பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நாடகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம்

நாடகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம் பற்றிய தகவல்

அறிமுகம்

உலகிலுள்ள நாடகப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும், இந்தியாவின், தேசிய நாடக கல்வி நிறுவனமானது, நாட்டிலேயே, அந்த வகையில் இயங்கும் ஒரே கல்வி நிறுவனமாகும். கடந்த 1959ம் ஆண்டில், சங்கீத் நாடக் அகடமியால், அதன் ஒரு உறுப்பு அமைப்பாக, இந்த கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆனால், 1975ம் ஆண்டு இது சுதந்திரமான அமைப்பாக மாறி, ஒரு சுயாட்சி அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், இதற்கான நிதியுதவியை செய்கிறது.

இந்தப் கல்வி நிறுவனமானது, இரண்டு செயல்பாட்டு அமைப்புகளைப் பெற்றுள்ளது. The Repertory Company (இது 1964ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது) மற்றும் Theatre-In-Education Company  (இது 1989ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது) என்பவையே அவை. மேலும், இப்பள்ளியானது, ஒரு வெளியீட்டு அமைப்பையும்(Publication unit) பெற்றுள்ளது. நாடகம் தொடர்பான புத்தகங்களை வெளியிடுதல் மற்றும் தேவையான புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்தல் போன்றவை இதன் முக்கியப் பணிகள்.

அடிப்படை காரணம்

நாடகப் பயிற்சிக்கான இத்தகைய ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம், சங்கீத் நாடக் அகடமியால், கடந்த 1956ல், கல்வி தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு செமினாரில் உதித்தது. அதன்பிறகு, யுனெஸ்கோ அமைப்பின் உதவியால், இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பயனடையும் வகையில், 1958ம் ஆண்டு, ஒரு நாடக கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான முக்கிய கல்வி நிறுவனமான சங்கீத் நாடக் அகடமியால், இந்த ஏசியன் தியேட்டர் இன்ஸ்டிட்யூட், ஏற்கப்பட்டது. இதன்மூலமாக, 1959ம் ஆண்டு, தற்போதைய நாடகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம் உருவானது. ஆரம்பத்தில் இக்கல்வி நிறுவனம் The National School of Drama and Theatre Institute என்றே அழைக்கப்பட்டது. பின்னர், தற்போதைய பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாக அமைப்பு

சங்கீத் நாடக் அகடமியின் ஓர் உறுப்பு அமைப்பாக இருந்து, ஒரு சுயாட்சி அமைப்பாக மாறிய இப்பள்ளியின் தலைமை நிர்வாக அமைப்பாக NSD 'Society' செயல்படுகிறது.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பு

நாடகத் துறையில் பேரார்வம் கொண்ட மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில், 3 வருட முழுநேர டிப்ளமோ(PG Diploma) படிப்பை இந்நிறுவனம் வழங்குகிறது.

இப்படிப்பின் முக்கிய நோக்கமே, நாடகத்துறைக்கு தகுதியானவர்களாக மாணவர்களை உருவாக்குவதுதான். இப்படிப்பில், ஒரு மாணவரின் அடிப்படை திறன்கள் மேம்படுத்தப்படுவதுடன், பல்வேறுவிதமான அறிவுத் தகவல்களும் பெறப்படுகின்றன.

மேலும், ஒருவரின் உள்ளார்ந்த படைப்புத்திறன் வளர்க்கப்பட்டு, பொருத்தமான இடத்தில், சரியான முறையில் அதனை வெளிப்படுத்தும் திறனை வளர்ப்பது இப்படிப்பின் முக்கிய நோக்கம்.

