பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி

ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

ஒருங்கிணைந்த கல்வியானது இந்திய அரசாங்கத்தின் நலத்திட்ட அமைச்சகத்தால் 1974ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஓர் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள், பள்ளிச் சீருடைகள், போக்குவரத்து, சிறப்பு சாதனங்கள் மற்றும் கருவிகளை வழங்க நிதியுதவி அளித்து வருகிறது. பள்ளிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்த நமது மாநில அரசு 50 விழுக்காடு பண உதவியை அளித்து வருகிறது. ஆனால் பயிற்சி பெற்ற ஆசிரியர், இயலாமையுடைய குழந்தைகள் மற்றும் அவர்களுக்கான கல்வித் தேவையை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவில்லை.

உள்ளடங்கிய கல்வி

ஒருங்கிணைந்த கல்வியை விட இது பரந்த மற்றும் விரிவான கருத்துக்களை உள்ளடக்கியது. உள்ளடங்கிய கல்வியில், சிறப்பு திட்டங்களான உள்கட்டமைப்பு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், சிறப்பு கலைத்திட்டங்கள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன. சிறப்பு தேவை கொண்ட சில குழந்தைகள் அதே வகுப்பறையிலோ அல்லது வேறு வகுப்பிலோ அமர வைக்கலாம். உதாரணமாக, காது கேளாத குழந்தைகளுக்கு ஒலிக்கருவி அளித்து காது கேட்க வைப்பது. கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு பிரெய்லி முறை அமைந்த புத்தகங்கள் வழங்குவது.

உள்ளடங்கிய கல்வியின் அடிப்படைக் கொள்கைகள்

 1. உள்ளூர் பள்ளிகளானது சமுதாயங்கள் மற்றும் கலைத் திட்டத்திலிருந்து விலகி இருப்பதை தவிர்த்து, இயலாமையுடைய மாணவர்களின் பங்களிப்பை உயர்த்துதல்.
 2. பள்ளியிலுள்ள கலாச்சாரம், கொள்கைகளை மறுசீரமைத்து அவை பலதரப்பட்ட மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்தல்.
 3. மாணவர்களிடையே காணப்படும் வேற்றுமைகளை இயல்பாக கருதி அவற்றை ஏற்றுக் கொள்ளுதல்.
 4. மாணவர்களிடையே காணப்படும் பலதரப்பட்ட தேவையை பூர்த்தி செய்தல்.
 5. கற்றல் உத்திகள், பொருத்தமான கலைத்திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளித்தல்.

உள்ளடங்கிய கல்வியின் பயன்கள்

 1. இக்கல்வி முறையானது, கற்றலை எளிதாக்கவும், வரவேற்கதக்கதாகவும், சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் பயனளிக்க கூடியதாகவும் உள்ளது.
 2. எவ்வகையான கற்போரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இக்கல்வி அமைப்பு உள்ளது.
 3. ஏதோ ஒரு காரணத்தால் பள்ளியை விட்டு விலகிய மாணவர்கள் இயல்பான மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.
 4. இயலாமையுடைய குழந்தைகளும் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
 5. தங்களது தன்னம்பிக்கையையும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் சகமாணவர்களின் உதவியுடன் கற்கின்றனர்.

உள்ளடங்கிய கல்வியை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள்

ஒவ்வொரு தனிநபரின் பண்பியல்புகளானது, பள்ளிச் செயல்பாடுகளுக்கும் கலைத்திட்டத்திற்கும் பொருந்துவதாக இருத்தல் வேண்டும். மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்ட கற்பித்தல் முறைகள், நுணுக்கங்கள் மற்றும் கற்பித்தல் துணைக் கருவிகள் இல்லை. ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் சவால் மிக்க மாணவர்களை ஆர்வத்துடன் பங்களிக்க செய்தல் வேண்டும். இயலாமையுடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் உதவி சரிவர கிடைக்காமல் போகலாம். அவர்களின் தேவைக்கு போதுமான வசதிகள் மற்றும் கற்பித்தல் கருவிகள் இல்லாத காரணத்தால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் இயலாமையினால் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.

டெல்லார் குழு அறிக்கை

(அ) அமைதியான வாழ்க்கைக்கான கல்வி : கல்வியானது, “அறியாமை, போர், ஏழ்மை போன்றவற்றை குறைத்து ஓர் ஆழ்ந்த நல்லிணக்கத்தை மனித மேம்பாட்டிற்கு அளிப்பதே ஆகும்”

டெல்லார் கூற்றுப்படி "கல்வி என்பது அறிவுத்திறனை மேம்படுத்தும் ஓர் தொடர்ச்சியான செயல்பாடாகும். அது மட்டுமல்லாது தனிநபர், குழுக்கள் மற்றும் தேசத்திற்கிடையே ஒரு நல்லுறவினை ஏற்படுத்துகிறது.” இக்குழுவானது 21-ஆம் நூற்றாண்டின் ஒரு சில மையப் பிரச்சினைகளை அடையாளங்கண்டது.

