பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வி - கட்டமைப்பு

பள்ளிக் கல்வியின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

கல்வி என்பது மனிதனைச் சமூகப்பண்பினனாக்கும் வழிமுறை ஆகும். குழந்தையின் ஒட்டுமொத்த முழுமையான மேம்பாட்டுக்கான திரண்ட முயற்சி. குழந்தையின் உடல், மனம், உயிர் அவற்றின் உணர்வுகள், மனப்பான்மைகள், தொடர்புகள், குணநலம், ஆளுமை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி. இயல்பாகவே உள்ளார்ந்த ஆற்றல்களுக்கும் சுய வெளிப்பாட்டுக்கும் ஒரு வடிகால். உரிமையும் கடமையும் கொண்ட சமுதாய உறுப்பினர்களை உருவாக்கும் நாட்டுநலப்பணி. மனிதர் நல்வாழ்க்கை வாழ, வளம் பெற வழிகாட்டும் ஒர் அறப்பணி என்று பல பரிமாணங்களில் கல்வியை விவரித்துக் கொண்டே போகலாம்.

அடிப்படையான, முறைசார்ந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வியமைப்பில், பிறப்பு தொடங்கி 16 வயது வரை உள்ள கல்வியமைப்பு பள்ளிக்கல்வியாகும். தமிழகத்தில் பள்ளிக் கல்வியமைப்பின் கட்டமைப்பு, பள்ளிக்கல்விப் படிநிலைகள், மழலைக் குழந்தைகள் நலனும், கல்வியும் ஆகியவற்றை குறித்துக் காணலாம்.

பள்ளிக் கல்வியின் படிநிலைகள்

குழந்தையின் உடல், வயது அடிப்படையில் இந்தியப் பள்ளிக் கல்வி நிலைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை

 • x-xi மேல்நிலைக் கல்வி (15-16 வயது) மேல்நிலைப் பள்ளி
 • ix-x இடைநிலைக் கல்வி (13-14 வயது) உயர்நிலைப் பள்ளி
 • v-vi உயர் தொடக்கக்கல்வி (10-12 வயது) நடுநிலைப் பள்ளி
 • i-V தொடக்கக்கல்வி (5-9 வயது) தொடக்கப் பள்ளி
 • எல்.கே.ஜி-யூ.கே.ஜி மழலையர் கல்வி (3 - 5 வயது) மழலையர் பள்ளி
 • பால்வாடி ௦ - 3 / 5 வயது

முறையான பாடசாலைகள், பள்ளிக் கூடங்கள் மட்டுமே ஒருவனின் எதிர் காலத்துக்கு உறுதி அளிக்கமுடியும், நல்வாழ்வுக்கு அரண் செய்யமுடியும் என்பதை உலகில் வாழும் அறிவறிந்த நன்மக்கள் யாவரும் எச்சரிப்பர். அத்தகு வாழ்வாதார முயற்சிக்கு வழிகாட்டுவனவாய் அமைவன பள்ளிகளாகும்.

குழந்தையின் உடல் வயதை அடிப்படையாகக் கொண்ட இவ்வகைப் பிரிவுகளில் கற்றல் தொடர் செயல்பாடுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் தேக்கம் அல்லது தேர்ச்சி நிகழ்த்தப்படுகின்றது. வகுப்பறைக் கற்றலை மட்டுமே கருதாது கற்றல் தொடர் நிகழ்வு என நோக்கினால் இப்படிநிலைகளில் அமைந்துள்ள நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். இப்பிரிவுகள் நாடு, மொழி, சூழல் என்னும் அமைப்புக்கேற்ப வேறுபடுகின்றன.

பல்வேறு படிநிலை வேறுபாடுகள்

இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் ஒரே விதமான கல்விப் படிநிலைகளே வலியுறுத்தப்படுகிறது. 10+2+3 என்னும் பள்ளிக்கல்வி 10 ஆண்டுகள் வரையும், மேல்நிலைக்கல்வி இரண்டு ஆண்டுகளும், கல்லூரிக் கல்வி 3 ஆண்டுகளும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியின் பத்தாண்டுகளை 5 ஆண்டுகள் தொடக்கக் கல்வி என்றும், அடுத்த 3 ஆண்டுகள் உயர்தொடக்கக்கல்வி என்றும் அதற்கடுத்த இரண்டாண்டுகளை அதாவது 9, 10 வகுப்புக்களை இடைநிலைக்கல்வி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி அங்கீகாரம்

நம் நாட்டில் குழந்தைகளின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள மைய அரசு, மாநில அரசு, சமூக நல அமைப்புகள், தனியார், தொழிற்சாலை நிர்வாகத்தினர், மதப்பிரிவினர் எனப்பலரும் பள்ளிகளைத் தொடங்கி நடத்துகின்றனர். பல்வேறு பள்ளிகளும் அரசின் அங்கீகாரம் பெற்றே நடத்தப்பட வேண்டும் எனினும் தொடக்கக்கல்வியின் படிநிலை அமைப்பு அங்கீகாரம் பெறாத சில பள்ளிகளும் சில மாநிலங்களில் செயல்படுகின்றன. கல்வி சார்ந்த சட்டம் மற்றும் விதிகளைப் பின்பற்றி நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் நிர்வாகத்தினரின் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது அரசின் கடமை. கல்வி நிறுவனத்தை நடத்துவோரும் அவ்வப் படிநிலைகளில் உரிய கல்வி அலுவலரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

