பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொடக்கக் கல்வியின் சவால்கள்

தொடக்கக் கல்வியின் சவால்கள் என்னவென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி மக்களின் கல்வியறிவைச் சார்ந்தே அமைந்துள்ளது. எனவே உலக நாடுகள் அனைத்தும் தம் மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. முன்னேறிய நாடுகளில் நூறு சதவீதம் எழுத்தறிவு மக்களிடம் காணப்படுகிறது. வளரும்நாடுகளில் கல்விஅறிவு பெற்றோரின் விழுக்காடு குறைவாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நமது நாட்டு மக்களிடையே எழுத்தறிவு 16.67 சதவீதமாக இருந்தது. அது 2000 ஆம் ஆண்டில் 6538 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் நமது அரசியல் சாசனத்தில் கண்டுள்ளபடி நூறு விழுக்காட்டை எட்டுவதற்குத் தொடர்ந்து நமது அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முறையான கல்வி பயிலத் தொடங்கும் நிலையைத் தொடக்கக் கல்வி எனலாம். இந்நிலையில் 6வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர் கல்வி பயிலுகின்றனர். இதில் 1 - 5 வகுப்புகள் உள்ள பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் என்றும், 1 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளை உயர் தொடக்கப்பள்ளிகள் என்றும் குறிப்பிடுகிறோம். உலகில் மிகப்பெரிய கல்வி முறையைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்திலுள்ளது. இதில் முதலிடம் வகிப்பது சீனா. இந்தியாவில் 0.66 மில்லியன் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 947 விழுக்காடு மக்கள் ஒரு கி.மீ. தொலைவிற்குள் தொடக்கப்பள்ளி வசதியைப் பெற்றிருக்கிறார்கள். பள்ளி வசதிகள் இல்லாத சிறு பகுதிகளில் மாற்றுப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நமது அரசுகளின் பெரு முயற்சிகளால் ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கையானது வெகுவாக உயர்ந்துள்ளது. துவக்கப்பள்ளிகளில் மாணவர் பகரச் சேர்க்கை விகிதம் (GER) ஆண்களுக்கு 11% பெண்களுக்கு 92% நிகரச் சேர்க்கை விகிதம் (NER) ஆண்களுக்கு 78ரூ பெண்களுக்கு 64% (UNICEF 2006) இருப்பினும் பள்ளியில் சேராத குழந்தைகள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். குழந்தைத் தொழிலாளிகள்,நாடோடி சமூகத்தினர், வேலைக்காக தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயரும் நிலையில் இருப்போர், ஊனமுற்றோர், பள்ளி வசதி அருகில் இல்லாதோர், தெருக்குழந்தைகள் (Street Childern), தாழ்த்தப்பட்ட / மலைவாழ் இனத்தவர்கள், பெண்கல்வி வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவர்கள் போன்றோரில் பலர் பள்ளிக்குச் செல்லாதுஇருத்தல் கூடும். இவர்கள் அனைவரும் கல்வியறிவுபெற ஆவன செய்வதே நமது உடனடிக் கடமையாகும்.

துவக்கக் கல்வியின் அறைகூவல்கள்

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கினை அடைய எல்லாப் பகுதிகளிலும் போதிய பள்ளி வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பள்ளி வயதிலுள்ள எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து, இடைநில்லாது தக்கவைத்து, தொடக்கக் கல்வியினை நிறைவுபெறச் செய்ய வேண்டும். சேர்ந்த குழந்தைகள் அனைவரும் எந்த வகுப்பிலும் தேங்காது தொடர்ந்து பயின்று குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி வகுப்பினை முடிக்கும் திறனை அடையச் செய்தல் வேண்டும். குழந்தைகள் தாம் பயிலும் காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் முழுமையான அடைவுத்திறனைப் பெறவேண்டும். இவற்றில் எவ்வளவு சாதனை பெற்றுள்ளோம் என்றும், இன்னும் சாதிக்க வேண்டிய இலக்குகள் எவையெனவும் ஆய வேண்டும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி மற்றும் சார்ந்த வசதிகள்

