பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்

சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மற்றும் அதன் இன்றியமையாத அம்சங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கியத் திட்டம் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், தக்கவைத்தல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் போன்றவை மூலம் குழந்தைகள் கற்றல் அடைவை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது பல்வேறு சமூக பிரிவுகளுக்கு இடையேயுள்ள பாலின வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் இணைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மாநிலக் கல்வி அமைச்சர்கள் வழங்கி பரிந்துரைகளை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சர்வ சிக்ஷா அபியான் (SSA) தொடங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பில் 86வது சட்ட திருத்தத்தில் தொடக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக அமைந்தது. மேலும் தொடக்கக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கான குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் வெளியிடப்படவில்லை.

SSA-வின் இன்றியமையாத அம்சங்கள்

SSA ஆனது பின்வரும் இன்றியமையாத அம்சங்களை கொண்டுள்ளது. இது அனைவருக்கும் தொடக்கக் கல்வியில் நோக்கங்களை அடைவதற்கான மிக முக்கியமான திட்டத்தில் ஒன்றாகும்.

 • அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை அடைய சரியான நேரத்தில் அமைக்கப் பட்ட ஒரு திட்டமாகும்.
 • நாடு முழுவதும் தரமான அடிப்படைக் கல்வி தேவை என்ற அடிப்படையின் வெளிப்பாடாக அமைந்ததே இத்திட்டம்.
 • அடிப்படை கல்வி மூலம் சமூக நீதி மேம்படுத்துவதற்கான வாய்ப்பே இத்திட்டமாகும்.
 • பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பள்ளி நிர்வாகக்குழு, கிராமக் கல்வி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் இணைந்து அனைத்து குழந்தைகளும் கல்வி பயில முனைப்போடு செயல்பட வேண்டும்.
 • அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் வெளிப்பாடாகும்.
 • தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பிற அடித்தள கட்டமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன.
 • மைய, மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக் கிடையேயான ஒரு கூட்டாண்மையை இது வரவேற்கிறது.
 • அந்தந்த மாநிலங்கள் தங்கள் தொலைநோக்கு பார்வையில் தொடக்க நிலைக் கல்வியை உயர்த்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
 • இது தனியார் மற்றும் பொது கூட்டமைப்பின் செயல் பாட்டு உத்திக்கான ஒரு வாய்ப்பாகும்.
 • எல்லாவற்றிற்கும் மேலாக SSA திட்டம் என்பது சமுதாயத்திற்கு ஏற்ப குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தவும் அதனை படிப்படியாக தரமான கல்வி மூலம் உறுதி செய்வதுமாகும்.

SSA-வின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

SSA-வின் நோக்கங்கள்

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பயனுடைய மற்றும் பொருத்தமான தொடக்கக் கல்வியை சர்வ சிக்ஷா அபியான் மூலம் வழங்கப்பட வேண்டும். சமூக பங்களிப்பின் மூலம் சமூக, வட்டார, பாலின பாகுபாடு களைதலே, பள்ளி நிர்வாக மேலாண்மையில் SSAவின் மற்றொரு இலக்காகும். பயனுள்ள, தொடர்புள்ள கல்வியானது கல்வி குறித்த தேடலை, சமுதாயத்திலிருந்து அந்நியப்படுத்தாமல் ஒருங்கிணைப்பதாகும். இதன் நோக்கம் குழந்தைகள் இயற்கைச் சூழலை பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் மனித ஆற்றலை முழுமையாக ஆன்மிகரீதியிலும், பொருளாதார ரீதியாகவும் அனுமதிக்கும் ஒரு வழிமுறையாகவும் இருக்க வேண்டும்.