பாடத்திட்டம்

தியரி முதல் நடைமுறை பயிற்சி வரையிலான நாடகத் துறையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் விதமாக, மிகவும் விரிவான வகையில், சிறப்பானதொரு பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. பல நாடகத்துறை பிரபலங்களின் உதாரணங்களும், இப்பாடத்திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் நாடக அம்சங்கள், நவீன யுக்திகள், இந்திய நாடகத்துறையின் பழைய மற்றும் நவீன யுக்திகள் போன்ற பலவிதமான அம்சங்கள் இப்பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

உள்ளடங்கிய அம்சங்கள்

  • நடிப்பின் அடிப்படைகள்
  • தியேட்டர் நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பிற்கான அறிமுகம்
  • தியேட்டர் வரலாறு
  • இலக்கியம் மற்றும் கலைநயம்
  • நடிப்பு மற்றும் தியேட்டர் நுட்பத்தில் ஸ்பெஷலைசேஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பிரபல நாடக நடிகர்கள் வகுப்புகளில் பாடம் எடுப்பார்கள். வகுப்பறை கற்பித்தல், வொர்க்ஷாப் பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டு(Appreciation) படிப்புகள் போன்றவை இப்படிப்பில் உண்டு.

இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், இந்தியா மற்றும் வெளிநாட்டு நாடகங்களை கண்டுகளிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இந்தப் பள்ளியானது டெல்லியில் இருப்பதால், மாணவர்களுக்கு பலவிதமான பரந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.

உடல்ரீதியாக தயார்படுத்தல் மற்றும் உடல்மொழி பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி, பல்வேறான குரல்வள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவைத்தவிர, டெக்னிக்கல் டிராயிங், ஸ்கெட்சிங், கார்பென்ட்ரி, லைட்டிங், ஒப்பனை, நாடக அரங்கம் தொடர்பான வரலாறு உள்ளிட்ட பல்வேறு அறிமுகங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்பை பற்றி இன்னும் மேலான விபரங்களை அறிய http://nsd.gov.in/delhi/index.php/academic-council-2/ என்ற வலைத்தளம் செல்க.

நூலகம்

  • இங்குள்ள நூலகமானது, நாடகம் மற்றும் தியேட்டர் தொடர்பாக உள்ள சிறந்த நூலகங்களில் ஒன்று. கடந்த 2006 ஆண்டு கணக்கீட்டின்படி, 30 ஆயிரம் புத்தகங்கள், 4000 பீரியாடிகல் வால்யூம்கள், 1064 கிராமபோன் ரெக்கார்டுகள், 616 ஸ்லைடுகள், 889 போட்டோகிராப்கள், 200 ஜர்னல்கள் போன்றவை இந்த நூலகத்தில் உள்ளன.
  • முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட இந்நூலகத்தில், பல்வேறான நவீன வசதிகள் உள்ளன. இதன்மூலமாக, நமக்கு தேவையான ஒன்றை, எளிதாக தேடி பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு, ஆடியோ-வீடியோ நூலகங்களும் உள்ளன.

விழாக்கள்

இப்பள்ளியில் பல்வேறான விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவை தொடர்பான விபரங்களுக்கு http://nsd.gov.in/delhi/index.php/festivals/ என்ற வலைத்தளம் செல்க.

சேரும் தகுதிகள்

முதுநிலை டிப்ளமோவான இப்படிப்பில் சேர, ஒருவர் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேடை தயாரிப்புகளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதை தாண்டியிருக்கக் கூடாது.

இது ஒரு அரசு கல்வி நிறுவனம் என்பதால், மாணவர்களை சேர்க்க, பலவிதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கே சேர்வதற்கு, ஒருவர், 3 முறைகளுக்கு மேல் விண்ணப்பிக்க முடியாது.

அங்கீகாரம்

இந்த PG டிப்ளமோ படிப்பானது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, இந்திய பல்கலைகளின் அமைப்பால், எம்.ஏ., பட்டத்திற்கு நிகராக மதிப்பிடப்படுகிறது. இதன்மூலம், இதை முடித்த ஒருவர், பிஎச்.டி., மேற்கொள்ள முடியும்.

3.175
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top