பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி

தற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியக் கல்விமுறை மிகவும் விநோதமான நிலையில் இருக்கிறது. ஒருபுறம், எண்ணற்ற பல மாணவர்கள் உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்று சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மறுபுறத்தில், பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படையான எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நிர்ணயிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து வாழ்வியலோடு தொடர்பு இல்லாத தகவல்களையும் புள்ளி விவரங்களையும் மனப்பாடம் செய்வதே கல்விமுறை என்றாகி விட்டது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. பாடத்திட்டங்கள் மாணவர்களின் நினைவாற்றலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, அவர்களுடைய பிற ஆளுமைக் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை என்பதிலும் நியாயம் இருக்கிறது. எனினும், நம் மாணவர்களுக்கு அர்த்தமுள்ள கல்வியை போதிக்க வேண்டும் என்பதற் காகப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன; ஆலோசனைகள் முன் வைக்கப்படுகின்றன. கல்வியியல் சிந்தனையாளர்களும் தொடர்முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் இயல்பை பற்றிய அக்கறை ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் சமூக வசிப்பிடத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படும் மாறுபாடான கல்வியைப் பற்றி மறுபுறம் கவலைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நம்முடைய சமூக அமைப்பே பலதரப்பட்டதாக இருப்பதால் கல்வியும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாகவே உள்ளது. எனவே சாதி, இனம், சமயம், பால் வேறுபாடுகளின் அடிப்படையில்தான் மாணவர்களின் பள்ளியில் தரமும் இருக்கிறது எனலாம். சமூகத்தில் வசதியான, செல்வச்செழிப்புடைய பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய, போதிய கட்டமைப்பு வசதிகள் கொண்ட, தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட தரமான பள்ளிகள் உள்ளன. இதற்கு நேர்மாறாக, கட்டமைப்பு வசதிகள் இல்லாத, அரை வேக்காடான ஆசிரியர்களைக் கொண்ட, படிக்கவே விரும்பாத, எப்போதாவது மட்டுமே பள்ளிக்கு வந்துபோகிற மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கூடங்களும் உள்ளன. இவ்வாறாக, பல படிநிலைகளைக் கொண்டதாக, வெவ்வேறு தரமுள்ளதாகப் பள்ளிகள் உள்ளன். முறையான பள்ளிக்கல்வியில் மட்டுமின்றி, பள்ளிக்கல்விக்கு வெளியே உள்ள முறைசாராக்கல்வியிலும் இந்தப் படிநிலைகளைக் காணலாம்.

நமது கல்வி முறையைப் பிடித்திருக்கும் தீமைகளைப் பற்றிய பலவாறான விமர்சனங்கள் வருகின்றன. அவற்றில் சில, முறையான ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டவை; வேறு சில, மாணவர்களின் தரத்தைப் பற்றிப் பல்வேறு அரசு அமைப்புகளும் அரசு சாராத அமைப்புகளும் நடத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையிலானவை. தரமான கல்வி, கல்வி பெறுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவை எங்கோ ஒருசில பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தால் போதாது. பாடத்திட்டம் முதற் கொண்டு, ஆசிரியர்கள் வரை தரமான கல்விக்குத் தேவையான அனைத்துமே எல்லா இடங்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், எவரையும் விலக்கி விடாததாகவும் தரமான கல்வி அமைய வேண்டும். இந்தியாவைப் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொண்ட நாடுகளில், அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கும் பொறுப்பு அரசுக்கே உண்டு. ஆதாயத்தையே குறிக்கோளாகக் கொண்ட தனியாரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. 1990களில் தொடக்கத்தில் ஏற்பட்ட புதிய தாராளமயச் சூழலுக்குப் பின்னர், அரசின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து, கல்வித் துறையிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. அதுவரை அரசுப்பள்ளிகளில் இலவசக் கல்வி பயின்ற மாணவர்கள், புதிதாகத் தோன்றிய தனியார் பள்ளிகளில், மேலான கல்வி கிடைக்கிறது என்ற மாயையில் சேர்ந்து விட்டனர். புதிய பள்ளிகளைத் தொடங்கிய தனியார், அவற்றை லாபம் தரும் தொழிலாகவே பார்க்கின்றனர்.