இந்த கல்வி தேடலானது மதிப்புசார் கல்வி அடிப்படையிலான கற்றல் செயல்முறையாக இருக்க வேண்டும். சுயநலமாக செயல்படாது ஒருவர் மற்றொருவரோடு இணங்கி பணியாற்ற வேண்டும். ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை 0 முதல் 14 வயது வரை அபியான் உணர்ந்திருக்கிறது. மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்களில் முன்பருவ கல்விக்கு உதவுதல் அல்லது முன் பருவக்கல்வி அல்லாத பகுதிகளில் உள்ள சிறப்பு முன்பருவ கல்வி மையங்கள் போன்றவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கல்வி அளிப்பதில் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சர்வ சிக்ஷா அபியானின் குறிக்கோள்கள்

SSAவினுடைய சிறப்பு நோக்கங்கள் பின்வருமாறு:

 • அனைத்து குழந்தைகளும், பள்ளி கல்வியை உறுதிப்படுத்தும் மையம் மற்றும் மாற்றுப் பள்ளி, முகாமிற்கு பின் மீண்டும் பள்ளியில் சேர்ந்து இருப்பதை உறுதி செய்தல்.
 • அனைத்து குழந்தைகளும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்திருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
 • அனைத்து குழந்தைகளும் எட்டு ஆண்டுகள் தொடக்க பள்ளிப்படிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • வாழ்க்கைக்கான கல்வியில் திருப்திகரமான தரத்தை அடைய வலியுறுத்துவதே தொடக்கக் கல்வியின் நோக்கமாகும்.
 • சமூக மற்றும் பாலின சமத்துவ இடைவெளிகளை ஆரம்ப நிலையிலும் தொடக்கக் கல்வி நிலையிலும் இணைத்தல்.
 • பள்ளியில் சேர்ந்த அனைத்து குழந்தைகளையும் தக்க வைத்தலை உறுதி செய்தல்.
 • ஒட்டுமொத்த கட்டமைப்பிற்குள் மாநிலங்கள் பாடப் பொருள் சார் குறிப்பிடத்தக்க வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தல்.
 • உள்ளூர் சிறப்புகளை பிரதிபலிக்க, ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊக்கப்படுத்துகிறது.
 • பரந்த தேசிய கொள்கை விதிமுறைகளின் அடிப்படையில் உள்ளூர் தேவையின் அடிப்படையான திட்டமிடலை ஊக்குவிக்கிறது.
 • பரந்த தேசிய நெறிகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு யதார்த்தமான திட்டமிடலை உருவாக்குதல்.

இதன் நோக்கம் தேசியளவில் ஒரே மாதிரியான கல்வியை அடைவதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்டத்தில் அவர்களுக்குரிய முறையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி கால வசதிக்கு ஏற்ப உருவாக்குவதே ஆகும். 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை பல்வேறு வகையான உத்திகளை பயன்படுத்தி பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்ந்து 8 வருட பள்ளிக் கல்வியை முடிக்க செய்வதே இதன் முக்கிய நோக்கமாக வலியுறுத்தப்படுகிறது.

பாலின சமத்துவம் மற்றும் சமுதாய இடைவெளியை இணைப்பின் மூலம் சரியான தாக்கத்தை பள்ளிகளில் ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிகளில் இருக்கச் செய்வதாகும். இதன் கட்டமைப்பிற்குள் பொருத்தமான கல்வி முறையை ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பயன் உள்ள வகையில் பள்ளிக் கல்வி முறையை அவர்களுடைய சூழ்நிலை மற்றும் சமூக சூழ்நிலைகளை புரிந்து உணர வைக்கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒரு கட்டமைப்பு திட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

 • தொடக்கக் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் பரந்த கட்டமைப்பை அளித்தல்.
 • SSA என்பது ஒரே சீரான, தொடக்கக் கல்வியை, முக்கியமான பகுதிகளில் அடைவதற்கு, நிதி ஒதுக்கீடு வழங்குவதற்கான செயல்முறை திட்டம் ஆகும். தொடக்க கல்வி துறையின் முதலீட்டில் மைய, மாநிலத் திட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டமைப்பு ஒரு பகுதியாக, பிரதிபலிக்கிறது.

மேலும் இது அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான கூடுதல் வளமாக விளங்குகிறது.

