பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இணையம் வழியாக, தமிழ் ஆதாரங்களைத் தமிழ்ச் சமுதாயத்தினருக்கும் தமிழில் ஆர்வமுள்ளவர்களுக்கும் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு போன்றவைகளை அளிக்கும் உயரிய நோக்கத்துடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக முதலில் அறியப்பட்டு பின்னர் தமிழ் இணையக் கல்விக்கழகமாக 16.07.2010-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி தமிழக அரசால் சங்கப்பதிவுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் துவக்கப்பட்டது.

நோக்கம்

 • தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு போன்ற ஆதாரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலருக்கும் இணையம் வழியாக அளித்தல்.
 • புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ் பாரம்பரியத்தோடு கூடிய தமிழ் கற்றலுக்கான பாடங்களைத் தொகுத்தல்
 • புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து கல்விப் பொருண்மைகளைத் தொகுத்துப் பொதுமக்களுக்கு வெளியிடுதல்.
 • தமிழியியலில் சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டம் போன்ற படிப்புகளைத் தஞ்சாவூரிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் வழியாக அளித்தல்.
 • கணினித்தமிழை வளர்த்தல்

செயல்பாடுகள்

 • தமிழ் இணையக் கல்விக்கழகம் அரிச்சுவடி முதல் பட்டப்படிப்பு வரையான கல்வித் திட்டங்களை வகுத்து வழங்கி வருகிறது.
 • அரிய அச்சு நூல்கள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், எழுத்துப்பிரதிகள், ஒளிப்படங்கள் மற்றும் ஒளி ஒலி தொகுப்புகளின் தரம் மற்றும் எண்ணிக்கையை வலுப்படுத்துதல்.
 • மின் நூலகத்தின் செயல் திறனை மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் வகையில் அனைத்து மின்னனு சாதனங்களில் இயங்க ஏதுவாக மின்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தலும், காப்பதும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் தொடர்பான அரிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை மின்னுருவடிவில் பாதுகாத்து ஆவணப்படுத்தி தேடுதல் வசதியுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • கணினித் தமிழ் ஆய்வினை ஊக்குவிக்க, தமிழ் இணையக் கல்விக்கழகம் தேவையான தரவுகளையும் தமிழ் மென்பொருட்களையும் உருவாக்குகிறது.

தமிழ் மென்பொருள் உருவாக்கல்

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழக அரசின் முகவராக செயல்பட்டு தமிழில் மென்பொருள்களை உருவாக்குவதற்கு நிதியுதவி அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் / நிறுவனங்கள் உருவாக்கும் மென்பொருள்களைச் சோதித்துச் சான்றளித்தல் ஆகிய பணிகளைச் செய்துவருகிறது.

கல்வித் திட்டங்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் மழலைக் கல்வி, சான்றிதழ்க் கல்வி, பட்டயம், மேற்பட்டயம், இளநிலைத் தமிழியல் பட்டம் ஆகிய கல்வித் திட்டங்களை அளித்து வருகிறது. இக்கல்வித் திட்டங்களில் பயில்வதற்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை . அதன் விவரங்கள் பின்வருமாறு:

மழலைக்கல்வி

தமிழ்ப் பாடங்களைப் படங்கள், காட்சிகள், படக்கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதியில் பாடங்கள் தரப்பட்டுள்ளன. இதில், எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலான இயக்கப்படங்கள் ஆகியவை அடங்கும்.

(1 முதல் 6ஆம் வகுப்பு வரை) சான்றிதழ்க் கல்வி கீழ்க்காணும் மூன்று நிலைகளை உடையது.

 • அடிப்படை நிலை (வகுப்புகள் 1&2)
 • இடை நிலை (வகுப்புகள் 3&4)
 • மேல்நிலை (வகுப்புகள் 5&6)

மேற்சான்றிதழ் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை)

மேற்சான்றிதழ்க் கல்வி கீழ்க்காணும் மூன்று நிலைகளை உடையது.

 • நிலை 1(வகுப்புகள் 7&8)
 • நிலை 2(வகுப்புகள் 9&10)
 • நிலை 3(வகுப்புகள் 11&12)

இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி

இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வியில் பட்டயம், மேற்பட்டயம் மற்றும் பட்டச் சான்றிதழ்கள் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறன.

