பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு

இந்தியக் கல்வி முறை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பண்டைய இந்தியாவில் கல்வி

நம் பாரத நாட்டில் வழங்கும் மொழிகளில் "க" கரவரிசை, ஞகர வரிசை, "வ" கரவரிசை ஒலி, வரி வடிவ எழுத்துக்கள் தோன்றி முறையே கல், கல்வி, கலை, தத்துவம், ஞானம், ஞாபகம், வரி, வல்லமை, விஞ்ஞானம், வித்யா, வித்தகம், வித்தை முதலிய சொற்கள் தோன்றி, புழங்கிய நாள் முதற்கொண்டு கல்வியின் தோற்றமும் விருத்தியும் இடம் பெற்றுள்ளமை சொல்லியல் ஆய்வால் புலப்படுகின்றது. இவ்வொலி, வரிவடிவங்களும் சொற்களும் உலகின் தொன்மை மொழி எவற்றிற்கும் குறையாததும் விஞ்சிநிற்பதுமான நெடும் பழமைக்குரியவை.

தொல்பழங்கால இந்தியாவில் கல்வி

இந்திய நாடு பழமைச் சிறப்புமிக்க நாடாகும். உலகில் ஆதிமனிதன் தோன்றி வளர்ந்து, வேட்டையாடி, நாடோடியாய்த் திரிந்து, கற்கருவிகளுடன் வாழ்ந்த காலம் முதலே மனித இனத்தின் தொல்பழங்காலத் தொடர்ச்சி, இந்தியாவில் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மனிதன் நீர்வளமும், நிலவள மும்மிக்க நதிக்கரையில் தங்கி விலங்குகளைப் பழக்கிபயிர்த்தொழில் செய்ததற்கான சுவடுகளும் காணப்படுகின்றன. அக்காலங்களில் அவன் உணவுக்கு அலைந்து விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டும், உழவுத்தொழில் செய்தும், நதிக்கரையில் சற்று ஒய்வைக் கண்டிருக்கிறான்.

தனது ஓய்வை தொல்பழங்கால மனிதன் ஆடியும் பாடியும் பானகம் அருந்தியும் களிப்புடன் ஏனையோரோடு கழித்திருக்கிறான். அவ்வாழ்வை அவன் தங்கியிருந்த குகைகளில் வண்ணச் சித்திரமாகவும், வரைந்து விட்டுச் சென்றிருக்கிறான். அத்தகு குகைச் சித்திரம் இந்தியாவில் பராபர் குன்றுகளில் காணப்படுகிறது. அதில் ஆணும், பெண்ணும், ஆபரணங்கள் அணிந்து இசைக்கருவிகளுடன் நாட்டியம் ஆடி மகிழ்ந்த நிலை சித்திரிக்கப்பட்டுள்ளது. சுமார் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதெனக் கருதப்படும்.

இக்காலம் முதலே நம் நாட்டில் ஆடல், பாடல், கருவியிசை, ஓவியம் வரைதல், வண்ணக்குழம்பு தயாரித்தல், ஆபரணங்கள் செய்தல், ஆடைநெய்தல், உடை தயாரித்தல் முதலிய கலைகளின் தொன்மை வடிவங்களும், மொழிவழக்கும், இசைக் குறிப்புகளும் காணப்படுகின்றன. அவனது மொழி, எழுத்து வழக்கு முதலியன நமக்குக் கிடைக்க வில்லையாயினும் அவ்வோவியங்களைக் கொண்டு அக்காலக் கல்வி, கலை, கைவினை நுட்பம் முதலியவற்றை நாம் உணர முடிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலக்கல்வி(கி.மு. 3250-2750)

இந்தியாவில் சிந்து நதிக்கரையில் தழைத்தோங்கிய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகர நாகரிகங்கள் உலகின் மிகப்பழைய நாகரிகங்களுள் தலை சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. யூப்ரடீஸ், டைகிரிஸ் நதிகள் பாரசீக வளைகுடாக்கடலில் கலக்குமிடத்தில், சுமேரியா எனப்பட்ட பகுதியில் சுமேரிய நாகரிகம் அமைந்திருந்தது. நைல் நதிக்கரையில் அமைந்திருந்த எகிப்திய நாகரிகம், மஞ்சள் நதி தீரத்தில் காணப்பட்ட சீன நாகரிகம் ஆகியவைகள் அகழ்வாராய்ச்சியின் பயனாகக் கண்டெடுக்கப்பட்ட உலகின் பழங்கால நாகரிகங்களாகும்.

இவற்றுள் சுமேரிய நாகரிகத்திற்கும் இந்தியாவில் தோன்றிய சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் சில ஒத்தக் கூறுகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே சமகாலத்தவை என்றும் திராவிடரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்றும் இவ்விருநாகரிகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

தொல் பழங்காலத்தில் தமிழ்நாட்டுப் பகுதியில் வழங்கிய திராவிட மொழிச் சொற்கள் சுமேரிய மொழியிலும் காணப்படுகின்றன. சுமேரியாவின் ஊர்ப் பெயர்கள் ஊர், நிப்பூர், எருதுரர் என்று வழங்கப்பட்டுள்ளன. சுமேரிய மொழியின் அமா, பீடு, ஆள் என்னும் சொற்கள் தமிழில் வழங்கும் அம்மா, ஆடு, யாழ், ஒலி அல்லது ஒசை ஆகிய சொற்களுடன் ஒத்த பொருளை வழங்கி நிற்கின்றன. சுமேரிய, இந்திய நாகரிகங்களில் காணப்படும் யாழ் இசைக் கருவிகள் ஒரே வடிவினை உடையனவாயுள்ளன. எனவே இந்தியாவின் பத்துக்கும் மேலான பகுதிகளில் சுமார் கி.மு.3250-க்கும் 2750-க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய நாகரிகம் உலகின் தொன்மை நாகரிகங்களுள் தலை சிறந்ததான இந்திய நாகரிகம் ஆகும். மயிலை, சீனி வேங்கடசாமியின் வரலாற்று ஆராய்ச்சிகள் இது பற்றி பரவலாகக் கூறுகின்றன.

சிந்துவெளி நாகரிகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முத்திரைகள் குறிப்பாக சுமேரிய முத்திரைகளைப் போலவே சித்திர வடிவில் எழுத்துக்களைக் கொண்டிருந்தன. சிந்து வெளியில் காணப்பட்ட நடனமாதின் சிலை, ஆபரணங்கள், விளையாட்டுச் சாமான்கள், பயன்படுத்திய நாணயங்கள், சுட்ட செம்மண் பலகைகளில் காணப்பட்ட ஒவியங்கள் முதலியன இந்தியாவில் உலகின் வேறெவர்க்கும் பிந்துதலாக இல்லாத, உன்னதமானதோர் கலையும், கல்வியும் சிறந்து விளங்கியதற்குச் சான்றளிக்கின்றன.

வேதகாலக் கல்வி (கி.மு. 2500-1000)

வேதங்கள் எழுத்துவழிப் (ஸ்மிருதி) பரிமாற்றமாகவன்றி வாயுரையான (சுருதி) செவி வழிப்பரிமாற்றமான, மொழி வழக்கில் அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டன. வேதங்கள் வரிவடிவமின்றி நெடுங்காலம் புழங்கி, பின் இந்தியாவில் அக்காலத்தில் அப்பகுதியில் வழக்கிலிருந்த தேவநாகரி வரிவடிவத்தைப் பெற்றன. அவ்வாறு செய்யப்பட்ட தேவநாகரி எழுத்து வடிவங்கள் திராவிட சித்திர எழுத்து முறையின் சாயல் கொண்டவை. எனவே வேதகாலக் கல்வி முறை பழங்கால இந்தியாவில் கால் ஊன்றித் தழைப்பதற்கு முன்னமேயும் இந்தியாவில் பூர்வ வாசிகளின் மொழி மரபுகள், கல்வி, கலை, இலக்கியம், பண்பாடுகள் தழைத்திருந்திருத்தல் திண்ணம். அவற்றின் சுவடுகள் ஆய்ந்தறியற்பாலவை.