கல்விபெறும் உரிமைச்சட்டம் 2009

இந்தப் பின்னணியில், மாணவர்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வியை அளிக்க வகை செய்யும், கல்வியை ஓர் அடிப்படை உரிமையாக்கிய கல்வி உரிமைச் சட்டம் 2009 இயற்றப்பட்டது. ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக்கல்வி அளிக்க இச்சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தில் கல்வியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய நெறிமுறைகள் இடம்பெற்றிருந்தாலும், தரமான கல்வி என்பதை பற்றிக் குறிப்பிடும்போது, ஆசிரியர்-மாணவர் விகிதம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள், பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களுக்கான வேலை நேரம் போன்றவை பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. களை, மக்கள் தொகை உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்கள், பேரிடர் நிவாரணம் ஆகியவை சம்பந்தப்பட்ட வேலைகள் தவிர மற்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் பிரம்படி உள்ளிட்ட தண்டனைகள் வழங்கக்கூடாது என்றும், அவர்களை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும், பள்ளியில் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், நன்கொடை வசூலிக்கக் கூடாது என்றும், ஆசிரியர்கள் தனியாக ட்யூஷன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பல விதிமுறைகள் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளன. இவ்வாறாக இந்தச்சட்டத்தின் நெறிமுறைகள் சீரியவையாக இருந்தாலும் அவற்றை முறையாகச் செயல்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணித்துத் தக்க நடவடிக்கைகள் எடுக்கவும் உரிய ஏற்பாடுகள் அவசியம்.

தேசிய பாடத்திட்டக்கட்டமைப்பு 2005

கல்வி உரிமைச் சட்டத்தில், குழந்தைகள் இணக்கமாகக் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகின்றவாறு பாடத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் யாவும், பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுபவையாக இல்லை என்றும், அதனால் அவர்கள் படிப்பைத் தொடர்வது இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளன. அண்மைக்கால தேசிய பாடத்திட்டக்கட்டமைப்பு 2015ம் கூட இதையே குறிப்பிட்டுள்ளது. தரமான கல்வி என்பது மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதாகவும், அவர்களின் அனுபவம் மூலமாக அறிவு பெறுவதாகவும் இருக்க வேண்டும் எனவும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய அரசுத் திட்டங்கள்

அரசாங்கத்தின் ஆதரவில் அல்லது நிதி உதவியில் செயல்படும் நிறுவனங்களின் தோல்விகளுக்கு, அரசே பொறுப்பேற்றுக் கொண்டு, எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. சமூக நலனுக்கான கல்வியை அளிக்க, கல்வித்துறையில் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள், அவற்றுக்கான முன்முயற்சிகள் பற்றி நாம் விமர்சனப்போக்கில் ஆராய்வது அவசியமானதாகும். தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை பல்வேறு சமூக, பண்பாட்டு, பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்டவர்களுக்கு ஏற்றவாறு பல திட்டங்களைச் செயல்படுத்திக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. விஷேச கவனம் செலுத்த வேண்டிய மாற்றுத்திறனாளர், மெதுவாகக் கற்கும் இயல்புடையோர் எனப் பலருக்கும் வெவ்வேறான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண் குழந்தையைப் பேணுவோம். பெண் குழந்தைக்குக் கற்பிப்போம் (பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ) என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வகுப்பில் இருந்து அனைத்து மாணவிகளும் தொடர்ந்து அடுத்தடுத்த மேல் வகுப்புகளுக்குச் சென்று படிப்பைத் தொடர்வதை உறுதி செய்யும் பள்ளி நிர்வாகத்திற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் உதான் (UDDAN) என்ற திட்டத்தின்படி, மிகவும் அனுகூலமற்ற சூழ்நிலையில் இருந்து வரும் பெண் குழந்தைகளுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தையும் சிறுபான்மை இனத்தையும் சேர்ந்த மாணவிகளுக்கும், பள்ளிக் கல்வியை முடித்தவுடன், மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழில் படிப்புகளைத் தொடர்வதற்கு உதவியாக மத்தியக் கல்வி வாரியம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. மிகவும் ஒதுங்கியுள்ள வடகிழக்கு மாநிலங்களின் பூகோள இருப்பிடத்தைக் கருத்தில்கொண்டு, அங்குள்ள மாணவர்களுக்கென பிரத்யேகத் திட்டங்களும் உண்டு. கற்பிப்போரின் செயல்பாடுகளை இன்னும் துடிப்பானதாக்க தொழில்நுட்ப வசதிகளும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. ஸ்வாயம் (SWAYAM) என்ற, கற்பதில் விருப்பார்வம் கொண்ட இளம் மனங்களுக்கான கற்றல் வலைத்தளங்கள் என்ற திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதிஉதவி பெறும் மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் ஆகியவற்றின் பேராசிரியர்கள், இணைய வழியில் இலவச உயர்கல்வியை நம் நாட்டு இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். காலம் காலமாக, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த தேசியக் கல்வி நிறுவனங்களின் சேவைகள், ஆர்வமுள்ள எல்லாருக்கும் கிடைக்க வழி செய்துள்ள இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இதேபோல இந்தக்கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்ற தரமான பாடங்களும் பாடம் தொடர்பான விஷயங்களும், தேசிய மின்னணு நூலகத்தில் பதிவேற்றப்படுகின்றன. எனவே நாட்டின் எந்த மூலையிலும் உள்ள மாணவர்கள் தமது மடிக்கணினி அல்லது செல்பேசி மூலமாகவே அவற்றைப் பெற்றுப் பயனடையலாம். இதே போல் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் முறையும் எளிதாகிவிட்டது. இந்திய அரசு மூலம் வழங்கப்படும் எந்த ஒரு கல்வி உதவித் தொகையானாலும் அதற்கு ஆன் - லைன் மூலம் விண்ணப்பிக்க ஒர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் நடத்தும் தேசிய மதிப்பீட்டு ஆய்வினை, கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (NCERT) மூலமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் நாடெங்கிலும் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைப் பற்றிய விவரத் தொகுப்பிற்காகவும், அவற்றைத் தரப்படுத்துவதற்காகவும் இணைய தளம் ஏற்படுத்தப்படும். இவைதவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் இருபது கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களின் கல்வித் தேர்ச்சி விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் அவர்களில் யாரும் படிப்பைப் பாதியில் விட்டுவிடாமல், தொடர்ந்து படிக்கத் தேவையான ஊக்கம் அளிக்கப்படும்.

