பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது முன்னேற்றத்தை பலத் துறைகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. எனினும் நமது தேசிய நலன் பாதிக்கும் வகையில் பலப் பிரச்சனைகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நலத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தியா, மக்களின் நலனைப் பேணிக்காப்பதில் அதிக அக்கறை செலுத்திவருகின்றது. இந்த உலகில் நம் இந்திய நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் பற்றியும், நமது தேசிய நலனிற்காக அரசு பின்பற்றும் கொள்கைகளையும் விரிவாகக் காண்போம்.

சமய சார்பின்மை

எந்த மதத்தையும் சாராமல் அனைத்து மக்களுக்கும் முழுச் சுதந்திரம் அளித்து எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் மக்களின் மதச் சுதந்திரந்தைப் பேணிக்காக்கும் சிறப்பு நோக்கம் உடைய கொள்கையே சமயச் சார்பின்மையாகும். சமயச்சார்பின்மை என்பது சமய நடு நிலைமையாகும். நமது இந்திய நாடு ஒரு சமயச் சார்பின்மை நாடு. அரசியல், கல்வி மற்றும் உள்ள அனைத்து துறைகளிலும் சமயச்சார்பின்மை கோட்பாடு கடைபிடிக்கப்படுகின்றது.

இந்திய நாட்டில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், புத்த, சமண, பார்சி சமயங்கள் உள்ளன. இந்திய நாடு பாகுபாடின்றி அனைத்து சமயங்களையும் ஏற்றுக் கொள்கிறது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளின் படி இந்தியர் எவரும் தனது விருப்பத்திற்கேற்ப எந்த சமயத்தையும் பின்பற்றலாம். சமயச் கூட்டங்களை நடத்தலாம். சமயக் கருத்துக்களை சொற்பொழிவாற்றலாம். சமயத்தின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளது.

நாட்டுப்பற்று

இந்திய எல்லைக்கு உப்பட்ட எந்த பகுதியிலும் இந்தியக் குடிமகனாக பிறந்த யாரும் தேசத்தின் மீது, தனது தாய்நாடு மீது கொண்டுள்ள பக்தி, பாசம், மதிப்பு, பிணைப்பு ஆகியவையே நாட்டுப்பற்று’ எனப்படும்.

இந்தியர் ஒவ்வொருவரும் தாய்க்கு ஈடாகக் கொண்டாடுவது இந்தியா எனும் நமது தாய்த்திரு நாடாகும். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நாம் பெற்ற சுதந்திரம், நாட்டுப்பற்று கொண்ட சுதந்திரப் போராட்ட தலைவர்கள், தியாகிகள் மற்றும் எண்ணற்ற பொதுமக்களின் தியாகத்தால்தான் எனில் மிகையாகாது. பாடுபட்டு வளர்த்த சுதந்திரப் பயிரை இந்தியர்களாகிய நாம் பேண வேண்டும்.

நாட்டுப்பற்றின் முக்கிய அம்சங்கள்

 • இந்திய நாட்டின் அரசியல் சட்டங்களை பின்பற்றுதல்
 • சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வீரர்களின் உன்னத நோக்கங்களை செயல்படுத்துதல்.
 • இன, சமய, சாதி, மொழி, பிராந்திய வேறுபாடுகளைக் களைந்து சகோதரத்துவத்தைப் பின்பற்றுதல்.
 • நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை மதித்து நடத்தல்.
 • தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்தல்.
 • பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்.
 • நாட்டின் இயற்கை வளங்களைப் பேணிக்காத்தல்.
 • சுற்றுப்புற சுகாதாரம் பேண உதவுதல்.
 • உடல்நலம், உடல் சுத்தம் பற்றி விழிப்புணர்வுடன் செயல்படுதல்.
 • நாட்டின் புராதனச் சின்னங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை பாதுகாத்து உதவுதல்
 • அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுதல்.
 • குழந்தைகள், பெண்கள் ஆகியோர் உரிமைகளை மதித்தல்.
 • நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க எப்பொழுதும் சேவை செய்ய தயார் நிலையில் இருத்தல்.
 • பயனுள்ள நல்லக் குடிமகனாக / குடிமகளாகத் திகழ்தல்
 • நாட்டின் பாதுகாப்பு, அமைதி, ஒழுங்கு, கட்டுப்பாடான வாழ்க்கைப் பற்றிய விழிப்புணர்வு வழங்குதல்.
 • மனித வாழ்வு மேம்பட கல்வியின் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்துக் கூறுதல்.
 • தேசத்தில் உள்ள தாவரங்கள், பிராணிகள், விலங்குகளைக் காத்தல், இதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை மதித்தல். முறையாக வாக்குரிமையை பயன்படுத்துதல்.
 • அரசின் நலத்திட்டங்களுக்கு தானும் பங்காற்றல்.
 • கொடிநாள், வீர வணக்கநாள் ஆகியவற்றிற்கு மதிப்பளித்தல். எல்லையில் பணியாற்றும் வீரர்களின் பணியை போற்றி மகிழ்தல்.
 • ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப் படை, ஆகியவற்றில் பங்காற்றல்.
 • புயல், வெள்ளம், மழை மற்றும் உள்ள இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கும் போது சேவையாற்றுதல். எல்லைச் செய்திகள், எல்லைப் போர் செய்திகள், இராணுவ நடவடிக்கைகள், வன்முறை, போராட்டங்கள், அகதிகள் வருகை, அந்நியர் ஊடுருவல் ஆகியன பற்றி அன்றாடச் செய்திகள் வழியாக அறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுதல்.

முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள் இளைஞனுக்கு எழுதிய பாடலில், "இளைய குடிமகனாகிய நான், நல்ல அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் என்றும் இந்திய தேசத்தில் பற்று கொண்ட நான், சிறிய நோக்கங்களை கொண்டிருப்பது கடுமையான குற்றமாகும் என்பதை உணர்கின்றேன். வானத்திலும், வானத்திற்கு கீழும், பூமிக்கு மேலும், கீழும் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல, வளர்ந்த இந்தியாவை உருவாக்க அறிவு என்னும் சுடரை, அணையாமல் ஒளிமிக்க சுடராகப் பிரகாசிக்க என்றும் முயல்வேன்!" என்ற கருத்தைக் கூறுகின்றார்.