இந்தியக் கல்வி வளர்ச்சியில் ஆரியர் கங்கைச் சமவெளியை வந்து அடைந்து தங்களின் வாழிடங்களை அமைத்துக் கொண்டது முதலே ஒரு திருப்பம் ஏற்பட்டது எனலாம். ஆரியர்கள் இந்தியாவுக்கு வரும் வழியில் அவர்கள் பல்கேரியா, ருமேனியா, ஆசியா மைனர், இராக் முதலிய பகுதிகளில் பல நூற்றாண்டுகள் தங்கிப் பின்னர் சிந்து சமவெளிப் பகுதியை வந்தடைந்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்திருந்த மக்களை கறுப்பு நிறத்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆரியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தனி கலாச்சாரத்தை ஏற்படுத்தினர். குறிப்பாகக் கல்வியில் தனிப்பாதை வகுத்தனர். ஆரியர்கள் இந்தியாவில் நுழைகையில் நிலவிய உள்நாட்டுக் கல்விமுறை பற்றி அறிய, போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆரியர்களின் காலத்தைப் பற்றி அறிய வேதங்கள் அடிப்படையாகத் திகழ்கின்றன.

வேதங்களில் சமயம், சமுதாயம், பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், படையெடுப்புகள், ஆட்சி முறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இக்காலம் பற்றிய கணிப்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. “வித்’ என்றால் அறிவு என்று பொருள். வேதம் என்றால் புனித அறிவு எனப் பொருள்படும்; உலக வாழ்வின் உண்மைப் பொருளை அறிதல் என்று பொருள். வேதங்கள் கற்பதனால் வாழ்க்கையின் இறுதிப் பேற்றை அடைய முயன்றனர். இயல்பான இயற்கையோடு இசைந்த வாழ்வை வேதங்கள் போதித்தன. ஆசிரியர் குரு எனப்பட்டார்.

வேத காலக் கல்வியின் நோக்கங்கள்

இறைநிலை, அதாவது மோட்சம் அடைவது கல்வியின் தலையாய நோக்கமாயிருந்தது. வேதங்களைக் குருவழியாகக் கற்று அவற்றின் வழிநடப்பதே மோட்சம் அடையும் வழி; மோட்சமே வாழ்வின் இறுதிப் பயன் என வலியுறுத்தப்பட்டது.

வாழும் வகை, முறை, நெறி, நோக்கம், பயன் முதலிய அனைத்தையுமே கல்வியின் வழி பெறுவதையே கல்வியின் நோக்கம் என்றனர்.

நன்மை தீமை, நிலையானது நிலையற்றது, உயர்வானது தாழ்வானது, செய்ய ஏற்றது செய்யக்கூடாதது, பற்றை வளர்ப்பது பற்றை நீக்குவது போன்ற அறிவுரைகளை வழங்குவதும் பெறுவதும் கல்வியின் நோக்கமாயிருந்தது.

சுற்றுச்சூழலை, மண்ணை, விண்ணை, உயிரை, படைப்பியலை, அறிந்து, விளங்கிக் கொண்டு ஏற்றதோர் வாழ்வியலை வழிவகுத்துப் பின்பற்றிட வேதகாலக் கல்வி உதவியது. அண்டம்,பிரபஞ்சம், பிரம்மம், உயிர், ஆன்மா, பற்றற்றதுறவு, பொறிபுலன்களின் கட்டுப்பாடு முதலியவை பற்றி நடைமுறை அறிவைப் பெறுவதே வேதகாலக் கல்வியின் நோக்கமாயிருந்தது.

ஒழுக்கம், சீலம், பணிவு, புலனடக்கம், தற்காப்பு, போர்க்கலை, மதிநுட்பம், பொருளிட்டுதல், புண்ணியம் செய்தல், கலைநயம் முதலியன பற்றிய வாழ்வியல் படிப்பினைகளை வழங்குவதும் இக்காலக் கல்வியின் நோக்கமாக இருந்தது.

வேதகாலக் கல்வியின் பாடப்பொருள்

ரிக்வேத சம்ஹிதை: பத்துப்பிரிவுகளைக் கொண்ட இதில் கடவுளைத் தெளிதல், துதித்தல், வாழ்க்கை முதலிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 1. சாமவேத சம்ஹிதை சுமார் 1500 பாடல்களைக் கொண்ட இதில் மந்திரங்கள், அவற்றை இசையுடன் பாடுதல் முதலியன இடம் பெற்று உள்ளன.
 2. யஜுர் வேத சம்ஹிதை வெண்மை, கருமை என இரு பிரிவுகளைக் கொண்ட இதில் முறையே பாடல்கள், பாடலும் பொருளும், புரோகிதர் வேதச் சடங்குகளை நடத்தும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.
 3. அதர்வணவேத சம்ஹிதை ரிக்வேதத்தைத் தழுவி அமைந்தது, மந்திரங்களும், தந்திரங்களும், மருத்துவக் குறிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

வேதக்கருத்துகள்

 1. சிக்ஷா (உச்சரிப்பு)
 2. சண்டாஸ் (அளவு)
 3. வியாகரணம் (இலக்கணம்)
 4. திருக்தா (சொல் விளக்கம்)
 5. ஜியோதிஷா (வானவியல்)
 6. கல்பா (சடங்குகள்)

உபவேதங்கள்

இவைகள் சமயச் சார்பற்றவை

 1. ஆயுர்வேதம் (மருத்துவம் பற்றி விளக்குவது)
 2. தனுர் வேதம் (போர்முறை பற்றிக் கூறுவது)
 3. கந்தர்வ வேதம் (இசைக்கலை பற்றியது)
 4. சில்பவேதம் (சிற்பம், கட்டிடம் அமைப்பு பற்றி விளக்குவது)

ஆசிரியர் மாணவர் உறவு

வேத கால ஆரம்பத்தில் தந்தையே தனது மகனுக்குக் கல்வி புகட்டினார். காலப் போக்கில் குலத்தொழில்நிலை பெற்றதும் கல்வி அறிவு பெறுவதும் வழங்குவதும் தனிப்பணியாகி குருகுலம் உதயமானது. தந்தையும் புனித அறிவைப் புகட்டிய குருவும் உற்பவ காரணனாகிய பிதா எனப்பட்டதாக மனுஸ்மிருதி கூறுகிறது.

குருவின் தகுதிகள்

குருவாகத் திகழ பல அடிப்படைச் சிறப்புகளும், குணங்களும், நற்பண்புகளும் தகுதிகளாய் இருந்தன. தகுதிகளைப் படைத்திராத ஒருவரை ஆசிரியராக ஏற்பதன் தீய விளைவுகளை தர்மசாஸ்திரம் எடுத்தியம்புகிறது. ஆபஸ்தம்பதர்ம சூத்திர உபநயணம் செய்யும் ஆசிரியர் கற்பதில் ஆர்வம் மிக்க ஆசிரியராகவும், இடையறாது கல்வி பயிலும் ஆர்வலராகவும் கற்றறிந்த செந்நெறியாளராகவும், பாரம்பரியம் மிக்க நற்குடிப்பிறப்பாளராகவும், தெளிந்த நல்லறிவு பெற்றதுய நெஞ்சினராகவும், அறவழி தவறாது நன்னெறி நின்று வாழ்பவராகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

