பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்

அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் பற்றிய குறிப்புகள்

பெண் குழந்தைக் கல்வி

பெண் குழந்தைகளுடையே கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை பிரதமர் அரியானா மாநிலம், பானிப்பட்டில் 2015 ஜனவரி 20ஆம் தேதி  தொடங்கி வைத்தார்.  பெண் குழந்தைகள் குறைவாக உள்ள மாநிலங்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஆகியன கூட்டாக இந்தத் திட்டத்தை மேற்கொள்கின்றன.  நாடு முழுவதும்  தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.  மேலும், பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவதை தடுக்கவும் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்கவும், கல்வி அளிக்கவும், இந்த திட்டம் வகை செய்கிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள்

 • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம்: அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளை பதிவு செய்தல், இதற்கான பயிற்சியளித்தல், இதில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஊக்கமளித்தல்.
 • குடும்பநல அமைச்சகம்: மருத்துவமனைகளில் மகப்பேறை அதிகரித்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பை கண்காணித்தல், பிறப்புகளைப் பதிவு செய்தல்.
 • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்: பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், இடையில் பள்ளியிலிருந்து விலகும் குழந்தைகள் எண்ணிக்கையை குறைத்தல், பெண் குழந்தைகளுக்கு சாதகமான சூழுலை பள்ளிகளில் ஏற்படுத்துதல், கல்வி பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தல், மாணவிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைத்தல்.
 • மருத்துவமனையில் குழந்தை பிறக்கச் செய்வதை மக்களிடம் எடுத்துரைத்தல்.
 • ஆண், பெண் குழந்தைகள் விகிதாச்சார அளவை பராமரித்தல்.
 • இந்த திட்டத்திற்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  அடையாளம் காணப்பட்ட மாநிலங்களில் இவை நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

பெண்களுக்கான சில திட்டங்களும் முன் முயற்சிகளும்

பெண்கள் நல மையங்கள்

 • நடப்பாண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு ஒன்று என 36 மையங்கள் அமைக்கப்படும்.
 • இந்த மையங்கள் மருத்துவ உதவி, காவல் உதவி, சட்ட உதவி, ஆலோசனை, மனநல உதவி மற்றும் வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக தங்குமிடம் அளிக்கும்.
 • பெண்களுக்கான தனித்துவ உதவி தொலைபேசியுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
 • வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி ஆதரவு மற்றும் உதவி அளிப்பது நோக்கம்.
 • பெண்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டம்
 • பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி அமைச்சக திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 • 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்குத் திறன் மற்றும் அறிவு அளிக்கும் திட்ட வழிகாட்டு முறைகள் திருத்தப்பட்டுள்ளன.
 • விவசாயம், தோட்டக்கலை, உணவுப் பதப்படுத்துதல், கைத்தறி, தையல் உள்ளிட்ட துறைகளில் திறனை மேம்படுத்த உதவுவது.
 • பெண்கள் வேலை பெற உதவுவது, சுய தொழில் தொடங்க ஆதரவு அளிப்பது ஆகியன திட்டத்தின் நோக்கமாகும்.
 • பெண்களுக்கான திருத்தப்பட்ட தேசிய கடன் நிதி
 • தனி நபர்களுக்கு நேரடியாக கடன் வழங்குவது அல்லது தேசிய கடன் நிதி அமைப்பின் துணை நிறுவனங்கள் மூலம் கடன் அளிப்பது.
 • திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்.
 • ஏழைப் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் நிதி வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்க திட்டம் வகை செய்கிறது.
 • பெண்களுக்கான விருதுகள்
 • பெண்கள் பிரச்சனைகள் மற்றும் களப்பணியில் திறம்பட பணியாற்றும் பெண்களைப் பாராட்ட இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 • ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு மாவட்ட சாதனையாளர் விருது வழங்கப்படும்.
 • மாநில அளவில் ஒரு பெண்ணுக்கு மாநில சாதனையாளர் விருது வழங்கப்படும்.

