பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / கல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்

கல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 - ஆம் நாள் இந்தியா, ஆங்கிலேய அரசின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத் தொகுப்பை உருவாக்கிட அப்போது செயல்பட்ட இடைக்கால அரசின் சட்ட அமைச்சர் டாக்டர் B.R. அம்பேத்கார் தலைமையில், பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கியவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அரசியல் நிர்ணய சபை நிறுவப்பட்டது. இச்சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் (Constitution of India) நீண்ட விவாதங்களுக்குப்பிறகு 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26-ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் நம் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் விழைவுகளையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble of the Constitution of India)

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையானது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது அதில் திருத்தம் 42 ன் மூலம் 1976 ஆம் ஆண்டு சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

''இந்தியாவின் குடிமக்களாகிய நாங்கள் இதன் மூலம் கண்ணியத்துடன் வலியுறுத்தி இந்தியாவின் இறையாண்மையை சமூக சமத்துவத்துடன் கூடிய மத சார்பற்ற ஜனநாயக குடியரசாக உருவாக்க உறுதி பூணுவதோடு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, சமூகநீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் சார்ந்த நீதியுடனும் சிந்தனை செய்தலில் வெளிப்படுத்துதலில் நம்பிக்கையில் மற்றும் மதவழிபாடுகளில் சுதந்திரத்துடனும், எல்லோருக்கும் சம அந்தஸ்து மற்றும் சமவாய்ப்புடனும் மற்றும் தனிமனித கண்ணியத்துடன் கூடிய சகோதரத்துவத்துடன் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும் பாதுகாப்போம் என்றும் உறுதியுடன் தீர்மானிக்கிறோம். இந்திய மக்களாகிய நாம் நீதி, சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமதர்ம சமயசார்பற்ற ஒருமைப்பாடுடைய குடியாட்சியை நிறுவுகிறோம். இதில் உள்ள நான்கு முக்கிய அடிப்படைகளும் கீழ்க்கண்டவாறு விரித்துரைக்கப்பட்டுள்ளன.

நீதி ( Justice )

சமூக, பொருளாதார, அரசியல் தொடர்பானவை. சமூகம் பல்வேறு பிரிவு மக்களையும் குழுக்களையும் கொண்டது. தனிநபர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதோடு, சமூகத்தேவைகளும் முன்னேற்றமும் கருத்தில் கொள்ள பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படுதலைப் குறிப்பதே நீதி, அவை மூவகைப்படும், அவையாவன.

சமூகநீதி (Social Justice )

சாதி, மதம், இனம், பால் அடிப்படையாக வேறுபடுத்துவதை அரசியலமைப்புத் தடை செய்கிறது ஆனால், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள குடிமக்களின் முன்னேற்றத்திற்காக, அரசு வழிவகை செய்ய வேண்டும்.

பொருளாதார நீதி (Economic Justice)

அரசியலமைப்பில் தோற்றுவாயில் உறுதியளிக்கப்பட்டுள்ள, நியாயமான பொருளியல் முறைமையை உருவாக்குவதே நெறிசெய் கோட்பாடுகள், குறிக்கோளாகக் கொண்டுள்ளன. பொருளாதார நீதி என்றால் ஒவ்வொருவரின் கண்ணீரைத் துடைப்பதே என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அவர்கள் கூறியுள்ளார்.

அரசியல் நீதி (Political Justice)

சமூகத்தில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடவும், கருத்துக்களை தெரிவிப்பதற்கும், சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஈடுபடவும் அனைவருக்குமான சமத்துவத்தை அரசியல் சார்ந்த நீதி அளிக்கிறது.

இதுபோல் சமூகத்தில் நலிவுற்ற மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையில் சில சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நலிவுற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களின் குரல் அரசியல் அரங்கத்தில் ஒலிக்கிறது.

சுதந்திரம் (Freedom)

சிந்தனை, பேச்சு, எழுத்து, நம்பிக்கை, மற்றும் வழிபாடு தொடர்பானவை. சுதந்திரத்தைப் பற்றித் தோற்றுவாய் குறிப்பிடுகின்றது. சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, எப்பொருள் பற்றியும் பேச எழுதுவதற்கான உரிமையே ஆகும். சிந்தனை கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. தன்னிறைவிற்கும், குடியரசு ஆட்சி திறம்பட நடைபெற இத்தகைய உரிமை மிகவும் அவசியமாகும். ஒரு மனிதருக்கு மதத்திலும், மனசாட்சிப்படி நடக்கவும் சுதந்திரம் தேவை. அரசு எல்லா மதங்களுக்கும் சமமான சுதந்திரத்தைக் கொடுக்கின்றது.

