பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கீழ்நோக்கி பரவும் கல்வி முறை

கீழ்நோக்கி பரவும் கல்வி முறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் தங்கள் சமயத்தைப்பரப்ப சிறந்த வழியாக ஆங்கில மொழி வழிக் கல்வியைக் கொண்டனர். இந்திய மேட்டுக்குடிமக்கள் சமுதாயத்தில் உயர் பொருளாதாரம், பதவித் தகுதியில் உள்ளவர்களின் கொள்கையை அப்படியே பின்பற்றும் இயல்பு உள்ளவர்களாய் இருந்தனர். இதனைக் காட்டி ஆங்கிலேயர்கள் இந்தியர் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதினர்.

செயல் வணிக நோக்குடையோர் யாவரே ஆயினும் இந்நாட்டின் கல்வியை நிர்வகிக்க ஏற்றவர்களல்லர் - என்ற படிப்பினையை இப்பாடப்பொருள் வழி ஒத்த கூறுகளையும் “உயர் வகுப்பினருக்கு மட்டும் கல்வி அளித்தாலே போதும். பின்னர் அவர்கள் மூலமாகக் கல்வி தானே பரவும்” இதுவே கீழ்நோக்கிப் பரவும் கல்வி எனப்பட்டது. இம்முறை 1870 வரை ஆங்கில அரசின் கொள்கையாக இருந்தது. ஆங்கிலேய அரசு பின்பற்றிய இந்த ஆட்சி நீட்டிப்பு உத்தி இந்தியர் ஒற்றுமைக்கு குலைப்பு, பிரித்தாளும் சூழ்ச்சி, இந்தியர்களுக்கு தேசாபிமானம் வந்துவிடக் கூடாது இந்தியர்களை பிரித்தாள வேண்டும் என்ற வஞ்சகமான கொள்கையால் ஏற்பட்டதாகும். இதனால் இந்தியாவில் சமுதாயச் சிக்கல்களும், பல பின்னடைவுகளும் ஏற்பட்டன.

சர் சார்லஸ் உட் என்பாரின் கல்வி அறிக்கை (1854)

இவ்வறிக்கை இந்தியர்க்குக் கல்வியை அளித்து அவர்களை விரைவில் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்குடையதாய் அமைந்தது. மெக்காலேயின் குறுகிய நோக்கால் விளைந்த தவறுகளைச் சரி செய்யும் நோக்கில் இது அமைந்தது. இந்தியருக்குக் கல்வி வழங்கி, அவர் தம் நன்மைகளைப் பாதுகாத்துத் தர வேண்டிய அரசின் கடமையை இது வலியுறுத்தியது.

ஐரோப்பிய நாடுகளில் படிப்பதைப் போன்ற அறிவியலும், தத்துவக் கோட்பாடுகளும், கலைப்பாடங்களும் இந்தியருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்திய மொழிகள் தொடர்ந்து கற்றுத் தரப்படவும் ஆதரவு தந்தது. வட்டார மொழிகளில் தொடக்கப்பள்ளி நிறுவப்பட ஆதரவு அளிக்கப்பட்டது. 1857ல் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. முதலில் இப்பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்தி சான்றிதழ்களை வழங்கும் பணியைச் செய்தன. இப்பல்கலைக்கழகங்களோடு இணைந்த நிறுவனங்களின் பயின்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்தி சான்றிதழ்களையும், பட்டங்களையும் வழங்கின. 1600ல் வணிக நிறுவனங்களாக இந்தியாவிற்கு வந்து இங்கு சிறுகச் சிறுகத்தன்னை வலுப்படுத்திக் கொண்டு இங்கிருந்த பலநிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்த நாட்டின் செல்வத்தைச் சுரண்டி பல அடக்குமுறை உத்திகளைக் கையாண்டு கல்வி பற்றிய பொருத்தமான பல நன்மைகளைச் செய்ய வேண்டியிருந்த நிலையிலும் ஆங்கிலேய அரசினர் பல தந்திரங்களைக் கையாண்டு கல்வி வழியிலான சுதந்திர உடனடித் தீர்வுகளைத் தள்ளிப் போட்டனர்.

