பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பண்பாட்டுப் பாரம்பரியம்

பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியாவில் பிறக்கும் குழந்தை பல்லாயிரம் ஆண்டுகளின் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியில் பிறந்து வளர்கின்றது. இந்தியா பல மொழிகள் பேசும், வேறுபட்ட பல கலாச்சாரங்களைக் கொண்ட பல இன மக்கள் வாழும் நாடு ஆகும். பல்வேறு கலைகள், இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறப்புப் பெற்ற கலைவாணர்கள், இசைஞானிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் போன்றோர் பலர் வாழ்ந்த பூமியாகும்.

தத்துவ ஞானிகள், முனிவர்கள், மாமன்னர்கள், போர் வீரர்கள், தியாகச் செம்மல்கள், சமூகச் சீர்த்திருத்தவாதிகள் தூயதுறவிகள் ஆகியோர் வாழ்ந்த சமுதாய மரபுகளைப் பின்பற்றி இங்கு பிறந்து வாழும் குழந்தைகள் வளர்கின்றனர். பராம்பரியங்கள் யாவும் குழந்தைக்குச் சமுதாயத்தில் தகுதி நிலையை ஏற்படுத்தித் தருகின்றன. இப்பண்பாட்டுப் பாரம்பரியம், அக்குழந்தை தான் அடைந்த கற்றல் அடைவுகளினால் தன்னம்பிக்கையைப் பெற்று, எதிர்காலத்தில் தான் அடையவேண்டிய இலக்கினையும் நிர்ணயம் செய்து தருவனவாக அமைகின்றன. பள்ளியின் வாயிலாக, நம் சமூக மரபுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் குழந்தைகள் உணர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு பள்ளியும் நம்முடைய சமூகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யும் உன்னதப் பணியை நிறைவேற்றுகின்றன

இந்தியக் கலைகள், இலக்கியம், சட்டம், வரலாறு ஆகியவை நம் பண்பாட்டின் முக்கியக் கூறுகள் ஆகும். ஒவ்வொரு இந்திய மாணவனும், இந்நாட்டின் வரலாற்றுப் பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நம்முடைய தேசத்தின் சுதந்திரத்திற்கு அயராது பாடுபட்டவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், நம்முடைய நாகரிக முன்னேற்றத்திற்கு அடிகோலியவர்கள் பற்றியும், வேத வித்தகர்கள், முனிவர்கள், யோகியர்கள் ஆகியோர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இது நம் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொலை நோக்காக அமையும்.

சமுதாயமும் பண்பாடும்

பண்பாடு என்பது சமுதாயம் வாழும் முறையை விளக்குவது. இது உணவு உட்கொள்ளும் முறை, ஆடைகள் அணியும் விதம், மொழியாளும் திறன், அறிவுடைமை, விளையாட்டுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது. மனிதனுடைய பண்பாட்டைப் பின்வரும் காரணிகள் தீர்மானிக்கின்றன. எனவே பண்பாடு என்பது தனிமனிதனின் அல்லது ஒரு குழுவினரின் எண்ணங்களாலும் செயல்களாலும் அமையும்.

பண்பாட்டின் வகைப்பாடு

பண்பாடு என்பது இயற்கையின் மீதும், தன் மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது என்று எல்வுட் மற்றும் பிரெளன் (ElWood and Brown) ஆகியோர் கூறுகின்றனர். இவர்கள் பொருள்சார் பண்பாடு, பொருள்சாராப் பண்பாடு எனப் பாகுபடுத்தி ஆய்கின்றனர்.

பொருள் சார்ந்த பண்பாடு

மனிதர்கள் உருவாக்கும் கட்டுமானப் படைப்புகள், வசதிகள், வாய்ப்புகள் கருவிகள் இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அவற்றால் கிடைக்கும் நிம்மதியால் நடைமுறை, பழக்கவழக்கங்களால், இயல்புகளால் நன்மைகளால் மனிதர்கள் பண்பட்டவர்களாக வாழ்கின்றனர் இது பொருள் நலம் சார்ந்த பண்பாடு எனப்படுவதாகும்.

பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்

மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு என சி. சி. நார்த் (C.C. North) குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமுதாயத்தின் அல்லது ஒருநாட்டின் பண்பாடு, காலச்சூழலுக்கேற்ப வளரும் தன்மை கொண்டது. இவ்வளர்ச்சிப் பாதையில், பயன்படக்கூடிய, ஒப்புக் கொள்ளப்பட்ட விரும்பத்தக்க, சமுதாயத்திற்கேற்ற, தேவையான கூறுகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவைகள் காலப்போக்கில் விலக்கப்பட்டுவிடும். பண்பாடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட காலத்தின் வேலையாக மட்டுமன்றிப் பன்னெடுநாளைய வளர்ச்சியைக் கொண்ட ஒன்றிணைந்த திரட்டாக வளர்ந்த வண்ணமுள்ளது எனலாம். பல்வேறு காலக்கட்டங்களில் ஒருபூபாகத்தில் மனித இனம் கண்ட அனுபவங்கள், அதற்கு அவர்கள் செய்த இடைவினைகள், அங்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் சீர்திருத்தங்கள், சமூக பொருளாதார, அரசியல், கலாச்சாரம் அனைத்துமே அப்பண்பாட்டில் ஐக்கியப்பட்டு நிற்கின்றன என்பதே உண்மை.

மனிதனுடைய இயற்கை உந்து உணர்வுகளான பசி, சேர்ந்து வாழ்தல், பாதுகாப்பு உணர்வு, போன்றவைகள் உலகம் முழுவதும் ஒன்றாக இருப்பினும், அவைகள் வெளிப்படும் முறை வேறுபட்டுக் காணப்படுகின்றன. பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் பற்பல மாற்றங்களைக் கொண்டு மாறிவரினும் உளம்சார் பண்பாடு அடியோடு மாறாமல் உயர்வு, சிறப்பு, நன்மை, அறம் போன்ற உட்கூறுகளைச் சிறிதும் பின்வாங்காமல் பின்பற்றி போற்றியே வருகின்றமை கண்கூடு.

சமூக வாழ்வில் நிகழும் கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் காரணமாக ஒரு குழுவினரின் பண்பாட்டு மாற்றங்கள், பிற குழுவினருக்கும் கசிந்து பரவும் தன்மையுடையன. தொலைக்காட்சி, வானொலி, விமானம், செய்தித்தாள் ஆகிய கண்டுபிடிப்புகளால் நம்முடைய பண்பாட்டுக் கூறுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.

மனிதன் பிறக்கும் போதே மரபுக் குணமாக உயிரியல் அடிப்படையில் அமையும் பண்பாடு மாற்றப்படுவதில்லை. பல மனிதர்களுடன், குழுவுடன் ஏற்படும் தொடர்பு வாயிலாகவும் மனிதன் பண்பாட்டைக் கற்றுக் கொள்கின்றான். பண்பாடு தனிபட்டு இருக்கவியலாதது. சமூகத்தின் ஒட்டு மொத்தத் தன்மையைப் பண்பாடு பிரதிபலிக்கும். சமூக இடைவினை மூலம் பண்பாடு தோன்றி வளர்கின்றது. எந்த மனிதனும், பிற மனிதர்களுடன் பங்கு கொள்வதன் மூலமே பண்பாட்டைப் பெற முடியும்.

சமூகவியல் அடிப்படையில் பண்பாடு என்பது பிறருடன் பகிர்ந்து கொள்வதைக் குறிப்பிடும். நம்முடைய பழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள், கொள்கைகள், எண்ணங்கள், மதிப்புக்கள் எல்லாமே மக்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவையே ஆகும். ஆரியபட்டர் கண்டுபிடித்தவை, காளிதாசரின் இலக்கியங்கள், ஆதிசங்கரர், விவேகானந்தர் அருளிய தத்துவங்கள், இரவிவர்மாவின் ஒவியங்கள் முதலானவை பகிர்வே எனலாம்.

மனித இனத்தினுடைய கடந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால அடைவுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியையே பண்பாடு எனும் சொல் குறிப்பதாகும். ஆகவே பண்பாடு பல நூற்றாண்டுகளாக ஒரு தலைமுறையிடமிருந்து மறு தலைமுறைகளுக்கு மரத்தின் வேர் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருப்பது போல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.

