பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / பள்ளியில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளியில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு

பள்ளியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குழந்தைகள் பள்ளியில் தினமும் சுமார் 6-8 மணி நேரத்தைக் கழிக்கின்றனர். விழித்திருக்கும் நேரத்தில் பெரும் பகுதியை பள்ளிக் கூடத்தில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பை வழங்குவது நிர்வாகத்தினரின் கடமை! உரிய பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உரிமையும் உண்டு.

குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் சிறிய, பெரிய காயங்கள், சிறிய பெரிய விபத்துக்கள் அவர்களுக்குத் தரப்படும் உடல் ரீதியான, மன ரீதியான தண்டனைகள், அதனால் ஏற்படும் உடல் மற்றும் உணர்வுகளின் பாதிப்பு போன்றவை தினசரி நிகழ்வுகளாக, பத்திரிக்கைச் செய்திகளாக ஆகிவிட்டன. ஒரு பிரச்னை வரும் போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் அவற்றை பெரிதுபடுத்தி பல நாட்கள் மேடைகளில், மைக்கில், சாலைகளில் தொண்டைக் கிழியக் கத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். விளைவு ஏதும் இல்லை! நிறைய நேரங்களில் வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததாக ஆகி விடுகிறது அவ்வளவு தான்!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்பதற்கான, இந்திய நாட்டிற்கான வழி காட்டுதல்களை உச்சநீதிமன்றம் அக்டோபர் 2017-ல் அறிவித்து இருக்கின்றன. (Supreme Court Guidelines for child safety in School) எந்தப் பிசிறும் இல்லாமல் இவற்றைக் கடைபிடிக்க வேண்டியது பள்ளிகளின் கடமை! பெற்றோரும், அரசும், உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களும் குழந்தைகள் நலம் விரும்புகிறவர்களும் இதனைக் கண்காணிக்க வேண்டியது தார்மீகக் கடமை! தங்கள் குழந்தை பயிலும் பள்ளியில் அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் இவை சரிவர பராமரிக்கப் படுகின்றனவா என்று மேலோட்டமாகப் பார்த்தால் கூட பள்ளி நிர்வாகம் தவறு செய்யாது!

வழிகாட்டுதல்கள்

 1. பெற்றோர் அல்லது பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை உடையவரோடு மட்டுமே மாலையில் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
 2. பெண் குழந்தைகளை (Minor female students) ஆண் பணியாளர்களுடன் அனுப்பக்கூடாது.
 3. பள்ளியின் நுழைவாயில் (Entry), வெளிவாயில் (Exit), மற்றும் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் படம் பிடிக்கும் படியாக பள்ளியின் பரப்பளவைப் பொறுத்து, தேவையான எண்ணிக்கையில் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்.
 4. பெற்றோர் இன்றி குழந்தைகளை அவசரத் தேவைகளில் மட்டும் குழந்தையைப் பெண் பணியாளர்களுடன் வெளியே அனுப்பலாம்.
 5. பெரிய வகுப்புக் குழந்தைகளையும், சிறிய வகுப்புக் குழந்தைகளையும் எல்லா இடங்களிலும் (உ.ம்) கழிவறை, விளையாட்டு மைதானம், சாப்பிடுமிடம்) தனித்தனியாக பிரித்து விட வேண்டும்.
 6. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனியாக, நிறைய இடைவெளி விட்டு கழிப்பறைகள் அமைக்க வேண்டும். பெண்கள் கழிப்பறைகளுக்கு அருகில் பெண் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் இருக்க வேண்டும்.
 7. நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், வாகன ஓட்டிகள், சோதனைச் சாலை நுட்புனர்கள் போன்ற அனைத்து வகைப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தும் போது காவல் துறை ஆய்விற்கு உட்படுத்தி சான்று பெற வேண்டும்.
 8. பணிக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிகளையும் காவல்துறை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
 9. பள்ளி நேரங்களில் (உ.ம்) காலை 8.00 மணி முதல் மாலை 5 மணி வரை நுழைவாயில், வெளிவாயில் இரண்டிலும் ஆண், பெண் சீருடைக் காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.
 10. பள்ளி நேரம் முடிந்த பிறகு 1-2 பணியாளர்கள், அனைத்து வகுப்புகளையும் கழிப்பறை உட்பட திறந்து பார்த்து பள்ளி வளாகத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க வேண்டும்.
 11. தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஓட்டுனரின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை காவல் துறை ஆய்விற்கு உட்படுத்தலாம்.
 12. பள்ளி வளாகத்தில் தேவையில்லாத நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா என்பதைக் காவலர்கள் அடிக்கடிக் கண்காணிக்க வேண்டும்.
 13. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை வாராந்திர அல்லது மாதாந்திர சுழற்சி முறையில் (Weekly or monthly rotation) கண்காணிப்பாளர்களாக நிர்வாகம் நியமிக்கலாம். குழந்தைகள் வரும் போது, திரும்பி செல்லும் போது, உணவு வேளையில், கழிப்பறைகளில், விளையாட்டு மைதானத்தில், இவர்கள் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும்.
 14. குழந்தைகளை தனியாக அடைத்து வைப்பது, இருட்டறையில் பூட்டி வைப்பது போன்ற தண்டனைகளை ஒரு போதும் தரக் கூடாது.
 15. பள்ளி நிர்வாகம் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த ஆலோசனைகளைக் கேட்கலாம். இதில் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இதில் நிர்வாகத்தில் உள்ள குறைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டி பேசலாம். நிர்வாகம் அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
 16. பள்ளியில் ஒரு ஒருங்கிணைப்பாளர் அல்லது ஆலோசகர் நியமித்து அவர்களிடம் பெற்றோர்கள் தங்கள் பயங்களை / கவலைகளை சொல்வதற்கு வழி வகுக்க வேண்டும்.
 17. பள்ளி தொடங்கும் நேரத்தில் மட்டுமின்றி உணவு வேளையில், பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளின் இருப்பை, வருகைப் பதிவேட்டில் குறிக்க வேண்டும். ஏதாவது குழந்தையைக் காணவில்லையானால் பெற்றோர் மற்றும் காவல் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களுக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்கள்

