பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்

இணைய வழி அணுகுமுறை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கருவி, கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணினி. கணினி துறையின் வளர்ச்சியே இணையம். இணையத்தை பயன்படுத்தாத எத்துறையும் இல்லை எனலாம். வர்த்தகத் துறையில் இணையத்தின் பயன்பாட்டினால் உலகப் பொருளாதாரம் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இன்று கல்வித் துறையில் வகுப்பறைக் கற்பித்தல் முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி பயன்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைவதற்கும், ஆசிரியரின் கற்பித்தல் திறன் அதிகரிக்கவும் கணினி இன்றியமையாதது.

கலிபோர்னியா லூதான் பல்கலைக் கழகத்தினர் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலை திறன் பட மேம்படுத்த உதவும் கல்வி தொழில்நுட்ப முறைகளைப் பற்றி ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் இணைய வழி அணுகுமுறையால் ஆசிரியர்கள் பல புதிய தகவல்களுடன் மேற்கொண்ட கற்பித்தலையும், மாணவர்கள் கூடுதலான கற்றல் அடைவுகளைப் பெற்றதையும் கண்டறிந்தனர். ஒரு வரலாற்றுப் பேராசிரியர் தென்கிழக்காசிய கட்டிடக் கலை என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு 5000-த்திற்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாடங்களையும் விளக்கங்களையும் இணைய தளத்தில் பெற்று, தமக்குரிய பாடப்பகுதிகளுடன் தகுந்த நிலவரைப் படங்களையும் இணைத்து குறுந்தகடு தயார் செய்து, ஒலி, ஒலியுடன் கற்பித்ததால் தமது கற்பித்தல் திறன் மேம்பட்டதுடன், மாணாக்கர்களின் கற்றல் அடைவு தரம் உயர்ந்தது என தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். ஒர் ஆசிரியக் கல்வி பேராசிரியர் பல்வேறு முறைகளுக்கான வகுப்பறைகளை (வீடியோ) ஒலி, ஒளி வடிவில் தயார் செய்து மாணாக்கர்க்கு விளக்கியதால் கற்றல் மேம்பட்டதை உறுதிபடுத்தியுள்ளார். மேலும் பல ஆய்வுகள் இணைய வழி அணுகு முறையில் கற்பிக்கும் போது, கற்றல் வெளிப்பாடுகளை அளவிட புதிய மதிப்பீட்டு அணுகு முறைகளைக் கையாள வேண்டும் என்றும், மாணாக்கர்கள் இம்முறைக் கற்றலால் நிறைய தகவல்களைப் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர் எனவும் கூறுகின்றனர்.

எனவே இணைய வழி அணுகு முறையில் சமூக அறிவியலைக் கற்பித்தலால் மாணாக்கர்களின் கற்றல் அடைவு மேம்படும் என்பதில் ஐயமில்லை. ஆசிரிய மாணாக்கர்கள் தற்கால வகுப்பறைச் சூழலில் இணைய வழி அணுகுமுறையில் கற்பித்தலை எவ்விதம் மேற்கொள்வது என்பதைக் காண்போம்.

இணைய வழி அணுகு முறை - வரையறை

இணையம்

தகவல் பரிமாற்றத்திற்காக இன்றைய உலகில் பல்வேறு இடங்களில் உள்ள இணைய தளங்களை கணினிகள் மூலம் ஒன்று சேர்க்கும் மாபெரும் தொழில்நுட்ப வலைப்பின்னலே இணையம் எனப்படும். நாம் நமக்குத் தேவையான எல்லா தகவல்களையும் எல்லா நேரங்களிலும் இணையத்தின் மூலம் விரைவாகப் பெற்று இணையவழி அணுகுமுறையில் தரமுடியும்.

இணைய வழி அணுகுமுறை கல்வி முன்னேற்றத்தில் இணையத்தின் பங்கு ஈடு இணையற்றது. கற்பிக்க உள்ள பாடக்கருத்துக்களின் தொடர்பான தகவல்களை இணையத்திலிருந்து தேடிப் பெற்று, மாணாக்கர்க்கு கற்பிக்கும் வழிமுறையே இணையவழி அணுகுமுறை (Online Method) எனப்படுகிறது. கணினி என்பது ஒரு மின்னனுக்கருவியாகும். இன்று எல்லா துறைகளிலும் கணினி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் பல நிலைகளிலும் கணினி அதிகமாக பயன்படுகிறது. திட்டமிட்டுக் கற்பித்தலின் ஒரு வகையே கணினியில் கற்பித்தல் முறை ஆகும். கணினி கற்பித்தலில், கணினி கற்பிப்பதற்கு உதவும் கருவியாகவும், கற்கும் ஊடகமாகவும் திகழ்கிறது.


