பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு

அறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு குறித்து இங்கு விவரிக்கப்பாட்டுள்ள்ன.

முன்னோக்கு

கற்றவர்கள் எல்லாக் காலங்களிலும் கல்லாதவர்களைக் காட்டிலும் அதிகாரம் மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கற்றவர்க்கு ஆளும் அதிகாரம் எளிமையாகக் கிடைத்து வந்தது. அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்ற புறநானூற்று வரிகளாலும் கல்வியால் வரும் தகுதிச் சிறப்பு போற்றப்பட்டுள்ளது.

வேளாண் பொருளாதாரம், பயிர்த்தொழில் உற்பத்தி குறித்த அறிவாக அமைந்தது. அதன் வளர்ச்சி வணிகப் பொருளாதாரத்தை உருவாக்கியது. வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியும் வணிகமுமே பொருளாதாரத்தின் நிலைகளாக நீண்டகாலம் அமைந்தன. பொருளாதாரம் நாளடைவில் விளைபொருட்களோடு, எரிபொருள்களான நிலக்கரி, எரி எண்ணெய், உலோகம் (இரும்பு, தங்கம், செம்பு) என்னும் கனிம வளப் பொருளாதார அடிப்படைகளில் விரிந்தது. பின்னர் போக்குவரத்தும், தொலைத்தொடர்பும் வளர்ந்தபின், விளை பொருட்கள், கனிமப்பொருட்கள் என்பவற்றோடு உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் இணைந்து அறிவுப் பொருளாதாரம் வழியாக உலகம் ஒரு குடும்பமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்டது இந்தியா. இம்மனித வள வாய்ப்பு கொண்ட இந்தியா, கல்வியின் வழி அறிவுப் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வலிமை அதிகரிக்க உள்ள வாய்ப்புகளை இவ்வலகில் காண்போம்.

கல்வியும் பொருளாதாரமும்

பண்டைக் காலத்தில் எல்லாச் சமூகங்களிலும் மத குருக்களும், மந்திரிகளும் கற்றவர்களாக இருந்து அரசை வழி நடத்தியதற்கு "அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்னும் புறநானூற்று வரிகள் சான்றுரைக்கின்றன. "கல்வியின் மிக்கதாம் செல்வம் ஒன்றில்லையே' என பாவேந்தர் பாரதிதாசனாரும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே கல்வி, எந்நாளிலும் உற்பத்திக்கும் உயர்வுக்கும் நிர்வாகத்திற்கும் அடிப்படையானது என்பது பெறப்படுகிறது.

வாழ்விற்குத் தேவையானது அறிவு. அதனை விசாலமாக்கிப் பயன்மிகுவிப்பது கல்வி எனலாம். உற்பத்தியின் பெருக்கம், பொருள் விற்பனை-வாணிபப் பெருக்கமாக மாறுகிறது; வணிகப் பொருளாதாரமாக மாறி உலக நாடுகளிடையே தொடர்பு நெருக்கம் ஏற்பட்ட பொழுது, விளைபொருள் பற்றிய அறிவும், புவியியல் அறிவும் கல்வியில் இடம்பெற்றன. வேளாண்மை , வாணிபம், போர்க்கலை, மருத்துவம், அரசியல், வானியல் என விரிந்து கொண்டே செல்லும் தேவையையொட்டிப் பரவலாகி வளர்ந்த கல்வி, பொருளியலுக்கு அடிப்படையாகி நாடுகளின் வளத்துக்கு வழிவகுத்தது.

அறிவுப் பொருளாதாரம் என்பது தான் என்ன?

கடற்பயணக் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு கண்டுபிடிப்புகளினால் உலகின் ஆற்றல் வளங்களைக் கண்டுபிடிக்கும் தீவிரம் வளர்ந்தது. இதனால் இயந்திரக் கண்டுபிடிப்பும், தொழில் நுட்பமும் அறிவுப் பொருளியலின் அடிப்படையாயின. கல்வி, காகித அச்சு செய்வதாகவும் இயந்திரத் தொழில் நுட்பம் அறிவதாகவும் மாறியது. கருத்தியல் கல்வியுடன், தொழிலியல் கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும், கணிணிக் கல்வியும் உலகளவில் பரவலாயின.

அனைத்துப் பொருளாதார நடைமுறைகளிலும் கல்வியறிவின் தாக்கம் இன்றியமையாததோர் முக்கித்துவத்தைப் பெற்றுவருகிறது. அறிவையே மூலதனமாகக் கொண்டு ஆற்றப்படும் பொருள்செய், நிதிசெய் வாணிப முயற்சிகளைப் படிப்பதே அறிவுப் பொருளாதாரம் (Knowledge Economy) எனப்படுகிறது. பொருளாதாரத்துக்குப் பொருளும் பணமும் அடிப்படையாவதற்கு மேலாகவும் அறிவு அடிப்படையாகிறது என்பதே இப்பொருண்மை .

பொருளியலாளர்களின் பார்வையில் கல்வி

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரமும், திருவள்ளுவரின் திருக்குறள் பொருட்பாலும் பொருளியலை அரசின் அங்கமாகக் கொண்டன. ஆடம்ஸ்மித் 'தம் தேசங்களின் வளங்கள்' என்னும் நூலில் கல்வியை அறிவும் திறமையும் பெறுவதற்கான மூலதனம் எனக் குறிக்கிறார்.

"மன்னரும் மாசரக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்-மன்னர்க்குத் தன்தேசமே அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு".-வாக்குண்டாம்- ஒளவையார்.

ரிக்கார்டோ என்னும் பொருளியலாளர், எழுதிய மக்களின் பொருளியல் நல்வாழ்வு, மக்கள் தொகையைக் குறைப்பதன் மூலமும், கல்வி மூலதனத்தைப் பெருக்குவதன் வாயிலாகவும் அமையுமென்றார். ஜான்ஸ்டுவர்ட்மில் பொதுமக்கள் பெறும் கல்வி, பெருமை, பொருளியல் முன்னேற்றம், தனியாள் மேம்பாடு ஆகியவற்றை மக்களிடையே உருவாக்கும் என அறிவித்தார். ஆல்பிரட் மார்ஷல் என்பவர் அரசும் பெற்றோரும் இணைந்து தொழிற்கல்வி வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கார்ல் மார்க்ஸ், தொழிலாளர் வர்க்க ஆட்சியில் தொழில் நுட்பக் கல்வி, கருத்தியல் மற்றும் செய்முறையாகத் தொழிலாளர்களின் பள்ளியில் கற்றுத் தரப்பட வேண்டுமென்றார்.

மற்ற தொழில்களைப் போலவே கல்வியிலும் உள்ளிடு பொருட்களான (inputs) நிலம், கட்டடப்பொருட்கள், நூல்கள், விளையாட்டுப் பொருள்கள், அறிவியல் கருவிகள், ஆசிரியர் தொண்டு ஆகியனவற்றைப் பணம் செலவிட்டுப் பெற வேண்டியவைகளாக அமைத்திருக்கின்றன. எனினும் வெளிப்பாட்டில் கல்வியும், பயிற்சியும், சேவையும் சந்தை விற்பனைப் பொருட்கள் அல்ல என்றார் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா. இன்று தொழிற்சாலை முதலாளிகளைப் போலவே தொழிலில் வல்லுனத்துவம், அனுபவக் கல்வி பெற்றவர்களும் பொருளாதார மேன்மை பெற்றவர்களாக வாழ்கின்றனர். தொழில் வல்லுனர்களின் பாண்டிதயமும், அறிவும் பெரும் தொழிற்சாலைகளின் அடிப்படை மூலதனமாய் அமைகின்றமை கண்கூடு.