வேற்றுமையில் ஓற்றுமை

நமது தாய்த்திரு நாடாம் இந்தியா தனது இயற்கை அமைப்பு, காலநிலை, மக்களின் உணவு, உடை, உறைவிடம், பழக்க வழக்கங்கள், இனம், மொழி, சமயம், இனம் ஆகியவற்றில் வேறுபட்டு இருப்பினும், இந்தியர்கள் அனைவரும் நமது நாடு ஒரே இந்தியா', இதில் வசிப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள்’ என்கின்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்கின்றனர். இந்த ஒற்றுமை உணர்ச்சியே நாட்டுப்பற்றை நம்மிடம் வளர்க்கின்றது.

அரசியல் மற்றம் புவியியல் அடிப்படையில் ஒரே நாடாக திகழும் இந்தியாவில் அனைவருக்கும் ஒரே தேசியக் கொடி, பொதுவான தேசியச் சின்னங்கள், ஒரே தேசிய கீதம், ஒரே அரசியலமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைச் சட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், நல வாழ்வுத் திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்புகள், 18 வயது இந்தியர் குடிமகன்/குடிமகள் அனைவருக்கும் வாக்குரிமை ஆகியவை உணர்வு பூர்வமாக நாம் அனைவரும் இந்தியர் என்கின்ற உணர்வை உணர்த்தி, நம் நாட்டில் நிலவும் 'வேற்றுமைகளில் ஒற்றுமை மற்றும் 'ஒருமைப்பாட்டு உணர்வை' ஏற்படுத்துகின்றது. இந்தியர் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டுடன் வாழ வழிவகையும் செய்கின்றது.

இந்தியாவில் இரவீந்திரநாத், காளிதாசர் போன்றோரின் இலக்கியங்கள், சாணக்கியரின் அரசியல் நூல், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், சுப்ரமணிய பாரதியார் போன்றோரின் கவிதைகள், சுஸ்ருதர், போகர் போன்றோரின் மருத்துவ நூல்கள், பெளத்த, சமண, புராண இதிகாச நூல்கள், வேதங்கள், பக்தி நூல்கள், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் சமயத்தின் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை அனைத்தும், இந்தியர்களால் என்றென்றும் போற்றப்படுபவை.

இந்திய இராணுவத் தலைவர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் இந்தியர் ஒவ்வொருவரின் சொத்தாகும்.

இந்திய இசைகளான கர்நாடகம், இந்துஸ்தானி, நாட்டியக் கலைகளான பரதநாட்டியம், குச்சிப்புடி, மணிப்புரி, கதக்களி போன்ற நடனங்கள், சிற்பக்கலை, ஒவியக் கலை, கட்டிடக் கலைகள், நாட்டின் புராதனச் சின்னங்கள் போன்றவை இந்தியா முழுமைக்கும் பொதுவானதாகும்.

தென் இந்திய புண்ணியத் தலங்களான இராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை, பழனி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, நாகூர், குருவாயூர், திருப்பதி மற்றும் வட இந்தியாவில் உள்ள காசி, துவாரகை, பத்ரிநாத், அமர்நாத், அமிர்தசரஸின் பொற்கோவில் மற்றும் வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள், புத்த, சமண, பாரசீக கோவில்கள் போன்றவை இந்தியர் அனைவராலும் விரும்பிச் செல்லக்கூடிய இடங்களாகும்.

மக்கள் பயன்படுத்தும் உணவு, உடை, தொழிலுக்குத் தேவையான பொருட்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டு, இந்திய மக்களின் தேவைகள் நிறைவேறுகின்றன. இந்தியா பல்வேறு இன மக்களையும், இந்தியர் என்ற உணர்வில் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக திகழ்கின்றது.

மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வழி வகைகள்:

 • தினமும் பள்ளியில் 'ஒருமைப்பாடு உறுதி மொழி கூறுதல்.
 • தேசியக் கொடியை வாரம் ஒரு நாள் ஏற்றி "கொடி வணக்கப்பாடல் பாடித்துதி செய்தல்.
 • தேசிய கீதத்தை உரிய இசையுடன், உணர்வுடன் பாடுதல்.
 • தேசிய விழாக்களைக் கொண்டாடுதல்.
 • சுதந்திர, குடியரசு தின நாள்களில் ஆடல், பாடல், பிற கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்துதல்.
 • இந்தியப் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் பொம்மலாட்டம், கண்காட்சி அமைத்தல்.
 • இந்திய வீரக் கதைகளை நடித்தல்.
 • விடுதலைப் போராட்ட தலைவர்கள், வீரர்கள் போல் பங்காற்றி (Role play) நடித்தல்.
 • மக்கள் நலத்திட்டங்கள், உடல் நலம், சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு, மக்கள் கடமைகள், பற்றிய விழிப்புணர்வு பாடல்கள், வில்லுப்பாட்டு, குறு நாடகங்கள் நடத்துதல்.
 • இந்திய நாட்டுப்பற்றை உணர்த்தும் பாடல்களை இயற்றி இசையமைத்தல்.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவத்தின் சமமற்ற தன்மை, அவர்களிடையே சமுதாயம் காட்டும் வேற்றுமைகள் ஆகியவற்றை சமுதாயத்தில் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் மற்றும் காலத்தின் கட்டாயம் ஆகும். ஐக்கிய நாடுகள் வெளியிட்ட மனித உரிமைப் பிரகடனக் குறிப்பேடு ஆண்/பெண் இன வேற்றுமையைக் களைவது பற்றிக் கூறுகின்றது.

இந்தியாவில் பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீடு, பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்துள்ளது. இது உண்மையிலேயே பாராட்டக்கூடிய மாற்றம் ஆகும். "இராபர்ட் இங்கர்சால்' என்ற அறிஞர், ‘சுதந்திரத் தாக்கத்தைப் பெற்ற அன்னையரிடமிருந்து வரும் பெண் தலைமுறையினர் இந்த நாட்டிற்கு கிடைக்கும் வரை, மிக உயர்ந்த சிந்தனைகளைக் கொண்ட மாமனிதர்களும் கிடைப்பது கடினம்’ என்று கூறுகின்றார்.

