பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / முழுநிறைவுத் தர மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முழுநிறைவுத் தர மேலாண்மை

முழுநிறைவுத் தர மேலாண்மை (Total Quality Management) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தரமுள்ள பொருட்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் மதிப்பு, தரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் சேவை செய்வதைப் போலவே நிலைத்து நிற்பதற்கும் பாடுபடுகின்றன. நிலைத்து நிற்க தரம் அவசியம்.

தரம் - பொருள் விளக்கம்

“ஒரு பொருளின் உயர்ந்து காணப்படும் தன்மையே அப்பொருளின் தரம் எனப்படும்” - ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (1970),

“ஒரு விலைப் பொருளை ஒருவர் வாங்குவதால் என்ன பயனைப் பெறுகிறார் அல்லது அப்பொருள் அவருக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதற்கு மாறாக அப்பொருளை அவர் வாங்கவில்லையெனில் அவருக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதைப் பொருத்தே தரம் அமைகிறது” என்று சல்ட்டர் கூறுகின்றார்.

முழு நிறைவுத் தர மேலாண்மை விளக்கம்

முழு நிறைவுத் தர மேலாண்மை’ என்பது எட்வாட்ஸ் டீமிங் என்ற அமெரிக்கரால் இரண்டாவது உலகப் போருக்குப்பின் உருவாக்கப்பட்டது. இதனை ஜப்பானியர்கள் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் வெற்றியைப் கண்டனர். அதன் பின் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முழுநிறைவுத் தர மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தில் உள்ளோரும் வாடிக்கையாளரும் திருப்தியடைய வைப்பது என்றும், பணிபுரிவோரை ஒருங்கிணைத்தல், அவர்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, அவர்களைத் தரத்திற்கான பாதையில் செல்லவைத்து, தொடர்ந்து தர முன்னேற்றத்தை நிறுவனத்திலும், விளை பொருளிலும் உருவாக்கும் காரணி” என சேய்லர் விளக்குகிறார்.

முழு நிறைவுத் தர மேலாண்மை என்பது "குறிப்பாக இடர்ப்பாடுகளுக்கான தீர்வை நிறுவனத்திலுள்ள அனைத்துப் பணிநிலைகளிலுமுள்ளோர் குழுக்களாகச் செயல்பட்டு குறைகளைக் கண்டுபிடித்துத் தர முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய ஒரு வியூகம் அல்லது செயல்பாடு ஆகும்" என்று ஹில் டெய்லரும் கூறியுள்ளனர்.

முழுநிறைவுத் தர மேலாண்மையின் பகுதிகள் (Elements)

 • ஒர் அமைப்பானது முழுநிறைவுத் தர மேலாண்மையில் தனக்குள்ள ஈடுபாட்டை விளக்குதல்
 • வாடிக்கையாளர் ஆர்வம்
 • தொலை நோக்கைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டு முயற்சி
 • கூட்டு உடன்பாடு செய்முறை சார்பு
 • தொடர்ச்சியான தர முன்னேற்ற மனப்பான்மை
 • மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல்

பள்ளியின் முழுத் தர மேலாண்மை

பள்ளியின் தரம் என்பது வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல், நிகழ்வோடு நிர்வாகம், மேற்பார்வைப் பணிகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், சமுதாயம் ஆகியோரின் மனநிறைவைப்பொறுத்தே பள்ளியின் தரம் அமைகின்றது. எனவே பயனுறு திட்ட மேலாண்மையும், கல்வியாளர்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் உள்ள சூழலில் உருவாகும் பள்ளியானது முழு நிறைவுத் தரப் பள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை

பள்ளி அமைப்பானது பல உட்கூறுகளைக் கொண்டது. உண்மையில் கல்வி ஆட்சியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள். பெற்றோர்கள் ஆகிய பல உட்கூறுகள் பள்ளியில் காணப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் போது மட்டுமே பள்ளியில் தரம் காணப்படும். சேவைகளை ஒன்று திரட்டிக் குறிக்கோள்களை நோக்கி நகர வைப்பதற்குத் தேவைப்படும் கருவி, முழுத் தர மேலாண்மை ஆகும்.

