பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / கல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்

கல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

கல்வி கற்பதில் சம உரிமை அனைவருக்கும் உண்டு. கல்வியில் சமவாய்ப்புகள் என்பது சாதி, சமய, இன, மொழி, பாலினம் போன்ற வேற்றுமைகளால் பாதிக்கப்படாமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கல்வி பெறுதல் ஆகும்.

சமூக சமவாய்ப்பின்மையின் வகைகள்

பாலின சமவாய்ப்பின்மை

பாலின வேறுபாடு குறிப்பாக பெண்களின் சமூக நிலை, கல்வியாளர்களுக்கு இடையே மட்டுமல்ல, அரசு நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் போன்ற உலக அமைப்புகளால் விவாதிக்கப்படும் ஓர் முக்கிய பிரச்சினையாக உள்ளது. பிறப்பின்போது ஆண், பெண் ஆகிய இருபாலரும் சமஉரிமை பெற்றிருந்தாலும் பெண்ணாகப் பிறந்தவளுக்குப் பல்வேறு துன்பங்கள் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படுகின்றன. கல்வி உரிமை ஆண்களுக்கு வழங்கப்படுவது போல் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சொத்தில் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஊதியம் குறைவாக வழங்கப்பட்டு வந்தது. இவை அனைத்தும் பாலின சமவாய்ப்பின்மையை காட்டுகிறது.

இன மற்றும் மரபு சமவாய்ப்பின்மை

இனம் என்பதற்கு எந்த உயிரியல் தொடர்பும் இல்லாத போதிலும், அது சமூக நிலையை கட்டுபடுத்தும் காரணியாக உள்ளது. இந்த சமவாய்ப்பின்மை ஊதியம் வழங்கும் முறையில் வெளிப்படுத்தப்படுகிறது. இது போன்ற இன வேறுபாடு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை குறைத்துவிடுகிறது. இதனால் எண்ணிக்கை குறைவாக உள்ள சமூகத்தினர் பாகுபடுத்தப்பட்ட செயல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சாதி சமவாய்ப்பின்மை

சாதி சமவாய்ப்பின்மை பரம்பரையின் அடிப்படையில் அமைந்த பாகுபாடு நிறைந்த அமைப்பு ஆகும். இந்த சாதி ஒருவரின் வாழ்க்கை நிலை, தொழில் வாய்ப்புகள் இவற்றை தீர்மானிக்கின்றது. தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவுகள் நாளடைவில் பிறப்பின் அடிப்படையில் மாறத் தொடங்கியது. இந்த சாதி அமைப்பினால் ஒரு இனத்திற்குள் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற வேற்றுமை எழுகிறது.

சமூக சமவாய்ப்பின்மையை நீக்க உதவும் கல்வி

இன்றைய அறிவு நிறைந்த உலகளாவிய சமுதாயத்தில் கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அது ஒரு நாடு தன் பொருளாதார உற்பத்தியை முன்னேற்றவும் சமூக சமத்துவ நிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. திறன்மிக்க தலைவர்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. மதிப்பு நிறைந்த பொருள்களை உருவாக்கத் தேவையான ஆராய்ச்சி, திறன், அறிவு இவற்றை ஏற்படுத்த கல்வி பயன்படுகிறது.

 1. வியாபாரம், தொழில்கள் இவற்றிற்கு தேவையான தொழிற்பயிற்சி அளித்தல்.
 2. பகுதிகளின் தேவைக்கேற்ற அறிவு மற்றும் திறன் கொண்ட பணியாளர்களை அமர்த்துதல்
 3. உலகளவில் போட்டி போடக்கூடிய ஆராய்ச்சி அறிவு உடையவரை உருவாக்குதல்.

