பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்திய அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு, பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி வழங்குவதை உறுதி செய்திட மக்கள் இயக்கமென உருவெடுத்த திட்டமே அனைவருக்கும் கல்வித்திட்டமாகும். இத்திட்டம் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமூக, பொருளாதார, பாகுபாடின்மை, ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கான அணுகுமுறைகளைக் கொண்டதாகும். அதிகாரப்பரவல் மூலமாக உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மக்களே முனைந்து நின்று தங்கள் சொந்த நடவடிக்கையாக ஏற்று நடத்துவதால், இது “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என அழைக்கப்படுகிறது.

திட்டக் குறிக்கோள்கள்

 • பள்ளிவயதிலுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்.
 • பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைவரையும் எட்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடிக்கச் செய்தல்.
 • அனைவருக்கும் வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியை உறுதி செய்தல்.
 • சமூக, பொருளாதார அடிப்படையிலோ, ஆண், பெண் இன வேறுபாட்டினாலோ மாணவர்களின் சேர்க்கை, இடைநிறுத்தம், தொடர்ந்து படித்தல், கற்றலடைவு ஆகியவற்றில் ஏற்படும் இடைவெளியை முற்றிலுமாகக்களைதல்.
 • பள்ளியில் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றிப் பள்ளிகளில் தக்கவைத்தல்.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

பதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம்.

 1. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதியுடன் நிறைவேற்றும் திட்டம்.
 2. அடிப்படைக்கல்வியின் வாயிலாகச் சமூகநீதியை வளர்க்க வாய்ப்பளிக்கும் திட்டம்.
 3. ஊராட்சி மன்றம், கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்ற அமைப்புக்களை, ஆரம்பக் கல்வி நிர்வாகத்தில் ஈடுபடச் செய்யும் திட்டம்.
 4. அனைவருக்கும் கல்வி வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டம்.
 5. மைய, மாநிலமற்றும் உள்ளாட்சிநிர்வாகங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டம்.
 6. ஆரம்பக்கல்வி பற்றிய மாநில அரசின் தொலை நோக்குக் குறிக்கோள்களை இலக்கிட்டு காலவரம்புக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம்.

வட்டார வளமையம்

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் உள்ள 385 ஒன்றியங்களிலும், ஒர் ஒன்றியத்திற்கு ஒரு வட்டார வளமையம் என 385 வட்டார வளமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வட்டார வளமைய அமைப்புக்குப் பதிலாக, கல்விச்சரகம் உள்ள இடங்களில் பள்ளித்தொகுப்புக் கருத்தாய்வு மையங்கள் (Cluster Resource Centres) வட்டார வளமையங்களாகச் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணிநிலையில் ஒரு மைய மேற்பார்வையாளரும், பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ஏழு ஆசிரியப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியப் பயிற்றுநர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் என்று பாடவாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார வளமையங்களின் பணிகள்

 • மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல், பள்ளி வகுப்புக்களை முடிக்கச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை நூறு விழுக்காடு அடையும் வகையில் வீட்டுக்கணக்கெடுப்பு, பள்ளித் தகவல் ஆகியவற்றைப் புதுப்பித்துப் பராமரித்தல்.
 • கிராம, வட்டார தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் திட்டம் தயாரித்து அவற்றைத் தொகுத்து, மாவட்டத்திட்ட அறிக்கைகளைத் தயாரித்து, மாவட்டத்திட்ட அலுவலகத்துக்கு அனுப்புதல்.
 • வட்டார வளமைய அளவிலான ஆண்டுத்திட்டப் பணிகளை வரையறுத்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்.
 • வீடுவாரியாகப் பள்ளிவயதுக் குழந்தைகளையும்,பள்ளிக்கு வெளியில் உள்ள பள்ளிசேராத மற்றும் இடைநின்றவர்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அவர்களை மாற்றுப்பள்ளிகள்/ இணைப்புப் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்தல்.
 • பள்ளி / மாற்றுப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தல். கிராமக் கல்விக்குழு மூலமாகப் பள்ளிக்கு வழங்கப்படும் பள்ளி மானியம், ஆசிரியர் மானியம், துணைக் கருவிகள் மானியம் ஆகியவற்றை வெளிப்படையாகவும்,சரியாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
 • வட்டார அளவில் நடைபெறும் கட்டடப் பணிகளைக் கண்காணித்து அவற்றின் தரத்தை உறுதி செய்தல்.
 • கிராம அளவிலும், வட்டார அளவிலும் கல்வி விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
 • வட்டார அளவில் திட்ட வெற்றிக்காகப்பிற அரசுத்துறைகளுடனும், அரசுசாரா அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
 • பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்கும் மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி, திட்டச் செயலாக்கத்தில் உள்ள இடர்பாடுகளை அகற்றுதல்.
 • ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியையும், மாற்றுப் பள்ளி பயிற்றுநர்கள், பால்வாடி, அங்கன்வாடி பணியாளர்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள் போன்றோர்க்குப் பயிற்சித் திட்டங்களையும் வகுத்து நடத்துதல்.
 • பயிற்சித் தேவைகளைக் கணித்து அட்டவணை தயாரித்தல்.
 • மாவட்டத் திட்ட அலுவலர் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றல். மாதாந்திர அறிக்கைகளை அனுப்பி வைத்தல்.
 • வட்டார வளமையச் செயல்பாடுகளுக்கான செலவினக் கணக்குகளைப் பராமரித்து தணிக்கைக்கு அனுப்புதல்.
 • மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களின் ஆண்டு, மாத, வார பணித்திட்டம் தயாரித்தல்.
 • பள்ளிமேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல். ஆண்டுத்திட்டம் தயாரித்தல்.
 • (Low Performing Schools), தரவரிசை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • வட்டார வளமையப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் செயல்திறன் குறைந்த பள்ளிகளில் (School Adoption Programme) பள்ளியில் சென்று வழங்கும் பயிற்சிக்கான (School based Training) நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • பள்ளியை கல்விநலப் பார்வையிடுதல் (School Visits) மாற்றுப் பள்ளிகளை நெறிப்படுத்தும் பார்வையிடல். மழலையர் கல்வி மையங்களை நெறிப்படுத்தும் பார்வையிடல். வட்டார அளவில் தரக் கண்காணிப்புக்குழு அமைத்தல். (கல்வியாளர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ்மரபுக்குடியினர் ஆகியோரில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற வேண்டும்).
 • பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையக் கூட்டங்களில் கலந்துகொள்ளல்.
 • கல்வி மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஆசிரியர்கள் செயலராய்ச்சி நடைவடிக்கைகளை மேற்க்கொள்ள வழிகாட்டுதல்.
 • மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல்.

பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம்

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்பித்தலில் புதிய அனுகுமுறைகள், உத்திகள், பாடத்திற்குப் பொருத்தமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல், பயன்படுத்துதல், போன்றவற்றை நடைமுறைச் சாத்தியமாகவும், அனுபவபூர்வமாகவும் அறிந்து கொள்ளவும் தங்கள் பணியில் ஏற்படும் பிரச்சனைகளைக் கலந்தாலோசித்துத் தீர்வு காண்பதற்காகவும் ஆசிரியர்கள் ஒன்று கூடிச் சிந்தித்தாவன முயலுவதற்காகவும் பரிமாறிக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையமாகும். இதனை ஆசிரியர்களின் ஆற்றல் மேம்பாட்டு மையம் என்றும் அழைக்கலாம்.

மையம் அமைத்தல்

ஒருகுறிப்பிட்ட பகுதியிலுள்ள 10 முதல் 12 பள்ளிகளை இணைத்து 40 ஆசிரியர்கள் வரை உறுப்பினர்கள் உள்ளவாறு மையம் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு மையத்தை அமைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வந்து செல்வதற்கு ஏற்ற போக்குவரத்து வசதியும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடவசதியும் உடையதாக உள்ள பள்ளியை மையமாகத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் பள்ளி அரசு, ஊராட்சி,நகராட்சி ஆகியவற்றைச் சார்ந்த பள்ளியாக இருத்தல் வேண்டும். இம்மையங்களுக்கெனவே புதிய கட்டிடங்களும் கட்டித்தரப்பட்டுள்ளது.