ஆசிரியரின் பண்புகள்

 • பாடத்தின் நோக்கங்களை அறிதல்,
 • பாடப்பொருளில் ஆழமான அறிவு,
 • கற்பித்தல் முறைகளை அறிதல்,
 • கல்வி நுட்பங்களைப் பயன்படுத்துதல்,
 • செயல்வழிக் கற்றலை முழுமனதுடன் பயன்படுத்தல்,
 • பல வகுப்புக் கற்பித்தல் மற்றும் மேலாண்மையைப் பயன்படுத்தல்,
 • கற்றல் - கற்பித்தல் பொருட்களை உருவாக்குதல்,
 • சுயக் கற்றலை ஊக்கப்படுத்தல்,
 • குழுக்கற்றலை மேன்மைப்படுத்தல்.

முழுத் தரப் பள்ளியில் ஒரு தலைமையாசிரியரின் பண்புகள்

 • தொலை நோக்குடன் பார்த்தல்
 • சவால்களை எதிர்கொள்வதை ஊக்கப்படுத்தல்
 • தடைக்கற்களை நீக்குதல்
 • மாறுதலுக்கான உறுதிப்பாடு
 • உடன் பணியாற்றுவோரின் திறனை மேம்படுத்துதல்
 • தலைமைப் பண்பைச் சீர்ப்படுத்துதல்

ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு

கல்வி, சமுதாயம் மற்றும் அரசியல் புனரமைப்பிற்கு ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்குபணி ஆற்ற வேண்டும் என்று கல்வி அலுவலர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு உரிய செயல்களைச் சிந்தித்து நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆகவே ஆசிரியர் தன் தொழில் சார்ந்த கூறுகளைக் கண்டறிந்து தங்களை அதற்கேற்ப தக அமைத்துக் கொண்டு பணிமேம்பாடு அடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பணியிடைப் பயிற்சியின் அவசியம்

ஒவ்வொரு ஆசிரியரும் தம் பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், தன் மனப்பாங்கை மாற்றி அமைத்துக் கொண்டு மாணவர் சமுதாயம் மேம்படுவதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், தன் குறைகளைக் கண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், எப்போதும் கற்பவராகத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளவும், இன்றைய நாள் வரை புலங்கள் பலவற்றில் தான் அடைந்துள்ள முன்னேற்றங்களை வளர்ச்சிகளை அறிந்து, மாணவர்களுக்குத் தேவையானபோது அவற்றை அறிமுகப்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாளவும், கண்டறியவும் பணியிடைப் பயிற்சி தேவைப்படுகிறது.

ஆசிரியர் ஒருவர், தன்னுடைய தொழிலுக்கான கல்வி மற்றும் பயிற்சிபெறுதல், தன் சமூகக் கடமைகளைப் முழுமையாகச் செய்தல், நடத்தை விதிகளைப் பின்பற்றுதல், பணியிடைப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்றுத் தன்னை முன்னிலைப்படுத்தித் தன் பணி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளி இணைப்புத்திட்டம்

மனித மற்றும் பொருள் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக, பள்ளி இணைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரையுள்ள அனைத்துக் கல்வி நிலைகளையும் இணைத்து அவற்றின் பயனை அனைத்துக் கல்வி நிலைகளிலும் பயன் பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.

பள்ளி இணைப்புத் திட்டம் என்பது பல பள்ளிகள் இணைந்த ஒரு தொகுப்பு. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் ஒரு கல்வி நிறுவனங்களின் தொகுப்பாகச் சேர்ந்தியங்குவதாகும். தன்னொத்த பிற கல்வி நிறுவனங்கள், உதவி பெறும் வகையில், கல்விச் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மேல்நிலை முதல் தொடக்கநிலை வரையுள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து, தங்களுடைய எண்ணங்கள், முயற்சிகள் வளங்களைப் பயன்படுத்திக் கல்வியின் தரம் உயரப்பாடுபட பள்ளி இணைப்புத்திட்டம் பயன்படும்.

மூன்றடுக்கு முறை

முதல் அடுக்கு

அருகிலுள்ள எட்டு முதல் பத்து தொடக்கப் பள்ளிகளை, ஒரு நடுநிலைப்பள்ளியுடன் இணைத்தல் வேண்டும். ஒரு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தன் இணைப்பிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பணி சார்ந்த, கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குதல் வேண்டும்.