இந்தியப் பெண்களின் தன்மைகளை காந்தியடிகள் பெரிதும் பாராட்டினார். 'பெண்கள் தகுதியற்றவர்கள் என்று கூறுபவர்கள்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றனர்' என்று அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பதவிகளுக்கு பெண்களை அமர்த்த வேண்டும் என்ற கருத்து தற்பொழுது நிலவுகின்றது.

பெண்களை கேலி செய்தல், அடிமைப்படுத்துதல், குழந்தைத் திருமணம் செய்தல், முதியோருக்கு குழந்தையைத் திருமணம் செய்தல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை மானபங்கம் செய்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், வீட்டில் வன்கொடுமை செய்தல், வார்த்தைகளால் மனக்காயப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், சிறையில் பலாத்காரம் செய்தல் ஆகிய கொடுமைகளுக்கு தற்பொழுது அரசு சட்டத்தின் மூலம் தீர்வு கண்டுவருகிறது.

பெண்ணுரிமைச் சட்டங்கள்

 1. கல்வி கற்கும் உரிமை
 2. பெண்கள் வாழ்க்கைக் காப்புரிமை
 3. திருமணச் சட்டங்கள்
 4. குழந்தை திருமணச் சட்டம்
 5. வரதட்சணை தடுப்புச் சட்டம்
 6. விவாகரத்து செய்யும் உரிமை
 7. கலப்புத் திருமண உரிமை
 8. சாதி ஒழிப்புச் சட்டம்
 9. விபச்சாரத் தடுப்புச் சட்டம்
 10. வன்கொடுமை தடுப்புச் சட்டம்
 11. சொத்துரிமைச் சட்டம்
 12. மக்கள் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்
 13. வேலைவாய்ப்பு மற்றும் பணி மேம்பாட்டு உரிமை
 14. பெண் தொழிலார்கள் உரிமைச் சட்டம்

மக்கள் தொகைப் பெருக்கம்

சீன நாட்டிற்கு அடுத்து மக்கள் பெருக்கம் நிறைந்த நாடு இந்தியா ஆகும். ஒரு நாட்டின் மக்கட் பெருக்கம், அந்த நாட்டின் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையையும், மக்களின் இறப்பு எண்ணிக்கையையும் பொறுத்து அமைகிறது. நமது நாட்டின் பிறப்பும், இறப்பும் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகுதியாக இருக்கின்றது. வேகமான மக்கட் தொகை பெருக்கத்தினால் நாட்டின் வளங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் வேலை, கல்வி, உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அளிப்பதில் அரசுக்கு சுமை ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதால் கிராமப்புறங்களில் மனித ஆற்றல் வளம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நகர்புற மக்களின் வாழ்க்கையில் நெரிசலையும், நெருக்கடிகளையும், சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் - தற்போதைய நிலை

உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு இந்தியாவில் உள்ளது. ஆனால் மக்கட் தொகையில் 16.7 விழுக்காடு இந்தியாவில் உள்ளது. இதே நிலை நீடித்தால் 2050ல் சீனாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும்.

கல்வியை பாதிக்கும் மக்கள் தொகை

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை, கல்வியையும் பாதிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 43 விழுக்காடு பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் பேர் அதிகரிக்கிறார்கள். ஏறத்தாழ 56 பில்லியன் பள்ளி வயதுடைய குழந்தைகள் இந்திய மக்கள் தொகையில் கூடி வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏறத்தாழ 2 லட்சம் பள்ளிகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. ஏறத்தாழ 6 லட்சம் ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறார்கள். அனைவருக்கும் தொடக்க கல்வி என்ற நூறு சதம் எழுத்தறிவு' என்னும் தேசிய இலக்கை அடைய இயலாமைக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணமாகும்.

மக்கள் தொகைப் பெருக்கம் - காரணங்கள்

 • நமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலையில் அதிகக் குழந்தைகள் பிறக்கின்றன. இளமைத்திருமணம் நிகழும் வெப்பமான நாடுகளில், குளிர்நாடுகளை விடப் பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது எனப் பெரும்பாலும் கூறப்படுகின்றது.
 • கிராமப்புறங்களில் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். 13 வயது முதல் 18 வயதுக்குள் திருமணம் நடைபெறுவதால் அதிக பிள்ளைகள் பெற்றெடுக்கின்றனர். மக்களின் சமய நோக்கு குழந்தைகள் பெருக்கத்திற்கு ஆக்கம் தருகின்றது. சமய நம்பிக்கைகளின் படி மறுமைப்பயன் தருகின்ற சடங்குகள் நிறைவேற்ற ஆண்குழந்தைகள் அவசியம் என கருதி, ஆண்குழந்தை பெறும் வரை பல பெற்றோர்கள் தங்கள் பொருளாதாரா வரம்பினைக் கடந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 • எழுத்தறிவின்மையால் குழந்தைகள் பிறப்பைக் குடும்பத்தின் நலன் கருதி கட்டுப்படுத்த வேண்டுமென்ற உணர்வு உருவாகவில்லை.

இறப்பு விகிதம் - அதிமாக காரணங்கள்

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

 • மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான மருத்துவ வசதியின்மையும், அறியாமையும், மிகவும் இள வயதிலே திருமணத்தை நடத்துவதாலும் குழந்தைகள் இறப்பும், பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பும் அதிகரிக்கின்றது.
 • மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான மருத்துவ வசதியின்மை.
 • மக்களிடமுள்ள கண் மூடிப்பழக்க வழக்கங்களால் மரண விகிதம் அதிகமாகிறது. அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு சுகாதாரத்தில் போதிய கவனம் செலுத்தாததால் நோய்கள் பரவி இறப்பு மிகுதியாகிறது.
 • வறுமையின் காரணமாக பெரும்பாலான பெற்றறோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தாண உணவை அளிக்க இயலவில்லை. தகுதியான அளவில் மருத்துவ வசதி வழங்குவதில்லை.
 • நகரங்களில் வசதிக் குறைவான வீடுகளில் வாழ்வதும், கிராமப்புறங்களில் காணப்படும். சுகாதாரக் குறைபாடுகளும் நோய்கள் பெருகி இறப்பு அதிகமாக காரணமாகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன.

