பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / தனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்

தனிநபர் மற்றும் வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஜனநாயக வெற்றிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படை தேவையாக கல்வி அமைகிறது. அனைவருக்கும் தொடக்கக் கல்வி (Universalisation of Elementary Education) என்ற இலக்கை அடைய பல கல்வி குழுக்கள் பரிந்துரை செய்ததின் அடிப்படையில் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பது நமது தேசிய குறிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது. இக்குறிக்கோளை அடைய நடுவணி, மாநில அரசுகள் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்தியாவில் அனைவருக்கும் தொடக்க கல்வி

இந்திய அரசியலமைப்பின் சாசனப்பிரிவு 45-ன் படி ''அரசு(நடுவண், மாநில அரசுகள்) பதினான்கு வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியினை இச்சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட பத்து ஆண்டு காலத்திற்குள் வழங்க வேண்டும்” என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கவேண்டும்.

அனைவருக்கும் தொடக்க கல்வி பின்வரும் ஐந்து அம்சங்களை கொண்டது

 1. அனைவருக்கும் கல்விப்பயில வாய்ப்பு கிடைக்க செய்தல்.
 2. அனைவரையும் பள்ளியில் சேர்த்தல்.
 3. பள்ளியில் சேர்ந்த அனைவரையும் இருத்தி வைத்தல்.
 4. கல்வியில் அனைவரையும் பங்கு பெற செய்தல்.
 5. அனைவரையும் கற்றல் அடைவு பெற செய்தல்.

அனைவருக்கும் கல்விப்பயில வாய்ப்பு கிடைக்க செய்தல்

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் போதுமான பள்ளி வசதிகள் அளிக்கப்பட வேண்டும். தொடக்கப்பள்ளியானது குழந்தைகள் வசிக்கும் இடத்திலிருந்து 1 கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குள் அமைய வேண்டும். எனவே, நாடெங்கும் தொடக்கப் பள்ளிகள் நிறைய திறக்க வேண்டும்.

அனைவரையும் பள்ளியில் சேர்த்தல்

அவ்வாறு தொடங்கப்பட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்தல். அரசாங்கம் 6-14 வயதிலான குழந்தைகளை அப்பள்ளியில் சேர்க்க முடிவெடுத்துள்ளது. நாடு முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதுமான நடவடிக்கை எடுத்தல் அவசியம். புதிய கல்விக் கொள்கையின் (1986), '2015-க்குள் அனைவருக்கும் தொடக்கக்கல்வி' என்ற இலக்கை அடைதலுக்கு இச்செயல் பயனளிக்கும்.

பள்ளியில் சேர்ந்த அனைவரையும் இருத்தி வைத்தல்

மாணவர் சேர்க்கை ஒன்று மட்டுமே கொண்டு அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்ட இயலாது. அவ்வாறு சேர்ந்த மாணவர்களை பள்ளியில் தொடர்ச்சியாக கல்வி கற்க செய்தல் அவசியமாகும். பள்ளிப்படிப்பு முடியும் வரை அவர்கள் ஏதேனும் காரணத்தால் பள்ளியிலிருந்து விலகாது இருத்தல் வேண்டும். ஒருவேளை இடையில் அவர்கள் பள்ளிப்படிப்பை தொடராவிடின், அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்ற இலக்கை எட்ட இயலாமல் போய்விடும்.

அனைவரையும் பங்கு பெற செய்தல்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் சமுதாயத்தின் பங்களிப்பானது இன்றியமையாதது ஆகும். அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற திட்டத்தினை செயல்முறைப் படுத்துவதில் தனக்கு தேவையானவற்றை அடையாளம் கொள்வதில் சமுதாயம் பெரும் பொறுப்பு வகிக்கிறது. தொடக்கக்கல்விக்கு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர், உள்ளூர் சமுதாயத்தில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி வழங்க வேண்டும்.