சகோதரத்துவம் Fraternity)

இது, தனிமனிதனது கண்ணியத்தையும் (Dignity) நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதாகும். தாய், தந்தை, மனைவியைத் தவிர அனைவரையும் உடன் பிறப்புக்களாகக் கருதும் மனப்பான்மையை தோற்றுவித்து, வேற்றுமைகளில் ஒற்றுமையைக் காணுதல் (Unity in Diversity) என்றும் உயரிய பண்பினை மாணவர்களிடம் வளர்த்தல் வேண்டும் இதன் மூலமே சமுதாயப்பிணக்குகள் இன்றி, அனைவரும் இணக்கமாக செயல்பட்டு ஜனநாயகத்திற்கு வலுசேர்க்க முடியும்.

தனிமனிதனின் கண்ணியத்தையும் (Dignity) நாட்டின் ஒற்றமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வது தொடர்பானவை.

சமத்துவம் ( Equality )

சமூக அந்தஸ்து மற்றும் வாய்ப்புகள் அவற்றை மேம்படுத்துவது தொடர்பானவை.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதே சமத்துவமாகும். சமமானவர்களிடம் உள்ள சமத்துவத்தையே இது குறிக்கிறது. அரசர்களுக்கும், பாமர மக்களுக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியாது. இவர்களுக்கிடையே வேறுபாடு காண்பது அரசியலமைப்பை மீறுவது ஆகாது. இதனால்தான் குடியாட்சியானது பெண்கள், குழந்தைகள், பிற்பட்டவர் ஆகியோருக்குச் சிறப்பு சலுகைகள் அளிக்கிறது.

மதச்சார்பின்மை (Secularism)

இந்தியாவிலுள்ள அனைவரும் தங்களது மதங்களை அவரவர் வழிபாட்டுக்கு இடையூறு இன்றி பின்பற்றலாம். எல்லா மதங்களும் சம மரியாதையுடன் நடத்தப்படுகிறது. மேலும் ஒருவரது மதத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.

வழிபாட்டுக் கூடங்களை எங்கும் அமைத்துக் கொண்டு வழிபடலாம். அரசு ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிடாது.

இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் : (Fundamental Rights of Indian Citizens)

இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஏழு அடிப்படை உரிமைகளாவன.

 1. சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை (Right to Equality)
 2. சுதந்திரத்துடன் இருக்கும் உரிமை (Right to freedom of speech and expression)
 3. சமய பின்பற்றலுக்கான உரிமை. (Right to Freedom of Religion)
 4. சுரண்டப்படுதலுக்கு எதிரான உரிமை (Right against Exploitation)
 5. கல்வி பெறும் உரிமை (Right to Education)
 6. பண்பாடு மற்றும் கல்விசார் உரிமைகள் (Cultural and Educational Rights )
 7. அரசியலமைப்பு ரீதியாக நிவாரணம் பெறும் உரிமை. ( Right to constitutional Remedies)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது குடிமக்கள் ஒவ்வொருவருக்கம் அடிப்படை உரிமைகளை கொடுத்துள்ளது. இவைகளை பின்வருமாறு விவரிக்கலாம்.

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் என்பது இந்தியத் திருநாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அவனது வாழ்க்கையின் மேன்மையைப் போற்றும் வகையில், தனிப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் நலம், பொதுநலன்கள் கருதி இந்த அடிப்படை உரிமைகளை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவைகளை பின்வருமாறு ஏழு வகைகளாகப் பிரிக்கலாம்.

சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை (Right to Equality) :

சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே சட்டரீதியாக அனைவரும் சமமாக பாதுகாக்கப்படவேண்டும். நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களின் சமத்துவ உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது. சமயம், சாதி, பால், இனம், நிறம் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்தக்கூடாது. பொதுப்பணி, வேலைவாய்ப்பு நியமனங்களில் சமவாய்ப்பு அளித்தல். தீண்டாமை ஒழிப்பு மூலம் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர்களின் நலனை பாதுகாத்தல்.