தூய்மை பள்ளித் திட்டம்

 • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பள்ளித் திட்டத்தை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை தொடங்கியது.
 • தூய்மை இந்தியா நிதி திட்டம் நிதி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.  தனி நபர்கள், நிறுவனங்கள், மற்றும் பிற முகமைகளிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவது இதன் பணியாகும்.  தூய்மைப் பள்ளி திட்டத்திற்கு இந்த நிதி அமைப்பிலிருந்து நிதி வழங்கப்படும்.
 • மாநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை கழிப்பறைகள் கட்டவும், அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் அமைச்சகத்தின் இணையதளத்தில் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 4.19 லட்சம் கழிப்பறைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • 2.40 லட்சம் கழிப்பறைகள் கட்டவும் பழுது பார்க்கவும் நிதி அனுமதிக்கப் பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் 1.67 லட்சம் கழிப்பறைகளை கட்டவும், பழுது பார்க்கவும் உறுதியளித்துள்ளன.  தனியார் நிறுவனங்கள் 4,562 கழிப்பறைகளை கட்டவும், பழுது பார்க்கவும் ஒப்புதல் அளித்துள்ளன.
 • மேலும், 12951 கழிப்பறைகள் பழுது பார்க்க தூய்மை இந்தியா நிதி திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முன்னேற்றம்

2015 ஏப்ரல் 25 நிலவரப்படி 84226 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  1.66 லட்சம் கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  அனைத்து கழிப்பறைகளையும் 2015 ஜூன் 30க்குள் கட்டி முடிக்க வேண்டும்.  இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் திட்டம் வகுத்து அதை கண்காணிக்குமாறு அனைத்து அமைப்புகளிடமும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அரசு தூய்மைப் பள்ளி திட்ட அமலை நாள்தோறும் கண்காணித்து வருகிறது.

அனைவருக்கும் கல்வித் திட்டம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் துணைத் திட்டம் 2014 ஆகஸ்டில்  தொடங்கப்பட்டது.  படித்தல் மற்றும் எழுதுதல், கணிதத்தில் ஆர்வம் ஏற்படுத்துதல், ஆகியன இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பெண்களுக்கு கல்வி

 • தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உயர்நிலைக் கல்வி பயில தங்கும் விடுதியுடன் இணைந்த பள்ளிகள் அமைக்க கஸ்தூரிபாய்காந்தி குழந்தைகள் பள்ளித் திட்டம் வகை செய்கிறது.  தேசிய அளவைவிட குறைவாக பெண் கல்வி உள்ள, கல்வி நிலையில் பின்தங்கிய வட்டங்களில் இந்தப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  பிற அமைச்சகங்களின் பள்ளிகள் இல்லாத இடங்களில் மட்டுமே இந்த பள்ளிகள் ஏற்படுத்தப்படுகிறது.
 • கஸ்தூரிபாய்காந்தி குழந்தைகள் பள்ளி திட்டத்தில் 3 மாதிரிகள் மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.  அதில் முதலாவது 100 மாணவிகளுக்கு தங்குமிட வசதியுடன் பள்ளி அமைப்பது.  2வது மாதிரி 50 மாணவிகளுக்கு தங்குமிட வசதியுடன் பள்ளி அமைத்தல்.  3வது மாதிரி 50 மாணவிகளுக்கு இப்போதுள்ள பள்ளிகளில் தங்குமிடம் அமைப்பது.
 • இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ள 3609 கஸ்தூரிபாய்காந்தி குழந்தைகள் பள்ளிகளில், 508, மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ளது.  330 பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ளது.  544 பள்ளிகள் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 • இந்த பள்ளிகள் அமைப்பதற்கான செலவு மாநில அரசுகள் அறிவித்த கட்டணங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.  அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிகளில் 3064 அதாவது 86.29 விழுக்காடு பள்ளிகளின் கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 • தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கான வசதிகள்:
 • தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்காக இரண்டு திட்டங்கள் உள்ளன.  அவை

மேல்நிலை கல்வி மாணவிகளுக்கான தேசிய ஊக்குவிப்புத் திட்டம்.

 • இதன்படி தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த திருமணமாக பெண்கள் பெயரில் ரூ.3,000/- ஊக்கத் தொகையாக செலுத்தப்படும். 9ஆம் வகுப்பில் சேரும் போது இது வைப்பு நிதியாக வைக்கப்படும்.  இவர்கள் 10ஆம் வகுப்பு தேறியதும் 18 வயதை பூர்த்தி செய்ததும் வட்டியுடன் இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
 • இதற்கான 100 விழுக்காடு நிதியையும் மத்திய அரசே வழங்குகிறது.