நிறுவன சீரமைப்புகள்

மைய மற்றும் மாநில அரசுடன் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனத்திறன் மேம்பாடு மற்றும் நிறுவன வெளிப்பாடு ஆகியவற்றை சீரமைப்புக் கூறுகளாக கொண்டுள்ளன. மாநில அரசுகள் கல்வி அமைப்பு மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றின் மீது புறவய மதிப்பீடுகள் செய்ய வேண்டும். இவற்றுடன் பள்ளிகளின் அடைவு நிலை, பொருளாதார சிக்கல்கள், பரவலாக்குதல், சமூகம் பள்ளிகளை தமதாக்கிக் கொள்ளுதல், மாநிலக் கல்வி விதிகளை மீளாய்வு செய்தல் ஆசிரியர்களை தேர்வு செய்து பணியமர்த்துதல், தொடர் கண்காணிப்பு, மதிப்பீடு, பெண் கல்வி நிலை, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், சிறப்புத் தேவையுடையோர் மற்றும் முன் பருவக் கல்வி முறை ஆகியவற்றின் சிக்கல்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். சில மாநிலங்களில் தொடக்கக் கல்வியில் வெளிப்பாட்டு முறையை மேம்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

நிதியை நிலைநிறுத்துதல்

தொடக்கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு செயல்பாடுகள் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றன. இது மைய, மாநில அரசுகளுக்கிடையேயான நீண்டகால நிதிப் பங்கீட்டு முறையாக இருக்கிறது.

சமுதாய கூட்டாண்மை

சிறப்பான பரலாக்கப்பட்ட முறையில், சமுதாயக் கல்விசார் பணிகள் பள்ளியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. மகளிர் குழு, கிராம நிர்வாகக் குழு (ம) பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றின் உறுப்பினர்களின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பின் மூலம் பள்ளிச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன.

நிறுவனத் திறன் மேம்பாடு

 • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பான கட்டமைப்பு மற்றும் திறன் வெளிப்பாட்டினை NUEPA, NCERT, NCTE, போன்ற தேசிய நிறுவனங்களும் SCERTISIEMAT போன்ற மாநில நிறுவனங்களும் DIET போன்ற மாவட்ட அளவிலான நிறுவனங்களும் உறுதி படுத்துகின்றன.
 • நிறுவனங்கள் மற்றும் கருத்தாளர்களைக் கொண்ட நிலைத்த உறுதுணை அமைப்புகள் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்த இயலும்.

கல்வி நிர்வாகத்தை மேம்படுத்துதல்

நிறுவன வளர்ச்சி, புதிய அணுகுமுறைகளை செயல்படுத்துதல், குறைந்த செலவு மற்றும் திறமையான முறைகளை பயன்படுத்துவதன் மூலமாக கல்வி நிர்வாகத்தை மேம்படுத்தலுக்கு அறைகூவல் விடுக்கிறது.

வெளிப்படையான சமுதாய அடிப்படையிலான கண்காணிப்பு

இத்திட்டம் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்காணிப்பு அமைப்பாகும். கல்வி மேலாண்மை தகவல் அமைப்பானது பள்ளியின் இயல்நிலை தகவல், சமூக அடிப் படையான தகவல் ஆகியவற்றை தொடர்புபடுத்தி நுண்ணிலைத் திட்டமிடலுக்கும் ஆய்வுப் பணிகளுக்கும் வழவகுக்கிறது. இவை மட்டுமின்றி ஒவ்வொரு பள்ளியும், பள்ளி சார்பான தகவல்களையும் பெறும் நிதிசார் தகவல்களையும் சமுதாயத்திற்கு தெரியப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

குடியிருப்பை அலகாக கொண்டு திட்டமிடல்

குடியிருப்பை அலகாகக் கொண்ட திட்டமிடலில் சமுதாய அடிப்படையிலான அணுகுமுறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் கையாள்கிறது. குடியிருப்பு திட்டங்களை அலகாகக் கொண்டு மாவட்டத் திட்டமிடல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சமுதாயத்தின் தார்மீக பொறுப்பு

ஆசிரியர்கள், பெற்றோர்கள் (ம) சமுதாய பங்கேற்பாளர்கள் இவர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, அதே சமயம் சமுதாயத் திற்கான பொறுப்பு (ம) வெளிப்படை தன்மையையும் அனைவருக்கும் கல்வி இயக்கம் எதிர்கால இலக்காக கொண்டுள்ளது.

