பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பள்ளிக் கல்வித் திட்டம் - பாடத்திட்ட அட்டவணை

முன்பள்ளிக் கல்வித் திட்டத்தின் ஒரு நாளைய, ஒரு வார, பாடத்திட்ட அட்டவணைகளின் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்

முன்பள்ளிக்கான பாடத்திட்டம் அமைக்கும் போது அதன் செயல்முறைகள் எளிதானவற்றிலிருந்து கடினமானவற்றிற்கும், தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றிற்கும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவற்றிலிருந்து (Concrete) புரியாத ஒன்றைக் (Abstract) கற்குமாறும் இருத்தல் வேண்டும். ஒரு குழந்தையின் மனத்திண்மை, அறிவுத் திறனுக்கேற்றவாறு முன்பள்ளிப் பாடத்திட்டத்தின் செயல்கள் அமைய வேண்டும். பாடத்திட்டமானது நான்கு முக்கிய கருத்துக்களை மனதில் கொண்டே தயாரிக்கப்பட வேண்டும். சுலபமாக மாற்றக் கூடிய வகையில் இணக்கமாகவும், பொருத்தமானதாகவும், வேலை செய்வதற்கு எளிதாகவும் மற்றும் புதிதாக ஒன்றை உருவாக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பாடத்திட்டம் செயல்படுத்தும்போது குழந்தையின் வாழ்க்கை முறை பற்றித் தொடர்புடைய சங்கதிகளை அல்லது விஷயங்களைப் பற்றி கவனமாக பரீசிலிக்க வேண்டும்.

சார்டு (1989) அவர்களின் கூற்றுப்படி குழந்தைப் பாடத்திட்டத்திற்கான தலைப்புக்களைக் கீழ்க்கண்டவற்றை மனதில் கொண்டு தயாரிக்க வேண்டும்.

 1. குழந்தைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்
 2. திறமைகளைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்க வேண்டும்
 3. கிடைக்கும் வளங்களைப் பொறுத்து இருக்க வேண்டும்
 4. ஆசிரியரின் ஆர்வம்
 5. வருடத்தில் குறிப்பிட்ட நாட்களைப் பொறுத்து இருக்க வேண்டும்

இந்த அடிப்படையில் பாடத்திட்டத்தை அமைத்தால் குழந்தைகளுக்கு பலவிதமான அனுபவங்களைக் கொடுக்க முடியும்.

முன்பள்ளிக்கான நடுநிலையான பாடத்திட்டத்தின் அம்சங்கள்

 • முன்பள்ளிக்கான ஒரு நல்ல பாடத்திட்டமானது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் பல சந்தர்ப்பங்களை அளிக்கிறது. எனவே நல்ல திறமையான அறிவு வளர்ச்சிக்கும் அது உதவுகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு தங்களுடைய தன்னம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளவும், தன்னைப் பற்றிய சாதகமான கருத்தை உருவாக்கவும் முடிகிறது.
 • குழந்தைகளுடன் ஒன்றி இருக்கக் கூடிய உடனடியான ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கக் கூடியதாக முன் பள்ளியின் பாடத்திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் தேவைக்கேற்பவும் அவர்களுக்குக் கிடைக்கும் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
 • ஒரு நல்ல பாடத்திட்டமானது குழந்தைகளைத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான அதிக நேரத்தையும், சந்தர்ப்பத்தையும் அளித்தல் வேண்டும். பேச்சு, நடனம், பாடல், நாடகம் மூலமாகவும் மற்றும் களிமண், காகிதம், தண்ணிர், மணல் போன்றவறைறைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குழந்தைகளின் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
 • ஒரு நல்ல பாடத்திட்டம் குழந்தைகளின் உடலை முழுமையாகப் பயன்படுத்தி, பல்வேறு வேலைகளைச் செய்வதன் மூலம் முழுமையான நல்ல வளர்ச்சியை உருவாக்க முடிகிறது. பாடல், நடனம், நல்ல உணவு, ஒய்வு, கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் நல்ல தீவிரமான விளையாட்டு போன்றவை முழுமையான முறையான உடல் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.
 • ஒரு நல்ல பாடத்திட்டம் குழந்தைகளின் அனுபவங்களின் துணை கொண்டு அவர்களுடைய தேவைகளை, வயதிற்கேற்ப, பூர்த்தி செய்வதால், எதிர்காலத்தில் முறையான கற்றலுக்கு திடமான அஸ்திவாரத்தை அளிக்கிறது.
 • ஒரு நல்ல பாடத்திட்டம் பெற்றோரின் தேவைகளையும் மனதில் கொண்டு பெற்றோர் கல்வித் திட்டத்தையும் ஒர் அங்கமாகக் கொண்டுள்ளதாக அமைகிறது. முன் பள்ளியில் செய்யப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் முன் பள்ளியின் பாடத்திட்டமாகவே கருதப்படுகிறது.