கல்விக்கான உரிமை உலகளாவியது. அதில், எந்த ஒரு ஒடுக்கப்படுதலோ பாரபட்சமோ இருத்தல் கூடாது. அனைவரும் கல்வி பெற, வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் சமமான வாய்ப்பை உறுதியாக அளிப்பதில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுதாயம்

சமூக, பொருளாதார மற்றும் பிற காரணங்களால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக கருதப்படுகின்றனர்.

ஒடுக்கப்படுதலுக்கான காரணங்கள்

உலகமயமாதல்

உலகமயமாதல் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து சமத்துவத்தை பாதித்து வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரித்து ஒடுக்கப்படுதலை மேலும் அதிகரித்துள்ளது.

இடப்பெயற்சி

அரசின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் வளர்ந்துவரும் வளர்ச்சி திட்டங்கள் உயர்ந்த அளவில் ஏழை, பழங்குடி மற்றும் வலுவற்றோரை இடம் விட்டு இடம் மாறிச் செல்ல வைத்துள்ளது. இது ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது.

பேரழிவுகள்

இயற்கை மற்றும் எதிர்பாராத பேரழிவுகள் உலகெங்கும் நிகழக்கூடிய வளர்ச்சிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சலுகைகள்

 1. விடுதிகளில் தங்கிப் பயில வசதிகள் வழங்குதல்.
 2. பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்பு மற்றும் நிலமற்றவர்களுக்கு அரசு நிலம் வழங்குதல்.
 3. அரசுப் பணிகளில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்குதல்.
 4. கல்வியில் சம வாய்ப்பு வழங்குதல்.

தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி

இந்தியாவில் கிராம, நகர்ப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் கட்டாயமாகப் பதினான்கு வயது வரை கல்வி அளிக்கப்படும். துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பிலிருந்தே உதவித் தொகை அளிக்கப்படும். அதுமட்டுமல்லாது அவர்கள் பள்ளியிலிருந்து விடுபடாதவாறும் கண்காணித்துக் கொள்ளப்படும். எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். இந்தக் குறிக்கோளை அடைந்திடத் தேவையான நிதியை அளித்துப் பல்வேறு செயல் திட்டங்களை அரசு அளித்து வருகிறது. இதன் காரணமாக எழுந்ததுதான் பொதுப் பள்ளிமுறை அமைப்பு (Common School System). இதன் அடிப்படையில்தான் 10+2+3 என்ற கல்விமுறை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் அளிக்கப்பட்டது.

பழங்குடியினருக்கான கல்வி

பல நூற்றாண்டுகளாகத் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளாது வாழ்ந்து வரும் பழங்குடியினர் சில சிறப்பு இயல்புகளைப் பெற்றுள்ளனர். பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குழுவாக வாழ்தல், பொதுவான பெயர், ஓரிடத்தில் வாழ்தல், தங்கள் திருமணம் மற்றும் தொழில் போன்றவற்றில் குறிப்பிட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்தல் போன்ற பல சிறப்புகள் பழங்குடியினரிடம் காணப்படுகின்றன.

 1. இவர்கள் வாழும் பகுதிகளில் தொடக்கப்பள்ளி ஏற்படுத்த முன்னுரிமை, கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவை செய்தல் வேண்டும்
 2. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படும் கலைத்திட்டமும், கற்பித்தல் நூல்களும், தொடக்கத்தில் அவர்தம் மொழியிலேயே அமைந்திடல் வேண்டும். பிறகே வட்டார மொழிக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
 3. அவர்களது சிறப்புத் தேவைகளையும், வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் உருவாக்குதல் வேண்டும்.

முடிவுரை

பெரும்பாலான குழந்தைகள் இன்றும் கல்வியிலிருந்து ஒடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வில் பங்குகொள்ள முடியவில்லை. தற்போதுள்ள கல்வித் திட்டங்கள் ஒடுக்கிவைக்கப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் தேவைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளது. சமமின்மையின் அடிப்படை காரணங்களை அறிந்து, சம வாய்ப்புகளை நல்கும் முழுமையான கல்வித் திட்டங்களை அளித்தல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top