பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / புதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை

புதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஒரு நாட்டின் வளம் அந்நாட்டில் வாழும் மக்களின் கல்வி, ஆற்றல், ஒழுக்கம் என்ற உயர் பண்புகளைப் பொருத்தே, அளவிடப்படுகிறது. நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பாகக் கல்வி கருதப்படுகிறது. எந்த ஒர் அமைப்பும், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப மாற்றமடைய வேண்டும். சமுதாய வளர்ச்சி, புதிய அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றால் காலத்திற்கேற்றாற் போல் கல்வியும் மாறுதலடைந்து நவீனமடைய வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் இந்திய சமுதாயம், பல புதிய பிரச்சனைகளை எதிர் நோக்கிட வேண்டியிருக்கும், அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு புதிய அறிவும், திறன்களும், அணுகுமுறைகளும் தேவைப்படும். இத்தகைய பண்புகளைப் பெறுவதற்கு முற்றிலும் புதிய கல்விமுறை தேவை. எனவேதான் 1985ல் ஒர் கல்வி ஆவணத்தை நம் மைய அரசு வெளியிட்டு, அதன் மீது நாடுதழுவிய விவாதத்திற்குப் பின்னர், 1986ல் தேசிய கல்விக் கொள்கையாக அது வெளியிடப்பட்டது.

தேசிய கல்விக்கொள்கை (1986)ல் தொடக்கக் கல்வி இலக்குகள்

 1. 14 வயதுக்குட்பட்ட அனைவரையும் பள்ளிகளில் சேர்த்து, இடையில் விலகாது காத்தல்.
 2. துவக்கக் கல்வியில் கல்வித் தரத்தை உயர்த்துதல், குழந்தை மையக் கற்பித்தல் வழியே, அவர்களின் கற்றல் திறன்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல்.
 3. துவக்கப்பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளான கட்டிடங்கள், ஆசிரியர்கள், பள்ளியின் இதர வசதிகளான மேசை, நாற்காலிகள், கற்பித்தல் கருவிகள், விளையாட்டு வசதிகள் ஆகியவற்றை அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைக்கச் செய்ய “கரும்பலகை இயக்கம்” (Operation Black Board) அமலாக்கம்.
 4. கிராமப்பள்ளிகளில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் வேளாண்மை வேலைகளில், பெற்றோருக்கு உதவிட வேண்டியிருப்பதால் அவர்கள் பள்ளிக்கு வருவது தடைப்படுகிறது. இத்தடையை நீக்கிட பள்ளியின் நேரமும், விடுமுறைக்காலங்களும் கிராமப்புறக் குழந்தைகளின் தேவையை ஒட்டி அமைக்கப்படல் வேண்டும்.
 5. கிராமப்புறங்களில் உள்ள முதல் தலைமுறை மாணவர்கள் தங்களின் சொந்த வேகத்தில் கற்பதற்கு ஏற்ற வகையில், ஆசிரியர்களால் “தனிக்கவனக் கல்வி’ (Individualised Instruction)
 6. தேர்வுகளைப் புறவயத்தன்மையுடையதாக்கி, துவக்கக்கல்வியில் எந்த வகுப்பிலும் மாணவர்களைத் தேக்கி வைத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
 7. துவக்கப்பள்ளியிலிருந்து விடுபட்டவர்கள், தங்கள் பகுதியில் பள்ளியிலில்லாத குழந்தைகள், வேலைக்குச் செல்லும் குழந்தைகள் போன்றோருக்கான முறைசாராக் கல்வி முறையை அமைத்தல்.
 8. முறைசாராக் கல்விமுறையில் நன்கு கற்கும் குழந்தைகள், விரும்பினால் முறையான கல்விமுறைக்கு எளிதில் மாறும் வகையில் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கை நெகிழுந்தன்மையுடன் இருத்தல் வேண்டும். 1995க்குள் 15-35 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் முறைசாராக் கல்வி மூலம் எழுதப்படிக்கக் கற்றுத்தர வேண்டும். 100% எழுத்தறிவு எட்டப்படவேண்டும்.

மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம்

(District Primary Education Programme (DPEP))

“அனைவருக்கும் கல்வி’ என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட திட்டம் “மாவட்டத் தொடக்கக் கல்வித்திட்டம்” ஆகும். இதன்படி மக்கள் வாழ்விடங்களுக்கு அருகில் கல்விக் கூடங்கள் அமைத்து பள்ளி வயது எய்திய ஆண், பெண் இருபாலாரையும் பள்ளிகளில் சேர்த்து பதினான்கு வயதுவரை இடையில் நிறுத்தமின்றி தொடர்ந்து கல்வி கற்கச் செய்வதும், கல்வித்தர முன்னேற்றம் அடைவிப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

தோற்றமும் வளர்ச்சியும்

1989ல் தாய்லாந்தில் ஜாம்டியன் என்னும் நகரில் உலக ஐக்கிய நாடுகள் சபையின் சமூக பொருளாதார கலாச்சாரக் கழகத்தின் ஆதரவில் கி.பி. 2000க்குள் அனைவருக்கும் கல்வி என்ற உலகளாவிய நோக்கத்தை வலியுறுத்தி ஒரு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் மூன்று குறிக்கோள்கள் வலியுறுத்தப்பட்டன.

பள்ளிவயது எய்திய குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து அவர்களை 5ஆம் வகுப்புவரை தொடர்ந்து கற்கச் செய்தல். குறிப்பாக பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நலிந்தோர் ஆகியோரின் குழந்தைகளுக்குத் தனிக்கவனம் செலுத்திப் படிக்க வைத்தல்.

ஒவ்வொரு நிலையிலும் குறைந்த அளவு கற்றல் திறன்களையேனும் வளர்த்துக் கொள்ளும் வகையில் தரமான கல்வியளித்திட வழிவகை செய்தல்.

கற்றல் - கற்பித்தலுக்கு ஏற்ற சூழ்நிலையைப் பள்ளிகளில் உருவாக்கிடப் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவையே அம்மூன்று குறிக்கோள்களாக இருந்தன.

வளரும் நாடுகளின் இந்த அறைகூவல்களை வளர்ந்த நாடுகள் ஏற்றுக் கொண்டன. பன்னாட்டு நிதியுதவி அமைப்புகளின் மூலம் இவற்றை செயல்படுத்தவும் ஆவன செய்யப்பட்டது.

இதற்கடுத்து 1993ல் வளரும் 9 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் கூடி “அனைவருக்கும் ஆரம்பக்கல்வி’என்னும் கொள்கையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அதன் விளைவாக 1986இல் இந்திய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் இத்திட்டம் இந்தியாவிலும் தொடங்கப்பட்டது. 1994-95ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பெற்று ஏழு ஆண்டுகளில் இலக்கை நிறைவேற்றிட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது.

மாவட்டங்களைத் தெரிவு செய்தல்

மாவட்டத் தொடக்கக்கல்வி திட்டத்தை செயல்படுத்திட மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான அடிப்படைகளாவன

 1. பெண்களின் எழுத்தறிவுச் சதவீதம் தேசிய பெண் எழுத்தறிவுச் சராசரியை விட பின்தங்கியுள்ள மாவட்டங்கள்.
 2. அறிவொளி இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட்டு அதன் பயனாய்த் தொடக்கக் கல்விக்குக் கூடுதல் தேவை ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்.

அணுகுமுறைகளும், உத்திகளும்

பரவாக்குதல் (Decentralisation) : செயல் திட்டங்களும், வரவு செலவுத் திட்டங்களும் மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு, நிறுவன ஆற்றலை மேம்படுத்த முதலீடுகளும் மாவட்ட அளவிலேயே வழங்கப்பட்டன.

சமவாய்ப்பில் கவனம் (Equity Focus) : பெண் கல்வியறிவுச் சதவீதம் குறைந்த நிலையிலுள்ள மாவட்டங்களின் மீது கவனத்தைச் செலுத்தி அடிப்படை ஆய்வுகள் நடத்தப்பெற்று, உரிய அணுகுமுறைகள், சிறப்பாக மகளிர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்காக வகுக்கப்பெற்றன.