அனைவருக்கும் தரமானக் கல்வியைக் கொடுக்க வேண்டுமெனில் அதற்கான பொருத்தமான சூழலையும், உத்திகளையும், வகுத்துத்தர வேண்டும். அதாவது குழந்தைகள் எளிதாகச் சென்று படிப்பதற்குப் பள்ளி வசதிகள் அருகில் தேவை. மாணவர்க்கு 10 சதுரமீட்டர் வீதம் போதிய கட்டிட வசதிகளும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் தேவை. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மிகவும் அவசியம். இவற்றோடு தேவையான அளவிற்கு கற்றல், கற்பித்தல் பொருட்களும், கரும்பலகையும், உலகப்படம், வரைபடங்கள், விளையாட்டுக் கருவிகள், நூலகம் போன்றவையும் இருக்க வேண்டும். விளையாடுவதற்கு வேண்டிய இடவசதியும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் பள்ளிகள் துவக்கப்பட்டு அவற்றில் குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் பள்ளி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலை அனைத்து மாநில மக்களுக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

பள்ளி வயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்

பள்ளி வயதுநிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது சட்டம். அதாவது (6-14) வயதுப்பிரிவினர் அனைவரும் முறையான பள்ளியில் அல்லது மாற்றுப்பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் குடும்பக் கணக்கெடுப்பு செய்வது வழக்கம். பள்ளி வசதி இல்லாத சிற்றுார்களில் மாற்றுப்பள்ளிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. அரசின் பெரு முயற்சியால் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கையானது பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தச் சேர்க்கை விகிதம் 100 விழுக்காட்டையும் தாண்டிவிட்டது. இருப்பினும் இன்னமும் சேராதவர்களும் இருக்கிறார்கள். இவர்களையும் பள்ளியில் சேர்க்க நமது அரசு அனைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் தக்க வைத்தல்

பள்ளியில் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும் எந்த வகுப்பில் சேர்க்கிறார்களோ அந்த வகுப்பிலிருந்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக முன்னேறி இறுதியில் தொடக்க அல்லது உயர் தொடக்கக் கல்வியை முடிக்க வேண்டும். இதற்கிடையில் பள்ளியைவிட்டு நின்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதைத்தான் நாம் தக்க வைத்தல் என்கிறோம்.

குழந்தைகளைத் தக்கவைப்பதில் பலபிரச்சனைகள் இருக்கின்றன. பள்ளிச்சூழல் பிடிக்காத சிலர் நின்று விடுகின்றனர். கலைத் திட்டத்தில் கற்பித்தல் முறையிலும் எவ்வளவோ மாறுதல்களைக் கொண்டு வந்த போதிலும் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அரசு பல நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தக்கவைத்தல் சதவீதம் உயர்ந்துள்ளது.

அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தம் இல்லாது தொடர வைத்தல்

தொடக்க நிலையிலும், உயர் தொடக்க நிலையிலும் இடையில் எந்த வகுப்பிலிருந்தும் குழந்தை நிரந்தரமாக பள்ளிக்கு வராது நின்று விடுவதை இடைநிறுத்தம் என்கிறோம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. வறுமை, வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு உதவுதல், பள்ளிப்படிப்பின் அவசியத்தை உணராதிருத்தல், படிப்பில் போதிய முன்னேற்றமின்மை, பின்தங்கல், பெண்கள் தொலை தூரம் சென்று படிக்க விரும்பாமை, வீட்டிலுள்ள சிறு குழந்தைகளைப் பேண வேண்டிய பொறுப்பு, உடல்நலக்குறைவு போன்ற காரணங்களினால் குழந்தைகள் படிப்பை விட்டு இடையில் நின்று விடுகின்றனர். தற்போது இந்தியாவில் தொடக்கப்பள்ளிகளில் இடைநிறுத்த விகிதம் 14.40 சதவீதமாகவும், உயர் தொடக்கப்பள்ளிகளில் இதன் விகிதம் 35.59 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 5.79 எனவும் உயர்தொடக்க வகுப்புகளில் 8.64(2004-05) எனவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இடைநிற்றலைக் குறைப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இலவச சீருடை, இலவச மதிய உணவு, இலவச எழுது பலகை, இலவசப் பாடநூல்கள், இலவசப் பேருந்து வசதி, பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்குத் திருமண உதவிப்பணம், மாணவர்களுக்கு மருத்துவ ஆய்வுத்திட்டம் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆயினும் இடைநிறுத்தம் முழுவதுமாகக் குறைந்தபாடில்லை.