பண்பாடு, நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் மனநிறைவுடன் நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிகாட்டி வாய்ப்பளிக்கின்றது. நம்முடைய உணவு,உடை,உறைவிடம் மற்றும் பதவி பணம், புகழ், எல்லாம் பண்பாட்டின் வழியாகவே நிறைவேறுகின்றன. மனிதனுடைய செயல்களை நிறைவேற்ற பண்பாடு வழிகாட்டுகின்றது. ஆகவே பண்பாட்டின் வாயிலாக மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றான்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனிப்பட்ட பண்பாடு உள்ளது. அவை ஒரு சமுதாயத்திற்கே உரிய தனித்தன்மைகளைப் பெற்றவை. பண்பாட்டுக் கூறுகளான பழக்கம், எண்ணம், தத்துவம், நம்பிக்கை ஆகியவை சமுதாயத்திற்கு ஏற்ப மாறுபடும் தன்மை உடையன. காலத்திற்கு ஏற்பவும் மாறும். எந்த ஒரு பண்பாடும் மாறாத் தன்மை உடையதாக இருக்க முடியாது.

பண்பாட்டின் தன்மைகள்

ஜார்ஜ்பீட்டர் முர்டாக் (George Peter Murdock) பண்பாட்டின் தன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 • மனிதன் பண்பாட்டுடன் பிறப்பதில்லை. சூழலோடு வாழ, அவனைப் பொருத்திக் கொள்ள உதவும் ஒரு கற்றல் முறையே பண்பாடு.
 • பண்பாடு ஒருவரிடமிருந்து, மற்றவர்க்கு தலைமுறை, தலைமுறையாக மாற்றப்படுகிறது.
 • ஒவ்வொரு சமூகத்திற்கும், தனியான பண்பாடு உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். இது சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
 • பண்பாடு முன்னோர்களின் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முன்னோர்களிடமிருந்து அவற்றைப் பெற்று, அதன் வழி மனிதன் வாழ வகை செய்கின்றது.
 • சூழ்நிலையிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளப்பண்பாடு முயல்கின்றது. பல்வேறுபட்ட பண்பாடுகள், சமூகத்தில் இடைவினை புரிகின்றன அவற்றில் நல்ல கருத்துக்களை சமூகம் ஏற்றுக் கொண்டு முழுமையான ஒன்றிணைந்த ஒரு பண்பாடாக உருப் பெறுகின்றது.
 • மனிதர்கள் தங்களுடைய எண்ணங்கள், நடத்தைகள், மற்றும் செயல்களைத் தொடர்ந்து தெளிவுப்படுத்தவும், மெருகேற்றவும் செய்கிறார்கள். இதற்குப்பண்பாடு உதவுகின்றது.
 • பண்பாடு மனிதனின் புதிய தேடல்களுக்கு, புதியத் தேவைகளுக்கும் அவன் இறக்கும் வரை உதவுகின்றது.

மனிதன் ஒரு சமூக விலங்கு, அவன் சூழ்நிலையின் கைதி; ஆயினும் நன்னெறிகளின் சிற்பியாகவும் பண்பாட்டின் காவலனாகவும் திகழ்கிறான். பண்பாடு, மனிதன் சமூகத்தில் வாழ அரண் செய்து உதவுகின்றது. பண்பாடு மனிதனை, மனிதனாக உயர்த்துகின்றது.

ஆளுமையை உருவாக்குவதில் பண்பாட்டின் பங்கு

நாடக நடிகர்கள், மேடையில் நடிக்க நுழையும் போது அணியும் முகமூடி' (Mask) என்ற பொருள் தரக்கூடிய 'பெர்சன் (Person) என்ற கிரேக்கச் சொல்லிருந்து ஆளுமை எனப் பொருள்படும், Personality எனும் ஆங்கிலச் சொல் பெறப்பட்டது. நாடக நடிகர்கள் ஏற்றுநடிக்கும் பாத்திரங்களுக்கேற்ப முகமூடியும் மாறும். ஏற்றுநடித்தல் (Role Playing) என்பது பண்பாட்டுடன் தொடர்புடையது. மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை, தொழில், மனித உறவுகள், திருமணம் என்ற மூன்று சமூக நிறுவனங்கள் மற்றும் செயல்களின் வழியாக நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு மனிதனும் இம் மூன்று செயல்களிலும் வெற்றிபெற விழைகின்றான். இவ்விழைவே ஆளுமையை உருவாக்குகின்றது. இவ்வாறு ஆளுமை, பண்பாட்டைத் தீர்மானிக்கின்றது.