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பல்வேறு பாடத்திட்டங்களுக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18012 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் உலகெங்கும் உள்ள மாணவர்களின் நலனுக்காக மழலை, அடிப்படை நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை தமிழ்ப் பாடங்களைக் கற்க பின்வரும் குறுவட்டுகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது

 • தமிழ் கற்க
 • தமிழ் கற்போம்
 • திருக்குறள் கலைச்சொல் பேரகராதி

தமிழர் தகவலாற்றுப்படை

தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த பிரிவுகளில் தொல் பழங்காலம், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பான மொத்தம் 627 தொன்மை ஆய்விடங்களுக்கான ஒளிப்படங்கள் விளக்கமான மீத்தரவுகளுடன் http://tagavalaatruppadai.in என்ற இணையத்தில் பதிவேற்றப்பட்டு 11.10.2017 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்களால் முறைப்படித் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தொல்லியல் மற்றும் வரலாறு பிரிவுகளின் மீத்தரவுகளை ஒளிப்படங்களோடு ஆவணப்படுத்துதல் மற்றும் தரவேற்றப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ் மின்நிகண்டு

தமிழ் மின்நிகண்டு என்பது, ஒத்தப் பொருள்களைக் கொண்ட சொற்களை ஒன்று சேர்த்து சொற்களுக்குத் தகுந்தாற்போல் அளித்தலாகும். இது அகராதியிலிருந்து சற்று மாறுபட்டதாகும். இம்மின்நிகண்டினை உருவாக்க தமிழக அரசு 2742 இலட்சத்தை அளித்தது. இந்த மின்நிகண்டு 3 நிலைகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

டாட்நெட், கட்டற்ற மென்பொருள் மற்றும் கைப்பேசி செயலி. இவை அனைத்தும் தமிழ் இணையக் கல்வி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கைப்பேசியின் செயலிகூகுள் பிளே ஸ்டோரில் இரண்டாம் நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்கற்றலுக்கான இணையதளம் (e-Learning Web Portal)

கல்வி தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 11.10.2017 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட மின் கற்றலுக்கான இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்கள். இவ்விணையதளத்தில் மாணவர் பதிவு, தேர்வுக்கான தளம், தொடர்பு மையங்களின் மேலாண்மை போன்றவைகள் உள்ளன. இதற்காக தமிழக அரசு (1226 இலட்சத்தைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு அளித்தது.

மின்நூலகம் உருவாக்குதல்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அரிய நூல்கள், இதழ்கள், ஆவணங்கள் உள்ளடக்கிய மின்நூலகம் ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மின்நூலக உருவாக்கத்திற்கு 1 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,656 அரிய நூல்களிலிருந்து 53,27,879 பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின்னுருவாக்கம் செய்யப்பட்ட மின் நூல்கள், அரிய கையெழுத்து பிரதிகள் 9.12 TB அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 11283 நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் http://tamildigitallibrary.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இம்மின்நூலகம் 11.10.2017 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், ஆய்வாதாரங்கள் அனைத்தும் வகைப்படுத்தி MARC 21 முறையில் மீத்தரவுகளுடன் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் மற்றும் நூலடைவு செய்தல் தென்னிந்தியாவில் உள்ள ஓலைச் சுவடிகளில் அங்குள்ள மக்கள், நிலம், கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வதின் மூலம் பொது நூலகத்தில் கிடைக்கும் ஓலைச்சுவடித் தகவலை விட இதில் பல அரிய, சிறப்பான சேகரிப்புகள் கிடைக்கப்பெறும். இது நம் பண்பாட்டினைப் பாதுகாத்து உலகளவில் கொண்டு சேர்க்க இயலும். இதன் பொருட்டு டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் நூலகம், இந்திய மருத்துவம் & ஓமியோபதி இயக்ககம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் மற்றும் நூலடைவு செய்யும் பணிக்காக 105 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பணி நடைபெற்று வருகின்றது.

மாதாந்திரச் சொற்பொழிவு

தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய தொடர் சொற்பொழிவு தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு துறைகளிடமிருந்து சிறந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்கள். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பார்த்துப் பயன்பெறும் வகையில் இணையதளத்தில் தரவேற்றி (webcast) ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் சிற்பக்கலை, தமிழர் நாகரிகத்தின் பழமை குறித்துத் தலைச் சிறந்த அறிஞர்களைக் கொண்டு இதுவரை 36 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரைப் பணிகள் தமிழ் இணையக் கல்விக்கழகம் அனைத்து நிலைகளிலும் கணினித் தமிழை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முறையிலான பரப்புரைப் பணிகளைக் மேற்கொண்டு வருகின்றது.