பள்ளி, முறையாகப் பதிவு செய்யப்பட்டு அரசின் இடை கால மாறுபாடுகளுக்கேற்ப உரிய கட்டணங்களை மட்டுமே பெற்று, ஆசிரியரின் கல்வித் தகுதி, நியமனம் ஆகிய அரசின் சமூக நலக் கொள்கைகளுக்கு உட்பட்டு கல்விபயிலும் குழந்தைகளின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்யும் வகையில் சுகாதாரம், கற்றல் கருவிகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும். உரிய அலுவலர்களால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் தொடர்ந்து செயல்பட இந்தியச் சட்ட முறைகளால் தடை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நலனை, மையமாகக் கொண்ட பள்ளி நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்கும் சட்டவிதிகள் இயற்றப்பட்டுள்ளன. எனினும் உலகமயமாதல், தனியார் மயமாதல், தாராளமயமாதல் என்னும் மாறிவரும் சூழலுக்கேற்ப கோடிக்கணக்கான மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்ற தனியார் தொடங்கி நிகழ்த்தும் பள்ளிகள் அரசுத்துறையினரால் வரவேற்கப்படுகின்றன. ஆயினும் இப்பள்ளிகளை வணிகநோக்கில் நடத்துவதைத் தடுக்க அங்கீகார நடைமுறைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல மாநில அரசுகளும் கல்வி நலனைப் பாதுகாக்க முயன்று வருகின்றன.

அரசுப்பள்ளிகள், அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகள்

இந்தியாவில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாக உள்ளூர் அரசாட்சி அமைப்புகளின் உதவியுடன் தொடக்கக் கல்வி நடைபெற்று வந்தது. அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தனியார், மதம், மொழி, இன வகைகளில் தொடங்கி நடத்தும் பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. விடுதலைக்குப் பின்பு பள்ளி வசதி இல்லாத ஊரகப் பகுதிகளில் தேவைக்கேற்ப அரசுப் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு கட்டடம், நவீனக் கல்விக் கருவிகள், புத்தகங்கள், உணவு சீருடை எனப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் நடத்திவரும் அரசின் நிதியுதவிப் பள்ளிகளிலும் குழந்தைகளின் நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. கட்டட மான்யம், நிர்வாக மான்யம், புதிய நியமனங்கள் போன்றவற்றிற்கும் நிதியுதவியை அரசு வழங்கி வருகின்றது. பற்றாக்குறை ஏற்படுகையில் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் வாயிலாகப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் நிறைவு செய்யப்படுகின்றன. அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் கிராமக்கல்விக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு அனைவர்க்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தில் தன்னிறைவை அடைந்துள்ளமை மகிழ்ச்சியுடன் குறிப்பிடத் தக்கதொன்றாகும்.

பல்வகை நிர்வாக அமைப்பின் கீழ் பள்ளிகள்

தமிழக அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பள்ளிகளில் நிர்வாக அடிப்படையில் சில வேறுபாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

நிர்வாகப் பள்ளிகள்

அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகக் குழுக்கள் வேறுபாடு உடையவை எனினும் இவை அனைத்தும் கல்வித் துறையின் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு உரிய கல்வி அலுவலர்களின் ஆட்சிக்குட்பட்டே செயற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மழலையர் நலனும் கல்வியும்

குழந்தை தாயின் வயிற்றில் வளரும் பொழுதே ஊட்டச் சத்துமிக்க நல்லுணவு, நற்காற்று, நல்ல தண்ணிர், தாயின் இதமான நல்லுணர்வு ஆகியன குழந்தையின் உடல், மன வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைகின்றன. தாயின் உணவுப் பற்றாக்குறைகளும், மனநிலை மாறுபாடுகளும் பிறக்கும் குழந்தையின் உடற்கூறுக்குறைபாடுகளையும், இயலாமைகளையும் உண்டு பண்ண வாய்ப்புண்டு. எனவே சேயின் நலம் தாயின் நலத்தை அடிப்படையாகக் கொண்டது. பெற்றோரின் கல்வி நிலையும், பண்பாட்டுச் சூழலும், குடும்பத்திலுள்ள பிறர் பெற்றிருக்கும் கல்வியும் குழந்தையின் உடல், மன வளர்ச்சியில் பங்கேற்கும் காரணிகளாகின்றன. எனவே எல்லாக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், ஊட்டமிக்க சத்துணவு, தூய்மையான காற்று, தண்ணிர், நோய்த்தடுப்பு, பாதுகாப்பு, உளவியல் அடிப்படைக் காரணிகள் சூழலியல் நல்லமைவுகள் ஆகியன மிகமிக அவசியம். குழந்தை பிறந்து வளரும் சூழ்நிலை சுகாதாரம் ஒருங்கிணைந்த சூழலாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகு வளர்ச்சிக் காலத்திலும் ஒரு குழந்தைக்கு வழங்க வேண்டிய அனைத்துத் தேவைகளையும், நன்மைகளையும் நாம் வழங்கினால்தான் நாடு நல்ல பிள்ளைகளை வளர்த்தாக்கவியலும். மழலைப் பருவத்தில் குழந்தைகளை வளர்ப்பது எச்சரிக்கைமிக்க, திட்டமிட்ட பல கடமை நிறைவேற்றல்களை அடிப்படையாகக் கொண்ட செயலாகும்.

பெற்றோரின் திருமண வயது, கருவுற்ற தாய்க்குச் சத்துணவு குறித்த விழிப்புணர்வு, உரியகாலத்தில் செய்யப்படும் நோய்த்தடுப்பு எச்சரிக்கைச் செயல்கள் ஆகியவற்றினால் ஒருநாடு வலுவான நல்ல குழந்தைகளைப் பெற முடியும். தாய் சேய் நலம் குறித்த அரசின் திட்டங்கள் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே உடல் மனவளத்துடன் அமைய மனிதவள நோக்கில் திட்டமிடப்பட்டு அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன.