பாடத்திட்டத்தின் முக்கிய கொள்கைகள்

பாடத்திட்டத்தை நிர்ணயிக்கும் சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. ஆசிரியர் இதனை மனதில் கொண்டு குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். அவை பின்வருவன:

 1. முன்பள்ளியின் குறிக்கோளை அடைய உதவக்கூடியதாக பாடத்திட்டம் அமைதல் வேண்டும்.
 2. குழந்தைகளின் வளர்ச்சித் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக பாடத்திட்டம் அமைய வேண்டும்.
 3. பாடத்திட்டத்தில் சுதந்திர விளையாட்டு செயல்களுக்கும் கண்காணிப்பு செயலுக்கும் சமமான அளவில் செயல்கள் அமைக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.
 4. கடினமான சுறுசுறுப்பான செயலுக்கும் எளிய செயலுக்கும் இடையே போதுமான இடைவெளியிருத்தல் வேண்டும்.
 5. குழந்தைகளின் தனிப்பட்ட தேவையினையும் குழுத் தேவையினையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
 6. ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
 7. பாடத்திட்டம் செயல்பாடு மிக்கதாகவும், பொருளுடையதாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
 8. பாடத்திட்டம் அமைப்பதில் முன் பருவப் பள்ளியைப் பற்றி நன்கறிந்த நபர்களுடைய ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட வேண்டும்.
 9. பாடத்திட்டம் அமைக்கும் போது சீதோஷ்ணநிலை, கிடைக்கும் இடம், குழந்தைகளின் கவனிப்புத்திறன், பள்ளிக்கான கல்வி சாதனங்கள் போன்ற அனைத்தையும் மனதில் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
 10. குழந்தைகளுக்கு ஆராய்ச்சி செய்யவும், புதியதாக உருவாக்கவும், கலைத்திறனை வெளிப்படுத்தவும் போதுமான அளவு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
 11. தனிப்பட்ட குழந்தைகளின் (மாற்றுத்திறனாளிகளின்) தேவைகளைப் பூர்த்திச் செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல முன் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் கீழ்வரும் குறிக்கோள்களை நிறைவேற்றக் கூடியதாக அமைதல் வேண்டும்

 • தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வளர்த்தல்.
 • அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதில் தீவிர ஆர்வமுடையவர்களாய் இருத்தல்.
 • பெரிய மற்றும் சிறிய தசைகளின் வளர்ச்சி.
 • ஐம்புலன்கள் பற்றிய விழிப்புணர்வு.
 • தங்களுடைய எண்ணங்களை பொருட்கள் மற்றும் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தும் திறன்.
 • மொழியைக் கேட்டும், உபயோகித்தும் வளர்க்க உதவுதல்.
 • சுதந்திர உணர்வு.
 • தன் வயதினை ஒத்தவருடன் சமமாகவும், கலகலப்பாகவும் பழகுதல்.
 • பல வகையான முதல் அனுபவத்தின் மூலம் அறிவினை வளர்த்தல்.
 • பள்ளி மற்றும் கற்றல் முறையில் சரியான எண்ணங்களை வளர்த்தல்.

முன்பள்ளிக்கான கால அட்டவணை

கால அட்டவணைத் தயாரிக்கும் போது முன் பள்ளியின் குறிக்கோளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். பள்ளியின் பாட (கால) அட்டவணையினைப் பார்த்த மாத்திரத்திலேயே அப்பள்ளியின் கல்வித் தரத்தைப் பற்றித் தெளிவாக அறிய முடியும். அவை முக்கியமாக வருடம் முழுவதும் அப்பள்ளியின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் செயல்களை உள்ளடக்கியதாக இருக்கிறதா என கவனமாகப் பரீசிலித்த பின் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட பாடத்திட்டம் குழந்தைகளின் தேவைக்கேற்பவும் ஆர்வத்திற்கேற்பவும் மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். பாலர் பள்ளியின் செயல்கள் உட்புறம் மற்றும் வெளிப்புற விளையாட்டிற்கும், எளிய மற்றும் கடின செயல்களுக்கும், தனி நபருக்கும் மற்றும் குழுவினருக்கும் போதுமான சமநிலை இருக்குமாறு அமைதல் வேண்டும்.