மைய ஒருங்கிணைப்பாளர்

மையப் பகுதிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் பணி மூத்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மைய ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். பணி மூப்பில் அடுத்து உள்ளவர் உதவி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். தவிர்க்க இயலாத காரணங்களால் பணி மூப்பில் உள்ளோர் ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது உதவி ஒருங்கிணைப்பாளராகவோ இயருக்க இயலாதநிலையில் அவரிடம் எழுத்து மூலம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு பணிமூப்பில் அடுத்துள்ளவரை நியமிக்கலாம். மையப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகவோ, உதவி ஒருங்கிணைப்பாளராகவோ இல்லாதநிலையில் அவர் மையத் தொடர்பாளராகச் செயல்படலாம். கருத்தாய்வு மையத்திற்கு ஒருவரென அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்கல்வித் தகுதியில் ஒருங்கிணைப்பாளர்கள் (CRCTE) நியமிக்கப்பட்டு வடட்ார வளமையத்தின் கீழ் இயங்கி வருகின்றனர்.

பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையங்களின் பணிகள்

 1. மையம் அமைத்தல், இருப்பிட வரைபடம் தயாரித்தல்.
 2. மைய உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்துவைத்தல்.
 3. மையச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் கருத்து வள நிறுவனங்கள், கருத்தாளர் முகவரி ஆகியவற்றைத் தொகுத்து வைத்துக்கொள்ளுதல்.
 4. ஒர் ஆண்டிற்கான மையத்தின் நிகழ்வுகளைத் திட்டமிடுதல்.
 5. ஆண்டிற்கான திட்டத்தில் மைய உள் நிகழ்வுகள், வெளி நிகழ்வுகள் எவை என்பதை வகைப்படுத்துதல்.
 6. நிகழ்ச்சிகளை நடத்த நேர மேலாண்மையுடன் நிகழ்ச்சியை நடத்திச் செல்லுதல்.
 7. நிகழ்ச்சிகளை மதிப்பிடுதல்.
 8. நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தல்.
 9. மதிப்பீட்டின் அடிப்படையில் குறை, நிறைகளை ஆராய்ந்து, குறைகளைக் களைய ஆவன செய்தல்.
 10. மையத்திற்குத் தேவையான பொருள்கள், நிதிவசதிகளைச் சேகரித்துச் சிறப்பாகப் பயன்படுத்துதல்.
 11. கிராமக் கல்விக் குழுவினருக்குப் பயிற்சி அளித்தல், பயிற்சித் தேவையை ஆய்வு செய்து பயிற்சியளித்துப் பயிற்சியின் தாக்கத்தையும் அறிதல்.
 12. பிற மையங்களுடன் தமது மையத்தை இணைத்துச் சிறப்புச் செயல்பாடுகளைப் பரிமாறிக்கொள்ளுதல்.
 13. கருத்தாய்வுப் பார்வை-மையத்தைச் சார்ந்து பள்ளிகளைத்தாமோ அல்லது குழுவாகவோ பார்வையிட்டு ஆசிரியர்களின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தியவிதம் பள்ளிகளின் நடைமுறை ஆகியன பற்றி மையத்தில் தம் கருத்துக்களை வெளிப்படுத்தி விவாதித்தல்.
 14. மைய நிகழ்வுகளின் அறிக்கையை மேல்நிலை அலுவலர்க்கு சமர்ப்பித்தல்.
 15. மையத்திற்கான செலவினங்களை உரியமுறையில் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல்.

கிராமக் கல்விக்குழு

பள்ளி அளவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய அனைத்துச் செயல்பாடுகளும் பள்ளியின் கிராமக் கல்விக்குழு அல்லது பெற்றோர், ஆசிரியர் குழுவினரின் பொறுப்பாகும்.

