பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / இந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்

இந்தியக் கல்விமுறையின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி விழிப்புணர்வும் - முக்கியத்துவமும்

'இளமையில் கல்' : 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' 'வித்தை விரும்பு : 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்'. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'. 'கல்விக்கழகு கசடற மொழிதல்'. 'பிச்சை புகினும் கற்கை நன்றே', 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' போன்ற பொன் மொழிகள் கல்வியின் முக்கியத்துவம் சங்ககாலத்தில் உணரப்பட்ட நிலையை எடுத்துரைக்கின்றன.

"கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே” “எக்குடிப் பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர்' 'கல்வி கரையில கற்பவர் நாள் சில', "பிதா விரும்புவது வித்தையே” “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு'', 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து”, ''கண்டது கற்கப் பண்டிதன் ஆவாய்”, என்னும் வரிகள் கல்விக்கு பண்டைத் தமிழகத்திலிருந்த வரவேற்பையும், விழிப்புணர்வையும் எடுத்தியம்புகின்றன.

ஆசிரியர்கள்

கற்றறிந்தவர்கள், மொழியிலும் பிற அறிவுப் புலங்களிலும் புலமை மிக்கவர்களாகிப் 'புலவர்கள்' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அறிவு நாட்டத்தால் பல்கலையும் கற்று, வாணாளைக் கரையிலாக் கல்வியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு கழித்தனர் என்பதை 'புலமையும் வறுமையும் சேர்ந்தே இருக்கும்' என்ற பழமொழியினால் நாம் அறியலாம். கல்விச் சாலைகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. கற்றவர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசும் பதவியும் அரசர்களால் வழங்கப்பட்டன. புலவர்களால் தாம் புகழப்படுவதையும் போற்றப்படுவதையும் அரசர்கள் தம் வாழ்வின் இலட்சியமாகக் கருதினர்.

பெண்கல்வி

பெண்களும் கற்றனர். பெண்பால் புலவர்களும் வாழ்ந்தனர். நச்செள்ளையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார், நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், பொன்முடியார் போன்ற பெண் புலவர்களுமிருந்தனர். காக்கைப் பாடினியார் காக்கைப் பாடினியம், சிறுகாக்கைப் பாடினியம் என்ற யாப்பிலக்கண நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். கல்வி ஒரு பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளத்தான்; வயிற்றை நிரப்பிட, வசதியைப் பெருக்கிட ஊதியம் ஈட்டிடவே என்ற இக்காலம் போலன்றி கற்றனைத்தூறும் அறிவு: கல்வி வாழும் வகையை வாழ்வின் பயனை அடைந்திட பிறவியின் பயனைத் தெரிந்திடவே முயலப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதனைக் 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற குறளாலும் அறியலாம். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்கல்வி மேற்கொண்டனர். அடுத்தடுத்த தலைமுறைக்கு அறிவுக்கொடை வழங்கினர்.

பாடப்பொருள்

ஆயிரம் கனவுகள் கண்டு அண்ணாந்து பார்த்து ஆன்மீகப் பயனடையவே கல்வி என்பதாகவன்றி-'வாழ்க்கை வாழ்வதற்கே வருங்காலம் வெல்வதற்கே' என்ற முனைப்புடன் 'அறவழியான் பொருள் ஈட்டுதல்', 'ஈதல், இசைபட வாழ்தல்', 'எய்திய புலமைக்காகப் போற்றப்படுதல்', 'வாழ்வாங்கு வாழ்தல்' புகழ் ஈட்டுதல் போன்ற பயன்நோக்கியல் கல்வியாக தமிழகத்தில் சங்ககாலக் கல்வி அமைந்தது.

வாழ்க்கையை முறைப்படுத்தி இயல்பொத்த இனிய வாழ்வு வாழ நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுதியிடப்பட்டு நிலத்தின் சூழலியலுக்கேற்ப வாழ்வியல் ஒழுக்கக்கூறுகள் ஆலோசிக்கப்பட்டிருந்தமை உலகில் வேறு எந்த நாட்டிலும் நிகழாத வாழ்வியல் அற்புதம் எனலாம். இலக்குகளும் இலக்கியங்களும் அகம், புறம் என்றவாறு சிறப்போடு இயற்றப்பட்டுள்ளமை வியந்து பாராட்டற்பாலதாகும்.

அறிவியல், வான சாத்திரம், கலைகள், கணிதம், இலக்கணம், காப்பியப் படைப்பு, இசை, நாடகம், கூத்து, பாட்டு போல்வன நிலத்திற்கு நிலம் மாறுபட்டன. ஆயகலைகள் அறுபத்து நான்கும் தமிழர்களின் ஆய்வுக்கும், அறிவுக்கும் சாட்சியாய்த் திகழ்கின்றன.

ஆசிரியர் - மாணவர் உறவு

ஆசிரியர் மாணவர் உறவு அன்புக்கும், மரியாதைக்கும் பண்புக்கும், பரிவுக்கும் நிலைக்கலமாய் அமைந்தது. நட்புறவு பேணப்பட்டது. கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கல்வியில் பணத்தின் ஆதிக்கம் இல்லை. எளியோரும் தடையில்லாது முயன்று ஏற்றமுறக் கற்றனர். கல்வியில் தன்னை விஞ்சும் மாணவர்கள் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டு மேன்மேலும் உயர வழிகாட்டப்பட்டது. தம்மின்தம் மாணாக்கர் புலமை கண்டுவந்த ஆசிரியரின் பெருந்தன்மை போற்றிப் பின்பற்றத் தக்கதாகும்.

பயிற்றுமுறை

வீடு கட்டும் நெறிமுறைகளின்படி கட்டப்படும் மனையின் ஏழில் ஒரு பங்கு தர்மபாகம் என்ற பெயரால் ஒதுக்கப்பட்டு அவற்றை அவ்வீட்டில் இல்லறம் நடத்துவோர் பராமரித்துப் பொதுத் தேவைகளுக்கு இடமளித்தனர். வீடுகள்தோறும் அமைந்திருந்த இவைகள் திண்ணை , முன்றில் எனக் கூறப்பட்டது. இல்லறத்தார் நுழைந்து புழங்கும் வீட்டுத் தலைவாயிலுக்கு வெளியில் அனைவரின் நல்லுபயோகத்திற்கும் அனைத்து வீடுகளிலும் ஏழில் ஒரு பங்கு விகிதப்பரப்பு ஒதுக்கிப் பராமரிக்கப்பட்டது. இத்தகு இடங்களில் பண்டைக் காலத்தில் திண்ணைப் பள்ளிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. அவ்வூர்ப் பகுதியைச் சேர்ந்த பெரியோர் கற்றறிந்த ஆசான்களாக இருந்து அப்பகுதியில் இருபால் பிள்ளைகளையும் ஐந்து வயதில் சேர்த்து கற்பித்து வந்தனர். இவைகள் திண்ணைப் பள்ளிகள் எனப்பட்டன.

எண்ணும் எழுத்தும் கற்பிக்கப்பட்டன. எழுதவும் படிக்கவும் கணக்கிடவும், குறிக்கவும் அனைத்து மாணவர்களும் அறிந்தார்கள். எடுத்துரைத்தல், எழுதிக்காட்டுதல், மனப்பாடம் செய்தல், ஒப்புவித்தல், விவாதித்தல் என்னும் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்றன. பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகள் நூல்களாகப் பயன்பட்டன. படியெடுக்கும் பணிகளையும் ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் செய்து பல்வேறு நூல்களைக் கற்றனர்.

பயிர்த்தொழிலில் உழவு செய்தல், நாற்றிடுதல், விதைத்தல், நடவு செய்தல், நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப் பாதுகாப்பு உத்திகள், தானிய சேகரிப்பு பற்றிய அனைத்து நுட்பங்களும், மாணவர்க்குச் சொல்லித்தரப்பட்டன. நெசவு தொழிலில் பஞ்செடுத்தல், நூல் நூற்றல், தார்திரித்தல், நெசவு நெய்தல் முதலிய தொழில் நுட்பங்களும் சொல்லித்தரப்பட்டன. கைத்தொழில், தொழில் திறமை, நுணுக்கங்கள் கல்வியின் வாயிலாக சொல்லித்தரப்பட்டன. ஏட்டுக் கல்வியாக மட்டுமின்றி சமுதாயத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புனைபொருள் உற்பத்தி செய்யும் பணிகளாகவும் அவைகள் வளர உதவின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் இல்லாத நேரங்களில் இத்திண்ணைப் பள்ளிகளைச் சட்டாம்பிள்ளை எனும் தலை மாணாக்கர்கள் காலவிரையம் இன்றி நடத்திப் பேருதவி செய்தனர். மூத்த மாணவர்கள் கற்கப் புகும் மாணவர்களுக்கு உடனிருந்து வழிகாட்டும் ஆதரவான அணுகுமுறை காணப்பட்டமை போற்றிப் பின்பற்றத்தக்க முறையாகும்.

பண்டைக்காலக் கல்வி உலகின் பிற நாடுகளில் காணப்பட்டதைக் காட்டிலும் மிகுந்த வேறுபாடுகளுடனும் சிறப்புடனும் தமிழ்நாட்டில் காணப்பட்டது. பாடப்பொருள், மாணவர் சேர்க்கை , பயிற்று முறை, கல்வி நோக்கம் முதலிய பல கூறுகளால் இது பிற கல்வி முறைகளிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டது. பிற கல்வி முறைகளில் வாய்மொழி, மனப்பாடக் கல்வி வலியுறுத்தப்பட்டது. இங்கு தொன்மையான எழுத்து முறையும், மொழிக்கூறுபாட்டு வசதி வாய்ப்புகளும் மிகுந்திருந்தன. தொன்மையானதோர் மொழியின் வரிவடிவமும் ஒலி வடிவமும் மேம்பட்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எழுதுவதற்குப் பதம் செய்யப்பட்ட பனை ஓலைகள் சுவடிகளாகக் கோர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டமை உலகில் வேறெப்பகுதிகளிலும் கையாளப்படாத எளிய உத்தி ஆகும்.

பண்டைய இந்தியக் கல்வி மையங்கள்

முனிவர்களின் வாழிடங்களில் தோன்றிய கல்வி, குகைகளிலும், ஆசிரமங்களிலும், காடுகளிலும், சங்கங்களிலும், விகாரங்களிலும், கோயில்களிலும், வீடுகளிலும், தழைத்தோங்கி வளர்ந்து பல பரிமாணங்களை அடைந்தமையைக் கண்டோம். இந்நாட்டின் பண்டைக்காலக் கல்வி ஓர் ஆன்மீக முயற்சியாகவே ஆரம்பித்தது. தனிமனித முயற்சியாக உதயமான இந்தியக் கல்வி இன்றைக்கு அரசின் தலையாயக் கடமையாக, அரசியலமைப்புச் சட்டத்தின் உந்துதல் பெற்று அனைவர்க்கும் தரமான கட்டாயக் கல்வியாக வளர, காலங்கள் தோறும் பலவித மாற்றங்களைப் பெற்று வந்துள்ளதை அறிவது மாணவ ஆசிரியரின் தொலை நோக்குக்கும் ஈடுபாட்டுக்கும் அவசியம் ஆகும். இந்தியாவின் தொன்மைக்காலக் கல்வி உலகின் பல்வேறு பகுதியினின்றும் மாணவர்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் அளவிற்கு வளர்ந்ததை, சில கல்வி மாநகர்களின் பல்கலைக்கழக அளவிலான வளர்ச்சியை வைத்து இங்கு காண்போம்.

தக்ஷசீலம்

வடமேற்கு இந்தியாவில் காந்தாரத்தின் தலைநகர் தக்ஷசீலம். இது ஒரு தொன்மையான கல்வி நகரம் ஆகும். மஹாபாரதத்தில் இந்நகர் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர்களின் தலைவனான தக்ஷகா என்பவரின் பெயரிலிருந்து இந்நகர் தன் பெயரைப் பெற்றுள்ளது. இந்நகரில் மிகப் புராதனமான பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. இந்தியாவின் பல்வேறு இராஜ்யங்களின் இளவரசர்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், நூற்றுக்கணக்கில் இங்கு வந்து கூடித் தங்கியிருந்து கல்வி பெற்றனர். தொன்மைக்கால மருத்துவர் ஜீவகர் மற்றும் பரத்வாஜா, அங்குலமாலா, தர்மபாலா ஆகியோர் இங்கு கல்வி கற்றுள்ளனர்.

வேதங்கள், சடங்குகள், பத்து அறிவியல்கள், வில், வாள் போர்முறை, மாயாஜாலம், சாத்திரங்கள், கலைகள் முதலியன கற்றுத் தேர்ந்த பேராசிரியர்களால் இங்கு பயிற்றுவிக்கப்பட்டன. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வாணிபம் செய்த வாணிப நகரமாகவும் இது திகழ்கிறது. சந்திரகுப்த மெளரியரை சாணக்கியர் தக்ஷ சீலத்திற்கு அழைத்துச் சென்று கல்வி கற்கச் சேர்ப்பித்தார். பாடலிபுத்திரம், ராஜகிருகம், காசி, மிதிலை, அவந்தி, கோசலம், தென்னிந்தியா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தும் கல்வி கற்றனர். இது அந்நாளில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது. மெளரிய அரசர்களுக்குப் பின் பாக்டிரிய அரசனால் ஆளப்பட்டது. தக்ஷசீலக் கலைப்பாணி, காந்தாரக் கலைப்பாணி, யுனானி காலச்சாரமும் இங்கு பரவியிருந்தது. இந்தியாவின் வடமேற்கு எல்லை வழியில் அமைந்திருந்ததால் பல மேலை நாட்டினரோடு தொடர்பில் இருந்தது. புத்தரின் தொன்மைக் காலச் சிலைகள் பல இங்கு காணப்படுகின்றன.