சுதந்திரத்துடன் இருக்கும் உரிமை (Right to Freedom of Speech and Expression)

ஒவ்வொருவருக்கும் நாட்டின் பொதுநலனுக்கு உட்பட்டு பின்வருமாறு அவர்களது சுதந்திரம் சார்ந்த அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கான உத்திரவாதம், அக்குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.

(1) பேச்சு சுதந்திரம்

(2) கருத்து சுதந்திரம்.

3) அமைதியாக ஒன்று கூடி செயல்பட சுதந்திரம்.

(4) கட்சிகள், கழகங்கள், சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம்.

(5) தனக்கு பிடித்த சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய சுதந்திரம்.

(6) கட்டுப்பாடுகளின்றி நாட்டின் எந்த பகுதிக்கு செல்லவும் அங்கு வசிக்கவும் சுதந்திரம்.

சமய பின்பற்றலுக்கான உரிமை (Right to Freedom of Religion)

நமது அரசியலமைப்பு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. எல்லா சமயங்களும் ஒரே மாதிரியாக கருதப்பட வேண்டும்.

இந்தியா சமய சார்பற்ற நாடு என்பதால் அரசு என்பது மனிதரிடையே உள்ள உறவே தவிர மனிதனுக்கும் கடவுளுக்கும் அல்ல என்பதனை வலியுறுத்துகிறது.

அனைத்து சமய அமைப்புகளும் தங்களது விவகாரங்களை நிர்வகித்துக் கொள்ள சுதந்திரம் வழங்கப்படுள்ளது. பிரிவு 25-ல் மதத்தைப் பின்பற்றி, அதனை பரப்புவதற்கான சுதந்திரம் உண்டு என்று உத்திரவாதம் அளிக்கிறது.

மேலும், மதச் சார்பான நிறுவனங்களை நிறுவவும், நடத்தவும், தருமப்பணிகளை மேற்கொள்ளவும் உறுதியளிக்கிறது. சமயத்தின் பராமரிப்பிற்கும், வரி செலுத்துவதற்கும் பிரிவு 27 உரிமையை வழங்குகிறது. அரசியலமைப்பு பிரிவு 28 கல்வி நிறுவனங்களில் எந்த விதமான சமயப் போதனைகளையோ அல்லது வழிபாட்டையோ மதநிறுவனங்களைத் தவிர அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பின்பற்றக் கூடாது.

சுரண்டப்படுதலுக்கு எதிரான உரிமை (Right Against Exploitation)

ஒவ்வொருவரும் பிறரால் சுரண்டப்படாமல் இருப்பதற்காக பின்வரும் உரிமைகள் இருக்கின்றன.

(1) ஏழை அல்லது பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருப்பவர்களது உழைப்பு சுரண்டுவதற்கு எதிரான உரிமை.

(2) ஆண் மற்றும் பெண்களுக்கு சம ஊதிய உரிமை.

(3) பிறரது பொருளை கவருவதற்கு எதிரான உரிமை.

4) கொத்தடிமை ஒழிப்பு

(5) 14 வயதிக்கு கீழ் உள்ள குழந்தைகளை, குழந்தை தொழிலாளர்களாக தொழிற்சாலை, சுரங்கத்தொழில், பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை தடை செய்ய பிரிவு 24 வழி செய்கிறது.

கல்வி பெறும் உரிமை (Right to Education)

கல்விபெறும் உரிமை, அண்மைக்காலத்தில் அடிப்படை உரிமைகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் கல்விபெறுதல் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (Cultural and Educational Rights)

இந்தியா பன்மொழிகள், எழுத்துக்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட நாடு ஆகவே, அரசியலமைப்பு பிரிவு 29-ன் படி சிறுபான்மையினர் தங்களது மொழி எழுத்து பண்பாடு, கல்வியை பாதுக்காக உரிமை பெற்றுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரிவு 30-ன் படி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.

அரசியலமைப்பு ரீதியாக நிவாரணம் பெறும் உரிமை. (Right to Constitutional Remedies)

நமது அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும்போது நேரடியாக மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து பாதுகாப்பினைப் பெற உதவுகிறது.

மேற்கண்டவாறு அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கலாம்.

அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)

1976 ஆம் ஆண்டின் நாற்பத்து இரண்டாம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக இந்திய அரசியலமைப்பில் புதிதாகப் பகுதி IV A சேர்க்கப்பட்டது. இதன் கீழ் பிரிவு 51A இந்திய குடிமக்களுக்குரிய பத்து அடிப்படைக் கடமைகளை (Fundamental Duties) எடுத்துரைக்கிறது. இவை ஸ்வரன் சிங் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசியல் சாசனம் விதித்துள்ள குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties of Indian Citizens) அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடிப்படைக் கடமைகளாக கீழ்க்கண்டவை விதிக்கப்பட்டுள்ளன.

 1. இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடத்தல், அதன் கொள்கைகள், சட்டதிட்டங்கள், தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மதித்தல்.
 2. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய உயர் சிந்தனைகளைப் போற்றி அவற்றை பின்பற்றுதல்.
 3. நாட்டின், இறையாண்மையையும், தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் போற்றிப் பாதுகாத்தல்.
 4. நாட்டினைப் பாதுகாத்திட தேசியப் பணிக்கு அழைக்கப்படும்போது, அதனை ஏற்று மனமுவந்து பணியாற்றுதல்.
 5. மதம், மொழி, வட்டார வேறுபாடுகளின்றி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் இடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்துதல்.
 6. பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் பழக்கங்களை கைவிடல்.
 7. பல்வேறு பண்பாடுகள் இணைந்த வளம் மிக்க நமது பாரம்பரியத்தை மதித்துப் பாதுகாத்தல்.
 8. காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாத்து மேம்படுத்துதல்.
 9. அறிவியல் மனப்பான்மை , மனிதநேயம், ஆராய்ந்தறியும் வேட்கை, மறுமலர்ச்சியில் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளல்.
 10. பொது சொத்துக்களைப் பாதுகாத்தல், வன்முறையை விட்டொழித்தலில் உறுதியாக இருத்தல்.
 11. அனைத்துத் துறைகளிலும் தனிநபராகவும், பிறருடன் கூட்டாகவும் செயல்பட்டு தனிச்சிறப்புமிக்க நிலையை எய்திட முயற்சி மேற்கொள்ளுதல்.
 12. குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர் தத்தம் குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயது வரை முறையான கல்வி பெற தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்.

அரசின் கொள்கையை வழிநடத்தும் நெறிமுறைகளும் கல்வியும் (Directive Principles of State Policy and Education)

இந்திய அரசியலமைப்பில் பிரிவு 4 இல் மத்திய அரசும், மாநில அரசுகளும் நம் நாட்டில் நேர்மையான சமுதாயத்தை நிறுவுவதற்கு, பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசானது சட்டம் இயற்றும் போது இவ்வழிகாட்டு நெறிமுறைகளை மனதில் கொண்டே சட்டம் இயற்ற வேண்டும். அந்த நெறிமுறைகள் சட்டப்பிரிவு 37 இல் குறிப்பிட்டுள்ளபடி, இந்திய அரசு "குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி” வழிவகை செய்துள்ளது.

45 ஆவது சட்டப்பிரிவில் அரசியல் சாசனம் 14 வயதுக்குப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய தொடக்கக் கல்வி வழங்கிட வலியுறுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளும் பலவிதமான கல்விக் கொள்கைகள் மூலம் பல முயற்சிகளை எடுத்துவருகின்றன.

அரசியலமைப்பு அளிப்புகள்

அரசியலமைப்பு தோற்றுவாயில் பொதிந்துள்ள கடமைகளை நிறைவேற்ற அரசியலமைப்பு பிரிவுகள் தொடர்பான கூறுகள் அளிக்கப்பட்டுள்ளன. பின்வரும் பகுதிகளில் இந்திய அரசியலமைப்பு அளிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

1) வேலை உரிமை

பிரிவு 41-ன் படி நாட்டின் பொருளாதாரத்திறன் எல்லைகளுக்கு உட்பட்டு வேலை உரிமையையும் கல்வி உரிமையையும் வேலை இல்லாதவர், மூத்தவர், நோயுற்றவர் முடியாதவர் ஆகியோருக்கு அரசின் பொது உதவியும் திறம்பட அளிக்க வேண்டும்.