அனைவரையும் கற்றல் அடைவு பெற செய்தல்

கற்பவரின் கற்றல் அடைவை ஒட்டியே அனைவருக்கும் தொடக்க கல்வி என்ற இலக்கின் வெற்றி அமையும். 'குறைந்த பட்ச கற்றல் அடைவை' அடிப்படையாக கொண்டு கல்வி அடைவு நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கற்றல் அடைவை மதிப்பீடு செய்ய தொடர்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) வலியுறுத்தப்படுகிறது. 2015-க்குள் "அனைவருக்கும் கல்வி” மூலம் அனைவரும் தொடக்க கல்வியினை அடைய உதவி புரியும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டங்கள்

சர்வ சிக்ஷ அபியான் (SSA)

சர்வ சிக்ஷ அபியான் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற குறிக்கோளை அடைய 2000-2001 -ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. சர்வ சிக்ஷ அபியான் என்றால் "அனைவருக்கும் கல்வி” என்பது பொருள்.

நாடு முழுவதும் பின்பற்றும் கல்வி முறையை மாற்றி கல்வித்தரத்தினை உயர்த்துவதே இதன் குறிக்கோளாகும். குழந்தைகள் தங்கள் அறிவையும், திறனையும் மேம்படுத்தவும் கல்வியில் சமவாய்ப்பினை வழங்கவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.

பஞ்சாயத்து, பள்ளி மேலாண்மை குழுக்கள், கிராமப்புற மற்றும் நகரப்புற தாழ்த்தப்பட்டோருக்கான குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பழங்குடி மக்கள் ஆலோசனை சபை, மற்றும் பிற தொடக்கப்பள்ளி நிர்வாகம் சார்ந்த உள்ளூர் அமைப்புகள் வெற்றிகரமாக இதில் பங்களிக்க முடிகிறது.

SSA-வின் சிறப்பம்சங்கள்

 1. அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் தெளிவான கண்ணோட்டம்.
 2. நாடு முழுவதிற்கும் தரமான அடிப்படைக் கல்வியினை வழங்க பொறுப்பேற்றல்.
 3. அடிப்படை கல்வி மூலம் சமூக நீதியை மேம்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.
 4. இது மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கத்தின் ஓர் கூட்டு முயற்சியாகும்.
 5. மாநில அரசானது தொடக்கக் கல்வி வழங்குவதில் அவர்தம் தொலைநோக்கு பார்வை மேம்படுத்த வாய்ப்பளிக்கிறது.

SSA-வின் நோக்கங்கள்

 1. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி வழங்குதல்.
 2. குழந்தைகள் தத்தம் திறமைகளை பொருட்சார்ந்தும் தெய்வீகத்தன்மை சார்ந்தும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் அடைய வழிவகை செய்தல்.
 3. குழந்தைகளுக்கு விழும் கல்விசார் கற்றலுக்கு வாய்ப்பளித்தல்.
 4. ஆரம்பகால குழந்தை பருவ கவனிப்பிற்கான முக்கியத்துவத்தினை உணர செய்தல்.

அனைவரும் தொடக்கக்கல்வியினை அடைவதிலுள்ள சவால்கள்

அரசாங்கத்திடம் தொடக்கக்கல்வியை வெற்றிகரமாக்க பல்வேறு அணுகுமுறைகள் இருந்த போதிலும், இந்தியாவில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்ற நிலையை உருவாக்குவதில் நிறைய தடைகள் உள்ளன. அவற்றினைப் பற்றி கீழே காணலாம்.

அ) அரசாங்கத்தின் கொள்கை

இந்திய அரசியலமைப்பின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்கிறது. ஆனால் இதுவரை குறித்த இலக்கை அடைய இயலவில்லை. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய அரசுத்திட்டங்கள் கருத்தியல்வாத அடிப்படையிலானது.

ஆதாரக் கல்வியானது தேசியக் கல்வியின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை குறிக்கோளாக கொண்டு தொடக்கப் பள்ளிகள் அடிப்படை பள்ளிகளாக உருவெடுக்கிறது. நமது தேசம் அதிக மக்கள் தொகையை கொண்டது. அதிகப்படியான தொடக்கப் பள்ளியை கொண்டு வருவதற்கு அதிக பொருட்செலவு செய்ய இயலாத நிலையில் உள்ளது.

(ஆ) கல்வி நிர்வாகம்

பெரும்பாலான மாநிலங்களில் அனைவருக்கும் தொடக்க கல்வி என்ற பொறுப்பானது வட்டாரம், முனிசிபாலிட்டி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்களிடம் உள்ளது. தொடக்க கல்வி விரிவடைதலி(ன் முன்னேற்றமானது திறன் குன்றிய பள்ளி நிறுவனங்களால் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, இந்திய அரசாங்கமானது தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதையும் இருத்தி வைத்தலையும் கண்காணித்தல் வேண்டும்.