பங்கேற்பு முறையில் திட்டமிடல் : கலந்துரையாடல்கள் மற்றும் பணிமனைகள் வாயிலாகவும், கிராம அளவிலும் மாவட்ட அளவிலும், பெற்றோர், ஆசிரியர் கழகங்கள். அரசுசாரா நிறுவனங்கள், மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அளவிலும் பள்ளி அளவிலும் பல்வேறு அமைப்புகள் திட்டமிடுதலில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மாவட்ட மற்றும் மாநில அலுவலர்கள், உலகக் கல்வி வளர்ச்சி அலுவலர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சக அலுவலர்கள், தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வல்லுநர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக வல்லுநர்கள், தேசியக்கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாக நிறுவனத்தினர் (NIEPA) மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் போன்றோர் பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்று, தேர்ந்தெடுக்கப்ட்ட மாவட்டங்களின் தேவைகள், பிரச்சனைகள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

மாவட்டங்கள் தெரிவு : நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் மொத்தம் “70” வருவாய் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில்

 • திருவண்ணாமலை,
 • இராமநாதபுரம்
 • புதுக்கோட்டை,
 • பெரம்பலூர்
 • தருமபுரி,
 • விழுப்புரம்
 • அரியலூர்
 • கடலூர்

ஆகிய எட்டு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பட்டது. இத்திட்டத்திற்காக உலக வங்கி இந்தியாவுக்கு ரூ. 122 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது.

அதிகாரப் பரவல் : 1994 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைந்திருந்த தொடக்கக் கல்வியைத் தனியே பிரித்து நிர்வாக வசதிக்காக “தொடக்கக் கல்வி இயக்ககம்’ உருவாக்கப்பட்டது. தொடக்கக் கல்விக்கென மாவட்டத் தொடக்கக் கல்வி (DEEO) அலுவலகங்களும் ஒன்றிய அளவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளும் (AEEO) உருவாக்கப்பட்டன.

விழிப்புணர்வு : குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி அளிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், பிள்ளைகள் சேர்க்கையுடன், தக்கவைத்தல் பற்றியும், பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்திட கல்வியாண்டுத் தொடக்கத்தில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

பள்ளி வரைபடம் : பள்ளி வரைபடம் தயாரிப்பது, தொடக்கக் கல்வி நுண்ணிலைத் திட்டமிடலில் மிக முக்கிய இடம் பெற்றது. பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பின் அவசியம், பள்ளிக்குத் தேவையானவை ஆகியவற்றையறிந்து நிறைவு செய்திட இது வழிவகுக்கிறது. ஆண்டுதோறும் பள்ளிகள் தோறும் நிகழும் இச்செயலுக்குரிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளிகளில் காலியாகயிருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மேலும் மாவட்டத் தொடக்கக் கல்வித்திட்டம் செயல்படும் மாவட்டங்களில் அத்திட்டநிதி கொண்டு 1026" ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பெரும் பயிற்சித் திட்டங்கள்

மாநிலம் முழுமைக்கும் 1994-95,1995-96,1996-97 மற்றும் 1997-98 கல்வி ஆண்டுகளில் இருபெரும் பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான “சிறப்புப்புத்தறிவுப் பயிற்சி”SOPT (Special Orientation Programme for Teachers) மற்றொன்று குறைந்த பட்சக்கற்றல் இலக்குகள் MLL (Minimum Level of Learning) செலவு குறைந்த / செலவில்லா கற்பித்தல் கருவிகள் பற்றியதாகும் மற்றும் திறன் அடிப்படையிலான கற்பித்தல் முதலியன பெரும் பங்கு வகித்தன. புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடநூல்கள் திறன் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் வழியே அளிக்கப்பட்டது.