தேக்கமில்லாது அனைத்துக் குழந்தைகளும் கல்வியை நிறைவு செய்தல்

ஒரு குழந்தை ஒரு வகுப்பில் ஒராண்டிற்கு மேல் கற்க நேர்வது தேக்கம் எனப்படும்.

முதல் இரண்டு வகுப்புக் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் தேங்கும் நிலை காணப்படுகிறது. காரணம்

1) குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை.

2) பள்ளி வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டு, பின்பு பள்ளி வயது வரும் வரை அவ்வகுப்பிலேயே தொடர்ந்து இருக்கச் செய்தல்.

3) பள்ளிக்கு வராமலேயே சில குழந்தைகளின் பெயர்கள் பதிவேட்டில் இருத்தல். இது போன்ற குழந்தைகள் தேக்க நிலையில் காட்டப்படுவர்.

4) குழந்தையை ஒரு வகுப்பில் தேர்ச்சியின்றி தொடர்ந்து நிறுத்தக்கூடாது என்ற அரசின் கொள்கையைக் கருதாத ஆசிரியர்கள் குழந்தைகளை தேக்கநிலைக்கு ஆளாக்குதல். இதற்கான காரணத்தைக் கண்டறிய அநேக ஆய்வுகள் நடத்தப்பட்டு இருப்பினும் சரியான காரணங்கள் முழுவதையும் கண்டறிய முடியவில்லை.

அனைத்துக் குழந்தைகளும் முழு அடைவுத்திறன் எய்துதல்

பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் 1 முதல் 5 வகுப்பு வரை வரையறுக்கப்பட்டுள்ள 663 திறன்களில் முழு அடைவு பெற்றிருக்க வேண்டும். அதாவது 80 விழுக்காடு திறன்களையேனும் மாணவர்கள் அடைவு பெற்றிருத்தல் வேண்டும்.

ஆனால் ஆய்வுகள் பெரும்பான்மையான குழந்தைகள் முழு அடைவை எய்தவில்லை என்றே புலப்படுத்துகின்றன. அனைவர்க்கும் கல்வித் திட்டத்தில் செய்யப்பட்ட மதிப்பீட்டு ஆய்வறிக்கைகள் முழு அடைவுத்திறனை குழந்தைகள் பெறவில்லை என்றே தெரிவிக்கின்றன. இச்சவாலை நாம் முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்பதன் விளக்கம்

இந்திய அரசியல் சாசனம் 45 ஆம் பிரிவில் “அரசியல் சாசனம் அமல்படுத்தப் பட்டதிலிருந்து (1950) பத்தாண்டுகளுக்குள் (அதாவது 1960 க்குள்) 6 முதல் 14 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை அளிக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும்” எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

1 முதல் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்புவரை தொடக்கப்பள்ளிக் கல்வியினை அனைவர்க்கும் இலவசமாக வழங்குதல் வேண்டும்.

2. 5 வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளும் முதல் வகுப்பில் சேர்க்கப்படுதல் வேண்டும்.

3. இதனைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.