இணையம்

கணினியின் பகுதிகள்

1. உள்ளிட்டுக் கருவிகள் : உள்ளீடு என்பது கணினியின் உள்ளே செல்லும் செய்தி / தகவல் ஆகும். கணினியில் உள்ள செய்திகள் / தகவல் செலுத்த உதவும் கருவிகள் உள்ளிட்டுக்கருவிகள் எனப்படும். சாவிப்பலகை (Keyboard) சுட்டி (Mouse) வருடி (Scaner) முக்கிய உள்ளிட்டு கருவிகளாகும்.

2. வெளியீட்டுக் கருவிகள் : கணிணியிலிருந்து கிடைக்கும் செய்திகள் / தகவல்கள் பெறப்பயன்படுவது வெளியீட்டுக்கருவிகளாகும். இதில் எதிர்முன்னேற்கக் கதிர் குழாய் (Cathode Ray Tuber) அச்சு பதிவு செய்யும் கருவி (Printer) போன்றவை ஆகும்.

3. CPU (Central Processor Unit) இது தரவுகளை தகவல்களாக மாற்றும் பணியைச் செய்கிறது. இங்கு செய்தி / தகவல்களை தன்னகத்தே சேமித்து வைத்துள்ள நினைவு (Memory) உள்ளது.

4. கணினியின் வன்பொருள், மென்பொருள் - கணினியில் மென்பொருளை பயன்படுத்த உதவும் இயந்திரப் பகுதிகள் வன்பொருள் எனப்படும். கணினி மொழியில் கணினிக்குள் செலுத்தப்படும் ஆணைத் தொடர்களுக்கு (Instruction) மென்பொருள் எனப்படும். கணினி வழியே கற்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பகுதிக்கு பாடப்பொருள்களம் என்று பெயர்.

இணையவழி அணுகுமுறையின் முக்கியத்துவம்

 • இணையவழிக் கல்வியில் நாம் மிகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்டர்நெட் இயக்கும் முறை. இன்று இணையதளத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களும் இணையத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தகவல்களை சேகரிக்க பல மணி நேரங்கள் நூலகம் சென்று புத்தகங்களை தேட வேண்டிய நிலை இருந்தது. இவற்றை எளிமைப்படுத்தும் நிலையே இணைய வழி.
 • இணையவழிக் கல்வியானது பொருள் விளங்கிக் கற்பதை வலியுறுத்துகிறது. அறிவைப் பரப்புதல் என்பதை விட அறிவை ஆளுதலை வலியுறுத்துகிறது. தீவிரமாகக் கற்பது, அறிவைக் கட்டமைப்பது ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
 • (Analysis, Synthesis, Evaluation) போன்ற உயர் சிந்தனைத் திரளாக வலியுறுத்துகிறது.
 • மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கற்பதை வலியுறுத்துவது
 • மாணவர்கள் கூட்டாகவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கற்பதை (Collaboration and Cooperative Learning), பல்வேறு நிலைகளில் கருத்துப் பகிர்வை ( Multiple level of Interaction) வலியுறுத்துகிறது.
 • இணையத்தில் செய்திகள் விரைவாகவும், துல்லியமாகவும் கிடைக்கின்றன. கற்போருக்குச் செய்திகள் உடனடியாகவும், நேரிடையாகவும் கிடைக்கின்றன. தெரிய வேண்டிய செய்திகளை பாடப் பொருள் வடிவிலும், வரைபட முறையிலும், உயிரோட்டச் செயல்கள் (Animated form) வடிவில் தருகின்றது.

சமூக அறிவியலும் இணையமும்

"வானம் தொட்டுவிடும் தூரம்தான்’ என்ற நிலையில் இணையமும், கணினியின் தாக்கமும் உலகத்தை சுருக்கி விட்டது என்றால் மிகையாகாது. நம் வாழ்வின் அன்றாட பணிகளிலும் கூட கணினி பெருமளவு தாத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கணினி மூலம் ஏதோ ஒரு இடத்தில் நிகழும் இயற்கை நிகழ்வுகளையோ, சமுதாய நிகழ்வுகளையோ, உண்மை வடிவில், நேரடி அனுபவத்துடன் தெரிந்து கொள்ள உதவுவது இணையமாகும். சமூக அறிவியல் பாடத்தில், கற்பனைக்கெட்டா, இயற்கை விநோதங்களும், மனித உணர்வுகளும், சமூக கலாச்சாரப் பண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள இன்றியமையாத தொடர்பை விளக்குவது சமூக அறிவியல் பாடமாகும். இப்பாடக் கருத்துக்களை கண்களுக்கு புலப்படும் வகையில் வெளிப்படுத்திக் கொடுப்பது இணையமாகும். எனவே சமூக அறிவியல் பாடம் கற்பித்தலில், இணையம் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாகும்.