தக்ஷசீலத்தில் கல்வி குருகுலப் பாணியில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குருவும் தம் தம் சிறப்புப் பாடத்தைக் கற்பித்தனர். அப்பாடத்தை விரும்பும் மாணவர்கள் அவரிடம் சேர்ந்து படித்தனர். ஒவ்வொரு ஆசிரியரிடமும் 20 முதல் 300 மாணவர்கள் வரை சேர்ந்து விடுதிகளில் இருந்து கல்வி கற்றனர்.

இலக்கியங்கள், தொழில் கல்வி, மருத்துவக் கல்வி, ஓவியம், வானவியல், இலக்கணம், அரசியல், ஆயுர்வேதம், அறுவை சிகிச்சை, போர்முறை, கலை, அறிவியல் ஆகியவை சிறப்புப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. பிரம்மி, பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி ஆகியவை போதனா மொழிகளாக இருந்தன.

கல்விக்குக் கட்டணம் ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்த இயலாதோர் கடன் கூறியும், உடல் உழைப்பு செய்தும் கற்றனர். குருவின் இல்லத்திலேயே தங்கிப் படிப்போர் அதிகக் கட்டணம் செலுத்தினர். வெளியில் தங்கியும் கல்வி கற்றனர். சில மாணவர்கள் வெவ்வேறு சிறப்புப் பாடங்களை வெவ்வேறு சிறப்புக் குருவிடம் கட்டணம் செலுத்திக் கற்றனர்.

இரவு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெற்றன. சுழற்சி (Shift) முறையும் இங்கு நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. அரசர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் விளங்க அக்காலத்தில் கல்வி இன்றியமையாத தகுதியென முக்கியத்துவம் பெற்றது.

காசி

கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த தொன்மை நகரமான காசி, மிகப்பெரிய பிராமணக் கல்வி மையமாகத் திகழ்ந்தது. கஸ்யர்கள் என்ற மரபினர் இந்நகரில் வாழ்ந்திருந்ததால் இந்நகர் காசி எனப்பட்டது. வருணா, அசி ஆகிய இரு நதிகளுக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால் இது வாரணாசி என்றும் அழைக்கப்பட்டது. சுங்கர்கள், கன்வர்கள், குஷானர்கள், குப்தர்கள் முதலிய பல வமிசத்தினரின் ஆட்சியின் கீழும் இந்நகரம் சிறப்புற்று விளங்கியது. மக்கள் தொகை மிக்க, வாணிபம் சிறந்த வளமான, நகரமாக இருந்ததோடு சிறந்ததோர் கல்விமையமாகவும் நெடுங்காலம் விளங்கிய பெருமை காசிக்கு உண்டு. இங்கு பல குருகுலங்கள் நடைபெற்றன. பலமொழி வல்லுநர்களும் சமயத் தலைவர்களும் புகழ்பெற்ற குருக்களும் இங்கு வாழ்ந்திருந்தனர்.

புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் வேதங்களையும் உபவேதங்களையும், பிராமணங்களையும், உபநிடதங்களையும் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த மாணவர்கள் கற்றுத் தேர்ந்தனர். இங்கு கற்றுத் தேர்ந்த கல்விமான்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றினர். இங்கு வில், வாள் பயிற்சியும், ஓவியம், நடனம், ஆயுர்வேதம், இசை, கைத்தொழில்கள் போன்ற பதினெட்டு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. மாணவர்கள் அடக்கம், பணிவு, ஒழுக்கத்துடன் விளங்கினர். கல்வி நாடும் மாணவர்கள் அனைவரும் கூடும் பல்கலை மையமாக இந்நகரம் சிறப்புற்றிருந்தது. மாணவர்கள் ஏழு ஆண்டுகள் வரை தங்கிப் பயின்றனர். தென்னிந்தியாவிலிருந்து சென்ற ஆதிசங்கரரும் இந்நகரில் தங்கிக் கல்விப் பணியாற்றித் தனது அத்வைதக் கருத்துக்களை வெளியிட்டார்.

மிதிலை

இந்தியாவின் புகழ்பெற் கல்வி நகரங்களுள் மிதிலையும் ஒன்று. இங்கு பிராமணக் கல்வி தழைத்தது. பல அறிஞர்கள் கூடிச் சமயக் கருத்துக்களை விவாதித்துக் கற்பிக்கும் முறை பின்பற்றப்பட்டது. ஆன்மிகச் சிந்தனையாளர்களின் படைப்புகள் பல இங்கு வெளியாயின.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் இங்கு தங்கிப் பயின்றனர். இளவரசர்கள் தங்கிப் பல்கலையும் பயிலும் பட்டணமாக இது அமைந்தது. வித்யாபதி, ஜெயதேவர், போன்றோர் இங்கு தங்கி தங்கள் படைப்புகளை எழுதினர். பண்டிதர் கணேச உபாத்யாயரின் ஜத்வசிந்தாமணி என்ற நூல் இங்கிருந்து எழுதப்பட்டதாகும். இங்குக் கல்வி பயின்று முடித்து வெளிவருபவர்களுக்கு 'ஞாதகாஸ்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

நாலந்தா பல்கலைக்கழகம்

தற்கால பீகார் மாநிலத்தில் அந்நாளில் முதலாம் குமாரகுப்தர் என்ற மன்னரால் நாலந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற மகாயான பௌத்தக் கல்வி மையமாகும்.

இங்கு சீனப் பயணிகளான பாகியானும், பின்னர் ஹர்ஷர் காலத்தில் யுவான்ஸ்வாங்கும் இப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார்கள். மாணவர் ஆசிரியரின் விகிதம் 1:8 என்பதாக அமைந்திருந்தது. 1500 ஆசிரியர்களிடம் 10,000 மாணவர்களும் தங்கி கல்விப் பணி மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்திலிருந்து சென்ற கல்வியாளர் தர்மபாலர் நாலந்தாவில் துணைவேந்தராகச் செயலாற்றினர். நாலந்தாவிற்கு வந்த யுவான்ஸ்சுவாங் சீல பத்திரர் என்ற துணை வேந்தரிடம் யோகக்கலை பயின்றார்.

மாணவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் சோதித்த பின்னரே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இப்பணியைச் செய்ய தேர்வுக்குழு ஒன்று செயல்பட்டது. இங்கு சேரும் மாணவர்கள் 12 ஆண்டுகள் தங்கித் தொடர்கல்வி கற்றனர்.

அசோகனின் தர்ம சக்கரத்தைப் போன்றதோர் கட்டட அமைப்பை இப்பல்கலைக்கழகம் பெற்றிருந்தது. இந்நிறுவனத்தின் பராமரிப்புக்காக பல கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டன. மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை .

இதன் கட்டிடம் தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இது காண்போரை வியக்க வைப்பதாய் 300-க்கும் மேலான மாணவர் அறைகளையும், மூன்று பெரிய அரங்குகளையும் தன்னகத்தே பெற்றுள்ளது. மூன்று பெரிய அரங்குகள் அரிய நூல்கள் சேகரிப்புடன் அமைந்திலங்கின.

புத்தமதக் கல்விக்கான சிறப்பு நிறுவனமாயினும் வேதங்கள், பிராமணங்கள், வைசேசிகா, யோகா, பூர்வமீமாம்ஸா, உத்திரமீமாம்ஸா, சமண மதத் தத்துவங்கள் ஆகியனவும் பயிற்றுவிக்கப்பட்டன. தர்க்கம், வானசாத்திரம், மருத்துவம், இலக்கணம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியம் போன்றவைகள் கற்பிக்கப்பட்டன. மாணவர் தேர்ச்சிக்கு தேர்வுகள் இடம் பெற்றன. சீனா, திபெத், மங்கோலியா, கொரியா, இலங்கை, ஜாவா, சுமத்ரா போன்ற பிற நாட்டு மாணவர்களும் இங்கு வந்து தங்கிப் படித்தனர்.

உலகச் சிறப்பு வாய்ந்த இப்பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி படையெடுப்பின் போது அழித்து நாசமாக்கப்பட்டது. கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நூலகங்கள் தீயிடப்பட்டன. மாணவர் சேர்க்கையும் தடைப்பட்டது.

விக்ரமசீலா

மகதநாட்டின் பால வம்சத்து மன்னர் தர்மபாலர் விக்ரமசீலத்தில் விகாரம் அமைத்துப் பல்கலைக்கழகமாக மாற்றினார். 114 பேராசிரியர்கள் இங்கு பணி செய்தனர். இப்பல்கலைக் கழக மாணவர் தீபங்வார் என்ற துறவி திபெத் சென்று புத்தமத விளக்கங்களை அளித்தார். இங்கு 3000 மாணவர்கள் பயின்றனர். மிகச்சிறந்த முறையில் இங்கு உயர் படிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வியாகரணம், மெய்யறிவியல், தர்க்கவியல், தத்துவங்கள், தனித்தனியே சிறப்பு வகுப்புகளில் கற்பிக்கப்பட்டன. இங்கு ஆராய்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஓடாண்டபுரி, ஜகத்வாலா, வல்லபி, காஞ்சிபுரம் போன்ற நகரங்களிலும் இது போன்ற சிறப்புக் கல்வி மையங்கள் செயல்பட்டன. பெரிய நூலகங்கள், விடுதிகள் இணைக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு அறிஞர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து தங்கி கற்றனர். இங்கிருந்து பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிநாடுகள் பயன்பெற அனுப்பி வைக்கப்பட்டன.

சமயச் சகிப்புத்தன்மையுடன், அறிவுநுட்பம் போற்றப்பட்டு இந்நிறுவனங்களில் மேம்பட்டது. இந்நிறுவனங்களுடன் தெய்வீகத் தொழுகை இடங்களும், தியான மண்டபங்களும் இணைந்து இருந்தன. தொண்டு நோக்கத்திலேயே இந்நிறுவனங்கள் செயல்பட்டன. தற்காலத்திலுள்ளது போல் இலாப நோக்கம் அப்போது சிறிதும் இல்லாமை போற்றத்தக்கதொன்றாகும்.

பொதுவாகப் பண்டைய காலம் தொட்டு மக்களாட்சி மலரும் வரை இந்தியாவில் கல்வி தனிநபர் ஆர்வம் சார்ந்ததாகவும், குடிமக்கள் முயற்சியையும் விருப்பத்தையும் அடியொற்றி நிற்பதாகவுமே அமைந்திருந்தது எனலாம். கல்வி முயற்சிகள் சமுதாயப் புரவலத்தையும், ஆர்வலர்களின் கொடையையும், செல்வந்தர்களின் தொண்டு முயற்சிகளையும், வணிகர்களின் நிதி உதவியையும் சார்ந்தே அமைந்தன. முடியாட்சி நடத்திய மாநிலங்களில் கூட தம் நல்லாட்சி கருதி, ஊழியர்களின் திறன் கருதியே கல்வியில் ஈடுபாடு காட்டினர்.

அரச வம்சங்களும் கல்வியும்

பிராமணக் கல்விக் காலத்தில், கல்வி ஒரு சாராரின் உரிமையாய் நின்றது. பௌத்த கல்வி ஆன்மீக நாட்டமுள்ள அனைவரது மேம்பாட்டுக்கும், வாழ்க்கையின் உச்ச பயனடைவிற்கும் ஒரு பாலமாக அமைந்தது. அருள் நெஞ்சங்கொண்ட துறவிகளின் தொண்டுக் கொடையைத் தழுவி நின்றது. சமணக் கல்விக் காலத்தில் கல்வி ஆன்மாவை அதன் தளைகளிலிருந்து விடுவிக்கும் சாஸ்திர தானமாக இருந்தது.

சங்க காலத் தமிழகத்தில் கல்வி ஒரு தனிமனித மேம்பாட்டு முயற்சியாகவும் சுயச் சார்பையும் தன்மதிப்பையும் வழங்கும் செல்வமாகவும், 'வாழ்க்கை உலகோடு பொருத்தி வாழ்வதற்கே' என்ற முனைப்பை உண்டாக்குவதாகவும் அமைந்தது. அடுத்தடுத்து வந்த காலக்கட்டங்களில் கல்வி சமுதாய நலவாழ்விற்கு ஒரு தகுதியாகவும், மனித நல மேம்பாட்டுயர்வுக்கொரு ஓடுதளமாகவும் விளங்கியது.

சிற்றரசுகள் பரப்பில் விரிந்த பேரரசுகளாகி மன்னர்களின் முனைப்புக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் இடமளித்தன. நல்லாட்சி நடத்தும் செங்கோலர்களான அரசர்கள் அறிவார்ந்த நல்ல குடிமக்களின் அமைதியான நல்லாட்சிக்கும், பற்றுமிக்க குடித்தனத்திற்கும் தகுதியானவர்கள் என்ற நோக்கில் கல்விப் புரவலர்களாகத் தங்களை மன்னர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். மக்களின் கல்வி ஆராய்ச்சி நாட்டின் வளத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வழிகோலுகிறது என்பதை முடி மன்னர்களும் மற்றையோரும் உணரத் தலைப்பட்டனர்.

மன்னர்களின் குடிபுரக்கும் காவலுணர்வினால் கல்வி மான்யங்கள் பல வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களாகவும், பள்ளிக் கொடைகளாகவும், தொண்டு நல்லுள்ள தர்மங்களாகவும் பலகாலும் வழங்கிக் கல்வியை வளர்த்தனர். கல்வியை நேரடியாக கட்டாயப்படுத்தாமல் கலையார்வம், சங்கீதம், நாட்டியம், நாடகம் பல்கலைப் படைப்பாகவும், அறிவியல், சாஸ்திரம், சிற்பம், ஓவியம், இலக்கியம் என்றவாறு செயலாக்கக் கல்வியை வமிசத்திற்கு வமிசம், மன்னருக்கு மன்னர் கல்வி விருப்பார்வங்கள் பரவலாக வேறுபட்டன. எனினும் கல்விப் பெருக்கம் ஆட்சி செய்த மன்னர்களின் அருள் உள்ளத்தின் வெளிப்பாடாக அமைந்தது.

