பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கட்டமைப்பு வசதிகள்

முன்பள்ளிக் கல்வியின் கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பள்ளிக் கட்டிடம் (Preschool)

முன்பள்ளி என்பது குழந்தைகள் வாழுமிடம், இதில் வளரும் குழந்தைகள் தங்கள் விருப்பத்தை விரும்பிய முறையில் வாழும் கலையைக் கற்க உதவுமிடமாக இருக்கிறது. அது முறையான கல்வியை மட்டும் புகட்டி ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை வளர்க்கும் ஒரு இடமல்ல. முன்பள்ளியின் சுற்றுச்சூழல் இக்குறிக்கோளைத் தூண்டக்கூடியதாகவோ அல்லது தடுக்கக் கூடியதாகவோ இருக்கலாம். பள்ளியின் கட்டிடமானது குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டவோ அல்லது இணக்கமற்ற தன்மையை உருவாக்கவோ, சாதகமானதாகவோ அல்லது தடுக்கக்கூடியதாகவோ இருக்கும்.

குழந்தைகளுக்கு வாழும் உணர்வைக் கற்பிக்கக் கூடிய பள்ளிக் கட்டிடமானது நல்ல பராமரிப்பு மற்றும் மனதிற்குப் பிடித்த சுத்தமான கட்டிடமாக இருத்தல் அதன் முதன்மைத் தேவையாகும். பள்ளியின் சுற்றுப்புற சூழ்நிலை குழந்தை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியப்பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்பள்ளி வீட்டின் மறுபதிப்பு, வீட்டிற்கு பதிலாக இருப்பதல்ல. நல்ல தாராளமான இடவசதியுள்ள கட்டிடம், விளையாட்டு மைதானம், மற்றும் கருவிகள், பல வகையான செயல்களைச் செய்வதற்கும், கற்பதற்கும் உதவக் கூடியதாக உள்ளது. எனவே பள்ளிக் கட்டிடம், அதன் இருப்பிடம், வடிவமைப்பு, வெளிச்சம், காற்றோட்டம் என அனைத்தும் குழந்தையின் நடத்தையிலும், நலத்திலும், முக்கியப் பங்கு வகிக்கிறது.

கட்டிடத்தின் அடிப்படைத் தேவைகள்

ஒரு நல்ல முன்பள்ளிக் கட்டிடத்தின் அம்சங்களாவன:

 1. சுற்றுப்புற சூழ்நிலை
 2. இட அமைப்பு
 3. கட்டிட வரைபடம்

சுற்றுப்புற சூழ்நிலை

குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், மனோ நிலையினை வளர்ப்பதிலும் சுற்றுப்புற சூழ்நிலை பெரும் பங்கு வகிக்கிறது. பள்ளி செம்மையாகச் செயல்பட்டு அதன் பணிகளை நிறைவேற்ற பள்ளிக் கட்டிடத்தை எங்கும் அல்லது ஏதோ ஒர் இடத்திலோ கட்டமுடியாது. உளவியல் ரீதியாக முழுமையான நல்ல சுற்றுப்புறம் குழந்தைகளின் கலை உணர்வைத் தூண்டுவதில் முக்கிய தூண்டுகோலாக உள்ளது.

முன்பள்ளியின் முக்கிய குறிக்கோளே குழந்தைகளுக்கு இயற்கையான உடல், உள்ள, மன வளர்ச்சியை ஏற்படுத்துவதே ஆகும். பள்ளிக் கட்டிடமானது நல்ல சாதகமான சுற்றுப்புற சூழ்நிலையில் இருத்தல் வேண்டும். சுகாதாரமற்ற சூழ்நிலை குழந்தைகளின் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. விரும்பத்தகாத சூழ்நிலை நேரடியாகக் குழந்தையின் உள்ளுணர்வுகளைப் பாதித்து அவர்களின் நடத்தையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இட அமைப்பு

முன்பள்ளியின் இட அமைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவற்றை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் அருகாமை (Vicinity)

பள்ளிக்கு அருகில் உள்ள சுற்றுப்புறம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அருகில் தேங்கிய தண்ணிர் பரப்பு, குளம், ஏரி, சகதி மற்றும் துர்நாற்றம் இல்லாத அமைப்பாகவும், கொசு, ஈக்கள் மற்றும் நுண்கிருமிகள் இல்லாமலும் இருத்தல் வேண்டும். நல்ல தண்ணிர் வசதியுடன் இருத்தல் வேண்டும். கட்டிடம் உள்ள நிலமானது கீழ்க்கண்டவாறு இருத்தல் வேண்டும்.