4. அவ்வாறு பள்ளியில் சேர்த்த குழந்தைகள், எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் வரை பள்ளியை விட்டு நீங்காது வைத்திருத்தல் வேண்டும். (Universalisation of Elementary Education) என்பதன் பொருளாகும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் அடிப்படைக் கூறுகள்

 • அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி வசதிகளை ஏற்படுத்துதல்.
 • பள்ளி வயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல். 3. அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தம் இல்லாது தொடர வைத்தல்.
 • அனைத்து குழந்தைகளும் தேக்கமில்லாது 5 ஆண்டுக்கல்வியை 5 ஆண்டுகளிலும், 8 ஆண்டுக் கல்வியை 8 ஆண்டுகளிலும் நிறைவு செய்தல்.
 • அனைத்துக் குழந்தைகளும் முழு அடைவுத்திறன் பெறுதல்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்னும் இலக்கை எட்ட முடியாததற்கான காரணங்கள்

இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கத்திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளைப் பல காரணங்களால் தேசிய அளவில் இந்நாள் வரை எட்ட இயலவில்லை. இதற்கான முக்கிய காரணங்களில் சிலவற்றைக் காண்போம்.

 • பொருளாதாரக் காரணிகள் : தொடக்கப்பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டிய மாணவர்கள் குடும்ப வறுமைநிலைமையின் காரணமாகப் பள்ளியில் சேராதுவிட்டுவிடுகின்றனர். இளஞ்சிறார்கள், கூலி வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கவே விரும்புகின்றனர். கட்டாயக் கல்விச் சட்டத்தை பல மாநில அரசுகள் இயற்றியும் சில பெற்றோர்கள் பிள்ளைகளைப்பள்ளிக்கு அனுப்பவில்லை. இதற்கான காரணம் அவர்களது ஏழ்மைநிலையே.
 • பெற்றோரின் கல்வி விழிபுணர்வின்மை : படித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைப் போல, படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. பெற்றோர்களின் கல்வி அறிவின்மை, குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் ஒரு தடையாக உள்ளது.
 • சமூக இனத்தடைகள் : நமது நாட்டிலுள்ள சில சமூக இனத்தவர்களிடையே காணப்படும் பழக்க வழக்கங்களின் காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.
 • மக்களின் சமூக, சமயப்பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தடைகள் : இந்திய மக்களின் சமூகப் பழக்கம், சிலரின் சமயப்பழக்கம் குழந்தைகள் பள்ளியில் சேருவதற்குத் தடையாக உள்ளது. ஒரு சில மதப்பிரிவினர் தங்களின் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், படிப்பை நிறுத்திவிடுகின்றனர். ஒரு சில மதத்தினர் பெண்கல்வியின் அவசியத்தை முழுமையாக உணராதிருக்கின்றனர்.
 • வசிக்கும் பகுதியால் ஏற்படும் தடைகள் : கிராமப்புறத்திலுள்ள பெற்றோர்களில் சிலர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்குச் சரியாக அனுப்புவதில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மலைப்பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் இப்பகுதிகளில் பள்ளிகளும் அதிகம் இருப்பதில்லை. மாணவர்கள் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. இக்குறையை நீக்க அனைவர்க்கும் கல்வித்திட்டம் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வருகின்றது.
 • கல்வி சார்ந்த தடைகள் : பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தவர்கள் 5ஆம் வகுப்பு முடிப்பதற்குள் படிப்பை இடையிலே நிறுத்திவிடுவதாலும் (Drop Outs) மாணவர்களுக்குத் தேர்ச்சி தராமல் ஒரே வகுப்பில் நிறுத்தி வைப்பதாலும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் பள்ளிப்பாடங்கள், கவர்ச்சியற்று இருப்பதாலும், நடைமுறை வாழ்க்கைக்குத் தொடர்புடையதாக இல்லாமலிருப்பதாலும், மாணவர்களுக்கு ஆர்வமூட்டாத கற்பித்தல் முறைகளினாலும் மாணவர்களிடம் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்துவிடுகிறது.
 • நிர்வாகத் தடைகள் : கல்வித்தர மேலாண்மை குன்றிய பள்ளிகளிலும் தனி மாணவர் அடைவை நிறைவேற்றாத பள்ளிகளிலும் மாணவர்கள் படிப்பைத் தொடராது நின்று விடுகின்றனர். பள்ளி மேற்பார்வை, தர உத்தரவாதம் சார்ந்த அலுவலர்களின் நிர்வாகக் குறைபாடுகளாலும் பள்ளிக் குழந்தைகள் பாதியில் நிற்கும் நிலை அறவே களையப்படாமல் போகிறது.
 • மாணாக்கர் தடைகள் : உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றிய, பிரச்சனைக்குரிய நெறிபிறழ் நடத்தையுடைய குழந்தைகளால் தொடக்கப்பள்ளிகளில் இணக்கமாகத் தொடர்ந்து கல்வி பெற முடியாமல் போகிறது.
 • மக்கள் தொகைப் பெருக்கம் : இந்தியாவில் 1971 இல் 6/14 முதல் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 11.7 கோடியாகும். இது கி.பி. 2001 இல் 26 கோடியாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வாறு உயரும் போது, தற்போதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்குப் (253 இலட்சம்) பதிலாக 50 இலட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவர். இதற்கான செலவு அதிகம் பிடிக்கும். இதனைச் சமாளிக்கப் பெருநிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமும் அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை அடைவதற்குத் தடையாக உள்ளது.