அவை,

குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம். (Family Planning) உலகிலேயே இந்தியாவில் தான் முதலாவதாக தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு விளம்பரத்திற்காகவும், குறைந்த கருத்தடைச் சாதனங்கள் உற்பத்திக்காவும் மைய அரசு பெருந்தொகை செலவழித்து வருகிறது. ‘சிவப்பு முக்கோணம்’, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற விளம்பரங்கள் கிராமத்துச் சுவர்களில் எல்லாம் இடம் பிடித்துள்ளன. குடும்பக் கட்டுப்பாடு இயக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் (மருத்துவ மையங்களும்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருமண வயது ஆணுக்கு 21ம், பெண்ணுக்கு 18ம் என உயர்த்தி அது சட்டமாக்கப்பட்டுள்ளது. பெண்கல்விக்கும், முறைசாராக் கல்விக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. பெண்கல்வி கூடுவதால் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது. பள்ளிப் பாடத் திட்டங்களில் தொடக்கப்பள்ளிகளிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரையிலும் - மக்கள் தொகைக் கல்வி, பாலினக்கல்வி பற்றிய பாடக்கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சி, வில்லுப்பாட்டுகள், கதாகாலாட்சேபம், பொம்மலாட்டம், பாவைக்கூத்து, நாடகங்கள் போன்றவை மக்கள் தொகைப் பிரச்சனைகளை விளக்குவற்காக, வானொலி, Control) ஆராய்ச்சிக்கு, அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இந்திய குடும்பநலத் திட்டக்கழகம் (FPA), செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குடும்ப நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் மிகையான மக்கள்தொகைப் பெருக்கம் வளத்தையும், முன்னேற்றத்தையும் பின்னுக்கு தள்ளி விடுகின்றது. மக்கள் தொகைப் பெருக்கம் உயர்ந்த அளவிற்கு இந்தியாவில் உற்பத்தி திறன் உயரவில்லை. இதனால் இந்தியா ஏழ்மையில் உள்ளது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, பொழுதுபோக்கு அனைவருக்கும் கிடைத்திட மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

மனித உரிமைகள்

உரிமைகள் மனிதனின் உடன் பிறந்தவை. மனிதன் வசிக்க உணவு தேவை. அவன் வாழ உரிமை அவசியம். உரிமையற்ற வாழ்க்கை உயிரற்ற உடலுக்கு ஒப்பாகும். மனிதன் சுதந்திரமாகவும், சுய மரியாதையுடனும், வாழ மனித உரிமைகள் இன்றியமையாதவை. மனிதரிடம் மறைந்து கிடக்கும் ஆளுமை ஆற்றல்களை வெளி கொணர்வதற்கான வாய்ப்புகள் மனித உரிமைகள் ஆகும். மனித உரிமைகள் நமது மனப்பான்மையின் அங்கமாகி விட்டது. மனித உரிமைகள் அமைதியான அப்பழுக்கற்ற அடிப்படையாகி விட்டது என்று கூறினார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார். முதல், இரண்டாம் உலகப் போரின் போது உலக சமூகம் நிறையக் கற்று கொண்டது. 1929 ல் ஐக்கிய நாட்டு சபை மனித உரிமையைப் பிரகடனப்படுத்தியது. ஆனால் 1945ல் தான் இது நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐக்கிய நாடுகள் சபை (UNO) 1948 Declaration of Human Rights வெளியிட்டது. இது அடிப்படை மனித உரிமைகளிலும், மனித மாண்பிலும், நன்மதிப்பிலும், ஆண்,பெண், சம உரிமைகளிலும் ஆழமான நம்பிக்கை கொண்டது. சமுதாய முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்தல், முழுச் சுதந்திரத்தோடு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் போன்ற முதன்மை நோக்கங்களை இது உறுதி செய்தது.

குழந்தையின் உரிமைகள்

குழந்தைகள் உரிமைகளின் முக்கியத்துவத்தையும் யாரும் மறுக்க இயலாது. குழந்தைகள் உரிமைகள் மதிக்கப்படுவதும், மறுக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் இன்றும் சாதாரணமாக எங்கும் காணப்படுகின்றது.

குழந்தைகளுக்கு கல்விஉரிமை, மகிழ்ச்சியாக விளையாடவும், நண்பர்களுடன் பொழுது போக்குகளில் ஈடுபடவும், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை பெற்று வாழ உரிமை உண்டு.

அரசாங்கம் தாய் சேய் நலத்திற்காக பல நலத்திட்டங்களை அளித்துள்ளது. குழந்தைக் காப்பகங்கள் ஒரு தாயின் பராமரிப்பை குழந்தைக்கு அளிக்கின்றது. ஐ.நா. 1948 ல் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம் கொண்டு வந்தது. குழந்தைகள் பின்வரும் காரணங்களால் கைவிடப்படுகின்றனர்.

 1. பெற்றோர் ஏழ்மையில் உழல்தல்.
 2. பெற்றோர் நோய் வாய்பட்டிருத்தல்.
 3. பெற்றோர் தீமையான பழக்கவழக்கங்களில் ஈடுபட்டிருத்தல்.
 4. வேலையின்மை.
 5. அறியாமை.
 6. மிகப்பெரிய குடும்பம்.
 7. குழந்தைகளும் சம்பாதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புதல்.
 8. கல்வியின் மேல் பற்றின்மை.
 9. தீய நண்பர்களுடன் சேருதல்.
 10. தாய் அல்லது தந்தையில்லாத குடும்பம்.
 11. பாதுகாப்பாளரின் மோசமான நடவடிக்கை.
 12. பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குதல்.
 13. அடிமை வேலைக்கு விற்று விடுதல்.
 14. சொற்ப வருமானத்திற்கு ஆசைப்படுதல்.
 15. தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சொற்ப சம்பளத்தில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல்.