தேசிய தகுதி ஊக்கத்தொகைத் திட்டம்

 • 8ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், தொடர்ந்து படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கவும் பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவினருக்கு ஊக்கத்தொகை வழங்க இந்தத் திட்டம் வகை செய்கிறது.
 • ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சிமன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இது அளிக்கப்படுகிறது.
 • 2014-15 ஆண்டில் 1,06,770 பேருக்கு மொத்தம் ரூ.65.20 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  இது அந்த மாணவிகள் மேல்நிலைக் கல்வியைத் தொடர உதவியாக இருந்துள்ளது.  இந்த ஊக்கத்தொகையைப் பெற பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவில் உள்ள மாணவியின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • இந்தத் திட்டத்திற்கான 100 விழுக்காடு நிதியையும் மத்திய அரசே வழங்குகிறது.
 • இந்தியாவில் பெண் கல்வியை மேம்படுத்த கணினி முறை பாலின வரைபடம்:
 • மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை பெண் கல்வியை மேம்படுத்த மின்னணு பாலின வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  அது உலக மகளிர் தினமான 2015 மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 • இந்த வரைபடம் மாநில / மாவட்ட / வட்டார அளவில் கல்வி நிர்வாகிகள் அல்லது பிற குழுவினர் பயன்படுத்த வசதியாக அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 • ஒவ்வொருவரும் கல்வியில் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை தொகுத்து இந்த வரைபடத்தில் வெளியிடப்படுகிறது. 3 ஆண்டுகளில் அவர்களிடம் எத்தகைய முன்னேற்றம் காணப்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடியும்.  கல்வி கற்பதை ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறியவும் இது பயனுள்ளதாக இருக்கும்.  பிறர் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிஷ்சா அபியான்)

அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இது உலகிலேயே மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விளைவுகள் / பலன்கள்

தொடக்கக் கல்வித்துறையை முறைப்படுத்துவதற்காக கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் தேவையான அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குறைந்த பட்சம் 25 விழுக்காடு மாணவர்களை சேர்க்க மாநிலங் களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு முழு உதவித் தொகை வழங்குகிறது.  2015 முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் கல்வி

நாட்டில் ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழு உள்ளது.  இது ஆசிரியர் கல்வி திட்டத்துக்கான வழிமுறைகளை 2014 நவம்பர் 28 அன்று திருத்தி அமைத்துள்ளது.

வயது வந்தோருக்கான நிதியியல் எழுத்தறிவு

 1. நிதிநிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வாய்ப்புகள் அளிப்பதும் நிதியியல் எழுத்தறிவு இயக்கத்தின் முக்கிய பணியாகும்.

மதிய உணவுத் திட்டம்:

மதிய உணவுத் திட்டத்தில் மக்கள் பங்கு பெறுவதற்காக இரண்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  அவை திதிபோஜன் மற்றும் சமூக கணக்கு தணிக்கை.

திதிபோஜன்

உள்ளூர் மக்கள் முக்கியமான குடும்ப விழாக்களின் போது உள்ளூர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு உதவுவதை ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக கணக்குத் தணிக்கை

மக்கள் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை கண்காணித்து நடைமுறைப்படுத்துவது சமூக கணக்குத் தணிக்கையின் நோக்கமாகும்.  மக்கள் மதிய உணவுத் திட்டத்தின் வெற்றி சமூகம் தீவிரமாக  பங்கு பெறுவதை ஒட்டியே அமையும்.

 • மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி நிலை சமையல் கூடங்களுக்கான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டி குறிப்புகள்

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி நிலை சமையல் கூடங்களுக்கான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டி குறிப்புகள் 2015 பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.  உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, பரிமாறுவது, கழிவுகளை அகற்றுவது ஆகியவற்றில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவும் நோக்கத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உணவு தயாரிப்பவர்களும், பரிமாறுபவர்களும் சுகாதாரமாக இருப்பதற்கு இந்த வழிகாட்டிக் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.  தயாரிக்கப்பட்ட உணவை பள்ளி ஆசிரியர் / பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் உண்டு பார்ப்பதன் மூலம் இந்தத் திட்டத்தில் மக்களின் ஈடுபாடு உறுதி செய்யப்படுகிறது.  மேலும், உணவு அருந்தும்முன் கை கழுவுதல், முறையாக உணவை அருந்துதல் ஆகிய நல்ல பழக்க வழக்கங்கள் மாணவர்களுக்கு ஏற்படவும் இத்திட்டம் உதவுகிறது.

