பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / மக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்

மக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மக்களாட்சி நாட்டுக்குக் கல்வி அடிப்படைத் தேவையாகும். மக்களாட்சி மக்களின் முனைப்பான பங்கேற்பையும், விழிப்புணர்வையும், விருப்பார்வத்தையும் தழுவி நிற்கும் ஆட்சி முறையாகும். குடிமக்களின் கல்வியறிவு நாட்டின் குடியரசுக்கு வலுவூட்டுவதாகும். தம்மைத்தாமே ஆண்டு கொள்ள கல்வி ஒரு கிரியா ஊக்கியாக அமைகிறது. கல்வியறிவு பெற்ற மக்களால்தான் உரிமை, கடமை, சமத்துவம், சட்டம், தற்சார்பு போன்ற இறையாண்மைக் கூறுகளைப் பிறர்க்கும் வழங்கித் தாமும் துய்த்து இயல்பானதொரு நல்லாட்சியை நடைமுறைப்படுத்தமுடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

இந்திய அரசின் புதிய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, மக்களுக்கு வழங்கப்படவேண்டிய கல்வி, இந்திய மக்களின் தலையாய பொறுப்பாக உருவெடுத்தது. அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டம் உரிய முன்னுரிமை பெற்றது. இந்தியக் குழந்தைகள் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வி பெற வேண்டியது அவசியமானது. அனைவருக்கும் இலவச, கட்டாயக்கல்வி, வழங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றிலிருந்து, இன்றுவரை, நம்மால் நமக்காக ஏற்படுத்தப்பட்ட நம்முடைய அரசுகள் இவ்விலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இலக்கை விரைந்து நெருங்கி வருகின்றோம்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்

இந்தியரின் விடுதலைப் போராட்ட முயற்சிகளாலும், தியாகங்களாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலை பெற்றது. 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆதிக்கம் முடிவுற்று, 1950 சனவரி 26 இல் பாரதம் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக மலர்ந்தது. சுதந்திரம் பெற்றதோடு நம் கடமைகள் முடிவுறவில்லை. பெற்ற சுதந்திரத்தின் பயன்களைக் கல்வி அறிவை ஊடகமாக்கி நாம் அனைவர்க்கும் வழங்கி முயன்று வருகிறோம். சமூகநீதி, சமத்துவம், சமஉரிமை போன்ற மக்களாட்சிக் கொள்கைகளுடன் பாரதக் குடியரசு உலக அரங்கில் உயர்தனி இடத்துடன் பாருக்குள்ளே நல்ல நாடாக விளங்கி வருகின்றமை கண்கூடு.

இந்திய அரசியலமைப்புச்சட்டம் என்பது, "மக்கள் அரசு, ஆட்சிப்பணியாளர், சட்டம் இயற்றுவோர், நீதித்துறை ஆகியோர்க்கு இடையேயுள்ள தொடர்புகளை வரையறுத்து, நிர்ணயம் செய்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் 22 பகுதிகள், 395 சட்டப்பிரிவுகள், 22 அட்டவணைகள் மற்றும் 9 உட்கூறுகளைக் கொண்டது.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எட்டு அடிப்படையான கொள்கைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அரசியல் அக்கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

சிறப்பு முகப்புரை

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மையுடைய, பொது உடைமையான, சமயச்சார்பற்ற, சனநாயக, குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்களுக்கு, சமூக சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம், நீதி கோரும் உரிமை சிந்திக்க சுதந்திரம், பேசச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், தான் விரும்பும் சமயத்தைப் பின்பற்ற, வழிபாடு செய்ய உரிமை ஆகியவற்றையும் சமுதாயப் படிநிலைகளில் சமவாய்ப்புகளோடு அவரவர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான சமத்துவம்,

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையோடு தனிநபர் சுயமரியாதைக்குச் சகோதர உணர்வோடு உறுதியளித்தல் ஆகியவற்றையும் அரசியல் அமைப்புச் சட்டப்பேரவையில், இந்த அரசியல் அமைப்புச்சாசனத்தை உருவாக்கி, ஏற்று, நமக்குநாமே வழங்கிக்கொண்டோம்.

அனைவரும் சமநிலை,யாவர்க்கும் சமநீதி, எழுத்துரிமை, பேச்சுரிமை, தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான சமத்துவம் போன்றவை அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளன.

“வாழி கல்விசெல்வம் எய்தி, மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே” எனப் பாரதியார் விடுதலைக்கணவு கண்டு பாடியதைப் போல் வாழ அரசியல் சாசனம் நமக்கு உரிமை வழங்கியுள்ளது.

