பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்

பள்ளி மேலாண்மை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

சமூக நிறுவனங்களில் மிக முக்கியமானது பள்ளி. சமுதாயத்தின் பல குறிக்கோள்களை வரையறுத்து, வலியுறுத்தி, அவற்றை நிறைவேற்றித் தரும் சமூக நிறுவனமாகப் பள்ளி அமைகின்றது. எதிர்காலச் சமுதாயத்தின் நலனைத் திட்டமிட்டு முழுமையாக உருவாக்குவதில் பள்ளி முக்கிய அங்கம் வகிக்கிறது. எதிர்காலக் குடிமக்களை உருவாக்கும் முக்கிய பொறுப்பும் அதற்கு உண்டு. நாளைய குடிமக்களாகிய குழந்தைகளுக்கு உரிமைகளும், கடமைகளும் உள்ளன. அவற்றை அறிமுகமாக்கி வழங்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும், பள்ளிக்கும் உள்ளது.

பள்ளியின் சிறப்பு, திறன், வளர்ச்சி போன்றவை அதன் கட்டிடங்களால், வசதிகளால் வருவதன்று. உயர்ந்த கோட்பாடுகளின், கொள்கைகளின் அடிப்படையில், நிலையின் தாழாது அப்பள்ளியை நடத்துவதில், நிர்வகிப்பதில் அதன் சிறப்பு அமைந்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் அவர்தம் திட்டம், சிந்தனை, கொள்கைகள், நோக்கங்கள், அதனை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களின் சிந்தனையினாலும் பள்ளியின் சிறப்பு உருவாக்கப்படுகிறது. பழைய மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், கிராமக் கல்விக்குழுக்கள், மேற்பார்வை செய்யும் அதிகாரிகளின் செந்தண்மை, கல்வித்துறையின் வழிகாட்டல் ஆகியவற்றின் திரண்ட படைப்பாற்றலின் சின்னமாகவும் பள்ளிகள் திகழ்கின்றன.

பள்ளி மேலாண்மை - பொருள்

செயல்களை ஒருங்கிணைக்கவும், திறமை, சிக்கனம் மற்றும் வளங்களை மிகவும் விளைவுள்ள வகையில் பயன்படுத்தவும், நல்ல முடிவுகளை எடுக்கவும், பயனாளர்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்கிடவும், துரிதமாகச் செயல்படவும், காலம், வளம் மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை அறிவு பூர்வமாகப் பயன்படுத்திடவும் ஒவ்வொரு நிறுவனத்தையும் சிறப்பான மேலாண்மை செய்வது அவசியமாகும்.

மேலாண்மை என்ற சொல் மினிஸ்டிக் (Ministic) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன்பொருள் பிறருடைய நலத்திற்காகச் செய்யப்படும் பணி என்பதாகும். இது வியாபாரம், பொது விவகாரம் அரசு ஆகியவற்றை மேலாண்மை செய்வது என்றும் பொருள்படும் என அகராதி குறிப்பிடுகின்றது. மனித முயற்சிகளை ஒருங்கிணைப்பது, உரிய வளங்களை, மனிதனின் உயர் பண்புகளைத் திறம்பட முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவது, குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமன்றி, பள்ளியில் பணியாளர்கள் அனைவரையும் வளர்ச்சி அடையச் செய்வது ஆகியவற்றைக் குறிப்பிடும் எனக் கல்வி கலைக்களஞ்சியம் பொருள் தருகிறது.

முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட கொள்கையின் அடிப்படையில் கல்வி நிறுவனத்தை இயக்குவதற்குரிய நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் மேலாண்மை’ எனப்படும் என்று சி.வி.குட் (C.V.Good) கூறுகிறார்.

கால அட்டவணை, பாடத்திட்டம், கட்டிடவகை, ஆவணங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல் மட்டுமன்றிப் பணியில் நம் மனப்பாங்கு, குழந்தைகளிடத்தில் நாம் நடந்து கொள்ளும் முறை போன்றவற்றிலும் அக்கறை கொண்டது 'பள்ளி மேலாண்மை’ என்று ரைபர்ன் (Ryburn) வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட கல்வி நோக்கங்களை நிறைவேற்றுவதும், கல்வியின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதும், அவற்றிற்கான முயற்சிகளையும் இலக்குகளையும் நோக்கங்களையும் ஒருங்கிணைப்பதும் பள்ளி மேலாண்மையாகும்.

பள்ளி மேலாண்மை மனித வளம், பொருள் வளம் என்ற இரண்டுடன் தொடர்புடையது.