மொழியைக் கற்றுத் தரவும், விரும்பத்தகாதது, நல்லவை, கெட்டவை போன்றவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், ஆளுமையின் அடிப்படைகளைப் பெறவும் குடும்பம் உதவுகின்றது. பள்ளியும் ஒத்த குழுவும் வெவ்வேறு பண்பாட்டு சூழலில் இருப்பினும், அவை தனித்தன்மை வாய்ந்த ஆளுமை வளர்ச்சிக்கு, குடும்பத்திற்கு அடுத்தபடியாகப் பேருதவி செய்கின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றிச் சென்று, இடைவினைபுரியும் போது வெற்றி அல்லது தோல்வியை அடையலாம். தோல்வி அடையும் போது, குறையை அறிந்து திருத்திக் கொள்ளவும், புதிய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஆளுமை வளர்ச்சியை அடையவும், குடும்பம், பள்ளி ஆகியவை உதவிட முடியும்.

பண்பாடும் கல்வியும்

ஒரு நாட்டின் பண்பாட்டில் முழுமையாக இசைந்து வாழ, அப்பண்பாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதன் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வியின் வாயிலாக, குழந்தைகளும், சமுதாயத்தின் புதிய உறுப்பினர்களும் பண்பாட்டுச் செய்திகளைப் பெற்று, அதன் சூழலோடு வாழ முயல்கின்றனர். அதாவது, பண்பாட்டின் இயல்புகளை மனிதனுக்கு அறிமுகப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி அதோடு இசைந்து வாழச் செய்வதும், கல்வியின் முக்கியப் பணியாகும்.

பண்பாடும், பள்ளியும்

தன்னுடைய இளம் உறுப்பினர்கள் நாகரிக அறியாமையில் இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம் மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு மாற்றவேண்டிய கடமை சமுதாயத்திற்கு உள்ளது. சமுதாயம் சிக்கலுறும் போதும் அறிவு தடைப்படும் போதும், சமுதாயம் முறையான கல்வியின் தேவைகளை உணர்கிறது.

பள்ளியால் வளர்க்கப்பட வேண்டிய பண்பாட்டு நோக்கங்கள்

1) பண்பாட்டுப் பாரம்பரியத்தை மாற்றம் செய்தல்

2) பண்பாட்டுப் பாரம்பரியத்தை மேம்படுத்துதல்

3) பண்பாட்டைப் பாதுகாத்தல்

4) பண்பாட்டைத் தூய்மைப்படுத்துதல்

பண்பாட்டை மேம்படுத்துதல்

சமுதாய நிலைகளைப் பிரதிபலிப்பதோடு நில்லாமல், சமுதாயத்தை மேம்படுத்துவதும் வேகமாக வளர்ந்து வரும் உலகத்தோடு பொருந்தி வாழவும், சமுதாயத்தின் தேவைப்படாத புதிய கருத்துக்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளவும், பண்பாடு வழிகாட்ட வேண்டும். கண்மூடித்தனமாக, புதிய வளர்ச்சிகளைப் பின்பற்றாமல், கல்வி வழியாக, கடந்த காலத்தை மதிப்பிட்டு, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு, எதிர்காலத்தைச் சந்திக்கத் தயாராக இருத்தல் வேண்டும். மாணவர்கள் கடந்த கால உன்னத எண்ணங்களால் தூண்டப்பட்டு, வலிமை மிக்க நிகழ்காலத்தில் வாழ்ந்து எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள கல்விப் பண்பாட்டுப் பராம்பரியத்தை மேம்படுத்த வேண்டும்.

பண்பாட்டைப் பாதுகாத்தல்

எதிர்கால இந்தியப் பண்பாட்டின் தொடர்ச்சியும், உயிரோட்டமும் இளைஞர்கள் கைகளில் உள்ளது. நம் பண்பாட்டின் புகழை, மதிப்பை, தவிர்த்து அல்லது கவனிக்கத் தவறி, பிறநாட்டுப் பண்பாட்டினை சிந்திக்காமல், சீர்தூக்கிப் பார்க்காமல் அப்படியே ஏற்று அதில் மயங்கி, மோகங் கொண்டிருப்பது நம் நாட்டின் முன்னேற்றங்களைத் தடைப்படுத்தும். ஆகவே நம் உயிருக்கு காப்பீடு செய்து நம் சந்ததியினரைக் காப்பாற்றுவது போல், நம் மூதாதையர்கள், மகான்கள், அறிஞர்கள், சீர்திருத்தவாதிகள், தத்துவ ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் கட்டிக் காத்த பண்பாட்டுக் கலாச்சாரப் பாரம்பரியத்தை, இளம் தலைமுறையினரும் நிலையாக, உறுதியாக, நலத்துடன் பாதுகாக்கக் கல்வி உதவிட வேண்டும்.