கல்வியும் சமூக நீதியும் ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியால் தன்னை உயர்த்திக்கொள்ள, வளர்ச்சியடைய, முன்னேற, சமவாய்ப்பு வழங்குவதைக் குறிப்பது சமூக நீதி கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அனைவர்க்கும் சமமானதாக அமைந்திருக்க வேண்டும். மாநிலம், சமூகம், சமயம், சாதிகள் என்று எவ்விதப்பாகுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் திறந்திருக்க வேண்டும்.

கல்வியும் சுதந்திரமும்

அரசியல் சட்டத்தால் பேச்சுரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசையும், சமூகக்கேடுகளையும் விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு. விமர்சனம் நம்முடைய தேச ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. அறிவியல் பூர்வமாக சிந்தித்துப் பேசும் உரிமையை பயன்படுத்திக் கல்வி ஒரு கருவியாகச் செயல்படுகின்றது. அது போன்றே பிறரின் சுதந்திரமான வழிபாடுகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளவும் கல்வி உதவுகின்றது. அனைவருக்கும் கல்விச் சமவாய்ப்பு அளிக்காவிடில் அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டை அடையமுடியாது. பிற்பட்ட மற்றும் குறைந்த சலுகை பெற்ற பிரிவினர், தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள கல்வி ஒரு வலிமைமிக்க கருவியாகப் பயன்படுகிறது.

கல்வியும் உறுதிப்பாடும்

தேசிய ஒருமைப்பாட்டுக்கும், தனிநபர் சுயமரியாதைக்கும் கல்வி உறுதியளிக்க வேண்டும். சமுதாய ஒற்றுமை தனிநபர் கண்ணியம் மற்றும் தேச ஒருமைப்பாடு வளர கல்வி அவசியமாகும். கல்வியின் வாயிலாக சமுதாயத்தையும், தனிநபரையும் இணைத்து உறுதிப்பாட்டை எட்ட வேண்டும்.

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள், அரசியல் அமைப்புச்சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உரிமைகளை (i) நியாயப்படுத்தப்பட்ட உரிமைகள் (ii) நியாயப்படுத்தப்படாத உரிமைகள் (Justifiable and Non Justifiable) என இருவகையாக விவரிக்கின்றது.

நியாயப்படுத்தப்பட்ட உரிமைகளை நீதிமன்றத்தினால் நடைமுறைப்படுத்த முடியும். அரசியல் அமைப்புச்சட்டத்தின் பகுதி - II இல் அடிப்படை உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி - IV இல் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன. அதில் நியாயப்படுத்த முடியாத உரிமைகளாக வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இடம் பெற்று உள்ளன.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாவன

அடிப்படை உரிமைகள் சட்டப் பிரிவுகள்

 • வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு 16
 • தீண்டாமை ஒழிப்பு 17
 • சுதந்திரம் 19
 • பத்திரிகை சுதந்திரம் 19

அடிப்படைக் கடமைகள்

அரசியல் சாசனத்தின் 42 ஆவது திருத்தம், சாசன பகுதி IV-A மற்றும் சட்டப்பிரிவு 51-A இல் இந்திய குடிமக்களுக்கான பத்து அடிப்படைக் கடமைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்திய மக்கள் தன்னுடைய செயலிலும், நடத்தையிலும் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகளை இது குறிப்பிடுகின்றது.

 • அரசியலமைப்பை அங்கீகரித்தல், தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல்
 • விடுதலைப் போராட்டத்தின் போது ஏற்றுக்கொண்ட உன்னதமான இலட்சியங்களைப் பின்பற்றல்,
 • போற்றுதல். முறையில் வாழ சமத்துவம்,நீதி, சுதந்திரம் ஆகியவற்றை முன் நிறுத்தி,செயல்பட வழி செய்துள்ளது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின்படி இயங்குகிறது.

குடியாட்சி

குடியாட்சியில் கூட்டாக வாழ, வளர அனைவருக்கும் சம உரிமையுண்டு. ஒரு குடியாட்சியில் குடிமக்கள், தவறுகளில் இருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்ப்பவராகவும், பிரச்சாரங்களிலிருந்து உண்மை விபரங்களை அறிந்து கொள்பவராகவும், வெறித்தனமான ஆபத்தை நிராகரிப்பவராகவும், புத்திசாலித்தனமான நம்பகத்தன்மையும், நல்ல புரிதலும் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இத்தன்மைகள் மாணவர்களிடம் மலரும் வண்ணம் ஆசிரியர்களாகிய நாம் குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.