பல்லவர்கள் காலம்

பல்லவர்கள், கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகரைக் கல்விக் கேந்திரமாக்கினர். சமஸ்கிருத கல்வி வெகுவாக விரிவடைந்து வளர்ந்தது. மறையவர்களின் கல்வியறிவும் இலக்கிய படைப்பும் வெகுவாக வளர்க்கப்பட்டன. 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் பக்தி இயக்கத்தை தொடங்கி பக்திக் கல்வியை வளர்த்தனர்.

சோழர்கள் காலம்

சோழர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் தொகுக்கப்பட்டு திவ்யப் பிரபந்தமும், பெரிய புராணமும், தொகையடியார் தம் தொண்டுக் கொடைகளும் மேலோங்கின. வேத பாட சாலைகளும் கல்லாரையும் கட்டியிழுத்து நலம் பல கற்பிக்கும் புராணச் சொற்பொழிவு, அருளுரை வழங்கும் களமாகத் திகழ்ந்தன. பரவலான நல்லறக் கோட்பாடுகளும் நன்னெறிகளும் வளர்ச்சியடைந்தன.

விஜயநகரப் பேரரசுக்காலம்

விஜயநகர நாயக்கர்கள் காலத்தில் அரசர்கள் கல்விக்கு ஊக்கம் அளித்தனர். மதுரை புகழ்மிக்கதோர் கல்வி மையமாய்த் திகழ்ந்தது. 10,000 பிராமணச் சிறுவர்கள் கல்வி கற்றனர். நாயக்க மன்னர்களும், மடங்களும் பிராமணர்களின் சமயக் கல்வியை மேம்படுத்தினர். அதில் மருத்துவம், தத்துவம், சிற்பம், வானநூல், இசை, கலைகள் முதலியன போதிக்கப்பட்டன. பாரசீகம், அராபி, தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. சரஸ்வதி மஹால் நூலகம் இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் நிறுவப்பட்டது. இதில் 22000 கையெழுத்து பிரதிகள் உள்ளன. 25,000 வடமொழி இலக்கியங்கள் பதினாறு இந்திய மொழிகளில் பெயர்த்தெழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 1805-ல் சரபோஜி தேவநாகரி எழுத்து அச்சகம் ஒன்றை நிறுவினார்.

முகம்மதியர் கல்வி

கி.பி. 712ல் நிகழ்த்தப்பட்ட அரேபியப் படையெடுப்பினால் அரேபியரின் ஊடுருவலும் பின்னர் ஏற்பட்ட கஜினியின் படையெடுப்புகளினாலும் அதனைத் தொடர்ந்து அடிமைவம்சம், கில்ஜிவம்சம், துக்ளக் வம்சம் போன்ற சுல்தானியரின் காலத்தில் ஏற்பட்ட விளைவுகளாலும் இந்நாட்டின் கல்வியில் பல மாறுதல்கள் தோன்றின. சுல்தானியரின் ஊடுருவல் வழியாக ஏற்பட்ட அரேபிய, பாரசீகக் கல்வி முறை இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறைக்குப் பெரும் தடையாக இருந்தது. அரேபியர் இந்து, பௌத்த, சமணக்கல்வி நிலையங்களைத் தாக்கி அழித்தனர். உலகப் புகழ்பெற்ற நாலந்தா, வல்லபி, விக்ரமசீலா போன்ற கல்வி மையங்கள் சிதைக்கப்பட்டன. சுல்தான்கள் தம் மதத்தின் மேலாதிக்கத்தால் குர்ரான் கல்வியை போதித்தனர்.

மொகலாயர் காலக் கல்வி

முகம்மதியரின் காலத்தைவிட மொகலாயர்களின் காலத்தில் கல்வி அதிக வளர்ச்சி கண்டது எனலாம். அக்பர் காலம் முதல் கல்வி வளர்ச்சி தேசிய அளவில் பரவியது. மக்களின் மனம், தேவை முதலியவற்றை அறிந்து செயல்பட பாடத்திட்டத்தை வளர்த்தார். பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பதேபூர் சிக்ரியில் வந்து படித்தனர். அனைத்து மத அறிஞர்களையும் அறிவியல் மேதைகளையும் சமய சகிப்புத் தன்மையுடன் அரவணைத்து கல்வி வளர்ச்சியைக் கண்காணித்து ஊக்கம் அளித்தார்.

வடமொழி நூல்களும், சமண, பௌத்த, கிறித்துவ நூல்களும் ஊக்குவிக்கப்பட்டன. இசை, எழுத்து, ஓவியம், தத்துவம், அறிவியல், மொழி வளர்ச்சி என அனைத்தின் வளர்ச்சிக்கும் அக்பர் ஊக்கமளித்தார்.

ஜஹாங்கீர் காலத்தில் பல கல்லூரிகள் உருவாயின. வாரிசு இல்லாமல் இறப்பவர்களின் செல்வங்கள் கல்வி நிறுவனங்களுக்குச் சேரும்படி சட்டம் இயற்றப்பட்டது. ஷாஜகானின் இளவரசன் தாராஷ கோ மிகச் சிறந்த கல்விமான். வடமொழிப் புலமை பெற்றிருந்தார். உபநிடதங்கள், வேதங்கள், பகவத் கீதை போன்றவை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

நான்குவகைக் கல்விச்சாலைகள்

இஸ்லாமியக் கல்வி முறைப்படி மக்தப்கள், கான்வாக்கள், மதரசாக்கள், இந்துப் பள்ளிகள் என்ற நான்கு வகைப் பள்ளிகளும் அக்பர் காலம் வரை தொடர்ந்தன. பாரசீக மொழி பயிற்று மொழியாக இருந்தது. பாரசீகம் கற்பிக்க வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்துக் கோயில்களிலும், மடங்களிலும், இந்து மக்களின் மத சம்பந்தமான பாடங்கள் போதிக்கப்பட்டன.

அக்பர் காலத்தில் இம்முறை மாற்றியமைக்கப்பட்டது. இஸ்லாமியக் கல்வி முறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் மக்களிடையே குறுகிய மனப்பான்மை ஏற்பட்டு அரசாட்சியை விரும்பி ஏற்கமாட்டார்கள் என்று அக்பர் கருதினார். எனவே இந்திய வரலாறு, தத்துவம், அறநெறி, சமூகவியல், வானவியல், மருத்துவம், சித்தாந்தம், பௌதிகம் போன்றவற்றைக் கற்கவேண்டுமென நடைமுறைப்படுத்தினார். உயர்கல்வி பயிற்றும் மதரசாக்களில் இந்துக்களும் சேர்ந்து படிக்க அனுமதித்தனர். இது அக்பர் ஏற்படுத்திய மிகப்பெரும் கல்விச் சீர்திருத்தமாகும்.

ஆங்கிலேயேர் இந்தியாவில் வாணிப முயற்சியுடன் குடியேறிய போது, இந்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனியார் வசமே இருந்தன. அப்போது பாடசாலைகள், மக்தபுகள், மதரசாக்கள் என மூன்று வகையான கல்விச் சாலைகள் செயல்பட்டன. இவை முறை சார்ந்த, முறைசாராத கல்விச் சாலைகளாக இருந்தன. கிழக்கிந்திய வாணிபக் கழகம் இவற்றின்பால் எந்தவித ஈடுபாடும் இன்றி இருந்தது.

அவரவர் குலத் தொழிலுக்குத் தேவையான அடிப்படைகளைக் கற்கும் இடங்களாகவே கல்வி நிறுவனங்கள் அமைந்தன. எனினும் எழுதவும், படிக்கவும், கணக்கள் செய்யவும் அனைவரும் கற்றனர். மசூதிகளுடன் இணைந்தமைந்திருந்த மக்தபுகளும், மதரசாவும், பாரசீகம், அரபு மொழி வழியாகக் கல்வி அளித்தன.

வணிக நிறுவனங்களின் கல்வி முயற்சிகள்

1498-ல் போர்த்துக்கீசியர்கள் இந்தியா வந்தடைந்தனர். பிரதிநிதியான அல்புகர்க் என்பார் பள்ளிகளைத் திறக்கச் செய்தார். அவர்கள் கல்வி மூலமாகக் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கினர். சமயப் பரப்புக் குழுவினர் பல பள்ளிகளை இந்நோக்கில் திறந்தனர். பைபிள் கற்றிட அங்கு வழிவகை செய்யப்பட்டது. சுவாட்ஸ் என்னும் சமயப் பரப்பாளர் கல்வி மையங்களை அதிக அளவில் தொடங்கினார்.

காலனி ஆதிக்க காலக் கல்வி நோக்கங்கள்

1665ல் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர்கள் இந்தியாவை ஆளும் உரிமையைக் கைக் கொண்டனர். அவர்கள் கல்வி நிலையில் மாற்றமேதுமின்றி உள்ளதையே தொடரச் செய்தனர். அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கீழிருந்து பணியாற்றத் தேவையான பணியாளர்களைத் தயாரிக்கும் நோக்கிலேயே கல்வி முயற்சிகளை மேற்கொண்டனர். தங்களாட்சியை வலுப்படுத்திக் கொள்ள பல உத்திகளையும் குயுக்திகளையும் கையாண்டனர். அவர்தம் கல்வி முயற்சியும் இதற்கு விலக்கல்ல. இப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. சுதேசி உணர்வும், விடுதலை வேட்கையும் அந்நிய ஆட்சி எதிர்ப்பும் இந்தியரிடம் தோன்றாத தன்மையையும் மாறாக ஆங்கிலேயரை விரும்பும் பணிவு கொள்ளும் சொன்னதைச் செய்யும் மனப்பான்மையையும் வளர்க்கும் கல்வியையே தர முன்வந்தனர். இந்நோக்கிலேயே 1781ல் கல்கத்தாவில் மதரசா பள்ளியை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தி இதன் மூலம் இஸ்லாமியரை மனநிறைவு கொள்ளவும் செய்தார். அதன் பராமரிப்புக்காக ரூ. 3000 மானியத்தையும் வழங்கினார். 1784ல் தஞ்சையில் சல்லிவன் என்பார் உயர்குடி மாணவர்களுக்கு ஓர் ஆங்கிலப் பள்ளியை நிறுவினார். 1785 ல் சர்வில்லியம் ஜோன்ஸ் "வங்காள ஆசியக் கழகம்” என்ற அமைப்பை நிறுவினார். ஜான் ஓவன் பள்ளிகள் நிறுவி ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

1792ல் இந்தியருக்கான கல்வி முறை பற்றி இங்கிலாந்து பாராளுமன்றம் விவாதித்தது. இந்தியாவுக்கு பள்ளி ஆசிரியர்களையும் சமயப் பரப்பாளர்களையும் அனுப்பி இந்தியர்களுக்குக் கல்வி புகட்டலாம் என்ற கருத்தைத் தெரிவித்தது. இந்தியர்களுக்குப் போதுமான அறக்கருத்து நம்பிக்கை ஏற்கனவே உள்ளதெனக் கூறி உறுப்பினர்கள் இதனை எதிர்த்தனர்.

1800ல் கல்கத்தாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன ஊழியர்க்கென ஒரு கல்லூரியை வெல்லெஸ்ஸி நிறுவினார். இது அரசு ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தது. சார்லஸ் கிராண்ட் என்பவர் இந்தியருக்கு ஆங்கில மொழி கற்பிக்க வேண்டுமென ஆங்கில அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். 1813ல் பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 1823 வரை அதன்படி ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு இலட்சம் செலவிடப்படவில்லை. மேல்நாட்டுக் கல்வி முறையே இந்தியாவுக்கு ஏற்றதென மெக்காலே பிரபு வலியுறுத்தினார். 1835ல் வில்லியம் பெண்டிங்கின் ஆணைப்படி ஆங்கிலம் ஆட்சிமொழி ஆயிற்று.

சர் சார்லஸ் உட் அறிக்கை - 1854

1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட் என்பவரின் கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியக் கல்வி வளர்ச்சி ஆங்கில அரசின் பொறுப்பாக்கப்பட்டது. அனைவரும் தடையின்றிக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டது. இவ்வறிக்கைக்குப் பின்னரே இந்தியக் கல்வி ஒரு திட்டமிட்ட கல்வியாக உருப்பெறத் தொடங்கியது.

கிறிஸ்தவர்களின் கல்வித்தொண்டு போர்த்துக்கீசியர்

வணிக நிறுவனங்களுடன் வந்த சமயப் பற்றும் அன்புள்ளமும் கொண்ட கிறித்தவப் பாதிரியார்கள் இங்கிருந்த மக்களுக்கு சமயக் கல்வியுடன் எழுத்தறிவுக் கல்வியையும் ஒன்றுக்கொன்று சார்வாய்த் தர முற்பட்டனர். 1542ல் வந்த போர்த்துக்கீசியரான புனித பிரான்சிஸ் சேவியர் கிராமப் பகுதிகளில் விவிலியத்தைப் போதித்தார். கொச்சினில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். மும்பை, கோவா, டாமன், டையூ, சிட்டகாங், ஹூக்ளி போன்ற இடங்களில் தொடக்கப் பள்ளிகளை நிறுவினார். பைபிளைப் பின்பற்றுவோரின் குழந்தைகளுக்குக் கல்வியை இலவசமாக வழங்கினார்.