குழந்தைகளுக்காக அரசு பல சட்டங்களை இயற்றியும், அவர்கள் உயர்விற்காக திட்டங்களைத் தீட்டியும், தொண்டு நிறுவனங்களின் மூலம் உதவியும், "சர்வசிக்ஷ அபியான்" என்கின்ற கல்வி காப்புறுதித் திட்டம், பெண்கல்வி, மலைவாழ் மக்கள் கல்வி, ஊனமுற்றோருக்கான கல்வித் திட்டங்கள் வைத்திருப்பினும், அறியாமை காரணமாக குழந்தைகள் வேலையில் அமர்த்தப்பட்டும், தொழிற்சாலைகளில் வேலை செய்தும் குழந்தைக்கால மகிழ்ச்சி, கல்வி, விளையாட்டு ஆகியவற்றை இழக்கின்றனர்.

குழந்தை பாதுகாப்பு

குழந்தைகள் மானுட வர்க்கத்தின் விலைமதிக்கப் பெறாச் செல்வங்கள். இச்செல்வங்கள் அதன் தனிப்பட்ட நிலைக்கேற்ப, கவனம், நடத்தை முறை, பாதுகாப்பு கல்வி ஆகியவை முறையாக வழங்கும் போதுதான் சமூக வளர்ச்சி முழுமை அடைகிறது.

குழந்தை பிறப்பிற்கு முன்னும், பிறந்த பிறகும் சரியான கவனிப்பு, போதுமான ஊட்டச்சத்து, இருப்பிடம், பொழுதுபோக்கு, மருத்துவ சேவை ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

தனது ஆளுமையின் முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சியும், அன்பும், புரிந்து கொள்ளுதலும் குழந்தைக்கு அவசியமாகும். குழந்தைக்கு கல்வி பெற உரிமையுண்டு. அக்கல்வி ஆரம்ப நிலையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், பாதுகாப்பும், நிவாரண நடவடிக்கைகளும் பெறும் முதல் நபர் குழந்தையாக இருக்க வேண்டும். களங்கமற்ற தன்மையுடைய குழந்தை எல்லா விதமான அசட்டை (அலட்சியம், அஜாக்கிரதை) கொடுரம், சுரண்டல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மத, இன அல்லது வேறு எந்த விதமான பாகுபாட்டையும் வளர்க்கும் பழக்க வழக்கங்களிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

1989 ல் ஐக்கிய நாட்டு அறிக்கையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள குழந்தை உரிமைகள்

சட்டப்பகுதி

குழந்தை என்பதன் விளக்கம் (வரையறை) - 14 வயதிற்கு கீழ்பட்ட எல்லோரும்.

 1. பாகுபாடின்மை
 2. குழந்தையின் மேல் மிகச் சிறந்த அக்கறை.
 3. உரிமைகளை நடைமுறைப்படுத்துதல்.
 4. பெற்றோர்களின் வழிகாட்டுதலும், குழந்தையின் பரிணமிக்கும் சக்திகளும் (திறமைகளும்)
 5. சாகாமல் வாழ்தலும், முன்னேற்றமும் (இயல்பான / உள்ளார்ந்த உரிமை)
 6. பெயரும் நாட்டுரிமையும்.
 7. தனது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளல்.
 8. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்படாமை (அவர்களுடன் வாழும் உரிமை)
 9. குடும்பம் மீண்டும் ஒன்றிணைதல்.
 10. குழந்தையின் கருத்து.
 11. தனது கருத்துகளை வெளிப்படுத்தும், அறிவிக்கும் உரிமை.
 12. சிந்திக்கும் உரிமை.
 13. கூட்டுச் சேரும் உரிமை.
 14. தேவையான தகவலை அடைய / பெற வாய்ப்பு.
 15. பெற்றோரின் பொறுப்புகள் : குழந்தை வளர்ப்பு பெற்றோரின் அடிப்படையான கூட்டுப் பொறுப்பாகும். நாடு பெற்றோர்களை இந்தக் கடினமான பொறுப்பில் ஆதரவளிக்க வேண்டும்.
 16. அவமரியாதை / இழிவுபடுத்துதல் /அலட்சியம் / அசட்டை இவற்றிலிருந்து பாதுகாப்பு
 17. குடும்பங்களற்ற குழந்தைகளின் பாதுகாப்பு
 18. தத்தெடுத்தல்.
 19. அகதியான குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள் - அவர்களது நிலைமையை அவ்வப்போது மதிப்பிடுதல் / விமர்சித்தல்.
 20. சமூகப்பாதுகாப்பு.
 21. வாழ்க்கைத் தரம்.
 22. கல்வி.
 23. கல்வியின் குறிக்கோள்கள்.
 24. சிறுபான்மையினரின் குழந்தைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்கள் தொகை.
 25. பொழுது போக்கு, கலாச்சார செயல்பாடுகள்.
 26. குழந்தைப்பணி.
 27. மருந்துப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல். (போதைப் பழக்கம்) (தூக்கத்தைத் தூண்டும், வலிமைக் குறைக்கும், மனதில் விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துதல், மற்றும் அவற்றின் உற்பத்தி, வினியோகம் இவற்றில் சிக்கிக் கொள்வதிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்)
 28. தவறான பாலியல் பயன்படுத்துதல் (கொடுமைகள்) தொழில்ரீதியாக, ஆபாசத்தனம் உள்ளிட்ட தவறான பாலியல் பயன்படுத்தப்படுதலிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் உரிமை.
 29. விற்பது, வியாபாரம் செய்வது, கடத்துவது.
 30. வேறுவிதமான கொடுமைகள்.
 31. சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்.
 32. ஆயுதம் தாங்கிய போர்களிலிருந்து பாதகாத்தல்.
 33. நிவாரண கவனம்.
 34. இளைஞர் நீதியை நடைமுறைப்படுத்துதல்.

கல்வி

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 45 ஆவது பிரிவு, 14 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிக்க வலியுறுத்துகிறது. ஐ.நா. அமைப்பின் 23 வது பிரிவு ஊனமுற்ற / குறைபாடுள்ள குழந்தைகளின் தனித்தேவைகளை கண்டுணர்ந்து குழந்தையின் ஏற்றமும், முழுமை பெற்ற ஒருங்கிணைப்பையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது நாட்டின் பொறுப்பு என கூறுகிறது.