அவை,

 • தமிழ்நாட்டின் உயர்க்கல்வி நிறுவனங்களில் கணித்தமிழ்ப் பேரவை",
 • இணையம் சார்ந்த தமிழ் உள்ளடங்கங்களை மேம்படுத்த தமிழ்ப் பெருங்களஞ்சியம்"
 • கான் கல்விக்கழகக் காணொலிகளைத் தமிழாக்கம் செய்யும் திட்டம்.
 • கட்டற்ற மென்பொருள் மற்றும் படைப்பாக்கத்திற்கான பொது முயற்சிகள் ஆகியவை ஆகும்.

கணித்தமிழ்ப் பேரவை

கணினித் தமிழின் இன்றியமையாமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அடிப்படையில் கணித்தமிழ்ப் பேரவைகள் தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை அறிவியல், பொறியியல், மேலாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட 100 கல்லூரிகளில் கணித்தமிழ்ப் பேரவைகள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் தொடங்கப்பட்டு இப்பேரவைகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளைச் சார்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இம்மாணவர்கள் தமிழில் வலைப்பூக்கள் மற்றும் குறுஞ்செயலிகளை உருவாக்க தமிழ் இணையக்கல்விக்கழகத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. 25 இலட்சத்தினை இத்திட்டத்திற்காக அரசு அளித்துள்ளது. ஒரு கல்லூரிக்கு 25,000/- வீதம் கணித்தமிழ்ப் பேரவைத் தொடங்க ஆதார நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கணித்தமிழ்ப் பேரவை செயற்பாடுகளின் அடிப்படையில் மேலும் தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பெருங்களஞ்சியத் திட்டம்

தமிழ்ப் பெருங்களஞ்சியத்தினைப் பொருத்த வரையில், 84000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கட்டுரைகள் வேளாண்மை, மீன்வளம், வேதியியல், உயிரியியல், இயற்பியல் போன்ற துறைகளிலிருந்து பெறப்பட்டு www.tamilkalanjiam.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இவை பல்லூடகப் பொருள்களாக அளிக்கப்படும்.

படைப்பாக்கப் பொது முயற்சி அரசாணை எண்.105, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை (TD2-2) நாள்: 01.07.2016-இன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த பணிகள் (நூல்கள் முனைவர் பட்ட ஆய்வேடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமத்தின் படி அனைவருக்கும் பகிரப்படும். தமிழ்ச் சார்ந்த அறிவு அனைவருக்கும் சட்டப்படி கிடைக்கப்பெறுவது இதன் நோக்கம் ஆகும். இதனை நிறைவேற்றும் விதமாக 1283 நூல்கள் தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்மொழியின் பயன்பாடு அதிகரிக்க தமிழ் இணையக் கல்விக்கழகமும் விக்கிபீடியாவும் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்திட ஊக்குவிக்கிறது.

நடைபெற்றுவரும் திட்டங்கள்

உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குத் கணினித் தமிழைப் பரப்புவதற்கு தமிழ் அறிஞர்கள், மொழியியலாளர்கள், தமிழ் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் உதவியுடன் புதுமையான திட்டங்கள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம்

தமிழ் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறந்த ஆய்வுச்சூழலை உருவாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழித் தொழில்நுட்பம் (Tamil Language Technology) மற்றும் இயற்கை மொழி (Nautural Language) ஆய்விற்காக நீண்ட கால ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம் சொல்லாளர், பிழைதிருத்தி, ஒளி வழி எழுத்தறிவான் ஆகிய மென்பொருட்களைச் செம்மையாக்குவதுடன் ஒருங்குறி மாற்றி, உரை உணர்தல், உரைச் சுருக்கம் தருதல், பேச்சு உணர்தல் மற்றும் பகுத்தல், தானியங்கி மொழிபெயர்ப்பு போன்ற பலவகைப் பயன்பாட்டு மென்பொருட்களும் உருவாக்கப்படும். தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தரவகம் மற்றும் மின்-அகராதி உருவாக்கம் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு புதுமை திட்டங்கள் முயற்சி (TANII) (201516) நிதியின் மூலமாக 15 தமிழ் மென்பொருள்கள் வல்லுநர் குழு மூலம் கண்டறியப்பட்டன. அவற்றுள் 12 தமிழிணையத் திட்டங்கள் முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 23.5.2017, 1110.2017 மற்றும் 13.03.2018 ஆகிய நாட்களில் துவக்கி வைக்கப்பட்டன.

