பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / மனவெழுச்சிகளும் உடல்நலமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனவெழுச்சிகளும் உடல்நலமும்

மனவெழுச்சிகளும் உடல்நலமும் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உடல்நலப் பிரச்சினைகள் ஒருவரிடம் மனச்சோர்வு, மகிழ்ச்சியின்மை எரிச்சல், கோபம் போன்ற மனக்குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. மனதின் அதிர்ச்சி, உடம்பில் வியர்வையாக, இதயத்துடிப்பினை அதிகரிப்பதாக, பசியின்மையாக, வயிற்றுவலியாக வெளிப்படுகின்றது.

சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்; உடல் நலத்தைப் பாதுகாக்காவிட்டால், மனநலத்தைப் பாதுகாக்க முடியாது. 21ம் நூற்றாண்டில் 'அனைவருக்கும் நலம் (Health for all) என்ற உயரிய கோட்பாடு அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.

வளரும் பருவத்தில் உடல் நலமும், மனநலமும் பெற்றிருந்தால் தான், குழந்தையின் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனுடையதாக இருக்கும். உடல்நலத்தைப் பேண, பாதுகாக்க, பராமரிக்க உதவும் வழிகாட்டுதல்கள், சுகாதாரக் கல்வி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

உளநலப்பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள்

வாழ்வில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகள், எதிர்பாராத தோல்விகள், ஆபத்துக்கள், நிறைவேறாத ஆசைகள், பகிர்ந்து கொள்ள முடியாத ஏக்கங்கள், அவமானங்கள் போன்ற எதிர்மறை எண்ணங்களின் காரணமாக அதிக பயம், பதற்றம், கோபம், கவலை, படபடப்பு மனச்சோர்வு, மணமுறிவு, மனப்போராட்டம், ஆவேசம், அகங்காரம், குற்ற உணர்வுகள், தாழ்வு மனப்பான்மை போன்ற தீவிர மன உணர்ச்சிகள் ஒருவரிடம் ஏற்படுகின்றது. தீவிர மனஎழுச்சிகளை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்துக் கொள்வதால், மனித உடலில் உள்ள இராசயனப் பொருள்களின் சமநிலை பாதிக்கப்படுகின்றது. தீவிர உணர்ச்சிகள் நரம்பு மண்டலத்தை அதிகமாக முடுக்குவதால் பல நாளமில்லா சுரப்பிகள் அதிக அளவில் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. எடுத்துக்காட்டாக இச்செயல்பாட்டால், சர்க்கரைச்சத்தின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. மனநலப்பிரச்சினைகள் காரணமாக பல்வேறு உடல் நலப்பிரச்சினைகள் தோன்றுகின்றது. அதிகமான மன அதிர்ச்சி மீண்டும் மீண்டும் எழுவதால் குடற்புண், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

தீவிர மனவெழுச்சிகளை மறைப்பதால் ஏற்படும் உடல் நலச்சீர்கேடுகள்

சுவாச மண்டல நோய்

(எ.கா.) பயம், பதற்றம், தாழ்வு மனப்பான்மை, அளவு கடந்த துக்கம் காரணமாக ஏற்படும் மனமாறுபாடுகள் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது.

ஜிரணை மண்டல நோய்

ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால், இரைப்பையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு குடற்புண் ஏற்படும்.

தோல் நோய்கள்

பல்வகை தோல் அழற்சி, அரிப்பு, வீக்கம் போன்றவை தீவர உணர்ச்சிகளின் காரணமாகவே தோன்றுகின்றது.

தசை, மூட்டு நோய்கள்

மன அழுத்தம், மனஉளைச்சல், பயம் அதிகளவில் தோன்றும்போது, உடம்பில் திடீரென பொறுக்க முடியாத வலி ஏற்படும் (எ.கா.) மூட்டுவலி, வீக்கம், தலைவலி.

நாளமில்லா சுரப்பி நோய்

பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படுவதால் சுரக்கும் அதிகமான ஹார்மோன்களால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

இதய இரத்தநாள நோய்

மனதில் ஏற்படும் அழுத்தங்களும், பகைமை உணர்வும், குற்றஉணர்வுகளும், அதிக உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

மாதவிடாய் சார்ந்த நோய்கள்

மனதில் மறைத்து வைக்கப்பட்டு தீவிரமான மனஉணர்வுகளின் காரணமாக வலி மிகுந்த மாதவிடாய் ஏற்படும் அல்லது சரிவர வராமல் நீண்டகாலம் தள்ளிப்போகும்.