பெண் கல்விக்கு முன்னுரிமை

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்று பெண் கல்வி. குறிப்பாக ஆதி திராவிட, மலைவாழ் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழுக்கள்

கல்வி செயல்பாடுகளில் ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர், சிறுபான்மையினர், நகர்ப்புற வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள் போன்ற குழந்தைகளை ஒருங்கிணைத்து, பங்குபெற செய்வதில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தரத்திற்கான உந்துதல்

கலைத்திட்டம், குழந்தை மையச் செயல்பாடுகள், சிறப்பு கற்பித்தல் கற்றல் அணுகுமுறைகள் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் தொடக்கக்கல்வி நிலையில் குழந்தைகளுக்கு பொருத்தமானதாக மாற்ற அனைவருக்கும் கல்வி திட்டம் உந்துதலை ஏற்படுத்துகிறது. இதுவே அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் தரத்திற்கான உந்துதல் ஆகும்.

ஆசிரியர்களின் பங்கு

ஆசிரியர்களின் பங்கு, கூர்நோக்கு செயல்பாடுகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதன் மூலம் SSA அவர்களின் வளர்ச்சித் தேவைகளை பரிந்துரைக்கிறது. வட்டார வளமையங்கள், குறு வளமையங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர் நியமனம், பங்களிப்பின் மூலம் ஆசிரியர் திறன் மேம்பாம்பிட்டிற்கான வாய்ப்பளித்தல் கலைத்திட்டம் தயாரிப்பில் ஆசியர்கள் பங்களிப்பு, பிற இடங்களில் உள்ள கல்வி நிலையை அறிவதற்கான குறிப்புகள் பயணங்கள் போன்றவற்றின் மூலம் ஆசிரியர்களின் மனித வளம் மேம்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டத்தின் பிரதிபலிப்பாக தொடக்க கல்வி தேவையை பூர்த்தி செய்யத் தேவையான நிதி ஆதாரங்களை அளிக்க ஏற்ற வகையில் அனைவருக்கும் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பொதுத்துறை (ம) தனியார் பங்களிப்பு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் தொடக்க கல்வி மேம்பாட்டிற்கு அதிக அளவு பங்களிப்பதை அனைவருக்கும் கல்வி இயக்கம் கருத்தில் கொண்டுள்ளது. அதே சமயம் நாட்டின் பல பகுதிகளில் சுயநிதி பள்ளிகளும், தொடக்கக்கல்வி வழங்குகின்றன. ஏழை குழந்தைகளால் தனியார் பள்ளிகளில், கட்டணம் செலுத்தி பயில இயலவில்லை. இருப்பினும் சில தனியார் பள்ளிகள் குறைவான கட்டணத்தில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறது. இத்தகைய பள்ளிகளில், குறைவான அடிப்படை வசதிகளுடன் குறைவான ஊதியத்திற்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

அனைவருக்கும் சமத்துவம் அளிக்கும் வகையிலும், தனியார் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் சேர்வதற்கும், தனியார் (ம) பொதுத்துறை முயற்சிக்கிறது. அரசு, உள்ளூர் அமைப்பு, அரசு நிதியுதவி பள்ளி போன்றவற்றில் அனைவருக்கும் கல்வி திட்டம் மதிய உணவு திட்டத்தையும் மாவட்ட தொடக்கக் கல்வி திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறது. அரசு/தனியார்/உள்ளூர் அமைப்புகள், அரசு நிதியுதவி பள்ளிகளின் முன்னேற்றத்தை தரம் உயர்த்த விரும்புகிறது. மாநிலக் கொள்கையின் நியதிகளுக்கு உட்பட்டு பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் இதை செயல்படுத்த முயற்சி எடுக்கிறது. மாநில கொள்கைகள், அடிப்படையில் DIET (ம) அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் நிதியுதவி பெறாத நிறுவனங்களுக்கு வள உதவியை செய்ய வேண்டும். அதிகப்படியாக ஏற்படும் செலவை அந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் கல்வி திட்ட நிதி வரன்முறை