பிரிவு 42-ன் மனிதாபிமான சூழலில் வேலை செய்வது, பேறுகால விடுப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவு 43-ன் படி எல்லாத்தொழிலாளர்களுக்கும் உழைப்பிற்கான கூலி, வேலைக்குரிய சூழ்நிலை, நல்ல வாழ்க்கை தர உத்தரவாதம், ஓய்வை நுகர்தல், சமூகப் பண்பாட்டு வாய்ப்புகளை நுகர்தல் ஆகியவற்றை பொருத்தமான சட்டங்கள் இயற்றியோ பொருளாதார அமைப்புகள் கொண்டோ வழங்கவேண்டும்.

ii) சமத்துவ உரிமை

இந்திய அரசிலமைப்புப் பிரிவுகள் 14 முதல் 18 வரை சமத்துவத்திற்கான உரிமைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களுக்குத் சமூக அரசியல் சமத்துவத்தை இந்த உரிமை அளிக்கிறது.

iIi) இலவச கட்டாயக்கல்வி

நாட்டின் கொள்கையில் நெறிசெய் கோட்பாட்டின் கீழ் பிரிவு 45ன் கூற்று பின்வருமாறு.

இந்திய அரசியலைப்பு தொடங்கியதிலிருந்து பத்து ஆண்டுக்குள் எல்லா குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்க முயற்சி செய்ய வேண்டும்.

iv) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 29 மற்றும் பிரிவு 30 சிறுபான்மையினருக்கு, அவர்கள் மதம் அல்லது மொழியின் அடிப்படையில் தாம் விரும்பும் கல்வி கூடத்தை நிறுவி நிர்வகிக்கும் கல்வி உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கிறது.

பிரிவு 29-ன் கூற்று:

இந்திய எல்லைக்குள் அல்லது ஏதாவது ஒரு பகுதிக்குள் வாழும் குடிமக்கள், அவர்களுக்கென உருவாக்கப்பட்ட மொழி, வரிவடிவம், பண்பாடு இருந்தால் அவற்றைத் தொடரும் உரிமை அவர்களுக்கு உண்டு.

v) நலிந்த பிரிவினருக்கு உதவி.

நலிந்த பிரிவினரின் கல்வித் தேவைகளைப் பிரிவு 15, 17, 46 காக்கின்றன. அதாவது சமூகம், கல்வியில் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடி இன மக்களின் தேவைகள் காக்கப்படுகின்றன.

vi) பெண்கல்வி

பிரிவு 15(1) பாலின அடிப்படையில் எந்தவொரு குடிமகனையோ, குடிமகளையோ பார்த்து வேறுபடுத்தக்கூடாது என்கிறது.

அரசியலமைப்பும் கல்வியும்

அரசியலமைப்பின் அளிப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளைச் சாரும். சிலவற்றில் இவை தனித்தனியாகவும் சிலவற்றில் இவை இணைந்தும் செயல்படுகின்றன.

1) மையப்பட்டியல் உள்ளவை:

பதிவு 62,63,64,65.

மாநிலப்பட்டியல்: 66 பொருள்களில் இரண்டு கல்வி சார்ந்தவை. இவை இரண்டும் மாநிலத்திற்கு மிக அதிக அளவில் சுதந்திரம் அளிக்கின்றன.

இணைந்தப் பட்டியல்: 47 பொருள்களில் பின்வரும் ஆறு பதிவுகள் நேர்முகமாகவோ, அல்லது மறைமுகமாகவோ கல்வியுடன் தொடர்புடையவை.

பதிவு: 20 பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல்.

பதிவு: 25 வாழ்க்கை தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி.

பதிவு: 26 சட்டம், இயந்திரவியல் மற்றும் தொழில்கள்.

பதிவு: 27 அறக்கட்டளை நிறுவனங்கள்.

பதிவு: 39 செய்தித்தாள், நூலகங்கள், அச்சகங்கள்.

பதிவு: 40 தொல்பொருள் இடங்கள்.

மத்திய அரசின் பங்கு

கல்வி சம்மந்தமான மத்திய அரசின் பங்கு பின்வருமாறு:

1) திட்டமிடுதல்

2) ஒழுங்கமைப்பு

3) நெறிவுறுத்தல்

4) கட்டுப்பாடு

5) கல்வி வாய்ப்புகளில் சமத்துவம்

6) முன்னோடி செயல்திட்டங்கள்

7) அனைத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்தல்.

8) மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலும் கல்வி நிர்வாகம்.