அவையாவன:

 1. உள்ளூர் மற்றும் உலகளாவிய மக்களிடையே உள்ள இறுக்கமான சூழல்.
 2. கலாச்சாரம் ஒருபுறம் உலகளாவிய நிலையில் இருக்க, இம்மேம்பாடானது மற்றொரு புறம் பகுதியாக இருப்பது, தனிநபர்க்கும் உலகளாவிய மக்களுக்கும் இடையே ஓர் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.
 3. இந்திய மக்களிடையே காணப்படும் மற்றொரு இறுக்கமான சூழல் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் உட்பட்டதாகும்.
 4. நல்ல தரமான வாய்ப்பு பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற பதற்றம் தோன்றுகிறது.
 5. அதிகப்படியான அறிவுப் பெருக்கத்திற்கும் மனிதர்கள் அவற்றை தன்வயப்படுத்தி கொள்வதற்கும் இடையே உள்ள பதற்ற நிலை.
 6. கல்வியானது தனிநபர், குடும்பங்கள், பள்ளிகள், சமுதாயங்கள் மற்றும் குழுக்களிடையே உள்ள மோதல்களை தடுத்து அமைதியான சூழலை ஏற்படுத்துவதாகும்.

டெல்லார் குழு அறிக்கை - கல்வியின் நான்கு தூண்கள்

வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது குழந்தை பருவம் முதல் முதிர் பருவம் வரை உள்ள மனிதர்களின் அனைத்து நிலைகளிலும் அறிவு, திறன்கள் போன்றவற்றை உள்ளடங்கிய ஓர் தத்துவமாகும். அது மட்டுமல்லாது கற்றல் என்பது அறிவுசார் செயல்பாடு மட்டுமின்றி அவை தனிநபரின் வாழ்க்கையில், அதாவது சமுதாயத்தில் அவர்களின் பங்கு, பணிபுரியும் இடத்தில் அவர்களுடைய செயல்திறன், சுய மேம்பாடு போன்ற அனைத்திற்கும் வழிவகுக்கும்.

வாழ்நாள் முழுவதும் கல்விக்காக ஓர் கருத்தமைவு கட்டமைப்பு UNESCO-வின் கல்விக்கான பன்னாட்டுக் குழுவால், 21-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய குழுவின் முன்னாள் தலைவர் டெல்லார் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை (1996), கற்றல்: நம்முள் உள்ள புதையல்.” (Learning: The Treasure Within) எனப்படும்.

இவ்வறிக்கையானது, வாழ்நாள் முழுவதும் கல்வி என்பதை கீழ்கண்ட நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.

 1. தெரிந்துகொள்ள கற்றல்
 2. செய்வதற்கு கற்றல்
 3. ஒன்றாக வாழ்வதற்கு கற்றல்
 4. எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கற்றல்

தெரிந்து கொள்ள கற்றல்

கல்வியானது நாம் இவ்வுலகத்தில் வாழத் தேவையான அறிவு மற்றும் திறன் மேம்பாட்டினை உள்ளடக்கியது. இத்திறன்களாவன எழுத்தறிவு, எண்கள் மற்றும் சிந்தனை ஆகும். பரந்த பொது அறிவினை போதுமான அளவு கற்று, பின் அதனை ஒவ்வொரு சிறிய அளவிளான பாடத்தில் ஆழ்ந்து படித்தல். அதாவது நம் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

செய்வதற்கு கற்றல்

தொழில் வெற்றிக்கு தேவையான கணினி பயிற்சி, நிர்வாகப் பயிற்சி, தொழிற் பயிற்சி போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளுதல். தொழில் திறனிற்கு மட்டுமல்லாமல் பல்வேறு சூழலில் நாம் திறனுடன் திகழ வாழ்நாள் முழுதும் கல்வி தேவைப்படுகிறது.

ஒன்றாக வாழ கற்றல்

இது சமூகத்திறன்கள் மற்றும் மதிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. பிறரை பற்றி புரிந்து கொண்டு வாழும் திறனையும் மனப் போராட்டத்தினையும் சமாளிக்க கற்றுக் கொள்ளுதல், கூட்டாக சேர்ந்து செயல் திட்டங்களை கையாளவும் கற்றுக் கொள்கின்றனர்.

எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கற்றல்

இது தனிநபர் மேம்பாட்டினை வளர்க்கும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்கிறது.

முடிவுரை

அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பது அனைத்து மக்களின் மேம்பாட்டுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. குறிப்பிடத்தக்க குடிமக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால், 6-14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வெற்றி பெறாததற்கு காரணமாக அமைகிறது. அவ்வப்போது எழும் பிரச்சினைகளிலிருந்து மீண்டு, பொருத்தமான உத்திகளை அளிப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.88461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top