வேதங்களைக் கற்றறிந்து, தர்மங்கள் வழி நின்று வாழும் நற்குடி பிறந்த, நன்னடத்தையாளரும் பிரம்மத்தை அடைய வாழ்நாள் நெடுகிலும், தூய வாழ்வு நடத்தி வருபவர்களும் மட்டும் தான் ஆசிரியர்களாயிருக்கத் தக்கவர்கள் என வாயு புராணம் கூறுகிறது. அவ்வாறு சீலம் மிக்க பிராமண ஆசிரியர்கள் எவரும் கிடைக்கவில்லையாயின் அதே தகுதிகளை உடைய சத்திரியர்களிடமோ வைசியர்களிடமோ கல்வி கற்கலாம் எனவும் கூறப்படுகிறது. உயர்குடிப்பிறப்பைக் காட்டிலும் உயர் அடைவுத் தகுதிகளே கருத்தில் கொள்ளப்பட்டன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்பால் அனைவரும் சமம் எனினும் காலப்போக்கில் கல்வியாலும் அரிய பல சான்றாண்மைகளாலும் சில பாரம்பரியமான பிராமண குடும்பத்தினர்கள் பெற்ற சிறப்புக் கருதி அத்தலைமுறையினர் மட்டுமே குருவாதல் இயலும் என்ற நிலை ஏற்பட்டுப் பின்னர் இன உரிமையாகவே அது மாறிவிட்டமை இங்கு கருதற்பாலது. ஆச்சார்யா, உபாத்யாயா, குரு என்னும் சொற்களால் கல்வி வழங்குவோர் குறிக்கப்பட்டுள்ளனர்.

குரு எனும் சொல் பரவலாக, வேதக்கல்வி நடைமுறை விதிகளைச் சொல்லிக் கொடுத்து அகத்திருள் நீக்கி, மாணவனின் உள்ளத்தில் ஒளியேற்றும் ஆண், பெண், அம்மா, அப்பா அல்லது முதியவர்கள் அனைவரையும் குறிப்பதாய் அமைந்தது. விஷ்ணுதர்ம சாஸ்திரம் அப்பா, அம்மா, ஆச்சார்யா ஆகிய மூவருமே உன்னதமான 'குருக்கள்’ எனக் கூறுகிறது. உயர்வாழ்வை எடுத்துக் கூறி வழிகாட்டி, ஞானக்கொடை வழங்கும் அறிவு வள்ளல்கள் சிறியவரோ, பெரியவரோ, எளியவரோ, மாண்புமிக்கவரோ, எக்குலத்தவராயினும் அவர்கள் ‘குரு’ எனப்பட்டனர்.

ஆசிரியர் மாணவர் உறவில் குருவின்பால் மாணவரின் நன்றிக்கடன் உணர்வு நன்னடத்தை, பணிவுடைமை, நன்னம்பிக்கை இவைகளே அடிப்படைகளாய் இருந்தன. உழைப்புப் பங்கீடு அல்லது தொழில்களை அதனைச் செய்பவர்களிடையே பகுக்கும் முறையிலான (Division of labour) சமுதாய அமைப்பு நாளடைவில் வேற்றுமை மிக்க நாற்பாலாக உருவாகிப் பல நூற்றாண்டுகள் இம்மண்ணில் பல கேடுகளுக்குக் காரணமாகி தற்போது மாற்றம் கண்டுள்ளதெனலாம்.

மாணவன்

மாணவர்கள் பிரம்மச்சாரிகள் என்று அழைக்கப்பட்டனர். போதனா முறை வாயுரையாகவே இருந்தது. 'பிரணவம்’ எனப்படும் ஒங்காரமும், 'வியர்த்தி’ எனப்படும் துதியும் காயத்ரி’ எனப்படும் அறிவொளிப் பிரார்த்தனையும் கற்பிக்கப்பட்டன. கல்வி ஆரம்பம் வித்யாரம்பம் எனப்பட்டது. 8 முதல் 12 வயதுக்குள் நடைபெற்ற கல்வி உபநயனம் முகக் கண்ணுக்கு மேலான, ஞானக் கண்ணையும் திறப்பதற்கான சிறப்பு நிழ்ச்சியாகும். ஆசிரியர் மாணவர் இடைவினையின் போது அனுசரிக்கப்பட வேண்டிய விவரமான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாணவன் தன் இரு கைகளையும் கட்டி வடக்கு நோக்கி அமர்ந்தே கற்றலை மேற்கொள்ள வேண்டும். மெல்லிய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். தன் வலக்கையால் ஆசிரியரின் வலப்பாதத்தையும், இடக்கையால் இடப்பாதத்தையும் அழுந்தப் பற்றுமாறு தன்னிரு கைகளையும் குறுக்கிலிட்டு தரையில் வீழ்ந்து பணிந்து ஓங்காரம் கூறி வணங்க வேண்டும். பிரம்மச்சாரி என்றழைக்கப்படும் இம்மாணவர்கள் சத்தியமே பேச வேண்டும். தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

கதிரவனைக் கண்களால் பார்த்தல், தேன், இறைச்சி, வாசனை திரவியங்கள், மலர்சூடுவது, நாள் பொழுதில் தூங்குவது, வாகனங்களில் பயணிப்பது, காலணிகள் அணிவது, குடை பிடிப்பது, காதலிப்பது, கோபிப்பது, பிறர் பொருளை அபகரிப்பது, மோகிப்பது, வீணான விவாதங்கள் செய்வது,போதை கொள்வது, கூத்தாடுதல், இசைத்தல், அவதூறு பேசுதல், பெண்களை விரைத்து நோக்குவது, சூதாடுவது, கூடாநட்பு, விலங்குகளைத் தாக்குவது, ஆபாசப் பேச்சு, கடுஞ்சொல், மது ஆகியவற்றை பிரம்மச்சார்ய காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும். இவற்றை நாம் பொருளற்ற கட்டாயங்கள் என்பதை விடுத்து அக்காலத்தில் நிலவிய மாணவர் ஒழுக்கம், நலம் கருதிய வழிகாட்டல்கள் என்று கருத வேண்டும்.

குருக்களுக்கான நிபந்தனைகளும், ஒழுகலாறுகளும்

மனம் மாசுற்ற ஒருவனுக்கு அவனது படிப்போ, சுதந்திரமோ,யாகமோ, தியாகமோ, விரதமோ, பயிற்சியோ, கடுந்தவமோ இறுதிப் பயன் எய்திட உதவாது; வேதசாத்திர ஞானத்தைவிட ஒருவருடைய வாழ்வியல் செந்நெறிகளே அவனை உயர்த்த வல்லவை என்பதை குருக்கள் நம்பினர்.

ஆச்சாரியர், மாணவர் இருவருமே காட்டில் வாழ்ந்தனர். மாணவர்கள் ஆச்சாரியரின் ஆசிரமத்திலேயே தங்கிப் பயின்றனர். குருவின் துணைவியாரேமாணவனுக்கும் சமைத்து உணவு அருத்தினார். மாணவர்கள் அந்நாளில் தங்கள் பெற்றோர்க்குத் தங்கள் குடும்பங்களில் செய்யக்கூடிய பணிவிடைகளையே ஆச்சாரியருக்கும் செய்தனர். தன் பெற்றோர்க்குக் கட்டுப்பட்டிருந்ததைப் போல ஆச்சாரியருக்கும் கட்டுப்பட்டுப் புழங்கி மிக்குயர் ஞானம் பெற்று உலகின் பிறபகுதி மனிதகுலம் கண்டிராத மகத்துவங்களை இந்திய வேதகால மாணவர்கள் கற்றுத் தேர்ந்து, இறவாப் பெருநிலை எய்தினர். குரு மாணவர் இருவருமே சமுதாயம் ஈந்த கொடையில் வாழ்ந்தனர். ஆச்சாரியர்கள் தானம் பெற்றனர். ஆதலால் அவர்களிடம் சமுதாயக் கட்டுப்பாடும், மக்களை நேசிக்கும் தொண்டு நெறியும், உலகை வாழ்விக்கும் நோக்கமும் நிலைப்பெற்றது.