இந்நோக்கிலேயே மத்திய மாநில அரசுகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கருவுற்ற தாயினைப்பேணுதல் (Anti Natal Care) என்ற மக்கள் நல்வாழ்வுச் செயல்திட்டங்களின் வாயிலாக தாய் கருவுற்ற மூன்றாம் மாதத்திலேயே பதிவு செய்து 4, 5 மாதங்களில் தாய்க்கு ரணஜன்னி (TetanusToxtoid Cerum-TTC) தடுப்பூசியும், இரத்தப்பரிசோதனை ஆய்வும், சிறுநீர்ப் பரிசோதனையும், 7, 9 மாதங்களில் குழந்தையின் நல்வளர்ச்சியை உறுதி செய்ய ஒலிக்கதிரியக்க (Scan) ஆய்வும், பிரதிமாதம் இரத்த அழுத்தமும், எடையும் கண்டறியப்பட்டு, 7, 8, 9 மாதங்களில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் மாத்திரைகளும், சுகாதார நலக்கல்வியும், ஊட்டச்சத்துமாவும் வழங்கப்படுகின்றது.

குழந்தை பிறந்த மூன்று நாள்களுக்குள் காசநோய்த்தடுப்பூசியும், இளம்பிள்ளைவாதச் சொட்டுமருந்தும் வழங்கப்படுகின்றது. கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ரணஜன்னி எனும் முத்தடுப்பூசியும், மீண்டும் இளம்பிள்ளைவாதச் சொட்டுமருந்தும் மஞ்சள்காமலைக்கு மருந்தும், பிறந்த 10 ஆம் மாதத்தில் தட்டம்மைத் தடுப்பூசியுடன் இளம்பிள்ளைவாதத் தடுப்பூசியும், 1% ஆண்டில் முத்தடுப்பு ஊக்குவிப்பு ஊசியும் திட்டமிட்டு, கிராம நலச் செவிலியரின் களத் தொண்டால் அளிக்கப்படுகிறது. பிறந்த 6 மாதம் முதல் 2% வயது வரை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமாவு உருண்டையும், 2% வயது முதல் 5 வயது வரை அங்கன்வாடிகளில் முட்டை, காய்கறி, கீரை, பருப்பு கலந்த கலவைச் சத்துணவும் வழங்கப்படுகின்றது.

இவையாவும் இந்நாட்டுத்தாய்மார்கள் முந்தித்தவமிருந்து, நேர்த்திக் கடன்கள் பல கூறி, நினைவெல்லாம் அதுவேயாய், தம் வாழ்க்கைக்கு அர்த்தமாய், கருவுற்று இந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறக்குமுன்னும் பிறந்தபின் 5 ஆண்டுகள் வரையிலும் ஊட்டமும், திடமும், திரண்டவளர்ச்சியும் பெறுவதற்காக இந்திய அரசுகள் சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கருதாது அனைவர்க்கும் வழங்கும் முன்னேற்புத் திட்டங்களாகும். இதோடு குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமுதாயத்தினர், தன்னார்வலர்கள் எனப் பலதிறத்தாரும் குழந்தைவளர்ப்பில் அக்கறைகாட்டி பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இவ்வாறெல்லாம் எல்லாரும் கைகோர்த்துக் கருத்தொருமித்து நாளைய பாரதம் என்னும் ஆலமரத்தின் விழுதுகளை நிலமிறக்குகிறார்கள்.

இறையருள் குழந்தைகளை ஐந்து வயதில் அவர்தம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெற்றோர் விட்டுப் பிரியமனமின்றி, உற்றார் உறவினர் தோள் மீதும் மார்மீதும் தவழவிட்டுக் கொஞ்சிக்குலவிட விரும்பினாலும் குருவருள்துணைக் கொண்டு நெஞ்சத்திருள் நீங்க, எண்ணும் எழுத்தும், கலையும் திறம்படக் கற்று, அன்பினில் தழைத்தோங்கி, அறம் வளர்த்து அருள்வழிநின்று பொருள் தேடிப் புகழும் தேடி வாழ்வாங்கு வாழ்ந்திடவும் வையம் தழைத்திடவும் வழிகாட்ட நம்மை வேண்டிக் கைகூப்பித் தொழுது நம்மிடம்விட்டுச் செல்கின்றனர். அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுவது நமக்குக் கடமைமிக்கதோர் தெய்வீகப் பணியாகும். நமது ஆசிரியப் பணியில் தழைக்கும் பள்ளிக் கல்வியால் நமக்குப் பெருமிதத்தையும் துறைக்குப் பற்பல நன்மைகளையும் உரித்தாக்குமாறு நாம் நம்மை அர்ப்பணித்து இப்பணியின் மகத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பிறக்கின்ற நேரத்திலேயே குழந்தை, புற உலகப் பதிவுகளைப் பெறத் தொடங்குகிறது, பேசப்பழகும் முன்பே குழந்தை சூழலைக் கற்கத் தொடங்குகிறது. இப்பருவத்தில் கற்றுக் கொள்பவை பிற்காலத்தில் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு அடிப்படையாகின்றன.

குழந்தைக் கல்வி என்பது கற்கும் குழந்தைகள் தன்னிடம் தொடர்புகொண்டுள்ள நல்லதுாய இதயத்தை உணருமாறு செய்வதே என்பது உணரத்தக்கது. வளர் இளமைப் பருவத்தைப் பண்படுத்த குழந்தைப் பருவத்தைப் பயன்படுத்தும் தொடக்கச் செயல்பாடே தொடக்கக் கல்வி ஆகும். இந்தியக் கல்வி முறையில் முன் தொடக்கக்கல்வி மையங்களாகச் செயற்படும் பால்வாடி, அங்கன்வாடி குறித்தும் குழந்தைக் காப்பகங்கள் குறித்தும் நாம் இங்குக் காண்போம்.