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் 185:15 விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 75:75 விகிதத்திலும், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே 50:50 விகிதத்திலும் இருந்தது. சரியான பங்கு அளிக்கும் பொறுப்பினை மாநில அரசு எழுத்துப் பூர்வமாக அளித்தது. தொடக்கக் கல்வி மேம்பாட்டிற்காக மாநில அரசு அளிக்கும் பங்கில் ஒரே அளவை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும். இப்பங்குத் தொகையை விட அதிகமான தொகையை மாநில அரசு SSA-வுக்கு வழங்குதல் வேண்டும். இந்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையை தவிர, பிற தொகையை வழங்கும் போது மாநில அரசின் பங்கினை சரிபார்த்த பின் தான் வழங்குகிறது. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின்படி அனைவருக்கும் தொடக்கக் கல்வி திட்டத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 85:15 விகிதத்தில் ஊதியத்தினை மைய, மாநில அரசு வழங்குகிறது. இவ்வூதியம் பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் 75:25 ஆக இருந்தது, இனிவரும் காலங்களில் இது 50:50 விகிதத்தில் இருக்கும்.

தொடக்கக் கல்வி துறையில் நடைமுறையிலுள்ள திட்டங்கள் (தேசிய பால்பவன் (ம) NCTE தவிர) ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைக்கப்பட்டன. தொடக்கக் கல்வி குழந்தைகளுக்கு, தேசிய அளவிலான ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தில் (மதிய உணவு), உணவு தானியங்கள் வழங்கல் (ம) சில குறிப்பிட்ட போக்குவரத்து செலவினை அந்த மையமும். சமைத்து வழங்கப்படும் உணவிற்கான தொகையை மாநில அரசும் ஏற்கிறது. மாவட்டக் கல்வி திட்டம் என்பது வெவ்வேறு நிதி சார்ந்த திட்டக்கூறுகள். PMGY, JGSY, PMRY குறிப்பாக சுனிஷ்சிட் ஜோக்கர் போஜனா, சட்டப்பேரவை உறுப்பினர் (ம) பாராளுமன்ற உறுப்பினர்களின் வளர்ச்சி நிதி, மாநில திட்டம், பன்னாட்டு நிதி (ம) தன்னார்வ அமைப்பு மூலம் பெறப்பட்ட நிதிகளுடன் தொடர்புடையது. பள்ளியினை தரம் உயர்த்துவதற்கும், பராமரிப்பு செலவு, பள்ளி மற்றும் கற்றல் கற்பித்தல் கருவிகளை பழுதுபார்ப்பதற்கு ஆகும் செலவினை, கிராம நிர்வாகக்குழு, பள்ளி மேலாண்மை குழு, கிராம பஞ்சாயத்து அல்லது கிராம், பள்ளி அளவில் நிதிகளை பெற்று பயன்படுத்தல், மாநில திட்டத்தின் நிதியின் மூலமாக, உதவித்தொகை வழங்குதல் (ம) சீருடை வழங்குதல் போன்றவற்றை பெறுதல் வேண்டும். இதற்கான தொகையை அனைவருக்கும் கல்வி திட்டம் வழங்காது.

பள்ளி முன்னேற்றம் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகள்

மாநிலங்கள்தான் தொடக்கக் கல்வியின் முக்கியமான பொறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். தொடக்கக் கல்விக்காக மைய அரசு வழங்கும் நிதியுடன் கூடுதல் வளங்களை மாநில அரசு, பள்ளியின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம் (ம) ஆசிரியர் பயிற்சி போன்றவற்றிற்கு பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் தொடக்கக் கல்வி திட்டத்தின் முக்கிய அடைவு மனித வளத்தினை மேம்படுத்துதல் ஆகும். அதிலும் குறிப்பாக வகுப்பறை, பாடநூல் வழங்குதல், ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

SSA-வின் செயல்பாடுகள்

மாற்றுமுறை புதுமைக் கல்வி (AIE)