கானே’ என்பவரின் துல்லியமான மதிப்பீட்டைப் போல இன்றைக்குச் சுமார் ஏழாயிரம் ஆண்டு முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆட்சி, சமுதாய, சமூகப் பின்னணிகளுடன் நிலவிய சிறந்த கல்வி முறையை அதே காலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிலவிய கல்வி முறைகளோடு தான் ஒப்பீடு செய்ய வேண்டும்.

குருகுலக்கல்வி (கி.மு. 900-500)

வேத காலத்தைத் தொடர்ந்து வேதங்களைத் தழுவிய

 1. பிராமணங்கள்,
 2. ஆரண்யகங்கள்
 3. உபநிடதங்கள்
 4. இதிகாசங்கள்

போன்ற படைப்புகள் இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. அக்காலக் கட்டத்தில் கல்வி வளர்ச்சி பரவலானது. அக்காலத்தில் முன்னம் விளங்கிய குருகுலக் கல்விமுறையைப் போற்றிப் பணிவும், பண்பும், தனிமனித ஒழுக்கமும், இயற்கையோடு ஒத்திசைந்த கல்விக் கோட்பாடுகளும் நிலவின. குருகுலக் கல்விக் காலத்தில் சமயமும், வானசாத்திரமும் உலகியல் கல்வியும் போதிக்கப்பட்டன.

குருகுலக் கல்விக் காலப்படைப்புகள்

ஒவ்வொரு வேதத்திற்கும் விளக்கம் கூறுவனவாய் பிராமணங்கள் அமைந்தன. காடுகளில் வசித்து, இயற்கையைக் கூர்ந்து ஆய்ந்து எழுதப்பட்ட இப்படைப்புகளில் தத்துவக் கருத்துக்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. குருவின் அருகில் அமர்ந்து கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவ விளக்கங்கள் உபநிடதங்களில் காணப்படுகின்றன. அக்காலக் கட்டத்தில் கடவுள் வழிபாடு என்பது இயற்கையின் வெவ்வேறு தன்மைகளுக்கும் இயல்புகளுக்கும் ஆய்வுரு தந்ததால் பல கடவுள் வழிபாட்டு முறை தோன்றியது எனலாம்.

கடவுள் பற்றி பல கற்பிதங்களும், வழிபாட்டு முறைகளும், சடங்கு சம்பிரதாயங்களும் தோன்றின. எனினும் வேதத்தின் உட்பொருளான கடவுள் உருவமற்றவன். இயற்கையில் தோய்ந்து நிற்கும் ஆற்றல். அது உயிர்களினுள்ளே உறைந்தும் செயல்படுகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல. அச்செம்பொருள் தீயாய், வானாய், மண்ணாய், நீராய், காற்றாய்ப் பரவி இருக்கிறது. அது அன்புருவாம்பரம்பொருளாய் உள்ளது. அது ஜோதி மயமாய் உள்ளது போன்ற கருத்துக்களும், விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. கடவுள் என்றொன்று தனியே இல்லை; அது இயற்கையில் நீக்கமற நிலைத்து நிற்கும் பேராற்றல் என்ற கருத்தும் அக்காலப் படைப்புக்களில் ஆயப்பட்டது.

இதிகாசகாலக் கல்வி

இக்காலக் கட்டத்தில் தத்துவங்களும், அவற்றின் விளக்கங்களும் வரலாற்றுக் கதைகளின் வழியே கூறப்பட்டன. வேதக் கருத்துக்கள் காலங்கள் தோறும் பல உருமாற்றங்களைப் பெற்றன. ஆரியர் வருகைக்கு முன்னமேயே இந்தியாவில் தொல் பழங்காலந்தொட்டுநிலவிவந்த ஆன்மீகக் கருத்துக்களும், வேதக் கருத்துக்களும் இணைந்தன. புதிய விளக்கங்களைப் பெற்றன.

துறவு வாழ்க்கையை, பற்றற்றநிலையைப் போற்றி சுகவாழ்வைத் தவிர்த்த குருகுலக் கல்வி முறை மாறி வாழ்வியலை, மனித அபிலாசைகளை அவற்றின் நன்மை தீமைகளை விவரித்துக் கூறும் தத்துவ வித்தக விளக்கங்கள் கல்வியின் நோக்கங்களாய் மலர்ந்தன. இக்காவியக் காலத்தில் மகாபாரதம், இராமாயணம் என இரு பெரும் தொன்மை வரலாற்றுக் கதைகள் இம்மண்ணில் உருவெடுத்தன. நீ உன் கடமையைச் செய்; பலனை எதிர்ப்பாராதே, விருப்பு வெறுப்பற்றுக் கடனாற்றுபவனாக இருக்க வேண்டுமென பகவத்கீதையின் வழி அக்கால மனிதன் உபதேசிக்கப்பட்டான். 'அறத்தைக் காப்பவன் அறத்தால் காக்கப்படுவான்; சத்தியமே பேசுக; அறமே செய்க, நல்லுள்ளம் கொண்டவனாயிரு, நல்லவன் வாழ்வான், அறம் மட்டுமே வெல்லும், போன்ற கருத்துக்கள் கதைகளின் வழிபோதிக்கப்பட்டன.

அன்றைய விழாக்களும், வேள்விகளும் சமுதாயச் செயல்களும், இயற்கை தனக்கு அமைத்துத் தந்த சாதகங்களுக்கு நன்றி கூறுமுகத்தான் நடைமுறைப்படுத்தப்பட்டன. அரிய பல உண்மைகள் பிற்காலத்தில் தத்துவங்களையும், விவர விளக்கங்களையும், நுணுக்கங்களையும் மறைபொருளாக வைத்துத் தாம் மட்டுமே பயன்பெற ஆர்வப்பட்ட சிலரால் கல்வியின் வழி வெளியே கொண்டுவரப்படாமல் விடுபட்டு மறைந்துபோயின. காலப்போக்கில் அவை அறிவுநுணுக்கமிழந்த வெற்றுச் சடங்குகளாகவும், பொருளற்ற அரைகுறைச் செயல்களாகவும் மாறி, மூடநம்பிக்கைகள் என்றநிலையை அடைந்தன. கல்வியியல் தத்துவங்கள் தலைமுறை மாற்றம் பெறாது வலுவிழந்தன.

இயற்கை, வாழ்வியல் பற்றிய உயரிய கருத்துக்களை விளக்கும் இதிகாச காலக் நோக்கிலேயே கல்வி அமைந்தது. வீடுபேறு அடைதலே குருகுலக் கல்வியின் முக்கிய நோக்கமாக இருந்தது. சமயம் சார்புடையதாகக் கல்விமுறை இருந்தாலும் வாழ்வியலுக்கும், கணிதம், வானியல், மெய்யறிவியல் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கிடைத்தது. மாணவர் ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் வழிவகுத்தது. குருவின் இல்லமே குருகுலமானது. 12வயது ஆனவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பயின்றனர்.

கற்கும் மாணவர்களின் திறமையை அதிகரிக்க அரசியல், ஆட்சிமுறை, போர்க்கலை, விவாதம், உரையாடல், ஒப்புவித்தல் என்று பல வகையிலும் அவர்களின் திறமை போற்றி வளர்க்கப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. வாய்மொழியாக மனப்பாடம் செய்விக்கப்பட்டு குரு சீடர்கள் விவாத அடிப்படையில் கருத்துக்களுக்கு விளக்கம் தரப்பட்டது. குருபக்தியும், கடமை உணர்வும், கவனமும், ஒழுக்கமும், கல்விக் கருத்தும் கலைஞானமும் மிக்க மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வெளியேறினர். மன்னர்களின் அரசியல் தலையீடோ, செல்வந்தர்களின் குறுக்கீடுகளோ குருகுலக் கல்வி முறையில் இல்லை.