கல்வியின் முன்னேற்றம்

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாகக் கல்வியைப் பொருளாதாரச் சொல்லாட்சியின் வழி ஆய்ந்து பார்க்கத் தொடங்கியுள்ளோம். கல்வி முறையை சமூக வாழ்முறையுடன் இணைத்தல், கல்வியின் முக்கியத்துவத்தைத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்பாட்டுடன் இணைத்தல், கல்வி மூலாதாரங்களை மறுபகிர்வு செய்தல், ஒழுங்குப்படுத்துதல், கல்வியைப் பொருளியல் உற்பத்திக்கு உகந்ததாக்குதல், சமூகப் பொருத்தப்பாட்டைத் தரும் கல்வியாக மாற்றுதல், கல்வித் திட்டமிடல் மற்றும் கல்வி மேலாண்மை உத்திகளை மேம்படச் செய்தல் ஆகியன அறிவுப் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறை உத்திகளாகும். எல்லா நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திலும் அடிப்படைக் கல்வியறிவு தனிப்பெருங்காரணியாக, முதலீடாக, இடுபொருளாக வலியுறுத்தப்படுகிறது.

கல்வியை வெறும் பொருளாதார நோக்கில் மட்டுமே காணுதல் கூடாது. கல்வியின் பயன்களை அளந்தறிய இயலாது. கல்வியறிவால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் எவை? அவை எங்கு தோன்றி எங்கு முடிகின்றன என்பதை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத பலமுனைத்தாக்கமும், நெடுநாள் பயனும் மிக்கதாகக் கல்வி அமைகிறது. பொருளாதார வரவாகக் கல்வியை நாம் காண்பதைக் காட்டிலும், அறிவு பெறுதல், பண்பாடு, சமூகத்திறன் நன்னடத்தை, நல்வாழ்வு ஆகிய விலை மதிப்பிட இயலாத அரும்பயன்கள் எனக் கல்வியின் மேம்பட்ட பெருமைகள் பலவாகும். எனினும் இந்தியாவிலிருந்து கல்வியும், தொழில்நுட்பமும் கற்ற இந்தியர்களைப் பேரளவில் வெளிநாடுகள் நம்பகமாக வரவேற்கும் நிலை ஏற்பட்டுள்ளமை பெருமைக்குரியதாகும். இந்தியர்களின் பகுப்பொருள் அறிவைப் போலவே தனிமனிதப் பண்பாட்டுக் கூறுகளும், நன்னெறிப் பாங்குகளும் உலக மனிதவளச் சந்தையில் உயரிய இடத்தைப்பிடித்து வருகிறது.

பொருளாதார வகைப்பாடுகள்

பொதுவாகப் பொருளாதாரத்தைக் காலவரிசை நோக்கில் மரபுநிலைப் பொருளாதாரம், தொழில் யுகப் பொருளாதாரம், தற்போதைய நவீனகாலப் பொருளாதாரம் எனப் பிரித்து அறியலாம்.

செயல்

பலரது உடலுழைப்பால், உற்பத்தியால், படைப்பால் இயற்றப்படும் பொருள் செல்வத்தைக் காட்டிலும், மதிநுட்பத்தால், செயல் நுணுக்கத்தால், கல்வி அறிவாற்றலால் ஈட்டப்படும் பெரும் செல்வம் பன்மடங்காக அதிகரித்து வருவதை திறமை எனலாமா? ஏய்ப்பு, சுரண்டல் எனலாமா? - கருத்தரங்கம் நடத்தித் திரளும் கருத்துக்களைப் பதிவேட்டில் பதிக.

1. மரபுநிலைப் பொருளாதாரம்

மனித வரலாறு, உணவு தேடுதல், வேட்டையாடுதல், வேளாண்மை , நெசவு, கைத்தொழில், ஆலைப்புரட்சி, போக்குவரத்து கணினித் தொழில், தகவல் தொடர்பு வளர்ச்சி எனப்பல காலக்கட்டங்களைச் கண்டு வருகிறது. இவற்றில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வுப் பொருளாதாரத்தை மரபுநிலைப் பொருளாதாரம் எனக் குறிப்பிடலாம்.

2. வேளாண் பொருளாதாரம்

இந்தியாவில் உடலுழைப்பையும், கைத்தொழிலையும் மையமாகக் கொண்ட பண்பாட்டு வாழ்க்கையில் வேளாண் உற்பத்திப் பொருளாதாரம் சிறந்திருந்தது. உழைப்பு, கால்நடைகள், நிலம், நீர், காற்று, சூரிய ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையான வளங்களாகக் கொண்டு இவ்வாழ்க்கை அமைந்திருந்தது. இது உழைப்பை உலகுக்களித்து. இதில் பயன்நோக்கம் அதிகம். இது ஒரு உற்பத்திப்பணி.

3. வணிகப் பொருளாதாரம்

வேளாண் விளை பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், வேறொரு நாட்டிற்கும் தரை மற்றும் கடல்வழியாகக் கொண்டு சென்று வாணிகம் செய்வதால் வரும் வணிகப் பொருளாதாரம் வேளாண் பொருளாதாரத்தின் உச்சகட்ட மாற்றமாக எல்லாச் சமூகங்களிலும் நிலவியது. இது வணிகப் பொருளாதாரம் எனப்பட்டது. இது யூகத்தை அடிப்படையாகக் கொண்டது. இலாப நோக்கம் அதிகம். இது சேவைப்பணி.

4. தொழில் யுகப் பொருளாதாரம்

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களான ஆடை, கருவிகள், சரக்குகள் முதலான சந்தை உருவாகத் தேவையான தொழிற்சாலைகளைக் கொண்டிருந்த நாடுகள் பொருளுற்பத்தியில் மிகுந்த நாடாகத் திகழ்ந்தன. இது மற்றவர் உழைப்பை நாடிய முயற்சி. இங்கு தேவைகள் நிறைவேற்றம் பெற்றன. இங்கு ஆக்கத்தைப்போலவே சுரண்டலும் இடம் பெற்றது.

5. கனிமவளப் பொருளாதாரம்

இரும்பு, தங்கம், நிலக்கரி, பாறை எண்ணெய்கள் போன்ற நிலத்தடி கனிம வளங்களைக் அகழ்ந்தெடுக்கும் நாடுகள் தங்கள் வளங்களின் வாயிலாகப் பொருளதார உயர்வைக் கண்டன. மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோலியப் பொருளாதாரத்திரல் உயர்ந்ததை அறிவோம். ஈடு செய்யவியலாவற்றும் வளங்களை இது பயன்படுத்துகிறது. சூழல் மாசு அதிகம், பக்க விளைவுகளும் அதிகம்: ஆக்கம் அறிவு இரண்டுமே இதில் இடம் பெறுகின்றன.

6. தொழில், வாணிபப் பொருளாதாரம்

இயற்கை வளங்களும், கனிமவளங்களும் இல்லாத நாடுகள் வாணிபத்தை மேற்கொள்ளுவதன் வாயிலாகப் பொருளாதாரத்தில் உயர்ந்தன. அவை தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதன் வாயிலாகப் பெருவளம் பெற்றன. இதனை இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உயர்வு வழியாகப் புரிந்துகொள்ளலாம்.