வாக்குரிமை

இந்தியக் குடிமக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மையுடைய குடியரசாக அறிவித்து இருக்கின்றோம். அரசியல் சட்டப்பிரிவு 326, வயது வந்தோருக்கான வாக்குரிமை (Adult Suffrage) அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர் என எடுத்தியம்புகிறது. ஒருவருக்கு ஒருவாக்கு - ஒரு மதிப்பு என்ற அரசியல் சமத்துவக்கோட்பாட்டின் அடிப்படையில் இவ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர்கள், வயது வந்தோருக்கான வாக்குரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் சுதந்திரமாக தேர்தல் நடைபெறவும், சுதந்திரமான, தற்சார்புடைய அதிகாரம்படைத்த இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பால் தேர்தல்கள் முறைகேடின்றி நடைபெற வேண்டுமெனவும் விரும்பி அதற்கென ஒர் அமைப்பையும் ஏற்படுத்தினர். இன்று வரைநடைபெற்ற தேர்தல்களில் பணி மற்றும் அதிகார அச்சுறுத்தல்களின்றி இந்திய மக்கள் நம் நாட்டின் மிகப்பெரிய இறையாண்மையைக் கட்டிக் காத்து வருகின்றனர்.

மக்களாட்சி முறையை உணர்ந்து பாராட்டுதல்

மக்களாட்சி முறையை உணரச் செய்து புரிந்து பாராட்டுமாறு செய்வதாகவும் கல்வி அமைதல் வேண்டும். மொழி, இனம், சமயம், மதம் போன்றவற்றால் நாம் வேறுபட்டு இருப்பினும், மக்களாட்சியை வளர்க்க நம் உணர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒன்றுபட்ட நாட்டுணர்வு ஆகியவற்றைப் பாதுகாத்தல் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளின்றிச் சகோதரத்துவத்தை வளர்த்தல் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிக்காத்தல் காடு, ஆறு, ஏரி, மிருகங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல், அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டுதல் தொழில், அறிவியல், விவசாய ஆராய்ச்சிகளில் பங்கு பெறுதல் பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், வன்முறை சிந்தனை, செயல்களை உறுதியோடு தவிர்த்தல் * நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் ஈடுபடுதல்

சமதர்மம்

சமதர்ம சமுதாயத்தைத் தோற்றுவிக்க இந்தியா தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நம்முடைய அரசியல் அமைப்புச்சாசனத்தின் முன்னுரையில், நம் நாட்டை, இறையாண்மையுடன் கூடிய சோசலிச, மதச்சார்பற்றநாடாக அறிவித்து இருக்கின்றோம். பிறப்பு, சமூகம், பொருளாதாரம் போன்றவற்றால் யாரும் பின் தங்கிவிடாது அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியர் என்ற உணர்வு, அன்பு, கருணை ஆகியவற்றை அனைவரிடமும் ஏற்படுத்துவதே சமதர்மத்தின் நோக்கமாகும்.

மதச்சார்பின்மை

“மக்கள் மீது எவ்வித மதக் கோட்பாடுகளையும் திணிப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையே மதச்சார்பற்ற நாடு என்பது குறிப்பிடுகிறது” என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

“மதச்சார்பின்மை என்பது மத நம்பிக்கை இன்மையைக் குறிக்காது. எல்லா மதக்கோட்பாடுகளையும், மதங்களையும் மதிக்கின்றோம்” என்பதைக் குறிப்பிடுகின்றது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். காந்தியடிகள்”மற்ற மதக்கோட்பாடுகளையும், என்னுடைய மதக்கோட்பாடுகளைப் போன்றே மதிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளமை பின்பற்றத்தக்க தொன்றாகும்.

அரசியல் சட்டப்பிரிவு 25 மற்றும் 26ன்படி குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதக்கோட்பாடுகளைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசிற்கு என்று தனியான மதம் ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு முன்னுரிமை வழங்கவோ, அவர்களின் மதநம்பிக்கை காரணமாக யாரையும் வேறுபடுத்திப்பார்க்கவோ அரசு முயலக்கூடாது. அரசுப் பணியில் சேர யாருக்கும் மதம் தடையாக இருத்தல் கூடாது.

மக்களாட்சி

மக்களாட்சி, “டேமோஸ்”(Demos) மக்கள் மற்றும் “கிரேட்டியா (Kratia) “- அதிகாரம் - என்ற இரு கிரேக்க சொற்களில் இருந்து பெறப்பட்டதாகும். அதாவது மக்களுக்கே அதிகாரம் என்பதை இச்சொல் குறிப்பிடுகிறது. ஆப்ரகாம்லிங்கன் “மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தும் ஆட்சி”மக்களாட்சி என்று வரையறுத்தார். மக்களாட்சி எல்லாருக்கும் பேச, விமர்சிக்க உரிமை வழங்கியுள்ளது.

நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்வதோடு, பிற நாடுகளின் மதிப்புக்கள், கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்ந்து பாராட்டிப் பன்னாட்டு உணர்வையும் வளர்க்கவேண்டும். கூட்டுறவு மனப்பான்மை, சகோதரத்துவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவுகளைப் பள்ளிகளில் வளர்க்கவேண்டும். சுதந்திரம் என்பது நம் உயிர் மூச்சு. பள்ளிகளில் சுதந்திரமான கற்றல் நிகழவும், குழந்தைகள் எவ்வித நெருக்கடியுமின்றித் தெளிவு பெறக் கேள்விகள் கேட்கவும் தம் கருத்துக்களை வெளியிடவும், விமர்சனம் செய்யவும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

குழந்தை, பல கல்விப் படிநிலைகளைக் கடந்து வளர்ந்து நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்க இருப்பதால் “சுதந்திரமான கட்டுப்பாடு” என்ற கோட்பாட்டிற்குச் சிறப்புக் கவனம் செலுத்திப் பயிற்ற வேண்டும். தன்கட்டுப்பாடு, தன் ஒழுக்கம் ஆகியவற்றைக் குழந்தைகள் பின்பற்றி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு வழிகாட்ட வேண்டும்.

கல்வியும் ஐந்தாண்டுத்திட்டங்களும்

“நாடு முழுவதுமான சமூக, பொருளாதார முன்னேற்றத்தையறிய, குறியீடாக இருப்பது தொடக்கக் கல்வியின் வளர்ச்சியே’’ ஆகும் என்று ஜே.பி. நாயக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தொடக்கக்கல்வியின் வளர்ச்சிக்கும், முக்கிய கல்விப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், சிறப்பு முன்னுரிமை வழங்கவும், ஐந்தாண்டுத்திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

முதலாவது ஐந்தாண்டுத்திட்டம் (1951 - 56)

அனைவருக்கும் கட்டாயக்கல்வி வழங்கவும், ஆதாரக்கல்வி முறையைத் தேசிய முறையாக ஏற்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடக்கப்பள்ளி 210 ஆயிரத்திலிருந்து 278ஆயிரமாகவும், மாணவர் சேர்க்கை 192 லட்சம் குழந்தைகளிலிருந்து 251 லட்சம் குழந்தைகளாகவும் ( 1 - V வகுப்புகள் மட்டும்) ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,38,000 இலிருந்து 6,91,000 ஆகவும், கல்விச்செலவு ரூ. 85 கோடியாகவும் உயர்த்தப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956 - 60)

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப்பயிற்சி அளிப்பதற்கும், ஆதாரக்கல்வியில் ஆய்வுகள் செய்வதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. பள்ளிகள் எண்ணிக்கை 3,30,000 ஆகவும், குழந்தைகள் எண்ணிக்கை (1 - 5 வகுப்பு) 251 இலட்சமாகவும், ஆசிரியர் எண்ணிக்கை 742 ஆயிரமாகவும், கல்விச் செலவு ரூ.95/- கோடியாகவும் உயர்ந்தது.

மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961 - 65)

மைய அரசு 11 - 14 வயதுள்ள குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்க முடிவு செய்தது. ஆகவே 8 ஆண்டு தொடக்கக்கல்வி இரண்டாக (1) தொடக்கக்கல்வி - 5 ஆண்டுகள் (2) நடுநிலைக்கல்வி - 3 ஆண்டுகள் எனப்பிரிக்கப்பட்டது.

i) தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 4,00,000

ii) 1- 5 வகுப்பில் சேர்க்கை 505 லட்சம் குழந்தைகள்

iii) தொடக்கப்பள்ளி ஆசிரியர் எண்ணிக்கை 1050 ஆயிரம்

iv) கல்விநிதி ஒதுக்கீடு ரூ. 178/- கோடி என உயர்ந்தது.