இத்திட்டங்கள் கணினித் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் பயன்படுவதுடன், ஒருங்குறியைப் (UNICODE) பரவலாக்கவும் உதவும் இதர திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புதிய பாடத்திட்டங்கள் உருவாக்குதல்

உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டக் குழுவால் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, பாடங்கள் எழுதும் பணி நடைபெற்று வருகின்றது.

புதிய கல்வித்திட்டம்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் நடத்தப்படும் பட்டயம், மேற்பட்டயம் மற்றும் பட்டக் கல்வி படிப்புகளின் சான்றிதழ்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வழியாக அளிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழைக் கற்க ஏதுவாக முதுநிலை பட்டப் படிப்பும், முதுகலைப் பட்டயப் படிப்பும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்படும்.

மாணவர்களுக்கான குறுஞ்செயலிகள்

இணைய உலகத்தில் பாடம் கற்பித்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. தற்போது கணினி வழியாகப் பாடம் கற்கும் முறை மாறி செல்பேசி வழியாக மொழி கற்பிக்கப்படுகிறது. ஆதலால் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழி கற்றல் (ம) கற்பித்தலுக்காக செல்பேசி செயலிகளை உருவாக்கும்.

உரை மற்றும் பேச்சு இயக்க மென்பொருட்கள் 2017-2018 தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் (TANII) மூலம் தமிழ் உரை மற்றும் பேச்சு இயக்க மென்பொருள் உருவாக்கம் நடைபெற்று வருகிறது. உரைப் பகுப்பாய்வுக் கருவி பிழைகளை முன்னிலைப்படுத்தி, பரிந்துரைகளையும் வழங்கும். இந்த இலக்கண சரிபார்ப்புக் கருவி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பொருத்தமான சொற்களஞ்சியமாகவும் மற்றும் இலக்கண விதிகளைப் பயன்படுத்தி அறிய பயனுள்ளதாகவும் இருக்கும். பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் எளிதில் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உதவக் கூடிய பேச்சு செயலாக்க கருவி உருவாக்கப்படும்.

இயந்திர மொழி பெயர்ப்பிற்கான தமிழ் மொழியின் சொற்றொடர் அமைப்பு மற்றும் விதிமுறைகள் 2017-2018 தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் (TANII) கீழ் (7272 இலட்சம் இயந்திர மொழி பெயர்ப்பிற்கான தமிழ் மொழியின் சொற்றொடர் அமைப்பு மற்றும் விதிமுறைகளுக்காக அளிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் ஆங்கில மொழியில் சொற்றொடர் அமைப்பு மற்றும் விதிமுறைகள் கண்டறியப்பட்டது போல் தமிழ் மொழியிலும் கண்டறிவதாகும்.

எதிர்காலத்திட்டம்

கணினித் தமிழ்த் துறை

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த கணினித் தமிழ்த் துறை' என்னும் ஒரு தனித் துறையை உருவாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் விருப்பம் கொண்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் எல்லாப் பணிகளும் தமிழ் மொழி, இலக்கியம், மற்றும் கணினி தொடர்புடையதாக இருப்பதால் தனித்துறை உருவாக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இக்கணினித் தமிழ்த் துறையின் செயல்பாடுகள்:

 1. தமிழ்மொழி, இலக்கியங்களுக்கான கணினித்தமிழ் இலக்கணம் உருவாக்குதல்,
 2. பல வகையான மொழியியல் அடிப்படையில் மின்தரவு ஒன்று கணினித் தமிழுக்காக உருவாக்குதல்,
 3. பல மொழிகளில் தரவுகளும் உருவாக்குதல் (தமிழ், ஆங்கிலம். பிரெஞ்ச்)
 4. கைப்பேசிகளுக்கான செயலி மென்பொருள்கள் உருவாக்குதல்,
 5. தமிழக அரசின் அனைத்து இணையதளங்களும் தமிழாக்கம் செய்தல்,
 6. பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் மென்பொருட்கள் உருவாக்கி அளித்தல்,
 7. தமிழ் மொழிக்குப் பொதுவான ஒரு தேடுபொறி உருவாக்குதல் ஆகும்.

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை

Filed under:
3.46666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top