மனித வளம்

குழந்தைகள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பணியாற்றும் அலுவலர்கள் போன்றவர்கள்.

பொருள் வளம்

நிதி, கட்டிடம், தளவாடம், விளையாடுமிடம், இடுபொருள்கள், கருவிகள், பிற பொருட்கள். இவைகள் தவிர, கொள்கைகள், கலைத்திட்டம், பாடப் பொருள்கள், விதிகள், சட்டங்கள், முறைகள், சமுதாயத் தேவைகள் போன்றவைகளும் உள்ளன. இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, செயல் முழு வெற்றி பெற முயற்சிகள் எடுப்பதில் பள்ளி மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

தொடக்கக் கல்வியில் பள்ளிக் கல்விக்கு வளமூட்டும் நேரடி வாய்ப்புமிக்க அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆவர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நகரச்சரகம், ஊராட்சிஒன்றியம் என்னும் உள்ளாட்சிப் பாகுபாடுகளை யொட்டித்தமிழகம் முழுவதும் உள்ளனர். தாங்கள் கடமையாற்றும் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிப் பள்ளிகளுக்கென இரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி இணைந்த ஆங்கில வழிப்பள்ளிகளுக்கென மாவட்டத்திற்கு ஒரு உதவி தொடக்கக் கல்வி அலுவலருமாகச் செயற்படுகின்றனர்.

பள்ளிச் சூழலாகிய கட்டிடம், குழந்தைகள், ஆசிரியர்கள் அமருமிடம், இருக்கை வசதி உணவு, குடிநீர், விளையாட்டிடம், தகுதி, நியமனம், ஊதியம் ஆகியவற்றைக் கண்டு அங்கீகரிக்கும் பொறுப்பும் அலுவலர்க்குப் பரிந்துரைத்தலும், பள்ளியின் வேலை நாட்கள், பாடத் திட்டம், கல்விமுறை, பயிற்சி, குழந்தை நலனை மையமாகக் கொண்ட நிகழ்வுகளின் ஆய்வாளராகவும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செயற்படுவார். பல்வேறு சூழல்களிலும் பள்ளியை ஏற்று நடத்தும் கல்வி முகவாண்மை பள்ளிக்குழு, ஆசிரியர்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் என்னும் விரிவு நிலைகளில் செயற்பாடு மிக்கவராக அரசுக்கும் மக்கள் அமைப்பிற்கும் இடையே தொடர்பு அலுவலராகவும், ஆட்சி அலுவலராகவும் இவர்கள் செயல்படுவர். இவர்கள் அலுவலக மேலாண்மையில் முதல்நிலை அலுவலராகச் செயல்பட்டு பங்கேற்பு மேலாண்மையில் நம்பிக்கை கொண்டு, குழந்தையை மையமாகக் கொண்ட கல்வி நலனைச் சிந்தனையில் கொண்டவர்களாக விளங்குதல் கல்வி மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம்.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்

தமிழகத்தின் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் இவர்கள் செயல்படுவர். ஒவ்வொரு வருவாய் மாவட்டமும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் பரவலுக்கு ஏற்ப ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் என இருவர் செயல்படுகின்றனர். இவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையின் கீழ் செயல்படுகின்றனர். ஒன்றியத்தில் செயல்படும் பள்ளிகளின் மேலாளர்களாக இவர்கள் செயல்படுகின்றனர்.

வட்டார வளமையங்களில் (BRC) வகுப்பறைக் கல்விப்பணி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயற்பாடுகளுக்கென ஒன்றிய அளவில் வட்டார வள மையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்னும் நோக்கோடு, முறை சார்ந்த கல்வியில் விடுபடல், தேக்கம், ஆய்வு, பயிற்சி, எனப் பல பணிகளைச் செய்கின்றன. நவீன தொழில் நுட்பங்களையும் புதிய கற்றல் முறைகளையும், மதிப்பீட்டுச் செயல்பாடுகளையும் தம் பணிகளாகக் கொண்டுள்ளன. வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் (BRTE) பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வாளர்கள் (CRCC) இம்மையங்களின் வாயிலாகக் கல்வி மேம்பாட்டு உத்திகளைப் பரப்பி, களநிலைத் தகவலறிந்து, அனைத்துவிதமான கற்றல், கற்பித்தல் பயிற்சிகளையும் வழங்குகின்றனர். 40 ஆசிரியர்கள், 10 பள்ளிகளுக்கு ஒன்றெனப் பள்ளித்தொகுப்புக் கருத்தாய்வு மையங்களை மாதமொருமுறை கூட்டி புதிய அணுகுமுறைகளையும், வெற்றிக் தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

வகுப்பறை மேலாண்மை

தொடக்கப்பள்ளிகளில் தற்பொழுது தமிழகக் கல்வித்துறை செயல்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துகிறது. இச்சூழலில் வகுப்பறை மேலாண்மையின் முக்கியத்துவம் சிறப்பான ஆய்வுக்கும், நெறிப்பாட்டுக்கும் உரியதாகும்.

