பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒவ்வொருவரின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை தன்னிறைவு பெற செய்யும் ஊக்கியாக இருப்பது கல்வியாகும். கல்வியின் முக்கிய நோக்கமானது குழந்தைகளை உடல்ரீதியாக, மனரீதியாக மற்றும் ஆன்மா ரீதியாக தரமான வாழ்வை வாழத் தயார் செய்வதாகும். மேலும் அன்றாட வாழ்வில் எழும் பிரச்சினைகளை கையாளும் விதமான திறன்களையும், நுணுக்கங்களையும் பெறவும் எதிர்வரும் சூழலை திறம்பட கையாளவும் உதவும் செயல்முறையே கல்வி ஆகும்.

அனைவருக்குமான கல்வியின் குறிக்கோள்களை அடைவதில் நான்கு முக்கிய காரணிகள் இடம்பெறுகின்றன. அவை கல்வியை பெற விழைதல்; குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், குழந்தைகளை பள்ளியில் தொடர்ந்து கற்க செய்தல் மற்றும் கற்றல் அடைவு பெறச் செய்தல்.

நோக்கங்கள்

இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட வெவ்வேறு திட்டங்களால் பயன்பெறாத குழந்தைகளுக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தொடக்கக் கல்வியினை அனைவருக்கும் கொண்டு செல்லும் திட்டமே அனைவருக்கும் கல்வி திட்டம் ஆகும். இருப்பினும் சில குழந்தைகள் தங்கள் குடும்ப பொருளாதாரச் சூழல் மற்றும் வருவாய் ஈட்டா பெற்றோரின் இயலாமையாலும் தொடக்கக் கல்வியை பெற முடிவதில்லை. இம்மாதிரியான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கூடுதல் வருவாய் சுமை என்று கருதுவதும் மட்டுமன்றி, அக்குழந்தையின் உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தையும் இழக்கிறோம் என கருதுகிறார்கள்.

இத்தகைய மனநிலையை உடைய வருவாயில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோர்களை ஊக்கப்படுத்தியும், குழந்தைகளக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பதோடு தேவைகளை நிறைவு செய்வதை உணர்த்தியும் அக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க இயலும் நோக்கத்தோடு 1995ஆம் ஆண்டு அக்டோபர் 2இல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே தொடக்கக்கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஆகும். இதனை மதிய உணவு திட்டம் எனவும் அழைக்கிறோம். இத்திட்டத்தின் கீழ் 80% வருகைபுரியும் ஒவ்வொரு தொடக்க நிலை குழந்தைக்கும் மாதம் ஒன்றிற்கு 3 கிலோ கோதுமை (ஒரு ஆண்டில் 10 மாதங்களுக்கு) வழங்கப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அனைத்து மாநிலங்களும்/யூனியன் பிரதேசங்களும் இந்த மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தவும், இதனால் அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 300 கலோரி சக்தியும், 8-12 கிராம் புரதமும் கொண்ட உணவை குறைந்தது 200 நாள்கள் வழங்க 28 நவம்பர் 2001இல் ஆணையாகப் பிறப்பித்தது. டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் இத்திட்டத்தினை 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தினார். தமிழ்நாடு மதிய உணவு திட்டமானது நாட்டிற்கே முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது. ஆனால் 1930 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே பாண்டிச்சேரியில் அனைவருக்கும் பள்ளியில் உணவு வழங்கும் திட்டம் ஆர்வத்தைத் தூண்டும் வரலாறாக அமைந்துள்ளது.