பண்பாட்டைத் தூய்மைப்படுத்தல், பண்பாட்டைப் புனரமைப்பு செய்து சீரமைத்துப் புதியதோர் உலகை, சமுதாயத்தை உருவாக்கும் அரிய பொறுப்பு கல்விக்குள்ளது.

இந்தியக் கலைகள்

நீண்ட, நெடிய 10000 ஆண்டு கால இந்தியப்பண்பாடு, வரலாறு, பல நாகரிகங்களைக் கடந்து, உள்வாங்கி உலகப்புகழ் படைத்த பண்பாடு ஆகும். நம்மக்கள், அவர்களின் வாழும் முறை, நடன, இசை மற்றும் கலைகள் ஆகியவை நம் பண்பாட்டின் உயிர் மூச்சு என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆயகலைகள் அறுபத்திநான்கும் இம்மண்ணில் தோன்றி வளர்க்கப்பட்டன. அவைகளாவன

ஆயகலைகள் அறுபத்து நான்கு

 • அகூடிர இலக்கணம்
 • பூபரீசைரஷ
 • இலிகிதம்
 • சங்கிராம இலக்கணம்
 • கணிதம்
 • மல்யுத்தம்
 • வேதம்
 • ஆகரஷணம்
 • புராணம்
 • உச்சாடனம்
 • வியாகரணம்
 • வித்து வேஷணம்
 • நீதி சாஸ்திரம்
 • மதன சாஸ்திரம்
 • சோதிட சாஸ்திரம்
 • மோகனம்
 • தர்ம சாஸ்திரம்
 • வசீகரணம்
 • யோக சாஸ்திரம்
 • ரசவாதம்
 • மந்திர சாஸ்திரம்
 • காந்தர்வவாதம்
 • சகுண சாஸ்திரம்
 • பைபீலவாதம்
 • சிற்ப சாஸ்திரம்
 • கெளத்துகவாதம்
 • வைத்திய சாஸ்திரம்
 • தாதுவாதம்
 • உருவ சாஸ்திரம்
 • காரூடம்
 • இதிகாசம்
 • நட்டம்
 • காவியம்
 • முஷ்டி
 • அலங்காரம்
 • ஆகாயப்பிரவேசம்
 • மதுரபாடனம்
 • ஆகாய கமனம்
 • நாடகம்
 • பரகாயப்பிரவேசம்
 • நிருத்தம்
 • அதிர்ஷயம்
 • சப்தபிரமம்
 • இந்திரஜாலம்
 • வீணை
 • மகேந்திரஜாலம்
 • வேணு
 • அக்கினித்தம்பம்
 • மிருதங்கம்
 • ஜலஸ்தம்பம்
 • தாளம்
 • வாயுத்தம்பம்
 • திட்டித்தம்பம்

பரதநாட்டியம், கதகளி, குச்சுபுடி, குட்டியாட்டம், மோகினியாட்டம், மணிப்புரி, ஒடிசி போன்ற பல்வேறு நாட்டியங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அமைந்து, அங்கு வாழும் மக்களின் பண்பாட்டை, பாரம்பரியத்தை விளக்குகின்றன.

பரத நாட்டியம் என்பது தமிழ்நாட்டின் சிறப்பு நடனம் ஆகும். பரத முனிவர் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவர் நாட்டிய சாத்திரம்’ என்ற நூலில் பரத நாட்டியத்தை வெகுவிவரமாகச் சித்தரித்துள்ளார். இதன் மூலக்கூறுகள் தொல்காப்பியத்திலும் காணப்படுவதாக மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுரை எழுதியுள்ளார்.

பரத நாட்டியம், ராகம் (Raga) தாளம் (Tala) பாவம் (Bhava) என்ற மூன்று அம்சங்களைக் கொண்டது. கை, கால், முகம் மற்றும் உடல் அசைவுகளை ஒருங்கிணைத்து, 64 கோட்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நடனமாடப்படுகிறது.

பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்கும் வழிகள்

பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உடை, உணவு பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள் ஆகியவற்றில் இந்திய மக்கள் வேறுபட்டு இருப்பினும் ஆன்மீக உணர்வு, எளிய வாழ்வு, உயரிய சிந்தனை, விருந்தோம்பல், கலை உணர்வு, அழகுணர்வு, சமயச் சார்பற்ற தன்மை, மக்களாட்சி ஆகியவற்றில் இந்தியர்கள் என்ற உணர்வும், ஒற்றுமையும் பெற்று வாழ்ந்து உலகிற்கு முன்னோடியாக வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கிறோம். இப்பண்பாட்டு ஒற்றுமையை பாடப்பொருளுடன் இணைத்தும், பிணைத்தும் ஆசிரியர்கள் கற்றல் அனுபவங்களாக்கி வகுப்பில் வழங்க வேண்டும். பின்வரும் வழிகளையும் பின்பற்றலாம்.