7. அறிவுப் பொருளாதாரம் (Knowledge Economy)

இக்காலத்தில் மனித அறிவே பொருளாதாரமாக அமையும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்குப் பல நாடுகளிலிருந்தும் குடியேறிய ஆய்வறிஞர்களால் அந்நாட்டின் பொருளாதார உயர்வு ஏற்றம் பெற்று வருகின்றது. இதன் வழியே வளரும் நாடுகளின் அறிவைத் தம் குடியேற்ற உத்திகளின் மூலம் பெறும் உத்தியை வளர்ந்த நாடுகள் மருத்துவம், ஆய்வு, பொறியியல் துறைகளில் கையாள்கின்றன. பொருளாதார உயர்வைக் கொண்டிருக்கும் நாடுகளின் போக்குவரத்தும், தொலைத் தொடர்பும் உலகளாவி விரிந்துள்ளன. எந்நாட்டிலும் எந்நாட்டினரும் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அறிவுப் பொருளாதாரம் உலகளவில் பரந்துவிரியத் தொடங்கியுள்ளது. அறிவுப் பொருளாதாரம் உடலுழைப்பைக் குறைத்து, தொழில் நுட்பங்களையும், உத்திகளையும் அதிகமாகப் பயன்படுத்தி, மக்கள் தொகைமிக்க வளரும் நாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த நாடுகள் தம்மை மிக விரைவாக உலக நிதிய மதிப்பில் உயர்த்திக் கொள்ள வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

8. அறிவு வணிகப் பொருளாதாரம்

இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 117 கோடி. உலகில், ஆங்கிலம் பேசும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களில் பெரும்பான்மையாயோர் இந்தியாவில் வாழும் சூழல் காலனியாதிக்கத்தால் நம் நாட்டில் ஏற்பட்ட சூழலாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைய நம்நாட்டு இளைஞர்கள் ஆங்கிலவழி கணினிகற்று மனிதவளத்தை மேலைநாடுகளில் விற்பனைப் பொருளாக்குகின்றனர். இது தொலைத் தொடர்புகளின் நீட்சியாக, அயலகப்பணி (Out Sourcing) வாயிலாகவும் நடைபெறுகிறது. இப்பணி தாராளமயம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கலின் வழி வாகனம், மின் உற்பத்தி, மருந்து, வேளாண்மை போன்ற பலதுறைகளிலும் விரிவடைந்துள்ளது. இதனால் அறிவுசார், மனிதவளம் மிக்க இந்தியா உலக அரங்கில் தம் அறிவு வளத்தை வணிகப் பொருளாக்கி வருகின்றது. எது எப்படி ஆயினும் உடல் உழைப்பு, தொழில்நுட்பம், விழிப்புணர்வு, தனிமனிதப்பண்பு, கட்டுப்பாடு, நன்னெறிகள் இவை அனைத்திலுமே உயர்ந்த, சீரான மனித வளத்தையுடைய நாடுகளே இப்பொருளாதாரப் போட்டியில் வெற்றியுடன் நிலைத்து நிற்க முடியும் என்பது உறுதி.

9. பண்பாட்டறிவுப் பொருளாதாரம்

உலகெங்கும் உடலுழைப்புக் கூலிகளாகக் குடிபெயர்ந்த இந்திய மக்கள் இந்தியப் பண்பாட்டினையும் தம் வாழ்வின் சிறப்பாகவே கொண்டிருந்தனர். இன்றைய அறிவுப் பொருளாதார உலகில் பண்பாட்டின் கூறுகளான நடனம், இசை, நாடகம், இலக்கியம், மருத்துவம், குடும்பப் பிணைப்பு, தனிமனித ஒழுக்கம், மனிதநேயம் என்னும் பல்வேறு கூறுகள் பண்பாட்டு மூலதனமாக உலகெங்கும் இணையம் மற்றும் வாழ்வு வழி, பரிணமித்து வருகிறது. வேற்றுமையுள் ஒற்றுமை கொண்ட இப்பண்பாட்டு வாழ்முறையால் உலகோரைத் தம்பக்கம் மாற்றம் கொள்ளச் செய்வதோடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதற்கு அடிப்படையான இந்தியக் கல்விமுறையைப் பாராட்டுவதையும் இணைத்துக் காணும்போது அறிவுப் பொருளாதார உலகில் நம் நாடு கோலோச்சும் நிலை தொலைவில் இல்லை என்பதை ஊகிக்க முடிகிறது. எனினும் இதன் எதிர்முகத் தாக்கங்களுக்குள் இந்தியா சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது பற்றியும் நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியுள்ளது.

இந்திய அறிவு மேலாண்மை

நீண்ட காலக் காலனியாதிக்க ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் கற்றவர்கள் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் குறைந்தே இருந்து வந்துள்ளனர். கணிதம், வானியல், வேளாண்மை, நீர்ப்பாசனம், கட்டடக்கலை, மருத்துவம், இசை போன்ற பல்வேறு துறைகளில் பன்முகப் பரிமாண அறிவு கொண்டிருந்த இந்தியரின் நிலை சுதந்திர இந்தியாவில் விரும்பத்தக்க வகையில் மாறத் தொடங்கியுள்ளது.

எல்லார்க்கும் கல்வியறிவு, எல்லார்க்கும் சுகாதார நல்வாழ்வு, எல்லா நாடுகளிலும் கற்றறிந்த இந்தியர்களுக்கு வரவேற்பு, இந்தியர்களின் உலகப்பரவலான குடியேற்றம், தொழில்நுட்பத்தில், வேளாண்மையில், பண்பாட்டில் இந்தியர்களின் ஈடுகொடுக்கும் தன்மை முதலியன இந்தியாவின் அறிவுப் பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகள் எனலாம். நம் நாட்டின் அறிவு மேலாண்மை புதுமையாக்கத்தின் வாயிலாகத் தொழில் நுட்பத்தில் மட்டுமின்றி அடிப்படை அறிவியலிலும் மாற்றம் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழுமென அறிஞர்கள் கருதுகின்றனர்

செயல்

"இந்தியர்கள் முதலில் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். தான் ஓர் இந்தியனாக இருப்பதன் அருமையை ஒப்பிட்டு உணர வேண்டும். சாதிக்கப் பிறந்ததாக ஆர்வப்பட வேண்டும். பன்னாட்டரங்கில் பாரதம் எந்நாட்டிற்கும் சளைத்ததல்ல என்ற உறுதியுடன் வாழத்தன் கல்வியறிவால் தக்கன தேடிப் பயிற்றுவதும் பயிலுவதும் செய்து வலுவூட்டிக் கொள்ள வேண்டும்” இந்நாட்டின் எதிர்கால ஆசிரியர் எனும் வகையில் இந்நோக்கில் தங்கள் செம்மாப்புப் புனைவுகளை | இனங்கண்டு ஒரு கட்டுரை வரையச் செய்க.

மனித வளம்

கி.பி 2020 இல் இந்திய மக்கள் தொகை உலக மக்கட் தொகையில் 25 விழுக்காடாக உயரும் நிலை உள்ளது. மனித வளம், அறிவு வளம், ஆக்க வளம், பண்பாட்டு நலம், பொருள் ஆதாரமாகக் விளங்கும் இச்சூழலில் உலகின் இளைஞர்களை மிகுதியாகக் கொண்டதாக பாரதம் இருப்பதால், மனவளம், உடல்வளம், அறிவுவளம் உடையவர்களாக அவர்களை உருவாக்கும் கல்வித்தரம் இந்நாட்டின் இன்றைய உடனடித் தேவையாகும். அனைவர்க்கும் தொடக்கநிலைக் கல்வி தொடங்கி 14 வயது முடியும் அனைவர்க்கும் பொதுக்கல்வி தந்து, உயர்கல்வியில் உலகச் சந்தையில் தவறாது தனக்கொரு இடம் கண்டு தன்ைைன வாழ்வித்துக் கொள்ள வழிவகுப்பது தலைமையாய கடமையாகும். உயர்கல்வி கற்போரின் ஆய்வுத்திறனை வளர்த்து தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் நாட்டுப்பற்றும், மனிதநேயமும் கொண்ட குடிமக்களாக அவர்களை வளர்ப்பதும் கல்வியின் முக்கியத் தேவைகளாகும்.