பால்வாடிகளும், அங்கன்வாடிகளும்

குழந்தை பிறந்ததிலிருந்து 3 வயது வரை கல்வி முறைக்குள் கொண்டுவரப்படாமல் இயல்பாகக் குடும்பச் சூழலில் இருத்தலே சிறந்ததாகும். ஆயினும் நடைமுறை வாழ்வில் உழைப்புக்காக வெளியே செல்லும் தாயாரும், பெற்றோர் கவனிப்பைப் பெற வாய்ப்பில்லாத குழந்தைகளும் நம் நாட்டில் எண்ணற்றோராவர்.

ஆலைத்தொழில், வேளாண்மைத் தொழில், கட்டடத்தொழில், கல்லுடைத்தல் போன்ற உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுவோர் குழந்தை பிறந்த உடனேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வேளைகளில் தாங்கள் வாழும் இடங்களிலோ, பணி செய்யும் இடங்களிலோ குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள அமைப்புகள் தேவைப்படுகின்றன. இவற்றை அரசு சாரா அமைப்புகள் நிறுவி நடத்தி வருகின்றன. இவற்றைப் பால்வாடிகள் எனக் குறிக்கின்றனர். அரசே ஏற்று நடத்தும் இவ்வகை நிலையங்கள் அங்கன்வாடிகள் என அழைக்கப்படுகின்றன. இங்கு குழந்தைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, நற்பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது. தமிழகத்து அங்கன்வாடிகளில் சத்துணவு வழங்குவதுடன் பாடல், குழு விளையாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பேச்சுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

குழந்தைக் காப்பகங்கள்

வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகள் நகர்ப்புறங்களில் தனியார் மையப் பொறுப்பகங்களில் காலை முதல் மாலை வரை கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். இவை குழந்தைக் காப்பகங்கள் (Creche) என அழைக்கப்படுகின்றன. இங்கு குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப உணவும், விளையாட்டும், பாதுகாப்பும் வழங்கப்படுவதைக் காணலாம். பெரும்பாலும் விளையாடுவதற்கு வாய்ப்பற்ற இடப்பற்றாக்குறை மிகுந்த சூழலில் குழந்தைகள் பல மணி நேரங்கள் அடைத்து வைக்கப்படும் சூழலை நகர்ப்புறங்களில் காண்கிறோம். தொழிற்சாலைகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் குழந்தைகளுக்கென குழந்தைக் காப்பகங்களை நிறுவிப் பொறுப்புடன் செயற்படுத்துகின்றன. இங்கே குழந்தைகள் மகிழ்ச்சிகரமான சூழலில் வைத்துக் காக்கப்படுகின்றனர்.

சிசுவகங்கள்

பெருநகரங்களில் 11/2 வயதுக்கு மேல் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் விளையாட்டுலகமாக சிசுவகங்கள் (Infant School) அண்மைக் காலங்களில் செயற்படத் தொடங்கியுள்ளன. இங்குக் குழந்தைகளின் மொழியறிவுத் தொடக்கச் செயற்காடுகளும், ஏணி, ஊஞ்சல், மரமேறுதல் போன்ற உடல்திறன் பழகுநிலைகளும், பாடல், நடனம், போன்ற சூழல்களோடு நிகழ்த்தப்படுகிறது. சிலஇடங்களில் இவ்வகை விளையாட்டுப்பள்ளிகள் (Play Schools) சூழலைக் கற்க இயற்கையிடங்களுக்கு அழைத்துச் சென்று வரவும் ஆங்கில மொழி அறிமுக மையமாகவும் திகழ்கின்றன.

மழலையர் கல்வி நடைமுறை

எல்.கே.ஜி.யு.கே.ஜி வகுப்புகள் ஏறக்குறைய எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இன்று கல்வி முறையின் பொது அம்சமாக மாறியுள்ளது.

மாறிவரும் இந்தியக் குடும்பச் சூழலில் கூட்டுக் குடும்பங்கள் (joint family) தந்தை, தாய், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள சிறு குடும்பங்களாகப் பெரும்பான்மையும் நாட்டின் முன்னேறிவரும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இக்குடும்பங்களில் குழந்தைகள் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற தாராளமான வாய்ப்பிருந்தாலும் கூட்டுக்குடும்பங்களின் சிறப்பு வாய்ப்புகளான, மகிழ்ச்சி, உறவுச் சூழல், மட்டற்றபரிவு, மொழியறிவுப் பயிற்சி, கூட்டு வாழ்க்கை, சமூக மதிப்பீடுகளை ஒட்டியமைந்த தொடக்க அறிவுச் சூழலை இழந்துள்ளன. மோகத்தின் ஆர்வச் செயல்பாடாக மழலையர் கல்விஉளவியலுக்குத் தொடர்பில்லாத, உடல் வளர்ச்சிக்கு ஊறான எழுத்துப் பயிற்சியில் தொடங்கிக் கல்வியை இரண்டாண்டுகள் முன்கூட்டியே வழங்கும் சூழல் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும்.

முறையான சிந்தனையின்றி அமைக்கப்பெறும் இக்கல்விக்கூடங்கள் குழந்தைகளின் கற்கும் ஆர்வத்தைப் பெரிதும் பாதிக்கவும் செய்கின்றன. தாய்மொழி என்னும் சுற்றுச்சூழல் மொழி கற்க இயலாத நிலையில் புதுமொழியும்கூட பேச்சு, கேட்டல் செயல்பாடின்றி வெறும் பார்த்து எழுதும் பயிற்சியாக அமைந்த நிலை மனிதவள ஆற்றலைக் குறைத்துவிடுமோ என அஞ்சும் நிலையும் தோன்றியுள்ளது. ஊரகப் பகுதிகளிலும், இயல்பான தாய்மொழிப்பேச்சு, சூழலைப்புரிந்து கொள்ளல் என்னும் நிலைகளிலிருந்து குழந்தைகள் விடுபடுகின்றனர்.

