பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை (இ.தொ.க. மும்பை

இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை (இ.தொ.க. மும்பை பற்றிய குறிப்புகள்

Indian Institute of Technology, Bombay, IITB) மும்பை நகரின் வடமத்திய பகுதியில் உள்ள பவாய் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1958ஆம் ஆண்டு யுனெஸ்கோ மற்றும் அப்போதைய சோவியத் அரசின் பண மற்றும் நுட்ப உதவியுடன் நிறுவப்பட்டது இ.தொ.க., மும்பை. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட, மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட, பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் இரண்டாவதாக நிறுவப்பட்டது. இ.தொ.க., மும்பை 2000-ம் ஆண்டிற்கான அறிவியல் மற்றும் நுட்பத்தில் ஆசியாவின் மூன்றாவது சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

வரலாறு

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இரண்டாவதாக 1958 ஆண்டில் யுனெஸ்கோ அன்றைய சோவியத் நாட்டிலிருந்து உபகரணங்களையும் நுட்ப உதவியையும் கொடுக்க, இந்திய அரசு கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமான செலவுகளையும் நடப்பு செலவுகளையும் மேற்கொள்ள இ.தொ.க., பம்பாய் உருவானது.

வளாகத்திற்காக மும்பையிலிருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள பவாய் பகுதியில் 550 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கொடுத்தது. கட்டிடங்கள் எழும்வரை சூலை 25 1958 அன்று வொர்லி பகுதியில் தற்காலிக இடமொன்றில் 100 மாணவர்களுடன் துவங்கியது. ஜவஹர்லால் நேரு மார்ச் 10 1959 அன்று புதுக்கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கழித்து இ.தொ.க., மும்பை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பலவழிகளில் சிறப்பான பங்களித்து வருகிறது. உலகின் தலைசிறந்த பொறியாளர்களையும், அறிவியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. இங்கு படித்த முன்னோர்கள் பல வகைகளில் தொழில் முனைவோர்களாக, மேலாளர்களாக, நுட்பவியலாளர்களாக, அறிவுரைஞர்களாக, ஆசிரியப் பெருந்தகைகளாக, அல்லது ஆய்வியலாளர்களாக வெற்றி காண்கின்றனர்.

வளாகம்

இ.தொ.க., மும்பை, மும்பை புறநகர் பகுதியில் பவாய் மற்றும் விஃகார் ஏரிகளிடையே உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. அருகாமையிலுள்ள புறநகர் தொடர்வண்டி நிலையங்கள் மத்திய வழித்தடத்தில் உள்ள கஞ்சூர்மார்க் மற்றும் விக்ரோலி ஆகும். ஜோகேஸ்வரி - விக்ரோலி இணைப்பு சாலை (JVLR) இதன் முதன்மை வாயில் வழியே செல்கிறது. வளாகம் கட்டிடத் தொகுதிகளாக அமைந்துள்ளது. கல்வித்தொகுதி முதன்மை கட்டிடம், துறை கட்டிடங்கள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மூன்று மாதங்கள் நீடிக்கும் பெருமழைக்காலத்தின் காரணமாக அனைத்து துறை கட்டிடங்களும் முடிவில்லா வழித்தடம் என செல்லப்பெயரிட்ட கூரைவேய்ந்த வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு அரங்கத்தின் பின்னே 1 முதல் 13 வரை எண்ணிட்ட விடுதிகள் அமைந்துள்ளன (எண் 10 மட்டும் கல்வித்தொகுதியருகில் உள்ளது).எண் 10 மற்றும் 11 மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 128 அறைகளே கொண்ட மிகச்சிறிய டான்சா இல்லம் தனியாக உள்ள திட்டப்பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துளசி இல்லம் மணமான ஆராய்வு மாணவர்களுக்கானது.

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அண்மையில் உள்ளதால், வளாகம் மிகவும் தூய்மையாகவும் பசுமையாகவும் மும்பையின் மாசு சூழலில் ஓர் விலக்காகவும் உள்ளது. வனப்பகுதியானதால் வளாகத்தில் சிறுத்தைகளையும் ஏரியருகே முதலைகளையும் கண்டுள்ளனர்.

கழக வளாகத்தில் நீச்சல்குளம்; உதைப்பந்து, ஆக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுத் திடல்கள்; டென்னிஸ், கூடைப்பந்து, ஸ்க்வாஷ் மற்றும் வாலிபால் விளையாட்டுக் களங்கள் உள்ளன. மாணவர்களின் பண்பாட்டு மற்றும் கல்விசாராச் செயல்களுக்கு மாணவர் செயல்பாட்டு மையம் (SAC) உள்ளது. தவிர இரண்டு உயர்நிலைப்பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் ஐஐடி கேம்பஸ் பள்ளி ஆகியன உள்ளன.

மாணவர் செயல்கள்

கலையும், பண்பாட்டு நிகழ்வுகளும் இ.தொ.க., மும்பை மாணவ வாழ்வின் சிறப்பு அங்கங்களாகும். ஆண்டுதோறும் விடுதிகளுக்கிடையே நடக்கும் கலைவிழா (PAF) மாணவர்களிடையே மிக விரும்பப்படுகிறது.

ஆண்டுதோறும் வெளிமாணவர்களும் பங்கெடுக்கும் கலைவிழா மூட் இன்டிகோ டிசம்பர் மாதம் நடக்கிறது. நான்கு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் போட்டிகளும், கண்காட்சிகளும், விளையாட்டுகளும், கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா டெக்ஃபெஸ்ட் ஆண்டுதோறும் சனவரித் திங்கள் நடக்கிறது.

இவை தவிர துறைசார்ந்த விழாக்களும் நடைபெறுகின்றன.

துறைகள்

சைலேஷ் ஜே மேத்தா மேலாண்மைப் பள்ளி, ஐஐடி மும்பை வளாகம் இக்கழகத்தில் 14 கல்வித்துறைகளும், 10 பல்துறை மையங்களும், 3 சிறப்பு கல்லூரிகளும், பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வு மையங்களும், ஆய்வுக்கூடங்களும் இருக்கின்றன.

இ.தொ.க., மும்பையில் உள்ள துறைகள்

 • வான் ஊர்தியியல் பொறியியல்
 • வேதிப் பொறியியல்
 • வேதியியல்
 • குடிசார் பொறியியல்
 • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
 • புவியியல்
 • மின் பொறியியல்
 • ஆற்றலியல் மற்றும் பொறியியல்
 • மனிதம் & சமூக அறிவியல்
 • தொழிலக வடிவமைப்பு
 • கணிதம்
 • எந்திரப் பொறியியல்
 • உலோக மற்றும் பொருளியல் பொறியியல்
 • இயற்பியல்

தவிர இ.தொ.க., மும்பையில் அமைந்துள்ள மூன்று சீர்மிகு பள்ளிகளாக இவை இயங்குகின்றன:

 • உயிரி அறிவியல் மற்றும் உயிரிபொறியியல் பள்ளி (Bio-school)
 • கன்வல் ரேகி தகவல் தொழில்நுட்பப் பள்ளி (KReSIT)
 • சைலேஷ் ஜே மேத்தா மேலாண்மை பள்ளி, ஐஐடி மும்பை வளாகம் (SJMSOM)

ஆதாரம் : http://www.iitbombay.org/

3.26086956522
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top