டச்சுக்காரர்கள்

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர்கள் சின்சுரா, ஹூக்ளி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினர். அவற்றில் தம் நாட்டிலிருந்து வந்த பணியாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்தியர் சிலருக்கும் இதில் கல்வி பயில வாய்ப்புத் தரப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்கள்

சூரத், மசூலிப்பட்டினம், சந்திரநாகூர், பாலசூர், காசிம்பஜார், புதுச்சேரி, மாஹி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வாணிப மையங்களை நிறுவிய இவர்கள் அப்பகுதிகளில் எல்லாம் பள்ளிகளையும் நிறுவி முன்வரும் இந்தியர்கள், அனைவர்க்கும் கல்வி கற்பித்தனர். அப்பள்ளிகளில் வட்டார மொழிகளும், கிறித்துவ போதனைகளும் கற்றுத் தரப்பட்டன.

டென்மார்க் நாட்டுக்காரர்கள்

இவர்கள் திருவாங்கூர், செராம்பூர் ஆகிய ஊர்களில் சமயப்பள்ளி, கல்விப்பணி ஆகியவற்றை மேற்கொண்டனர். 1706ல் லீகன்பால்க், புளூட்சான் எனும் ஜெர்மானியர்கள் டேனிஷ் நாட்டின் உதவியுடன் இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளிகள் துவக்கினர். 1727ல் ஸ்சூல்ஸ் என்ற ஜெர்மானியரின் முயற்சியால் சென்னை, கடலூர், தஞ்சை, திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் பள்ளிகளைத் திறக்கப்பட்டன. இவைகள் பெரும்பாலும் கிறிஸ்துவ சமயப்பரப்பு மையங்களாகத் திகழ்ந்தன. எண் எழுத்தறிவுக் கல்வி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

லண்டன் சமயப் பரப்பாளர் சங்கம்

இச்சங்கத்தினர் சின்சுராவிற்கு அருகில் 30 தொடக்கப் பள்ளிகளைத் துவக்கினர். 3000 மாணவர்கள் அவற்றில் பயின்றனர். 1824ல் மகளிர்க்கென 37 பள்ளிகளைத் தொடங்கினர்.

அமெரிக்க மறைபரப்பாளர் சங்கம்

பம்பாயில் டாக்டர் வில்சன் என்பவர் 1829-ல் பெண்களுக்கான 6 பள்ளிகளையும் ஆண்களுக்கு ஒரு பள்ளியையும் நிறுவினார். பஸ்ஸின், நாசிக் போன்ற இடங்களில் ஆண்களுக்காவும், பெண்களுக்காகவும் பள்ளிகள் திறக்கப்பட்டன. திருநெல்வேலியில் 107 பள்ளிகள் திருச்சபை மறைபரப்பாளர் சங்கத்தால் திறக்கப்பட்டு பரவலான கல்வி வாய்ப்பளித்தனர்.

அமெரிக்க மறை பரப்பாளர் சங்கத்தினர் சென்னை , நாகப்பட்டிணம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், சித்தூர், விசாகப்பட்டிணம், கடப்பை, பெல்லாரி போன்ற இடங்களிலும் பள்ளிகளைத் திறந்து கற்பித்தனர்.

இப்பள்ளிகள் சமயப் பரப்பு முயற்சியாக நடைபெற்றன. திட்டமிட்ட பாடப்பொருளைக் கற்பித்தனர். பள்ளிகளின் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டது. பாடநூல்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. மனிதநேயம், மருத்துவம், கல்விப் பணிகளில் ஈடுபட்டனர். மேலை நாட்டுக் கல்வி முறையை இந்தியாவுக்குக் கொண்டு வரக் காரணமாயிருந்தனர்.

இந்தியத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் அவரது சட்ட அமைச்சராக இருந்த மெக்காலே 1832ல் இந்தியக் கல்வி பற்றிய தமது கொள்கைகளை வெளியிட்டார். இவர் ஆங்கிலக் கல்வியையே வலியுறுத்தினார். கல்வி மதங்களின் பிடியில் இல்லாமல் சுதந்திரத் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்றார். தமது எண்ண ஓட்டங்கள் பலவற்றைத் தமது அறிக்கையில் கூறியுள்ளார். அவற்றில் பொருந்தாத, மாறான நோக்கங்களும் கோட்பாடுகளும் இருக்கவே செய்தன. அதுவரை இந்தியக் கல்வி முறையைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்களை நிறுத்தி அந்நிதியை ஆங்கில முறைக் கல்வி நிறுவனங்களுக்குச் செலவிட வேண்டுமென்று ஆலோசித்தார். மெக்காலே இந்திய நவீனக் கல்விக்கு அடிக்கல் நாட்டியவர் எனப்படுகிறார்.

கீழ்நோக்கிப் பரவும் கல்வி முறை (The Downward Filtration Theory)

கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் தங்கள் சமயத்தைப் பரப்ப சிறந்த வழியாக ஆங்கில மொழி வழிக் கல்வியைக் கொண்டனர். இந்திய மேட்டுக்குடி மக்கள் சமுதாயத்தில் உயர் பொருளாதாரம், பதவித் தகுதியில் உள்ளவர்களின் கொள்கையை அப்படியே பின்பற்றும் இயல்பு உள்ளவர்களாய் இருந்தனர். இதனைக் காட்டி ஆங்கிலேயர்கள் இந்தியர் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதினர்.

"உயர் வகுப்பினருக்கு மட்டும் கல்வி அளித்தாலே போதும். பின்னர் அவர்கள் மூலமாகக் கல்வி தானே பரவும்” இதுவே கீழ்நோக்கிப் பரவும் கல்வி எனப்பட்டது. இம்முறை 1870 வரை ஆங்கில அரசின் கொள்கையாக இருந்தது. ஆங்கிலேய அரசு பின்பற்றிய இந்த ஆட்சி நீட்டிப்பு உத்தி இந்தியர் ஒற்றுமைக்கு குலைப்பு, பிரித்தாளும் சூழ்ச்சி, இந்தியர்களுக்கு தேசாபிமானம் வந்துவிடக் கூடாது இந்தியர்களை பிரித்தாள வேண்டும் என்ற வஞ்சகமான கொள்கையால் ஏற்பட்டதாகும். இதனால் இந்தியாவில் சமுதாயச் சிக்கல்களும், பல பின்னடைவுகளும் ஏற்பட்டன.

சர் சார்லஸ் உட் என்பாரின் கல்வி அறிக்கை (1854)

இவ்வறிக்கை இந்தியர்க்குக் கல்வியை அளித்து அவர்களை விரைவில் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்குடையதாய் அமைந்தது. மெக்காலேயின் குறுகிய நோக்கால் விளைந்த தவறுகளைச் சரி செய்யும் நோக்கில் இது அமைந்தது. இந்தியருக்குக் கல்வி வழங்கி, அவர் தம் நன்மைகளைப் பாதுகாத்துத் தர வேண்டிய அரசின் கடமையை இது வலியுறுத்தியது.

ஐரோப்பிய நாடுகளில் படிப்பதைப் போன்ற அறிவியலும், தத்துவக் கோட்பாடுகளும், கலைப்பாடங்களும் இந்தியருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்திய மொழிகள் தொடர்ந்து கற்றுத் தரப்படவும் ஆதரவு தந்தது. வட்டார மொழிகளில் தொடக்கப்பள்ளி நிறுவப்பட ஆதரவு அளிக்கப்பட்டது. 1857ல் சென்னை , மும்பை, கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. முதலில் இப்பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்தி சான்றிதழ்களை வழங்கும் பணியைச் செய்தன. இப்பல்கலைக்கழகங்களோடு இணைந்த நிறுவனங்களின் பயின்ற மாணவர்களுக்கு தோவு நடத்தி சான்றிதழ்களையும், பட்டங்களையும் வழங்கின. 1600ல் வணிக நிறுவனங்களாக இந்தியாவிற்கு வந்து இங்கு சிறுகச் சிறுகத் தன்னை வலுப்படுத்திக் கொண்டு இங்கிருந்த பல நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்த நாட்டின் செல்வத்தைச் சுரண்டி பல அடக்குமுறை உத்திகளைக் கையாண்டு கல்வி பற்றிய பொருத்தமான பல நன்மைகளைச் செய்ய வேண்டியிருந்த நிலையிலும் ஆங்கிலேய அரசினர் பல தந்திரங்களைக் கையாண்டு கல்வி வழியிலான சுதந்திர உடனடித் தீர்வுகளைத் தள்ளிப் போட்டனர்.

இந்நிலையில் சுமார் 254 ஆண்டுகள் சென்ற பின் வந்த உட்ஸ் அறிக்கை உண்மையிலேயே நல்லெண்ண அடிப்படையில் அமைந்து ஒரு விரும்பத்தக்க கல்வி மாற்றம் உண்டாகி வளர ஏதுவாக இருந்தது என்பதொரு குறிப்பிடத்தக்க உண்மை.

அடுத்தடுத்துப் பின்வரும் அறிக்கைகளும் பரிந்துரைகளும் இந்தியா சுதந்திரம் பெறும் வரையிலும் இடம் பெற்றன.

* 1882ல் ஹண்டர் தலைமையிலான அறிக்கை

* 1899-1905 கர்சன் காலக் கல்வி முன்னேற்றங்கள்

* 1917 சாட்லர் குழுவின் பரிந்துரைகள்

* 1924 ஹர்டாக் குழு அறிக்கை

* 1937 காந்தியடிகளின் வார்தா கல்விமுறை

* 1944 சார்ஜண்ட் குழுவின் பரிந்துரைகள்

இந்தியாவின் சமரசக் கல்வித் தத்துவம்

ஆசிரியர்களாவதற்குக் கற்றுத்தேற வேண்டிய அறிவுப் புலங்களில் தத்துவங்களும், கல்வித் தத்துவ அணுகுமுறையும் முக்கியமானதொன்றாகும். மருத்துவக்கல்வி பெறுபவர்களுக்கு உடற்கூறியலறிவும், உயிர்ம வேதியலறிவும் எவ்வளவு அடிப்படையானவைகளோ அவ்வளவு முக்கியமானவைகளாக மெய்ப்பொருளியறிவும் அது சார்ந்த அணுகுமுறையும் அடிப்படையாக ஆசிரியர் கல்வியில் அமைகிறது எனலாம். கல்வித் தத்துவ அறிவுத் தெளிவற்ற ஒருவர் கல்விநுட்பமறிந்தவராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் கல்வியாளராக ஆசிரியராக இருத்தல் இயலுவதில்லை. ஆசிரியர்களாக வாழ்நாள் நெடுகிலும் பொருந்திப் பணியாற்றத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவரும் இந்தியாவின் கல்வி அணுகு முறையில் குறிப்பிட்ட கல்வித் தத்துவ அறிஞர்களின் தாக்கத்தை எடுத்தாளுதல் பற்றி இங்கு அறிவோம்.

பரவலாகப் பல நாடுகளின் கல்வித் தத்துவங்களை ஆய்கையில் கற்றறிவதற்கு ஏற்ற வகையில் அவற்றைக் கருத்தியல் கொள்கை, உண்மையியல் கொள்கை, இயற்கையியல் கொள்கை, பயனியல் கொள்கை என நான்காக வகுத்தளித்துள்ளனர். இந்நான்கும் ஒன்றுக்கொன்று முழுக்க முழுக்க வேறுபட்டவை அல்ல. இந்நான்கிலுமே ஒரு நாட்டின் தன்மைக்கு ஏற்றவைகளும் ஒத்தவைகளும் இருத்தல் இயல்பே. எனவே இந்திய நாட்டுக் கல்வி அறிஞர்கள் எந்த ஒரு கொள்கையையும் அப்படியே தனியாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்துக் கோட்பாடுகளிலுமுள்ள ஏற்புடைக் கூறுகளைத் திரட்டி சமரசக் கல்விக் கொள்கையாகப் பறை சாற்றியுள்ளனர். ஆயினும் தொன்மை தொட்டே இந்தியக் கல்வித் தத்துவங்கள் உயர்கருத்தியல், உன்னதக் கோட்பாட்டியல் இறைநிலை எய்துதல் போன்ற விழுமய நோக்கங்களைக் கொண்டதாக இருந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடற்பாலது.

ஜீன் ஜேக்கஸ் ரூசோ (1712-1778)

கல்வியில் இயற்கைக் கொள்கை, கருத்தியல் கொள்கையைப் போலவே மிகவும் தொன்மையானது. கல்வியின் நோக்கங்கள், இலட்சியங்கள், வழிமுறைகள், பயிற்றுமுறைகள் கலைத்திட்டக் கூறுகள், பள்ளி மேலாண்மை முதலிய அனைத்துக் கூறுபாடுகளும் இயற்கையின் இயல்புகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது இயற்கைக் கோட்பாடு (Naturalism) எனப்படுகிறது. இக்கோட்பாட்டாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் பிரான்சு நாட்டறிஞர் ரூசோ ஆவார்.

இவர் ஐரோப்பாவின் அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை விளைவித்த பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமான மக்களுரிமை வேட்பார்வம் மிக்க தத்துவஞானியும் அரசியல் தத்துவ விற்பன்ன ரும் ஆவார். இவர் எழுதிய நூல்களில் சமூக ஒப்பந்தம் (Social Contract) எமிலி (Emile) என்பன மிகவும் முக்கியமானவை. எமிலி என்னும் நூல் இயற்கை இயலோடு ஒன்றிய கல்விக் கோட்பாடுகளை விளக்கியுரைக்கும் புதின வடிவிலான நூல் ஆகும். இந்நூலில் எமிலி என்னும் கற்பனைப் பாத்திரமான ஒரு குழந்தையின் குழவிப் பருவம், பாலப்பருவம், வளர் இளம் பருவம், இளமைப்பருவம், திருமணவாழ்வு ஆகிய ஐந்து படிநிலைகளில் தமது கல்விக் கருத்துக்களை விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

ரூசோவின் கல்விக் கருத்துக்கள்

* இயற்கையால் படைக்கப்படுகின்ற அனைத்தும் நல்லவையே. ஆனால் அவைகள் மனிதர்களின் கைகளில் சீரழிகின்றன. மனிதனின் நடைமுறைகளும், விருப்பங்களும் இயற்கையைச் சீரழிப்பனவாகவே உள்ளன. மாறாக இயற்கையை அணுகி, ஒன்றி இருந்து, அதனை உற்றுநோக்கிப் புரிந்துகொண்டு, அதனிடம் படிப்பினைகளைப் பெற்று, இயற்கையோடு ஒத்திசைந்து வாழ வேண்டும்.