தேசிய பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி மேம்பாட்டுக்காக தேசிய பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளது.  பள்ளிகள் தங்கள் தரத்தை மதிப்பீடு செய்யவும் மேம்பாட்டுக்கான வழிமுறைகளை மேற்கொள்ளவும் இது உதவுகிறது.  இதற்காக 7 முக்கியமான அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை மதிப்பீடு செய்யப்படுகின்றன.

பிற திட்டங்கள்

ஆசிரியர் பயிற்சிக்கான பண்டிட் மதன்மோகன் மாளவியா இயக்கம்

இது 2014 டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கப்பட்டது.  தரமான ஆசிரியர்களை பணியில் அமர்த்தவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தரமான கற்பித்தலை உறுதி செய்யவும் இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதான்

பெண் குழந்தைக் கல்வியை மேம்படுத்த உதான் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.  பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளிடையே கற்பித்தல் இடைவெளியை போக்குவது உதான் திட்டத்தின் நோக்கமாகும்.

ஷலா தர்பான் என்ற திட்டம் கைப்பேசி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.  பெற்றோர் பள்ளிகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க இது உதவிகரமாக உள்ளது.

உயர் கல்வியை நோக்கி

 • 5 புதிய இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைப்பது
 • நிதியமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஆந்திரபிரதேசம், கேரளா, கோவா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்முவில் 5 புதிய இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  நிரந்தர மற்றும் தற்காலிக கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் 2015-16 முதல் செயல்படத் தொடங்கும்.  கர்நாடகாவில் இத்தகை கல்வி நிறுவனம் ஒன்று தொடங்கப்படும்.  தன்பாத்தில் உள்ள இந்திய சுரங்கப் பள்ளி முழு அளவு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

கல்வி மேம்பாட்டில் உலக தொடர்பு

இந்திய மாணவர்களுக்கு உலகத்தர கல்வி அறிவு ஏற்பட கோடை மற்றும் குளிர்கால விடுமுறையின் போது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் உலக கல்வி மற்றும் அறிவியல் விஞ்ஞானிகளை அழைத்து உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு நடுவண் அமைச்சரவை 07.04.2015 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

உன்னாத் பாரத் அபியான்

உயர் கல்வி நிறுவனங்கள் கிராமப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது உன்னாட் பாரத் அபியான் இயக்கத்தின் முக்கிய பணியாகும்.  இந்திய கிராமங்களின் மேம்பாட்டுக்கு அரசு மற்றும் பொது, தனியார் நிறுவனங்கள் உதவுவதற்கான இயக்கமாகவும் இது விளங்கும்.

இஸ்ஸான் விகாஸ்

 • வடகிழக்கு மாநில பள்ளிக் குழந்தைகளும், பொறியியல் கல்லூரி மாணவர்களும் தங்கள் விடுமுறையின் போது இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள இத்திட்டம் வழி வகுக்கிறது.  இதில் பள்ளிக் குழந்தைகள் 10 நாட்கள் ஒரு கல்வி நிறுவனத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்படுகிறது.  பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பயிற்சி கிடைக்க உதவி செய்யப்படுகிறது.   இந்தத் திட்டத்தை கவுகாத்தி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது.
 • திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி சட்டம், 2014
 • திட்டம் மற்றும் கட்டடக் கலையின் 3 பள்ளிகளையும் திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி சட்ட முன்வரைவு, 2014ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான சட்ட முன்வரைவை  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 29.10.2014 அன்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த சட்ட முன்வரைவு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.  அது 22.01.2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 • இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 2012 முதல் பட்டத்துக்காக காத்திருந்த போபால் மற்றும் விஜயவாடா திட்ட மற்றும் கட்டடக்கலை பள்ளி பட்டதாரிகள் 400 பேர் பட்டம் பெற வழி ஏற்பட்டது.  நகர மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் சூழ்நிலை அதிகரித்துவரும் நிலையில் தேசிய மற்றும் பன்னாட்டு திட்ட தரத்திற்கு இணையாக திட்டம் வகுக்க இந்தச் சட்டம் உதவிகரமாக உள்ளது.