(இ) பணப்பற்றாக்குறை

தொடக்கப்பள்ளி நிலையில் பணச்செலவு ஒரு பெரிய பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக தொடக்கக் கல்வி வழங்கக்கூடிய உள்ளாட்சி பொறுப்பேற்றுள்ள உள்ளூர் நிறுவனங்களின் வருமானம் கட்டாய கல்வி வழங்கி செலவை ஈடுகொடுக்க இயலவில்லை.

(ஈ) பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை

தொடக்கக் கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக அளிக்க போதுமான பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இன்றைய சூழலில், பெரும்பாலான இளம் ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணிபுரிய விரும்புவதில்லை. இருப்பினும், கிராமப்புறங்களில்தான் அதிகப்படியான தொடக்கப்பள்ளிகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதேயாகும்.

(உ) பள்ளி கட்டிடங்கள்

மூன்றாவது, நான்காவது அனைத்திந்திய கல்வி கணக்கெடுப்புக்களின்படி இலட்சக்கணக்கான கிராமங்களில் பள்ளிகள் இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி ஏறக்குறைய 4 லட்சம் பள்ளிகளற்ற கிராமங்கள் இந்தியாவில் உள்ளதாக அறிகிறோம்.

(ஊ) பொருந்தா கலைத்திட்டம்

தொடக்கப் பள்ளிகளின் கலைத்திட்டமானது உள்ளூர் தேவைகளுக்கு மிகவும் பொருந்துவதாக இல்லை. கலைத்திட்டமானது குழந்தைகளுக்கு கல்வி தொடர்ச்சியாக கற்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்ட வேண்டும். உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கைவேலைப்பாடு அளிக்கும் கல்வியை தொடக்கப்பள்ளி வழங்க வேண்டும். மேலும், அத்தகைய கைவினைக் கல்வி திட்டமானது மிகுந்த பொருட்செலவில் இருத்தல் கூடாது.

(எ) தேக்கமும் கழிவும்

அர்ப்பணிப்பு குன்றிய ஆசிரியர்கள், பெற்றோர்களின் பொருளாதார நிலை, கல்வி சூழலின்மை அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் பெரிய தடைக்கற்கலாகத் திகழ்கிறது. எனவே, தேக்கத்தையும், கழிவையும் தொடக்கக்கல்வியில் குறைக்க நடைமுறை கல்வி அமைப்பினையும் கலைத்திட்டத்தினையும் மறுசீரமைப்பு செய்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது போதிய எண்ணிக்கையில் பள்ளிக் கட்டிடங்கள், முறையான கற்பித்தல் முறைகள், பெற்றோர்களுக்கு கல்வி போன்றவை அளிக்க வேண்டும். ஏனெனில் இவை தான் தொடக்கக் கல்வி நிலையில் தேக்கத்தையும் கழிவையும் குறைக்க இயலும்.

(ஏ) சமூக தீங்குகள்

சமூக தீங்குகளான மூடநம்பிக்கை, எழுத்தறிவின்மை, குழந்தை திருமணம், தீண்டாமை, பர்தா அமைப்பு போன்றவை கட்டாய தொடக்கக் கல்விக்கு தடையாக அமைந்துள்ளது. ஒரு சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே 'குழந்தை திருமணம் தடை சட்டத்திற்கு எதிராக திருமணம் செய்து விடுகின்றனர். இது பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்வியை பெரிதும் பாதிக்கிறது. அறியாமையும், எழுத்தறிவின்மையும் இத்தகைய சமூக தீங்குகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA)

ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) இந்திய அரசால் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும். இது இடைநிலைக் கல்வியை மேம்படுத்தவும் தரத்தை முன்னேற்றவும் கொண்டுவரப்பட்டது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் செயல்படுத்த ஓர் கட்டமைப்பினை கொண்டு வந்தது. இக்கட்டமைப்பானது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்க ஓர் தெளிந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. இது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்க மத்திய மாநில அரசுகளை ஒருசேர கொண்டு வரப்பட்ட ஓர் திட்டமாகும்.

இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியானது இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கு அரசியலமைப்பு உரிமையாக உள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்குவது அத்தியாவசமாக உள்ளது. இது வளர்ந்து வரும் பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

RMSA-வின் தொலைநோக்கு பார்வையானது 14-18 வயதுள்ள குழந்தைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்குவதாகும்.