பொதுவான நிலையில் எல்லா பாடங்களிலும் Power Point Slide மூலம் பாடக்கருத்தினை சுருக்கி விரித்துரைக்க ஏற்ற விதத்தில் உள்ளது. உயிரோட்டங்கள் (Animation Pictures) மூலம் பாடக்கருத்தின் உண்மைத் தன்மையை தத்துரூபமாக விளக்க முடியும்.

சமூக அறிவியல் நிலவரை படங்களை வரைவதற்கு நவீன யுக்தியாக GIS (Geographical Information System) - 1 மணிநேரத்தில் ஒரு நிலவரைபடத்தை வரையும் நிலை மாறி அதற்குப் பதிலாக 1 மணிநேரத்தில் பல நூறு நிலவரைபடங்கள் வரையும் நிலைக்கு சமூக அறிவியலில் கணினியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சமூக அறிவியலில் Google Earth என்ற இணையதளத்தின் Website முகவரியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம்? நம்மைச் சுற்றியுள்ள தகவல்கள் என்ன? என்பதை உயிரோட்டமாக உணரும் நிலையில் அதிசயத்தக்க விதத்தில் கருத்துக்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

வரலாறு பாடத்தில் காலக்கோடுகளை அழகிய கட்டங்கள் வரைந்து Power Point உதவியுடன் மனதில் புரியும் விதத்தில் நிலைநிறுத்தி விளக்க முடியும். உலக அதிசயங்களையும், உலகின் பல்வேறு பரிமாணங்களையும் உயிரோட்டமாக கண்ணுக்கும் பதியும் விதமாக முப்பரிமான படங்கள் மூலம் கணினி உதவியுடன் தெளிவாக விளக்கி புரிய வைக்கமுடியும்.

மனிதன் எளிதில் செல்ல முடியாத இடங்களையும், தகவல்களையும் உலக வலைப்பின்னல் முகவரியில் தொடர்பு கொண்டு அதிசயிக்க முடியும்.

இணைய வழி கற்பித்தலின் படிநிலைகள்

இணைய வழி கற்பித்தலை கீழ்க்கண்ட படிநிலைகளில் மேற்கொள்ள வேண்டும்.

அவை,

திட்டமிடல்

ஆசிரியர் இணைய வழி மூலம் பாடத்தை கற்பிப்பதற்கு திட்டமிடல் அவசியம். குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அனைத்து பாடங்களையும் இணைய வழி மூலமாக கற்பிப்பது என்பது சற்று கடினமானது. ஆகவே காணுதற்கு அரிய கருத்துக்களை தகுந்த பாடங்களுடன் விளக்கமளிக்க பாடங்களை தேர்ந்தெடுப்பது இன்றியமையாதது.

(உதாரணம்) : ஆறாம் வகுப்பு புவியியல் பாடப்பகுதியில் பேரண்டம் என்ற தலைப்பினை கொண்டு இணைய வழி மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்று திட்டமிடல் வேண்டும்.

இணைய தகவல் ஆதாரங்களைத் தேடுதல்

திட்டமிட்ட பாடத்தை வகுப்பறையில் கற்பிக்கும் முன்னர், பாடத்திலுள்ள கருத்துக்களும், உட்கருத்துக்களும் தொடர்பான தகவல்களை இணைய வழி மூலம் திரட்டுதல் வேண்டும். அதற்கு இணைய முகவரிகளை தேடி கண்டுபிடித்தல் வேண்டும். (உ.ம்) பேரண்டம் பாடத்திற்கு எண்ணற்ற இணைய தகவல்கள் உள்ளன.