இயற்கை வளம் காத்தல்

இயற்கையைப் பேணாமலே சுரண்டியதன் விளைவாகச் சுற்றுச் சூழலில் நீர், நில, காற்று மாசு இன்று அதிகமாகி வருகிறது. வெப்ப மிகுதியால் பெருங்கேடுகள் தோன்றும் சூழல், எரிசக்திப் பொருள்கள் குறைந்து கனிமவளப் பொருளாதார நிலை குலையும் வாய்ப்பும் உள்ளது. உலகச் சூழலில் இயற்கை வளங்களையும் நலங்களையும் பேணி, நீடித்த அறிவியல் வழிமுறைகளை எல்லாத் துறைகளிலும் நம் நாட்டினர் கல்வியின்வழிப் பெற்றாக வேண்டும். அனைவருக்கும் கல்வி தந்து, கல்வியில் தர வேறுபாடுகளை நியாயப்படுத்தாமல் அனைவரும் தரமான கல்வியை முயன்று பெற்று உலக அறிவுப் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி நின்றிட, கல்விப் பணியாளர்களாம் நாம் கருத்துமிக்க நாட்டுப்பற்றாளர்களாகவும் தன்னார்வலர்களாகவும் முயன்று செயலாற்ற வேண்டும்.

மனித வள மேம்பாடு - Human Resource Development

மாணவர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் மலரச் செய்து, அவர்களைத் தற்சார்புள்ள வளமான நிறைமனிதர்களாக்கிடக் கல்வி முறை உதவ வேண்டும். கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு நிலையான முதலீடாகும். நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வி அறிவு பெற்ற மனித வளம் முக்கியமானதாகும். கல்விச் செயல் முறையில் இடுபொருள்கள், விளைபயன்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பயன்களைப் பெருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கும் தனி மனித மதிப்புகள் உயர்வதற்கும் கல்வி வழிவகுக்க வேண்டும். குழந்தைகளிடையே மனப்பான்மைகளும் விழுமங்களும் இணைந்து பெருகவும் கல்விச் செயல்கள் உறுதுணையாய் அமைய வேண்டும்.

அமைதிக் கல்வி

அமைதிக் கல்வி, அமைதிக்கான கல்வி என்பவை ஒன்றுக்கொன்று இணையானவை. அமைதிக் கலாச்சாரத்திற்குத் (Culture of peace) துணைபுரியக் கூடிய மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஆற்றல் மாற்றம் செய்யக் கூடிய கல்விச் செயல்பாடுகளை உள்வாங்கி பாடப்பொருள்களுடன் உரிய கற்றல் சூழல்களில் இணைத்தும், பிணைத்தும், பாட இணை, துணை செயல்களாக வகுத்தும் மாணவர்கள் ஏற்கும் வண்ணம் அமைதி உணர்வை வளர்க்கும் வகையில் வழங்குதல் அமைதிக்கான கல்வி எனப்படுகிறது.

அமைதிக்கான கல்வி குறித்து NCF (2005 பக்கம் 88) இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரித்துள்ளது.

*வன்முறை இல்லாத, அகிம்சை வழிமுறைகளைத் தனி மனிதன் தேர்ந்தெடுப்பதற்கான மனப்பான்மையைத் தருதல்.

*அமைதியை விரும்புபவர்களாகவும், அமைதியை அனுபவிப்பவர்களாகவும் மட்டுமன்றி அமைதியை உருவாக்குபவர்களாகவும், நிலை நாட்டுபவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவது.

அமைதிக் கல்வி என்பது விழுமியக் கல்விப் பாங்குகளான அகிம்சை, சகிப்புத் தன்மை, பொறையுடைமை, கூடிவாழும் உணர்வு, மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டறிதல், மற்றவர்களின் உணர்வை மதித்தல், கலாச்சாரப் பன்மைய வகைப்பாடுகளை விரும்புதல், நீதி, சமத்துவம், வாய்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதாகும். அமைதி மனப்பான்மையை நிலைப்படுத்துதல், வன்முறையை வெறுத்தல், நல்லிணக்கம், மற்றவர் உரிமைகளை மதித்தல் முதலான மனப்பெற்றிமைகளை மாணவர்களிடையே வளர்த்தாக்கிட வேண்டிய கற்றல் அனுபவங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்துத் திட்டமிட்டுப் பயிற்சி அளிப்பது அமைதிக்கான கல்வி எனப்படுகிறது.

அமைதிக் கல்வியின் அவசியம்

"அமைதி என்பது போரில்லாமல் இருப்பதை மட்டும் குறிப்பதன்று; உலக சமுதாயத்தில் சகோதர மனப்பான்மையும், நீதியும் நிம்மதியும் நிறைந்த வளர்ச்சியுடன் இருப்பதாகும்”. வன்முறை, தீவிரவாதம் இனவெறுப்பு, ஆயுதக்குவிப்பு, ஆக்கிரமிப்பு, பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, பயம், கடத்துதல் முதலான அவலமும் அச்சமும் இல்லாமல் மனிதர்கள் எங்கும் அமைதியும், நிம்மதியும் திளைக்க வாழ்வதே அமைதிக் கல்வின் நோக்கமாகும். ஒரு நாட்டின் ஒரு பகுதியில் தோன்றும் ஒரு சிறு நெருக்கடியும், தாக்குதலும், போராட்டமும் கூட ஒரே நாளில் உலகெங்கிலும் பரவி அனைத்து மனிதர்களின் நிம்மதியையும், இதமான, இயல்பான வாழ்வையும் பாதிக்கக்கூடிய நெருக்கமான மனிதப் பிணைப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் ஒரு சிறு கிராமமாக மாறிவிட்டது. பெட்ரன்ட்ரசல் உலக அமைதியைப் பற்றிக் கூறும்பொழுது, “மனித இனம் தற்பொழுது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தாற்போல் இருக்கிறது. அதன் காரணமாக தனிமனிதர், எவரும் தனக்கென்று மட்டும் எதையும் செய்ய முடியாது. தற்பொழுது உலகத்தில் சமதர்ம சமுதாய அமைப்பு அமைய மிகப் பெரிய வாய்ப்பிருக்கிறது. இது உலகத்தில் ஏற்பட்டு வரும் மிகப்பெரிய மாற்றம். இதற்கு மனிதனுடைய மனதில் ஒரு நீடித்த சிந்தனை தேவைப்படுகிறது” என்றார். எனவே அத்தகைய மாற்றத்தை அமைதிக் கல்வியால் மட்டுமே கொணர முடியும்.

பேரழிவை ஏற்படுத்தக் கூடிய போர்க்கருவிகள் மற்றும் நாச வேலையை உருவாக்கக் கூடிய கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அனைத்து நாடுகளிடமும் உள்ளன. சகிப்புத்தன்மையின்மை, மக்களிடையே இருக்கக் கூடிய வெறுப்புணர்வு, ஆதிக்கவெறி, பொருள் குவிப்பு, பதுக்கல் ஆசை, தன் பெருமை முனைப்பு, தீய எண்ணங்கள் போன்றவற்றிற்கிடையே உலகத்தில் அமைதிப் பண்பை நிலை நாட்டுவது என்பது மிக அரிய பணியாகும்.