பெண் குழந்தைகளுக்கான பிரகதி ஊக்கத்தொகை

பெண் குழந்தைகள் தொழில்நுட்பக் கல்வி பெற இந்த ஊக்கத்தொகை உதவியாக உள்ளது.  11.11.2014 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.  இதன்படி ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக ஊதியம் பெறும் ஒரே ஒரு பெண்குழந்தை மட்டும் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த 4000 பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பலன் கிடைக்கும்.  தகுதித் தேர்வு மூலம் இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  இந்தத் திட்டத்தின்படி தொழில் கல்வி படிக்கும் பெண்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.  இது தவிர, ஆண்டில் 10 மாதங்களுக்கு ரூ.2,000 வீதம் படிப்பு முடியும் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்பக் கல்வி பெற அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் சக்ஷம் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்து கிறது.  இதன் மூலம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இந்த உதவித்தொகை ரூ.30,000 கல்விக்கட்டணம் அல்லது அசல் கட்டணத்தில் எது குறைவோ அது வழங்கப்படும்.  இது தவிர பிற செலவுகளுக்காக ஆண்டில் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.2,000 படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.  ஆண்டுக்கு ரூ.6 லட்சத்திற்கு குறைவான குடும்ப வருவாய் கொண்ட மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.  பயனாளிகள் தகுதித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.  இந்த மாணவர்கள் மாநில / மத்திய அரசின் மாணவர் சேர்க்கை நடைமுறையின் மூலம் 2014-15 கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் அல்லது பட்டய படிப்பில் முதலாண்டு சேர்ந்திருக்க வேண்டும்.

 1. இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (மும்பை, டெல்லி, கவுகாத்தி, காந்தி நகர், ஹைதராபாத், கான்பூர், கரக்பூர், சென்னை மற்றும் ரூர்க்கி) அறிவாற்றல் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  இதன் மூலம் 1966 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 2. பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் 2ஆம் கட்ட திட்டம் தொடக்கம்.  இந்தத் திட்டம் 82 கல்வி நிறுவனங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
 3. இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (இந்தூர், லக்னோ, பெங்களூர், கோழிக்கோடு, திருச்சி, உதயப்பூர், ராய்ப்பூர்) திறன் மேம்பாட்டுத் திட்டம்.  இதன் மூலம் 1228 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
 4. ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக அலுவலர் கல்லூரி 30 திட்ட நிறுவனங்களை மதிப்பீடு செய்தது.  இந்த ஆய்வு நிறைவடைந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 5. முதலாவது இணையதள அடிப்படையிலான மாணவர், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணி ஆய்வு 01.10.2014 அன்று தொடங்கி 10.11.2014ல் முடிவடைந்தது.  இதில் 190 கல்வி நிலையங்களின் பதில் திருப்திகரமாக இருந்தது.  2வது இணையதள ஆய்வு 2015 செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 6. மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கனடாவில் உள்ள மிட்டாஷ் உடன் 2014 பிப்ரவரியில் உடன்பாடு கையெழுத்தானது. நடப்பு கல்வியாண்டில் அந்த அமைப்பு 32 இந்திய மாணவர்களை தேர்வு செய்துள்ளது.  கனடா மாணவர்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான கல்வி அதிகாரத் திட்டம்

மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய தகுதி அடிப்படையிலான ஊக்கத்தொகை பிரிவில் 86 லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  இதில் 33 விழுக்காட்டுக்கு அதிகமானோர் மாணவிகளாகும்.  இந்த உதவித்தொகைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கும் 2015-16 முதல் இந்த பயன்கள் கிடைக்கும்.

சிறுபான்மையினர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

பயிற்சி பெற்ற 75 விழுக்காடு சிறுபான்மையின இளைஞர்கள் வேலை பெற இத்திட்டம் வகை செய்கிறது.  இதில், 50 விழுக்காடு வேலைகள் அமைப்பு ரீதியிலான துறைகளில் கிடைக்கும்.