ஆரோக்கியமான வளர்ச்சியும், ஊட்டச்சத்தளிக்கும் உரிமை (Rights of Healthy Growth and Nutrition)

மகிழ்ச்சியான குழந்தை, தேசத்தின் பெருமை என, 1989 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் ஆண்டினை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்கள், சுகாதாரம், தொடக்கக்கல்வி, மதிய உணவுத் திட்டங்கள், சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள், மக்கள் தொகை, குடும்ப நலம், பரவும் வியாதிகளின் கட்டுப்பாடு, உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பு முதலியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது.

முன்னேறுவதற்கு உரிமை

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, பூட்டான், ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC) 2001-2010 ஆகிய 10 ஆண்டுகளை குழந்தை உரிமைகளுக்கான ஆண்டு எனவும் 2010 ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்கிவிடுதல் எனவும் முடிவு செய்துள்ளது.

குழந்தை தொழில்கள் தொடர்பான சட்டங்கள்

 1. குழந்தைகள் (உழைப்பை அடமானம் வைத்தல்) சட்டம் 1933.
 2. குழந்தைகள் பணியமர்த்தும் சட்டம் (1938)
 3. தொழிற்சாலைகள் சட்டம் - 1948
 4. கூலிச்சட்டம் 1948
 5. தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951
 6. சுரங்கங்கள் சட்டம் 1952
 7. சரக்கு கப்பல் சட்டம் 1958
 8. மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் (1961)
 9. அப்ரண்டிஸ் சட்டம் 1962
 10. அணுசக்தி சட்டம் 1962
 11. பீடி, சுருட்டு தொழிலாளர் (பணியமர்த்த நிபந்தனைகள்) சட்டம் 1996
 12. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்
 13. குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்தும் சட்டம் 1986

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

உலக மக்கட் தொகையில், பெண்கள் சுமார் 50 விழுக்காட்டினைப் பெற்றுள்ளனர். நீண்ட காலமாகவே பெண்கள் பொதுவாக ஆண்களுக்கு அடுத்த இடத்தை வகித்து வருகின்றனர். இதனால் மனித சமுதாயத்தில் பெண்களால் உரிய மதிப்பிடம் பெற இயலவில்லை. சுதந்திர இந்தியா பெண்களுக்கு அரசியலமைப்பில் சமஉரிமை வழங்கியுள்ளது. இதன் முகவுரையிலும், மனிதனின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளிலும் மற்றும் தேசிய கொள்கையிலும் பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்படுகிறது. இந்தப் பாடப் பகுதியில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நோக்கங்கள், அதிகாரமளித்தல், அதிகாரம் அளிப்பதன் காரணங்கள், பெண்கள் அதிகாரம் பெறும் வழிவகைகள், அதிகாரம் பெறுவதில் அரசியல், சமூக, பொருளாதாரத்தில் பெண்கள் பங்கு மற்றும் பெண்கள் அதிகாரம் பெற ஏதுவான காரணிகள் பற்றி விரிவாக காண்போம்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் நோக்கங்கள்

 1. பெண்கள் அரசியல், பொருளாதாரத்தில் பங்குபெற்று முழுவளர்ச்சி பெறுதல்.
 2. பெண்களுக்கு என முறையான அமைப்பு தோற்றுவித்தல், வலுப்படுத்துதல் மற்றும் வளர்த்தல்.
 3. அரசு வழங்கும் உரிமைகளை பேணிப்பாதுகாத்தல்.
 4. பெண்கள் உயர்மட்ட அளவில் தரக்கல்வி பெறுதல், சுகாதாரம் பேணல், உணவு, உறைவிடம், சுகாதாரம் பேணுதல், சூழல் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு பெறுதல்.
 5. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை பெறுதல், வங்கி உதவி மூலம் தொழில் நலம் பேணுதல், வறுமை களைதல் போன்ற பொருளாதார மேம்பாட்டில் ஆதிக்கம் பெறுதல்.
 6. இனத்தோற்ற வளர்ச்சியை சீர்செய்தல், பெண்களுக்கு எதிராக ஊறுவிளைவிப்பதை குறைத்தல்.
 7. உலக அளவில் பெண்கள் திறமையை மேம்படச் செய்தல். செயல் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் தேவைகள் குறித்து குழு விவாதம்

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது?

 • அதிகாரம் அளித்தல் என்பது அதிகாரம் சட்டபூர்வமாக வழங்குதலையும், அதிகார உரிமை வழங்குதலையும் குறிக்கும்.
 • பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பெண்களுக்கு அதிகாரம் அல்லது உரிமையை வழங்குவதை குறிக்கும்.

அதிகாரம் பெற்ற பெண்கள் சமவாய்ப்பு, சமஉரிமை மற்றும் பொறுப்பு மிக்கவர்கள் ஆவர். இவர்கள் பால் வேறுபாடு இன்றி சுதந்திரமாக செயல்படுவார்கள். பிறர் கட்டுப்பாட்டு தடையிலிருந்து விலகி வாழ்க்கையில் சுயகட்டுப்பாட்டை மேற்கொண்டு சொந்தமாக முடிவு எடுப்பவர்கள் அதிகாரம் பெற்ற பெண்களாவர்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க காரணங்கள்

 • பெண்கள் நீண்ட காலமாகவே ஆண்களுக்கு அடுத்த இடத்தை வகிப்பவர்கள். எனவே சமுதாயத்தில் பெண்கள் உயர்மதிப்பு பெற வேண்டும்.
 • குடும்பம் பேணுவதில் பெண்கள் சுதந்திரமாக செயல்படுதல்.
 • பெண்கள் குழந்தை பெற்று தரும் கருவி மட்டுமே என்ற நிலையை மாற்றிட வேண்டும்.
 • தகுதிகள், திறன், இருந்தும் வேலை வாய்ப்பில் ஆண்களைவிட குறைவு நிலையை பெற்றிருத்தலைச் சரி செய்தல்.
 • பெண்கள் அதிகாரம் அளிப்பது என்பது சாதாரண சட்டம் மற்றும் அரசியல் ஷரத்துகளில் இடம் பெற்றால் மட்டும் போதாது. தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு உண்மையான விடுதலை வீட்டில், பணிகளில், பிற இடங்களில் தேவைப்படுகிறது.
 • பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் மூலம் சமுதாயம், தேசம் மற்றும் உலக அளவில் பெண்கள் வளர்ச்சி உயர வழியமைக்கின்றது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஸ்டார்ம் க்யூஸ்ட் அறிஞர் (1993) அறிதல், உளவியல், பொருளியல், (பகுத்தறிவு, விழிப்புணர்வு, தன்நிலை மாற்றம்) அரசியல் (தேவைகள், வளர்ச்சி செயல்கள், மாற்றங்கள்) ஆகிய 4 பரிணாமங்களும் நுண்ணியல் அடிப்படையில் நிகழ்வது என்கிறார்.