வகுப்பறைகளின் எந்திரத்தனமான போக்கினை விட்டொழித்து, வெளியுலகின் துடிப்பான இயக்கத்திற்கு ஏற்ப மாணவர்களிடையே ஆராய்ச்சி உணர்வையும், புத்தாக்க செயல்களையும் தூண்டுவதற்காக, ராஷ்ட்ரீய அவிஸ்கார் அபியான் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறிவியலும் கணிதவியலிலும் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி, தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் நடத்தும் புதுமையான இ.படசாலா என்ற மின்னணு வகுப்பறை திட்டத்தின்மூலம், எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் தரமான பயிற்றுவிக்கும் கருவிகள் இலவசமாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

கல்வித்துறைக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆதரவான இது போன்ற நடவடிக்கைகள் பலவற்றை அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் இவற்றினால், பழமையான பள்ளிக்கூடச் சூழலையும், கல்லூரிச் சூழலையும் மேம்படுத் தாமல் அலட்சியம் செய்கிற போக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமீபத் திலும், அதற்கு முன்னரும் மேற்கொண்ட பல ஆய்வுகளும், பள்ளி அளவில், அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் கற்றலின் நிலைமை திருப்திகரமாக இல்லை என்றே தெரிவித்துள்ளன. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மை பற்றி பேசிக்கொண்டிராமல், மாணவர்கள் கற்றுக்கொள்ளாமல் போகும் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யும் பணியில்தான் நாம் ஈடுபட வேண்டும். பொதுவாகவே கல்வித் தரத்தைப் பற்றி தொடக்கப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எண்ணறிவு, எழுத்தறிவு பற்றியே உள்ளன. பெரும்பாலும் பள்ளிகள் இவற்றை மாணவர்களுக்குக் கற்பித்துவிடும். எனவே, வகுப்பறைக்கு அப்பால் பொதுவெளியில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதாக ஆய்வுகள் மாற வேண்டும்.

முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்ச்சி பெறாத வராக ஆக்கக்கூடாது என்ற ஏற்பாட்டைக் கைவிட வேண்டும் என்று கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் கூறியுள்ளது கவலை தருவதாகும். கல்வி கற்பதற்கு இணக்கமான, தேவையான பல சூழல்களும் காரணிகளும் இல்லாதபோது, தேர்வில் தோல்வியடைகிற மாணவரை, மேல் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்காமல் இருப்பது சரியா என்று நாம் யோசிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் கற்றலில் பின்தங்கியிருப்பதற்கு, அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களையே பொறுப்பாளி ஆக்கவேண்டும். அவ்வாறு பொறுப்பாளி ஆக்குவதற்கு முன்பாக, அவர்களுடைய பணியிடத்தில் உள்ள சிரமங்களையும் தடைகளையும் களைய வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தொடக்க பள்ளிகளிலேயே இனி மடிக் கணினிகளும், ஸ்மார்ட் செல்பேசிகளும் பயிற்றுவிக்கும் கருவிகளாகிவிடும். அதற்கேற்ப ஆசிரியர்களும் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வியின் மேம்பாட்டிற்கான அரசு செயல்படுத்தும் திட்டங்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்புடையவை என்றாலும், அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்கும் சமமான வாய்ப்பு களை உருவாக்குவதில்தான் முக்கிய கவனம் வேண்டும். கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் சுமூகமான சூழல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அடிப்படை அலகாக பள்ளிகளே இருக்க வேண்டும். கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும், தேசியப்பாடத்திட்டக்கடமைப்பு 2005 ஆகியவற்றின் அப்படையில், பாடத்திட்டம், பயிற்றுமுறை ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். எட்டாம் வகுப்பு வரை மாணவர்களைத் தேர்ச்சி பெற அனுமதிக்கும் முறையை மாற்றுவதற்குப் பதிலாக, மூன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளையும், 14 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களையும் இந்தக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது பற்றியும் பரிசீலிக்கலாம்

ஆதாரம் : திட்டம் மாத நாளிதழ்

ஆக்கம் : ஷா நவானி, பேராசிரியர் மற்றும் தலைவர், கல்வி மையம், டாடா சமூக அறிவியல் நிறுவனம், மும்பை

2.98571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top