தொடக்கக் கல்வி

ஐந்து வயது நிறைவுற்ற குழந்தைகள் முதல்வகுப்பில் சேர்ந்து ஐந்தாம் வகுப்புக் கல்வி நிறைவடையும் வரை வாய்ப்பளிக்கும் பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் எனப்படும். குழந்தைகள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகைப் புரிந்து கொண்டு, மொழிவாயிலாக விளக்க முற்படுதலின் அடிப்படைத் தேவைகளையும் எண்ணெழுத்து அறிமுகத்தையும் நிறைவு செய்வனவாகத் தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன.

சூழல்மொழி, புதுமொழி, எண்களின் அறிமுகச் செயல்பாடுகள், சூழலில் அமைந்துள்ளவற்றை வகைப்படுத்திப் புரிந்து கொள்ளும் அறிவியல் நோக்கு, தன்னைப்பற்றிய உணர்வை உருவாக்கும், பண்பாட்டுச் சூழலை அறியும் சூழ்நிலைக்கல்வியோடு, நன்னெறி / விழுமயங்கள், உடல்நலக்கல்வி ஆகியன தொடக்கக்கல்வியின் பாடத்திட்ட நோக்கங்களாக உள்ளன. தொடக்கக் கல்வியின் குறிக்கோள்களாக அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, இடைவிலகலின்றி தொடர்ந்து கற்றல், முழுமையான கல்வித் திறன் அடைவுகள் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய நாட்டின் ஊரகப்பகுதிகளில் 1 கி.மீ சுற்று வட்டத்தில் 94 விழுக்காடு தொடக்கப்பள்ளிகளும் 3 கி.மீ சுற்று வட்டத்தில் 84 விழுக்காடு உயர் தொடக்கப்பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இடைவிலகலைக் கட்டுப்படுத்த கீழ்க்காணும் நடைமுறைகளை அரசு திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது.

 • பெற்றோர் விழிப்புணர்வு
 • சமூக ஒத்துழைப்பு
 • பொருளாதார ஊட்டம் வழங்கல்
 • குறைந்த பட்சக் கற்றல் இலக்குகள்
 • மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம்
 • அனைவருக்கும் கல்வி இயக்கம்
 • மதிய உணவுத் திட்டம்
 • தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாகவும், கடமையாகவும், அரசியல் சட்டத்தின் 86வது திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
 • தேசிய ஆரம்பக் கல்வித் திட்டம்
 • நடுவண் அரசின் மனிதவள அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில அரசுகளில் கல்வியமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் ஒரு தேசியக் குழு அமைக்கப்பட்டது.
 • ஊடகங்களில் பிரச்சாரம் மற்றும் ஊக்கம் ஏற்படுத்துதல்

அனைவருக்கும் கல்வி இயக்கம்

சர்வசிக்ஷ அபியான் என அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 86-ன்படி இந்திய நாட்டில் 6 முதல் 14 வயதுள்ள 20 கோடி குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக்கல்வி அளிப்பதை உறுதி செய்யத் தொடங்கப்பட்டதாகும்.

 • பள்ளி வாய்ப்பில்லாத குடியிருப்புகளில் உடனே தொடக்கப்பள்ளி வகுப்புகள் தொடங்கி நடத்த வாய்ப்பு
 • பள்ளியின் உள் கட்டமைப்புகளான, வகுப்பறைக் கட்டடம், கழிப்பிட வசதி குடிநீர்த்தேவை, ஆகியவற்றிற்கு நிதி வழங்கல்.
 • ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதுடன், பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சி, கற்றல் உபகரணங்கள், நிதியுதவி, கல்வி கற்கும் முறைகளை வலுப்படுத்த மாவட்ட வட்டார, வள மையங்களை நிறுவுதல்.
 • வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்கான கல்வி
 • பெண் குழந்தைகளின் கல்வியில் சிறப்புக்கவனம்
 • சவால்களை எதிர்நோக்கும் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளின் கல்வியில் தனி அக்கறை.
 • கணினிக் கல்வி எல்லோருக்கும் வழங்குதல்
 • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள்
 • வருமான வரிமீது விதிக்கப்பட்ட சிறப்புக் கல்விவரியிலிருந்து (Educational Cess) 8746 கோடியும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் தொடக்கக் கல்வி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய அமைந்துள்ள பள்ளிக் கல்வி உயர் தொடக்கக் கல்வி என அழைக்கப்படுகிறது. ஒன்று முதல் 8 வகுப்பு வரையுள்ள பள்ளிகள் உயர்தொடக்கப்பள்ளிகள் என்றும் நடுநிலைப்பள்ளிகள் என்றும் கூறப்படுகின்றன. இவ்வமைப்பில் மாநில அரசுகளின் பல்வேறு பள்ளிகளில் வேறுபாடுகள் அமைந்துள்ளன என்பதை முன்னரே கண்டோம்.

 • மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம்
 • அனைவருக்கும் கல்வி இயக்கம்
 • மதிய உணவுத் திட்டம்
 • தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாகவும், கடமையாகவும், அரசியல் சட்டத்தின் 86வது திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
 • தேசிய ஆரம்பக் கல்வித் திட்டம்
 • நடுவண் அரசின் மனிதவள அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில அரசுகளில் கல்வியமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் ஒரு தேசியக் குழு அமைக்கப்பட்டது.
 • ஊடகங்களில் பிரச்சாரம் மற்றும் ஊக்கம் ஏற்படுத்துதல்

தமிழகத்தில் உயர் தொடக்க வகுப்புகளில் செயலூக்கக் கற்றல் முறைகள் (Active Learning Methodology) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

செயலூக்கக் கற்றல் முறை (ALM)

நோக்கம் முதல் ஐந்து வகுப்புக்களை நிறைவு செய்த மொழியறிவும், எண்ணறிவும் கொண்ட மாணவர்களைத் தாமே கற்க வழிகாட்டுதல் இம்முறையின் நோக்கமாகும். இம்முறை மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிதாக்குவதாகவும், புரிவிப்பதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இம்முறை கற்றலில் அனைத்து மாணவர்களையும் பங்களித்து ஈடுபடுத்துவதாகவும், பின்வாங்காமல் கற்கச் செய்வதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வழிமுறைகள்

 • குழந்தைகள் தாமே வாசித்துப் பொருளுணர்ந்து மனவரைபடம் (Mind Map) உருவாக்கும் அணுகுமுறை.
 • தன்னை ஆய்வுக்குட்படுத்தும் தன் அனுபவ வினா - விடை அமைப்பு முறை.
 • நுண்ணறிவு என்பதைப் பன்முக நுண்ணறிவு என உறுதிப்படுத்தி, உடல், இடம், மொழி, தர்க்கம், படம் எனப் பல்வேறு பரிமாணங்களுக்கும் வாய்ப்பளித்து உதவுதல்.
 • ஏற்கனவே அமைந்த பாடத்திட்டங்களுக்கும் இம்முறையை நிறைவேற்றுதல்.
 • வாழ்திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம்.

இடைநிலைக் கல்வி

இந்தியாவில் பள்ளிக்கல்விக் கட்டமைப்பில் வேறுபட்ட படி நிலைகள் நிலவுவதைக் கண்டோம். தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு முடிய தொடக்கக் கல்வி (Primary) எனவும், 6 முதல் 8ஆம் வகுப்பு முடிய உயர் தொடக்கக் கல்வி (Upper Primary) எனவும், 9 மற்றும் 10 அம் வகுப்புகளை இடைநிலைக் கல்வி எனவும் குறிப்பிடுகின்றோம்.

தொடக்கக்கல்வியில் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற்ற ஒரு கற்பவர், உயர் தொடக்க வகுப்பில் தானே கற்றல் முறைகளை அறிந்துக் கற்று, இடைநிலைக் கல்வியில் தன் நாடு, சூழ்ந்த உலகம், அவை சார்ந்த அறிவியல், கணிதம், சமூகவியல் கூறுபாடுகளையும் மொழியின் பயன்பாட்டு விரிவுகளையும் கற்பதை இடைநிலைக்கல்வி கற்றல் நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்விருவகுப்புக்களாகிய 9ம், 10ம் உயர்தொடக்கக்கல்விக்கும், மேல்நிலைக்கல்விக்கும் உள்ள இடைவெளியை நீக்கும் பாலமாக அமைந்துள்ளது. இடைநிலைக் கல்வியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக 16 வயது வரை அனைவருக்கும் உறுதி செய்ய வழிமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேல்நிலைக் கல்வி (HSC)

இடைநிலைக் கல்வித் தேர்ச்சி பெற்ற மாணவன் தன் எதிர்கால வாழ்க்கைக்கு உரிய தொடர் செயற்பாதையை, தொழில்நுணுக்கப்பாதையை எத்துறையில் தேர்ந்தெடுத்து இயங்குவது என்பதை நோக்கமாகக் கொண்டது மேல்நிலைக்கல்வி எனலாம். பதினோராம் வகுப்பில் சேரும் மாணவன் தன் வாழ்க்கைக்குரிய தனித்திறன் பெறுவதைத் தேர்ந்தெடுத்து அதனைத் தெளிவுபட பிரித்துக் கற்றலே மேல்நிலைக் கல்வியின் நோக்கமாகும்.

மைய அரசு கல்வி வாரியம்

மைய அரசு இடைநிலைக் கல்வி வாரியம் எனப்பெறும் சி.பி.எஸ்.சி. (Central Board of Secondary Education) இந்தியாவிலும்,இந்தியநாட்டுக்கு வெளியிலும் வாழும் மக்களின் பள்ளிக் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 12ஆம் வகுப்பு முடிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிச் செயல்படுத்துகின்றது.

மாநில வாரியங்களோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் இப்பள்ளிகள் குறைவானவை. தாய்மொழியோடு, அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கில மொழி வாயிலாகவும் பிறவற்றை இந்திமொழி வாயிலாகவும் கற்க இப்பள்ளிப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நவோதயா பள்ளிகள்

மைய அரசின் வழி, இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தேசிய ஒருமைப்பாட்டு நோக்கத்துடன் வெவ்வேறு மொழி பேசும் பிற மாநிலத்தவர்களுடன் உடனுறை பள்ளிகளாக இயங்குகின்றன. இப்பள்ளிகளும் மைய அரசின் கல்வி வாரியத்தின் அங்கீகாரத்தோடே செயல்படுகின்றன.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள்

தமிழகத்தில் தமிழ்வழிப் பள்ளிகளில் சேர்ந்து கற்க இயலாத குழந்தைகளுக்குப் பத்தாம் வகுப்பு நிறைவு பெறும் வகையில் கல்லூரிக் கல்வியுடன் இணைந்த பல்கலைக் கழகத்தின் வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆயினும், தமிழகத்தில் ஆங்கில வழிப் பள்ளிகள் தேவையை ஒட்டி மெட்ரிகுலேஷன் பள்ளிக் கல்வியுடன் இணைக்கப்பட்டு ஒரு தனி வாரியமாகச் செயற்பட்டு வருகின்றது.