ஒவ்வொரு நாளும் வன்முறை, நாசவேலை, ஆட்சேதம் போன்றவற்றை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. இச்சூழலில் உலகத்தில் மனித நேயம், அன்பு, சகிப்புத் தன்மை, சகோதர உணர்வு, நல்லிணக்கம், சகவாழ்வு முதலிய பண்புகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். உலகின் அழிவுச் சிந்தனைகளிடமிருந்தும், அழிவுச் சக்திகளிடமிருந்தும், ஆதிக்க உணர்வினரிடமிருந்தும், தன் முனைப்பாளர்களிடமிருந்தும் வெறுப்பு, விரக்தி, புரிவின்மை முதலியவற்றை நீக்கிக் கருணை, இரக்கம், உயிர்க்காப்புணர்வு, தொண்டுள்ளம் முதலியவற்றை வளர்ப்பதே கல்வியின் உடனடித் தேவை எனலாம். பன்னாட்டுப் பாங்குகளை மாணவர்களிடம் வளர்த்தல் வேண்டும். கற்ற மனிதர்களை சுய நலமின்றி, விசாலமான நோக்குடன் வன்முறையை மறுப்பவர்களாகவும், அமைதி, அறத்தின் காவலர்களாகவும் ஆகுமாறு வழிவகுத்துக் கற்பிக்க வேண்டும்.

இந்தியா அமைதி மற்றும் சகிப்புத் தன்மையில் மிகப் பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கிறது. "மேலைநாட்டு அணுகுமுறையில் தெரிவு செய்யப்பட்டுத் தொடங்கப்படும் எந்த நற்செயலும் இறுதியில் ஓர் இந்திய அணுகு முறையின் முடிவாகத்தான் இருக்க வேண்டும் (பால்கிவாலா 2000 பக்கம் 1). "மனித இனத்தின் மீட்பு என்பது உலகத்தில் எப்பொழுதுமே நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், அசோகரும் காட்டிய அகிம்சை வழியைப் பின்பற்றுவதே ஆகும்” என்பார் ஆர்னால்ட்டு டாயின்பி. டாயின்பி மேலும் குறிப்பிடுகையில் அகிம்சை வழியைப் பின்பற்றாத, அகிம்சை வழியை ஏற்றுக் கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாத எந்த ஒரு சமூகமும் இறுதியில் சிதறுண்டே போகும் என்றார்.

அமைதிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) அமைதிக்கல்வியைப் பற்றிய பாடக்கருத்துக்களை ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக் கலைத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப் பரிந்துரைக்கின்றன.

செயல்

உலக - நாட்டின் அமைதிக்காக அகிம்சை வழியில் போராடிய தலைவர்களின் செயல்பாடுகளைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளைப் பட்டியலிடுக

அமைதிக்கல்வியின் கோட்பாடு

இந்தியாவில் அனைத்து ஆன்மீகப் புனிதச் செயல்பாடுகளின் இறுதியிலும் “ஓம் சாந்தி” 'சாந்தி', "சாந்தி” என்ற சொற்றொடர் ஒலிக்கப்படுகிறது. 'சாந்தம் உண்டானால் செளகர்யமும் உண்டாகும்', 'சாந்தம் இல்லையேல் சௌகர்யமும் இல்லை' என்பது ஒரு கவிவாணரின் வாக்கு. சாந்தமும் நன்மைகளும், சாந்தமும் நிம்மதியும், சாந்தமும் சுகமும் ஒன்றையொன்று தழுவியே நிற்கும்.

யுனெஸ்கோவின் அமைதிக் கல்வித் திட்டக் கோட்பாடுகள் பின்வருமாறு

*நேர்மறையாக (Positive) சிந்தனை செய்தல்.

*அகிம்சை வழியில் சிந்தித்தல்.

*உள்ளத்தில் அமைதியைக் காணுதல்.

*மனித மேன்மையைப் போற்றுதல்.

*சமுதாயத்தில் அமைதியை உருவாக்குதல்.

*பூமியைப் பாதுகாக்கக் கவனம் செலுத்துதல்.

*கருத்து வேறுபாடுகளை அமைதியான வழியில் தீர்த்தல்.

*தன்னைத் தானே அறிதல்.

*சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளுதல்.

*கருணை கொண்டு, தீங்கு செய்யாதிருத்தல்.

அகிம்சை என்பது இந்தியாவிற்கே உரித்தான தனித்துவப் பண்பு. பழங்கால இந்திய குருமார்கள் “மகிழ்ச்சி அடைவதற்கு ஒரே வழி அமைதி மட்டுமே” என்று நம்பினர். “மன அமைதி இல்லாத இடத்தில் மகிழ்ச்சி இல்லை” என்பதை கீதை குறிப்பிடுகிறது. பயம், கோபம் என்பதைப் பற்றிய எண்ணம் கூட இருத்தல் ஆகாது. மனித இனத்தின் மேல் அன்பு செலுத்துவது தான் உலக நிம்மதிக்கு அடிப்படைக் கொள்கை ஆகும்.

செயல்

வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் பற்றிக் கலந்துரையாடி உங்கள் மன அமைதிக்குக் காரணமான கோட்பாடுகளைக் குறிப்பிடுக.

அமைதிக் கல்விக்கான கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள்

"இலக்கியங்களில் அமைதி பொதிந்து கிடக்கின்றது; புனித நூல்களில் அவை போதிக்கப்பட்டுள்ளன. இறைவழிபாடுகளில் அமைதி வேண்டப்படுகிறது; எல்லா அறமும் அமைதியையே புகட்டுகின்றன.

ஆனால் வாழ்க்கையில் பின்பற்றப்படுவதில்லை” என்பதே பரவலான மனக்குறை. குழந்தைகளின் வாழ்க்கையோடு இயைந்த அமைதிக்கான வாழ்க்கைக் கல்வியைப் பள்ளிகள் பல்வேறு வழிமுறைகளில் செயல்படுத்துகின்றன. நேர்மறையான உணர்வுகளையும், மன எழுச்சிகளையும் கொண்டு, ஆர்வமுடையவர்களாக மாணவர்களை வழிகாட்ட வேண்டும். அறப்பணியாற்றும் ஆசிரியர்களும் அமைதியை மாணவர்களிடம் புகட்டி நிலைநாட்டாவிட்டால் - உலகை எவரே காக்க வல்லார்!?

வழிறைகள் பல ; அவற்றுள் சில:

*தன் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்,

*அமைதிப் பாதையைப் போற்றுதல்,

*கற்பனைத் திறனையும், ஆன்மீக சிந்தனையையும் மாணவர்கள் மனதில் எழச் செய்தல்.

*ஆன்மீக, அறிவுத் தூண்டுதலை, ஆழ்மனத்திலிருந்து எழச் செய்தல்.

*வகுப்பறையில் நட்புடனும், கூட்டுறவு மனப்பான்மையுடனும் செயல்படுதல்.

அமைதிக் கல்வி சார்ந்த செயல்பாடுகள்

அமைதிக்கல்வியில் கலைத்திட்டம் சார்ந்த செயல்பாடுகளாகப் பின்வரும் மனப்பான்மை, பண்பு மற்றும் திறன்களைக் கூறலாம்.

> நாட்டுப்பற்று

> ஆன்மீக விழிப்புணர்வு

> சகோதர மனப்பான்மையை வளர்த்தல்

>அன்பு, நேயம் போன்ற உயரிய பண்புகளைப் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளுதல்.

> கொல்லாமையை ஏற்றொழுகுதல்.

> சமய நல்லிணக்கம்.

> உடலை உறுதியாக்குதல்.

> பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்தல்.

>சக வாழ்க்கைக்குத் தேவையான நல்லிணக்க அடிப்படைத்திறன்களை வளர்த்தல்.

> முதல் உதவி, தீ அணைத்தல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற தொண்டுகளைச் செய்தல்.