மாணவர்களை அணிபட அமரச் செய்து ஆசிரியர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, தற்பொழுது ஆசிரியர் கவனித்துக் கொண்டிருக்க மாணவர்கள் குழு உறுப்பினர்களாக வகுப்பறையில் பல குழுக்களாகவும் இணையர்களாகவும் செயலில் ஈடுபடுகின்றனர். அச்சூழலில் தனிமாணவர் ஒவ்வொருவரும் தாமே கற்க ஆவன செய்வதே வகுப்பறை மேலாண்மையாகிறது.

செயல்வழிக் கற்றலில் வகுப்பறை மேலாண்மை

செயல்வழிக் கற்றல் வகுப்புகள் வழக்கமாக நிலவிவந்த வகுப்புகளை விடச் சற்றுக் கூடுதல் கவனிப்புடன் மேலாண்மை செய்யப்பட வேண்டியவை ஆகும்.

 • வகுப்பறையில் மாணவர்கள் சுதந்திரமாக இயங்க இடம், தரையில் உட்காரும் பாய் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
 • கரும்பலகைகள் வகுப்பறைச் சுவர்களில் மாணவர்கள் உயரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும். அதில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
 • மாணவர்கள் வகுப்பு நேரங்களில் பாடப்பயிற்சிகளை எழுதிப் பழக உதவலாம். வரைபடங்கள் வரைந்து பழக உதவலாம்.
 • ஆசிரியர் ஒரு குழுவைச் சேர்ந்த மாணவர்களைக் கவனித்து உதவும் போது பிற 5 குழு மாணவர்கள் தங்கள் தங்கள் கற்றல் செயல்களில் ஈடுபடலாம்.
 • வகுப்பறையில் தலைக்குமேல் மெல்லிய கம்பிகளைக் கொண்டு பந்தல் போன்று அமைக்க வேண்டும். இக்கம்பிப் பந்தலில் மாணவர்களின் படைப்புகளை, வண்ணம் தீட்டியவற்றை, வரைந்தவற்றை, சேகரித்தவைகளை அவரவர் பெயர்களுடன் கட்டித் தொங்கவிட வேண்டும். புதிய படைப்புகள் வரும்பொழுது பழையனவற்றை அகற்றிப் பாதுகாப்பாக வைத்திடல் வேண்டும்.
 • செயல்வழிக் கற்றலில் மாணவர் பயன்படுத்தும் கற்றல் அட்டைகளை அவற்றின் குறியீடுகளுக்கு ஏற்பத் தனித்தனியாக வைக்க வேண்டும்.
 • செயல்வழிக் கற்றலில் ஆறு குழுக்கள் அமையும். இந்த ஆறு குழுக்களுக்கும் ஆறு அட்டைகள் உண்டு. இந்த அட்டைகளுக்குக் குழு அட்டைகள் எனப்பெயர். முதலிரண்டு குழுக்கள் முழுவதும் ஆசிரியரைச் சார்ந்தவை. மூன்றாவது குழு சிறிதளவு ஆசிரியரைச் சார்ந்தது.
 • நான்காவது குழு முழுவதும் சக மாணவர் உதவியுடன் செயல்பட வேண்டியது. ஐந்தாவது சக மாணவன் உதவியுடன் தாமே செயல்படவேண்டியது. ஆறாவது குழுதானே கற்றல் குழுவாகும். இக்குழுசெயல்களுக்கேற்ப ஆசிரியர்கள் ஏதுவாளராக, கற்றல் கள மேற்பார்வையாளராகச் செயற்பட வேண்டும்.
 • குழுவாகச் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் பல குழு விளையாட்டுகளையும், பொம்மலாட்டம் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்வர். இவற்றைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கற்றல் நிகழ ஆசிரியர் செயல்படுவதே வகுப்பறை மேலாண்மை எனப்படும்.

