பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்

சமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல் நோக்கங்கள்

அறிமுகம்

இந்திய நாடு பல்வேறு புவி - அரசியல் நிலைகளை கொண்ட மிகப் பெரிய தேசமாகும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் இனத்தவரிடையே காணப்படும் சமூக பரிணாமத்தில் வேற்றுமைகளை கொண்டு வந்துள்ளது. புவி அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, வெளிநாட்டவருடனான இடைவினை, வாணிபம் மற்றும் மதபோதக செயல்பாடுகளால் அயல் நாட்டின் தாக்கம் இந்தியாவிற்கு வந்தது. இவ்வனைத்தும் இந்திய சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் சமூக வேற்றுமை ஒன்றாகும்.

இந்திய தேசம் சமூக வேற்றுமைகளை கொண்ட ஒரு நாடாகும். சமுதாயத்தில் அனைத்து பிரிவினரிடையே நல்லிணக்கம் நிலவ இந்திய அரசியலமைப்பு கூட்டாச்சி அரசியல் அமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வமைப்பு நாட்டின் ஜனநாயகமும் சமூக ஒற்றுமையும் நிலவ மிகவும் உதவி புரிகிறது.

மூன்று வகையான சமூக வேறுபாடுகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அவை முறையே பாலினம், மதம் மற்றும் சாதிகள். அரசியலமைப்பில் சில அடிப்படை உரிமைகள் இவற்றினை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக வேற்றுமை

சமூக வேற்றுமை என்பது நமது சமுதாயத்தில் நம்முடனும் நம்மை சுற்றியுள்ள பலதரப்பட்ட காரணிகளான இனம், கலாச்சாரம், மதம், வயது மற்றும் இயலாமைகளை உடையது. வேற்றுமை என்பது இனம், சமூக பொருளாதார, புவியியல், தொழில் பின்னனியில் உள்ள வேறுபாடுகளாகும்.

அரசியல் நம்பிக்கை, மத நம்பிக்கை, உடற்திறன்கள், வயது, சமூக-பொருளாதார நிலை, பாலினம், வாழ்விடம் மற்றும் இனம் போன்ற அனைத்து பரிமாணங்களை உள்ளடக்கியதே சமூக வேற்றுமையாகும். முதலாவதாக, ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் பெற்றவர். இரண்டாவதாக, ஒவ்வொருவரும் அவர்தம் சமுதாயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் சார்ந்துள்ளதாகவும் உள்ளது. மூன்றாவதாக, சமூகமும் கலாச்சாரமும் வேகமான மாற்றத்திற்குட்பட்டதாகும்.

சமூக வேறுபாட்டின் நிலைகள்

 1. தனிநபர் வேறுபாடு
 2. பிராந்திய வேறுபாடு
 3. மொழி வேறுபாடு
 4. மத வேறுபாடு
 5. சாதி வேறுபாடு
 6. பழங்குடியினர் வேறுபாடு

1. தனிநபர் வேறுபாடு

நமது நம்பிக்கைகளிலும், நடைமுறைகளிலும் கலாச்சார குழுக்கள் ஒரே விதமானது அல்ல. ஒவ்வொரு தனிநபரும் தான் வெற்றியடைய தனிப்பட்ட திறன்கள், மனப்பான்மைகள், அறிவுத்திறன் போன்றவை உள்ளடக்கி இருத்தல் அவசியம்.

2. பிராந்திய வேறுபாடு

பிராந்திய என்ற வார்த்தை ஏதோ ஒரு கூறினை சார்ந்த குறிப்பிட்ட பகுதியை குறிக்கும், அக்குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களின் உணர்வுகள் பிராந்தியவாதம் எனப்படும். பிராந்தியவாதம் என்ற சொல் இரு சித்தாந்தங்களை உடையது. நேர்மறையான உணர்வில் அது மக்கள் தம் வாழ்விடம், கலாச்சாரம், மொழிமேல் கொண்ட பரிவினை குறிக்கிறது.