RMSA திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக மேம்படுத்த கண்காணிக்கிறது.

இடைநிலைக்கல்வியை உயர்த்த உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றை செய்கிறது. இது மட்டுமல்லாது மாதிரி பள்ளிகள் மற்றும் கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் மாணவியர்களுக்கான விடுதி வசதி ஏற்பாடும் செய்து தந்துள்ளது.

RMSA-வின் குறிக்கோள்கள்

 1. இடைநிலை அளவில் கல்வி தரத்தினை உயர்த்த அனைத்து இடைநிலைப் பள்ளிகளும் குறிப்பிட்ட விதிகளின்படி அமையச் செய்தல்.
 2. இடைநிலைப் பள்ளி நிலையில் சேர்க்கை விகிதம் 90% மற்றும் உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 75% ஆக உயர்த்துதல்.
 3. இடைநிலைப் பள்ளியின் அமைவிடமானது வீட்டிலிருந்து 5 கி.மீ. தூரமும், மேல்நிலைப் பள்ளிகள் 7-10 கி.மீ. தூரத்திலும் இருக்கச் செய்தல்.
 4. பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மயினருக்கு இடைநிலைக்கல்வி வழங்குதல்.
 5. நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக மேம்படுத்துதல்.
 6. இடைநிலைப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துதல். அனைவரும் இடைநிலைக் கல்வியினை அடைவதிலுள்ள சவால்கள் நகர்புறங்களில் மாணவியர் சேர்க்கை அதிகமாக இருந்த போதிலும் பழங்குடி இனத்தவர் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

பள்ளிச் சேர்க்கை நடக்காததற்கான காரணங்கள்

 1. பெண் கல்வியின் முக்கியத்துவம், அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வின்மை.
 2. பெற்றோர் எழுத்தறிவின்மை, ஏழ்மை காரணமாக அவர்களிடமிருந்து இருந்து போதுமான ஊக்கமின்மை.
 3. குழந்தை திருமணம்.
 4. பெண் குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியேயும் நடக்கும் வன்கொடுமை.
 5. சில குழந்தைகள் எப்பொழுதும் வீட்டின் நினைவால் வாடுவர்.
 6. பழங்குடி மக்களுக்கு போதுமான பேருந்து வசதியும், பேருந்து கட்டணமும் செலுத்த இயலாமை.
 7. கிராமப்புறங்களில் வாழும் பெற்றோர் தம் பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் முடித்து வைத்தல்.
 8. குடும்ப வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்கு செல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
 9. குழந்தை கல்வித் தொடர ஆசிரியர்களிடம் போதுமான ஆயத்தமின்மை .
 10. குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெற்றோரின் அதிக ஈடுபாடின்மை. அதாவது, குழந்தைகளின் பள்ளி செயல்பாடுகள், வீட்டுப்பாடங்கள், வழிகாட்டுதல், ஆதரவு வழங்குதல் போன்றவற்றில் சுணக்கம் காட்டுவது.

அனைவருக்கும் உயர்கல்வி இயக்கம் (RUSA)

இச்செயல் திட்டமானது ஜூன் திங்கள் 8-வது நாள் 2013-ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் மூலம், மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

RUSA-வின் கூறுகள்

புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குதல், தன்னாட்சி கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய கூறுகளாகும். மற்றொரு முயற்சியாக, ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் கல்லூரிகளை மாதிரி கல்லூரிகளாக மாற்றுவது. திறன் மேம்படுத்த வேண்டி தொழிற்கல்வியானது உயர்கல்வி இயக்கத்துடன் (RUSA) சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுசீரமைப்பு, கட்டிடத் திறன், மறுமலர்ச்சியை RUSA ஆதரிக்கிறது.