மாநில அரசின் செயல்பாடுகள்

 1. நிதி
 2. சட்டமியற்றல்
 3. மேற்பார்வையும், ஆய்வும்
 4. ஆசிரியர்களைப் புதிதாகத் தேர்ந்தெடுத்தல்.
 5. கலைத்திட்டம் வகுத்தளித்தல்.
 6. உருவாக்கப்பட்ட கலைத்திட்டத்தை ஒட்டிய பாடபுத்தகங்களை மாநிலம் முழுவதற்கும் உருவாக்கி பயன்படுத்த உத்தரவிடுகிறது. பாடநூல்களை தயாரிப்பதும் அவற்றை வழங்குவதும் மாநில அரசின் முக்கிய பொறுப்பாகும்.
 7. உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கல்வி பொறுப்பை மாற்றிய போதும் மாநில அரசு இது பற்றிய பல பொறுப்புகளைத் தானே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
 8. ஒற்றுமையும் ஒருங்கமைப்பும் ஏற்படுத்த ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு முழுமையாகச் செயல்பட வேண்டும்.
 9. பணியாளர்களுக்குப் பயிற்சி மேற்பார்வை, ஆராய்ச்சி முன்னோடிச் செயல்திட்டங்கள் மூலம் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும்.
 10. ஏழ்மையான மிக பின் தங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து கல்வி வாய்ப்புக்களை சமப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் (Challenges to fulfil the Constitutional obligations)

ஓரே மாதிரி நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பாகுபாடு இன்றி நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் மனித உரிமை ஆணையம் மூலம் முறையிட்டு நீதி கிடைக்கச் செய்தல்.

அனைவரையும் ஓரே மாதிரியாக சமமாக மதிக்க வேண்டும். சமத்துவம் இருந்தால் தான் சுதந்திரம் ஏற்படும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் அனைவரையும் சமமாக மதிக்கும் எண்ணம் குறைவாகவே உள்ளது.

சாதி, மத, இனமொழி அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் நிகழ்கின்றன. இதை நிறைவேற்றுவது இன்றளவும் சவாலாகவே உள்ளது.

இந்திய நாட்டில் உள்ளவர்கள் எந்த மாநிலத்திலும் சகல உரிமைகளுடன் வாழும் சுதந்திரம் உண்டு என அரசியலமைப்புக் கூறுகிறது. ஆனால் பல்வேறு வடிவங்களில் மாநிலங்களுக்குமிடையே வாழ்பவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

அரசியல் சாசனத்தில் கண்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் எதிர்படும் சவால்கள்

சுதந்திரம்

அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 14, குடிமக்களின் சுதந்திர உரிமைகளை சட்ட பூர்வமாக்கியுள்ளது அவையாவன:

பேச்சுரிமை, கருத்துகளை வெளியிடும் உரிமை. ஆயுதங்களின்றி அமைதியாக ஒன்று கூடும் உரிமை. சுரங்கங்களையும், தொழிற்சாலைகளையும் அமைத்துக் கொள்ளும் உரிமை.

இந்தியாவில் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை. இந்தியாவில் எப்பகுதியில் வேண்டுமானாலும் தங்கவோ குடியேறி வசித்திடவோ, சொத்துக்கள் வாங்கவோ உள்ள உரிமை.

எந்த உயர்தொழில், சிறுவணிகம், வாணிபம் ஆகியவற்றையும் மேற்க்கொள்ளும் உரிமை.

நீதி

நீதி மன்றங்கள் அணுகி தமது குறைகளைப் போக்கிக் கொள்வது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. நீதி கிடைப்பதிலும் பெருத்த கால தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம், மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான நீதிமன்றங்களை ஏற்படுத்திட, அரசின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை .

தவிர நீதிமன்றங்களில் பணியிட மாற்றிடும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகளின் பதவிகள் உடனடியாக நிரப்பப்படாததால் 50%க்கும் அதிகமான நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக நீதிமன்றங்களில் பல்லாயிரம் வழக்குகள் பல்லாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கின்றன. செல்வாக்குடையோர் தொடுக்கும் வழக்குகளே முதன்மை பெறுகின்றன. தாமதமாக கிடைக்கும் நீதி, நீதிமறுக்கப்பட்டதாக கொள்ளப்பட வேண்டும்.