 • நகர்புறத்தை விட்டு சற்றுத் தள்ளி தூய்மையான காற்றோட்ட வசதியுடன் இருத்தல்
 • சாலைக்கு அருகாமையில் இருத்தல்
 • சுடுகாட்டிற்கு அருகில் இல்லாமல் இருத்தல்
 • தொழிற்சாலையின் சத்தம், தூசி, புகை, கழிவுகள் இல்லாமல் இருத்தல்
 • ரயில் நிலையம், பேருந்து நிலையத்தை விட்டு சற்றுத் தள்ளியும் இருத்தல் வேண்டும்.
 • அடர்ந்த மரங்கள் அல்லது பெரிய கட்டிடங்கள் அருகில் இருத்தல் கூடாது.

மண் அமைப்பு

பள்ளிக் கட்டிடத்தை ஸ்திரமாகவும், பாதுகாப்பானதாகவும், கற்பதற்கு ஏற்றதாகவும் அமைப்பதில் மண் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கட்டிடம் அமையும் இடமானது, உயர்ந்த மேற்பரப்பையுடையதாகவும் ஈரமற்றதாகவும், இயற்கையான கழிவுநீர் வசதிகளுடன் மற்றும் நீர்த்தேக்கமில்லாமலும் இருத்தல் வேண்டும்.

அமைப்பும் முன்முகத் தோற்றமும்

சிறந்த பள்ளிக் கட்டிடத்தின் சிறப்பு அம்சங்களாவன

 • நல்ல வெளிச்சம் வரத்தக்க வகையில் முற்றம் (verandah) ஒரே ஒருபுறம் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
 • அதன் மறுபுறம் மரங்களை வளர்ப்பது வெயிலைத் தடுப்பதோடு கட்டிடத்திற்கு பாதுகாப்பையும் அளிக்கும்.

கட்டிட வரைபடம்

முன்பள்ளியின் கட்டிட வரைபடமானது நம் தேவைகளைப் பொறுத்து மாறுபடும். ஒரு நல்ல மாதிரி வரைபடத்தில் இருக்க வேண்டிய அம்சங்களாவன,

 • பள்ளிக் கட்டிடமானது கண்டிப்பாக சுகாதார விதிகளைப் பின்பற்றி சுத்தமான சுற்றுப்புறத்துடனும், காற்றோட்டத்துடனும் நல்ல சூரிய வெளிச்சத்தை எல்லா அறைகளும் பெறக் கூடிய வசதியுடனும், தூய்மையான காற்று எல்லா அறைகளுக்கும் செல்லக் கூடிய வகையிலும் அமைந்திருத்தல் அவசியம்.
 • விளையாட்டு அறைகளுக்கான குறைந்தபட்ச தேவையினைப் பூர்த்தி செய்யக் கூடிய வசதியுடனும், போதுமான கழிப்பறைகளும், கழுவும் இடங்களும் உடையதாக இருத்தல் வேண்டும்.
 • ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் 15சதுர மீட்டர் தரைபரப்பளவு இருக்க வேண்டும். எந்த ஒரு விளையாட்டு அறையும் 9 மீட்டருக்கு மேல் நீளமுடையதாகயிருத்தல் கூடாது.