நான்காவது ஐந்தாண்டுத்திட்டம் (1968 - 1973)

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.239/- கோடியாக உயர்ந்தது. 6-11 வயது குழந்தைகளில் 90.2 விழுக்காட்டினரும், 11 - 14 வயது குழந்தைகளில் 47.4 விழுக்காட்டினரும் பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

ஐந்தாவது ஐந்தாண்டுத்திட்டம் (1974 - 79)

கல்விக்கான மத்திய நிதி ரூ. 855/- கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் 47 % தொடக்கக் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. முக்கிய விரிவாக்க வசதிகள் : $ 6-11 வயது குழந்தைகளில் 97% க்கும் 11-14 வயது குழந்தைகளில் 41% க்கும் பள்ளி வசதிவாய்ப்புகள் முழுமையாக வழங்கப்பட்டன. $ 78 லட்சம் குழந்தைகள் (11-14 வயது) பகுதி நேரக் கல்வி பெற வசதி செய்யப்பட்டது. இ கல்வியில் தேக்கமும், கழிவும் குறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் (1980 - 85)

அனைவருக்கும் தொடக்கக்கல்வி வழங்குவதற்குப் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. 1-5 வகுப்புகளில் 100 சதவீத சேர்க்கை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 95.2% குழந்தைகள் 5-10 வயதிலும், 50.3 % குழந்தைகள் 11 - 14 வயதிலும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். கல்வியின் தரத்தை உயர்த்தப் பரவலான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இவைகள் தவிர, கல்வியில் பின் தங்கியிருந்த ஒன்பது மாநிலங்களில் முறைசாராக் கல்வி வழங்க, தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ரூ.25 கோடி சிறப்புநிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இயல்பான குழந்தைகளுடன், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளையும் இணைத்துக் கல்வி வழங்க 20 ஆண்டுத்திட்டம் (1980 - 2000) தீட்டப்பட்டது. வழங்கப்படும் கல்வியை உறுதிப்படுத்தவும், மேற்பார்வையிடவும் சமுதாயப் பங்கேற்பிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம் (1985 - 90)

21 நூற்றாண்டில் எதிர் நோக்கும் சவால்களைச் சந்திக்க, நாட்டைத் தயாரிக்க கல்விப் புனரமைப்பு செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டது. பின்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வி
 • 15 - 35 வயது பிரிவினரிடையேயுள்ள எழுத்தறிவின்மையை நீக்குதல்
 • கல்வியின் பல நிலைகளில் தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சி அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் நன்மதிப்புக்களோடு இணைந்த கல்வி, கல்வியை நவீன மயமாக்கல், கல்வியின் தரத்தை உயர்த்துதல்
 • தொழில்நுட்பக்கல்வியின் பழமைகளைக் களைந்து, புதுமையாக்குதல் * தொலைதூர மற்றும் முறைசாராக்கல்விக்கு முக்கியத்துவம்
 • உயர்கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தல்.

எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1992 - 97)

இத்திட்டத்தின்படி 5.61 கோடிக் குழந்தைகளைத் தொடக்கக் கல்வியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் 438 கோடி குழந்தைகள் முறையான பள்ளிகளிலும், ஒரு கோடி குழந்தைகள் முறைசாராக் கல்வி மையங்கள் வழியாகவும் சேர்க்கப்பட்டனர். பிற குழந்தைகள் திறந்த நிலைக் கற்றல் வழியாக உயர் தொடக்கப் பள்ளியில் இணைக்கப்பட்டனர்.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திற்கு (NCTE), ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்த, பொறுப்பு வழங்கப்பட்டது. இது தவிர, முதியோர் கல்வி, இடைநிலைக்கல்வி, தொழிற்கல்வி, பல்கலைக்கழக மற்றும் உயர் கல்விகளும் வளர்ச்சி பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்டம் (1997 - 2002)

இத்திட்டம் தொடக்கக்கல்விக்கும், தகவல் தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தது. ஊராட்சி ஒன்றிய நிறுவனங்களுக்கு, திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. கல்லூரிக்கல்விவரை அனைத்துப் பெண்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்டம், அரசியல் அமைப்புச்சட்டம் 45 ஆம் பிரிவின் கீழ் ஐந்தாம் வகுப்புவரை இலவசக் கட்டாயக்கல்வி வழங்கிட முக்கியத்துவம் வழங்கவும், 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டது.

மனித உரிமைகள்

அறியாமை என்பது இருட்டு, அறிவு பெறாமலிருப்பது ஒர் இடர். ஒவ்வொரு மனிதனும், தான் மனிதன் என்பதையும், மனிதத்தன்மையோடு வாழவேண்டும் என்பதையும் உணர வேண்டும். ஒவ்வொருவரும், தான் பெற்றிருக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றிய அறிவு பெற்றிருப்பதோடு, அதனை உணர்வோடு உறுதி செய்து கொள்ளவும் வேண்டும். பிறருடைய உரிமைகளில் தலையிடக்கூடாது என்பதையும் உணர வேண்டும். மனிதன் கல்வியின் வழியாகத் தன் விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி, தன் நன்மைகளையும், இறையாண்மைத் தன்மையையும், உரிமைகளையும் காத்துக்கொள்ள வேண்டும்.

