பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி

விளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி தொடர்புகளைப் பற்றிய தகவல்.

கல்வி - வரலாறு

ஆதியில் மனிதன் முதன் முதலாக நிமிர்ந்துத் தனிமையிலிருந்து கூட்டாக வாழப் பழகிய நாட்களில் தனது உணவுத் தேவையைத் தவிர்த்து விளையாடுதலுக்காகவும் வேட்டையாடுதல் மற்றும் இன்னும் பிற செய்கைகளைச் செயல்படுத்திய நிலையிலையே நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்தான்.

பிறகு நாடோடி வாழ்க்கையை விடுத்து இருப்பிட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் குகையினில் வாழப் பழகிய போது தங்களது விளையாட்டு அனுபவங்களையும் அதனைச் சார்ந்த சம்பவங்களையும் நினைவுக் கூர்வதற்காகவும், மற்றவர்களுடன் பகிவதற்காகவும் கலையை (ஓவியக் கலை) பயன்படுத்தலானான்.

பின்நாட்களில் கூட்டங்கள் மற்றும் தலைமுறைகள் அதிகரித்த காலங்களில் தன் கூட்டங்களுக்கென மொழியை உருவாக்கிப் பேசப் பழகிய காலத்தில் கலையின் வாயிலாகச் சொல்லப்பட்டதைக் கதைகளாக உருமாற்றம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்திருந்தான் மனிதன். தான் வெளியே கற்றதைக் கூட்டங்களுக்கு மத்தியில் கற்பிக்க ஆரம்பித்ததைக் கல்வி என்று கூறலானான். அந்தக் கல்வியையும் விளையாட்டு, கலை, கதைகளின் வாயிலாகவே கற்பிக்கப்பட்டது. அதன் மூலமாக ஒரு தனி மனிதன் பல அனுபவங்களுக்குச் சொந்தக்காரனாகத் திகழ்ந்தான். அவற்றையெல்லாம் பதிவு செய்வதற்கு மனிதர்களுக்குத் தேவைப்பட்டதுதான் அம்மொழிக்கான  எழுத்து வடிவம்.

பேசிய மொழிகளுக்கு எழுத்து வடிவம் தேவைப்பட்ட போது அதனை உருவாக்கிக் கற்பிக்க அனைத்தையும் எழுத்து வடிவில் புத்தாக்கம் செய்யப்பட்டது. தான் கண்டவற்றைப் பதிவில் ஏற்றி அனைவருக்கும் அதைச் சேர்க்கவும், பகிரவும் செய்து அதனைக் கற்கவும் கற்பிக்கவும் செய்து வந்த காலங்கள் கடந்து, அதனை மட்டுமே கற்பது கல்வி என்ற நிலையில் வந்து நிற்கிறது.

அதன் விளைவாகத் தற்போது மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வது மட்டுமே இலக்காக இருக்கும் நேரத்தில் அவர்களின் திறன் மேம்படவும் சுயச்சிந்தனைத் திறன் மேம்படவும் விளையாட்டுக் கல்வி, கலைக் கல்வி, கதைக் கல்விப் போன்றவற்றின் தேவையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம்.

விளையாட்டும் கல்வியும்

இன்றைய சூழ்நிலையில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுப் போக்காகவும் காட்சிப் படுதளாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறது. சற்று மேம்பட்டு ஒருசிலருக்கு உடல் ஆராகியத்திற்கான விஷயமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் விடத் தற்போதுள்ள வேகமான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் தேடல் உள்ள உலகத்தில் விளையாட்டும் கூடக் கை-விரல்களுக்கு மத்தியில் வந்தமைந்து விட்டது. இவற்றிலும் பெரும்பாலும் வக்கிரங்கள் அதிகம் நிறைந்தவைதான் வெற்றியும் பெறுகின்றன. இவையனைத்தும் குழந்தைகளின் தேடலை விரிவு படுத்துவதில்லை. ஆனால் குழந்தைகளின் தேடலுக்கான கல்வியில் விளையாட்டும் ஓர் அங்கம் என்று யாரும் கருதாத நிலையில் குழந்தைகளைக் கற்றதைக் கக்கும் தொழிலாளியாகவே நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலை மாற நம் முன்னோர்கள் கையாண்ட விளையாட்டுடன் கூடிய கல்வி முறை அவசியமான ஒன்றாகத் தெரிகிறது. அது என்ன விளையாட்டுக் கல்வி முறை என்று கேட்பவர்களுக்காகவும், நாங்கள் தான் குழந்தைகளுக்கென விளையாட்டு வகுப்புகள் எடுக்கிறோமே என்று கூறுபவர்களுக்காக உதாரணங்கள் சில.