அறைகள்

 • குழந்தைகள் தங்கள் செயல்களைத் தடையின்றி செய்வதற்கு சதுரமான அறைகளை விட செவ்வக வடிவ அறை ஏதுவாக இருக்கும்.
 • மேற்பார்வையிடுவதற்கு எளிதாக ஒதுக்குப்புறமான இடமில்லாமல் இருத்தல் வேண்டும்.
 • ஒவ்வொரு அறைக்கும் உள்ளே செல்லவும் வெளியேறவும் தனித்தனி வழிகள் இருத்தல் வேண்டும்.
 • குழந்தைகள் உட்கார்ந்து, பேசி உட்புற விளையாட்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் அறைகள் பெரியதாக இருத்தல் வேண்டும்.
 • வேலை செய்யும் இடமானது, ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் மாற்றியமைக்க கூடிய வகையிலும், உயிரோட்டத்துடனும் வீடுபோலவே அமைதல் அவசியம்.
 • அறையின் கூரையானது பாதுகாப்பான பொருளால் அமைக்கப்பட வேண்டும். இது தீவிபத்து போன்றவற்றைத் தவிர்க்கும்.

சுவர்கள்

 • சுவரின் அமைப்பானது வேலைக்கேற்றதாகவும், பலவிதமான வேலை செய்வதற்கு உதவக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
 • படங்கள் மாட்டப்பட்டிருக்கும் பலகை குழந்தைகளின் கண் பார்வைக்கு ஏற்ற வகையில் பொருத்தமான உயரத்திலிருக்க வேண்டும்.
 • ஜன்னல்கள் மற்றும் கதவுகள், புல்லட்டின் போர்டுகள் மற்றும் கரும்பலகைகள் மாட்டுவதற்கான இடவசதியை உண்டாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • சுவர்களின் பூச்சுக்கள் பொருத்தமான வகையிலும், எளிதில் சுத்தம் செய்யக்கூடிய வகையிலும், சத்தத்தை உள்ளிழுக்கக் கூடிய வகையிலும் இருத்தல் அவசியம்.
 • இட அமைப்பை நல்ல முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் (நகர்த்தக்கூடிய) மாற்றி அமைக்கக் கூடிய சுவர்களைப் பயன்படுத்தினால் பலவிதமான வேலைகளைச் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

தரை

தரையானது எளிதாக சுத்தம் செய்வதற்கு ஏற்றவகையிலும் பராமரிப்பதற்குச் சுலபமானதாகவும் இருத்தல் அவசியம். இலேசான இளஞ்சூட்டுடனும், சுதந்திரமாக விளையாடும்போது தரை தட்டாமலும் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

ஜன்னல் மற்றும் கதவுகள்

 • கதவு மற்றும் ஜன்னல் இரண்டும் குழந்தைகளுக்கு கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
 • குழந்தைகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அவர்கள் வெளியே பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் ஜன்னல்கள் தாழ்வானதாக இருக்க வேண்டும்.
 • ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள், பாதுகாப்புக் கம்பிகள் அல்லது இரண்டும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • குழந்தைகள் பயன்படுத்துவதற்கு எளிதான வகையில் கதவுகள் எடை குறைவானதாக இருத்தல் வேண்டும்.

கழிப்பறை வசதிகள்

 • கழிப்பறை மற்றும் கழுவும் இட வசதிகள் வெளியேயிருந்தும், உள்ளேயிருந்தும் செல்வதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.
 • கழிப்பறையின் தரைகள் எளிதாக சுத்தம் செய்யக்கூடிய வகையிலும் அதே நேரத்தில் அதிக வழுவழுப்பில்லாமலும் இருக்க வேண்டும்.
 • கை கழுவும் இடம் (Sinks) மற்றும் கழிப்பறைகள் எளிதில் சுத்தம் செய்யக்கூடிய வகையிலிருத்தல் அவசியம்.

சேமிக்கும் இடம்

 • குழந்தைகள் தங்கள் விளையாட்டுப் பொருட்கள், துண்டுகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் கல்வி சாதனங்களை வைப்பதற்குப் போதுமான சேமிக்கும் இடம் அவசியம்.
 • அலமாரிகளில் போதுமான இழுப்பறைகளுடனும் மேலும் திறந்த அலமாரிகளுடனும் இருந்தால் அந்தந்த பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கும்.
 • சேமிக்கும் இடம் சுத்தமானதாகவும் ஒட்டடை, பூச்சிகள் இல்லாமல் காற்றோட்ட வசதியுடன் இருத்தல் வேண்டும்.