இந்நிலையில் சுமார் 254 ஆண்டுகள் சென்றபின் வந்த உட்ஸ் அறிக்கை உண்மையிலேயே நல்லெண்ண அடிப்படையில் அமைந்து ஒரு விரும்பத்தக்க கல்வி மாற்றம் உண்டாகி வளர ஏதுவாக இருந்தது என்பதொரு குறிப்பிடத்தக்க உண்மை. அடுத்தடுத்துப் பின்வரும் அறிக்கைகளும் பரிந்துரைகளும் இந்தியா சுதந்திரம் பெறும் வரையிலும் இடம் பெற்றன. 1882ல் ஹண்டர் தலைமையிலான அறிக்கை 1899-1905 கர்சன் காலக் கல்வி முன்னேற்றங்கள் 1917 சாட்லர் குழுவின் பரிந்துரைகள் 1924 ஹர்டாக் குழு அறிக்கை 1937 காந்தியடிகளின் வார்தா கல்விமுறை 1944 சார்ஜண்ட் குழுவின் பரிந்துரைகள் செயல் சமயச் சார்புடைய கல்வி-ஆன்மீகக் கல்வி ஒப்பிடுக. இக்கோட்பாட்டை உலகுக்குப் புகட்ட இந்தியக் கல்விக் கொள்கையின் பாரம்பரியக் கல்வித் தகுதியை நிறுவுக.

இந்தியாவின் சமரசக் கல்வித் தத்துவம்

ஆசிரியர்களாவதற்குக் கற்றுத்தேற வேண்டிய அறிவுப் புலங்களில் தத்துவங்களும், கல்வித்தத்துவ அணுகுமுறையும் முக்கியமானதொன்றாகும். மருத்துவக்கல்வி பெறுபவர்களுக்கு உடற்கூறியலறிவும், உயிர்ம வேதியலறிவும் எவ்வளவு அடிப்படையானவைகளோ அவ்வளவு முக்கியமானவைகளாக மெய்ப்பொருளியறிவும் அது சார்ந்த அணுகுமுறையும் அடிப்படையாக ஆசிரியர் கல்வியில் அமைகிறது எனலாம். கல்வித்தத்துவ அறிவுத் தெளிவற்ற ஒருவர் கல்வி நுட்பமறிந்தவராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் கல்வியாளராக ஆசிரியராக இருத்தல் இயலுவதில்லை. ஆசிரியர்களாக வாழ்நாள் நெடுகிலும் பொருந்திப் பணியாற்றத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவரும் இந்தியாவின் கல்வி அணுகு முறையில் குறிப்பிட்ட கல்வித் தத்துவ அறிஞர்களின் தாக்கத்தை எடுத்தாளுதல் பற்றி இங்கு அறிவோம்.

  • பரவலாகப் பலநாடுகளின் கல்வித் தத்துவங்களை ஆய்கையில் கற்றறிவதற்கு ஏற்ற வகையில் அவற்றைக் கருத்தியல் கொள்கை, உண்மையியல் கொள்கை, இயற்கையியல் கொள்கை, பயனியல் கொள்கை என நான்காக வகுத்தளித்துள்ளனர்.
  • இந்நான்கும் ஒன்றுக்கொன்று முழுக்க முழுக்க வேறுபட்டவை அல்ல. இந்நான்கிலுமே ஒருநாட்டின் தன்மைக்கு ஏற்றவைகளும் ஒத்தவைகளும் இருத்தல் இயல்பே.

எனவே இந்திய நாட்டுக் கல்வி அறிஞர்கள் எந்த ஒரு கொள்கையையும் அப்படியே தனியாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்துக் கோட்பாடுகளிலுமுள்ள ஏற்புடைக் கூறுகளைத் திரட்டி சமரசக் கல்விக் கொள்கையாகப் பறை சாற்றியுள்ளனர். ஆயினும் தொன்மை தொட்டே இந்தியக் கல்வித்தத்துவங்கள் உயர்கருத்தியல், உன்னதக் கோட்பாட்டியல் இறைநிலை எய்துதல் போன்ற விழுமய நோக்கங்களைக் கொண்டதாக இருந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடற்பாலது.

ஒருநாட்டின் எழுச்சியைத் தீர்மானிக்கும் காரணிகல்வி-கல்வியை திசைமாற்றம் வகைமாற்றம் செய்வதன் வாயிலாக அதன் முன்னேற்றத்தை மாற்றி அமைத்தல் எளிது.

ஜின் ஜேக்கஸ் ரூசோ (1712-1778) கல்வியில் இயற்கைக் கொள்கை

கருத்தியல் கொள்கையைப் போலவே மிகவும் தொன்மையானது. கல்வியின் நோக்கங்கள், இலட்சியங்கள், வழிமுறைகள், பயிற்றுமுறைகள் கலைத்திட்டக் கூறுகள், பள்ளிமேலாண்மை முதலிய அனைத்துக் கூறுபாடுகளும் இயற்கையின் இயல்புகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது இயற்கைக் கோட்பாடு (Naturalism) எனப்படுகிறது. இக்கோட்பாட்டாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் பிரான்சு நாட்டறிஞர் ரூசோ ஆவார்.