RUSA-வின் நோக்கங்கள்

 1. மொத்தப் பதிவு விகிதமாக 12-வது திட்டத்தின் முடிவில், 25.2% இலக்கு மற்றும் 13 வது திட்டத்தின் முடிவில் 32% இலக்கினையும் அடைதல்.
 2. மாநில நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரத்தினை மேம்படுத்த குறிப்பிட்ட நெறிமுறைகள் மற்றும் தரநிலைகள் வழங்கி கட்டாய தர உத்தரவாதமாக்கல்.
 3. மாநில உயர்கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொணர மாநில அளவிலான நிறுவனங்களின் அமைப்பினை திட்டமிடுதல், கண்காணித்தல், மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மற்றும் நிறுவனங்களின் ஆளுமையை மேம்படுத்துதல்.
 4. இணைத்தல், கல்வி செயல்பாடு, தேர்வு அமைப்பில் சீர்த்திருத்தங்களை உறுதி செய்தல்.
 5. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் போதுமான தரமான ஆசிரியர்கள் உள்ளனரா என உறுதி செய்தல் மற்றும் வேலை வாய்ப்பானது அனைத்து நிலைகளில் திறனை வளர்க்கிறதா என உறுதி செய்தல்.
 6. உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி, புதுமைகளை தன்னகத்தே இருக்க அர்ப்பணிப்பு கூடிய சூழ்நிலையை உருவாக்குதல்.
 7. சேர்க்கை இலக்குகளை அடைவதற்காக புதிய நிறுவனங்களை தொடங்குதல். மேலும் ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்களில் கூடுதல் திறனை உருவாக்குதல்.
 8. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் உயர் கல்விக்கான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரி செய்தல்.
 9. மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், பெண்கள், கல்வியாலும் சமூகத்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர்க்கு, பழங்குடியினருக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்குவதன் மூலம் உயர்கல்வியில் சமவாய்ப்பினை மேம்படுத்துதல்.
 10. மாநில பல்கலைக்கழகங்களில் தன்னாட்சியை மேம்படுத்துதல்.

RUSA-வின் சிறப்பம்சங்கள்

 • பல கல்லூரிகளை ஒன்றாக சேர்த்தும், நிறுவப்பட்ட தன்னாட்சி கல்லூரிகளை மேம்படுத்தியும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறது.
 • புதிய மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகள், புதிய தொழிற் கல்லூரிகளில் உருவாக்கி கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
 • கல்வி நிர்வாகிகளின் தலைமைப்பண்பு மேம்பாடு, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், ஆசிரியர் மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
 • தொழிற்கல்வியை உயர் கல்வித் துறையுடன் இணைக்க தனித்தனி பிரிவினை RUSA அமைத்துள்ளது.
 • சீர்த்திருத்தம், மறுசீரமைப்பு, நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவு அளிக்கிறது.
 • அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டினை, போதுமான தலையீடுகள் மூலம் ஒருங்கிணைக்கிறது.
 • தரம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளானது மாநிலம் மற்றும் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி சூழலை ஏற்படுத்துகிறது.
 • கல்வி, தேர்வு சீர்திருத்தம், ஆளுமை போன்றவற்றை உறுதிப்படுத்துதல் மூலம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்க்கல்விக்கு இடையே இணைப்பினை ஏற்படுத்துகிறது.

RUSA-வின் நிதி அமைப்பு

 1. மைய நிதியளிப்பு நெறிமுறை, விளைவு சார்ந்ததாக இருக்கும்.
 2. மனிதவள மேம்பாட்டுத்துறையானது மாநில அரசு மூலம் நிதி உதவியினை பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் வழங்கும்.
 3. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது மாநில உயர் கல்வித் திட்டங்களின் SHEP (State Higher Education Plan) உயர் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
 4. ஒவ்வொரு நிறுவனமும் இத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கூறுகளுக்கும் நிறுவன முன்னேற்ற திட்டத்தினை IDP (Institutional Development Plan) தயார் செய்ய வேண்டும்.
 5. மாநில அளவில் உயர் அடுக்குகளை மாநில உயர்கல்வி திட்டத்தோடு (SHEP) சேர்த்த பின் நிறுவன மேம்பாட்டு மாநில அளவோடு ஒருங்கிணைக்கப்படும்.
 6. மாநில உயர்க் கல்வி சபைகள் திட்டமிடுதல் மற்றும் மதிப்பீட்டினை மேற்கொள்கிறது.

RUSA அடைவில் உள்ள சவால்கள்

(அ) பாலின வேறுபாடு

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மிக சமீபத்தில் நடத்திய மதிப்பீட்டின் மூலம், உயர்கல்வியின் சேர்க்கை ஆண்களுக்கு 22.8 சதவீதமாகவும் பெண்களுக்கு 15.8 சதவீதமாகவும் காட்டுகிறது. கல்வி மற்றும் மருத்துவம் தவிர்த்து அனைத்து துறைகளிலும் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிக அளவில் சேர்க்கையடைந்துள்ளனர்.