சமத்துவம்:

சட்டத்தின் முன் எல்லோரும் சமம். இனம், சாதி, மதம், மொழி, பாலினம் போன்ற எக்காரணங்களாலும் பாகுபாடு காட்டக்கூடாது என்பது சட்டப்பிரிவு 14. எனினும் பாலினம் சார்ந்த வேறுபாடுகளை களைய முடியவில்லை. பெண் சிசுக்கொலை பெருமளவு தடுக்கப்பட்டுள்ள போதிலும் வன்கொடுமைச் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் பெண்கள் பலாக்காரம் செய்யப்படுதலும், கௌரவக்கொலைகள் நிகழ்த்தப்படுவதும் குறைந்தபாடில்லை. வேலைவாய்ப்பு, ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றிலும் ஆண் - பெண் பாகுபாடு இன்றும் நீடிக்கிறது.

வழிபாட்டுத்தலங்களிலும், திருமணம், மனமுறிவு, போன்ற சமூக மரபுகளிலும் அரசு பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு பழமை விரும்பிகளும், சமயத் தலைவர்களும் தடைக்கற்களாக உள்ளனர். தீண்டாமை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தபட்ட போதும் சமூகத்தில் தீண்டாமை ஒழியவில்லை. தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட வண்ணம் உள்ளது.

சகோதரத்துவம்:

மதத்தால், மொழியால் சாதிகளால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் இந்திய சமுதாயம் பிளவுபட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சக்திகள் வலுபெற்றுள்ளன. குறுகிய நோக்கமும் சுயநலமற்ற தலைவர்கள் குறைந்து போனதால் மக்களை பிரிவினைச் சக்திகளிடமிருந்து மீட்க முடியவில்லை. சிறிய வன்முறைச் செயல்கள் கூட சாதி, மத, மொழிச்சாயம் பூசப்பட்டு கலகங்களாக மாறுகின்றன.

இந்தியா வாழ்ந்தால் தான் நாம் வாழ முடியும். இந்தியா வீழ்ந்தால் நாம் அழிவோம் என்கிற தெளிவு மக்களிடம் குறைவாக இருப்பதால், சகோதர உணர்வு வளர்வது பாதிக்கப்படுகிறது.

கல்வி பெறும் உரிமைச்சட்டம் (2009)

இந்திய அரசியலமைப்புச்சட்டம் 21 ஏ) ன் கீழ் இயற்றப்பட்ட சட்டம். கல்வி பெறும் உரிமைச் சட்டமாகும். 2009, ஆகஸ்டு 4-ம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2010, ஏப்ரல் 1 அன்று கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றியுள்ள 135 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது.

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை உள்ளது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் முக்கிய கூறுகள்:

 1. கல்வி பெறும் உரிமை சட்டத்தின் படி கல்வியானது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.
 2. 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை உள்ளது.
 3. கட்டாயக்கல்வி பெறும் உரிமை என்பது 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், தக்கவைத்தல் ஆகியவை கட்டாயமாகும்.
 4. இலவசக்கல்வி என்பது அரசு தொடக்கக் கல்வியை இலவசாக வழங்குதல்.
 5. கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள், கிராமக் கல்விக் குழு, பெற்றோரின் கடமையை வலியுறுத்துகிறது.
 6. இது மாணவ ஆசிரியர் விகிதங்கள், கட்டிடங்கள், பள்ளி, வேலை நாட்கள் போன்றவற்றின் விதிமுறைகளை குறிப்பிடுகிறது.
 7. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர்கள், தேவையான பயிற்சிகள் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
 8. பள்ளி மாணவர்க்கான நுழைவுத் தேர்வுகள், ஆசிரியர்க்கான தனியார் வகுப்புக்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது.
 9. மதிப்புக்களை உள்ளடக்கிய கலைத்திட்டம் குழந்தையின் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் எனக் கூறுகிறது

முடிவுரை

இவ்வலகினில் இந்திய அரசியல் சாசன சட்டத் தொகுப்பின் அமைப்பு இந்திய அரசியல் சாசன முகப்புரையில் காணப்படும் மதிப்புகள், இந்திய அரசியல் சாசனம் மூத்த குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், இந்திய அரசியல் சாசனத்தில் விதித்துள்ள குடிமக்களின் அடிப்படைக் கடமைகள், அரசியல் சாசனத்தில் கண்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் சவால்கள், கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.12
Dhanamuthy Oct 15, 2018 10:28 AM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top