இவர் ஐரோப்பாவின் அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை விளைவித்த பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமான மக்களுரிமை வேட்பார்வம்மிக்க தத்துவஞானியும் அரசியல் தத்துவ விற்பன்னரும் ஆவார். இவர் எழுதிய நூல்களில் சமூக ஒப்பந்தம் (Social Contract) எமிலி (Emile) என்பன மிகவும் முக்கியமானவை. எமிலி என்னும் நூல் இயற்கை இயலோடு ஒன்றிய கல்விக் கோட்பாடுகளை விளக்கியுரைக்கும் புதின வடிவிலான நூல் ஆகும். இந்நூலில் எமிலி என்னும் கற்பனைப் பாத்திரமான ஒரு குழந்தையின் குழவிப் பருவம், பாலப்பருவம், வளர்இளம் பருவம், இளமைப்பருவம், திருமணவாழ்வு ஆகிய ஐந்து படிநிலைகளில் தமது கல்விக் கருத்துக்களை விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

ரூசோவின் கல்விக் கருத்துக்கள்

  • இயற்கையால் படைக்கப்படுகின்ற அனைத்தும் நல்லவையே. ஆனால் அவைகள் மனிதர்களின் கைகளில் சீரழிகின்றன. மனிதனின் நடைமுறைகளும், விருப்பங்களும்
  • இயற்கையைச் சீரழிப்பனவாகவே உள்ளன. மாறாக இயற்கையை அணுகி, ஒன்றி இருந்து, அதனை உற்றுநோக்கிப் புரிந்துகொண்டு, அதனிடம் படிப்பினைகளைப் பெற்று, இயற்கையோடு ஒத்திசைந்து வாழ வேண்டும்.
  • இயற்கையினின்றும் முரண்படும் மனிதச் செயல்கள், முயற்சிகள், மனிதனுக்கு இன்னலைத் தருவனவாய் உள்ளன. எனவே இன்னல்களிலிருந்து விடுபட இயற்கைக்குத் திரும்புங்கள் என்றார்.

இவரது தத்துவம் சமூக இயற்கையியல், உளவியல் இயற்கையியல், உடலியல் இயற்கையியல் என மூன்று கூறுகளில் அமைந்தது. ஒவ்வொரு புதிய பண்பாடும் பழைய பண்பாட்டின் குழந்தையே என்றார். மனிதன் மனிதனாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறானவற்றில் குழந்தையைப் பழக்கி அதன் குழந்தமையை நசுக்கிவிடக்கூடாது. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இயற்கைப் பொருள்கள் இவற்றோடு இருந்து பார்த்து அதனைச் சரிவரப் புரிந்து கொள்வதன் மூலம் பலவற்றை மனிதன் கற்றுக் கொள்ளவியலும் என்றார். மனிதரும் சமூகமுமே குழந்தைகளை வீணடிக்கின்றனர். நன்னெறி நல்வாழ்வுக்கு முரண்பாடாகவே நகர வாழ்வு அமைகிறது என்றார். சுதந்திரத்திற்காகவும் சம வாய்ப்புரிமைக்காகவும் இவர் போராடினார். குழந்தையின் ஆற்றல்களின், உறுப்புகளின் இயல்பொத்த வளர்ச்சியே கல்வி என வரையறுத்தார்.

கல்வி என்பது சீலங்களையும் உண்மையும் குழந்தைக்குப் போதிப்பதன்று; மாறாக தீநெறிகளும் பிழைபாடுகளும் குழந்தைகளின் மனத்தை அண்டவிடாமல் காப்பதே கல்வி என்றார். நமது விருப்பு, வெறுப்புகளை அடிப்படையிலேயே குழந்தை அதன் உலகை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று திணிப்பது பாவம் என்று விவாதித்தார்.

"என்னிடத்தில் ஒன்றுமே தெரியாத பனிரெண்டு வயதுச் சிறுவனைத்தாருங்கள் அவனுக்கு பதினைந்து வயது ஆவதற்குள் பிற சிறுவர்கள் தம் பதினைந்து வயதுக்கால நெடுகிலும், உங்களிடம் கற்றறிந்துள்ளவைகளுக்கு ஈடும் எடுப்புமாக கற்றனவற்றை அவன் வாழ்ந்து காட்டுவான். உங்களிடம் படித்தவன் அவற்றை நினைவிலிருந்து சொல்பவனாக மட்டுமே இருப்பான்" என்றார்.

"கல்விக்கு ஒத்தனவற்றை வழங்கிச் செய்விப்பதைக் காட்டிலும் கற்றல் நிகழாமைக்கான காரணங்களைக் கண்டாய்ந்து ஏற்ற சூழலை உருவாக்கித் தருவதே ஒருவரின் சரியான கற்றலுக்கு வழிவகுக்கும்" என்றார். "குழந்தைகள் தங்களுக்கே உரிய உகந்த வழிகளில் கற்றுக் கொள்கின்றனர். உங்கள் பயிற்று வழி முறைகளை அவர்கள் மீது திணிக்கலாகாது; அவ்வாறு செய்தால் அது எதிரிடையான பலன்களையே தரும்" என்றார்.