SSA-வின் மாற்றுமுறை புதுமை கல்வியானது (AIE) தொடக்கக் கல்வியினை அனைத்துக் குழந்தைகளும் எளிதில் அணுகும் வகையில் அளிக்கிறது. இதில் பின்தங்கிய மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பழங்குடியின, கடலோரங்களில் வசிக்கும் குழந்தைகள் பங்கேற்பதற்காக பல்வேறு உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுமான பணிகள்

கட்டுமான பணிகள் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முக்கிய அங்கமாகும். மொத்த செயல்திட்ட நிதியில் இருந்து கட்டுமான பணிக்கு மிகப்பெரிய அளவில் 33% முதலீடு செய்யப்படுகிறது. இது மாணவர்களின் தேவைக்கான பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதோடு மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் இவை இரண்டும் SSA-வின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளன. துணை மாவட்ட அளவிலான வள மையங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி கல்வி மேம்பாட்டிற்கு உதவுகிறது. இது தரமான முன்னேற்றத்திற்கான ஊக்கியாக செயல்படுகிறது.

புதுமையான செயல்பாடுகள்

பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதுமையான திட்டம் 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கான பயனுள்ள மற்றும் பொருத்தமான தொடக்கக் கல்வியினை அடையவும் சமூக, பிராந்திய மற்றும் பாலின இடைவெளிகள் இன்றி அனைவரையும் பங்கேற்கச் செய்யும் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. நீங்கள் அறிந்த வரையில் வெற்றிகரமான இத்திட்டம் மாணவர்களிடையே கல்வியில் ஆர்வத்தை உருவாக்கவும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமையான திட்டங்களாவன: முன் குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, பெண் கல்வி SC/ST கல்வி மற்றும் கணினி கல்வி.

R & E (ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு)

இச்செயல்பாடு ஆராய்ச்சி, மதிப்பீடு, மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணிப்பதை உள்ளடக்கியது. குடியிருப்பு சார் தரவை புதுப்பிப்பதற்கான வழக்கமான பள்ளி வரைபடம், நுண்ணிலை திட்டமிடல் போன்ற வசதிகள் இதில் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படலாம். இத்திட்டத்தில் கீழ்க்காணும் செயல்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன :

 • பயனுள்ள கள ஆய்வு கண்காணிப்பிற்கான கருத்தாளர் குழுக்களை உருவாக்குதல்.
 • வழக்கமான, சமூகம் சார்ந்த தரவினை உருவாக்கி அளித்தல்.
 • அடைவுத்தேர்வு, மதிப்பீடு சார் ஆய்வுகளை மேற்கொள்ளல்.
 • ஆய்வுச் செயல்பாடுகளை மேற்கொள்ளல்.
 • பெண் கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தைகளை மேற்பார்வையிட சிறப்பு பணிகளை மேற்கொள்ளல்.
 • கோஹார்ட் (short study) ஆய்வினை மேற்கொள்ளல்.

பள்ளி மானியம்

இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு 2000 ரூபாய் வீதம் பள்ளி மானியம் வழங்கப்பட்டது. இதில் ரூ.1,000 பள்ளி நூலக வசதிகளை மேம்படுத்துவதற்காகவும். எஞ்சிய பணம், செயல்படாத உபகரணங்களை செயல்படும் உபகரணங்களாக்கவும், பள்ளியை அழகு படுத்துதல், தளவாடப் பொருட்கள் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, இசைக்கருவிகள் மற்றும் பள்ளிகளின் முழுமையான சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் மானியம்

வகுப்பறை இடைவினைகளை மேம்படுத்துவது மற்றும் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிப்பதற்கு ரூ.500 ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் பயனுள்ள வகுப்பறைக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயாரிக்கவும் பெறுவதற்கும் இம் மானியத்தினை பயன்படுத்துகின்றனர்.