புதிய திட்டங்கள்

 • திறன் மேம்பாட்டுக்கான மவுலானா ஆசாத் தேசிய அகாடமி – தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்காக இதை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடன் வழங்குவதும் அடங்கும்.
 • உஸ்தாத் – பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டுக்கான புதிய பயிற்சி திட்டம்.  பாரம்பரிய கைவினைஞர்கள் திறனை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.  இதற்காக இணையதள வணிக அமைப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • ஹமாரி தரோகர் – சிறுபான்மையினரின் உயரிய கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
 • சைபர் கிராம் – சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் மாணவர்களுக்கு மின்னனு கல்வி அளிக்க இத்திட்டம் வகை செய்கிறது.  கல்வி, கிராம மேம்பாடு, நிதி சேவைகள் போன்றவற்றில் முக்கிய தகவல்களை மக்கள் அறிய இது உதவிகரமாக இருக்கும்.
 • புதிய இலக்கு: – நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் இந்த திட்டத்தை அறிவித்தார்.  சிறுபான்மை சமுதாயத்திற்கான கல்வி மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் திட்டம் இது.  மதரசா கல்வி நிலைய மாணவர்கள் பிற பள்ளிகளில் சேர்ந்து படிக்க இது உதவிகரமாக இருக்கும்.

கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல்

 • தேசிய சிறுபான்மையின மேம்பாடு மற்றும் நிதி அமைப்பின் பங்கு மூலதனத்தை ரூ.1500 கோடியிலிருந்து ரூ.3000 கோடியாக அதிகரித்தல் -  சுய வேலைவாய்ப்புக்கான சலுகைக் கடனுக்கு அதிக நிதி வழங்க வகை செய்கிறது.
 • தேசிய சிறுபான்மையின மேம்பாடு மற்றும் நிதி அமைப்பு, மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மற்றும் மத்திய வஃக்ப் கவுன்சில் மறு கட்டமைப்பு முயற்சி தொடக்கம்.

இணையதளம் மூலம் உதவிகள்:

 • மெட்ரிக் படிப்புகளுக்கு பிந்தைய ஊக்கத்தொகை மேலாண்மைத் திட்டம் 2014-15ல் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டது.
 • நேரடி பயன் மாற்றம் – நிதிகள் வழங்க வெளிப்படையான அணுகுமுறை.  மாணவர்களுக்கான ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஆதார் வழங்கல் இணைப்பு அல்லது தேசிய மின்னணு நிதி மாற்றம் முறைகள் மூலம் வரவு வைக்கப்படுகிறது.

கீழ்க்காணும் 3 திட்டங்கள் மூலம் பயனடைகிறார்கள்

 1. மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய ஊக்கத்தொகை
 2. தகுதி அடிப்படையிலான ஊக்கத்தொகை
 3. மவுலானா ஆசாத் பெல்லோசிப்

நேரடி பயன் மாற்றம் 2014-15 முதல் செயல்படுத்தப்படுகிறது.  இதில் 10.2 லட்சம் மாணவர்களுக்கு மேல் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.  அவர்களுக்கு ரூ.817.49 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 1. பயிற்சி பெற்ற சிறுபான்மை இளைஞர்களுக்கான மேலாண்மை தகவல் திட்டம் மற்றும் இணையவழி கண்காணிப்பு முறை உருவாக்கப்பட்டு வருகிறது.
 2. விண்ணப்பங்கள் பெற, ஆவணங்கள் தாக்கல் செய்ய மற்றும் கண்காணிக்க இணையவழி விண்ணப்ப மேலாண்மை முறை உருவாக்கப்பட்டு வருகிறது.  இது சிறுபான்மையின பெண்களின் தலைமை மேம்பாட்டுக்கான திட்டமாகும்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டம்

 • மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையிலான தொழில்நுட்பம் குறித்த ஆய்வை சமூக நீதி அமைச்சகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 2015 ஜனவரியில் தொடங்கியுள்ளது.  மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
 • மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித் திட்டம்
 • மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித் திட்டம் 01.04.2014 முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 • இதற்கு 2014-15ல் ரூ.101.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த நிதி 1985இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மிக அதிக பட்சமாகும்.
 • பார்வையற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் உள்ளிட்டோருக்கு உதவிகள் மற்றும் உபகரணங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் காது கேளாத 500 குழந்தைகளுக்கு காது கேட்கும் சிகிச்சை அளிக்க புதிய திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.  இதற்கான உச்ச வரம்பு ஒரு கருவிக்கு ரூ.6 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  இதை அரசே ஏற்றுக் கொள்ளும். காது கேளாதோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள 31 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.  (28 அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 அரசு அனுமதி பெற்ற மருத்துவமனைகள்)

அரசு முதுகு தண்டுவட காய சிகிச்சை மையங்கள்

 • அரசு முதுகு தண்டுவட காய சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்கு 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • தேவைகளை அறிய ஏற்பாடு
 • மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவிகள் மற்றும் சாதனங்கள் குறித்து அறிய எற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான இணையதளம் 2014 டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
 • மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான தேசிய செயல் திட்டம்
 • மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு தேசிய செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோர் நலத் திட்டம்

பார்வையற்றோர் கல்வி பயிலுவதற்கான சிறப்பு புத்தகங்களை தயாரிக்க இப்போதுள்ள 10 அச்சகங்களை நவீன மயமாக்கவும், புதிதாக 15 அச்சகங்கள் ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏழைகளுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

 • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை – 2014-15 நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 58.51 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.  இவர்களுக்கு ரூ.1963.37 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு முந்தைய ஊக்கத்தொகை – 2014-15 நிதியாண்டில் 25.13 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.  இவர்களுக்கு ரூ.514.14 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
 • தூய்மை மற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய ஊக்கத்தொகை – இந்த திட்டத்தில் 2014-15 நிதியாண்டில் 14,273 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
 • தேசிய வெளிநாட்டு ஊக்கத்தொகை திருத்தத் திட்டம் – தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய வெளிநாட்டு ஊக்கத்தொகை திருத்தத் திட்டம் மூலம் வழங்கும் விருதுகளின் எண்ணிக்கை 2014-15 முதல் 60ல் இருந்து 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தேசிய பெல்லோசிப் உதவி தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கான உதவித்தொகை இளநிலை பிரிவுக்கு மாதம் ரூ.18,000/-ல் இருந்து ரூ.25,000/-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  முதுநிலை பிரிவுக்கு ரூ.20,000/-ல் இருந்து ரூ.28,000/-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக மானியக்குழு 300 இளநிலை ஆய்வு உதவிக்கான பட்டியலை இறுதி செய்துள்ளது.
 • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனுக்கான டாக்டர் அம்பேத்கர் மத்திய துறைத் திட்டம் 2014-15இல் தொடங்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்ட மேற்படிப்பு, முனைவர் படிப்பு உடள்ளிட்ட உயர் கல்வியை வெளிநாடுகளில் பயில ஊக்குவிப்பதற்காக இது தொடங்கப் பட்டுள்ளது.
 • வயதானோருக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின்கீழ் தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் சரிபார்க்கும் திட்டம் நடப்பு நிதியாண்டில் (2014-15) தொடங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், 18,225 மூத்த குடிமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 2014-15 நிதியாண்டில் ரூ.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
 • முயற்சிகள் மற்றும் சாதனைகள் – வேலைவாய்ப்பு சார்பானது
 • தாழ்த்தப்பட்ட பிரிவினர் தொழில் முனைவோர் திட்டத்துக்கான முதலீட்டு நிதி: புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு 2014 டிசம்பர் 22ல் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்ட வகுப்பினரை தொழில் முனைவோராக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.  அவர்களுக்கு சலுகை வட்டியில் நிதியுதவி வழங்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
 • தாழ்த்தப்பட்டோருக்கு கடன் உறுதித் திட்டம்: தாழ்த்தப்பட்டோருக்கு சலுகை வட்டியில் நிதியுதவி அளித்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதற்காக 2014-15 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்துக்கு 2015 பிப்ரவரி 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
 • சமுதாக கழிப்பறை கட்ட உதவித் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக சமுதாய கழிப்பறைத் திட்டங்களுக்கும், குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களுக்கும் நிதியுதவி அளிக்க சுவச்தா உதயமி யோஜனா திட்டம் 2014 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது.  தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