இப்பள்ளிகளின் கல்வித் திட்டத்தில் மாநில அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தின் வழிகளைக் கொண்டிருந்தாலும், பாடத்திட்டத்திலும், தேர்வுத் தாள் அமைப்பு முறைகளிலும் வேறுபாடு கொண்டுள்ளன. ஆயினும் அரசு சமச்சீர் கல்விமுறையை உண்டாக்குவதற்கு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றமை கருதற்பாலது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதியுதவியில்லாமல் அரசின் அங்கீகாரத்துடன் மெட்ரிகுலேஷன் வாரியத்தின் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தத்தம் பெற்றோரின் சொந்த நிதி முயற்சியிலேயே கல்வி கற்கின்றனர்.

கேந்திரய வித்யாலயங்கள்

மைய அரசின் பணியாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கேந்திரிய வித்யாலயங்கள் அமைந்துள்ளன. இவை நிர்வாக அமைப்பில் மைய அரசின் நிதியுடன் இயங்குபவை. மைய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் இப்பள்ளிகள் பெரும்பான்மையும் சிறந்த அடிப்படைக் கட்டமைப்புகளுடன் செயற்படுகின்றன. இவற்றில் வாய்ப்புக்கேற்றவாறு ஒதுக்கீட்டு அடிப்படையில் பிறதுறை சார் பெற்றோர்களின் குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர்.

முறை சாராக்கல்வி

முறை சார்ந்த பள்ளிக் கல்வியில் கற்கும்முறை, மாணவனின் தேவை, சமூக எதிர்பார்ப்பு ஆகிய மூன்றின் கலவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இம்முறை சார்ந்த கல்வி கல்லாமை நிறைந்திருக்கும் ஒரு சமூகத்தில்தான் இயங்குகிறது. பொருளியல் மாற்றங்களைத் தனிமனிதவாழ்வில் தரும் ஒரு கருவியாகக் கல்வி அமைகிறது. கல்விப் பெருக்கத்தின் வாயிலாகச் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் கல்லாதவர்களையும் கற்றவர்களாக்கும் பணியை முறை சார்ந்த கல்வி வழங்கும் போது உடனிகழ்வாக முறைசார்ந்த கல்வியமைப்புக்குள் வரஇயலாத அனைவருக்கும் வழங்க வேண்டியுள்ளது. பொருளியல் மாற்றங்களின் காரணிகளான அறிவு, மனப்பான்மை, திறன் ஆகியவற்றின் வளர்ச்சியே சமூகமாற்றத்திற்கு உதவும். கல்வி ஒரு தனிமனிதனைத் தன் உரிமை, தன் கடமை, சமூகத்தில் தன் பங்குப்பணி என்னும் மூன்றையும் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவுத் தெளிவும் திறனும் பொருளியல் மாற்றத்தை உண்டாக்கும்.

நம் நாட்டில் 80 சதவீத மக்கள் ஊரகப்பகுதிகளில், கிராமங்களில் வாழ்கின்றனர். முறைசார்ந்த கல்வி இப்பகுதிகளில் முழுமையாக விரிவடையவில்லை. இது கல்விக்கும் வேலைக்குமான பொருத்தமின்மையை உண்டாக்குகிறது. முறைசார்ந்த கல்வி வேலை வாய்ப்பில்லாத நிலையை உண்டாக்குகிறது. குலத்தொழிலையோ, தன் திறன் சார்ந்த வேலைகளிலோ இளைஞர்கள் சேர்ந்து செய்ய வாய்ப்பில்லை. இவ்வகையில் கல்வி ஒரு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. விளைநிலங்கள் நலிவுற்ற மக்கட்பிரிவினர்க்குப் பிரித்தளிக்கப்பட்டாலும் போதிய வேளாண்செய்திறன் அவர்களிடம் இன்மை காரணமாக அவர்களில் பெரும்பான்மையோர் மீண்டும் நிலமற்றவர்களாக மாறும் சூழ்நிலை உள்ளது. இச்சூழலில் அவர்களுக்கு திறனும் தொழில்நுட்பமும் வாய்ந்த வேளாண்மைக்கல்வி அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அனைவரும் முறைசார்ந்த பள்ளிக்கல்வியைப் பல காரணங்களால் பெறமுடியா நிலை காணப்படுகிறது. முறைசார்ந்த கல்வியில் உள்ள சில கெடுபிடி, நெகிழ்ச்சியற்ற தன்மையால் முறைசாராக் கல்வியின் தேவை பரவலாகத் தோன்றுகிறது.

கல்வி வாய்ப்பின்மை

முறையான கல்வி மக்கட்பிரிவினர் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை.

இந்நிலைமைக்கு எல்லா இடங்களிலும் பள்ளிவசதி கிடைக்காத நிலைமையும், மக்களின் கல்வி குறித்த அக்கறையின்மையும் அடிப்படைக் காரணங்களாகின்றன. தொடர்ச்சியான கல்விப் பாரம்பரியம் இன்மையும், கல்விக்கான தேவையின்மையும் மக்களிடத்தில் அக்கறையின்மையை உண்டாக்குகின்றன எனலாம்.

 • இடைவிலகல் முறைசார்ந்த கல்வியில் ஒரு குறிப்பிட்ட கல்வி நிலையை முடிப்பதற்கு முன்பே தொடர்ந்து கற்காமல் இடையில் விலகுவோரை இடைநிற்போர் (drop Outs) என்பர். ஒரு குழந்தை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தொடக்கப்பள்ளிகளில் கற்காத நிலையில் கல்வியின் பயன் ஏற்படவாய்ப்பில்லை.
 • கல்வியின் வாழ்க்கையோடு தொடர்பற்ற தன்மை, ஊரகப்பகுதி மக்களின் வாழ்க்கை அல்லது பொருளியல் தேவையை ஈடுசெய்யக் கூடியதாக முறைசார்ந்த கல்வி அமையாத நிலை.