கல்வி வளர்ச்சி அளவீட்டுக் குறியீடுகள்

எழுத்தறிவுச் சதவீதம் : ஒரு நாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெறுவதால் எல்லாருக்கும் தற்சார்பும், மனிதவள மேம்பாடும் கிட்டுகிறது. ஒரு நாட்டின் மேம்பாட்டைக் கணக்கிட எழுத்தறிவுச் சதவீதம் அடிப்படையானதோர் மூலதனமாகவும் குறியீடாகவும் பயன்படுகிறது. எல்லார்க்கும் எழுத்தறிவு, எல்லார்க்கும் எல்லாம் என்ற மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லவல்லதாகும். எழுத்தறிவுச் சதவீதத்தைப் பின்வருமாறு தொகுப்பாகவும் கூறுகளாகவும் குறியீடுகளிட்டு ஆய்ந்தறியலாம். எழுத்தறிவு பெற்றோர் சதவீதத்தை ஆண்-பெண் ஊரகம்-நகரகம், தாழ்த்தப்பட்டோர், மரபுக்குடிகள், மிகவும் பின்தங்கிய, பின்தங்கிய சமூகப்பிரிவினர் எனவும், கிராமங்கள், வார்டுகள் தொடர்ந்து கண்காணித்து அவர்களுள் எத்தனை பேர் ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர், எத்தனை பேர் இடையில் உதிர்ந்து விடுகின்றனர், எத்தனை பேர் ஒரு வகுப்பை முடிக்க ஓராண்டுக்குமேல் எடுத்துக் கொண்டுதோல்வியுறுகின்றனர் என்பதையெல்லாம் கணக்கிட இயலும். அக்குறிப்பிட்ட ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை நூறு எனில் அவர்களுள் நிறைவுசெய்தோர் சதவீதம்,இடையில் நின்றோர் சதவீதம், ஒரே வகுப்பில் மீளப் பயில்வோர் சதவீதம் ஆகியவற்றை எளிதில் கணக்கிடலாம்.