வகுப்பறை மேலாண்மையும் உயர் தொடக்கக்கல்வியும்

உயர் தொடக்க வகுப்புகளில் மொழியறிவும் எண்ணறிவும் உடைய மாணவர்கள் தாமே கற்றல் அணுகுமுறையில் கற்கின்றனர். அவ்வேளையில், மன வரைபடம் (Mind Map) வரைதல், வாசித்தல், பொருளுணர்தல், குறிப்பெடுத்தல், மீளக்கற்றல் போன்ற தானே கற்றல் முறைகளுக்கு வழிகாட்டி நூலகச் செயல், செயல்திட்டம் ஆகியவற்றிற்குத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்துச் சிறப்புடன் ஆசிரியர்கள் செயற்படுவது செயலாக்கக் கற்றல் என்னும் உத்தியாகும்.

தன்னை ஆய்வு செய்தல், வாழ்திறன் பயிற்சி, பன்முக நுண்ணுணர்வுத் திறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் செயல்படுத்தப்பெறும் இந்த செயலூக்கமிக்க கற்றல் முறையில் (Active Learning Methodolody) தற்போதைய உயர்தொடக்க வகுப்புகள் செயல்படுகின்றன.

மனப்படம் வரைதல், குழு விவாதம், சிறந்தவற்றைத் திறனாய்வு செய்தல் ஆகிய வகுப்பறைச் செயற்பாடுகளில் புரிந்து கொள்ளுதலுக்கும், சிந்தித்தலுக்கும், ஆக்கத்திறனுக்கும் அதிகவாய்ப்பு கிடைக்கிறது. தாங்களாகவே மாணவர்கள் ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுடனும் செயற்பட ஆசிரியர் ஏதுவாளராக (Facilitator) மட்டுமன்றி, கற்றல் களத்தின் அமைப்பாளராக (Learning Field Organizer) செயல்படவேண்டாம்.

கற்றல் கருவிகளும் வகுப்பறை மேலாண்மையும்

பெரும்பகுதி கல்வி வாய்மொழியாக நிகழ்வதே முந்தையக் கல்விமுறை. கரும்பலகையில் எழுதி உருவங்களை வரைந்து கற்பிக்கும் முறையைத் தாண்டி, இன்று தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஏராளமான கற்றல் துணைக் கருவிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வகுப்பறைக் கல்வியில் ஈடுபடும் ஆசிரியர், கணினி வழிக்கற்பித்தலை மேற்கொள்ளவும், குறுந்தகடு (CD) தொலைக்காட்சிக் கருவிகள், புகைப்படக் கைபேசிகள்(Cel Phone) எனக் கற்றல் கருவிகளை எண்ணற்ற வகையில் பயன்படுத்தலாம்.

கற்றல் கருவிகளை இயக்கவும், பாடப்பொருள் தேவைக்கு ஏற்பத் திட்டமிடவும். மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய உரையாடல் நிகழ்த்திக் கற்பிக்கவும் ஆசிரியர் திறன் கொண்டவராக விளங்க வேண்டிய வகுப்பறைச் சூழல் நிலவுகிறது.

வகுப்புப் பாடங்களைத் திட்டமிடும் போதே கற்றல் கருவிகளின் செயல்பாட்டையும் இணைத்துத் திட்டமிட்டு, இயக்கி, மாணவர்களையும் ஒருங்கமைத்து குழுக்களாக்குதல், கருவிகளை இயக்கப் பயிற்சி வழங்குதல், சுய மேம்பாட்டுடன் கற்க வழிவகுத்தல் எனப்பல வழிகளில் வகுப்பறை மேலாண்மை இன்றைய சூழலில் மாறி அமைந்துள்ளது.

பள்ளி மேலாண்மை

பள்ளி மேலாண்மை என்பது பணிகள் செய்யப்பட்டு, நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய பயன்கள் விளைவிக்கப்படும் வழிமுறையாகும். இது ஒவ்வொரு நிறுவனத்தையும் தன் செயல்களைச் செய்ய இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும், தேவையான முடிவுகளை அடைய வழி கோலும். செயல்களை நிறைவேற்றுதல், திறமையான மேலாண்மை வழங்குதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்படின் தீர்ப்பதிலும், பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பே அதனை உணர்ந்து தடுப்பதிலும், கட்ப்படுத்துவதிலும் உதவி செய்கின்றது.