*இயற்கையினின்றும் முரண்படும் மனிதச் செயல்கள், முயற்சிகள், மனிதனுக்கு இன்னலைத் தருவனவாய் உள்ளன. எனவே இன்னல்களிலிருந்து விடுபட இயற்கைக்குத் திரும்புங்கள் என்றார்.

இவரது தத்துவம் சமூக இயற்கையியல், உளவியல் இயற்கையியல், உடலியல் இயற்கையியல் என மூன்று கூறுகளில் அமைந்தது. ஒவ்வொரு புதிய பண்பாடும் பழைய பண்பாட்டின் குழந்தையே என்றார். மனிதன் மனிதனாக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறானவற்றில் குழந்தையைப் பழக்கி அதன் குழந்தமையை நசுக்கிவிடக்கூடாது. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இயற்கைப் பொருள்கள் இவற்றோடு இருந்து பார்த்து அதனைச் சரிவரப் புரிந்து கொள்வதன் மூலம் பலவற்றை மனிதன் கற்றுக் கொள்ளவியலும் என்றார். மனிதரும் சமூகமுமே குழந்தைகளை வீணடிக்கின்றனர். நன்னெறி நல்வாழ்வுக்கு முரண்பாடாகவே நகர வாழ்வு அமைகிறது என்றார். சுதந்திரத்திற்காகவும் சம வாய்ப்புரிமைக்காகவும் இவர் போராடினார். குழந்தையின் ஆற்றல்களின், உறுப்புகளின் இயல்பொத்த வளர்ச்சியே கல்வி என வரையறுத்தார்.

கல்வி என்பது சீலங்களையும் உண்மையும் குழந்தைக்குப் போதிப்பதன்று; மாறாக தீநெறிகளும் பிழைபாடுகளும் குழந்தைகளின் மனத்தை அண்டவிடாமல் காப்பதே கல்வி என்றார். நமது விருப்பு, வெறுப்புகளை அடிப்படையிலேயே குழந்தை அதன் உலகை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று திணிப்பது பாவம் என்று விவாதித்தார்.

"என்னிடத்தில் ஒன்றுமே தெரியாத பனிரெண்டு வயதுச் சிறுவனைத் தாருங்கள் அவனுக்கு பதினைந்து வயது ஆவதற்குள் பிற சிறுவர்கள் தம் பதினைந்து வயதுக்கால நெடுகிலும், உங்களிடம் கற்றறிந்துள்ளவைகளுக்கு ஈடும் எடுப்புமாக கற்றனவற்றை அவன் வாழ்ந்து காட்டுவான். உங்களிடம் படித்தவன் அவற்றை நினைவிலிருந்து சொல்பவனாக மட்டுமே இருப்பான்” என்றார்.

"கல்விக்கு ஒத்தனவற்றை வழங்கிச் செய்விப்பதைக் காட்டிலும் கற்றல் நிகழாமைக்கான காரணங்களைக் கண்டாய்ந்து ஏற்ற சூழலை உருவாக்கித் தருவதே ஒருவரின் சரியான கற்றலுக்கு வழிவகுக்கும்” என்றார். "குழந்தைகள் தங்களுக்கே உரிய உகந்த வழிகளில் கற்றுக் கொள்கின்றனர். உங்கள் பயிற்று வழி முறைகளை அவர்கள் மீது திணிக்கலாகாது; அவ்வாறு செய்தால் அது எதிரிடையான பலன்களையே தரும்” என்றார்.

மாணவன் தனக்குத்தானே படிப்பித்துக் கொள்ளுகிற போது வலுவான நடைமுறைக் கற்றல் நிகழ்கிறது. தம்மில் தாமே உய்த்துணர்ந்து கற்கின்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வகுத்துத் தருவது ஆசிரியர்களின் பணியாக அமைய வேண்டும் என்றார்.

ஒரு மாணவன் வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் நன்னெறிகளைக்காட்டிலும் நான்கு மடங்கு கூடுதலாக அவற்றை விளையாட்டு மைதானத்தில் இயல்பாகவே கற்றுக் கொள்கிறான் என்றார். பாடங்களை வாயுரையாக வழங்குவது எதிர்பார்க்கும் பலன்களை அளிக்காது என்றார். துய்த்துக் கற்றலையும் செய்து கற்றலையும் ஆசிரியர்களுக்கு ஆலோசித்தார். கற்போரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து விளைவுகளை உறுதி செய்து கொண்டே சொல்லித்தர வேண்டும் என்றார். குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்த்து, குழந்தைகளாகவே புரிந்து கொண்டு குழந்தைத் தன்மைகளைப் புறந்தள்ளாது ஏற்றுக் கற்றல் அனுபவங்களை வகுத்து வழங்க வேண்டும் என்றார். மாணவர்களைக் கடிந்துரை செய்வதை அறவே கண்டித்து எழுதினார். சொற்களைக் காட்டிலும் செயல்கள் வலுவாகக் கற்பிக்கின்றன என்பதை ஆசிரியர்கள் என்றென்றும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் ரூசோ வலியுறுத்தினார். குழந்தைகளை மையமாகக் கொண்டு கல்வி (Child Centred Education) என்ற இன்றைய கல்வி நடைமுறையின் முன்னோடி ரூசோ ஆவார்.

ஜான்டூயி (1859-1952)

ஜான்டூயி இங்கிலாந்தில் ஊரகச் சூழலில் கடைக்காரரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே விவாதித்துப் பேசி அறிவதில் விருப்பார்வம் மிக்கவராகக் காணப்பட்டார். தத்துவ இயலில் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். தத்துவ இயல் துறைத் தலைவராக அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியாற்றினார்.

“சோதித்தறியும் பள்ளியை” (Experimental School) நிறுவி பேரும் புகழும் பெற்றார். தனது அரிய கருத்துக்களாலும், ஆய்வுகளாலும் அமெரிக்கக் கல்வி முறையில் செல்வாக்குடன் பல திருப்பங்களைக் கொண்டு வந்தார். பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பள்ளி நடைமுறைகளைக் கண்டறிந்தார். தனது ஆழ்ந்த அனுபவ அறிவுடன் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கல்வி நூல்களை எழுதினார்.

டூயி ஒரு பயனியல் வாதியாகத் (Pragmatist) திகழ்ந்தார். பரிசோதித்துச் செய்து பார்த்து அறிவதில் ஆர்வமிக்கவராயிருந்தார். வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கல்வியின் பயன் அமைய வேண்டுமென வாதிட்டு முயன்றார். எல்லாக் காலத்துக்கும் சூழலுக்கும் நல்லவை என்று ஒன்றும் கிடையாது; ஒரு செயல் சரியான செயலா தவறான செயலா என்பதைச் சந்தர்ப்பங்களே தீர்மானிக்கின்றன. இன்றைக்கு சரியானவைகளாகத் தோன்றுபவை நாளைக்கு வேறாகவும் மாறலாம். நாம் அறிகின்ற நிலையில் தீர்க்கமாக ஒன்றைச் சரி/தவறு என்று கூற முடியாது என்று விவாதித்தார். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத எதனையும் வேண்டாம் என்றார். உண்மை எது என்பதை அனுபவ வாயிலாகத் தீர்மானிப்பதே சரி என்றார்.

சிந்திப்பது நல்லது, ஆனால் வெற்றுச் சிந்தனைகளைவிட நடைமுறைப்பாடும், செயல்களுமே மேலானவை; சொல்லும் செயலும் ஒன்றையொன்று தழுவி அமைய வேண்டும்; உலகில் அனைத்துமே தற்காலிகமான வாய்ப்புகளே; நிரந்தரம் என்று ஏதும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மனிதன் தனித்து வாழ்ந்துவிட முடியாது. மனிதன் கூடி வாழும் விலங்கு, மனிதன் தன் சமூகத்தில் பொருந்தி வாழப் பழக வேண்டும். ஒருவரின் முன்னேற்றத்திற்கு சமுதாயம் மிகவும் உதவியாக அமைவதை அவன் உணர வேண்டும். “சூழ்நிலையோடு பொருத்தப்பாட்டை அடைய ஒருவர் பெறும் பயிற்சியே கல்வி' என்றார்.

இவர் நடைமுறை வாதத்தை ஊக்குவித்தார். எதையும் சோதித்துச் சரிபார்த்த பின்னரே ஏற்க முடியும் என்றார். சமுதாயத்தின் உண்மைத் தேவைகளை உண்மையிலேயே நிறைவேற்றாதனவற்றை அவர் ஏற்க மறுத்தார். நல்லவைகள் எனப்படுபவை பயனுள்ளவைகளாகவும் இருக்க வேண்டும். பயனுள்ளவைகள் மட்டுமே நல்லவைகள் என முழங்கினார்.

பெறும் அனுபவங்களைத் தொடர்ந்து உரைபார்த்துச் சீரமைப்பதாகக் கல்வி அமைய வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் தன்னைத் தக அமைத்துக் கொண்டு வாழும் படிப்பை, அணுகுமுறையை ஒருவருக்கு வழங்குவதாகக் கல்வி அமைய வேண்டும் என வலிந்துரைத்தார்.

மரியா மாண்டிசோரி (1870-1952)

இவர் 1870ல் ரோம் நகரில் பிறந்து கற்றுத் தேர்ந்து மனநலம் குன்றிய குழந்தைகளின் காப்பகத்தில் பணியாற்றினார். புலன் உறுப்புகளின் தொய்வான நிலையே கற்கும் திறன் தோய்வுக்குக் காரணமாக அமைகிறது என்றார். அது போன்ற குழந்தைகளுக்கு புலன் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வகுத்துப் பயிற்றித் தீர்வு காண்பதில் ஈடுபட்டார். தான் வழங்கிய பயிற்சிகளின் எடுபடும் தன்மையைச் சோதித்து உறுதி செய்து கொண்ட இவர் அவற்றின் அடிப்படையாகக் கொண்டே தனது கோட்பாடுகளை வடிவமைத்தார். குழந்தைகளின் உடல்வளர்ச்சிப் புள்ளி விவரங்களைப் பதிந்து அவற்றை நுணுகி ஆராய்ந்து புலன் பயிற்சி உத்திகளில் பயன்படுத்தினார். குழந்தைகளோடு உடனிருந்து பழகி உற்றுநோக்கிக் குழந்தை மேம்பாட்டுக்கும், கல்விக்கும் பயன்மிகு கோட்பாடுகளை வழங்கியுள்ளார்.

''குழந்தையின் முழுமையான மலர்ச்சிக்கு உதவியாக இருக்கக் கூடியவைகளை நுணுகி ஆய்ந்து அளித்து குழந்தைகளின் தனித்தன்மைகளை மங்காது, விருத்தி செய்வதே ஏற்புடைய, விளைவுமிக்க கல்வியாகும்” என்றார். குழந்தைகளின் வேறுபாடுகளைக் கருதி, வழிகாட்டி, விரும்பத்தக்க அமைவுகளை விருத்தி செய்து தருவனவாக ஆசிரியரின் முயற்சிகள் அமைய வேண்டுமென அறிவுறுத்தினார்.

குழந்தைகள் முழுச் சுதந்திரத்துடன் இருக்க அனுமதிக்கப்படும் போது அதில் அவர்கள் பொருந்தியிருக்கையில் இயல்புக்கு ஒத்த தருணங்களில் குழந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வளர்க்க முடியும் என நிரூபித்தார். தற்சார்பும், சுதந்திரமும் குழந்தைகளிடம் அரிய திறன்களை வளர்க்க உதவுகின்றன. சுதந்திரமாக இருப்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை. அவ்வாறு இருக்க நாம் அவசியம் அனுமதிக்க வேண்டும் என்றார்.

முழுச் சுதந்திரத்தில் இயல்பான வளர்ச்சிக் கொள்கை

சுதந்திரமான சுய வெளிப்பாட்டுச் சூழல்களில் குழந்தைகள் இயல்பாக இருக்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை உற்றுநோக்கி அவர்தம் உண்மை இயல்புகளை அறிய வேண்டும். சுதந்திரத்தின் வாயிலாகவே உண்மையான கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் குழந்தைகளிடம் வளர்க்க இயலுமென எச்சரித்தார்.

தானே கற்றல் கொள்கை (Principle of Auto Learning)

சுய கற்றலுக்கு வழி வகுக்கும் முறையே உன்னதமான பயிற்றுமுறை. தனக்கே உரிய தான் விரும்பும் வழியில் தனக்கியன்ற வேகத்தில் கற்பதற்கு வாய்ப்பளித்தால் சுயக்கற்றல் முறை நிகரற்றதாய் அமையும் என்பார். ஆசிரியரைச் சார்ந்திராமலும், அவர் சார்ந்த இறுக்கங்கள் இல்லாமலும் தானே ஈடுபட்டுக் கற்கும் கற்றலே சுயக்கற்றல் என்றார்.

கற்றலுக்கு வழிவகுக்கும் உபகரணம் ஒன்றைத் தானே தயாரித்து, பிழைகளை நீக்கவும் பிழை ஏற்படாது காக்கவும் வழிகோலினார்.