மாணவரின் கற்றல் அடைவை அளவிடுதல்

கற்றல் என்பது ஒரு மனவினை. கற்றலை அளவிடுதல் ஆழ்ந்த சிந்தனைக்குரிய நுணுக்கமானதொன்றாகும். ஒவ்வொரு செயலாலும் மனதினுள் நிகழும் மாற்றத்தை, கற்றல் நிகழ்த்துவோரால் எதிர்பார்க்கப்படும் நடத்தை மாற்றத்தை அல்லது துலங்கலைக் கொண்டுதான் ஒருவர் கண்டுகொள்ள முடியும். அப்படி நிகழும் கற்றலும்கூட ஆழமானதா, மேலோட்டமானதா, நிலைத்த, நெடுநாட்களுக்குப் பலன் தரவல்லதா, தாற்காலிகமானதா என்பனவற்றையெல்லாம் உடனுக்குடன் வரையறுத்துக் கூறிவிடமுடிவதில்லை என்றாலும் தாம் வழங்கிய கற்றல் அனுபவங்களால் உரிய எதிர்ப்பார்க்கப்படும் கற்றல்நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய வேண்டுவதும் அவசியமே.

இன்றுள்ள வகுப்பறைக் கற்றல் களத்தில் அன்றாடம் நிகழும் கற்றல் மாணவரின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல உதவுவதாய் அமைந்துள்ளது. கற்றல் நிகழ்வு தனிமாணவர் அடைவு வேறுபாடுகளைச் சார்ந்திருப்பதும் உண்மையே. எனவே கற்கும் விரைவு இயல்பானதாய் அமைய நிர்பந்தமற்ற, வல்லந்தமற்ற தன்மை செயல்வழிக் கற்றல் அணுகுமுறையில் பேணப்பட்டு வருகிறது. எனினும் ஒவ்வொரு திறனுக்கும் அடைவு மதிப்பீட்டுச் செயல்களும், மைல் கற்களும், அடைவு ஏணிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ளமை கண்கூடு. மாணவர்களின் அடைவை ஒருவாறு இம்முறையால் அறிதலும் சாத்தியமே. மதிப்பெண்ணிட்டுத்தான் மாணவர் அடைவை அளக்க முடியும் என்பதையும் ஏற்க இயலவில்லை. மதிப்பெண்ணிட்டு அளக்கும் முறை நம்மால் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்படுவதால் அதற்கு மாறான ஒன்றைச் சிந்திக்கவும் சிலர் தயங்குகின்றனர்.

அனைவருக்கும் கல்வி வாய்ப்பினை அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்

தொடக்கப்பள்ளிகளின் வளர்ச்சி 1947இல் இந்தியாவில் 173 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளே இருந்தன. ஆனால் 1990-91 இல் இவை ஏறத்தாழ 500 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்துள்ளன. இதே போல் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கை தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்ததைவிடப் பல லட்சங்கள் கூடியுள்ளது.

கலைத்திட்டம்

மாணவர்களின் தேவைகள், அவர்கள் வாழும் சூழல்கள், உலகின் கல்விப் புதுமைகளின் வளர்ச்சி இவற்றையொட்டி பயனுள்ள பொருள் பொதிந்த கற்றல் அனுபவங்கள் இன்று கலைத்திட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. சான்றாக, சுற்றுச்சூழல் கல்வி, மக்கள் தொகைக்கல்வி, வேலைத் திறனளிக்கும் கல்வி, மதிப்புணர்வுக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தாய் மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி கடைப்பிடிக்கப்படுகிறது.

நலிவடைந்த பிரிவுக் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை

இந்திய அரசியல் சாசனத்திலுள்ள 46 ஆவது பிரிவு, ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரின் கல்வி முன்னேற்றத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதன்படி இம்மக்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை, இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள், இலவச விடுதிகள் ஆகியன வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நிதி ஒதுக்கீடு

தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்காக, மத்திய மாநில அரசுகள் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. மொத்தக்கல்விச் செலவில் 48.5 விழுக்காடு தொடக்க நிலைக்கல்விக்காகச் செலவிடப்பட்டுவருகிறது. இதுதவிர தனியார் அமைப்புகளும் கல்விக்காகப் பெரும் தொகை செலவிட்டு வருகின்றன.