செயல்

அமைதிக் கல்வியைப் பரப்பும் விதத்தில் சிறுசிறு கதைகளை மாணவர்க்கொன்றென புனைந்து எழுதி ஒப்படைப்பாக்குக. அமைதி, சாந்தம், பொறுமை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், கொல்லாநெறி, அகிம்சை, ஜீவகாருண்யம், தொண்டு, நிம்மதி போன்ற அமைதிக் கல்விக் கூறுகளையும், சிந்தனைகளையும், பொன்மொழிகளையும், பழமொழிகளையும், பாடல்களையும் சேகரித்து ஓர் ஒப்படைச் சிறுநூல் (Book-let) தயாரிக்க.

விழுமக் கல்வி (Value Education)

விழுமக் கல்விச் செயல்பாடுகள்

*நாடகம்.

• தெரு முனை நாடகங்கள்.

*போட்டிகள்.

*பயிற்சிப் பள்ளியில் “அமைதித் திருவிழாக்கள்” நடத்துதல்.

*கண்காட்சி அமைத்தல்.

மனப்பான்மையும் விழுமமும் இணைந்து மேம்படுவதற்கான நடைமுறை உத்திகள்.

*மேம்பட்ட புரிந்து கொள்ளும் தன்மை.

*பாதுகாப்பு உணர்வு.

*அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன். ஆன்மீக வாழ்வின் சாரத்தைப் புரிந்து கொள்ளுதல்.

*செயல், கடமை மற்றும் விளைவுகள் பற்றிய அறிவு.

*எல்லா நிலைகளிலும் பொறுப்பேற்கும் தன்மை.

*மனித சக்தியை முறையாகப் பயன்டுத்தும் திட்டம் தயாரித்தல்.

*தனி நபர் அர்ப்பணிப்பு.

* முறையான கல்வி

'எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சமூகத்தின் பல்வகைப் பிரச்சனைகளும் ஓய்ந்துவிடும்' என்று இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய் அவர்கள் கூறினார். ஆயினும் கற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் சமூகப்பிரச்சனைகள் ஓய்ந்து தொழிக்கப்படுவதற்குப் பதிலாக அதிகமாகி வருவதும் கண்கூடு. எனவே நாம் கல்வி எனும் பெயரால் எண்ணெழுத்தறிவைத் தான் வழங்கி வருகிறோமே ஒழிய வாழ்வை, மனித குலத்தை, அமைதியடையவும், சுகப்படவும் வைக்கும் நல்வாழ்வு விழுமங்களையும், சகவாழ்வுப் பண்பாட்டையும், சன்மார்க்கத்தையும், மனித நேயத்தையும் புகட்டுவிக்கத் தவறியுள்ளோம் என்பதோர் கசப்பான உண்மை .

இளைஞர்கள் தங்களைச் சமுதாயத்தில் தக அமைத்துக் கொள்ள இயலாமல் பெருவாரியாக முரண்படுகின்றனர். குடும்பம், நண்பர்கள், கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானம், பணி செய்யுமிடம் போன்ற களங்களில் தம் பொருந்தாத எண்ணங்கள், சிந்தனைகள், பேச்சுகள், இடைவினை, நல்லிணக்கம் போன்றவற்றில் எதிர்மறையாகச் செயல்பட்டு இன்னலுறுகின்றனர். இதற்குக் கல்வித் தீர்வுகளை உண்டாக்க வேண்டும்.

விழுமங்கள் பொருள்

''விரும்பத்தக்கவை, முனைந்து அடைய வேண்டிய பண்புகள், மதிப்புமிக்கவை என்று எவற்றை மனிதர்கள் தம் சிந்தனை, உணர்வு, செயல்கள் மூலம் வெளிப்படுத்தி நம்புகிறார்களோ அவை விழுமங்கள் அல்லது மதிப்புக்கள்” எனப்படும். நடைமுறையில் எவை பயனளிப்பவையோ, மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவையோ, முடிந்த நன்மைகளைத் தருபவையோ அவைகளை விழுமங்கள் எனலாம்.

தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்தியுள்ள விழுமங்கள்

* நமது தேசிய மரபுப் பண்பாடுகள்

* சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம்

* பெண் சமத்துவம்

* சுற்றுச் சூழல் பாதுகாப்பு

* சமூக நல்லிணக்கம்

* சிறு குடும்ப நெறி

* அறிவியல் மனப்பான்மை

* சமய நல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாடு

விழுமங்களின் / மதிப்புகளின் வகைகள்

* சுய மதிப்புகள்

* சமய மதிப்புகள்

* சமூக மதிப்புகள்

* பொருளாதார மதிப்புகள்

* அரசியல் மதிப்புகள்

* அறிவு சார் மதிப்புகள்

* ஒழுக்க நெறி மதிப்புகள்

* ஓய்வு நேர அல்லது மகிழ்வு மதிப்புகள்

* நடத்தை மதிப்புகள்

விழும் அமைப்பு முறை (Value System)

விழுமங்கள் நான்கு முக்கிய உட்கூறுகளைக் கொண்டுள்ளது.

1. மனிதத் தன்மையைப் பற்றிய நம்பிக்கைகள்.

2.இலட்சியங்கள் பற்றிய நம்பிக்கைகள்.

3.செய்ய வேண்டியவை - செய்யக் கூடாதவை என்பன தொடர்பான விதிகள்.

4.சரியான/தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்க நம்மைத் தூண்டுபவைகளை இனங்கண்டு தவிர்த்தல்.

விழும் அமைப்பு முறையை பாதிக்கும் காரணிகள்

* சமூகக் காரணிகள்

* பொருளாதாரக் காரணிகள்

* பண்பாட்டுக் காரணிகள்

* அரசியல் காரணிகள்

விழும் அமைப்பு முறையை மாற்றங்களை ஏற்றபடுத்தும் காரணிகள்

* தொழில் மயமாதல்

* நகர மயமாதல்

* சமயச் செல்வாக்கு மங்குதல்

* அறிவியலின் எதிர்மறைத் தாக்கம்

* மேலைநாட்டுப் பிறழ்நெறிகளின் தாக்கம்

* தொழில்நுட்பப் புரட்சி

* நவீனமயமாதல்

விழுமத்தை மையமாகக் கொண்ட கல்வி (Value Centered Education)

குழந்தைகளிடம் சரியான மனப்பான்மைகள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றை உருவாக்கிடும் அனைத்துக் கல்விச் செயல்களும், விழுமக் கல்வி எனப்படும். மேலும் குழந்தையை மேம்பட்ட மனிதனாக்கி, ஆளுமையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துவதும் வழுமத்தை மையமாகக் கொண்ட கல்வி எனப்படும்.

“அறநெறிகளை அறிவது, ஒழுக்க உணர்வுகளைப் போற்றி அதன்படி நடக்க முற்படுவது ஆகிய அனைத்தையும் குழந்தைகளிடம் கற்பிக்க முயல்வது விழுமக் கல்வி” ஆகும். விழுமங்கள் கற்பிக்கப்படுவதில்லை; விழுமங்கள் அபிமானித்து ஏற்கப்படுகின்றன. எனவே விழுமங்களைப் பட்டியலிட்டுக் கூறுவதனாலோ, விழுமங்கள் பற்றிய விரிவான தகவல்களை அறிந்தவர்களாக இருத்தலினாலோ பயனில்லை. மாறாக விழுமங்களைத் தாமே முனைந்து, முன் வந்து ஏற்றொழுகுபவராகவும், பிறர் செய்யும் கட்டாயத்துக்காகவன்றி, கடைபிடிப்பவராகவும் மாணவர்களை வழி நெறிப்படுத்த வேண்டும்.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்'

என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க தன்னார்வத் தெரிவாக அது இலங்க வேண்டும்.