வெளிப்புற இடம்

 • குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அருகாமையிலும் பெரியதாகவும், இருந்தால் தான் பாதுகாப்பானதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும்.
 • ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் 2 சதுர மீட்டர் பரப்பிலாவது விளையாடுமிடம் இருத்தல் அவசியம்.
 • விளையாடுமிடத்தில் நல்ல இறுகிய தரை இருந்தால் தான் சக்கரமுள்ள பொம்மைகளைப் பயன்படுத்தவும், பந்துகளை வீசி எறிந்து விளையாடவும் முடியும்.
 • புல்தரை பரப்பு விளையாடவும், ஒடவும் மற்றும் முரட்டுத்தனமாக விளையாடவும் உதவும். வளர்ப்புப் பிராணிகள், தோட்டங்கள், தோண்டுதல் விளையாட்டு போன்றவற்றிற்கு இடம் தேவை.
 • மணல் தொட்டி மணற்பரப்பு விளையாட்டிற்கும், கலந்து விளையாடுவதற்கும் உதவுகிறது.
 • நீர் விளையாட்டு விளையாட தனி இடவசதி தேவை.
 • விளையாடும் இடமானது, ஆணிகள், பாறாங்கற்கள், உடைந்த பொருட்கள், கூர்முனைகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவையின்றி இருக்க வேண்டும்.
 • முன்பள்ளிக்கான கட்டிடம் தேவைகளை மனதில் கொண்டு முன்பள்ளிக்கான கட்டிடத்தை குறைந்தபட்ச இட அமைப்பைக் கொண்டு நிறைவாக உருவாக்கலாம். பள்ளிக் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் அதன் பயன்கள் கீழ்வரும் காரணங்களைக் கொண்டு மாற்றங்களைப் பெறலாம். அவையாவன, கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பொறியியல் திறமைகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பள்ளிக்கான சாதனங்களில் மாற்றம் கட்டிட வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் சோதனை முறைகள்.
 • சமூகப் பொருளாதாரக் காரணிகள் மற்றும் பணம் வரும் வழிகள், தேவைகள் ஆகியவற்றை பொறுத்து பள்ளியின் அமைப்பு அமையும்.
 • தற்போதைய கல்வி முறைக்குப் பொருத்தமான ஒளி, ஒலி சாதனங்கள், அதன் முக்கியத்துவம், அதற்கேற்றவாறு புதுமையாக மாற்றி அமைத்தல் வேண்டும்.
 • பள்ளி ஒரு சமூகநல மையமாகப் பயன்படத்தக்க வகையில் அதற்கு முக்கியத்துவம் அறிந்து கட்டிட அமைப்பு இருத்தல் வேண்டும்.

இருக்கை வசதிகள்

 • சிறிய நாற்காலிகள் கொண்ட தாழ்வான மேசைகள் குழந்தைகள் உயரத்திற்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். குழந்தைகள் ஆக்கபூர்வமான வேலைகளை செய்வதற்கேற்றவாறும் தாழ்வான மேசைகள் இருக்க வேண்டும். மேசையின் அளவு 4X4"உயரம் 6” இருக்க வேண்டும். புத்தகங்கள் வைப்பதற்கு புத்தக அலமாரி தேவை. பாய் மற்றும் மிருதுவான கார்பெட் போன்றவை குழந்தைகள் மதியம் படுக்கும் போது அளிக்கப்பட வேண்டும்.

சமைக்கும் வசதிகள்

குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டாலோ அல்லது நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டாலோ, அவற்றை பள்ளியிலேயே தயார் செய்யப்பட வேண்டும். எனவே சமைப்பதற்கெனத் தனியறையும் மேலும் மளிகை சாமான்கள், பாத்திரங்கள், விறகு மற்றும் சமைப்பதற்குத் தேவையானப் பொருட்கள் வைக்கத் தனி அறை அவசியம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.33333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top