அமைப்பு

 • ஊராட்சி மன்றத் தலைவர்/வார்டு உறுப்பினர் தலைவர் 1
 • வார்டு உறுப்பினர் / தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி உறுப்பினர் 1
 • பள்ளித் தலைமையாசிரியர் உறுப்பனர் செயலர் 1
 • பெற்றோர் ஆசிரியக் கழகத்தின் தலைவர் 1
 • சுயஉதவிக்குழு உறுப்பினர் உறுப்பினர் 1 (பெற்றோராக இருத்தல் வேண்டும்) (இயலாக் குழந்தையின் பெற்றோர் ஒருவர் உட்பட) உறுப்பினர்
 • 4 மழலையர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் / ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டம் உறுப்பினர் 1
 • தொண்டு நிறுவனப்பிரதிநிதி உறுப்பினர் 1
 • கல்வியாளர் உறுப்பினர் 1
 • ஆசிரியர் பிரதிநிதி உறுப்பினர் 1
 • சுகாதாரப் பணியாளர் உறுப்பினர் 1
 • கிராம நிர்வாக அலுவலர் உறுப்பினர் 1 மொத்த உறுப்பினர்கள் 15

கிராமக் கல்விக்குழுவின் பணிகள்

 1. அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டப்பணிகளில் கிராமக்குழுவினரும் பங்கேற்பதற்கு வசதியாக, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல்.
 2. பள்ளியின் தேவைகளை நிறைவேற்றப் பள்ளித்திட்ட அறிக்கை தயாரித்தல் (School Plan Document)
 3. புதிய பள்ளி / மாற்றுப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தல்.
 4. விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி, சமுதாயத்தை ஒன்றுபடுத்தி திட்டத்தினைச் செயலாக்குதல்.
 5. பள்ளிக்கு வழங்கப்பட்ட மானியத்தை முறையாகச் செலவிட்டு உச்சப் பயனை அடைதல்.
 6. கிராமக் கல்விக்குழுத் தலைவரும் உறுப்பினர் செயலரும் இணைந்து வங்கிக் கணக்கு தொடங்கி பெறப்படும் நிதியைப் பராமரித்தல்.
 7. பள்ளிக்கட்டடம், கழிப்பறை வசதி, குடிநீர், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற கட்டுமான வேலைகளைச் சமுதாய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுதல், மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியினைக் கொண்டு, கட்டுமானப்பணிகளுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் நிதியைச் சரிகட்ட ஏற்பாடு செய்து, பள்ளி கிராமப்பொதுச் சொத்து என்னும் பொதுமை உணர்வை வளர்த்தல்.
 8. பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து எட்டாம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்கச் செய்தல்.
 9. கல்வி விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.
 10. பள்ளியில் விழாக்கள் நடத்துதல். குழந்தைகளின் திறன்களை வெளிக் கொணரும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல்.
 11. திட்டச் செயல்பாடு சிறப்பாக நடந்தேறிட, சமுதாய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்.
 12. கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுப் பள்ளிகள் தொடங்க ஏற்பாடு செய்தல்.
 13. பள்ளியில் சேராத குழந்தைகளையும், இடையில் நின்றவர்களையும் கண்டறிந்து அவர்களைப் பள்ளியிலோ, மாற்றுப் பள்ளியிலோ சேர்க்க நடடிவக்கை எடுத்தல்.
 14. மாற்றுப்பள்ளிகள், இணைப்புப் பள்ளிகள் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
 15. குழந்தைகளின் அடைவு நிலையைக்கண்காணித்துப் பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தல்.
 16. கிராமக் கல்விப் பதிவேட்டினைப் (VER) பராமரித்து அனைத்துத் தகவல்களையும் அதில் பதித்தல்.
 17. பள்ளி அறிவிப்புப் பலகையில் திட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை எழுதி வைத்தல்.
 18. மாதம் இருமுறை கூட்டம் நடத்தி, பள்ளி வளர்ச்சியைக் கண்காணித்தல்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் ஏற்பட்டுள்ள கல்வி முன்னேற்றம்