பள்ளி மேலாண்மையின் முக்கிய கூறுகள்

 • திட்டமிடுதல்
 • அமைத்தல்
 • இயக்குதல்
 • ஒருங்கிணைத்தல்
 • விளைபயனை மதிப்பிடல்

திட்டமிடல்

திட்டமிட்ட செயல்கள் விரும்பத்தக்க முடிவுகளைப் பெற்றுத் தரும். சரியான பாதையைக் காட்டிச் செயல்களை நிறைவேற்ற உதவி செய்யும். பிரச்சினைகளைத் தீர்க்கும் முகவராகச் செயல்படும்போது முதலில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளையும், வழிவகைகளையும் கணிக்க வேண்டும். ஏற்படும் சிக்கல்களைத்திட்டமிட்டுச் சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எச்செயலையும் தொடங்கும் முன்னரே திட்டமிட வேண்டும்.

அமைத்தல்

திட்டமிட்ட அனைத்தையும் நிறைவேற்ற அமைப்பு எனும் ஒர் இயந்திரம் தேவை. பள்ளி மேலாண்மை தன் கடமையை நிறைவேற்றத் தேவைப்படும் மனித சக்தி மற்றும் பிற வளங்களை ஏற்பாடு செய்வதும், வழங்குவதும் இதில் முதல் பணியாகும். பின்னர் புத்தகங்கள் வாங்குதல், பள்ளிக்குக் கொணர்தல், தளவாடப் பொருட்களைத் தருவித்தல், கருவிகளைப் பயன்படுத்துதல் வேண்டும். மேலும் கலைத்திட்டம், கால அட்டவணை, கலைத்திட்ட இணைச் செயல்கள் ஆகியவற்றையும் செயலாக்கி ஒருங்கிணைக்க வேண்டும்.

இயக்குதல்

தலைமைப்பொறுப்பை ஏற்று, வழிகாட்டும் முக்கிய பணி இயக்குதல் ஆகும். இது பணியை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. முடிவுகளை எடுக்கும் நபர் இப்பொறுப்பை ஏற்று ஆணைகள், வாய்வழி சொற்கள், வழிகாட்டுதல் மூலம் நிர்வகித்து, செயல்களை நிறைவேற்றுகிறார். பொதுவான நோக்கத்திற்காக, இலக்கிற்காகத் தேவையான வழிகளைக் காட்டி பள்ளியின் அனைத்து நலன்களையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஒருங்கிணைத்தல்

பள்ளி மேலாண்மை பல மனிதர்களின் விருப்புவெறுப்புகளை அனுசரித்து மாணவர் நலனை நிலைநாட்டுவது பற்றியதாகும். அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே மனநிலையை உண்டாக்கி, கூட்டு முயற்சியை ஏற்படுத்தி, பள்ளியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஒருங்கிணைத்தல் அவசியம். அனைத்துப் பணியாளர்களையும் இலக்கை நோக்கிய ஒரே பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுவது பள்ளித்தலைவரின் கடமையாகும்.

ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியான பல பரிமாணங்களைக் கொண்ட மனிதர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பகுதியையும் அலகையும் கூட்டாக ஒருங்கிணைத்துச் செயல்படுவதில் தான் பள்ளியின் முன்னேற்றம் அமைந்துள்ளது. பிரச்சினைகள் ஏற்படும் போது, நிறுவனத்தின் குறிக்கோள்களுக்காக, கொள்கைகளுக்காகப் பணியாற்றுகிறோம் என்ற கருத்தை மனதில் கொண்டு வேறுபாடுகளைக் களைந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

விளைபயனை மதிப்பிடல்

பள்ளி மேலாண்மையைப் பற்றி, கருத்து மற்றும் முடிவுகளை அறிய மதிப்பிடல் அவசியம். மேலாண்மை வலிமைமிக்க வழிமுறையாதலால், அதனை அவ்வப்போது மறு ஆய்வு செய்ய வேண்டம். நிறுவனம், நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்குரிய செயல்களை ஆராய வேண்டும். குறைந்த திறனுடைய செயல்களை மிகுந்த திறனுடைய செயல்களால் மாற்றியமைக்க வேண்டும். முன்புள்ள செயல்களின் குறைபாடுகளைக் கண்டறிய.பள்ளியின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை மாற்றம் செய்ய அல்லது மேம்படுத்த, பள்ளியின் வெளியேயும், உள்ளேயும் உள்ள நிலையை மாற்ற புதிய அறிவை, வழிமுறையை நுட்பத்தைக் கண்டறிய, மதிப்பிடல் மிக அவசியமாகும். வெற்றியை, இலக்கு அடைவை மட்டும் மதிப்பிடாமல் பயன்படுத்தியநடைமுறைகளையும், அவற்றின் ஏற்புடைமை பற்றியும் மதிப்பீடு செய்து நிர்வாகத்தைத் தகஅமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top