ஆசிரியர் பயிற்சி

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிப்பது என்பதே SSAவின் மிக முக்கியமான இலக்காகும். தரமான கல்வி என்பது தரமான ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். SSAவின் பிரதான முயற்சிகளில் ஒன்றானது தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சியாகும். இதில் நவீன பாடப்பொருள்களுக்கு ஏற்ற புதுமையான கற்பித்தல் முறை மற்றும் அந்த சூழலில் ஏற்படும் சிக்கல்களும் அடங்கும். ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியின் முக்கிய குறிக்கோள் குழந்தையின் கற்றலை எளிமையாக்கும் வகையிலான திறமைகளை ஆசிரியர்களிடம் வளர்த்தலே ஆகும். அனைவருக்கும் தொடக்கக் கல்வி சார்ந்த பல்வேறு சிக்கல் சார்ந்த அணுகுமுறை குறித்த பயிற்சியினை முதன்மை கருத்தாளர்களுக்கு வழங்கி அதனை அடுத்த நிலையில் அவர்கள் ஆசிரியர்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் அப்பயிற்சியினை வழங்கும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களுக்கான இப்பணியிடைப் பயிற்சி, ஆசிரியர்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி சார்ந்த புதிய போக்குகள் மற்றும் நடைமுறைகளை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது. இப்பயிற்சியினை மேம்படுத்த பல்வேறு விதமான உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் முக்கிய உத்திகள் பின்வருமாறு:

 • ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் மறுபயிற்சி அளித்தல்.
 • புதிய கலைத்திட்டம் மற்றும் பாடப்புத்தகம் சார்ந்த பயிற்சிகள் அளித்து அதில் ஆசிரியர்களை தரப்படுத்துதல்.
 • தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (NCF 2005) சார்ந்த பயிற்சிகள் அளித்தல்.
 • தேர்வு சார்ந்த சீர்திருத்தங்கள்.
 • தரக்குறியீட்டு முறை, மதிப்பீடு மற்றும் தரக்குறியீட்டு முறையின் தாக்கம் குறித்த பயிற்சியளித்தல்.
 • பாடம் சார்ந்த மற்றும் பாடம் சாராத பகுதிகளில் முன்னேற்றம். சிறப்புத் தேவைகளையுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி சார்ந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல்.
 • தரப்படுத்தப்பட்ட கல்வி மதிப்பீட்டை திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்துதல். தொடர் நடவடிக்கைகள் பள்ளிக்கு சென்று உதவுதல், மீளாய்வு கூட்டங்கள் நடத்துவதை உறுதிப்படுத்துவதன் மூலம் அனைத்து அளவிலும் கருத்தாளர் குழுக்கள் வலுப்படுத்தப்படுதல்.

DIET-ஆனது பயற்சியின் தேவையை கண்டறிந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டங்களை உருவாக்குதல் வேண்டும். இந்த செயல்முறை பயிற்சியின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து ஆசிரியருக்கு பயிற்சி என்பது கல்வியில் கற்பித்தல் முறைகள், குழந்தை உளவியல், செய்து கற்றல், மதிப்பீட்டு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு முறைமைகள் போன்றவற்றில் தொடக்கக் கல்வி ஆசிரியருக்கு பயிற்சி அளிப்பதாகும்.

தொலைதூரக் கல்வி

தொலைதூரக் கல்வி திட்டம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு தேசியக் கூறு எனலாம். இது தொடர்பான செயல்பாடுகளை அந்தந்த மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுத்தும் பொறுப்பை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகமானது ஏற்று நடத்தி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் இணைந்து தொடக்க நிலைக் கல்வியோடு தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் கல்விசார் மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக நிற்கின்றன.

மேலும் தானே கற்றல் உபகரணங்கள், ஒலி/ஒளிநாடாப் பதிவுகள், நிகழ்ச்சிகள், வானொலி ஒலிபரப்புகள், தொலைத் தொடர்பு கருத்தரங்கம் போன்ற பல்லூடகங்களின் துணைகொண்டு நேரிடையான பயிற்சிக்கு வழிவகை செய்கின்றன. இந்த தொலைதூர வழியிலான பயிற்சி அளிக்கும் முறையானது பல்வேறு தனிநபர்களை நேரிடையாக சென்றவடைதோடு, பயிற்சி தகவல்கள் மாறுதலின்றியும், ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தகவல் இழப்பை தவிர்த்தும் நேரிடை அனுபவமாக அமைகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வி மையம்.

Filed under:
2.9347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top