 1. குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களில் சம்பந்தமில்லாத நபர் யாரும் இருக்கக்கூடாது.
 2. குழந்தைகளை எங்கும், எந்தக் காரணத்திற்காகவும் நடுவில் இறக்கி விடக்கூடாது.
 3. பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு இருக்க வேண்டும்.
 4. வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய எழுத்துகளில் பள்ளிக் கூடப்பணி (On school Duty) என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
 5. வேகக் கட்டுப்பாடு (Speed Governor) சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்
 6. தேவையான பொருட்களுடன் முதல் உதவிப் பெட்டி தயாராக இருக்க வேண்டும்.
 7. வாகனத்தின் ஜன்னல்களில் நெருக்கமான குறுக்குக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
 8. தீயணைப்பான்கள் இருக்க வேண்டும்.
 9. பள்ளியின் பெயர், நிர்வாகனத்தினரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
 10. வாகனங்களில் கதவுகளில் தரமான, பாதுகாப்பான பூட்டுகள்/ பூட்டும் முறை இருக்க வேண்டும்.
 11. இருக்கைகளுக்கு அடியில் பைகளை வைக்க போதிய இடம் இருக்க வேண்டும்.
 12. வாகனத்தில் குழந்தைகளின் பாதுகாப்புப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பணியாளர் இருக்க வேண்டும்.
 13. அவ்வப்போது ஆசிரியர், பெற்றோர் போன்ற ஒருவர் வாகனத்தில் பயணம் செய்து கண்காணிக்க வேண்டும்.
 14. வாகன ஓட்டிகள் கனரக வாகனங்கள் இயக்குவதில் 5 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
 15. வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை மதிக்காது இருந்து அல்லது சாலை விதிகளை (Lane discipline) கடை பிடிக்காமல் வருடத்தில் இரண்டு தடவைக்கு மேல் தண்டிக்கப்பட்டு இருந்தால் / அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அவரைப் பணியில் அமர்த்தக்கூடாது.
 16. வாகன ஓட்டிகள், அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மற்றும் சாலை விதிகளை மீறி ஆபத்தாக ஒட்டுதல் போன்ற ஏதாவது ஒரு குற்றத்திற்காக ஒருமுறை தண்டிக்கப் பட்டிருந்தாலும் அல்லது அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை பள்ளி வாகனங்களில் பணி அமர்த்தக்கூடாது.
 17. எழுதும் போதும், படிக்கும் போதும் இவை நன்றாக இருக்கின்றன. இந்த வழிகாட்டி நெறிகளை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் குழந்தைகளின் நலம் கருதி சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆதாரம் : மரு. நா. கங்கா, கும்பகோணம்

2.86363636364
ஆ.மகேஸ் Dec 17, 2018 11:52 AM

ஆசிரியருக்கு அறிவுரை.
பலரும் பராட்டும் பெரியார் குழந்தைகளை கூட மரியாதையாக நடத்துவர் ஆனால் ஆசிரியர் குழந்தைகளை மிகவும் அலச்சியமாக நடத்துகிறார்கள். ஆசிரியர் முதலில் திருந்த வேண்டும் பிறகு குழந்தைகளிடம் அன்பும் அறிவும் மாரியதையும் தானாக வளரும்
சமுதாயத்தில் மாற்றம் நிகழும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top