விழுமக் கல்வியின் குறிக்கோள்கள்

ஆசியா - பசிபிக் நாடுகளில் மதிப்புணர்வுக் கல்விப் பிரச்சனைகளை ஆராய்ந்து, பன்னாட்டுப் பயிலரங்கில் மதிப்புணர்வுக் கல்விக்கு 6 முக்கிய குறிக்கோள்களை முன்மொழிந்துள்ளனர். அவைகளாவன

*முழுமையான வளர்ச்சி - உடல் வளர்ச்சி - மன வளர்ச்சி - அறிவு வளர்ச்சி

* சமுதாய அக்கறை - தன், மற்றும் தன்னைச் சுற்றியுள்ளோர் மீது, சமுதாயத்தினர் மீது அக்கறை.

* சமூக நலன் - ஜனநாயக மதிப்புகள், பண்பாட்டு மதிப்புகள், அரசியல் விழிப்புணர்வு.

*தேச நலன் - தேசப் பற்று, தேசிய ஒருமைப்பாடு.

*உலக மனப்பான்மை - பிற நாட்டு மக்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் நலனில் அக்கறை கொள்ளுதல்.

* விழிப்புணர்வு - விழிப்புணர்வு மற்றும் உயர்நடத்தை

மதிப்புகள் பரவுதல்

குழந்தை, பிறக்கும் போது மதிப்புக்களை அறிந்திருப்பதில்லை. தன்னைச் சுற்றுப்புறச் சூழலோடு, அதிக அளவில் பொருத்திக் கொள்ளும் போது பல்வேறு கருத்துக்களை, மனப்பான்மைகளைப் பெற்றுத் தன்னைத் தனித்தன்மை உள்ளதாக, குழந்தை அடையாளம் காட்டிக் கொள்கிறது. பிறரை உற்று நோக்கித் தன்னை உணர்ந்து தனக்கென்று விழுமங்களை உருவாக்கிக் கொள்கிறது. எந்த ஒரு விழுமத்தையும் தனதாக்கிக் கொள்வதில் குழந்தை ஐந்து படி நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

1. குறிப்பிட்ட விழுமத்தை அறிதல்.

2, அவ் விழுமத்தை உயர்வாக எண்ணி ஈடுபாடு கொள்ளுதல்.

3.அவ்விழுமத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி உணர்தல்.

4.அவ்விழுமத்தைச் செயல் மூலம் முயன்று வெளிப்படுத்துதல்.

5.நடத்தையில் விழுமங்களைத் தன்னிச்சையாக வெளிப்படுத்துதல்.

விழுமங்களை மாணவர்களிடம் விதைக்கப் பின்வரும் பள்ளி நடைமுறை உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

1. காலை வழிபாட்டுக் கூட்டம்.

2. பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்தல்.

3. வல்லுநர்களைக் கொண்டு விரிவுரையாற்றல்.

4. மதிப்புக் கல்வியைக் கட்டாயமாக்கல்.

5. கலைத் திட்டத்தைச் சீரமைத்தல்.

6. கலை மற்றும் ஓவியப் போட்டி நடத்துதல்.

7. பிறந்த நாள் கொண்டாட்டம்.

8. பன்னாட்டுத் தினங்களைக் கொண்டாடுதல்

9. மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துதல்.

10. புத்தகக் கண்காட்சி.

11. கூட்டுறவு சங்கம் நடத்துதல்

12. கூட்டுறவு வங்கி மற்றும் அஞ்சலகம் நடத்துதல்

13. மதிப்புக்கல்வி கொண்ட செய்தி மடல்கள் வெளியிடல்.

14. நலம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை நடவடிக்கைகள்.

15. சமுதாய ஆக்கப் பணிகள் செய்தல்.

16. குடிமைப் பண்புகளை வளர்த்தல்.

17. முதலுதவி செயல்கள்.

18. நாட்டு நலப்பணி

19. முன்னுதாரணமாகத் திகழ்தல்

20. தேசிய விழாக்கள் கொண்டாடுதல்.

21. சமுதாய வழிப்பாட்டுக் கூட்டம்.

22. கூட்டு சமயப் பிரார்த்தனை.

குழந்தைகளிடம் சமூக, ஒழுக்க மதிப்புக்கள் வளர்ச்சியடைவதில் குடும்பமும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகப் பங்கு வகிக்கின்றன. சமூக விழுமங்களான ஜனநாயகம், நாட்டுப்பற்று, சகிப்புத் தன்மை போன்றவற்றிலும், சிறந்த குடிமகனாக வாழ்வதற்கும் பள்ளி உதவ வேண்டும். விழுமக் கல்விக்கெனத் தனிப்பிரிவேளை, வகுப்புக்களுக்காக, காத்திராது சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம், இணைத்துப் பயிற்ற வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் விழுமக் கல்வியைப் புகட்டுவது ஆசிரியர் கடன்.

கல்வியின் வாயிலான பாலினச் சமத்துவம்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி வையம் தழைக்குமாம் - பாரதியார். உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் பெறும் தரமான கல்வியின் அடிப்படையில் அந்த நாட்டினுடைய வளர்ச்சி அமைந்துள்ளது. எல்லா நாடுகளிலும் கல்வி என்பது அனவைருடைய அடிப்படை உரிமையாகும். 1948 இல் ஐக்கியநாடு பொது சபை பிரிவு 26-இன் படி, ஒவ்வொருவரும் கல்வி பெற உரிமை உண்டு தொடக்க மற்றும் அடிப்படை நிலையில் கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும்.

பாலினம்- பொருள்

ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்கும் குழந்தை சிறுவன், சிறுமியாகக் கருப்பட்டு பின் ஆடவராகவும், மகளிராகவும் வளர்ச்சியடைகின்றார்கள். அவர்களுக்குரிய நடத்தை, மனப்பான்மை, பங்கு, செயல்கள் ஆகியவை கற்றுத்தரப்படுவதோடு அவற்றை மக்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்துவது என்றும் விளக்கப்படுகின்றது. இவ்வாறு கற்றுணரப்படும் நடத்தை அவர்களுடைய பாலினத்தை அடையாளம் காணவும், அவர்களுடைய பாலின பங்களிப்பை நிர்ணயிக்கவும் உதவுகின்றது.

பால் Sex

உயிரியல் அடிப்படையில் உணரப்படுவது

குரோம்சோம்கள் ஹார்மோன்கள்

பாலினம் Gender

சமூக மற்றும் உளவியல் அடிப்படையில் உணரப்படுவது

சமூக கலாச்சார பண்புகள்

பாலினப் பாகுபாடு

எழுத்தறிவு விழுக்காடு (%)

மாநிலம்

மொத்தம்

ஆண்

பெண்

இந்தியா

65.38

75.96

54.28

தமிழ்நாடு

73.47

82.33

64.55

கேரளா

90.92

94.20

87.80

கர்நாடகம்

67.04

76.29

57.45

ஆந்திரம்

61.11

70.85

51.17

பாலின வேறுபாடுகள் இருப்பதற்காக காரணங்கள்

சமூகப் பண்பாட்டுக் காரணம் குறைவான கல்வி நிலை கல்வியின் பால் பெண்களின் மனப்பான்மை பள்ளி அமைவிடம்/வசதி பெண் ஆசிரியர்களின் குறைவான எண்ணிக்கை.

கலைத்திட்டம் கற்பித்தல் முறைகள் /பொருள்கள்.