பிற திட்டங்கள்

மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான தொண்டு நிறுவனங்களின் திட்டங்களை இணையதளம் மூலம் ஆய்வு செய்யும் நடைமுறை 2014-15 நிதியாண்டில் தொடங்கப்பட்டது.  அந்த ஆண்டு ரூ.30.74 கோடி வழங்கப்பட்டது.  இதன் மூலம் 1.08 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மது மற்றும் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தேசிய அளவிலான இலவச உதவி எண் (1800-11-0031) 2015 ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கலை மற்றும் கலாச்சாரம் மூலம் இணைப்பு

தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களை பார்வையிட இணையதள நுழைவுச் சீட்டு: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிட இணையதள நுழைவுச் சீட்டு முறை 2014 டிசம்பம் 26ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள ஹூமாயுன் கல்லறை ஆகியவற்றை பார்வையிட இணையதள நுழைவுச் சீட்டு முறை பின்பற்றப்படுகிறது.  2015 முடிவதற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து நினைவிடங்களுக்கும் இந்த புதிய நுழைவுச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும்.  இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக உதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

பார்வையாளர்களுக்கு வசதி

 • பார்வையாளர்களுக்கு குறிப்பாக உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கும் திட்டம் 25 தொல்லியல் துறை இடங்களில் 2014 டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.  தூய்மை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ‘
 • அனைத்து 25 நினைவுச் சின்னங்களும் முறைப்படி பாதுகாக்கப்படும்.  இவற்றில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
 • தாஜ்மஹாலில் பல்வேறு வசதிகள் செய்து தருவதற்காக ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கு ரூ.20.75 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள வசதி

 • அருங்காட்சியகங்களுக்காக www.museumsofindia.gov.in என்ற இணையதளம் 2014 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.   கலாச்சார அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் இணையதளத்தில் இணைக்கப்படும்.
 • தொல்லியல் துறையின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் முப்பரிமாண காட்சியாக மாற்ற கூகுள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.  இதுவரை 113 நினைவுச் சின்னங்கள் கூகுளில் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அருங்காட்சியகங்களில் உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு புராதன சின்னங்கள் தேசிய நினைவுச் சின்ன இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளன.
 • ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  தேசிய ஆவணங்கள் அமைப்பு “Abilekh-Patal” என்ற இணையதளத்தை 125வது நிறுவன நாளான 2015 மார்ச் 11ஆம் தேதி தொடங்கியது.  இதில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட அட்டவணை குறிப்புகளும் 2000 காட்சித் தொகுப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 15 லட்சம் பக்கங்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
 • காந்தி பாரம்பரிய இணையதளத்தில் 7,38,462 பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 • அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு
 • இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் திட்டம் ஒன்று 2014 ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது.  இந்தியா தொடங்கிய இந்தத் திட்டத்தில் பல்வேறு உலக நாடுகளுடன் நிலவிய தொடர்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
 • காந்தியை நினைவு கூர்தல்
 • தேசிய தண்டி நினைவகம், அகமதாபாத்திலிருந்து தண்டி வரை தண்டி பாரம்பரிய பகுதி மேம்பாடு போன்ற தண்டி தொடர்பான அனைத்து திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • தண்டியில் தேசிய தண்டி நினைவகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • பாரம்பரிய பாதை கட்டுமானப்பணி தொடங்கியுள்ளது.
 • காந்தி பாரம்பரிய இடங்கள் இயக்கம் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.  அதில் வங்கதேசத்தில் உள்ள காந்தி ஆசிரம அறக்கட்டளை நவீன மயம்,  கொல்கத்தாவில் காந்தி சமரக் சங்கர கலாலயாவை மேம்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.
 • காந்தி பாரம்பரிய இணையதளத்தில் 7,38,462 பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையிலான காந்தி அமைதி விருதுக் குழு 2014ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவுக்கு வழங்கியது.  விண்வெளித் தொழில்நுட்பத்தை சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்துக்கு அமைதி வழியில் பயன்படுத்தியதற்காக இஸ்ரோவுக்கு விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : பத்திரிகைத் தகவல் அலுவலகம், இந்திய அரசு

2.86206896552
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top