(ஆ) போதுமான உள்கட்டமைப்பு வசதியின்மை

அதிகப்படியான நிறுவனங்கள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதியினை போதியளவு மேம்படுத்திக்கொள்வதில்லை.

(இ) குறைந்த தொழிற்துறை பயிற்சி

நிறுவனங்களுக்கும் தொழிற்கூடங்களுக்கும் இடையே நல்லுறவு மிகவும் அவசியம். தொழிற்துறைகளை கலைத்திட்டமிடலில் ஈடுபடுத்துதல், தகவல் தொகுப்புப் பணியில் ஈடுபடுத்தாமை.

(ஈ) ஆசிரியர் பற்றாக்குறை

நிறுவன வளர்ச்சிக்கும், மாணவர் சேர்க்கையின் அளவிற்கும் ஏற்றார் போன்று ஆசிரியர், மாணவர் விகிதத்தில் ஓர் சமநிலையின்மை காணப்படுகிறது.

(உ) குறைந்த அளவு ஆராய்ச்சி

ஒட்டுமொத்த சேர்க்கையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே ஆராய்ச்சி படிப்பு மாணவர்களின் சேர்க்கையுள்ளது.

(ஊ) பல்கலைக்கழகங்களில் அதிகப்படியான கல்லுாரிகளின் இணைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளும் மாநில பல்கலைக்கழகங்களோடு இணைவு பெற்று பல்கலைக்கழகங்களுக்கு இணைவு அமைப்பில் அதிகப்படியான சுமையை அளிக்கிறது. ஆகவே, பல்கலைக்கழகங்களில் கல்வி, ஆய்வின் தரம் குறைகிறது.

ஒருங்கிணைந்த கல்வி

ஒருங்கிணைந்த கல்வியானது இயல்பான பள்ளி அமைப்புடன் சிறப்பு தேவையுடைய குழந்தைக்கான கல்வியையும் குறிக்கிறது. ஒருங்கிணைந்த கல்வியானது மாணவர்களை ஒரு முழு மனிதனாக கருதும் முறைகளிலே கவனம் செலுத்துகிறது. இதன் முக்கிய நோக்கம் எப்படியாவது ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்வதற்காகவோ அல்லது பெரும் பணம் ஈட்டச் செய்வதற்காகவோ அல்ல மாறாக முழு மனிதனை உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு மனிதனின் மனம், உடல், உணர்வு போன்றவை ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வி என்பது தேசியக் கல்விக் கொள்கை (1986) -யின் வெளிப்பாடாகும். இது அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பது மட்டுமல்லாமல் வெற்றியையும் தருவதாகும். இந்த ஒருங்கிணைத்தலானது இயலாமையுடைய குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கச் செய்யும் செயல் முறையை குறிக்கும்.

ஒருங்கிணைந்த கல்வியின் சிறப்பம்சங்கள்

 1. இயலாமையுடைய குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி பார்த்து கொள்வதற்கு மாறானது.
 2. இயலாமையுடைய குழந்தைகளிடையே காணப்படும் தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கு உதவுகிறது.
 3. ஒப்பார் குழவின் உதவியுடன் இயலாமையுடைய மாணவர்கள் இணைந்து கற்க உதவியாக உள்ளது.
 4. சாதாரண குழந்தைகளுடன் இயலாமையுடைய குழந்தைகள் பள்ளி வாழ்க்கையை கொண்டாட வாய்ப்பளிக்கிறது.
 5. சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.
 6. இது சாதாரண குழந்தைகளின் மத்தியில் இயலாமையுடைய குழந்தைகளின் பாசம், அன்பு, மரியாதையை உள்ளீட்டு கொள்கிறது.
 7. இயலாமையுடைய மாணவர்கள் தம் சக மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்க ஊக்கமூட்டுதல்.

இயலாமையுடைய குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி : இந்திய அரசாங்கமானது இயலாமையுடைய குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வியை கொண்டு வந்துள்ளது. இத்தகைய குழந்தைகள் வாழ்வில் தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்று சமுதாயத்தோடு இயைந்து வாழ்வதே இத்திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோளாகும். கல்வி வாய்ப்பினை இயலாமையுடைய குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஓர் திட்டமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.91666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top