தசைப்பயிற்சிக் கொள்கை

எழுதுதல், நடத்தல், ஓடுதல், கைவினைகள் போன்ற தசைப்பயிற்சிகள் குழந்தைகளின் சுயச் சார்பை வளர்த்துச் சிறு பிராயத்திலேயே செயலாற்ற வழி கோலுகின்றன. குழந்தைகளின் தன் முனைப்பு ஈடுபாட்டை, ஆர்வத்தை வாய்ப்பளித்து வடிகாலாக்கிப் பயிற்றுவிக்க வேண்டும். ஆர்வத்தடைகள் குழந்தைகளைச் சுணக்கமடையச் செய்கின்றன என்பதை எடுத்துக்காட்டினார்.

புலன் பயிற்சிக் கொள்கை (Principle of Training of Senses)

ஐம்புலன்களே அறிவின் நுழைவாயில்கள் குழந்தைகளின் மூன்று முதல் ஏழாவது வயது வரையிலான பிராயத்தில் அவர் தம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன விறுவிறுப்பாகவும், விரைப்பாகவும் இருந்து வினைபடுகின்றன. அப்பருவத்தில் போதிய சரியான வாய்ப்புக்களை அளித்தால் பேரளவில் கற்றலை எளிதில் நிகழ்த்தலாம் என அறிவுறுத்தினார். புலன் உணர்ச்சிகளை துல்லியமாகவும் வேறுபடுத்தியறியும், கூர்மையுடனும் பயன்படுத்துவதால் அறிவுக் கூர்மை தூண்டப்படுகிறது என எடுத்தியம்பினார். குழந்தைகளின் கவனம் பொறிகளின் வயப்பட்டதாக உள்ளன. பொறிகளின் வழித் தூண்டல் தருவதன் வாயிலாக கவனத்தைத் திருப்பவும் கற்றலில் ஈடுபடுத்தவும் விரும்பத்தக்க துலங்கல்களைப் பெறவும் முடியும் என நிரூபித்தார்.

எடை, நிறம், ஒலி, ஒளி, அழுத்தம், வெப்பம் போன்ற வித்தியாசங்களைப் பயன்படுத்தி பொறிகளை மேன்மேலும் பயிற்சியளித்துத் துல்லியமாக்கலாம் என்பதனைச் செயல் விளக்கங்கள் செய்து விளங்க வைத்தார்.

உருமாற்றம்/உருத்திரிபுக் கொள்கை (Physical Metamorphosis and Psychological Metamorphosis)

குழந்தைப் பருவம் தீவிர தொடர் உருமாற்றம் ஏற்படும் பருவம் ஆகும். பிற எப்பருவத்திலுமில்லாத அளவிற்குக் கூடுதலான உடல் வளர்ச்சியும், பரிமாண மாற்றங்களும் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்றன. உடலியல் வளர்ச்சி மாற்றங்களைக் குழந்தைகள் அடைகின்றனர். இவ்வளர்மாற்றத் தீவிரத் தொடர்ச்சியை உரிய வழிகளில் வடிகாலாக்கிட உடல் உறுப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும். இத்தகு முறையான பயிற்சிகள் குழந்தைகளின் செயலார்வத்தைத் தூண்டி, பணியில் ஈடுபாட்டையும் விருப்பத்தையும் வளர்த்தாக்குகின்றன. இதனை நன்கு புலப்படுத்தி பாலர் கல்வி, அணுகுமுறையில் உளவியல் உடலியல் சார்ந்த பல விரும்பத்தக்க தீர்வுகளை அறிமுகப்படுத்திய பெருமை மாண்டிசோரி அம்மையாரையே சாரும். இவரது ஆய்வுக் கருத்துக்கள் எக்காலத்துக்கும் ஆசிரியர்களுக்குக் கற்றல் களத்தில் ஆலோசனைகளையும், பயன்மிக்க தீர்வுகளையும் வழங்க வல்லவையாக நிலைத்து நிற்கின்றன. தொடக்கப்பள்ளி வகுப்பறைக் கற்றல் களத்தில், செயல்வழிக் கற்றல் அணுகுமுறைகள் பல இவரது உத்திகளைத் தழுவி அமைந்துள்ளன. வகுப்பறையில் உளவியல் பூர்வமான, நுட்ப அடிப்படைத் தீர்வுகளைக் காண மாண்டிசோரியின் கருத்துக்களைப் பயன்படுத்திக் கொள்வது ஆசிரியர்களின் திறமையை மிகுவிக்கும்.

மாண்டிசோரி குழந்தைகளை இயற்கையின் தளிர்கள் என்றார். குழந்தைகளைத் தெய்வமாகவே கண்டார். குழந்தைகளிடம் அன்பு கொள்ளுங்கள். அதிகமான கவனத்தையும் ஈடுபாட்டையும் காட்டுங்கள் என்றார். அவர்களிடம் ஆசிரியர்கள் கரடுமுரடாக அணுகாமல் நுணுக்கமாகவும், கவனத்துடனும் வினைபட வேண்டும் என்றார். அனைத்துக் குழந்தைகளும் கற்க வல்லவர்களே. சிலருக்குக் கற்றலில் புதிய கூடுதல் தேவை இருக்கலாம். தேவைகள் தான் வேறுபாடு என்று தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தரின் கல்விக் கொள்கைகள்

தந்தை விசுவநாத தத்தருக்கும் தாயார் புவனேஸ்வரிக்கும் 1863 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நரேந்திரநாத் மகனாகப் பிறந்தார். நல்உணவை ஊட்டியதைப் போலவே பெற்றோர் நரேந்திரருக்கு நல்உணர்வையும் ஊட்டி வளர்த்தார். சிறு வயதிலேயே இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் W.W. ஹேஸ்டி தன் மாணவரான நரேந்திரரைப் பற்றி "நான் தூரத்து நாடுகளில் பரவலாகப் பயணித்துள்ளேன். ஆனால் நரேந்திரனைப் போல ஒரு புத்திக் கூர்மையும், ஞான நாட்டமும், துடிப்புமுள்ள மாணவரை ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலும் கண்டதில்லை” என்று வியந்து பாராட்டிக் கூறியுள்ளார். பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் நரேந்திரர் அவரது ஆன்மீக வழிகாட்டி இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு அவர் வழியில் இணைந்தார்.

இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஏற்ற, நாட்டு நலன் தழுவிய மேம்பாட்டுக் கல்வியை விவேகானந்தர் வலியுறுத்தினார். இந்தியர்கள் அனைவருக்கும் இந்நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கவும் தன்னம்பிக்கையூட்டவும், தேசிய உணர்வை கல்வியின் வாயிலாக ஊட்டிடவும் வலியுறுத்தினார். இந்தியாவில் ஆங்கில ஆட்சியில் கல்வி எனும் பெயரால், இந்த நாட்டின் விடுதலையை, முன்னேற்றத்தைத் திட்டமிட்டே வஞ்சித்து வந்தனர். இந்தியர்களைத் தன்னம்பிக்கையூட்டி, உருவாக்கும் கல்விக்குப் பதிலாகச் சுயசார்பைத் தள்ளிப்போடும், நிலையிழக்கச் செய்யும் எழுத்தறிவை மட்டும் வழங்கினர். தம் பெற்றோரை முட்டாள்கள் என்றும் மூதாதையரை பைத்தியக்காரர்கள் என்றும் இங்கிருந்த ஆசிரியர்களைக் கபட வேடதாரிகள் என்றும் இந்நாட்டின் புனிதநூல்களை பொய் மூட்டைகள் என்றும் இகழ்ந்துரைத்து, அவற்றோடு ஒன்ற விடாது விகற்பப்படுத்தி இந்நாட்டின் இளைஞர்களைக் கலைத்து விடும் யுக்தியையே கல்வி என ராஜதந்திரமாக ஆங்கிலேயர் நம்பவைத்தனர். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்நாட்டில் ஆங்கிலேயர்கள் வழங்கும் கல்வியைப் பெற்றாலும் சுதேசி உணர்வும், நாட்டுப்பற்றும் ஆங்கிலேயரைக் குறைகண்டு வெளியேற்றும் தைரியமும் கொண்ட இளைஞர்களை உருவாக்கி இந்நாட்டை ஆங்கிலேயர் அவர்களிடமிருந்து விடுவிக்க உதவாது என விழிப்பூட்டினார்.

விவேகானந்தரின் தேசியக் கல்விக் கொள்கைகள் உள்ளுணர்வின் வளர்ச்சி (Self-development)

இளைஞர்களின் தன்னம்பிக்கை ஒரு நாட்டின் உயர்வுக்கும் சிறப்புக்கும் அடிப்படைக் காரணம். உழைப்பில் ஆர்வமும் நியாய உணர்வுமே ஒருவரின் தன்னம்பிக்கைக்கும் வீரத்திற்கும் ஆதாரம். தைரியமான மனம், திடமான சிந்தனை, நியாயமான செயல், வலுவான உடல், தன்னால் இயலும் என்ற நம்பிக்கை இவைகளைக் கல்வி உருவாக்க வேண்டும். அது இந்தியாவின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் உத்தி என்றார். கல்வி மாணவர்களின் சுயமரியாதையை வளர்த்து சுய வெளிப்பாட்டுக்கு வகை செய்து அவர்தம் ஆர்வங்களை வடிகாலாக்கித் தற்சார்பை வளர்க்க வேண்டும் என வீரமுரசு என்னும் நூலில் முழங்கினார்.

என்னால் இயலும், நான் வல்லவன், எனக்கு வாய்ப்புகள் தான் உடனடித் தேவை என்ற செயலார்வத் துடிப்பைக் கல்வி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மேலை நாட்டுக் கல்வித் தத்துவங்கள் சூழ்நிலையோடு முரண்படாது, ஒதுங்கி நிற்கும், ஒத்துப்போகும் தன்மையை மாணவர்களிடம் வளர்த்தது. உண்மை அறிவாற்றல் எனப்படுவது வெளியில் இருந்து மாணவர்களுக்கு உள்ளே தகவல் வழி சென்றமைவதல்ல. மாறாக ஆன்மாவின் உயிர் ஆற்றலின் மகத்துவங்களை வெளிக் கொணர்ந்து வளர்க்கக் கல்வி ஆவன செய்ய வேண்டும் என்றார்.

சுயேச்சையாய் இருக்கவிடுதல் (Self accordance)

குழந்தைகளை முழுச் சுதந்தித்துடன் இருக்கவும் சுயேச்சையாய் குறுக்கீடின்றி அதனதன் இயல்புக்கு வளரவிட வேண்டும். ஒரு முன் மாதிரியை வருணித்து நிர்ணயித்து அதன்படியே பின்பற்ற வேண்டுமென அனைத்துக் குழந்தைகளையும் திணிக்கக் கூடாது. குழந்தைகளின் சுய ஆர்வங்களின் வெளிப்பாடுகளுக்கு வாய்ப்புத் தரவேண்டும். உள்ளார்ந்த வேட்கைகளே உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும். மாறாக பலவந்தமாக நாம் கட்டாயப்படுத்துவதால் விரும்பத்தக்க விளைவுகள் நேர்வதில்லை. சுயச்சார்பும் சுய வெளிப்பாட்டு வாய்ப்புகளும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும். “ஒருவர் சிங்கமாக ஆவதை நாம் தடுத்தால், முடக்கினால் அவர் நரியாகவும் மாறிவிடக் கூடும்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

வளர்வதற்கான சுதந்திரம் (Un inhibited growth)

சுவாமி விவேகானந்தர் சுதந்திரம்தான் சுய வளர்ச்சிக்கு முதல் தேவை என வலியுறுத்தினார். ஆசிரியர் ஒரு தோட்டக்காரரைப் போன்றவர். ஒரு தோட்டத்தில் உள்ள அனைத்துத் தாவரங்களும் தாங்களே வளர்கின்றன. மண்ணைக் கிளறுவதும், உரம், இடுவதும், நீருற்றுவதும், பட்டி அடைத்துப் பாதுகாப்பதும் தோட்டக்காரரின் வேலை. ஆனாலும் செடி அதுவாகவே தான் வளர வேண்டும். எந்த வெளி ஆற்றலும் அதன் உள் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது; அது போலவே எந்த வெளியாற்றலாலும் அதனை விரைந்து வளர்த்துவிடவும் முடியாது. செடி அதுவாகவே தான் வளர வேண்டும். அது போலவேதான் மாணவர்களும் அவர்களது கல்வியும் என்றார்.

நடத்தை கட்டமைக்கப்படுதல் (Character Formation)

நன்னடத்தையும் ஒழுக்கமும் நற்கல்வியின் கொடைகள்; கல்வியின் பயனே நன்னடத்தையைக் கட்டமைப்பதுதான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒரு மனிதரின் நடத்தை என்பது அவரது மனப்போக்குகள், நாட்டங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே. இன்பங்களும், துன்பங்களும் ஒரு ஆன்மாவின் இடையறாத அனுபவங்களாகிற போது அவற்றின் கூட்டு விளைவாக அவனிடம் படியும் பதிவுகளே அவரது நடத்தை எனப்படுகிறது. நடத்தையைக் கட்டமைப்பு செய்வதே கல்வியின் தலையாய நோக்கம். எனவே மாணவர்களுக்கு அரிய பின்பற்றத்தக்க உன்னதமான நன்னடத்தையாளர்களை மட்டுமே சான்றாக்கவும் ஆசிரியர்கள் முன்வைக்கவும் வேண்டும்.

"தானே சரியான முன்னுதாரணமாகத் திகழ்ந்து ஒழுகும் ஆசிரியரே நடத்தைக் கட்டமைப்புச் செய்யும் வல்லமை மிக்கவராவார்”. என விவேகானந்தர் விவரித்தார். நல்ல குணவான்களும் சத்தியம் தவறாத சீலர்களும், பற்றற்று நடுநிலைமையோடு வாழ்வோரும், உழைக்கும் செந்நெறியாளர்களும், தியாகிகளும் தான் நன்னடத்தைக் கல்வியாளர்களாக முடியும் என்று அழுத்தம் திருத்தமாக முழங்கினார். கடின உழைப்பு, நீதி, ஆன்மீக நன்னெறிகள், ஆசிரியர் மாணவர் விசுவாச உறவு, நல்ல பழக்க வழக்கங்கள், முயன்று தவறிக் கற்கும் பட்டறிவு முதலியன நன்னடத்தைக்கு ஏதுவாகும் காரணிகள் என்றார் சுவாமி விவேகானந்தர்.