கணினியை ஆன் செய்தவுடன் திரையில் மூலத்திரை (Desktop) எனப்படும் கணினியில் ஆரம்பத்திரை தோன்றும். இதில் குறியீடுகள் பொம்மை உருவத்தில் இருக்கும். ஏற்கனவே BSNL மூலமாக நீங்கள் இணைப்பை பெற்றிருந்தால் BSNL க்கான குறியீடு (ICON) பொம்மை மூலத்திரையில் இருக்கும். இதை மெளஸில் இரண்டு தடவை கிளிக் செய்யவும். இந்த அழைப்பு தொலைபேசி வழியாக BSNL செர்வரை (Server) அடையும். இந்த செர்வர் மூலம் இண்டர்நெட்டுடன் இணைக்கப்படுகிறீர்கள். அதற்கு அடையாளமாக வலது ஒரத்தில் இணைக்கப்பட்டது என்றும் அதன் வேகமும் உள்ள செய்தியைக் காணலாம்.

இன்டர் நெட்டிற்குள் வேலை செய்ய எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) என்ற மென்பொருள் தேவை. கணினியின் மூலத்திரையில் எக்ஸ்ப்ளோரர் குறியீடு (lcon) இருக்கும். இதை ப்ரெளசர் (Browser) என்று கூறுவர். இந்த எக்ஸ்ப்ளோரரை மெளஸால் இரண்டு முறை கிளிக் செய்தால் இன்டர்நெட் திரை திறக்கிறது.

இண்டர்நெட்டில் வெப்தளத்தின் முகவரி உதாரணத்திற்கு http://www.vikaspedia.com. (Hyper text transfer Protocol) பரிவர்த்தனை செய்வதற்கு இது ஒரு மென் பொருள் ஆகும். ஒரு வெப்தளத்தின் பக்கத்தை திறக்க விரும்புகிறேன் என்று இதன் பொருள். அதன் பின் வருகின்ற WWW என்ற எழுத்து World Wide Web என்பதன் சுருக்கெழுத்து vikaspedia என்பது வெப்தளத்தின் பெயராகும்.

தேர்வு செய்தல்

குறிப்பிட்ட இணைய தளத்தில் எண்ணற்ற தகவல்கள் விரிந்து கிடக்கின்றன. ஆறாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப தகவல்களை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டுமெனில் அதிலுள்ள பேரண்டம் பாடத்திற்கு குறிப்பிட்ட இணைய தளத்தில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அவற்றுள் பேரண்டம், பேரண்டத்தின் அமைப்பு, அண்டங்கள், பால்வழி அண்டம், சூரிய குடும்பம், சூரியன், புவி, நாம் வாழும் இடம் போன்ற ஆறாம் வகுப்புக்கே உரிய கருத்துக்களுக்கு தொடர்பான தகவல்களை தேர்வு செய்தல் வேண்டும்.

ஆறாம் வகுப்பு மாணவர்களின் வயதிற்கேற்று மன வளர்ச்சிக்கேற்ற புரிதலுக்குரிய அளவில் உள்ள கருத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். தேர்ந்தெடுக்கும் தகவல்கள், பேரண்டத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாக இருக்க வேண்டும். (உ.ம்) சூரியனிடமிருந்து வரும் வெப்பக்கதிர்களின் தீவிரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள், வெப்பத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து உலக வெப்பமயமாதல் நடைபெற்று வரும் இச்சூழலில் வெப்பமயமாதலின் நடைமுறை வழிகள் பற்றிய தகவல் திரட்டி கற்பிக்க ஏதுவான தகவல்களைத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.

இணைத்தல் :

இணையத்திலிருந்து தேர்வு செய்த தகவல்களைக் கற்பிக்கப்படவுள்ள பாடக் கருத்துக்களுடன், தக்க படங்களுடன் இணைக்கும் செயல்முறையை ‘இணைத்தல்” என்கிறோம். நாம் எடுத்துக்கொண்ட பேரண்டத்தைப் பற்றிய தகவல்களுக்கு இணையத்தில் உயிரோட்டச் செயல்கள் மூலம் (Animation) நகர்ந்து கொண்டு செல்லும் பேரண்டப் படங்களை காணலாம். அவற்றை இணையத்திலிருந்து இறக்கி (Download) பாடக் கருத்துக்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட பாடத் தலைப்பு எதுவாயினும் அதற்குரிய தகவல்களை பாடத்துடன் இணைத்தல் மிக அவசியம். ஏராளமான தகவல்கள் இணையத்தில் கிடைக்கக் கூடும். அவற்றில் பாடக் கருத்துக்களுடன் இணைக்கத் தக்கவற்றை மட்டுமே தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

பாடத்திட்டம் தயாரித்தல் :