“உரிமை என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாட்டால் நடைமுறைப்படுத்தப்படும் செயலாகும்" என்று போசாங்கே கூறியுள்ளார். மனித உரிமை எனப்படுபவை “இந்திய அரசியல் சாசனம் எடுத்தியம்பும் அடிப்படை உரிமைகளாலும், அகில உலக உடன்படிக்கைகளாலும், உறுதியளிக்கப்பட்ட தனிநபரின் மாண்பு, சமத்துவம் மற்றும் சுதந்திரம் தொடர்பான உரிமைகள்' ஆகும்.

குழுக்களின் உரிமைகள்

 • வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல், பயிற்சி பெறுதல்
 • பதவி உயர்வு, சம வாய்ப்பு, பாதுகாப்பான, சுகாதாரமான பணிச் சூழல் $ பணிநீக்கம் செய்யப்படும் முன் முன்னறிவிப்புப் பெறுதல்
 • வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை
 • நியாயமான ஊதியம் பெறுதல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்

 • அரசியலில் கலந்துகொள்ளும் உரிமை
 • கருத்துச் சுதந்திர உரிமை
 • சமயம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் சுதந்திரம்

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் கலாச்சார வாழ்வில் பங்கு பெற உரிமை கல்வி பெற உரிமை தொழிற்சங்கம் அமைக்க உரிமை வேலை பெற உரிமை

குழந்தைகளின் உரிமைகள்

குழந்தைகள் சமுதாயத்தில் சமுதாயத்தின் வழியாகச் சமுதாயத்திற்காகக் கல்வி பெறுகின்றனர். சமுதாயத்தைப் பற்றியும், தான் வாழும் உலகத்தைப்பற்றியும் குழந்தை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் கல்வி வழங்கப்படவேண்டும். உலகத்தோடு குழந்தை தன்னைத்தக அமைத்துக்கொள்ள வழிகாட்டும் ஆசிரியர், முதலில் குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறும் உரிமை இன்றைய நாள் வரையிலான கல்வியைப் பெற உரிமை உரிய சூழலில் பள்ளிக்கல்வியைப் பெறும் உரிமை பள்ளிக்கும், வீட்டிற்கும் தொடர்பு ஏற்படுத்தவும், பள்ளிக்கும், எதிர்கால வாழ்விற்கும் தொடர்பை ஏற்படுத்தவும், வளர்க்கவும் கூடிய கல்வியைப் பெறும் உரிமை தன்னுடைய கல்வித்தேவைகளை நிறைவு செய்துகொள்ளத் தேவையான நிதியை எல்லா வழிகளிலும் பெறும் உரிமை நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் உடல்நலம் பேணல் போன்றவற்றில் உரிமை சமுதாய வாழ்வில் பங்குபெறவும், தான் வாழும் சமுதாயத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்தும் உரிமை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற்றிட உரிமை செயல் குழந்தைகளின் உரிமைகளை ஆசிரியர்கள் சிறிதும் பிழைபடாமல் வழங்குகின்றனர்.

பெண்களுக்கான உரிமைகள்

“ஒரு ஆணுக்கு வழங்கப்படும் கல்வி அவன் ஒருவனுக்கும், பெண்ணிற்கு வழங்கப்படும் கல்வி அவள் குடும்பம் முழுமைக்குமாகும்” என்று பண்டித நேரு குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

சமமான கல்வி பெறும் உரிமை பொருளாதார சுதந்திரம், வேலைவாய்ப்பு, பணிநிலை ஆகியவற்றில் உரிமை முடிவுகள் எடுப்பதில் பங்கேற்கவும், தலைமைப் பொறுப்பை ஏற்கவும் உரிமை. சட்டத்தின் முன் சமம் எனும் உரிமை சம ஊதியம் பெறும் உரிமை தரமான உடல் பேணல், கவனிப்புப் பெற உரிமை.