கல்வி அணுகுமுறைகள் (Means of Education)

அன்பு (Affection)

அன்பை ஊடகமாக்கிக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். மாணவர்கள்பால் காட்டும் அன்பு, பரிவு, கனிவு இவைகள் வலிமை மிக்க ஆசிரியர் மாணவர் பிணைப்பை ஏற்படுத்தி கற்றலை வலுப்படுத்தும்; இருவர் முயற்சியும் வீணாகாது; நீடித்த வலுவான கற்றலை வழங்கும். இத்தகு அணுகுமுறை ஆசிரியர்க்கு என்றும் குன்றாத தெம்பையும் மாணவர்க்கு விருப்பார்வமிக்க ஊக்கத்தையும் வழங்கும் இன்ப ஊற்றாய் அமையும் என்பதை நாம் மறத்தலாகாது.

உலகியல் வாழ்வில் ஏற்படக் கூடிய வேறெந்த உறவைக் காட்டிலும் ஐக்கியமானதாகவும், வலுவானதாகவும் நீடித்து நிலைத்திருப்பதாகவும், மிக்க பயனை வாழ்நாள் நெடுகிலும் வழங்குவதாகவும், ஆசிரியர் மாணவர் உறவு ஆழ்ந்த அன்பின் பலனாக அமைதல் இலக்கணம்.

உதவி (Help)

கற்க வரும் மாணவரின் உள்ளே ஒளிந்து கிடக்கும் பல்வகை ஆற்றல்களையும் செய்திறன்களையும், வல்லமைகளையும் இனங்கண்டு வெளிப்படச் செய்ய மிகவும் உதவ வேண்டும். வாழ்வென்னும் போராட்டத்தில் மாணவன் தன்னையும் தன் பாரம்பரியப் பண்பாட்டுச் சிறப்புகளையும் இழந்து வீணாகாதவாறு மாணவர்க்குச் சீலக் கண் திறக்க வேண்டும் என்றார்.

வழிகாட்டுதல் (Guidance)

கற்க வரும் மாணவர் எவர்க்கும் கல்வி ஓர் இதமான மலர் படுக்கை அனுபவமாக அமைந்துவிடுவதில்லை . கற்பதில் அவரவரும் இதுவரை அறிந்திராத இக்கட்டான பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அவை யாவற்றையும் குருவருள் ஆலோசனையுடனும் தன்னம்பிக்கை மிகுந்த முயற்சியுடனும், உளையாது ஊற்றி, உப்பக்கம் காண வேண்டும். ஆசிரியரின் உளவியல் அறிவும், நீண்ட பட்டறிவும், தொடர் கண்காணிப்பும், மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல்களையும், சுவை தோன்றாச் சுமைகளையும், இறுக்கங்களையும் எளிதாக்கி வழிகாட்டுவனவாய் அமைதல் வேண்டும் என விவேகானந்தர் ஆசிரியர்களின் அறத்தொண்டு அமையப் பல ஆலோசனைகளைப் பகர்ந்துள்ளார்.

கவனக்குவிவு (Concentration)

கவனக்குவிவே கற்றலுக்கு அடிப்படை கவனத்தை ஒருமுகப்படுத்த விவேகானந்தர் பல ஆலோசனைகளை உலகிற்கு வழங்கியுள்ளார். ஒன்றன் மீது நாம் செலுத்தும் ஒருமுகப்படுத்தப்பட்ட கூர்ந்த கவனம் நம்மை ஆராய்ச்சியாளர்களாக்கி உலகுக்குப் புரியாத பல கண்டுபிடிப்புக்களை புலனாக்கித் தர வல்லதாகும்.

மாணவர்களின் வல்லமைக்கேற்ப போதுமான பொறுமையுடன் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து, தொடர் கண்காணிப்புச் செய்து மாணவர்களின் தியான ஆற்றலை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி, வழிகாட்டி இடைவிடாது முயன்று பல நன்மைகள் தரும் கவனக் குவிவு ஒருவரிடம் மேலோங்க ஆசிரியர்கள் துணையாக இருத்தல் அவசியம்.

பிரம்மச்சாரியம்

நீத்தல், உபவாசம் இருத்தல், ஆசை மறுப்பு ஆகியன கவனக்குவிவுக்கு வழிகோலித் துணை செய்யும். உள்ளத்தின் உறுதி, மனத்திட்பம் ஆகியன ஆன்மீக ஆற்றல் மற்றும் மன சக்தியைக் கூட்டுகின்றன. இவை மன ஆற்றல் சிதறலைக் குறைத்து பால் உணர்வு, உந்தத்தை மடைமாற்றி மன ஆற்றலைக் கல்வியின்பால் ஒருமுகப்படுத்த வல்லவை. பிரம்மச்சார்யமும் எண்ணத் தூய்மையையும் செயல் ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றன.

விவாதமும் சிந்தனை ஆற்றலும்

விவாதம் கருத்தோட்டத்தையும் சிந்தனைத் தெளிவையும் வழங்கவல்லது. சிந்தனை மனதை ஒரு பொருட்கள் செலுத்தி ஆய வல்லது. இவை இரண்டும் கல்விக்குத் துணை நிற்பவை. ஒத்தக்கருத்து, மாற்றுக் கருத்து உடையோர்களுடன் விவாதிப்பதன் வாயிலாக பன்முகச் சிந்தனை ஆற்றல் வளரும்; சிந்தனை: மன ஆற்றல் அலைகளை நாம் விரும்பும் பொருள் மாட்டு ஈடுபடுத்தும். கேள்வி, வாசிப்பு, தகவலுடன் நிறுத்திவிடாமல் விவாதம், சிந்தனை, கருத்தாய்வு ஆகியவற்றை மேற்கொள்வதன் வாயிலாக மாணவன் தன் அறிவைத் தானே கட்டமைத்துக் கொள்ள முடியும் என்று விவேகானந்தர் அறிவுறுத்தியுள்ளார். இதனையே தற்காலத்தில் மேலை நாட்டோர் ஆக்கவியல் கல்வி (Constructivist pedagogy) எனப் புனைந்துரைத்து வருகின்றனர்.

வகுப்பில் குழந்தைகளின் கற்றல் பணிகளில் ஆசிரியர்கள் இடைவினைபுரிகையில் இவைகளை மனதில் கொண்டு பேரளவிலான கற்றலுக்குத் துணை செய்து, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி வழிகாட்ட வேண்டுவது மிக அவசியம்.

பல்வகைக் கற்றல்

வளமான உடலில்தான் திண்மையான மனப் பெற்றிமைகள் (mental calibres) அமையும் என வாதிட்டார். உடலோம்பல், உடல் நலம், உடல் வலிமை இவைகளைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு, அக்கறை, கல்வி, பயிற்சி ஆகியவற்றைக் கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மாணவர்களுக்கு நீதி, நன்னெறி, மனப்பக்குவம் தரும் சமயக் கல்வியையும் வழங்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்தியம்பினார். உன்னதமான இலட்சியங்கள், தைரியம், தன்னம்பிக்கை, தொண்டு, அர்ப்பணிப்பு, உண்மையறிவு, பின்பற்றும் வேட்கை, அடிமைத் தனமற்ற சுதந்திர வேட்கை, நாட்டுப்பற்று, புனித நூல்களை நேரடியாக ஆழப் படித்துணர்ந்த ஆன்மீகப் புலமை ஆகியவற்றைக் கல்வி மாணவர்களுக்குத் தவறாது வழங்க வேண்டும் என்றார். பெண் கல்வி, எளியோரின் சமத்துவக் கல்வி, ஆகியவற்றையும் விவேகானந்தர் தனது நாட்டு நலநோக்குக் கல்விக் கருத்துக்களில் பரவலாக வலியுறுத்தியுள்ளார்.

சாந்தி நிகேதன் பள்ளியும், விசுவபாரதி பல்கலைக்கழகமும் இவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இவர் இயற்றிய கீதாஞ்சலி என்னும் கவிதை நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரவீந்திரநாத் தாகூர் (1861-1941)

ஒரு கவிஞராகவும், கலைஞராகவும், துறவியாகவும் உலகறிய வாழ்ந்தவர் தாகூர். தன்னைத்தான் அறிந்தின்பமுறுவதையே கல்வியின் தலையாய பயன் என்றார். பிரபஞ்சத்தையே ஒரு பேருயிரி என்றார். அந்த பெரிய உயிரினின்று கிளைத்தவை தாம் பசுந்தாவரமும், பல பிராணிகளும், மனிதர்களும் என்றார். உயிரிகளனைத்தும் அப்பேருயிரியை மீண்டும் அடைவதை நோக்கியே இயங்கி வருகின்றன. கல்வி இல்லை எனினும் இவ்வியக்கம் தொடரும். எனினும் அவ்வியக்கம் தன்னைத் தானறிந்ததாகவும் உணர்ந்ததாகவும் அமைவதில்லை. எனவே, அவ்வினிய அனுபவத்தைத் தன்னில் தானறிவது நிகழ்ந்திட ஏதுவாய் அமைவதே கல்வி என்றார் கவியரசர்.

தன்னை அறிவதற்கான கொள்கைகள்

தற்சார்பு (Independance)

மாணவர்கள் பரிபூரண சுதந்திரமாய் வாழ வேண்டும். எதையும் நுணுகி அறியும் உரிமை, தீர்வுகாணல், ச் சேகரித்தல், நினைப்பனவற்றைச் செய்தறியும் இதயபூர்வமான உணர்வுகளை வெளிப்படுத்துதல், விரும்பும் தகவல்களைஉரிமை, கட்டுப்பாடற்ற, தாவழியிலான தொழுகை ஆகிய உரிமைகள் மாணவர்களுக்கு இருத்தல் வேண்டும். இவற்றை அடைய மாணவர்கள் பற்றற்ற தன்மையையும், இயற்கையுடனான ஒத்திசைவையும், மனக்கட்டுப்பாட்டு நிலையையும் வகுத்து உன்னதமான நன்னடத்தையாளர்களைச் சான்றாக்கி ஆசிரியர்கள் முன்வைக்க வேண்டும் எனத் தாகூர் வலியுறுத்தினார்.

பரிபூரணம் (Perfection)

இயற்கையால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மனப்பரிபாகப் பெற்றிமைக் கூறுகளிலும் மாணவர்கள் நிறைவை எய்த வேண்டும். மனமாட்சிமைகள் உள்ளத்தின் இயலுமைகள், மனோ சக்தியின் பூரிதம் ஆகியவற்றை வேண்டிய பயிற்சிகளால் எழுத வேண்டும். தேர்வு நோக்கில் சிலவற்றைப் படித்துத் தேர்வில் வெற்றி பெற்று பட்டங்கள் பெற்று, சான்றுகள் பெற்று அவற்றைப் பதிந்து / காட்டி வேலைகள் வாங்கி ஊதியம் பெற்று பொருளாதாரத் தன்னிறைவைப் பெறுவதே கல்வியின் தலையாய நோக்கம் ஆவதில்லை. மாணவரின் ஆளுமைக் கூறுகள் யாவும் என்றும் புறக்கணிக்கப்படாமல் பயிற்றப் பெற்று, முறையான வளர்ச்சியடைந்து திரண்ட ஆளுமை வளர்ச்சியுடன் மனப்பரிபாகப் பூரித நிலையை அடையப் பெறுதலே கல்வியின் இன்றியமையாத நோக்கம் என்றார் தாகூர். மாணவர்களின் மனத்திறன், மன வளங்களை வளர்ப்பதாக கல்வி அமைய வேண்டுமென இவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வரைவின்மை / எங்குமுள்ளமை (Universality)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருப்பது எது? உருவாய், அருவாய், அருவுருவாய் நிற்பது எது? உளதாய், இலதாய், காணும்போது தெரிந்தும் காணாதவாறு மறைந்தும், மறைத்தும், ஒளித்தும் ஒளிர்வது எது? ஒன்றென இரண்டென; ஒன்றிரண்டு அன்றென நிறை பூரிதமாய் நிலவுவது எது? நீக்கமற நின்றது எது? எல்லாம் அது: அதுவும் பிறவும் ஒன்றே ; அதுவும் பிறவும் அதுவே இயற்கை; வேறல்ல: எனவே அதுவே யாமும்; அதுவே எல்லாமும், என்பதையும் அது வரைவிலாது: எங்கும் உள்ளமையை மாணவர் அனைவரும் ஓர்ந்திட , உணர்ந்திட, தேர்ந்திட, தெளிந்திட, கல்வி வழிவகை செய்திட வேண்டும். இப்புரிதல் நிகழ்ந்திட யாவர்க்கும் கல்வி துணை நின்றிட வேண்டும். கல்வியின் பயன் அதுவே. இதனையே ஒளவையார்ா “தெய்வம் தெளிமின்” என்றார். கல்வியாலன்றி இதனை எய்திடலாகாது எனத் தாகூர் தெளிந்துரைத்துள்ளார்.

தாகூர் வலியுறுத்தும் கல்விப்பயன்

நினைப்பதும் பேசுவதும், படிப்பதும், நடப்பதும், வெவ்வேறாக அமையக் கூடாது. படிப்பது வாழ்வதற்காகவே. எதனையும் தீர்க்கமாக அறிந்து கொள்ள ஆவலுறுவதே இயற்கை. வாழ ஒவ்வாதனவற்றைப் படிக்க வேண்டுவதில்லை. இரட்டை வேடம் கூடாது. கல்விச்சாலைகள், இயற்கைச் சோலைகளிலும் வனங்களிலுமே அமைய வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே; படிப்பும் வாழ்வதற்கே! வாழ்தலும் இயற்கையானதே, எனில் வாழுமிடமும் படிக்கும் சூழலும் இயல்பாகவும் இயற்கையாகவுமே இருத்தல் அவசியம் என வலிந்துரைத்தார்.

