களை மாணவர்களிடம் வளர்க்க உதவுகிறது.
 12. கதை மாணவர்களை பண்பு மற்றும் ஆளுமை மிக்கவர்களாக மாற்றுகிறது.
 13. மாணவர்களின் சிந்தை களிக்கக் கூறப்படும் மரபு, புராண, உண்மை புனை, அயல்நாடு, வீரசாகசம், ஆய்வுத் தொடர்பான கதைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் கலாச்சார விழுதுகள். அவை நாட்டு மக்களின் விலையில்லா உயர்மதிப்பு பொக்கிஷங்கள் என்றால் மிகையாகாது.
 14. வரலாறு, குடிமையியல், புவியியல் கருத்துக்கள் உண்மை நிகழ்ச்சிகளை விளக்கும் வகையில் கூறப்படும் பொழுது அவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மாணவர்களிடையே உந்துதல் ஏற்படும்.
 15. எனவே, பழங்காலம், மத்திய காலம், நவீன கால மக்களின் வாழ்க்கை, சமூக, பொருளாதார அரசியல், சமய நிலைகளை ஒப்பிட்டுக்காணவும், அவற்றின் சிறப்புகளை அறியவும், இன்றைய காலத்தில் அவற்றின் மேம்பாடு காணவும் மாணவர்கள் முற்படுவர். மாணவர்களிடையே சிறந்த ஈடுபாடு, துணிவு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை வளர்க்கும்.

கதை முறையில் வினா வினாவுதலின் முக்கியத்துவம்

கதை ஒட்டத்தின் போது ஆசிரியர், மாணவர்களிடம், நடு நடுவே வினாக்களைக் கேட்பதால் கதாபாத்திரங்களிடையேயான உறவு, கதை நிகழ்ச்சிகள், உணர்வுபூர்வமான விளக்கங்களால் பாடத்தில் கவர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது.

மாணவர்களிடையே அவர்களின் இயல்புகள் வளர உதவி செய்கிறது. (உ-ம்) உண்மை, நேர்மை, வீரம், அழகுணர்வு ஆகியவற்றை மையமாக கொண்ட கதை நிகழ்ச்சிகள் நற்பண்புகளை விளக்குவதாக இருந்தால் அவை மாணவர்களிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மகாத்மா, நேரு, நேதாஜி ஆகியோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள், சமுதாய சீர்திருத்தங்கள், உள்ளூர், வட்டாரம், மாநில வரலாற்றுப் பின்னணியுடன் கதைகளாகக் கூறும்போது அவ்வப்போது எழுந்த பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை உள்ளுணர்ந்து செயலாற்றவும், நாட்டில் ஒவ்வொரு குடிமகனும், ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறியவும், அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் கதைகள் உதவும். ஆனால் இத்தகைய மாற்றம் வருவதற்கு ஆசிரியர் பெரும்பங்காற்ற கடமைப்பட்டுள்ளார்.

கலந்துரையாடல்கள் மற்றும் அவற்றினூடே எழுப்பப்படும் வினாக்கள் உண்மை நிலையை அறியவும், சூழ்நிலையின் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளவும் உதவும். ஆசிரியர் வினாக்கள் கேட்கும் போது மாணவர்கள் ஒவ்வொருவரும் கவனம் செலுத்தவும், உரையாடவும், தனது கருத்துக்களை எடுத்துக் கூறவும் உதவும் வகையில் வினாக்கேட்டல் முறையே பின் வருமாறு அமைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.

 1. ஆசிரியர் வினாவுதல் முழு வகுப்பும் பங்கு பெறுதல்
 2. ஆசிரியர் வினாவுதல் - இரண்டு வரிசைகள் அல்லது வகுப்பில் சிறு குழு பங்கு பெறுதல்
 3. ஆசிரியர் வினாவுதல் ஒரு மாணவர் பங்கு பெறுதல்
 4. மாணவர் வினாவுதல் மாணவர்கள் பங்கு பெறுதல்.

கதைமுறையில் மதிப்பீடு

மாணவர்களின் திறமைகள், ஆளுமை வளர்ச்சி ஆகியவை நேராக பாதையில் செல்வதற்கு கதைகள் உதவுகின்றன என ஜார்விஸ் என்ற அறிஞர் கூறுகின்றார். கதைகள் கேட்கும்பொழுது நம்மிடையே வாழ்ந்தவர்கள், முன்னோர்கள், இன்றைய தலைமுறையினர் ஆகியோரது செயல்கள், சாதனைகள் பற்றி அறிகின்றனர். அவற்றை இன்றைய நிலையில் ஒப்புநோக்கி காண்பதற்கும் முற்படுகின்றனர். தனி மனித மற்றும் நாட்டின் உயர்வுக்கும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை உணருகின்றனர்.

ஆசிரியர் எளிய நடையில் வரும் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப சொற்களை, வாக்கியங்களை உவமை, உருவகம் அல்லது வருணணையுடன் கூறுதல் பாடப்பொருளில் கவர்ச்சி ஏற்படுகின்றது.

கதைக்கேற்ற படங்கள், படத்தொகுப்புகள் கதை நடந்த காலத்தில் உள்ள அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிகளை விளக்குவதாக அமையும். இணைச் செயலாக படங்கள், வரைப்படங்கள், படத்தொகுப்பு தயாரிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றது. மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் மற்றும் தனி மாணவத்திறன்கள் வளர இவை உதவும். பாடப்பொருள் கதைகளாக மாற்றப்படுவதால் வெகுநாளைக்கு அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். விரும்பத்தக்க பண்புகள் மாணவர்களிடையே வளர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

முடிவுரை

வரலாறு, சுற்றுப்புறம் பற்றிய அறிவு, நினைவாற்றல், மனப்பயிற்சி, காரண காரியத் தொடர்பறிதல், சிறந்த குடிமக்களுக்கான பண்புகள், வரலாறு, புவியியல் நிகழ்ச்சிகளை ஒட்டிய முக்கிய இடங்கள், அவற்றின் முக்கியத்துவம், பழங்காலச் சாதனைகள், நடப்பில் உள்ள சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி அறியவும், தெரியவும், பெறவும், பாராட்டவும் கதைகள் வழியாக பாடப்பொருள்களை அளிப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

2.95833333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top