எதிர்மறையான உணர்வில், ஒரு பகுதிமேல் அதாவது தேசம் அல்லது மாநிலத்தின்மேல் மக்கள் தாம் கொண்ட அதிகப்படியான இணக்கத்தை குறிக்கிறது. நேர்மறையான உணர்வில் பிராந்தியவாதமானது மக்களின் சகோதரத்துவம் என்ற உணர்வினை மேம்படுத்த ஊக்குவிக்கிறது. எதிர்மறையான உணர்வில் நம் தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

பிராந்திய வேறுபாட்டிற்கான காரணங்கள்

(அ) புவியியல் காரணங்கள்

பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களின் உணவு பழக்கங்கள், மொழி, கலாச்சாரம், உடை, வாழ்க்கை சூழலுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இவை மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலத்தினுள் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கிறது.

(ஆ) வரலாற்று காரணங்கள்

நாம் என்ற உணர்வு ஒரு சில வரலாற்று காரணங்களால் சிதைந்து விட்டது. நமது தேசத்தில் உள்ள பல மாநிலங்கள் கடந்த காலத்தில் ஒன்றுடன் ஒன்று தீவிர மோதல்களை கொண்டது. இம்மோதல்கள் அவற்றினிடையே கசப்பு உணர்வை உருவாக்கி, அதனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் திறந்த மனதுடன் சந்திக்க முடிவதில்லை .

(இ) அரசியல் காரணங்கள்

பல பகுதிகளில் மக்கள் சிலர் பிராந்திய அரசு அமைய வேண்டும் என்று கோருகின்றனர். இவ்வகையான சிந்தனை தம் பகுதிமேல் ஆர்வத்துடன் ஆள வேண்டும் என்ற குறிக்கோளை ஏற்படுத்துகிறது.

(ஈ) உளவியல் காரணங்கள்

பெரும்பாலான மக்கள் தம் பகுதியின் முன்னேற்றம், அடைவு அதிகப்படியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இக்கருத்தை பொறுத்தவரை மறுக்க கூடியது தான் என்றாலும் அப்பகுதி மக்கள் தம்பகுதிமேல் கொண்ட ஆர்வம் மற்றும் அப்பகுதி குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற உணர்வே பிராந்தியவாதத்தை குறிக்கிறது

(உ) சமூக காரணங்கள்

இந்தியா போன்ற நாடுகளில் திருமணமானது அதே பிராந்திய பின்னனியில் உள்ள நபர்களை மணப்பதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். ஆகையால் ஒரு பகுதியை சார்ந்த மக்கள் மற்றொரு பகுதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கின்றனர்.

(ஊ) பொருளாதார காரணங்கள்

வளங்களின் குறைபாடு, வேலையின்மை போன்ற பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிலையான பொருளாதாரத்தை நோக்கி செல்கின்றனர்.

பிராந்தியவாதத்தினை நீக்குவதில் கல்வியின் பங்கு

கீழ்கண்ட கல்வித் திட்டங்கள் மக்களிடையே பிராந்தியவாத உணர்வினை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

 1. பயணங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு ஊக்குவித்தல்.
 2. தேச வரலாற்றை பரவச்செய்தல்.
 3. வரலாற்று இலக்கியங்களை கற்பித்தல்.
 4. ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழி மட்டுமல்லாது இதர மொழிகளையும் பழக்கமாக்குதல்.

3. மொழி வேறுபாடு:

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியுடன் ஆங்கிலமும் அலுவலக மொழியாக 15 வருட காலங்களுக்கு தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலம் இன்றளவும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருப்பதற்கு காரணம் தென்னிந்திய மக்கள் இந்தியை கட்டாய பாடமாகவும், தேசிய மொழியாகவும், அலுவலக மொழியாகவும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே ஆகும்.

மொழிவாதத்திற்கான காரணம் நாட்டில் மொழிவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றின் பிரதான காரணங்களாகக் கருதப்படுவன:

(அ) உளவியல் காரணங்கள்

குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பிராந்திய மொழியுடன் அதாவது தங்கள் தாய்மொழியுடன் இணைக்கப்படுகின்றனர். ஆகையால் அவர்கள் பிற இந்திய மொழிகளை கற்க முன்வருவதில்லை.