பெளத்தக் கல்வி (கி.மு.600)

வேதகால, குருகுலக் கல்வி முறைகள் மெய்ஞான நாட்டம் கொண்டிருந்தன. சுதந்திர சிந்தனைக்கும், செயலுக்கும் அங்கு வழியின்றி குரு வழியாகவே அனைத்தையும் கண்டு பொருள் கொண்டான். மாணவர் அனைவரும் கல்வியை உரிமையுடன் நாடிப்பெற வாய்ப்பு அப்போது இல்லை. உட்பொருளையும், நுட்பங்களையும் தழுவாத பல சடங்குகள் மலிந்தன. சமய வாழ்வில் புரோகிதர்களின் சுயநலமும் ஆதிக்கமும் ஓங்கின. சாதாரண மனிதனின் கல்வித் தேவை, உரிமை கருத்தில் கொள்ளப்படவில்லை. பரவலான இக்குறைபாடுகளைக் களைய, சீர்திருத்தங்களின் அடிப்படையில் ஒரு மாற்றமைப்பாக தோன்றிய எழுச்சியே பெளத்தமதமும், சமண மதமும் என்பதில் மிகையில்லை.

1661 கி.மு. ஆறாம் நூற்றாண்டு

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் பழமைச் சமுதாய இன்னல்கள் மாற்றம் பெற்று புதிய கருத்துக்களும், சிந்தனைகளும், சமயங்களும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றின. இந்தியாவில் பெளத்த மதமும் சமண மதமும் தோன்றின. இதே காலக் கட்டத்தில் சீனாவில் டாவோயிசமும், கன்பூசியானிசமும் மலர்ந்தன. அதனால் அந்நாடுகளில் பல புதுமைகள் பூத்தன. கிரேக்க நாட்டில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் போன்ற அறிஞர்கள் தோன்றிப் பல சீர்திருத்தச் சிந்தனைகளுக்குவித்திட்டு வளர்த்னர் பாரசீக நாடுகளில் சொரஸ்திரர் என்ற மேதை தோன்றி புதியதோர் ஆன்மீகப் பாதையையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்துத் தந்தார். இம்மறுமலர்ச்சி பரவிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளிலும் புதிய அறிவு பூர்வமான சிந்தனைகள் பல தோன்றின. கல்வித்துறையில் பற்பல புதிய விரும்பத்தக்க கருத்துக்கள் தோன்றி சுதந்திர வாழ்வியல் நெறிமுறைகளை வளர்த்தன.

கி.மு. ஆறாம் ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய பெளத்த சமண மதங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் விரைந்து பரவின. பெளத்தமும் சமணமும் தழைத்த அக்காலத்தில் எல்லோரும் கல்வி பெறுவது மனித உரிமை என்ற கோட்பாடு தலைதூக்கியது.

அறிவியலையும், சுதந்திரமாகச் சிந்திக்கும் திறனையும் செயலாற்றும் ஆர்வத்தையும் பெளத்த சமணக் கல்விகள் வளர்த்தது. சீனா, ஜப்பான்,தாய்லாந்து, கம்போடியா, மலேசியா,சுமத்ரா, ஜாவா, போர்னியா,இலங்கை போன்ற கீழைநாடுகளிலும், ஆப்கானிஸ்தான் பாரசீகம் போன்ற மேற்காசிய நாடுகளிலும் வேரூன்றின. இன்றளவிலும் அந்நாடுகளில் பெளத்த மதத்தின் தாக்கமும் கோட்பாடுகளும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெளத்தக் கல்வியின் தோற்றம்

ஆரியர் வருகைக்கு முன்னமேயே இந்தியாவில் வாழ்ந்த மரபுக் குடிகளிடம் பல்வேறுபட்ட புனிதமான இறைக்கோட்பாடுகள் இருக்கவே செய்தன. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருகையில் தங்களுடையது மற்றும் தாங்கள் கடந்து வந்த பல்வேறுபட்ட நாகரிகத்தினரின் இறை கோட்பாடுகளின் செல்வாக்கிலான கருத்துக்களுடன் வந்தனர். இந்தியாவில் வந்து தங்கிப் பழகி அவர்தம் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்திருந்த மரபுக் குடிகளுடன் இடைவினைபுரிந்து அவர்தம் கோட்பாடுகளுடன் இணைந்த பழமைக்குப் பழமை, புதுமைக்குப் புதுமையான சிந்தனைகளுடன் ஒருவகையான எழுச்சி மனநிலையிலேயே தம் ஆன்மீகக் கோட்பாடுகளைக் கட்டுரைத்தனர். இந்திய மண்ணில் தோன்றிய அனைத்துப் புதுமைகளுமே இங்குநிலவிய பழமைகளின் மறுபிறப்பே, மறுவடிவமே, மறுமலர்ச்சியே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவை புதிய நோக்கில் புலப்பட்ட பழைய தத்துவங்களே என்பதே உண்மை.

வறுமை, பிணி, மூப்பு, சாக்காடு என்ற நான்கு துக்கங்களின் பிடியில் மனிதகுலம் சிக்கித் துன்புறுவதைக் கண்டு சித்தார்த்தர் (கி.மு. 566-486) கடுந்தவம்பூண்டார். சீலங்களை ஏற்று ஞான வேட்கை கொண்டு தனது வினாக்களுக்கு விடை தேடிப் பல துறவிகளை அண்டித் தெளிவு பெற முயன்றார்.

போதிசத்துவ தர்மத்தை நாடெங்கிலும் அவரது சீடர்கள் பரப்பினர். லட்சக்கணக்கானோர் புத்தர் காட்டிய வாழ்வியல் நெறியை, வாழ்க்கைக்குகந்த எளிமையான, செலவில்லாத, சடங்குகளற்ற, செந்நெறியை மனமுவந்து ஏற்றனர். 45 ஆண்டுகாலம் அருள்நெறியை அனைவர்க்கும் புத்தர் பரப்பினார். கடுந்தவத்தின் விளைவாகத் தான் பெற்ற ஞானச் சுவடுகள் அனைத்தையும் மறைபொருளாக, ஒன்றையும் ஒளித்து வைக்காது தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். அனைத்து மொழியினரும் மக்களும் தம்மளவில் நேரடியாகக் கண்டு கற்குமாறு பாறைகளில் கல்வெட்டாகப் பதிந்து தாமே ஒரு இறைநெறிக் கல்வி பரப்பிய ஆசிரியராக விளங்கினார், புத்தரின் வாழ்வும், தவநெறியும், கொள்கைகளுமே, பெளத்தக் கல்வியின் அடிப்படைப் போதனைகளாய் அமைந்தன.

புத்தரின் போதனைகள்

 1. உலகம் துன்பமயமானது
 2. அத்துன்பங்களுக்குக் காரணம் உண்டு
 3. துன்பங்களை ஒழித்து விடலாம்
 4. அதற்கு உகந்ததோர் வழியும் உண்டு.

ஆசையே துன்பத்திற்குக் காரணம். எண் வகை நெறிகளைக் கொண்டு துன்பத்தை நீக்கிவிடலாம். உலக வாழ்க்கை சங்கிலித் தொடர் போன்றது. எப்பொருளும் அழிவதில்லை. சிதையும் நிலை ஏற்படினும் அது மற்றொன்றின் தோற்றமாகிறது. வாழ்வில் நற்கதி அடைய யாகங்கள் வேண்டாம். எளிய எண் வழிகளைக் கடைபிடித்தாலே போதும் என்று புத்தவழ்வில் கல்விக் கருத்துளை வரையறுத்தார்.

எண் வழிகள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துஉண்ணாமை நன்று. என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க பெரும் பொருட்செலவிலான யாகங்களும், தினசரி சடங்குகளும் செய்வதன் மூலமே ஒருவன் நற்கதி அடையமுடியும் என்ற கருத்தை பெளத்தக் கல்வி ஏற்கவில்லை. மாறாக நன்னம்பிக்கை, நல்லெண்ணம், நற்பேச்சு, நன்னடத்தை, நற்சிந்தனை, நன்னெறி வாழ்வு, நன்முயற்சி, நற்தியானம் ஆகிய எட்டு செந்நெறிகளை பெளத்தக் கல்வி பறைசாற்றுகிறது.