நாடோடியான வாழ்வில் வேட்டையாடுதலின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காகவும் அதனை எளிய முறையில் குழந்தைகள் கற்பதற்காகவும் உருவாக்கப்பட்டவைகள் தான் இலக்கை நோக்கிக் குறிபார்த்து எரியும் விளையாட்டுகளான “ஈட்டி”, “வட்டு”, “அம்பு” எறிதல் போன்ற எறி விளையாட்டுகள். இதனைக் கற்றுக்கொடுக்கும் போது தொலைவில் இருக்கும் மரங்களையும் அதன் துளைகளையும் பயன்படுத்தி இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இம்முறையில் கற்றுத் தேர்ந்தவர்கள் வேட்டைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதமேந்திய வேட்டைக் கல்விக் கற்பிக்கப்பட்டு, சிறந்த வேட்டையாளனாக உருவாக்கப்பட்டிருகின்றான்.

இருப்பிட வாழ்வை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு விவசாயத்தை மேற்கொள்ளவும் அதனை அடுத்தத் தலைமுறைகளுக்குப் பயிற்று விக்கவும் வேட்டையாடுதலின் போது தான் கற்றச் சில வழிமுறைகளைப் பின்பற்றியே விளையாட்டின் வாயிலாகவே “விதைப்பது” முதல் “அறுவடை” வரை அனைத்தும் கற்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டு வாழ்க்கை அதிகரித்துக் கொடுக்கல் வாங்கல் போன்ற அடிப்படைக் கணக்கு உக்திகளை எளிதில் நினைவில் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் “பல்லாங்குழி” போன்ற கணித முறை விளையாட்டுகள். இதன் மூலம் மனிதன் தனது அடிப்படைக் கணிதத் திறன்களை அடுத்ததடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றான்.

பின்நாட்களில் மனிதனின் வாழ்க்கை முறைகள் மாற்றம் கண்டு வாழும் காலமும் அதிகரித்த காலங்களில் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களின் போது தெளிவாகவும் மனக்கலக்கங்கள் ஏதுமின்றித் தோல்விகளைத் தன்னுள் ஏற்கும் விதமாக வாழ்வை அமைத்துக்கொள்ளும் வகையில் பல சிக்கல் வடிவங்களில் உருவாக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டவைதான் “தாயம்” போன்ற விளையாட்டுகள். மனிதனின் அடிப்படைத் தேவைகளை இதுபோன்ற பலவகையான விளையாட்டுகளின் மூலமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டதுதான் விளையாட்டுக் கல்வி.

கலையும் கல்வியும்

கூட்டு மற்றும் இன முறையிலான வாழ்க்கை அதிகரிக்க அதிகரிக்க விளையாட்டின் மூலம் கற்றுக் கொண்டதை வெகுவாகவும் விரைவாகவும் அனைவரும் உள்வாங்கிக் கொள்வதற்காகவும் கற்றதினைப் பதிந்து வைத்துக் கொள்வதற்காகவும் கலையினை உருவாக்கிக் கொள்கிறான்.

விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்டது அடிப்படைக் கல்வி என்றால் கலையின் மூலம் வாழ்வியல் ஆதாரத்தைத்தையும் தேடலையும் கட்டடமைக்கும் கல்வியைக் கற்றுக்கொள்கிறான்.