(ஆ) வரலாற்று காரணங்கள்

இந்திய தேசத்தின் மீது பல்வேறு அந்நிய நாடுகள் படையெடுத்து உதாரணமாக, பிரெஞ்சு மக்கள் நமது நாட்டில் பாண்டிசேரியிலும், போர்த்துகீசிய மக்கள் கோவாவிலும் கோலாட்சியுள்ளனர். பாரசீக மொழியானது முகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் ஆங்கில மொழியை நாடு முழுவதும் பரப்பினர். அதனால் ஆங்கில மொழி அனைத்து மொழிகளுக்கும் துணையாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் அவரவர் பிராந்திய மொழியை தங்கள் மாநிலத்தில் ஊக்குவிப்பர். இதுவே மொழிவாதம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

(இ) புவியியல் காரணங்கள்

ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே உரிதான இலக்கியம் உள்ளது. அனைத்து புவியியல் நிலைகளான சமவெளி, மலைகள், உள்ளூர் கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கம் இவ்விலக்கியத்தில் காணப்படுகிறது. இவை அம்மொழியினை பேசும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு தனி நபரும் பிற மொழியை தன்மீது கட்டாயபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

(ஈ) பொருளாதார காரணங்கள்

மொழிவாதம் ஏற்படுவதற்கு சில பொருளாதார காரணங்கள் உள்ளது. சில மொழிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. ஆனால் அதன் பலன்கள் பிற மொழிகள் பேசுபவர்களால் இழக்கப்படுகிறது.

(உ) அரசியல் காரணங்கள்

மொழிவாதமானது அரசியல் ஆர்வம், அரசியல் குழுக்கள் மேலும் பல்வேறு அரசியல்வாதிகளால் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் போது ஒரு சில மதவாத கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மொழிப் பிரச்சினையை மக்களிடையே தூண்டுகின்றனர்.

(ஊ) சமூக காரணங்கள்

மொழிவாதம் ஒரு சில சமூக காரணங்களால் ஊக்குவிக்கப்படுகிறது. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் மட்டுமே பிறரால் மதிக்கப்படுகிறது. மாறாக முரண்பாடான முன் கருத்துக்களை வழங்குகின்ற மொழிகள் மறுக்கப்பட்டு மதவாதம் ஏற்பட காரணமாக உள்ளது.

4. மத வேறுபாடு

இந்தியா ஒரு மதச்சார்ப்பற்ற நாடாகும். உலகின் அனைத்து மதங்களும் நம் இந்திய நாட்டில் உள்ளன. இருப்பினும் நாட்டின் மதநல்லிணக்கமின்மை மற்றும் ஒற்றுமையின்மைக்கு முக்கிய காரணமாக மத வேறுபாடு திகழ்கிறது. சில நேரங்களில் மக்கள் தேச ஒற்றுமையை மறந்து தமது சொந்த மதத்தின் மீது அதிக விசுவாசத்தை காட்டுகின்றனர்.

நம் நாட்டில் இன்றளவும் இந்து மதம், புத்த மதம், கிருத்துவ மதம், சீக்கிய மதம், ஜைன மதம் போன்ற மதப்பிரிவினரிடையே சாதி உணர்வும் மேலோங்கி காணப்படுகிறது.

5. சாதி வேறுபாடு

இந்தியா பல சாதிகள் கொண்ட நாடாகும். 3,000-க்கும் மேற்பட்ட சாதிகள் நமது இந்திய தேசத்தில் உள்ளது. இவை பல்வேறு பகுதிகளில் பல வழிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையான சாதி அமைப்பு இந்து மதத்தில் மட்டுமே பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இஸ்லாமியம், கிருத்துவம், சீக்கியம் போன்ற இதர சமுதாயத்தினரிடையேயும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தோபி (துணி வெளுப்பவர்), டர்ஜி (துணி தைப்பவர்) போன்றோர் உள்ளனர். சீக்கிய மதத்தினரிடையே ஜாட் சீக்கியம், மஹஜாபி சீக்கியம் போன்ற பிரிவுகள் உள்ளன. இவ்வாறாக எந்தளவிற்கு சாதி வேறுபாடு நமது தேசத்தில் உள்ளது என்பதை கற்பனை செய்ய முடிகிறது. இது மட்டுமல்லாது பழங்குடியினர், கிராம, நகர மற்றும் திருமண முறைகளிலும் நமது தேச வேறுபாடு வெளிப்படுகிறது.