அறிவு வளர்ச்சி அல்லது மொழி வளர்ச்சியை மட்டும் ஊக்குவிக்காமல், உடல் இயக்க வளர்ச்சி, சமூக மன எழுச்சி வளர்ச்சி, கலை வளர்ச்சி, போன்ற திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளதா என ஆசிரியர் கவனித்தல் கொள்ள வேண்டும்.

சேர்க்கை செயல்முறைகள்

 • வேலை நாட்கள்
 • பெற்றோருடன் வேலை செய்தல்
 • பணிபுரிவோரின் (வேலையாட்களின்) பொறுப்புக்கள்

கட்டணம் நிர்ணயித்தல்

பாடத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் புதிய கூடுதல் தேவைகள், தேவையான கருவிகள் போன்றவை.

நிர்வாக மேலாளர் இவையனைத்தையும் எவ்வித நேர (குழப்பம்) குளறுபடியில்லாமல் திட்டமிடும் போது பிரச்சனைகள் எளிதாகத் தவிர்க்கப்படுகின்றன. குறுகிய காலத் திட்டம் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் முழு வருடத்திற்கான திட்டத்தை பகுதி பகுதியாக பல விதங்களில் பிரித்து 3 மாதத்திற்கு அல்லது 4 மாதத்திற்கு என திட்டமிடுகிறார். இத்திட்டத்தில் அதன் செயல்கள் ஒவ்வொரு மாதத்திலும் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி விளக்கமான குறிப்பை அளிக்கிறது.

சமூக பழக்கங்கள்

 • தினசரி தவறாமல் பள்ளிக்கு வரும் ஆர்வத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துதல்,
 • குழந்தைகள் தங்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்களின் பெயர்களைச் சொல்வதற்கும், தங்களின் ஆசிரியர் மற்றும் தங்களுடன் ஒன்றாகப் படிப்பவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் கற்றுக் கொள்ள உதவுதல்.

ஆரோக்கிய பழக்கங்கள்

 • நல்ல ஆரோக்கியமான பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் தன் சுத்தத்தை ஏற்படுத்தும் பழக்கங்களான சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தப்படுத்துதல்,
 • நல்ல உணவுப் பழக்கங்களை ஏற்படுத்துதல்,
 • நல்ல கழிவறைப் பழக்கங்கள் மற்றும் முறையாகத் தூங்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவுதல்.

மொழிவளர்ச்சி

 • அவரவர்களின் பெயர், பெற்றோரின் பெயர், பள்ளியின் பெயர், பள்ளியிருக்குமிடம் போன்றவற்றைச் சொல்லவும் கற்பித்தல்.
 • பாடல்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பள்ளி செல்வதற்கேற்ற பாடல்களைக் கற்பித்தல்.
 • கதைகள் நல்ல, சுத்தமான ஆரோக்கிய பழக்கங்களைப் பற்றிய கதைகள். ஆக்கபூர்வ வேலைகள் கரும்பலகையில் கிறுக்கச் செய்தல்,
 • களிமண்ணில் வேலை செய்தல்,
 • காகிதங்களை மடிக்க கற்றல் போன்றவை.

வாராந்திர பாடத்திட்டம்

 • மாதாந்திர பாடத்திட்டத்தைப் பொறுத்து ஆசிரியர்கள் வாரத்திற்கு செய்ய வேண்டிய செயல்களைத் திட்டமிட வேண்டும்.
 • ஒவ்வொரு வாரத்திற்கு பலவித கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அக்குறிப்பிட்ட வாரத்திற்கு குறிப்பிட்ட மையக்கருத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டமிட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.27586206897
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ரா.ஜெயலட்சுமி. Oct 10, 2019 09:50 PM

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலுள்ள தொடக்கநிலை வகுப்புகளுக்கான இரண்டாம் பருவம்-தினசரி வகுப்பு வாரியான வராவரியானகால அட்டவணை தேவை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top