மாணவன் தனக்குத்தானே படிப்பித்துக்கொள்ளுகிறபோது வலுவான நடைமுறைக் கற்றல் நிகழ்கிறது. தம்மில் தாமே உய்த்துணர்ந்து கற்கின்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வகுத்துத் தருவது ஆசிரியர்களின் பணியாக அமைய வேண்டும் என்றார்.

ஒரு மாணவன் வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் நன்னெறிகளைக்காட்டிலும் நான்கு மடங்கு கூடுதலாக அவற்றை விளையாட்டு மைதானத்தில் இயல்பாகவே கற்றுக் கொள்கிறான் என்றார். பாடங்களை வாயுரையாக வழங்குவது எதிர்பார்க்கும் பலன்களை அளிக்காது என்றார். துய்த்துக் கற்றலையும் செய்து கற்றலையும் ஆசிரியர்களுக்கு ஆலோசித்தார். கற்போரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து விளைவுகளை உறுதி செய்து கொண்டே சொல்லித்தர வேண்டும் என்றார்.

ஜான்டுயி (1859-1952)

ஜான்டுயி இங்கிலாந்தில் ஊரகச் சூழலில் கடைக்காரரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே விவாதித்துப் பேசி அறிவதில் விருப்பார்வம் மிக்கவராகக் காணப்பட்டார். தத்துவ இயலில் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். தத்துவ இயல் துறைத் தலைவராக அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியாற்றினார்.

“சோதித்தறியும் பள்ளியை” (Experimental School) நிறுவி பேரும் புகழும் பெற்றார். தனது அரிய கருத்துக்களாலும், ஆய்வுகளாலும் அமெரிக்கக் கல்வி முறையில் செல்வாக்குடன் பல திருப்பங்களைக் கொண்டு வந்தார். பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பள்ளி நடைமுறைகளைக் கண்டறிந்தார். தனது ஆழ்ந்த அனுபவ அறிவுடன் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கல்விநூல்களை எழுதினார்.

டூயி ஒரு பயனியல் வாதியாகத் (Pragmatist) திகழ்ந்தார். பரிசோதித்துச் செய்து பார்த்து அறிவதில் ஆர்வமிக்கவராயிருந்தார். வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கல்வியின் பயன் அமைய வேண்டுமென வாதிட்டு முயன்றார். எல்லாக் காலத்துக்கும் சூழலுக்கும் நல்லவை என்று ஒன்றும் கிடையாது; ஒரு செயல் சரியான செயலா தவறான செயலா என்பதைச் சந்தர்ப்பங்களே தீர்மானிக்கின்றன. இன்றைக்கு சரியானவைகளாகத் தோன்றுபவை நாளைக்கு வேறாகவும் மாறலாம். நாம் அறிகின்ற நிலையில் தீர்க்கமாக ஒன்றைச் சரி/தவறு என்று கூற முடியாது என்று விவாதித்தார். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத எதனையும் வேண்டாம் என்றார். உண்மை எது என்பதை அனுபவ வாயிலாகத் தீர்மானிப்பதே சரி என்றார்.

சிந்திப்பது நல்லது, ஆனால் வெற்றுச் சிந்தனைகளைவிட நடைமுறைப்பாடும், செயல்களுமே மேலானவை; சொல்லும் செயலும் ஒன்றையொன்று தழுவி அமைய வேண்டும்; உலகில் அனைத்துமே தற்காலிகமான வாய்ப்புகளே; நிரந்தரம் என்று ஏதும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மனிதன் தனித்து வாழ்ந்துவிட முடியாது. மனிதன் கூடி வாழும் விலங்கு; மனிதன் தன் சமூகத்தில் பொருந்தி வாழப் பழக வேண்டும். ஒருவரின் முன்னேற்றத்திற்கு சமுதாயம் மிகவும் உதவியாக அமைவதை அவன் உணர வேண்டும். ‘சூழ்நிலையோடு பொருத்தப்பாட்டை அடைய ஒருவர் பெறும் பயிற்சியே கல்வி’ என்றார்.

இவர் நடைமுறை வாதத்தை ஊக்குவித்தார். எதையும் சோதித்துச் சரிபார்த்த பின்னரே ஏற்க முடியும் என்றார். சமுதாயத்தின் உண்மைத் தேவைகளை உண்மையிலேயே நிறைவேற்றாதனவற்றை அவர் ஏற்க மறுத்தார். நல்லவைகள் எனப்படுபவை பயனுள்ளவைகளாகவும் இருக்க வேண்டும். பயனுள்ளவைகள் மட்டுமே நல்லவைகள் என முழங்கினார்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.89130434783
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top