6. பழங்குடியின வேறுபாடு

பழங்குடியினரின் கலாச்சாரம் நாட்டின் வேற்றுமைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய மக்களிடையே காணப்படுகின்ற ஓர் கண்கவர் அம்சமாகும். கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து கலாச்சாரமும், நாகரீகமும் இந்திய பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களில் பரவியுள்ளது.

ஒவ்வொரு பழங்குடியினரும் தனித்துவமான சமூகம், பல்வேறு இடங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் அல்லது அவ்விடத்தில் அசல் குடியுரிமை பெற்றவர்களாவர். பழங்குடியினர் இன்றளவும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர், குறிப்பாக, வடகிழக்கு பகுதியின் பல மாநிலங்களிலும் கிட்டதிட்ட நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பழங்குடியினர் உள்ளனர்.

சமூக வேறுபாட்டினை புரிந்து கொள்வதற்கான கல்வி

இன்றைய ஆசிரியர்கள் தரமான கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க மட்டுமே தயாராகாமல் சாதி, இனம், சமயம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் மாணவர்களின் தேவையை ஒட்டியே இருத்தல் வேண்டும். கற்பிக்கும் முறை, கல்வி உளவியல், எண்ணங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

 1. திறமையான ஆசிரியர் தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் அறிவுத்திறன், சமூக கலாச்சார பண்பியல்புகளை கணக்கில் கொள்ள வேண்டும்.
 2. ஒவ்வொரு குழந்தையும் தத்தம் கற்றல் பாணியை கொண்டவர். ஆசிரியர்கள் அனைத்து வகையான குழந்தைகளுக்கும் சிறந்த வழியில் கற்பிக்க கடமைப்பட்டுள்ளனர்.
 3. காட்சி, தசை இயக்கம், செவிப்புலன் போன்ற எந்த கற்றல் பாணியை மாணவர்கள் கொண்டுள்ளனரோ ஆசிரியர் அவர்களுக்கு ஏற்றார் போன்று திட்டமிட்டு எதிர்பார்த்த கற்றல் விளைவினை கொண்டு வரவேண்டும்.
 4. நாம் வெற்றிகரமான ஆசிரியராக வேண்டுமெனில் ஒவ்வொரு படிநிலையும் பின்நோக்கி சென்று நமக்குள்ளே பார்க்க வேண்டும்.
 5. மாணவர்களின் கற்றல் பாணி, நம்பிக்கைகள், திறன்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளை ஆசிரியர் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற கலைத்திட்டத்தினை உருவாக்குதல் வேண்டும்.
 6. கற்பிப்பவர் மாணவர்களின் கலாச்சார பிண்ணனி மற்றும் அனுபவங்களை புரிந்து கொண்டு அவற்றை கல்வி செயல் முறையின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.
 7. ஆசிரியர் ஒரு சிறந்த கற்றல் சூழலை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும்.

முடிவுரை

வேற்றுமை என்ற பரந்த கூற்றானது புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் எளிதான ஒன்றில்லை. ஏனெனில் அவை சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை அளிக்கிறது. மக்கள் அவற்றை நன்கு ஆழ்ந்து புரிந்து கொண்டு, அவை முடிவில் எவ்வித முடிவை கொண்டு வரும் என்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கல்வி நிலையில் பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் காணப்படும் வேறுபாடானது மாணவர்களின் கற்றல் செயல்முறை, சக மாணவர்களுடன் ஓர் பரந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. பள்ளிக்கு அப்பால் பரந்து விரிந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ தயார்செய்ய வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.14634146341
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top