இன்றைக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னமேயே வாழ்க்கைப் பயன் நோக்கில் இந்தியக் கல்வியில் ஏற்பட்ட மாற்றம் உலகின் கீழைநாடுகளில் செல்வாக்குடன் வளர்ந்தது. புத்தர் ஆசிய ஜோதி என்றழைக்கப்பட்டார். பெளத்தக் கல்விக் கொள்கைகளை இந்திய மன்னர்கள் பலர் தாம் ஏற்றுக் கற்றுத் தேர்ந்து பின்பற்றினர். புத்த மதக் கொள்கைகளைப் பரப்ப தம் பேரரசில் கிராமங்கள் தோறும் தர்ம மகாமாத்திரர்கள் என்ற கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். நாட்டின், உலகின் பல்வேறு பகுதியினரும் கலந்து கொண்ட புத்த மகாநாடுகள் நடத்தப்பட்டன. வெளிநாட்டினர் பலர் இந்தியாவில் வந்து தங்கி கல்வி பெற்றுச் சென்றனர். பல உயர்கல்விப் பல்கலைக் கழகங்கள் தோன்றி வளர்ந்தன. சத்தா' என்ற தியான முறை வகுக்கப்பட்டு உலகெங்கிலும் பரவியது.

சமுதாயச் சீர்திருத்தங்களும் சமூக மேம்பாடும்

சாதிப் பாகுபாடுகளை புத்தக் கல்வி ஏற்கவில்லை. அரசர்கள் குடிகளைப் பேணி சமத்துவத்தை வலியுறுத்தியமையால் மக்களை இணைத்த சீர்திருத்தக் கல்வியாக பெளத்தர் கல்வி மலர்ந்தது. நாடெங்கிலும் அமைக்கப்பட்ட சங்கங்கள் மடாலயங்களை ஏற்படுத்தின. புத்த விகாரங்கள் கல்வி நிலையங்களாக அமைந்தன. வெளிப்படையான துறவுக் கோட்பாடுகளுடன், நெறிப்படுத்தப்பட்ட அன்றாடப் பழக்க வழக்கங்களைப் பேணி புறந்துாய்மை, அகந்தூய்மை இரண்டும் பெற்றவர்களாக மாணவர்கள் வெளியேறினர். சமஸ்கிருத மொழியில் மட்டுமின்றி பிராம்மி, பிராகிருதம், பாலி போன்ற அவரவர் வட்டார மொழியில் புத்தரின் உபதேசங்கள் போதிக்கப்பட்டன. பலியிடுதலும் யாகங்கள் நடத்துதலும் மறைந்தன.

வேதகால மாணவர்களைப் போன்றே புத்த மடாலயங்களில் சேர்ந்தோரும் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொண்டனர். நீரைச் சேகரித்தல், உணவு பெறுதல், உணவைப் பங்கிடுதல், அறப்பணிகள் செய்வது ஆகிய பணிகளை மாணவர்கள் கீழ்ப்படிந்து செய்தனர். மாணவர்கள் மீது கண்டிப்புகளும் அதிகமாயிருந்தன. தற்காப்புள்ள தூய நெறியாளர்களாக மாணவர்களை மாற்றுவதில் புத்த குருக்கள் ஆர்வம் காட்டினர்.

மாணவர்களின் சேர்க்கையும் கட்டுப்பாடும் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் பள்ளியில் தடையின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சேர விரும்புவோர் தம் எட்டாவது வயதில் பப்பஜா” என்ற மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். கல்வி கற்க வீட்டை விட்டு வெளியேறுதல் என்ற பொருள் கொண்ட இது வேதகால மாணவர்கள் மேற்கொண்ட பாணியையே ஒத்திருந்தது. புத்தமதம் நன்னடத்தை, நல்லொழுக்கத்திற்கு, உண்மை ஒம்புவதற்கு முதலிடம் அளித்தது. ஆரவாரமான கட்டுப்பாடுகள், புறக்காட்சிகளைத் தவிர்த்து மனதைக் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து மனித நேயம் பேணுவதாக பெளத்தக் கல்வி அமைந்தது. இதனால் நாட்டில் நல்லொழுக்கம் பேணி, நல்லறம் நிலைநாட்டும் நற்சிந்தனையாளார்கள் பலர் தோன்றினர்.

மாணவர்கள் நற்பண்புகளையும், கற்றல் வளர்ச்சியையும் மதிப்பிட்டு அறிய கூட்டம் கூட்டப்பட்டது. மிகச் சிறந்த பண்புகள், சாதனைகள் உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டன. ஆரம்ப கால மாணவர்கள் ‘சாமனராக்கள்; என்றழைக்கப்பட்டனர். பனிரெண்டு ஆண்டுகள் கல்வி கற்றபின் ஒவ்வொரு சாமனராவும் பத்து ஆண்டுகள் மூப்புள்ள பத்து பிட்சுகளால் பரிசோதிக்கப்பட்டனர். கல்வித் தகுதி உறுதி செய்யப்பட்டு உபசம்பதா என்ற சடங்குடன் கூடிய பட்டமளிப்பு விழா நடத்தி அவர்களை புத்த பிட்சுவாக ஏற்றுக் கொள்வர்.

பெண்கல்வி

சங்கங்களில் தங்கிப் படிக்க வேண்டியதால் பெண்கள் சேர ஆரம்பத்தில் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விருப்பமும் ஆர்வமும் கருதி அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் கல்வி கற்று நூல்களையும் எழுதியுள்ளனர். சுபா, அனுபமா, கமேதா, போன்றோர் தேரிகா என்ற நூலை எழுதியுள்ளார். ஹர்ஷர் காலத்தில் அவரது அவையில் ஏழு பெண்பால் புலவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

பாடப்பொருள்

மடாலயத்தின் ஒழுக்க முறைகளை விளக்கியது வினைய பீடகம். அறநெறிக் கருத்துக்களை சுத்தபீடகம் கூறியது. பொருளியல் சார்ந்த நெறிமுறைகளை அபிதம்ம பீடகம் விவாதித்தது. புத்தரின் வாழ்க்கைக் கதைகள், துறவிகளின் அன்றாட வாழ்க்கைக் கதைகள் அறிவுரை, படிப்பினைகளைக் கதை வடிவில் கூறும் 500 ஜாதகக் கதைகளும் இருந்தன. வினா விடைகளாகவும் தத்துவ விவாதங்களாகவும், விவரிப்புக்களாகவும், சூத்திரங்களாகவும், அறிவுரைகளாகவும் பாடப்பொருள் அமைந்திருந்தது. பாடங்கள் வாயுரையாக வழங்கப்பட்டன. சிந்தனைக்கும் புரிதலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆன்மீக நெறிகளன்றி, ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், வானசாத்திரம், ஜோதிடம், யோகம், சுற்றுச்சூழல், பயிர்த்தொழில், சுகாதாரம், கலை, இலக்கியம், சிற்பம் முதலிய சாத்திரங்களும் கருத்தாகவும், செயல்முறையாகவும் கற்றுத்தரப்பட்டன.

சமணக்கல்வி

"ஞானத்திலே பரமோனத்திலே உயர்ந்து, சாரத்திலே சாத்திரங்கண்டு தருவதிலே புகழ்பெற்று தவ வேடத்திலே தனி யோகத்திலே" பல சிறப்புகள் ஈட்டியது இவ்விந்திய நாடு. ஜிவ காருண்யம் தழைத்திட வாழ்ந்து காட்டித் தானும் இயல்பாய் வாழ்ந்து தாவரம் முதலாயப் பல்லுயிரினமும், பொருந்தி வாழ்ந்திட வழங்கிய அருட்கொடைகள் உலகமே வியந்து பாராட்டி ஏற்றுக் கொண்டதொன்றாகும்.