ஆசிரியர் குறுந்தகட்டில் பதிவு செய்வதற்கு முன் இணையவழி தகவல்களுடன் இணைத்த பாடக் கருத்துக்ளை வகுப்பறைக் கற்பித்தல் செயல்முறைப் படிகளுடன் பாடத்திட்டம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் வகுப்றைக் கற்பித்தலின் படிநிலைகளாக கற்பித்தல் நோக்கம், முன்னறி சோதனை வினாக்கள், பாடக் கருத்துக்களை படிப்படியாக விளக்குதல், பாடத்தின் உட்கருத்துக்களை விளக்கிய பின் மதிப்பீட்டு வினாக்கள் தொகுத்தல், ஒப்படைவு தலைப்புகள் அனைத்தும் இடம் பெறுதல் வேண்டும். இணையத் தகவல்களில் கருத்துக்களை புரிய வைப்பதற்கு மாணவர்கள் வகுப்பறையில் செய்வதற்கேற்ற செயல்பாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றையும் தேர்ந்தெடுத்து பாடம் கற்பிக்க அனுமதித்துள்ள போதுமான நோக்கத்திற்கேற்ப பாடத்திட்டம் தயார் செய்தபின், குறுந்தகடுகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

மென்பொருள் தயாரித்தல்

கணினியில் கற்பிப்பதற்கேற்ற மென்பொருளான குறுந்தகடுகளில் தயார் செய்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மென்பொருள் தயாரித்தல் வேண்டும். பாடத்தின் படிநிலைக்கேற்ப, ஒவ்வொன்றாக கணினி அச்சு செய்வதுடன், உரிய படங்களையும் பொருத்தி, ஒலி, ஒளிக் காட்சியுடன் தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்துள்ள பாடத்திட்டத்தில் குறிப்புகளைப் போலவே, முன்னறி வினாக்கள், படங்களுடன் கூடிய பாடக்கருத்துக்கள், மாணாக்கர் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உட்பட அனைத்தையும் குறுந்தகடுகள் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். இக்குறுந்தகடே பாப்புத்தகம் போன்று வகுப்பறைச் சூழுலில் மட்டும் அல்லாது தனி ஒரு மாணவனே கணினி வழியாக கற்றுக் கொள்ளவும் ஏற்றத்தக்கதாகவும் அமையும்.

கற்பித்தல் கற்றல்

இணையவழி கற்பித்தல் அணுகுமுறையில் முக்கிய படிநிலையாக வகுப்பறைக் கற்பித்தல் உள்ளது. தயார் செய்து வைக்கப்பட்டுள்ள குறுந்தகடு கணினி மூலமாகவோ அல்லது LCD Projector மூலமோ மாணாக்கர்களுக்கு கற்பித்தல் வேண்டும். காட்சியுடன் கூடிய பாடக்கருத்துக்களை ஆசிரியரின் துணையுடன் கற்பிக்கும் போது மாணாக்கர்களுக்கு கருத்துக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன எனக் கல்வியாளர்கள் விளக்குகின்றனர். இணையவழி கற்பித்தலில் மாணவர்களின் புரிதல் போக்கிற்கு ஏற்ப, கணினியை நிறுத்தி, ஆங்காங்கே கருத்துக்களை ஆசிரியர் தெளிய வைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இம்முறை இயந்திர வழி கற்பித்தலாக இல்லாமல் ஆசிரியர் வழிநடத்தும் கற்றல் முறையாகவும் உள்ளது. மாணாக்கர்களின் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் வழி ஏற்படுகிறது.

மதிப்பிடுதல்

இணையவழி அணுகுமுறையில் மதிப்பிடுதல் என்ற கற்றல் கற்பித்தலின் உட்கூறும் அடங்கியுள்ளது. ஆசிரியர் தயாரிக்கும் குறுந்தகடுக்குளில் மதிப்பீட்டு வினாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை பாடம் கற்பிக்கும் முன் முன்னறி சோதனைக்கும், பாடம் கற்பிக்கும் போதே இடையிடையே கேட்கப்படும் தொடர் வினாக்களாகவும், பாடம் கற்பித்து முடித்தப்பின் அடைவு சோதனை வினாக்களாகவும் அமைந்துள்ளன. தவிர, கணினி நுட்பத்தை நிறுத்திவிட்டும், கற்பித்தல் செயல்பாடுகளுடன் மதிப்பீடு செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.