இயற்கைக்கு அந்நியமாக மனிதன் சிந்திக்கும், செய்யும் அனைத்துமே மனிதனுக்கு இன்னலைத் தரும். இயற்கையோடு ஒத்திசையும் கலையே கல்வி: இயற்கையோடு முரணுவது 'ஹிம்சை ' என எச்சரித்தார். சுற்றுச்சூழல் நலக்காப்பும், நம் உறைவிடச் சுகாதாரமும், நம் உடலை நாம் ஓம்புவதும் எல்லாம் ஒன்றே, ஒரே செயலின் விரிநிலையே, ஒன்றை ஒன்று பிண்ணியதே என மாணவர் பேசுமாறோ, கேட்குமாறோ செய்தால் போதாது; மாணவர்கள் இதனை ஓர்ந்து எண்ணிப்பார்த்து ஏற்றொழுகிட ஆவன செய்யுமானால் அதுவே கல்வி எனப்படும். அரைகுறைப் புரிதலும், நிறைவற்ற செயலும் கல்வி ஆகாது; ஆசிரியர் இத்தீர்வு கிட்டுமாறு புகட்ட வேண்டும். தேர்வுகள் இம்மனிதப்பாங்கினை மதிப்பிட வேண்டும் என்றார் தெய்வீகக் கவிஞர்.

தாகூர்காட்டும் கல்விச் சமதர்மம்

தாகூர் ஒரு சித்தாந்தி மட்டுமல்ல. நடைமுறை வாதியும் கூட. ஆனால் நடைமுறை என்பது இயற்கைக்கு மாறான, முரணிய தீர்வுகளை உத்தேசிப்பதல்ல. ஒரு தீர்க்கமான தொலைநோக்குடன் கூடிய நடைமுறைவாதி; கல்வியின் ஜீவாதார வருவாய்ப் பயனை தாகூர் மறுக்கவில்லை. ஆயினும் படிப்பதெல்லாம் பணம் பண்ணவே; பணம் பண்ணவேதான் படிப்பு என்பதையே இகழ்ந்துரைத்தார்.

தனி ஒருவர்க்கு வாழ வழிகாட்டுவதாக மட்டுமே கல்வி அமைந்து விடக்கூடாது. ஒருவரது கல்வி முயற்சியால் அவருக்கும் பல பேருக்கும் பயன் கிடைக்க வேண்டும்; ஒரு நாட்டுக்கே தொண்டாய் அது அமைய வேண்டும். வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாழ்வுக்கு வகை செய்வதாகவும், எல்லார்க்கும் எல்லாமும் ஆக்கியும் பகிர்ந்தும் அளிக்கும் கல்வியாக அமைதல் மிகச் சிறப்பு. பிள்ளைகளுக்கு வெற்று எண்ணெழுத்து அறிவு கிடைக்க ஆவன செய்வதே கல்வி நோக்கமாகாது. கல்வியால் பெறக் கூடிய அனைத்துச் சிறப்பு, தெளிவு, நன்மை, பண்பு முதலிய முழுமையான இலட்சியங்களை எட்டவும் அது வழிகோல வேண்டும். அதன் வாயிலாக, ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்டு எல்லார்க்கும் வாய்ப்பைத் தந்து வாழும் இனிய சூழலை ஆக்க வேண்டும். அது கண்டு தானும் இன்புறும் தகைசால் கல்வியாக, மனித அறம் வளர்த்து, இயற்கையறம் பேணும் இன்னுலகை நோக்கி உலகை அழைத்துச் செல்லும் கல்வியாகவும் அமைய வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்கள் கருத்துக்கு வைத்துள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948)

“குழந்தைகளின் / மனிதர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒத்திசைந்த திரண்ட வளர்ச்சியை உண்டாக்குவதையே கல்வி” என்றார் மகாத்மா. சுயச்சார்பை வளர்ப்பதே கல்வி; பொறுப்புணர்ச்சியும் கண்ணியமும் மிக்க குடிமக்களை உருவாக்குவதே கல்வி என்றார் இவர்.

குழந்தை மையக் கல்வி முறையை இவர் ஆலோசித்தார். முழுமையான வளர்ச்சியைக் குழந்தை அடையக் கல்வி வழிவகுக்க வேண்டும். எழுத்தறிவினைப் போலவே நன்னடத்தைக் கூறுகளின் வளர்ச்சியையும் முக்கியமானதென்றார். நல்ல எண்ணம், இன்சொல், நற்செயல், அஹிம்சை, சத்தியம், புலனடக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் வாயிலாகவே நன்னடத்தை உருவாகிறது. நல்லனவற்றையே பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; பேச வேண்டும். தீயனவற்றை பார்க்கக் கூடாது; கேட்கக் கூடாது; பேசக் கூடாது எனப் புகட்டினார்.

குழந்தைகளிடம் இயற்கையாகக் காணப்படும் பல்வேறு திறமைகளையும் மலர்த்தி வல்லமைகளாக்க வேண்டும். ஏதோ ஒரு சிலவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு வழிகாட்டி வளர்ப்பது முழுமையான கல்வியாகாது. தனித்தனியான தொடர்பற்ற துண்டுத் தகவல்களை, உதிரிச் செய்திகளை வழங்கி மனதிலிறுத்தாமல் ஒவ்வொரு தகவலையும் தேவையறிந்து ஏற்று நேர்வுறப் பின்னி வலையாக்க வேண்டும்.

தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்தினாரானாலும் அவர் சமூகத்தோடு பொருந்தி வாழும் அவசியத்தையும் இடித்துரைத்தார். இறைநிலையை எய்துவது கல்வியின் இறுதிப் பயன். மக்களுக்குத் தொண்டு செய்வதும் அதனால் அடையும் இன்பமும் அலாதியானது என்றார்.

தற்சார்பை ஏற்படுத்த மாணவர்களுக்குக் கைத்தொழில், பணி அனுபவக் கல்வியை ஆலோசித்தார். கைவினைத்திறம் ஒருவகையான கற்றல் வெளிப்பாடே. வேலைவாய்ப்பு இதன் மையமாக அமையும். பல நோக்குப் பூரிதக் கல்வியை மாணவர்க்கு வழங்கி, ஆக்கபூர்வமான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி, இளைஞர்களை உடலுழைப்பு, படைப்பு பற்றிய மகிழ்ச்சிக்குள்ளாக்கிச் சரியான மனப்பான்மையை அவர்களுக்கு வழங்குவது அவசியம் என்றார்.

மக்களாட்சிப் பயிற்சி

மக்களாட்சிச் சமுதாயத்தின் சிறப்பான குடிமக்களாக வாழக் கல்வி வகை செய்ய வேண்டும். பள்ளியை ஒரு சமுதாயமாகக் கருதி, அதில் சரியான பங்கேற்புடன் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். வரைமுறைகளை அறிமுகமாக்கி கடைமையும், உரிமையும் பற்றிய சரியான கருத்துகளுடன் பொறுப்புள்ள எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் திகழ ஆவன செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒத்துணர்வு, தொண்டு, அன்பு, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் முதலிய சீலங்களை வளர்க்க வேண்டும்.

எல்லா விதமான அடைவறிவும் பண்பாட்டை உருவாக்கவே: பண்பாட்டை வலுப்படுத்தாத கல்வி பயனற்றதாகும். தளையற்ற ஆன்ம சுதந்திரமே உண்மைச் சுதந்திரம். இந்த உண்மைச் சுதந்திரத்தை அடைவிப்பதாகவே கல்வி அமைதல் வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். இவர் ஓர் கருத்தியல் கல்விக் கொள்கையாளர்.

காந்தியக் கல்வி அணுகுமுறைகள்

கல்வி வாழ்க்கையோடு இணைந்ததாகவும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகவும் அமைய வேண்டும். கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டுமிராது பயனுள்ள உடலுழைப்பு, செய்திறன்களின் வளர்ச்சியாக அமைய வேண்டும். வாழ்ந்து கற்றல், செய்து கற்றல், இணைந்து கற்றல் போன்ற அணுகுமுறைகளை அண்ணல் காந்தி எடுத்துரைத்தார். மனப்பாடம் செய்து கற்பதை அவர் ஏற்கவில்லை. சுய அனுபவத்தோடு கூடிய செய்முறைக் கல்வியையே காந்தி விரும்பினார். தாய்மொழி வழிக் கற்றலையே இவர் ஆதரித்தார். வன்முறையற்ற கல்வி, அகிம்சையை நிலைநாட்டும் கல்வி, புலனடக்கம் பயிற்றும் கல்வி, உழைப்பை விரும்பும் கல்வி என காந்தியின் கல்விக் கோட்பாடுகளைப் பலவாறாக விவரிக்கலாம்.

ஆதாரக்கல்வி திட்டம் (Varda Scheme of Education)

ஆக்கிரமிப்பற்ற, வன்முறை நீங்கிய, அகிம்சை நெறி நாடிய வாழ்வும், கல்வியும் காந்தியக் கல்வியின் அறைகூவல்களாகும். சுரண்டலற்ற, அதிகாரமும் உரிமையும் பரவலாக்கப்பட்ட ஒரு பாரத சமுதாயத்தைக் காந்தி விரும்பினார். அதனடிப்படையிலேயே அவரது கல்விக் கோட்பாடுகளும் அமைந்துள்ளன.

காந்தியடிகளின் வார்தா ஆரம்பக் கல்வி முறை பின்வரும் கோட்பாடுகளைக் கொண்டதாயிருந்தது.

1. ஆணும் பெண்ணும் சேர்ந்து படித்தல்

2. ஆசிரியர் மேற்பார்வையுடனான உடலுழைப்பு கல்வியில் பெரும்பகுதி இடம் பெற வேண்டும்.

3. மாணவ, மாணவியரின் நாட்டத்தை நன்கறிந்து அவரவர் நாட்டத்திற்கேற்ப பணி அனுபவங்கள் வழங்கப்பட வேண்டும்.

4. ஒவ்வொரு செயல்முறையையும் ஏன் செய்ய வேண்டும், எந்தக் காரணங்களுக்காக இதனைச் செய்ய வேண்டும் என்ற காரண காரியங்களைத் தொடர்புபடுத்திச் சொல்லித்தர வேண்டும்.

5. மாணவர்களுக்குப் புரியுந்திறன் வந்தவுடனேயே பொது அறிவுக் கல்வியை வழங்க வேண்டும்.

6. குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருமுன்னரே ஜியோமிதி வடிவங்கள் அனைத்தையும் வரையும் பயிற்சியை வழங்க வேண்டும். முதலிலிருந்தே அழகிய கையெழுத்து எழுதும் பயிற்சியை அனைவர்க்கும் வழங்க வேண்டும்.

7. குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத்தரு முன்னரே படிக்கக் கற்றுத் தர வேண்டும்.

8. எட்டு வயதாகும் முன் வாயுரை, வாய்மொழி வாயிலாகவே பெருவாரியான அறிவை மாணவர்க்குப் புகட்ட வேண்டும்.

9. குழந்தைகளைக் கற்றுக் கொள்ளுமாறு திணிக்கக் கூடாது.

10. குழந்தைகளின் விருப்பார்வத்தின் அடிப்படையிலேயே எக்கற்றலும் அமைய வேண்டும்.

11. குழந்தைகளுக்குப் பிரியமான விளையாட்டைப் பயன்படுத்திக் கற்பிப்பதே சிறந்தது.

12. குழந்தையின் தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும்.

13. கைத்தொழில் ஒன்றை அனைவரும் அவசியம் கற்க வேண்டும்.

14. தொடக்கக்கல்வி நிலையிலும்கூட பணி அனுபவக் கல்வியை வலியுறுத்தினார்.

15. தன் எதிர்கால நலன் கருதி ஏதேனும் ஒரு கைத்திறனை மாணவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

16. எல்லா மாணவர்களும் பொது அறிவு, உலக வரலாறு, உலகப் புவியியல், தாவரவியல், வான சாத்திரம், எண்கணக்கறிவு, வடிவ கணிதம் முதலியவற்றின் அடிப்படைகளையும் கற்க வேண்டும்.

17. பதினாறு வயதுடைய ஆணோ பெண்ணோ தையல் வேலையும் சமையலும் அறிந்திருக்க வேண்டும்.

18. ஆசிரியர்கள் அப்பணிக்கு மிகுந்த விருப்பார்வம் உள்ளவர்களாகவும் நன்னடத்தை உள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம்.

நாட்டின் மனிதவள், பொருளாதார, சமுதாய, சமூகப் பண்பாடு, அரசியல், பாரம்பரிய, சமத்துவ, மக்களாட்சித் தேவைகளை நிறைவேற்றுவதாகக் கல்வி முறை அமைய வேண்டும். நாட்டின் அனைத்துத் தேவைகளையும் தெளிவுப்படுத்தி, நிறைவேற்றித் தரவல்ல பல படிநிலை முன்னேற்றங்களை உடையதாகக் கலைத்திட்டம், காலங்கள் தோறும் மாறி அமைய வேண்டும் தேசிய நோக்கங்களை கலைத்திட்டம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

காந்தியின் கல்வித் தத்துவம் இந்நாட்டின் அனைத்து அமைவுகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய நுட்பதிட்பங்களைக் கொண்டதாக இருந்தது. அன்றளவில் நிலவிய அனைத்துக் கல்வியாளர்களின் சிறப்புக் கூறுகளையும், உள்வாங்கிய, ஏற்புடையதொன்றாக ஆதாரக் கல்வித்திட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top