 • குழந்தைகளின் பங்கேற்புடன் பொறுப்புக்களை ஒப்படைத்து, அதன் வழியாக அவர்கள் விரும்பும் வண்ணம், பண்பாட்டு விழாக்களை அவர்களின் குழுக்களைக் கொண்டே வழிகாட்டுதல்.
 • குழந்தைகளிடம் மிகுதியாகக் காணப்படும் ஆர்வங்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தி, அவர்களின் ஈடுபாட்டுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், மறப்போம், மன்னிப்போம் என்ற மேதக்க போக்கையும் வளர்த்தல்.
 • முகாம்கள், மலையேற்றம், தோட்டம் அமைத்தல். நடைப்பயணம் போன்றவற்றை நடத்திப் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தல்.
 • குழுநடனம், நாடகம் நடித்தல், மண் உருவங்கள் செய்தல், குழுவாகப் பாடல், நூல் நூற்றல், துணி நெய்தல் முதலானவற்றை நடத்தி நம் பண்பாட்டை வலுப்படுத்தச் செய்தல்.
 • மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, கூட்டுறவு மனப்பான்மையை ஏற்படுத்திப் பண்பாட்டை வளர்க்கலாம். மேலும் விளையாட்டு விதிகளை மதித்து நடந்து கொள்வதுபோல், நம்பண்பாட்டையையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவும், அதன் வழிநடக்கவும் வழிகாட்டல்.
 • பிறகுழந்தைகளுக்கு இடர் ஏற்படும்போது அவர்களிடம் அன்பு பாராட்டி, உதவிட வழி காட்டுவதன் வாயிலாக நம் இந்தியப் பண்பாட்டின் உள் இழையான அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் என்ற அருள் உணர்வை வளர்த்தல். இராமலிங்க அடிகள் “வாடிய பயிரைக் கண்டபோதல்லாம் வாடினேன்" என்று “ஆருயிர்க்கெலாம் அன்பு செயல் வேண்டும்” பாடிய முழுப் பாடல்களை என்றும் மாணவர்கள் உணர்வுடன் பாடிப் பழகிடச் செய்தல். நாமக்கல் கவிஞரின் 'சூரியன் வருவது யாராலே" என்ற பாடலைப் பண்ணோடு இசைக்கப் பழக்குதல்.
 • ஒவ்வொரு நாளும் பலசமயக் கோட்பாடுகளை வலியுறுத்தும் கூட்டு சமய வழிபாட்டுக்கு வழிவகுத்தளித்தல்.
 • பள்ளியின் அமைவிடத்தைச் சூழ்ந்துள்ள தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராம முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு இடங்களுக்குக் களப்பயணம் மேற்கொள்ளுதல்.
 • பிற மதத்தவர்களின் பண்டிகைக் காலச் செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள சரியான உட்கருத்துக்கள் நோக்கங்களை மாணவ ஆசிரியர்கள் அறிதல், தெளிதல்.
 • தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பண்பாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல். பண்பாட்டுக் கருத்துக்களையொட்டிய கருத்தரங்கு, வினாடி-வினா, விவாதம் போன்றவற்றைப் பயிற்சிப் பள்ளிகளில் நடத்துதல்.
 • நம்நாட்டு மகான்கள், சித்தர்கள், ஞானிகள், ஆன்மீகவாதிகள், வரலாற்றுச் சிறப்புப் பெற்றோர் ஆகியோர் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் செய்தல்.
 • பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு களிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பேணிக் காக்கவும் வேண்டும்.
 • ஆசிரியர் மன்ற நிகழ்ச்சிகளிலும், இலக்கியமன்ற விழாக்களிலும், ஆண்டுவிழாவிலும் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனம், கரகம், நாடகம், நாட்டியம்

முதலிய கலைநிகழ்ச்சிகளைப் பண்பாட்டுக்கேற்ற வகையில் நடத்துதல் போன்றவைகளாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
3.08928571429
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
லோகேஷ்வர் May 29, 2018 10:09 AM

நன்றாக இருக்கிறது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top