கி.மு. 540-ல் ஞானாத்திரிகர்கள் வம்சத்தின் தலைமகனும் வீரம் செரிந்த மன்னர் சித்தார்த்தருக்கும் இளவரசி திரிசலாவுக்கும் "வர்தமானர் மகனாகப் பிறந்தார். அரசாட்சி செய்திடக் கல்வி பெற்று திருமணம் முடித்து ஒரு மகளையும் இவர் ஈன்றார். ஆயினும் இவர் மனம் பிறவிப் பெருங்கடல் கடந்து பிறவாநிலை எய்துவதிலேயே ஆர்வம் காட்டியது.

தனது முப்பதாம் வயதில் கடுந்தவ நெறிநின்று இல்லறத்தைப் புறந்தள்ளி வெளியேறினார். அன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னம் பார்சுவநாதர் என்ற தவவாணர் புகட்டிய நிர்கிரந்த’ என்ற தளைப்படாநிலை தவநெறியைப் 7பின்பற்றினார். வர்த்தமானர் சார்ந்த தவநெறியில் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர்கள் பார்சுவநாதர். எனவே அந்நெறியில் வர்தமானருக்கு முன்னமே இருபத்தி மூன்று பேர் இம்மண்ணில் தோன்றி தவம் இயற்றியுள்ளனர் என்பதுறுதி. வர்த்தமானருக்கும் முன்னால் இருபத்தி மூன்று தீர்த்தங்கரர்கள் என்றால் அதன் நீண்ட பழமைப் பாரம்பரியம் குறிப்பிடத்தக்கது. தீர்த்தங்கரர்கள் என்ற சொல்லுக்கு “நீரிடைப்பட்ட நெடுவழிப்பாதை கண்டோர்” (FORDMAKERS) என்பது பொருள்.

மெய்யறிவுப் பாதையில் மெய்ப்பொருளறிநாட்டத்தில் பிச்சை பெற்று உண்டு தவம் கிடந்து விவாதங்கள் பல செய்து தம் உடலைப் பலவழிகளிலும் வருத்திக் கொண்டு பனிரெண்டு ஆண்டுகள் தவமிருந்தார். தன் பதிமூன்று ஆண்டுகால கடுந்தவத்தின் இறுதியில் கேவலமுக்தி ஞானம் அடைந்தார். வெல்லற்கரியது எதிரியின் படைபலமும் ஆர்ந்த வீரமும்; அதனினும் மிக அரியது தன்னுள்ளே தன்னைத்தான் வெல்லுவது. ஈட்டுவதற்கரியதாம் அந்நிலையை வென்றெடுத்த இவர் “மேன்மையுறு தகைமை” ஹர்ஹந்த் மகாவீரர்-ஜினர் எனப்பட்டார்.

ஆன்மஞான ஒளிபரப்பிய இவர்தம் அறிவரிதான கோட்பாடுகளை கங்கை வளஞ்சேர்க்கும் பல அரசுப் பகுதிகளில் முப்பதாண்டு காலம் பயிற்றினார். பல லட்சம் பேர் குறுகிய காலத்தில் இவரது கோட்பாடுகளை ஏற்றனர். அரசர்கள் இவரைப்பின்பற்றினர். கி.மு.468-ல் மகதப் பேரரசின் தலைநகர் ராஜக்கிருகத்தின் அருகிலிருந்த பாவா என்ற நகரில் உண்ணா நிலை காத்து உடலை உதிர்த்தார். சந்திரகுப்த மெளரியர் தன் அரசபதவியைத் துறந்து இத்தவ நெறியில் இணைந்தார். மெளரியர்கள் ஆட்சிக் காலத்தில் ஜீனக் கல்வி வலிமையுற்றது.

மகாவீரரின் அறிவுரைகள் வாய்மொழியாகவே ஆரம்பத்தில் பதிநான்கு உட்பகுதிகளைக் கொண்ட பூர்வ ஞான உபதேசக்கல்வி எனவும் பின்னர், வல்லபியில் பனிரெண்டு அங்கங்களாகவும் தொகுக்கப்பட்டது. பிராகிக்ருத மொழியிலும், சமஸ்கிருத மொழியில் பல விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளன. சமணத்துறவிகள் கொல்லா நெறிநின்று, மருத்துவத்தாலும், கல்வியாலும், இலக்கியத் தொண்டாலும் மனிதகுலத்துக்குப் பல அரிய கொடைகளை வழங்கியுள்ளனர்.

மனிதகுலம் தம் அனுபவத்தாலும், உழைப்பாலும், அறிவாலும் ஆய்ந்தெழுதிக் கையெழுத்துப் பிரதிகளாக வைத்திருந்த சுவடிகள், மடாலயங்கள், சமணத்துறவிகள் இல்லாதிருந்தால் அடியோடு அழிந்துபட்டிருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில், பல மொழிகளில், சமயம் சாராத பல பணுவல்களை எடுத்து வாசித்துத் தொகுத்துப் பல நூற்றாண்டுகள் காத்து நமக்களித்த பெருமை சமணத் துறவிகளையே சாரும். தொண்டு, ஆக்கம், படைப்பு, சீர்திருத்தம், உழைப்பு, பணி முதலிய சிரமதானத்தை சமணர்க் கல்வி போதித்தது.

பிரபஞ்சம் அதற்கென உள்ள சில தெய்வங்களால் உருவாக்கப்பட்டதோ, நிர்வகிக்கப்படுவதோ, அழிக்கப்படுவதோ அல்ல என்று திட்டவட்டமாகப் போதித்தனர். பிரபஞ்சம் அழிவற்றது; நிலையானது; மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் ஆன்மா உள்ளது. எனவே அவற்றின் நலன்களையும் பேண வேண்டுமென சமணக்கல்வி போதித்தது. மனிதர்களின் நல்வினை தீவினைகளே அவர்தம் இன்பதுன்பங்களுக்குக் காரணம் தீய செயல்கள் தீமையே பயக்கும். நல்ல செயல்கள் நன்மையை வழங்கும். வினை வலியது. தீயதையும், துக்கம் தருவதையும் ஒதுக்கி இயல்பைக் காத்து நன்மையை மட்டுமே நாட வேண்டுமென்பதே சமணக் கல்வியின் பின்னணியாக விளங்கியது.

கர்ம வினையின் தாக்கத்தை நோன்பு, தவம், கழுவாய் ஆகியவற்றால் குன்றச் செய்யலாம். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான பக்குவங்களை அறிந்து அதன் வழிநின்று செந்தன்மை பூண்டொழுகப் பயில்வதே கல்வியின் தலையாய பயன் எனப் புகட்டினர். எழுத்தறிவு பெற்றவர், பெறாதவர் அனைவருமே நல்வினையை நாடிச் செய்யுமாறு சமண மடாலயங்களில் கல்வி போதித்தனர்.

அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் முதலிய ஐந்து நெறிகளையும் வைராக்கிய விரதத்துடன் ஒரு சமணத் துறவி காக்க வேண்டும். வன்முறையும், வேண்டுமென்றே உயிர்க் கொல்லுதலும் தீவினையை அடர்வித்துக் குவிக்கும் வலிமை மிக்க கொடுஞ்செயல்கள்,என சமணக்கல்வி அறிவுறுத்தியது. சமணக்கல்வி ஒரு வாழ்வியல் நெறிமுறையாக அமைந்திருந்தது.

இந்நெறிகள் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் என தனித்தனியே வகுத்து அளிக்கப்பட்டுள்ளன. கல்வியின் இறுதிப் பயனாக மோட்சத்தைக் கூறினர். அதனை அடைய நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்ற மூன்று வழிமுறைகளைப் புகட்டினர்.