அறிகுறிகள்

உங்கள் மாணவர்களிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அன்றாடச் செயல்பாட்டுக் குறைகள்

 • உண்பதில் தொல்லை (அதிகமாக சாப்பிடுதல் அல்லது சாப்பிட மறுத்தல்).
 • உறங்குவதில் தொல்லை.
 • சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை
 • பேச்சுக் குறைபாடு (தொடர்ச்சியாக பேசாமலிருத்தல், சொன்னதையே திரும்ப திரும்ப கூறுதல்).
 • கற்றல் குறைபாடு

நடத்தை குறைபாடுகள்

 • ஒதுங்கியிருத்தல்
 • வரம்புக்கு மீறிய இயக்கநிலை
 • மிகுந்த பயம், பதற்ற நிலை

இசைவின்மைப் பழக்கங்கள்

 • நகம் கடித்தல்.
 • விரல் சூப்புதல்.
 • பொருள்களை உடைத்தல்.
 • அழுது ஆர்ப்பாட்டம் செய்தல்.

செயல்பாடு

மனநலப்பிரச்சினைகள் காரணமாக உடல் நலமும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அன்போடும் பரிவோடும் நட்புணர்வோடும் கலந்துரையாட வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். மனவெழுச்சி சிக்கல்களிலிருந்து விடுபட ஆலோசனைகளையும், பொருத்தமான சூழல்களையும் அமைத்துத் தர வேண்டும். முறையான உடற்பயிற்சிகள், சத்தான உணவு, ஆரோக்கியமான நலப்பழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம்; நல்ல எண்ணங்கள், அன்பு, ஒழுக்கம் போன்ற உடன்பாடு உணர்வுகளால் மனதினை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்தி மனநலத்தைப் பெறலாம்.

மனநல மருத்துவரை அழைத்து மாணவர்களின் மனநலமும் உடல்நலமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றச் செய்தல்.

தொகுப்புரை

ஒரு குழந்தை தனது உரிமைகளும் சொந்த விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றதா அல்லது புறக்கணிக்கப்படுகின்றதா என்று சுயமதிப்பீடு செய்யும்போது ஏற்படும் உணர்வுகளே, அக்குழந்தையின் நடத்தையைத் தீர்மானிக்கிறது. இந்த சுயமதிப்பீடே அக்குழந்தையின் தற்கருத்தாகும். தற்கருத்துகள் உடன்பாட்டு முறையிலும், எதிர்மறை முறையிலும் அமையலாம்.

தன்னைப் பற்றிய உயர்வான அல்லது தாழ்வான எண்ணங்களுடன் பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளும் பள்ளி வாழ்வில் வெற்றி பெற, சொந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் திகழ, சமூக வாழ்வில் மதிப்புடன் விளங்க, தேவைப்படும் உடன்பாட்டு தற்கருத்தை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும்.

பண்பாடு ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார கலாச்சார ரீதியாக வேறுபட்ட சமூக நிலைமைகளிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் உள்லிருந்து உலகளவிற்கு நாம் உணர்வு ஏற்பட, சமூக செயல்களில் பொறுப்புடன் பங்கேற்க உதவும் கற்றல் அனுபவங்களை அளிக்க வேண்டும்.

மனித மாண்புகள், உரிமைகள், நீதி, சமத்துவம், சுதந்திரம், மனித நேயம் போன்ற பண்புகளை மதித்து நடக்கவும், தேசமும், மனித குலமும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் திறமையையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி, மாணவர்களை சமூக வளர்ச்சியும், சமூக முதிர்ச்சியும் பெற வழிகாட்ட வேண்டும்.

சகோதர உறவு என்பது ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்களுள் ஒருவரை', 'ஒரே மூல மரபினை உடையவர்களுள் ஒருவரை ‘ஒரே தாய் தந்தை உடையவர்களுள் ஒருவரைக் குறிக்கும். குழந்தைப பருவ சகோதர / சகோதரி உறவுகள் அன்பு / பொறாமை, ஒத்துழைப்பு / சண்டை, ஆதரித்தல் / எதிர்த்தல், பாதுகாத்தல் / தாக்குதல் போன்ற நிலைகளில் அமையும்.

ஒப்பார்க்குழுவில் இணைந்து விளையாடுவதன் மூலம், குழந்தையிடம் உடல், மன அறிவு, மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஏற்படுகின்றது. பல்வேறு சிறந்த சமூக பண்புகளையும், சமூக உறவுகளையும் குழந்தை வளர்த்துக்கொண்டு சிறந்த உடல் நலமும், மன நலமும் பெற்று மன நிறைவுடன் திகழ ஒப்பார்குழுவும் விளையாட்டு குழுவும் பெரிதும் உதவுகின்றன.

