பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாடநூலும் ஆயுதமே!

பாட நூல்களும் அதனை கற்கும் அவசியத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடநூல்

பாடநூலும் ஆயுதமே! தொழில் நுட்பத்தின் பயன்பாடு பல்துறைகளிலும் அதீத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் முழுப்பலனையும் உள்வாங்கிக் கொள்ள முடியாமல், மிகக் குறைவான மாற்றத்தை அனுமதித்திருப்பது கல்வித்துறை மட்டுமே. உலகம் முழுவதும் கற்பித்தல் முறைகளில் நவீன முறைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகளும் தங்களுடைய கற்றல்-கற்பித்தல் குறித்த பார்வையை வெகுவாக மாற்றிக் கொண்டுள்ளன.

கற்றல்

கற்றல் என்பது குழந்தையின் சுதந்திரச் செயல். கற்றலைத் தூண்டுபவராக மட்டுமே ஆசிரியர் செயல்பட முடியும். ஆசிரியரிடமிருந்து மட்டுமே குழந்தை கற்றுக் கொள்ள முடியும் என்ற பழமையான கண்ணோட்டமும் மாறி வருகிறது. ஐந்து வயது முதல் பதினேழு வயது வரை அடிப்படைக் கல்வி பெறுவதற்காக குழந்தைகள் பள்ளிகளில் விடப்படுகிறார்கள். இக்கால கட்டத்தில் கல்விக் கூடங்கள் செய்ய வேண்டியவையாக சமூகம் எதிர்பார்ப்பது: "குழந்தைக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, சமூகப் பற்று, தேசபக்தி, நல்ல குடிமகனுக்குரிய நடத்தை, தனிநபர் ஒழுக்கம், பிறர் நலனில் அக்கறை, கூடி வாழ்தல், தலைமைப் பண்புகள், தனிநபர் திறமைகள் மேலோங்குதல் போன்றவை மேற்குறிப்பிட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் கட்டாயம் குழந்தை பெற வேண்டியவையாகச் சமூகம் திட்டமிடுகிறது. குழந்தையை சமூக மனிதனாக மாற்ற கல்விக்கூடங்கள் ஆசிரியர்களைச் சார்ந்திருக்கின்றன.

எத்தகைய நவீன முறைகளைக் கொண்டுவந்தாலும், ஆசிரியர்கள் மனதளவில் ஏற்றுக் கொண்டு, வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்தும் பொழுதே மாற்றம் என்பது சாத்தியமாகும். எனவேதான் கற்பித்தலை சிறப்பாகச் செய்ய ஆசிரியர்களுக்கு முதலில் குழந்தைகளைப் புரிந்து கொள்ள குழந்தை உளவியலும், கற்றலைச் சிறப்பாகச் செய்ய கல்வி உளவியலும், குழந்தைகளைக் கையாள உடலியலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வகுப்பில் திறமையாகச் செயல்பட அவர்களுக்கு வழங்கப்படும் கருவி பாடநூல்களே. பாடத்திட்டம் வல்லுநர்களாலும் அரசாலும் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே பாட நூல்கள் உருவாக்கப்படுகின்றன.

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் நம் மண்ணுக்கேற்ற கல்வியை நாம் அறிமுகம் செய்து விட்டோமா என்றால் இன்னும் முழுமையாக இல்லை எனக்கூறலாம்.

சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் பார்வையை உருவாக்க வேண்டும். பண்பாட்டு - கலாசார வாழ்வியல் கூறுகள் பாட நூல்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும். மொழியின் வழியே தான் குழந்தை பாடநூலைப் புரிந்து கொள்ள முயலும். பாடநூலின் மொழி குழந்தை புரிந்து கொள்ளக் கூடியதாக, மன அறிவுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஆசிரியர் விரிவாகக் கற்றுக் கொடுக்க, புரியாத மாணவர்களை அடையாளங் கண்டு மீண்டும் விளக்க, பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி விவாதிக்க என ஆசிரியர் தன்னை வகுப்பறைக்குள் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள பாடவேளைகள் நெகிழ்வுத் தன்மையுள்ளதாக அமைத்துக் கொள்ள ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

(தமிழகத்தில் படைப்பாக்கக் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ள 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பாடவேளை 90 நிமிடங்கள் என்பது சரியான நடைமுறை) இதன் மூலம் ஆசிரியர்-மாணவர் உறவு மேம்படுவதுடன் எல்லா நாள்களும் மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் கட்டாயம் சுமந்து செல்ல வேண்டியதில்லை. கடினப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கலாம். தினந்தோறும் மூன்று பாடங்களுடன் உடற்பயிற்சி, விளையாட்டு, ஓவியம், நீதி வகுப்புகள் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட முடியும். பாடநூல்களைக் கடந்த எல்லையற்ற அறிவு வெளியில் உள்ளது என்பதற்கான குறிப்பு பாடநூலில் அவசியம் இருக்க வேண்டும். பாடநூலில் இடம் பெறும் பாடம் தொடர்பான மேலதிகமான தகவல்களைத் தேடும் ஆர்வத்தை மாணவர் பெற வேண்டும்.

அதற்கான குறிப்புகள் நிச்சயம் பாட நூலில் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாடநூலை எழுதி முடிக்க ஒன்றிரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள். பாடநூலின் ஆழத்தை அவர்கள் சரியாக உணர்ந்திருப்பதையே இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது. மாணவரின் உலகமே இக்காலத்தில் வண்ணமயமானது. கருப்பு - வெள்ளையில் மாணவர் பார்ப்பது பாடநூல்கள் மட்டுமே. வண்ணமயமான பக்கங்களும், புரிதலை மேம்படுத்தும் படங்களும், நல்ல தாளும் கொண்ட பாடநூல்கள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடும். பள்ளி தொடங்கிய முதல் நாளில் ஆர்வமாய் வாங்கி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஆர்வமாகப் புரட்டிப் பார்க்கும் மாணவர்கள் பாடநூலை தூக்கி உள்ளே போட்டு விடுகிறார்கள்.

அப்படியில்லாமல் ஒவ்வொரு மாணவரும் பாடநூலை பலவிதமான தேடுதலுக்காக எப்பொழுதும் தன் உடன் வைத்து மகிழும் விதமாக ஒவ்வொரு பாடநூலும் தயாரிக்கப்பட வேண்டும். ஓவியத்துக்காக ஒருமுறை, புகைப்படத்துக்காக ஒருமுறை, படிப்பதற்காக ஒருமுறை என மாணவரின் தேடல் பாடநூல் முழுதும் பரவியிருக்க வேண்டும். போரிட எடுக்கும் ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் வீரன் முடமாகிப் போவான். பாடநூலும் ஆயுதமே!

ஆதாரம் : தினமணி

Filed under:
2.98387096774
Soheila May 25, 2015 11:29 AM

You've really helped me unnesrtadd the issues. Thanks.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top