சமணக் கல்வியில் ஞானம் அல்லது அறிவை ஐந்தாக வகுத்து ஆய்ந்தனர். அறிவறிந்து அறம் வளர்க்கும் ஆசிரியர்களாகப் பணிபுரிய அவற்றை ஆய்ந்தறிவது அனைவருக்கும் அவசியமானதாகும். ஐவகை ஞானங்களாவன

 1. மதிஞானம் (Perceptions) பொறிகளுக்கு முதலில் தோன்றுவது; பிறகு அதனை மேலும் ஊக்கமாக அறிவது-பின் அறிந்ததை இதுதான் என நிச்சயம் செய்வது; அதை மறவாமல் நினைவில் நிறுத்திப் பயன்படுத்துவது.
 2. கருத்துஞானம் (Scriptural) இது கற்கும் நூல்களிலிருந்து பெறும் அறிவாகும். கேள்வி ஞானமும் இதில் அடங்கும்.
 3. அவதி ஞானம் (ClairVoyance) புலனாகாதவற்றையும் உள்ளத்தால் உணறும் ஆற்றல், இயல்புகடந்த நுண்ணோக்காற்றல், பருப்பொருள்களின் இறந்தகால எதிர்கால நிலைகளை அறியும் திறன்.
 4. மனப்பர்ய ஞானம் (Telepathy) இது ஐம்பொறி, மனம் இவற்றின் துணையின்றிபிறர் மனதில் உள்ளதை உள்நோக்கத்தை அறிதல் ஆகும்.
 5. கேவலஞானம் (வாலறிவு) இடம், காலம், பொருள் இவை கடந்த முற்றும் உணரும் ஞானமாகும். இவ்வைந்திலும் மதிஞானமும் கருத்துஞானமும் கூட நன்றின்பால் உய்க்காமல் தீயதை அறியுமாயின் அவை நன்மை பயப்பதற்குப் பதிலாகத் தீமையையே பயத்தல் கூடும்.

மாணவர் சேர்க்கை

ஐந்து வயதுள்ள ஆண், பெண் மாணவர்கள் சமணப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் சாதிப் பாகுபாடின்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. தேவைக்கேற்ப இப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை கூடுதலாகவோ, குறைவாகவோ அமைந்தது. ஐநூறு மாணவர்கள் வரையும் ஒரு பள்ளியில் சேர்ந்து பயின்றனர்.

சமணப்பள்ளிகள்

சமணத் துறவிகள் தங்கி உறைந்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டன. அவ்வாறு தாங்கள் தங்கித் தவமிருக்கும் குகைகள், மலையிடங்களை நாடி வரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியளித்தனர். குகைகளை ஒட்டி அமைக்கப்பட்ட கூடங்களில் மாணவர்களை அமர்த்திச் சொல்லிக் கொடுத்ததால் அவ்விடங்கள் நாளடைவில் பள்ளிக்கூடங்கள் என்னும் பெயரைப் பெற்றன. இன்றளவிலும் கல்வி கற்கும் இடங்கள் பள்ளிக்கூடங்கள், பள்ளிச் சாலைகள் என்று வழங்கி வருதல் சமணர்கள் தமிழ்நாட்டில் வழங்கிய கல்விக் கொடைகட்குச் சான்றாகும். இப்பள்ளிகள் பள்ளிச் சந்தம் எனப்படும் கொடைகளாலும், இறையிலி நிலதானங்களாலும் சமுதாயத்தினரின் அருள் உபயங்களாலும் நடத்தப்பட்டதாகக் கல்வெட்டாதாரங்கள் கூறுகின்றன.

1673. சமணக் கல்விப் பாடப்பொருள் வீடுபேறு அடைவதையே சமணர்கள் வாழ்க்கையின் இறுதிப் பயனாகவும், நோக்கமாகவும் கொண்டு வாழ்ந்தனர். எனவே இவர்களது கல்வியும் அதனை நோக்கி வழிப்படுத்துவதாகவே அமைந்தது. துறவிகள் மட்டுமல்லாது இல்லறத்தார்க்கும் இனியவாம் ஒழுகலாறுகளை சமணக்கல்வி போதித்தது. இல்லறத்தார்க்கான கல்வியில் போதிக்கப்பட்டவை பின்வரும் பத்து ஒழுக்கங்களாகும்.

சமணக்கல்வி வலியுறுத்திய இல்லறத்தார் ஒழுக்கங்கள்

 1. கொல்லாமை
 2. பொய்யாமை
 3. கள்ளாமை
 4. பிறர்மனை நயவாமை
 5. பொருள் வரையாமை
 6. கள் உண்ணாமை
 7. ஊன் உண்ணாமை
 8. தேன் உண்ணாமை
 9. இரவு உண்ணாமை
 10. அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் முதலிய உயரியவர்களை வழிபடல்.

அன்னதானம், ஒளசததானம், அபயதானம், சாத்திரதானம் முதலிய நான்கு தானங்களையும் செய்ய வேண்டும் என்பது பாடம் நெடுகிலும் வலியுறுத்தப்பட்டது. சமணக் கல்வி ஆன்மீகக் கல்வியாகவன்றி அறிவியல் கல்வியாகவும் பல நுணுக்கக் கல்வியாகவும் அமைந்தது. மொழி, கணிதம், வான சாத்திரம், அறிவியல், வானியல், இயற்பியல், உளவியல், ஆய்வியல், வாழ்வியல், தர்க்கவியல் போன்றவற்றை மாணவர்கள் பயின்றனர்.

பயிற்றுமுறை

கல்வி வாய்மொழியாகவே புகட்டப்பட்டது. பாடநூல்கள் இடம் பெறவில்லை. யோகப் பயிற்சிகள் உபாத்தியாயராலும், துறவிகளாலும் நேரடியாக உடனிருந்து செய்து காட்டிச் சொல்லித்தரப்பட்டன. மாணாக்கர்கள் பாடப்பொருள்களைப் புரிந்து மனப்பாடமாக வைத்திருந்தனர். ஆயினும் திட்டவட்டமான அணுகுமுறையில் பாடப்பொருள்கள் மாணவர்களின் மனதில் பதிவிக்கப்பட்டது. இன்றைக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சமணத் துறவிகளால் திட்டவட்டமானதோர் ஐந்துபடிநிலைகளுடன் கூடிய பயிற்றுமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அவையாவன

 1. சொல்-பொருள் கேட்டறிதல்
 2. நினைவுகூர்தல்-மீட்டுக் கொணர்தல்

சமணர்கள் போற்றிய ஆக்கவியல் கல்வி(Constructivism)

கருத்துக்களின் உண்மைத் தன்மையை நுணுகி ஆயும் புத்திக் கூர்மை வளர்க்கப்பட்டது. ஆராய்ச்சி, மனப்பான்மை தூண்டப்பட்டது. விவாதத் திறமை வடிகாலாக்கப்பட்டது. ஒதுவதைக் கூறுதல், வேறுபாடுகள், ஒப்பிட்டறிதல், வேறுபடுத்தி அறிதல் எனும் பேத விஞ்ஞானம்-பகுத்தறிவு மனப்பான்மை போற்றப்பட்டது. ஒரு கருத்தை, அதன் பல பரிமானங்களில் உற்றுநோக்கி ஆய்ந்த பின்னரே அதன் ஏற்புடைமை கைக் கொள்ளப்படும். இது அனேகாந்தவாதம் எனப்படும். தர்க்க ஞானம் மிக்கோராய் மாணவர்கள் வளர்ந்தனர். இக்கருத்துகளை இக்காலக் கல்வி அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டு மாணவ-ஆசிரியர்கள் விரிவாக அறிவது மிகுந்த பலனை அளிக்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.34
KANIMOZHIRAJENDRAN Jun 05, 2020 12:31 PM

THANK YOU SIR /MADAM , NAA B.Ed student . enakku romba usefullaa erukku sir.thank you very much

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top