“எப்போது பெண்கள் மதிக்கப்படுகின்றார்களோ, அப்போது கடவுள் மகிழ்விக்கப்படுகிறார். எங்கு, பெண்கள் பெருமைப்படுத்தப் படுவதில்லையோ, அங்கு நம்முடைய சமயச்சடங்குகள் எவ்வித பயனும் பெறாது”என்று மனுதர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் கல்லாமையை நீக்கவும், தொடர்ந்து அவர்கள் கலவியைப் பெறவும், தடையாகவுள்ளவைகளைத் தகர்க்க வேண்டும். தொழில்சார்ந்த கல்வி மற்றும் உயர் தொழிற்கல்வி நிலைகளில் பால் அடிப்படையில், வழிவழியாகப் பின்பற்றிவந்த பாகுபாட்டுநிலைமைகளை மாற்றி, பெண்களும் இக்கல்வியைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பெண்களுக்குச் சமமான ஊதியம், வாய்ப்புகள் முதலியன வழங்கப்பட்டுள்ளன. தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள பெண்களே முன்வரவேண்டும். பெண்களின் முன்னேற்றம், நலன், சமூகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பெண்களைப் பற்றி, வகுப்பில்எடுத்துரைக்க வேண்டும். தங்களின் மகன் மற்றும் கணவரின் வெற்றிக்கு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஊக்கமளித்த வீர சிவாஜியின் தாய் ஜிஜிபாய், துளசிதாசரின் மனைவி ரத்னாவளி, பிரான்ஸ் நாட்டு ஜோன், ஜான்சிராணி, ராணிலட்சுமிபாய், வீரமங்கை வேலுநாச்சியார் போன்றவர்களைப் பற்றி எடுத்துரைத்துப் பெண்களை மேலும் ஊக்கப்படுத்த கல்வி உதவ வேண்டும். உலக நல்வாழ்விற்காக, தன் நாட்டிறக்காக, தன் குடும்பத்துக்காகத் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்த கோடானுகோடி இந்தியத் தாய்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி

சமூக, பொருளாதார மற்றும் பிற காரணங்களால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா நிலைகளிலும் சம வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாசனப் பிரிவுகள் 15, 16, 17, 18, 36 மற்றும் 46 ஆகியவை சமய, வகுப்பு, பிரிவுகள் அடிப்படையில் வேறுபாடு கூடாது என்று உறுதியளித்துள்ளது.

அத்தகு குழந்தைகளுக்கு 14 வயது வரை பள்ளிகளில் கல்வி கற்க ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

 • தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தல்
 • விடுதிகளில் தங்கிப் பயில வசதிகள் வழங்குதல்
 • பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்பு-நிலமற்றவர்களுக்கு அரசு நிலம் வழங்கி வருகிறது.
 • அரசுப் பணிகளில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு
 • கல்வியில் சம வாய்ப்பு - கல்வி, புத்தகம், சீருடை, உறைவிடம் இலவசம்
 • தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற ஏதுவாகப் பள்ளிக்கூடங்கள், விடுதிகள் குழந்தைக் காப்பகங்கள், முதியோர் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தித் தருதல்.

பழங்குடியினருக்கான வாய்ப்பு

பலநூற்றாண்டுகளாகத் தங்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்துக்கொள்ளாது வாழ்ந்து வரும் இவர்கள் சில சிறப்பு இயல்புகளைப் பெற்றுள்ளனர். பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குழுவாக வாழ்தல், பொதுவான பெயர், ஒரிடத்தில் வாழ்தல், தங்கள் திருமணம் மற்றும் தொழில் போன்றவற்றில் குறிப்பிட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்தல் போன்ற பல சிறப்புக்கள் மரபுக்குடியினரிடம் காணப்படுகின்றன என டாக்டர் மஜூம்தார் குறிப்பிடுகின்றார்.

இவர்கள் சமுதாயத்திடமிருந்து மிகக் குறைவாகப் பெற்றுக்கொண்டு அரசுக்கும் சமூகத்திற்கும் தொல்லைதராமல் ஒதுங்கி வாழ்கின்றனர். இவர்கள் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் வழங்கும் உழைப்பும் உற்பத்திகளும் ஏராளம் என்றாலும் இவர்தம் வாழ்வில் நிம்மதி, சுகம் என்பன எட்டாக் கனவாகவே உள்ளன. அவர்கள் மற்றெவரையும் போல் எல்லாத் தகுதிகளுக்கும் உரியவர்கள் இவர்களுக்குக் கல்வியளித்து,உரிமைகளோடு நிம்மதியாகவும் நலமாகவும் வாழநாம் ஆவன செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 • இவர்கள் வாழும்பகுதிகளில் தொடக்கப்பள்ளிஏற்படுத்த முன்னுரிமை, கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு.
 • குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உருவாக்கப்படும் கலைத்திட்டமும், கற்பித்தல் நூல்களும், தொடக்கத்தில் அவர்தம் மொழியிலேயே அமைந்திடல் வேண்டும்.
 • பிறகே வட்டார மொழிக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
 • உண்டு, உறையும் பள்ளிகள், விடுதிகள் அதிக அளவில் நிறுவப்படுதல் தகுதி பெற்ற, கற்ற பழங்குடி இளைஞர்கள் தத்தம் பகுதிகளிலேயே ஆசிரியர்களாகப் பணியாற்ற ஊக்குவித்தல் பழங்குடியினரின் செறிவான கலாச்சாரத் தனித்தன்மைகளையும்,
 • அவரிடையே காணப்படும் மிகுதியான உழைப்பு, உருவாக்கும் திறன், படைப்பாற்றல் போன்றவை வெளிப்படும்
 • வண்ணம் கல்வியின் எல்லா நிலைகளிலும் கலைத்திட்டம் உருவாக்கப்படுதல்.
 • அவர் தம் சிறப்புத் தேவைகளையும், வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் உருவாக்குதல்.
 • ஐந்தாண்டுத்திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலத்திற்காகப் பல சிறப்புத் திட்டங்களை அரசு இயற்றிச் செயல்படுத்தி வருகின்றது.