பெண்கள் அதிகாரம் பெற எளிதாக்கும் காரணிகள்

  பெண் உரிமை சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

 • கல்வி வளர்ச்சி - வேலை வாய்ப்பு,
 • முடிவெடுப்பதில் சுதந்திரம் - விருப்பத்தை பொருத்தது.
 • திருமணம் செய்தல் / செய்யாமை - சுதந்திரமாக முடிவெடுத்தல்,
 • மக்கட்பேறு - மனக்கட்டுப்பாட்டை பொருத்தது.
 • அரசியலில் பங்கு - வாய்ப்பு பொருத்தது.

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974 - 78) பெண்கள் உரிமைகள், நலன்கள் யாவும் சமூக நலத்துறையே வழங்கியது. தற்போது மைய அரசு இப்பணியை மேற்கொண்டு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை (1980) அங்கீகாரம் செய்தது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறிப்பு காணப்படுகிறது. 1975 ஆம் ஆண்டை உலக பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டது. 1985ல் மூன்றாவது உலக பெண்கள் மாநாடு கென்யாவிலுள்ள நெய்ரோவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெண்களுக்கு அரசியலில் பங்கு பெறவும், இட ஒதுக்கீட்டில் 35 விழுக்காடு பெண்களுக்கும், சில கிராமங்களில் பெண்களுக்கு என ஒதுக்கீடும் வழங்கியது. 1990ல் அரசியல் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமையை வழங்கியது. மேலும் பெண்கள் குழுவையும் தோற்றுவித்தது. 1993ல் அரசியல் திருத்த சட்டம் (73 மற்றும் 74) கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ்ய முறையையும் நகராட்சிகளிலும், பஞ்சாயத்து அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றலில் முடிவு எடுக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 1993 சட்ட திருத்தத்தால் பெண்களிடம் ஒரு சிறிய எதிர்ப்பு கூட செய்ய சட்டத்தில் வழியில்லை.

பெண் கல்வி

ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பம் மற்றும் சந்ததியினருக்கும் போய் சேர்கிறது என 1948 - 49 பல்கலைக்கழக குழு கூறுகிறது. உலகிலேயே கல்வி அறிவு பெற்ற பெண்களின் இல்லமாக இந்தியா திகழ்கிறது.

பெண்கல்வி அதிகாரம் பெருவதில் முக்கிய கருவியாகச் செயல்படுகிறது.

சுகாதாரம், உணவு, இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறச் சூழல்

மலேரியா, காசம், நீர், நிலம், காற்று வழி பரவும் நோய்கள் எச்ஐவி எய்ட்ஸ் போன்ற உடலுறவினால் பரவும் நோய்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளும் திறமை பெற்று இருப்பவர்கள் படித்த பெண்களே ஆவர். பிறப்பு இறப்பு பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2000ல் தேசிய மக்கட் தொகை கொள்கைபடி இருபாலருக்கும் பாதுகாப்பு உறவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப பாதுகாப்பு, உணவு வகைகள் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் கழிவுகள் அகற்றல், பாதுகாப்பு இல்லங்களில் வாழ்தல், சுற்றுப்புறம் தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றில் பெண்கள் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.

பெண்களுக்கு எதிரான இடையூறுகள்

மனம் மற்றும் உடல் ரீதியான, இல்லம் மற்றும் சமூக அளவில் தோன்றும் இடையூறுகளை பெண்கள் குறைத்திட தகுதி பெற்றிருத்தல், தன்னை பாதுகாத்து கொள்ளும் கலை அறிந்திருத்தல் அவசியமாகும்.

பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல்

பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்ற பெண்கள் தன் காலே தனக்கு துணை என நம்பிக்கை பெற்றிருப்பர். அரசும் பல பொருளாதார திட்டங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளது. (உதா) ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம், ஜவஹர் ரோஜன் மற்றும் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்றவையாகும்.

பெண்கள் வங்கி மூலம் கடன் உதவி பெற்று சுயவேலை வாய்ப்பை தாமே தேடிக் கொள்கின்றனர். ஐந்தாண்டு திட்டம் மூலம் வறுமையை அகற்ற பல தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பெண்கள் திறமையாக அதில் பங்கேற்று வருகின்றனர். இல்லத்தில் கூனிகுறுகிய நிலை மாறி நிமிர்ந்து நிற்கும் நிலை பெண்களிடம் உருவாகியுள்ளது.

பெண்கள் சமத்துவத்தில் ஒரு சவாலாக உலக மயமாதல் திகழ்கிறது. புதிய யுக்திகளை பெண்கள் பயிற்சி வாயிலாக பெற்று பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர். ஆண்களை விட திறமையாக விவசாயம், கல்வி, தொழில், அரசு பணிகளில், நாட்டை ஆள்வதில் பெண்கள் வலிமை பெற்று வருவது கண்கூடே ஆகும். எனவே அரசு 2001 ஆம் ஆண்டை பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆண்டாக வெளியிட்டுள்ளது.