தொடர்பணி

ஆசிரியர் தொடர்பணியாக மாணாக்கர்களை குழுவாக பிரித்து, சிறு செயல் திட்டங்களையும் தனியாள் ஒப்படைவுகளையும் மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும். (உதாரணமாக) பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக படித்தற்கேற்ப இணையத் தளத்தில் தகவல்கள் சேகரித்து குறுந்தகடுகளை தயார் செய்து விளக்க வேண்டும்.

பரவலாக்குதல் :

தொடர்பணியில் மேற்கொண்ட ஒப்படைவுகளையும், செயல்திட்டங்களையும் ஆசிரியர் மீள்பார்வை செய்து மதிப்பீடு செய்த பின்னர், மாணவர்கள் மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அறியும் வண்ணம், பரவலாக்குதல் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுதுதான் மற்றவர்களுக்கும் இணைய வழிக் கற்றலின் முக்கியத்துவத்தை உணரவும், அதை பயன்படுத்துவதில் ஆர்வமும் ஏற்படும்.

இணைய அணுகுமுறையின் பயன்கள்

 • ஒவ்வொரு மாணவரும் கணினியின் முன் அமர்ந்து தனது சொந்த வேகத்தில் கற்க முடிகிறது.
 • இணைய உதவியால் தனிப்பட்ட மாணவரின் தேவைக்கேற்ப கல்வி வழங்க முடிகிறது.
 • உடல் ஊனமுற்றவர்கள், கற்றல் குறைபாடுடையவர்கள் அறிவாண்மை மிக்க மாணவர்கள் ஆகியோருக்கு இணைய வழியில் சிறப்பான கல்வி வழங்க முடிகிறது.
 • பரந்த இந்த அறிவுலகத்தில் தேவையான அறிவை இணைய வழி மூலம் பெற முடிகிறது. இணைய வழிக் கல்வி மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
 • முப்பரிமாண படங்கள் மூலம் சமூக அறிவியல் கருத்துக்களை அறிய உதவுகிறது. நிலவரைபடங்களை உருவாக்குவது எளிதாகிறது.
 • நேரிடை அனுபவத்தை தருகிறது.
 • அனைத்து பாடங்களிலும் வகுப்பறைச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.


இணையம் - பயன்கள்

இணையம் மூலம் பெறக்கூடிய தகவல்கள்

மாணவர்கள் படிக்க வேண்டிய படிப்பு பற்றிய முழு விபரம் (Course Information)

மாணவர்கள் தங்களுக்குள் பறிமாறிக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்த விபரம் (Class Communication)

பயிற்சி ஒப்படைப்புகள் மற்றும் மதிப்பீடு பற்றிய விபரம் (Assignment and Assessment)

மேலும் பயில்வதற்கு நூல்கள் விபரம் ( Reference Materials)

இணைய ஆதாரங்கள் : (சில எடுத்துக்காட்டுகள்)

 • http://vikaspedia.in/index/
 • http://www.webopedia.com
 • https://in.yahoo.com/
 • http://www.nationalgeographic.com/

கடைசியாக வரும் .com என்னும் சொற்தொடர் வணிகத்திற்காக உபயோகப்படும் தளம் என்பதைக் குறிக்கிறது.

இதைப்போல்

 • .org என்ற சொற்தொடர் வணிக நோக்கமில்லாத ஒரு நிறுவனத்தை குறிக்கிறது.
 • .net என்ற சொற்றொடர் இன்டர்நெட் சம்பந்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
 • int என்ற சொற்றொடர் அகில உலக நிறுவனர் என்பதைக் குறிக்கின்றது.
 • ac.uk என்ற சொற்தொடர் கல்வி நிறுவனத்தை குறிக்கிறது. .

முடிவுரை

கல்வி முன்னேற்றத்தில் இணையத்தின் பங்கு இணையற்றது. ஏராளமான தகவல்களையும், புள்ளி விவரங்களையும் உடனுக்குடன் இணையம் மூலம் குறைந்த நேரத்தில் பெற முடிவதால் இதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இணைவழி அணுகு முறையில் ஆசிரியர்கள் திட்டமிடுதலும், தயாரித்தலும் கடினமாகத் தோன்றினாலும், அணுகியபின் இம்முறை மிக எளிது, பயனுள்ளது என்பதனை மாணவர்களின் கற்றல் வெளிப்பாட்டின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் கற்பித்தலால் இன்றைய சமுதாயதிற்கேற்ப மாணவர்களின் திறனை அதிகரிக்கச் செய்ய முடியும். எனவே ஆசிரியர்கள் தங்களுக்குள் இத்திறனை மேம்படுத்துதல் அவசியம் ஆகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

3.15384615385
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top