தன்னுடைய நிறை குறைகளை முழுமை தழுவிய அணுகுமுறையில் உண்மையான நோக்கில் மதிப்பீடு செய்து கொள்வதையே 'தன்னையறிதல்' என்று அழைக்கப்படுகின்றது. தன்னை முழுமையாக அறிந்த மாணவர்கள் வீட்டிலும், பள்ளியிலும், சமுதாயத்திலும் ஒரளவு இணக்க நடத்தையுடன் செயல்பட்டு தானும் பிறரும் மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்படுகின்றார்கள்.

குடும்பம், ஒப்பார்குழு, ஆசிரியர், நண்பர்கள், சமூகம், ஊடகங்கள், பிறரின் கருத்துகள் போன்ற பல்வேறு சமூகக் காரணிகள் ஒருவரின் தற்கருத்தை நிர்ணயம் செய்கின்றன.

எரிக்சன் என்ற உளவியலறிஞரின் கருத்துப்படி, ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் எட்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் குறிப்பிட்ட வளர்ச்சிசார் சிக்கல்கள் எழுகின்றன. சிக்கலை வெல்லுபவர்கள், அதனோடு தொடர்புடைய வளர்ச்சி நிலையை எளிதில் பெறுகின்றனர். சிக்கலை வெல்ல இயலாதவர்கள் குறிப்பிட்ட ஆளுமை வளர்ச்சியை அடையாமல் பின்தங்கிவிடுகின்றனர். மாணவர்களிடம் காணப்படும் ஆளுமைச் சிக்கல்களை பெற்றோர்களின் உதவியோடு ஆசிரியர் களைந்திட இயலும்.

மனவெழுச்சி என்பது, மன உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும். மனவெழுச்சி, உள்ளத்தையும், உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்; நெருக்கடி நிலைமைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்லது ஒடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும் மாணவர்கள் சமூகத் தொடர்புகளின்போது மனவெழுச்சிகளைப் பண்படுத்தி சூழலுக்குப் பொருத்தமாக வெளியிடும் மனவெழுச்சி முதிர்ச்சியும் பக்குவமும் பெற வேண்டும்.

மனவெழுச்சியில் ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி குறித்த மகிழ்வுணர்வு அல்லது வெறுப்புணர்ச்சி மேலோங்கி காணப்படும். மகிழ்ச்சியின் அடிப்படையில் எழும் மனவெழுச்சிகள் (எ.கா) அன்பு, பரிவு, சிரிப்பு போன்றவை. மனநிறைவு, பாதுகாப்புணர்வு, ஒத்துழைப்புணர்வு, தன்னம்பிக்கை, சமூக நலனில் அக்கறை, பிறரைப் புரிந்துகொண்டு உதவுதல் சுமூகமான சமூக உறவுகள் போன்ற உடன்பாட்டு எண்ணங்களை ஒருவரிடம் தோற்றுவிக்கும். மகிழ்ச்சியான வகுப்பறைச் சூழலும், அன்பும் பரிவும் கொண்ட நண்பர்களும், ஆசிரியர்களும், மாணவர்கள் சிறப்பான கற்றல் அடைவு பெற உதவுகின்றார்கள்.

வெறுப்புணர்வின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சிகள் (எ.கா. கவலை, பொறாமை, கோபம், அச்சம் போன்றவை) ஒருவரிடம் உடல் ரீதியாக, நடத்தை ரீதியாக, தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தன்னம்பிக்கையின்மை, பழிவாங்குதல், திட்டமிட்டு பிறரை அழித்தல், ஏக்கம், ஏமாற்றம் தனிமை உணர்வு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற எதிர்மறைப் பண்புகளைத் தோற்றுவிக்கின்றன. அளவுக்கதிகமாக இத்தகைய மனவெழுச்சிகள் தோன்றினால் மாணவர்களின் உணர்வுச்சமநிலையும், உடல்நலமும், கல்வி அடைவுகளும் பெரிதும் பாதிக்கப்படும்.

பெற்றோர் - குழந்தை உறவு, நம்பிக்கை, அன்பு, பாதுகாப்பு, மனநிறைவு, சுதந்திரம், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

முடிவுரை

மனநலம் எனப்படுவது 'மனக்கோளாறுகள் இல்லாமை மட்டுமன்று; தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாட்டுடன் செயல்படுவதை குறிக்கின்றது. மனநலப் பிரச்சினைகளில் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்படும். மகிழ்ச்சியான வகுப்பறைச் சூழலும் பாதுகாப்பான பள்ளிச் சூழலும் மாணவர்கள் உடல்நலமும், மனநலமும் பெற உதவுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top