கலையின் மூலம் கல்விப் பெருகியக் காலத்தில் தனிமனிதச் சிந்தனைகள் வெகுவாகப் பரவலாயிற்று. தனியொரு மனிதன் தான் அனுபவித்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சில வெளிக் குறிப்புகள் மூலம் பிறருக்கு வெளியிட்டு, அவர்களையும் தனது உணர்சிக்கேற்றாற்போல் அசைவுப் பெற வைத்தது கலைக் கல்வியின் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது.

விளையாட்டுக் கல்வி முறையில் வெற்றித் தோல்விகள் மட்டுமே பிராதானமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த  நிலையில், கலைக் கல்வியில் தர்க்க (விவாத) ரீதியிலான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு சென்றது மற்றுமொரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டுப் பல புதிய உதயங்களுக்கும் காரணமாக அமைந்தது.

இந்தக் கல்வி முறையும் தற்காலத்தில் ஓவியம், ஆடல், பாடல், சிலை, கட்டிடங்கள், கவிதைகள், நாவல்கள் என ஒரு சில குறுகிய வட்டத்தினுள் அடக்கி அதன் அழகு மழுங்கடித்துக் கொண்டே வருகிறது. ஆனால் தாலாட்டு, தமாஷ், வீட்டு அலங்காரம், ஆடை அலங்காரம், பாத்திர வேலைபாடுகள் போன்றவையும் கலையின் அங்கம் என்ற நிலையை மறந்து அதனைக் கற்பிக்க மறந்தோ அல்லது அவற்றைச் செயல்பாடில்லாச் சொல்வடிவப் பாடங்களாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது.

கலைக் கல்வியின் மூலம் தனிமனிதச் சிந்தனைகளையும், தர்க்க ரீதியான புதிய கண்டுபிடிப்புகளையும் ஏற்படுத்தும் நிலையை எளிதில் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுக்கவியலும்.

கதையும் கல்வியும்

விளையாட்டு மற்றும் கலைகள் மூலம் கற்றதை நினைவுகளின் மூலம் மற்றவர்களின் உணர்வுகளுக்குள் ஊடுருவச் செய்வது கதைகளாகும். கதைகளின் வாயிலாகக் கற்பிக்கப்படும் கல்வியில் நினைவாற்றலே பெரிதும் பிராதனமாகிறது.

ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் எவ்விதத் தர்க்கங்களுமின்றியும் ஏற்றுக்கொள்வது போல் இருந்தாலும் சிந்தனைகளையும் உட்கேள்விகளையும் உண்டுப் பண்ணிக் கொண்டே இருப்பது கதைகளின் சிறப்பு. தற்காலத்தில் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் சிரமமானச் செயல் பாடாக இருப்பது மனப்பாடம் மட்டுமே. மனப்பாடம் என்பதை நினைவுகளாக மாற்றுவது கதைகள் மட்டுமே. பாடங்களையும் பயிற்சிகளையும் கதையின் வாயிலாகக் கற்பிக்கப்படும் நிலையிருக்குமானால் குழந்தைகளின் நினைவாற்றல் எந்நிலையிலும் அழியாத வண்ணம் காக்கப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள் முதல் நிகழ்கால நிகழ்வுகள் வரை உலகம் முழுவதும் கதைகளாக மட்டும் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் இங்குக் கல்வி மட்டும் கதைகளின்றிச் சூனியமானதாகவே திகழ்ந்து கொண்டிருகிறது.

இன்றைய காலகட்டத்தின் மிகப்பெரிய குழந்தைகள் அடக்குமுறையாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் நமது கல்வி முறையினால் தான் எந்த நிமிடம் பள்ளிவிடும் வெளியேறலாம் என்று குழந்தைகள் நினைக்கின்ற நிலை. இந்நிலை மாறக் குழந்தைகளின் கல்வியார்வத்தை விளையாட்டு, கலை மற்றும் கதைக் கல்விகளை நோக்கி உருமாற்றம் பெருமானால் எதிர்காலத் தலைமுறைகள் சீரியச் சிந்தனைகளாகவும் சுய ஒழுக்கச் சந்ததிகளாகவும் வளமைப் பெரும் என்பதில் எவ்வித மாற்றுச் சிந்தனைகளும் இல்லை.

ஆதாரம் : இனியன் ராமமூர்த்தி

2.93181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top