சமூக நிலைப் பெயர்வு

பொருள்

''சமுதாய அமைப்பில் ஒரு மனிதன் ஒரு நிலையிலிருந்து மற்றொரு மேலான நிலைக்கு மாறுவது சமூக நிலைப் பெயர்வு” எனப்படும். எந்த ஒரு மனிதனும் தன்னுடைய முயற்சி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, தகுந்த நிலையை உயர்த்திக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும். இந்த நிலை மாற்றமே சமூக நிலைப் பெயர்வு ஆகும்.

வரையறை: "தனிமனிதன், குழுக்கள் (அ) குடும்பங்கள் போன்றவை ஒரு சமூக நிலையிலிருந்து மற்றொரு சமூக நிலைக்கு மாறுவது சமூக நிலைப்பெயர்வு எனப்படும்”

"சமூகக் குழு அல்லது படிநிலையில் உள்ள ஒருவர் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது சமூக நிலைப் பெயர்வு” என்பதாகும். தொழில், தகுநிலை, வருமானம், சொத்து, அதிகாரநிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சமூக நிலைப் பெயர்வு அறியப்படுகிறது. நிலைப்பெயர்வை செங்குத்து நிலைப்பெயர்வு, கிடைமட்ட நிலைப்பெயர்வு என்றும் பிரித்து அறிதல் இயலும்.

சமூக நிலைப்பெயர்வின் வகைகள்

சமூக நிலைப் பெயர்வு

செங்குத்து நிலைப் பெயர்வு

இடைமட்டப் பெயர்வு

செங்குத்து நிலைபெயர்வு

எல்லா சமூகக் குழுக்களும் சமமான சமூகத் தகுநிலையைப் பெற்று இருப்பதில்லை. கீழ் நிலையில் இருக்கும் ஒரு குழு அல்லது மனிதர் உயர் தகுநிலையை அடைவதையோ அல்லது உயர் தகுநிலையில் இருக்கும் ஒரு குழு அல்லது மனிதர் கீழ் நிலையை அடைவதையோ செங்குத்து நிலைப் பெயர்வு என்பர்.

செங்குத்து நிலைப் பெயர்வை மேல்நோக்கு நிலைப்பெயர்வு (Seceding Mobility), கீழ் நோக்கு நிலைப்பெயர்வு (Descending Mobility) என இரண்டாம் பிரிக்கலாம்.

மேல்நோக்கு நிலைப் பெயர்வு என்பது கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுவதைக் குறிக்கும். கூலி விவசாயியாக இருந்த ஒருவர் சொந்த நில விவசாயியாக உயர்வு பெறுவதை மேல் நோக்கிய நிலைப் பெயர்வுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

கீழ் நோக்கு நிலைப் பெயர்வு என்பது உயர் தகு நிலையில் இருந்து கீழ்நிலைக்கு மாறுவதைக் குறிக்கும். மொத்த வியாபாரியாக இருந்த ஒருவர் சில்லரை வியாபாரியாக மாறுவதைக் கீழ்நோக்கிய நிலைப் பெயர்வுக்கு உதாரணமாகக் கூறலாம்.

கிடைமட்ட நிலைப் பெயர்வு

ஒரு சமூகத்தில் வாழும் ஒரு பிரிவினர் ஒரே , உயர் அல்லது கீழ் தகுநிலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி, சீரான போக்கில் நெடுங்காலம் இருப்பது கிடைமட்டநிலைப் பெயர்வு எனப்படும்.

கிடைமட்ட நிலைப் பெயர்வில் தனி நபரின் நிலை மாறுமேயின்றி அவருடைய வருமானம் / பதவி / அதிகாரம் போன்றவை மாறாது.

செங்குத்து நிலைப் பெயர்வை ஒரு நாடு விரும்புகிறது இருக்கும் நிலையிலிருந்து தகுதி, வளம், ஆற்றல் முதலியவற்றால் செங்குத்து நிலைப் பெயர்வை உண்டாக்கவே கல்வி தனிமனிதராலும் அரசினராலும் முயலப்படுகிறது. ஆசிரியர்கள் இதனை உணர்ந்து அனைவரது தரமான கல்விக்கும் ஆவன செய்து செங்குத்து நிலைப் பெயர்வுக்கு ஆவன செய்தல் அவசியம்.

கல்வியும் சமூக நிலைப் பெயர்வும்

கல்வி சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவி எனலாம் - கல்வி சமூக அமைப்பிலுள்ள கடினத் தன்மையை, பிறப்பின் காரணமாக எழும் பாகுபாடுகளை நீக்குகிறது. கல்வி உயர் கொள்கைகளை, தகுதிநிலையை, நல்ல பழக்க வழக்கங்களை, தன் நம்பிக்கையை, மதிப்புக்களை அடையச் செய்கிறது.

மாணவர்களுடைய நிலைப்பெயர்வு அவர்கள் பெறும் கல்வியைப் பொறுத்து அமைகிறது. மாணவர்கள் பெறும் மொழி அறிவு, பாடப்பொருளறிவு மேற்கொள்ளும் கல்வி ஆய்வுகள் போன்றவற்றைப் பொறுத்து அவர்களது நிலைப் பெயர்வு அமைகிறது.

ஒரு நாட்டினுடைய பின் தங்கிய நிலையை நீக்கி, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல கல்வி உதவுகின்றது. வளர்ந்த நாடுகளில் கல்வி உயர்தொழில் நுட்பம் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேலோங்கி வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கல்வியின் வாயிலாக சமூக நிலைப் பெயர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சமூக நிலைப் பெயர்வின் - நன்மைகள்

  • தனி மனிதனின் முழுமையான வளர்ச்சி
  • சமூக வளர்ச்சி மற்றும் சமூகத் திறன் மேம்பாடு.
  • தேசிய பற்று உறுதிப்பாட்டை வளர்த்தல்.
  • சமூக முன்னேற்றத்தில் மாறாத்தன்மைக்குத் தீர்வுகாணல்
  • மகிழ்வுறு நல் வாழ்வை மேம்படுத்துதல்.

கல்வி மனித விடுதலைக்கு வித்திடுகிறது. தனிமனிதனை சமூக உணர்வு உள்ளவனாக்குகிறது. சமூக மாற்றமும், வளர்ச்சியும் கல்வியைப் பொறுத்தே அமையும். அமைதிக் கல்வியின் வழியாக அகிம்சை, சகிப்புத் தன்மை பிறர் உணர்வுகளை மதித்தல், நீதி, சமத்துவம், வாய்மை, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவற்றைக் குழந்தைகளிடையே வளர்க்க வேண்டும். குழந்தைகளின் வாழ்வோடு இயைந்த அமைதிக்கான வாழ்க்கைக் கல்வியைப் பள்ளிகள் வழங்க வேண்டும்.

குழந்தைகள் தங்களைச் சுற்றுப்புறச் சூழலோடு பொறுத்திக் கொண்டு பல்வேறு கருத்துகளை, மனப்பான்மைகளைப் பெற்றுத் தன்னைத் தனித்தன்மை உள்ளவனாக அடையாளம் காட்டி, தனக்கென்று விழுமங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். தம் சிந்தனை, உணர்வு, செயல்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்த குழந்தைகளுக்குப் பள்ளி வாய்ப்புகளை வழங்க வேண்டும். கல்வி அனைத்துக் குழந்தைகளும் தங்களுடைய பாலினச் சமத்துவத்தை உணர்ந்து உணர்ந்து பாகுபாடின்றிச் செயல்பட வழி செய்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முயற்சி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தன்னுடைய தகுதிநிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இது சமூக நிலைப் பெயர்வுக்கான வாய்ப்புச் சமத்துவம் (Equality of Opportunity) எனப்படும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.93548387097
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top