சிறுபான்மையினருக்கான வாய்ப்புகள்

சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்றவற்றின் அடிப்படையில், சிறுபான்மையினர் வளர்ச்சிக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளபடி, தமக்குரிய பள்ளிகளைத் தாமே நிர்வகிக்கும் உரிமை வழங்கப்படுகின்றது. அவர் தம் மொழியையும், கலாச்சாரத்தையும் காக்கும் செயல்களும் இவற்றுள் அடங்கும். தேசிய லட்சியங்களையும், நோக்கங்களையும் ஒருமைப்பாட்டையும் விட்டுத்தராமல் இவர்களின் பள்ளிகள் நடைபெற்று மேன்மை காண வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

சிறப்புக் கவனம்

தேவைப்படுவோருக்கான வாய்ப்புகள் உடல் மற்றும் மனதால் சமூகத்தில் பின் தங்கிய குழந்தைகளைப் பிறருடன் சமமாக நினைப்பது முக்கியமானதாகும். தம், வாழ்வை இவர்கள் நம்பிக்கையோடும், திடத்தோடும் எதிர்கொள்ளத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வழிகாட்ட வேண்டும்.

 • இயக்கக் குறைபாடுகள் அல்லது சிறு ஊனமுடைய குழந்தைகளின் கல்வி பிற இயல்பான குழந்தைகளின் கல்வியோடு இணைந்து இருக்கும்படி செய்தல்.
 • மிகவும் கடுமையான உடல் ஊனமுற்றோருக்கு மாவட்டத் தலைநகர்களில் விடுதியோடு இணைந்த சிறப்புப்பள்ளிகளை நிறுவிப் பராமரித்தல். & தொழிற்கல்விப் பயிற்சி அளித்தல்
 • ஆசிரியர்களுக்குப் புத்துணர்வு மற்றும் நெறிப்பாட்டுப் பணியிடைப்பயிற்சி.

முடிவுரை

இந்தியா சிறப்புமிக்க வரலாற்றையும், மிக உயர்ந்த பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் சனநாயகப் பண்புகளையும், சமத்துவ நோக்கையும் கொண்ட மக்கள் வாழும் சுதந்திர நாடு. இங்கு எல்லோருக்கும் சமூக நீதியும், சம வாய்ப்புகளும் கிடைக்கச் செய்ய கல்வி மிக அவசியமானது. பெண்களின் சக்தியை நம் நாடு முழுமையாகப் பெற, கல்வியில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் கடமைகளையும் முறையாகப் பயன்படுத்திப்பேணி “தண்ணீர் விட்டா வளர்த்தோம், சர்வேசா ? இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்" என்று பாரதி பாடியது போல், நம் நாட்டைப் பாரினில் இன்னும் உயர்த்திட ஆசிரியர்களாகிய நாம் முழு மூச்சுடன் தேவைக்கேற்ப முனைந்து கடனாற்ற உறுதிபூணுவோம்.

இந்திய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் போன்ற உறுதிப்பாடுகள் வழங்க நமக்கு நாமே செயல்பட்டு வருகின்றோம். அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கவும், எம்மதத்தையும் பின்பற்றவும், பிறர் மதக் கொள்கைகளில் தலைமையிடாமலும் உலகிற்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி வருகின்றோம். மக்களாட்சி முறையை உணர்ந்து பாராட்டி, நம் தேசத்தைப் பற்றியும், பிற தேசங்கள் பற்றியும் அறிவுப்பூர்வமாக உணர்ந்து பாராட்டி உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றோம். பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறப்புக் கவனம் வேண்டுவோர் ஆகியோருக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கிட அரசு முனைப்போடு செயல்பட்டு வருவதற்கு மேன்மேலும் வலுச்செய்வோம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top