எனவே முறைசார்ந்த கல்வி, அன்றாட வாழ்வோடு தொடர்பில்லாத அறிவு, பொருத்தமில்லாத கற்பிக்கும் முறைகள், நெகிழ்வுத்தன்மையற்ற வகுப்பறைச்சூழுல், செயல்திறனோடு தொடர்பில்லாத கல்வி, மனப்பாடம் செய்யும் முறை, இடைவிலகல் மிகுதி, தொடர்ந்து கல்வி பயில்வோர் விகிதக் குறைவு போன்றன முறைசாராக் கல்வியின் தேவைக்கு வழிவகுத்துள்ளன எனலாம்.

ஐக்கிய நாட்டு சபையின் கல்வி அறிவியல் மற்றும், அறிவியல் மன்றத்தின் பன்னாட்டுக் கல்வி ஆணையம் (UNESCO) 1972 ஆம் ஆண்டு கற்பித்தலிலிருந்து கற்றலுக்கு என்னும் அறிக்கை முறைசார் தொடக்கக் கல்வியின் தோல்விகளைப்பட்டியலிட்டது. இதனடிப்படையிலேயே முறை சாராக் கல்விமுறை வகுக்கப்பட்டது.

முறைசாராக் கல்வியின் தேவை

வளர்ந்த நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும் முறைசாராக் கல்வித் தேவையானது சமூகத்தில் எல்லோருக்குமான கல்வி வழங்குவதுடன் கற்பித்தலிலிருந்து தானே கற்பது என்பதற்கு மாறுவதன் வாயிலாக தரமான கல்வி பெற உதவுவது என்னும் அடிப்படைகளில் இன்றியமையாததாகிறது. வளர்முக நாடுகளில் முறை சார்ந்த கல்வியின் பொருளியல் தேவையைக் குறைத்து, கல்வி வாய்ப்பற்ற சமூகப் பிரிவினர்க்கும் கல்வியை வழங்குவதன் வாயிலாக நாட்டின் மேம்பாட்டுக்கு உடனடியாகவும், சிறப்புடனும் வழிவகுப்பது என்னும் நிலைகளில் தேவைமிக்க முறையாக முறைசாராக் கல்விமுறை அமைகிறது.

முறைசார்ந்த கல்வியில் பயில்வோரின் வாழ்க்கை மேம்பாட்டையும் ஒருவகையில் இம்முறை உதவுகிறது. தங்கள் தனித்திறனையும் வாழ்க்கைத் தகுதிகளையும் உயர்த்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது. நலிவுற்றோரும், ஏழைகளும் விடுதலை பெறவும் வாழ்க்கைத் தரமேம்பாட்டுக்கும் இக்கல்விமுறை உதவுகிறது.

இந்திய நாட்டில் முறைசாராக் கல்வியின் முக்கியத்துவம்

 • ஒரு குடியரசு நாட்டிற்கு, குடிமக்களின் கல்வியும் அறிவுத்தெளிவும் மிகவும் இன்றியமையாதவை. இக்காரணத்தால்தான் வளர்ந்த நாடுகளில் இடைநிலைக் கல்வி வரை கட்டாயக்கல்வி எனச் சட்டமியற்றப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் தொடக்கக் கல்வியாகிலும் குடியரசு மேம்பட எல்லாமக்களுக்கும் வழங்கப்படவேண்டும். 1947ல் இந்தியா விடுதலையடையும் போது 85 சதவீத மக்கள் படிக்காதவர்களாயிருந்தனர், 6-11 வயதில் 31 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பிருந்தது. இது தேசியக் கவலையாக இருந்து வந்தது.
 • 1949 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் அரசு 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்கல்வி வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டுநெறி நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. 62 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட இவ்வுறுதி மொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றிற்கெல்லாம் நடைமுறை அளிக்கும் வகையில் அனைவருக்குமான கல்வி அளிக்க வேண்டிய தேவையின் வழிமுறையே முறைசாராக் கல்வியாக உருவெடுத்தது.
 • பள்ளியில் எல்லாக் குழந்தைகளையும் சேர்த்தலும், தொடர்ந்துகற்கவைப்பதும் சமூகபொருளியல், கல்வி, அரசியல் காரணங்களால் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே முறைசார்ந்த கல்வியோடு இணையான முறைசாராக் கல்வியும் தேவையாகிறது.
 • முறைசார்கல்வி உரிய வயதினருக்கே இயலும் ஆனால் முறைசாராக்கல்வி வயதைத் தாண்டிவிட்டவர்களுக்கும், பள்ளிவாய்ப்பை இழந்தவர்களுக்கு அரியதோர் வாய்ப்பாகும். 1974ஆம் ஆண்டு மத்தியக் கல்வி ஆலோசனைக் கழகம் (The Central Advisory Board) மக்கள் எண்ணிக்கை, மற்றும் கல்வித்தர அடிப்படையில் முறைசாராக் கல்வியை 9 வயது முதல் 14 வயது முடிய உள்ள குழந்தைகளுக்குப் பரிந்துரைசெய்தது.
 • ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீஹார், ஜம்மு & காஷ்மீர், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் கல்லாமை மிகுந்திருந்ததைக் கணக்கிட்டு முறைசாராக் கல்வி இம்மாநிலங்களில் மத்திய அரசால் நிதியுதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. முறைசாராக்கல்வி தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (NCERT) நிறுவனத்தின் பாட மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கி நடத்தப் பெற்றது.
 • முறைசாராக்கல்வியானது, முறைசார்ந்த கல்வியின் குறைகளை ஈடுசெய்யவும், மக்கள் தொகைப்பெருக்கத்திற்கேற்ற உத்தியாகவும் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களில் தொடங்கி நிகழ்த்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்

3.0487804878
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top