 1. அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டிட வசதி - கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
 2. பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 3. மாணவர்களின் இடைநிறுத்த வீதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கற்றல் - கற்பித்தலுக்கான துணைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்க்குப் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கணினி - விளையாட்டு - யோகாசனங்கள் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 4. மாணவர்களின் அடைவுநிலை உயர்த்தப்பட்டு வருகிறது. இயலாதோர்க்கான ஒருங்கிணைந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
 5. பள்ளிகளிலிருந்து இடையில் நின்றோர்க்காக மாலை நேரங்களில் மாற்றுக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 6. கல்விக்காப்புறுதித் திட்டம் பள்ளியிலிருந்து இடையில் நின்றோரை, முறையான பள்ளிகளில் 6 மாதம் படிக்க வைத்து மேல்வகுப்பிற்குத் தகுதியுடையவராக்கி வருகிறது.

தொடக்கக் கல்வியின் தரத்தை நிலைநாட்டுதல்

அனைவரையும் பள்ளியில் சேர்த்தலில் பேரளவில் வெற்றிகண்டு வரும் நிலையில், தக்கவைத்தலிலும் நிறைவுறுத்தலிலும் முன்னேற்றத்தை நிலைநாட்டி வந்தாலும், திருப்திகரமானதோர்தரம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. தொடக்கக் கல்வியில் தர மேம்பாட்டை அடைவதற்குத் தேசிய கல்விக் கொள்கை (NPE 1986)-யும் அனைவர்க்கும் கல்வி இயக்குநர் (SSA)-மும் பல்வேறுபட்ட ஆசிரியர் ஊக்க முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. வகுப்பறைச் செயல்பாடுகளாலும், ஆசிரியர் திறனுக்கானப் பயிற்சிகளாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் அடைவில் கணிசமானதோர் முன்னேற்றத்தைக் கல்விப் பணியாளர்கள் சாதிக்க வேண்டும். அதற்காகப் பல்வேறு கூட்டு முயற்சிகள், ஒருநோக்கு ஆக்கப்பணிகள், வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. செயலாராய்ச்சி, களநிலைஆய்வு, கற்றல் உத்திகளின் ஏற்புடைமை, நம்பகமானதோர் தொடக்கக் கல்வி மதிப்பீடு முதலிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மிக்க விளைவுள்ள தரமுயர்த்தும் இடுபொருட்களைக் களமிறக்க வேண்டும்.

பங்கேற்பு முறையிலான திட்டங்கள் தீட்டுதல், கல்வித்தர மேம்பாட்டை அடைய சமுதாயத்தை இணைத்துக் கொள்வது, சமுதாயத்தின் கல்வி விருப்பங்களை நிறைவேற்றித்தரும் நம்பகமான பள்ளிகளாக அரசின் பள்ளிகளை மாற்றுவது, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும், தனியார் பள்ளிகளை, கட்டணப் பள்ளிகளைத் தரத்தில் விஞ்சும் பள்ளிகளாக அரசுப்பள்ளிகளை விருப்பாக்கம் செய்ய வேண்டுவது உடனடி அவசியமாகும். இலவசக் கல்வி வழங்கும் அரசுப்பள்ளிகள் மற்றும் நிதிபெற்றியங்கும் பள்ளிகளைப் பிற தனியார் பள்ளிகளைக்காட்டிலும் மேம்பட்டதாக மாற்றி அனைவர்க்கும் கல்வி முயற்சிகள் கடையனுக்கும் கடைத்தேற்ற கிடைக்குமாறு சமூகநீதியைச் சாதிக்க ஆசிரியர்களும் அலுவலர்களும் முயல வேண்டும். தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கான அரசு நிதி ஒதுக்கீடுகள் பேரளவில் கிடைக்கும் இத்தறுவாயில், அரசின் முயற்சிகளோடுதுறைப்பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் கல்வித்தர மேம்பாட்டை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வியில் வசதி வாய்ப்புள்ளோருக்கு மேம்பட்ட தரமும் ஏழை எளியவர்களுக்குக் குன்றிய தரமும் என்ற நிலையை நாம் மாற்றிச் சமதரம், உயர்தரம் எல்லார்க்கும் கிடைத்திடத் திட்டமிட்ட வகையில் உறுதிபூண்டு செயல்பட வேண்டும்.