அதிகாரம் பெற்ற பெண்கள் ஆர்வமுடன் செயல்புரிவார்கள். "மைக்கேல் போகால்ட் என்ற பிரான்சு அறிஞர் குறிப்பிடுகையில் பெண்கள் எப்பொழுதும் ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இருபாலினங்களும் உலகில் எப்பொழுதும் சமம் ஆகாது. ஆண்களின் சிறைப்பிடியிலிருந்து விலகுவது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும் என்கின்றார். ஆணுக்கு பெண் சமம் என்பது அதிகாரம் அளிப்பதாகிறது. எனவே இணை என்பதே பொருத்தமானதாகும். ஒரு சிறிய கோட்டிற்கு கீழே ஒரு பெரிய கோடு இடுவது பெண்கள் அதிகாரம் பெற்ற நிலையை குறிப்பதாகும். பெண்கள் எந்த வித இடர்பாடுகளுக்கும் மனம் தளரவிடாது, திறமை, திறன், ஆர்வம் போன்றவற்றை பேணுவதால் தானே தன் சொந்த காலில் நின்று எதிர்விடும் இடர்களை களைய ஏதுவாகும்..

வகுப்பு வாதம்

இந்தியா உலகில் பெரிய நாடுகளில் 7வது இடத்தையும் மக்கட் தொகையில் இரண்டாம் இடத்தையும் பெற்று வருகின்றது. இந்தியாவில் பல மதத்தவர்கள் வாழ்கின்றனர். 1995ல் இந்திய மதங்களின் கணக்கெடுப்பு அறிக்கையில் இந்தியாவில் இந்துக்கள் 82.4%, முகமதியர்கள் 12.1%, கிறுத்துவர்கள் 2.4%, சீக்கியர்கள் 1.9%, புத்த மதத்தவர்கள் 0.7%, சமணர்கள் 0.4% மற்றும் பிற என கூறப்பட்டுள்ளது. மதம், இனம் ஆகியவற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாற்ற உணர்வின் காரணமாக மக்களிடையே வகுப்பு வாதத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் 1984 முதல் 1997 வரை காஷ்மீர், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத், அசாம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் வகுப்புவாத கிருமி பல வடிவங்களில் மக்களை பாதித்தற்கான ஆதாரங்கள் உள்ளன. வகுப்புவாத கலகத்தினால் மிகுதியான வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகின்றன. மேலும் பொதுமக்கள் படுங்காயங்களுக்கும் இறப்பிற்கும் உள்ளாகுகின்றனர். ஆகையினால் இழப்பை தடுத்து அமைதி ஏற்படுத்தவும், நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுத்தவும் வகுப்புவாதம் மற்றும் வன்முறை மனப்பான்மையை ஆய்வு செய்வது அவசியமாகிறது.

 • மொழி, இனம், வகுப்பு, சாதி, மதம் அடிப்படையில் இரண்டு அல்லது அதிகமான சமுதாயப் பிரிவுகளாகப் பிரிவது வகுப்புவாதமாகும்.
 • ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்தோடு விரோதமாக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதற்கு வகுப்பு வாத கொள்கைகள் வழிகோலுகின்றன.
 • வகுப்புவாதம் என்பது பிரிவினையை குறிக்கும். இது தேச ஒற்றுமையை சீர்குலைக்கின்றது.

வகுப்புவாத கலகத்திற்கு காரணங்கள்

 1. ஒரு சமூகத்தில் சில உறுப்பினர்களின் வருந்ததக்க நடத்தையால் பிற சமூகத்திற்கு துன்பம் தோன்றுவிப்பது.
 2. முக்கியமில்லாத நிகழ்வுகள், வதந்திகள், வகுப்பு கலகங்கள் ஏற்படுத்துதல், மதம், பிரிவினை மனப்பான்மை வகுப்பு வாதத்திற்கு அடிப்படையாகும்.
 3. தவறான மனப்பான்மை, கூட்டம் மற்றும் வளர்ச்சியும் வகுப்பு வாத கலகங்களை தோற்றுவிக்கும்.
 4. வகுப்பு வாதக்கலகம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழல் காரணமாக சமுதாயத்தில் ஏற்படுகின்றன.

இந்தியாவில் வகுப்பு வாதம்

இந்தியாவில் ஒரு காலத்தில் பல்வகை சமுதாயம் ஒற்றுமையாக இருந்தது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையினால் வகுப்பு கலவரம் தோன்றியது எனலாம். ஆங்கிலேயர்கள் தேசிய இயக்கத்தின் நிகழ்வை அடக்குவதற்கு இந்த வகுப்பு பிரிவினையை பயன்படுத்தி கொண்டனர் (உதா) 1991ல் உல்பா ராணுவம் 14 அரசு அலுவலர்களை கடத்தியது. 1996ம் ஆண்டு பிரமபுத்திரா விரைவு புகைவண்டியில் வெடிக்கும் அணுகுண்டு மூலம் போடோ இராணுவம் அசாமில் வெடிக்கச் செய்தது. 32 நபர்கள் இறந்தனர் மற்றும் 49 நபர்கள் காயம் அடைந்தனர்.

வகுப்புவாதம் கட்டுப்படுத்துதல்

 1. வகுப்புவாதம் குறைய கல்வி வளர்ச்சியை அதிகரித்தல்.
 2. சமுதாயத்தில் உள்ள மக்களிடம் ஒற்றுமை ஒருமைப்பாட்டு மன உணர்வுகளை வலுப்படுத்துதல்.
 3. சகோதர நல்லுணர்வு தோற்றுவித்தல், விட்டு கொடுக்கும் மனப்பான்மை வளர்த்தல், பிறருக்கு மதிப்பு அளித்தல் மற்றும்
 4. பிற தேசிய ஒருமைப்பாட்டை வலுப்பெறச் செய்தல், நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு தோற்றுவித்தல்.

முடிவுரை

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இந்தியாவின் முன்னேற்றத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணம் நம் சமுதாயத்தை மாற்றியமைக்கும் பணி ஒவ்வொரு குடிமகனின்/குடிமகளின் கையிலும் உள்ளது. எனவே நம் இந்திய அரசு பிரச்சனைகளுக்கு தீர்வுகான மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்தையும், நடவடிக்கைகளையும் இந்தியக் குடிமகனாகிய / குடிமகளாகிய ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்றி இந்தியாவின் நலனைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

2.87142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top