இந்த மதிய உணவுத்திட்டம் என்ற கருத்து காமராஜருக்கு எப்படி ஏற்பட்டது என்பது ஒரு ஆர்வமூட்டும் நிகழ்ச்சியாகும். அவர் சில ஆண் குழந்தைகள் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்தார். அவர்களுள் ஒரு சிறுவனை பார்த்து காமராஜர் “மாடுகளோடு என்ன செய்கிறீர்கள்? ஏன் பள்ளிக்கு செல்லவில்லை? எனக் கேட்டார். அதற்கு ஒரு சிறுவன் “நாங்கள் பள்ளிக்கு சென்றால், நீங்கள் சாப்பாடு போடுவீர்களா? நான் சாப்பிட்டால் தானே படிக்க முடியும்” என்றான். அச்சிறுவனின் பதிலால் உதயமானதே மதிய உணவுத் திட்டம் ஆகும். இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் 1980களிலிருந்து சிறப்பாக செயல்படும் மாநிலமாக குஜராத் உள்ளது. 1995களிலிருந்து கேரளா அரசு சமைத்த உணவை பள்ளிகளில் வழங்குகிறது. மேலும் ஒரிசா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் உணவு பொட்டலங்களை வழங்குகின்றன. 2001, நவம்பர் 28ல் உச்சநீதிமன்றம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சமைத்த உணவு வழங்க உரிய நெறிமுறைகளை வகுத்தது. இவ்வழிகாட்டலை முதலில் மாநிலங்கள் எதிர்த்தாலும், 2005இல் இருந்து பெரும்பாலும் ஏற்றுகொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு http://mdn.nic.in என்ற புதிய இணையதளத்தை இந்திய அரசு தற்போது உருவாக்கி உள்ளது.

தொடக்கக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து திட்டம் (National programme for Nutrition Support to Primary Education)

இத்திட்டம் முதலில் தமிழ்நாட்டில் “மக்களுக்கான செயல்” (Populism) என அழைக்கப்பட்டாலும் இதன் வெற்றியானது இத்திட்டத்தை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. 1995இல் இது குறிப்பிடத்தக்க அளவில் பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இத்திட்டத்தினை இந்தியப் பிரதமர் ஆலோசனைப்படி நாடு முழுமைக்கும் தொடக்கக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மைய அரசு, தானியங்களை இலவசமாகவும் மற்றும் மாநில அரசுகள் இதர பொருட்கள், மாத சம்பளம் மற்றும் கட்டிட வசதிகள் போன்றவைகளையும் தருகின்றன. பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் நிதி ஒதுக்கீட்டில் தானியங்களுக்கென்று நிதி ஒதுக்க விருப்பமில்லை என்றாலும் இந்திய அரசு வழங்கும் தானியங்களை பெற்றோர்களுக்கு கொண்டு செல்ல நினைத்தன. இத்திட்டம் 'உலர் உணவு வழங்கல்' என அழைக்கப்பட்டது. நவம்பர் 28, 2001ல் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் உணவுப் பொருள்களை உலர் உணவு பொருள்களாக வழங்குவதற்கு பதிலாக சமைத்து வழங்க வேண்டும் என ஆணையிட்டது. ஜூன் 2002 இல் இவ்வழிகாட்டல் நிறைவேற்றப்பட்டாலும், பெரும்பாலான மாநிலங்கள் இதை நிறைவேற்றாமல் தவிர்த்தன. இருப்பினும் நீதிமன்றம் ஊடகங்கள் குறிப்பாக உணவு உரிமை முகாம் போன்றவைகளின் தொடர்ச்சியான வலியுறுத்தலினாலும் பெரும்பாலான மாநிலங்கள் உணவை சமைத்து வழங்க ஆரம்பித்தன.

புதிய மையக் கூட்டணி, அனைவருக்கும் சமைத்த உணவை அளிப்பதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என உறுதியளித்தது. இந்த குறைந்தபட்ச பொதுத்திட்டத்ம் சமைப்பதற்கும் சமையலுக்கு தேவையான கட்டிடத்திற்கும் உரிய நிதியை மாநில அரசுகளுக்கு உயர்த்தி வழங்கியது. இத்தகைய கூடுதல் உதவிகளால் இந்தியாவில் உள்ள தொடக்கப் பள்ளி குழந்தைகள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.9756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top