 • பொருளாதாரத்தில், தகவல்நுட்பத்தில், போக்குவரத்தில், வேளாண்மையில், வாழ்க்கை வசதிகளில் மேம்பட்டுவரும் நம் தாயகம் கல்வியிலும், சுகாதாரத்திலும் பின்னடைவுகளைச் சந்திக்கவிடலாகாது.
 • கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாவதைப்போல் கற்பதனால் ஏற்படும் நாட்டுயர்வும், அமைதியும், முன்னேற்றமும் அனைவர்க்கும் திருப்தியளிக்க வேண்டும்.
 • எட்டாண்டு கால உயர்தொடக்கக் கல்வியுடன் ஒருவர் தம் படிப்பை முடித்துக் கொண்டு வாழத்தலைப்பட்டாலும், கல்வியால் அவருக்குக் கிடைத்தளிக்க வேண்டிய அனைத்து நியாயங்களும், தற்சார்பும், தன்னம்பிக்கையும் கிடைத்திருப்பதாக அவர் மன நிறைவும் துணிவும் அடையும் வகையில் கல்வி வாழ்க்கைப் பயன்களுக்கு உத்திரவாதமளிப்பதாய் அமைவதே தரமான கல்விக்கு அடையாளமாகும்.
 • வன்முறை, சுயநலப்பத்து, குறுகிய மனப்பான்மை, தீய பழக்கவழக்கங்கள் முதலிய சமூக விரோத கூறுகளற்ற இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும்.
 • அறிவியல் மனப்பான்மை, காரணகாரிய ஆய்வறிவு, சுயசிந்தனை, நோக்கத்தெளிவு கொண்டவர்களைத் தான் வழங்கும் எட்டாண்டு காலக்கல்வியால் பள்ளிகள் ஆக்கித்தர வேண்டும்.
 • எழுதப்படிக்கத் தெரிந்தவர்களை உருவாக்கும் ஒரு மேம்போக்கான முயற்சியாகத் தொடக்கக் கல்வி அமையாமல், மாணவர்களிடத்திலே கடமை உணர்வும், உரிமை வேட்பும், அரசியல் விழிப்புணர்வும் பொலியுமாறும் ஆக்கித்தர வேண்டும்.
 • குடிமைப்பண்புகளும், ஆண்டான்-அடிமை என்ற இருநிலையற்ற, ஏமாற்றாத ஏமாற்றவியலாத தற்சார்புக் குடிமக்களை நாடு செழிக்கும் வண்ணம் உருவாக்குவதே தரமான தொடக்கக்கல்வி என்பதன் முழுப்பொருளாகும்.

இவற்றையெல்லாம் கல்வியாளர்களும், அலுவலர்களும், ஆசிரியர்களும் நாட்டு நலநோக்கிலும், பணிக்கடன் ஆற்றும் அறநோக்கிலும், தன்னார்வத்துடன் தகஅமைத்துத் தர வேண்டும்; ஒவ்வொரு கல்விப் பணியாளரும் தத்தம் அளவில் ஈடுபாட்டுடனும் உண்மை உணர்வுடனும் கடனாற்றிச் சாதித்துக் கல்விச் சவால்களை, களத்திலிருந்து வரும் அறைகூவல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றுநாட்டுநலன் விழைய வேண்டும் என்றே இந்திய நாட்டின் கலைத்திட்டப் புனராக்கம் மேன்மேலும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.95744680851
முமா.பசுபசு Sep 15, 2018 09:05 AM

அருமையக இருந்தது, நிறைய தகவல் வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top