இரண்டாவது அடுக்கு

உயர்நிலைப் பள்ளிகளுடன், அருகிலுள்ள நடுநிலைப்பள்ளிகள் இணைக்கப்பட்டு, அவற்றின் தரமான கல்விக்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

மூன்றாவது அடுக்கு

உயர்நிலைப் பள்ளிகளை அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, கல்வியியல் கல்லூரி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைத்து, அப்பள்ளிகளின் தர உயர்வுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.

பள்ளி இணைப்புத் திட்டத்தின் பணிகள்

கல்வி சார்ந்த வழிகாட்டல் திறமை வாய்ந்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்களுடைய பணியினை, இணைப்புப் பள்ளிகளுக்கு வழங்குதல் வேண்டும். இதனை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்.

 • அ) கற்பித்தல்
 • ஆ) பாட இணைத்திட்ட செயல்பாடுகள்
 • இ) பள்ளி மேம்பாட்டுச் செயல் திட்டங்கள்

தேவையான உபகரணங்களை வழங்குதல்

 • அ) நூலகம்
 • ஆ) ஆய்வக உபகரணங்கள்
 • இ) காட்சிக் கேள்விக் கருவிகள்
 • ஈ) விளையாடுமிடம் முதலியவற்றைத் தொகுப்பிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் பயன்படுத்திக் கொள்ளுதல்.

மேற்பார்வைப் பணி

கற்பிக்கும் பணி அமைப்பு செயல்படும் விதம் முதலியவற்றை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல்.

மதிப்பீட்டுப் பணி வினாத்தாள் தயாரிப்பு, மதிப்பீட்டில் புதிய உத்தி போன்றவை.

பணியிடைப் பயிற்சி

தொழில் சார்ந்த வளர்ச்சிக்கும், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும். பணியிடைப் பயிற்சி மிகமிகத்தேவை. ஆசிரியர்களைக் கூட்டி, ஆலோசனைகள் வழங்கி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, மாதிரி வகுப்புகள் நடத்தி, கற்பித்தலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை பிறருடன் பகிர்ந்து புதிய அறிவினை, திறனை எல்லோரும் பெற வழி செய்வதற்கு பணியிடைப் பயிற்சி உதவிட வேண்டும்.

நன்மைகள்

 • வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல்
 • ஆசிரியர்களின் தொழில் சார்ந்த வளர்ச்சி, மேம்பாடு
 • கற்றல் மதிப்பீடு மற்றும் மேம்பாடு
 • பள்ளிகளின் தனிப்பட்ட வேறுபாடுகளைக் களைதல்
 • சிறந்த நிர்வாகக் கட்டுப்பாடு
 • பள்ளிச் செயல்பாடுகளில் மேன்மை
 • சிக்கன நடவடிக்கைகள்

பிற அமைப்புக்களுடன் தொடர்பு

ஒர் ஆசிரியர் தன் பணிவகுப்பறையுடன் முடிந்து விட்டதாகக் கருதுதல் கூடாது. சமுதாய முன்னேற்றம், மாணவர் முன்னேற்றம், நாட்டு முன்னேற்றம் என்ற மூன்றிற்கும் ஆசிரியர் முக்கிய அங்கம் வகிக்கின்றார்.

பிற அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதன் நோக்கங்கள்

 • பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல்
 • பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல்
 • கல்வியில் தரமேம்பாடு அடையக் கற்றல், கற்பித்தல் வளங்களைச் சேகரித்தல்
 • பள்ளியின் இயற்கை வளங்களைப் பராமரித்துப் பாதுகாத்தல்
 • ஏழை, எளிய மாணவர்களுக்கு அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்தல்
 • பள்ளிப்புரவலர் திட்டத்திற்கு கொடையாளர்களைச் சேர்த்து தேவையான உதவி பெறுதல்
 • சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளல்
 • ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் உள்ளூர் பட்டதாரிகளை வேண்டி அழைத்து கற்பித்தலுக்குப் பயன்படுத்துதல்.

முடிவுரை

மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வி அளிக்கவும், மாறிவரும் சூழலுக்கேற்ப ஆசிரியர் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும், பள்ளிக்கு வெளியேயும் கல்விசார் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் பிற அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

3.05882352941
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top