சில புதிய திட்டங்கள்

 • ஒவ்வொரு பள்ளியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக (Mainimum Needs Programme) ஒன்று மைய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
 • படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுபவர்களுக்கு 6 முதல் 14 வயது வரையில் முறைசாராக் கல்வி தொடங்கப்பட்டது.
 • (Wastage and stagnation) நிகழாதிருக்க 1 முதல் 5 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்னும் முறை பின்பற்றப்பட்டது.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் தேசிய புதிய கல்விக்கொள்கை (1986)இல் சில திட்டங்களைத் தீட்டியுள்ளது. கிராமப்புற மாணவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் பள்ளி நாள்களையும் விடுமுறை நாள்களையும் மாற்றி அமைத்தல். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்காக நாடெங்கும் மாவட்ட ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவனங்கள் (DIETS) திறக்கப்பட்டுள்ளன. (National Literacy Mission) தொடங்கப்பட்டு 5000 மக்கள் தொகை உள்ள கிராமப்புறங்களில் மக்கள் கல்வி மையம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முறைசாராக் கல்வியின் வழியிலும் அனைவருக்கம் கல்வி தரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள்

 • நாடெங்கும் புதிய தொடக்கப்பள்ளிகள் பல திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 • பள்ளிகளில் கல்வி கற்கக் கட்டணம் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 வகுப்பு முடிய இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. 10-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு தமிழ் போதனா மொழி வழிப்படிப்பவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
 • ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. நண்பகலில் பள்ளியில் மாணவர்களுக்குச் சத்துணவு அளிக்கப்படுகிறது.
 • மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகளில் தங்கிப் படிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.
 • நலிந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் பள்ளியின் இறுதி வகுப்பு வரை வேறுபாடு இன்றிப் படித்துப் பயன்பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
 • ஆதிதிராவிட கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் அரிமாசங்கங்கள், ரோட்டரி சங்கங்கள்,மக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன பல்வேறு வழியில் பணம், கட்டடம், தளவாடம், விளையாட்டு இடம், சத்துணவுக்கான பல்வகை பொருட்கள் இலவசமாக வழங்க ஊக்குவித்து வருகின்றன.
 • பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி அந்தந்த ஊர்மக்களே பள்ளித் தேவைகளை பூர்த்தி செய்வதில் உடல் உழைப்பு, பண உதவி, பண்டங்கள், பாத்திரங்கள் வழங்க அரசு ஊக்குவித்து வருகிறது.
 • பள்ளிச்சிறுவர்களின் உடல் நலத்தை இலவசமாக தக்க மருத்துவர்கள் மூலம் சோதித்து குறைகளைக்களைய இலவச மருத்தவ வசதிகள் செய்யப்படுகின்றன.
 • பாடங்கள் கவர்ச்சிகரமாகவும், சுவையோடும், பொருத்தமான அணுகுமுறைகளில் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • குறைந்த விலையில் புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் அரசே வழங்கி வணிகர்கள் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
 • பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்களைத் தர உயர்வு செய்துள்ளது.
 • தேச ஒருமைப் பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
 • விளையாட்டு, கைவேலை, கலைவேலை, ஈடுபாடுகள், அறிவியல் துணைப் பொருட்கள் ஆகியவற்றில் அரசு அக்கறை காட்டி ஆண்டு தோறும் போதுமான பண ஒதுக்கீடு செய்து வருகிறது. கண்காட்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
 • ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை உயர்த்தி, ஆசிரியர்கள் கவலையின்றிதம் கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற வகையில் சில சலுகைகளையும், அரசு வழங்கி வருகிறது.
 • பிள்ளைகளின் சேர்க்கை, படிப்பை முடிக்கச் செய்தல், தேக்கம், இடைநிறுத்தமின்மை போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 • ஆண்டு தோறும் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியும், இறுதித் தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூபாய். ஆயிரம் பரிசுத்தொகை அளித்தும் ஊக்குவிக்கிறது

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.82926829268
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top