கற்றலை எளிமையாக்குதல்

ஒன்றியப் பயிற்சி மையங்கள் (Block Resource Centres) ஒன்றியங்கள்தோறும் அமைத்து உரிய மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு 8 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துப் பயிற்சிப் போதகர்களாக (Teacher Eductors) நியமனம் செய்யப்பட்டது. முதலில் தலைமை ஆசிரியர்களுக்கும் பின்பு ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பிறகு 4ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் ஒரு வாரப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிர்வாக அமைப்பு

DPEP செம்மையாக நடைபெற மாநில அளவில் தமிழ்நாடு கல்வி இயக்கத்தின் கீழ் ஆட்சிக்குழு, செயற்குழு என்ற அமைப்புகளுடன் மாநிலத்திட்ட இயக்ககம் அமைந்தது. பொதுக்குழுவின் தலைவர் தமிழக முதல்வர், துணைத் தலைவர், கல்வியமைச்சர் ஆவார். இதன் கீழ்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி இயக்ககம், பள்ளி சாராக் கல்வி இயக்ககம், ஆசிரியர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி இயக்ககமும் செயல்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அதன் நேரடிப் பார்வையில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் இயங்கின. இதன் கீழ் பல ஒன்றியப் பயிற்சி மையங்களும், அதற்குக் கீழ் பல குறுவட்டக் கருத்தாய்வு மையங்களும் இயங்கின. இவை மாதந்தோறும் ஒருமுறை கூடி கல்வி முன்னேற்றக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டன. எந்தத்திறனுக்கு எந்த உபகரணங்கள் செய்யலாம் என்பதும், பாட போதனையை எவ்வாறு எளிமைப்படுத்தலாம் என்பதும் கருத்தாய்வு மையக்கலந்துரையாடலில் இடம் பெற்றன.

மாவட்டங்கள் தோறும் திட்டச்செயற்பாட்டுக் கூட்டமைப்பு

மாவட்டக்குழுவின் தலைவராக அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் பொறுப்பேற்கிறார், துணைத்தலைவராக முதன்மைக் கல்வி அலுவலர் விளங்கிட DIET நிறுவனத்தின் முதல்வர், மாவட்டக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உட்பட 17 பேர் பொறுப்பேற்றனர். இத்திட்டத்தின் சீரிய நடைமுறைப்பாடு கருதி தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பினர்களையும், உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிராமக் கல்விக்குழு

மாவட்டத் தொடக்கக் கல்வித்திட்டத்திலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.2000/-யை இக்குழுவின் ஒப்புதலோடு கற்பித்தல் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். தாமே செய்ய முடிகின்ற கற்பித்தல் பொருட்களை ஆசிரியர்கள் செய்து, மீதிப் பணத்தில் நிரந்தரமாகப் பயன்படும் உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது பயன்படுத்திடலாம். தாங்கள் வாங்கும் ரூ. 500/- மதிப்புள்ள கற்பித்தல் உபகரணங்களின் பெயர் மற்றும் அவை எந்த திறனுக்காகச் செய்யப்பட்டது அல்லது வாங்கப்பட்டது என்று விவரங்களை எழுதி வைத்துத் தலைமையாசிரியரிடம் ஏற்பு பெறப்பட்டது.

கற்றல் திறன்கள்

ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு எல்லா பாடங்களுக்கும் சேர்த்து "663 திறன்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

பெண் கல்வி

3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் மாணவிகளுக்குப் பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்தில் சிறப்புப் பயிற்சி 1 1/2 மணி நேரம் கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் கூடுதல் பணியைக் கருத்தில் கொண்டு பணியாற்றும் ஆசிரியருக்கு ஒரு மாணவிக்கு மாதம் ரூ.10/- வீதம் மதிப்பூதியம் இத்திட்டத்தின் வழியே வழங்கப்பட்டது.

இதுபோல் ஊனமுற்ற குழந்தைகளும் கல்வி பெற்றிடும் வகையில் அவர்களையும் பள்ளியில் சேர்த்து ஏனைய குழந்தைகளுடன் ஒருங்கிணைந்து படிக்கச் செய்வதற்கு மாவட்டத் தொடக்கக் கல்வித்திட்டத்தில் புதிய திட்டங்கள் இணைக்கப்பட்டன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிலையம்

Filed under:
3.04444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top